பனைமரச்சாலை (89)


 

பயணத்தின் உச்சகணம்

கன்னியாகுமரி தோட்டகலை சார்பில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது இவைகளுள் மிக முக்கியமான ஒன்று. ஆம் டாக்டர் பிரேம் என்னிடம் கூறியதை நினைவு கூறுகிறேன். நீ எதற்காக பயணிக்கிறாயோ அதை சுருங்க எழுதி அனுப்பு, தெரிந்தவர்களுக்கு நான் அதை அனுப்புகிறேன் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளட்டும் என்றார்கள்.  மிக விரிவான ஒரு தளத்தை எனக்கு அவர்கள் அமைத்துக்கொடுத்ததை நான் மறுக்கவோ மறைக்கவோ கூடாது.

இருக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்ட ரோட்டரி சங்க ஹாலில் என்னை பேச அழைத்தார்கள். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேராததாலும், மீண்டும் மாணவர்களை அமரசெய்து அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததாலும் வெளியில் நின்றே பேசுகிறேன் என்றேன். ஒத்துக்கொண்டார்கள்.  பத்திரிகையாளர்கள் வருவதாக கூறியிருந்தார்கள் ஆனால் அன்று வைக்கோ நாகர்கோவில் வந்திருந்தமையால்  ஒருவரும் வரவில்லை.

முதலில் எனக்காக கால் கடுக்க நின்ற மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் பெரியவர்களிடமும் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரிவிட்டு, எதிர்கால சந்ததிகளை நோக்கி பேசத் துவங்கினேன்.

அன்பார்ந்த மாணவர்களே, குமரி நிலம் முக்கனிகளும் விளையும் சோலைவனம். நாம் இங்கு பிறந்தது நமது நல்லூழ். நமது ஊரில்தான் சோம பானம் சுரா பானம் எனும் பானங்களுக்கு நிகராக கருதப்படும் பதனீர் மற்றும் கள் ஊறிக்கொண்டிருந்த பனை மரங்கள் இருந்தன. இன்று 30 வருடங்களில் நிலை தலைகீழாக மாறிவிட்ட சூழ்நிலையில் உங்களை நான் சந்திக்கிறேன். உங்களில் ஒரு சிலர் கிசுகிசுப்பாக பனை மரம் எப்படி இருக்கும் என உங்கள் தோழிகளிடம் கேட்பீர்களானால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. கல்வி என்பது பாடபுத்தகங்களைப் படிப்பது மட்டுமே என்ற கறாரான ஒரு வாழ்வுமுறைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பனை மரம் ஒருவித்திலைத் தாவர வகையச் சார்ந்தது. உலகெங்கும் 2000 வகைகளுக்குமேல் பனை மரங்கள் இருந்தாலும், பயனளிக்கும் தன்மையில் பனைமரம் தென்னை மற்றும் பேரீச்சையை விஞ்சி நிற்கிறது என்றே நான் கருதுகிறேன். முக்கியமாக நமது பாரம்பரியத்தில் உள்ள கல்வி, ஓலைகளில் எழுதி பகிரப்பட்டதால், அவை அனைவருக்கும் உரிய எளிய ஒன்றாக இருந்திருப்பதை நாம் காணமுடிகிறது. உலகம் வியக்கின்ற மாபெரும் காவியங்கள் கலைகள் அறிவியல் மருத்துவம் ஆன்மீகம் இன்னும் பற்பல துறை சார்ந்த பதிவுகள் ஓலைகளில் எளிதாக பதியப்பட்டன. ஆகவே ஏதேனும் ஒரு துறையில் கற்பதும் கற்பிப்பதும் மரபாக நமக்கு இருந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் தெருவுக்கு ஒரு பாரம்பரிய வைத்தியர் இருப்பது வழக்கம். அவர்கள் அனைவரும் ஓலை சுவடிகளையே தங்கள் மருத்துவ குறிப்புகளுக்கு ஆதாரமாக கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இலக்கியம் அச்சேரிக்கொண்டிருந்த தருணத்திலும் ஓலைகள் தங்கள் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தன என்பது ஆச்சரியமளிக்கும் உண்மை. இன்றும் கூட ஓலையில் மத்திரம் எழுதப்பட்ட தாயத்துக்கள் அணிவது, ஜாதகங்களை ஓலையில் பதிப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.

