பனைமரச்சாலை (88)


பனை மனிதன் – நாகர்கோவில் வரவேற்றது

கதவை திறந்தபோது உயரமாக சாம் ஜெபசிங் நின்றுகொண்டிருந்தார். முகநூலில் எனக்கு அறிமுகமான இறையியல் மாணவர். பயணம் குறித்து பேசிக்கொண்டோம். வேறு இரண்டு நண்பர்கள் வருவதாக இருந்ததாகவும், அவர்கள் நாகர்கோவிலில் வந்து சேருவார்கள் என்றும் கூறினார்.  சாம் ஜெபசிங் கூட புல்லட்டில் தான் வந்திருந்தார். இவ்விதமான நண்பர்கள் அமைவது பெரிய வரம். முதலில் உணவை முடித்துக்கொள்ளுங்கள் எனக் கூறி அவரை அனுப்பினேன்.

அதை தொடர்ந்து அமிர்தராஜ் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். வருகையிலேயே, தினமலரிலிருந்து ஒரு பேட்டிக்காக நிருபர் ஒருவர் காத்திருக்கிறார் என தொலைபேசியைக் காதில் வைத்தார்கள். அந்த நிருபரிடம் பேசியபோது அவர் பொத்தையடியைச் சார்ந்தவர் என்றும்,  தனக்கு சற்று முன்னதாக தான் பனைமர வேட்கைப் பயணம் குறித்து தெரிந்தது எனவும், முன்னமே தெரிந்திருந்தால் மருந்துவாழ் மலை அடிவாரத்தில் எனக்கு உற்சாக  வரவேற்பு கொடுக்க ஒழுங்கு செய்ய தாம் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.. பத்திரிகையாளர்கள் எனது கருத்துடன் உடன்படுவதும், உணர்வுபூர்வமாய் பங்கெடுக்க விளைவதும் எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. மாலையில் மீண்டும் அழைக்கும் படி கூறிவிட்டு புறப்படுகையில் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியிலிருந்து வாகனம் வந்துவிட்டது.

நாங்கள் 8.30 மாணிக்குப் புறப்பட்டோம். நாகர்கோவிலுக்கு 20 நிமிடத்தில் கூட போய்விடலாம், மொத்தம் பதினெட்டு கி. மீ தான். 30 நிமிடங்கள் தாராளம் போதும் என்றே எண்ணினோம். ஒன்பது மணிக்கு நாங்கள் அனைவரும் நாகர்கோவில் சென்று சேரவேண்டும் என்பதே திட்டம். கணக்கு சரியாயிருந்தாலும் கூட்டி கழித்ததில் சற்று பிசகிவிட்டது? புறப்படும்போது அமிர்த்தராஜ் சொன்னார், அய்யன் வள்ளுவர் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவில்லையென்று சொன்னால் பனைமரச்சாலை முழுமை பெறாது. ஆகவே கன்னியாகுமரி செல்லுவோம் என்றார். கன்னியாகுமரியில் மிகச் சரியான இடங்கள் புகைப்படம் எடுக்க கிடைக்கவில்லை. ஆகவே சற்று சுற்றியலைந்துவிட்டு படகுத்துறைக்கு அருகில் வந்தோம். ஒரு இடம் அமைந்தது. மிகவும் சிறப்பான ஒரு புகைப்படத்தை அமிர்தராஜ் எடுத்தார்.