குமரி மாவட்டம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பனைமரக்காடாக இருந்திருக்க வேண்டும், கடற்கரை ஓரங்கள், வேளிமலை அடிவாரங்கள், சமவெளிகள் மற்றும் குன்றுகள் எங்கும் பனை மரங்கள் இன்று எஞ்சி நிற்பதைப் பார்க்கும்போது, நமது மாவட்டம் பனை மரங்களினால் உய்வடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அத்துணை முக்கியமான ஒரு மரம் நமது கண்களில் நின்று மறைவது நமது முக்கிய பண்பாட்டு கூறின் அழிவேயாகும்.

எனது சிறு வயதில் பனை சார்ந்த உணவுகள் எனது வீட்டின் முற்றத்திலேயே கிடைத்தன. பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் அன்று கிடையாது. இன்றோ பணம் கொடுத்தும்கூட நம்மால் பெற முடியாமல் நாம் பனையை விட்டு தூரம் போய்விட்டோம். ரப்பர் நமக்கு பணப்பயிர் ஆனால் இன்று பணம் கொடுத்தும் கூட நம்மால் நல்ல பதனீரோ அல்லது நல்ல கருப்பட்டியோ பேற முடியாத அவல நிலையில் இருக்கின்றோம்.

பனை ஓலைகளே என்னை அதன் பால் ஈர்த்தன. எப்போதும் நம்முடன் வைத்துக்கொள்ளகூடிய மிக எளிய பொருள். அது எனது வாழ்வை திசை திருப்பியது. ஓலை தன்னை திசைகாட்டியாக நிறுத்திக்கொண்டு என்னைப் பனை மரங்களைப் பார்க்கச் சொன்னது. அந்த பிரமாண்டமான உலகத்திற்குள் நான் காலடி எடுத்து வைத்து இருபது ஆண்டுகள் கடந்தும் என்னால் அதன் பிரமிப்பிலிருந்து நீங்க இயலவிலை. இந்தியாவில் எங்கெங்கு மக்கள் பனை சார்ந்து வாழ்கிறார்கள் அவர்களது சமூக சமய மற்றும் பொருளாதார பஙளிப்பு என்ன என்பது என் மனதில் கேள்வியாக இருந்தது.

3000 கி மீ தூரம் நான் பயணித்து வருகையில், பல்வேறு விதமான சமூக மக்கள் பனை மரத்தை நம்பி வாழ்வதை கண்டுகொண்டேன். பனை மரம் பல்வேறு சமூகத்தினருக்கு வாழ வாய்ப்பளித்திருக்கிறது. குமரி மாவட்டத்திலும் அதை நம்பி வாழ்ந்த ஒரு சமூகம் உண்டு. அதனால் அதை ஒரு சமூகத்திற்குரியதாக மட்டும் குறுக்கி நாம் பார்க்காமல், நமது வாழ்வைச் சார்ந்த ஒன்று எனவும், சிலர் அதனுடன் கூடிய தொடர்பால் நமக்கு மிகச்சிறந்த உணவுகளையும், பானங்களையும், இயற்கைச் சார்ந்த வீட்டு உபயோக பொருட்களையும் தந்திருக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில் பனைசார்ந்து தமது வாழ்வை அற்பணித்து கொண்டவர்கள் நமது சமூகத்திற்கு ஆற்றிய பணி மிக முக்கியமானது.

குமரி மண்ணில வாழும் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மரத்தை சுட்டவேண்டுமென்றால் அது பனை மரம் மட்டுமே. சமய நல்லிணக்கத்துக்கான இந்த மரத்தை பேணிப்பாதுகாப்பது நமது சமுகத்தின் ஒற்றுமைக்கும் நல் அடையாளமாக இருக்கும். தொன்று தொட்டு நமது உறவுகள் இயற்கையுடன் பின்னிப்பிணைத்திருப்பது போல பனையும் சமூக உறவுகளை பேணி காக்கும் ஒரு முக்கிய அடையாளமாக முன்னெடுக்கப்படவேண்டும்.