திருவள்ளுவர் சிலை வணிக நோக்கில் மிக முக்கியமானது. பனைமரச்சாலையில் நானும் அதையே,  பனை சார்ந்து எண்ணுகிறேன்.  திருவள்ளுவர் கரங்களில் இருக்கும் சுவடிகளைக் காட்டி ஓலைகளை விற்றுவிடலாம். தமிழர்களின் தொன்மையை சொன்னது போலவும் இருக்கும் உள்ளூர் பொருளை விற்று அனேகருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது போலவும் இருக்கும். உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் உள்ளூர் உற்பத்திகளையே பெரும்பாலும் முன்னிறுத்தி நினைவு பரிசுகளை சுற்றுலாத் தலங்களில் விற்பனை செய்வது வழக்கம். எகிப்து செல்வோர், அங்கே பாப்பிரஸ் எனும் நாணல் புல் காகிதங்களில் வரையப்பட்ட படங்களையே முக்கியத்துவப்படுத்தி விற்பதை கண்டுகொள்ளலாம். தொன்மையான வடிவங்களுக்கு ஒரு அசாத்திய ஈர்புத்தன்மை உண்டு.  கன்னியாகுமரியிலோ தமிழகத்திலோ  ஓலை அதற்கு இணையாக இருக்கும் சூழலை பாதிக்காத இயற்கை பொருள்.. நல்ல வடிவமைப்பு மற்றும் வணிக சாத்தியங்களை அறிந்தவர்கள் கண்டிப்பாக ஒரு வலம் வரலாம்.

பனைமரச்சாலை, கன்னியகுமரியில்

பனைமரச்சாலை, கன்னியகுமரியில்

மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆகவே தாமதித்துவிட்டோம் என்பது உறைத்தது. செல்லும் வழியில் நுங்கு சர்பத் குடிக்கவேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தோம். அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டோம். கன்னியாகுமரி சாலை நினைத்தது போல விசாலமாக இல்லை, வேகம் மட்டுப்பட்டது. சுசீந்தரம் பாலத்தில் இரண்டு நிடங்களுக்கு மேல் நின்றது, மொத்த நேரத்தையும் விழுங்கிவிட்ட உணர்வு கொடுத்தது.

சுசீந்திரம் தாண்டியவுடன், அமிர்தராஜ் என்னிடம் சுப. உதயகுமார் அவர்களை நிகழ்சிக்கு அழைப்போமா என்றார். இவ்வளவு தாமதமாக அவரை அழைப்பது சரியாயிராது என்று கூறினேன். ஆனால், அவர் தனது நெருக்கத்தை பயன்படுத்தி அவரை அழைத்தார். சுப. உதயகுமார் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு விட்டதால் தம்மால் வர இயலாது என கூறிவிட்டார். எளிமையான  அந்த மனிதரை விரைவில் சந்திக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். எனது பயணத்தில் ஒரு இரவு இடிந்தகரையில் செலவிடவேண்டும் என்பதை முதன்மையான திட்டமாக வைத்திருந்தேன், ஆனால் அது முடியாமற் போயிற்று. போராட்டம் உச்சத்தில் இருக்கையில் நான் அகமதாபாத்தில் இருந்தேன், அங்கிருந்தும் வருவது சாத்தியப்படவில்லை.

இடலாக்குடி துவங்கியதிலிருந்தே வாகன நெரிசல் துவங்கிவிட்டது. கோட்டார் ஒருவழி பாதை தான் என்றாலும் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது. பீச் ரோடு ஜங்ஷனில் தாமதித்து, இந்து கல்லூரி அருகில் நெரிசலினால் நின்றபோது மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இது மிக தாமதமான வருகை. யாரிடம் மன்னிப்பு கேட்பது என தெரியவில்லை. செட்டிகுளம் ஜங்ஷன், வாகன பெருக்கங்களின் சுழல் என்றே சொல்லவேண்டும்.

செட்டிகுளத்திலிருந்து கலெக்டர் ஆபீஸ் செல்லுகையில், இன்னும் நெருக்கமே காணப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நகர்கோவில் இல்லை. சாலை  விரிவாகியிருக்கிறது ஆனால் வாகனங்களின் நெரிசல் இன்னும் அதிகமாகியிருப்பது தெரிந்தது. கலெக்டர் ஆபீஸ் ஜங்ஷனும் சிக்னல் இடப்பட்டு இருந்தது. மிகவும் பிந்திவிட்டோம் என்பது தெரிந்தது. இன்னும் 30 மீட்டர் தோலைவில் கலெக்டர் ஆபீஸ் வந்துவிடும், ஆனால் 3000 கிலோமீட்டர் பயணிக்கும்போது இருந்த பொறுமை  காணாமல் போய்விட்டது. ஒருவித நிலைகொள்ளாமையினால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். எனது நல்லவேளை சிக்னல் பச்சை ஒளியை உமிழ்ந்தது.

அப்போது தான் எனக்கு இடப்புறமாக பார்த்தேன், மும்பையிலிருந்து அஷிஷ் அத்தான் வந்திருந்தார்கள். நான் அவர்களை நில்ஷி ஒய் எம் சி யே வில் இறுதியாக பார்த்தது. அவர்கள் இங்கு வந்துவிட்டார்களா? ஆம் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருப்பார்கள். அப்படியானால் கண்டிப்பாக குடும்பத்தினர் எல்லாரும் வந்திருக்க வாய்ப்பு உள்ளது. எல்லாம் கண நேரம் தான் அதற்குள் அத்தானுக்கு கை காட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அங்கே ஒரு பெருங்கூட்டம் நின்றதைப்பார்த்து அசந்துபோனேன். நல்லவேளை வாழ்க கோஷம் ஏதும் எவரும் எழுப்பவில்லை. ஆனால் சீருடை அணிந்து நின்ற மாணவிகள் மத்தியில் என் கண்களுக்கு ஜாஸ்மின் மட்டுமே தெரிந்தாள். அவளையே பார்த்து சிரித்தபடி சென்றேன். பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.   வந்துவிட்டேன் பார் எனும் பெருமிதம் கண்களில் மின்ன அவள் அருகில் வண்டியை நிறுத்தியபோது, அவள் கண்கள் உடைப்பெடுத்த குளமாக நெஞ்சு விம்மியபடி என்னருகில் வந்தாள். அவளை நான் அணைத்தபோது, எனக்குள்ளும் அவளின் உணர்வுகள் ஊடுருவிவிட்டது.

ஆம் எத்துணை நாட்கள் பிரிந்திருக்கிறோம். பயணங்கள் மட்டுமே சுமார் 18 நாட்கள் ஆனால், அவர்களுக்கு விடுமுறை கிடைத்தவுடனேயே  அனுப்பிவிட்டேன். திருமணத்திற்குப் பின், பிரசவ நேரங்களில் பிரிந்திருந்தது போக, முதன் முறையாக கிட்டத்தட்ட 50 நாட்கள் பிரிந்திருக்கிறோம். நாகர்கோவில் கண்டிப்பாக பொது இடத்தில் கணவனும் மனைவியும் அணைத்துக்கொள்ளுவதை அறித்திருக்காது. அந்த ஒரு சில நொடிகள்  மெதுவாக கடந்தன. இதற்கிடையில் நாங்கள் இணைந்திருப்பதை பொறுக்காத பயல்கள் எங்களுக்குள் நுழைந்து நாங்களும் இருக்கிறோம் என எங்களை பிரித்து விட்டனர்.

பிரிகையில் ஜாஸ்மின் முகம் மலர்ந்திருந்தது. ஆனால் சுற்றிலும் கல்லூரி மாணவிகள் இருக்க இப்படி நடந்தது, சரியில்லையோ என்ன நினைப்பார்கள் என எண்ணிக்கொண்டேன். நாகர்கோவில் கணவனும் மனைவியும் பொது இடத்தில் 2 அடி தள்ளியே நிற்பார்கள். கை கோர்த்து நடக்கிறவர்களைப் பார்ப்பது அபூர்வம். மன்னித்துவிடுவார்கள் என நம்பினேன். அனேகர் முகத்தை திருப்பிக்கொண்டு எதையும் பார்க்காதது போலவும் எதுவும் நடவாததுபோலவும் பாவனை செய்துகொண்டிருந்தார்கள். மாலத்தீவிலுள்ளஅக்கா மகள் மேக்டலின், மும்பையிலுள்ள அக்கா, அவர்கள் பிள்ளைகள், அனு மற்றும் தம்பா, கிஃப்ட்சன் அண்னன் அவர்கள் மகள் யூனிஸ், கிரிம்சன் அண்ணனுடைய மகள்கள்  ஆஷிகா மற்றும் ஆஷிதா ஆகியோர் வந்திருந்தார்கள். ஜாஸ்மினின் தம்பி ஜஸ்டின் அவனது மனைவி மற்றும் தேவிகோட்டிலிருந்து அருண் ஆகியோர் குடும்பத்தின் சார்பில் வந்திருந்தார்கள்.வந்திருந்தார்கள்.