நமது பாரம்பரிய விழாக்களின் ஒரு பகுதியாக, சொக்கப்பனை கொழுத்துதல், குருத்தோலை கொழுக்கட்டை செய்தல், பொங்கல் பாயாசங்களில்  சேர்க்கும் கருப்பட்டி, தோரணங்கள் போன்றவைகள் முக்கியமாக நமது நினைவில் வந்து போகின்றவை. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் சந்தைகளிலிருந்து பனங்கருப்பட்டி மாட்டு வண்டிகளில் நீண்ட வரிசையாக செல்லுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். எனது சிறு வயதில் மார்த்தாண்டதில் மிகப்பெரிய அசோக் லைலேண்ட் லாரிகளில் கருப்பட்டிகள் ஏற்றப்படுவதை பார்த்திருக்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு கூட கருப்பட்டி பிஸினஸ் செய்யும் வேலையில்லா பட்டதாரி வாலிபர்களை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இன்று பசுமையும் செழுமையுமான நமது ஊர் தனது முக்கிய அணிகலனான பனையை இழந்து மூளியாகிப்போய்விட்டது. இந்த நிலையை மாற்ற இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின்   தங்கள்  பனை மரம் நோக்கி திருப்பினாலே எனது பயணம் முழுமை அடையும் என  நம்புகிறேன். உங்கள் வீட்டின் அருகில் பனை மரங்களை நடுங்கள், இடமில்லையென்று சொன்னால் குளக்கரைகளிலோ ஆற்றோரங்களிலோ பொதுவிடத்திலோ அல்லது கல்லூரியின் சுற்றுசுவரை ஒட்டி பனை மரங்களை நடுங்கள். இயற்கை சார்ந்த விழிப்புணர்வை உங்கள் கல்லூரிகளில் முன்னெடுக்கும்போது பனையும் அதன் அங்கமாக இருக்கட்டும்.  வாய்ப்பு கிடைக்கும்போது பனை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள், பனை சார்ந்த உணவுகள் மற்றும் பொருட்கள் நமது மக்களின் வாழ்வில் தொடர்ந்து கிடைக்க முயற்சியை நாம் இணைந்து எடுப்போம். அனைவருக்கும் நன்றி எனக் கூறி எனது உரையை முடித்தேன்.

சில இடங்களில் நிறுத்தி, அவர்களிடம் உரையாடுவது போலவே எனது பேச்சை அமைத்துக்கொண்டேன். மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டார்கள். மாணவிகள் ஒரு சிலர் கேள்விகள் கேட்டார்கள். ஓலையில் நான் செய்யும் பொருட்கள் பற்றியும், எனது பயணம் எப்படி இருந்தது என்பதையும் குறித்த கேள்விகளாக அவை இருந்தன.

பேராசிரியர் டேவிட்சன்

பேராசிரியர் டேவிட்சன்

நான் பேசி முடிக்கையில் கன்னியாகுமரி தோட்டக்கலை துறை சார்பாக பேராசிரியர். எஸ். எஸ். டெவிட்சன் அவர்கள் பேச வந்தார்கள். அவர்களை நான் முதன் முறையாக இப்பயணத்தில் தான் சந்திக்கிறேன். தமிழகத்தின் இயற்கை ஆர்வலர்களில் முக்கியமாக கருதப்படக்கூடியவர், குமரி மலைகளில் வாழும் காணி பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். காட்டு வளங்கள் கொள்ளை போகாமல் இருக்கவும், நாட்டு வளங்கள் கொள்ளைப்போகாமல் இருக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க முயற்சி செய்த முன்னோடி, கானியல் புகைப்படக் கலைஞர், ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர், பல்வேறு தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர், அவைகளில் சிறந்த பங்களிப்பாக பெல்வேறு காளன்கள் குறித்த அவரது அவதானிப்பைக் கூறலாம்.   யுனஸ்கோ சார்பில்  மனிதனும் காட்டு விலங்குகளுக்கும் ஏற்படும் மோதலை நிலையாக தடுப்பது எப்படி எனும் உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார். பனை மரங்கள் உள்ளிட்ட பல மரங்களை தொடர்ந்து நட்டு பேணி வருபவர்.