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு, நாகர்கோவில்

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு, நாகர்கோவில்

அப்பொழுது ஒரு பெண்மணி என் அருகில் வந்து நான் தான் விஜயா என அறிமுகப்படுத்தினார்கள்.  அவர்கள் தான் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியின் சார்பில் என்னோடு பேசிய தொடர்புத்துறை அதிகாரி என அறிந்துகொண்டேன். அதன் பின்பு தான் அன்றைய உச்சகட்ட காட்சிகள் நடந்தேற ஆரம்பித்தன. ஆம் திரைக் கதை யாவும் டாக்டர் பிரேம் தான்.  மிக நன்றாக யோசித்து, ஒன்றும் சிதைவுறாமல் நேர்த்தியாக நடைபெறும்படி சென்னையிலிருந்து அனைத்தையும் அவர்கள் இயக்கியிருக்கிறார்கள் என்பது மலைக்க வைப்பது. அவர்கள் இந்த பயணத்தை மிக முக்கியமான ஒன்றாக கருதியிருக்கிறார்கள் ஆகவே தான் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.

ரோட்டரி கிளப் அருகில், நாகர்கோவில்

ரோட்டரி கிளப் அருகில், நாகர்கோவில்

முதலாவதாக ஓருவர் வந்து சால்வை அணிவித்துவிட்டு சொன்னார், நான் மாவட்ட ஆட்சியாளருடைய தனி உதவியாளர் , மாவட்ட ஆட்சியாளர் உங்களுக்கு தனது வாழ்துதல்களை சொல்லச் சொன்னார்கள் என்றும் அவர் கூரினார். அவரின் முகத்தைக் கூட நான் சரிவர பார்க்க முடியவில்லை, என்னை ஒரு பெரிய கூட்டமே சுற்றி வளைத்ததுபோல ஆயிற்று.  என்றாலும் எனது உளமார்ந்த நன்றியை மாவட்ட ஆட்சியாளருக்குத் தெரியப்படுத்துங்கள் என்றேன். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தளாளராக இருந்த பேரசிரியர். ராஜாதாஸ் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்தார்கள், ஜேம்ஸ் பொறியியல்  கல்லூரியின் சார்பிலும், ஜேம்ஸ் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் சார்பிலும், ஜேம்ஸ் செவிலியர் பயிற்சிப் பள்ளி சார்பிலும் வரிசையாக சால்வை அணிவித்தனர். வேறு யார் அணிவித்தார்கள் என நினைவில் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, ஆகவே, ஒரு போலீஸ் அதிகாரி எங்களை பத்திரமாக அருகில் இருந்த ரோட்டரி கிளப்பிற்கு அழைத்துச் சென்றார்கள்.

ரோட்டரி கிளப், நாகர்கோவில்

ரோட்டரி கிளப், நாகர்கோவில்

ரோட்டரி கிளப்பிற்கு சென்றபோது எனது நண்பர் ஸ்டீபன் டேவிஸ் அவரின் சகோதரி மற்றும் இதற்கு முன் நான் பார்த்திராத நண்பர்கள் கூடி  ரோட்டரி கிளப் சார்பில் சால்வையுடன் நின்றார்கள். எஸ் எஸ் டேவிட்சன் அவர்களூம் எனக்கு சால்வை அணிவித்தார்கள். இத்துணை பெரிய வரவேற்பை நான் சற்றும் எண்ணியிருக்கவில்லை. ரோட்டரி கிளப்பில் எங்களுக்காக கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது.