அவர் தனது பேச்சை இப்படி துவங்கினார் “அழகான ஒரு பெண் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள், அவளின் அழகில் மயங்கிய ஒரு வாலிபன் அவனது நண்பனிடம் கேட்டானாம், “குட்டி அழகா இருக்காளே யாரு இது”, அதற்கு நண்பன் சொன்னானாம், “இவளா? இவா பனையாறிக்க மகளாக்குமே” என்றானாம். இப்படியாக பனை ஏறும் தொழிலாளர்கள் அனுபவித்த சமூக அங்கீகாரமற்ற நிலைமை அவர்களை இந்த பணியை விடச்சொன்னது. கல்வி கற்ற பிள்ளைகள், தங்களைப் பெற்ற தகப்பன் பனை மரத்தில் ஏறுவதை அவமானமாக கருதினார்கள். உடலுழைப்பைச் செலுத்தும் தொழிலுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை.  ஆகவே இனிமேல் பனை ஏறும் ஆட்கள் கிடைப்பது கடினம் என்றார்கள். குட்டை ரக பனைகளை வீட்டில் வளர்த்து பெண்களும் நின்றபடி பாளை சீவ முடியுமென்றால், பனை மரத்திற்கான எதிர்காலம் இருக்கிறது” என்றார்கள். புதிய ரகங்களை கண்டுபிடிக்க அரசு முயற்சி செய்யவெண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் எப்படியாகிலும் அரசு கவனத்தை ஈர்க்கவேண்டும். மக்கள் அடிப்படையில் பனை மரம் காக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் எங்கே துவங்குவது எப்படி முன்னெடுப்பது என்பது அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஆகவே ஒரு எளிய துவக்கமே தற்போதைய தேவையாக இருக்கிறது, மக்களை ஒன்றிணைத்து சிறிய ஆக்கபூர்வமான மாற்றங்களை ஒரிரு இடங்களில் வெற்றிபெறச் செய்தால் கண்டிப்பாக பனை மரம் முக்கியத்துவம் பெறும், பனைதொழிலாளிகளும் வாழ்வு பெறுவார்கள்.

வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். அங்கிருந்து நான் வீட்டிற்கு புறப்பட ஆயத்தமானபோது திமுதிமுவென இரு சக்கர வாகனங்கள் ரோட்டரி சங்க வளாகத்திற்குள் நுழைந்தன. ஒரு மிகபெரும் உடகவியலாளர் கூட்டம் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. எனது வாழ்வில் அத்தனை மைக்குகளை ஒருசேர பார்த்தது இல்லை. பேட்டிகள் பதினைந்து நிமிடம் வரைக்கும் தொடர்ந்தது. சராமாரியான கேள்விகளுக்கு என்னை அமிர்தராஜ் தயார்படுத்தியிருக்கிறாரோ என எண்ணிக்கொண்டேன். பத்திரிகையாளர்கள் வந்தவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அந்த நிகழ்ச்சியை பதிவு செய்துகொண்டனர்.

பனைமர வேட்கைப் பயணத்தின் நிறைவு நாளில் ஊடகங்கள்

பனைமர வேட்கைப் பயணத்தின் நிறைவு நாளில் ஊடகங்கள்

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த போது, விஜயா மேடம் என்னை அழைத்தார்கள், உங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது  என்றார்கள். ஆம் அத்தான் தான் மறு முனையில், “பனை மனிதரே எப்படி இருக்கிறீர்கள்”, என அவருக்கே உரிய நகைச்சுவை ததும்பும் குரலில்  கேட்டர்கள். நலம், இவ்வளவு பெரிய ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தமைக்காக நன்றி கூறினேன். அவர்கள், “கண்டிப்பாக நீ எடுத்த முயற்சி முக்கியமானது என நான் எண்ணினேன், தமிழகம் எங்கும்  இச்செய்தி சென்று சேரவேண்டும் என விரும்பினேன், என்னால் தான் வரமுடியவில்லை” என்றார்கள்.

பனைமரச்சாலை, எனக்கு உதவியவர்களாலேயே சாத்தியமாகியது, முழுமையடைந்தது, நினைத்ததைவிட பெரும் விளைவுகளையும் சலனத்தையும் உண்டாக்கியது. அது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் தனிஒருவராக செய்யும் பணியை விட கூட்டு முயற்சி மிக சிறந்த விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதை இப்பயணம் எனக்கு உணர்த்தியது. திரண்டெழுவோம் பனையைக் காக்க என கூவவேண்டும் போல் இருந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச்சாலை (89)”