ரோட்டரி கிளப் உறுப்பினர்களுடன், நாகர்கோவில்

ரோட்டரி கிளப் உறுப்பினர்களுடன், நாகர்கோவில்

பனையோலை பட்டைகளில் பதனீர் பனக்கற்கண்டு ஆகியவற்றையும் பனக்கிழங்கையும் வழங்கினார்கள். சுக்கு காப்பி மற்றும் வடையும் கொடுத்தார்கள். விஜயா மேடம், அவைகளை பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்திருந்தார்கள். எனது பயணத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு பனை மரக்கன்று அங்கே நடப்பட்டது.

அப்பொழுது தான் கவனித்தேன், என்னை வரவேற்கும்படி எழுதப்பட்ட பேனரில் “வருக பனை மனிதன்” என எழுதப்பட்டிருந்தது. பனை என்னை அதற்குரிய மனிதனாக சுவீகரித்துக்கொண்டதன் அடையாளம் அது. நான் மறைந்து போய் பனை காதலன் எழுந்து வந்த தருணமாக அதை கண்டேன்.  அந்த பட்டத்தை நான் வெகுவாக ரசித்தேன். சிறுபிள்ளைக்கும் நாம் சென்று சேரும் ஒரு தலைப்பு. சிறு பிள்ளைகளும் தங்களை அந்த பட்டத்தைச் சூடிக்கொள்ள இயலும்.  சிலந்தி மனிதன் மற்றும் வவ்வால் மனிதன் எல்லாம் கற்பனை உலகில் வாழும்போது  நிஜ உலகில் ஒரு பனை மனிதன் இருக்கக்கூடாதா?  ஒருவகையில் பனைக்காக உழைப்பவர்கள் அனைவரும் பனை மனிதர்கள் தாம். பனையோடு இணைந்து வாழ்பவர்களும் கூட பனை மனிதர்களே. எத்துணை அருமையான சொல்லாட்சி.

பனை மனிதன்

பனை மனிதன்

டாக்டர் பிரேம் அவர்கள் இல்லாமலேயே இத்தனை காரியங்கள் ஒழுங்காகியிருக்கின்றன என்றால், அவர்கள் வந்திருந்தால் கண்டிப்பாக இன்னும் மிகச் சிறப்பாகவே இருந்திருக்கும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (88)”

 1. Logamadevi Annadurai Says:

  பாஸ்டர் நெகிழ்சியானதோர் பதிவு இது. திருவள்ளுவரும் பனையோலைச்சுவடியும் நாம் இதனை சந்தைப்படுத்த மிக ஆழ்ந்த ஒரு அடிப்படையானதோர் விஷயம். எகிப்தில் சுற்றுலாசார்ந்த சந்தைகளில் பாப்பிர்ரஸ் விற்கப்படுவது போல நாமும் பனைப்பொருட்களை சந்தப்படுத்தத்தொடங்கினால் போதும் பனை தன்னைந்தானே காப்பாற்றிக்கொள்ளும்.

  இலங்கையில் பின்னவாலா யானைகள்காப்பகத்தில் யானைச்சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட காலண்டர்கள், நாட்குறிப்புகள் நோட்டுபுத்தகங்கள் என பலவற்றை விற்பதையும் அவை வெளினாட்டுசுற்றூலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுவதையும் கண்டிருக்கிறேன்.

  உங்களை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் உங்கள் கண்களுக்கு ஜாஸ்மின் மட்டும் தெரிந்த்ததும் கட்டிக்கொண்டதும் பிள்ளைகள் இடையே வந்ததும் ஏகத்துக்கும் நெகிழ்வானதாய் இருந்த்தது

  ஜெயமோகன் அவர்களின் பனிமனிதனைப்போல நீங்கள் பனைமனிதன்

  நன்றி பாஸ்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: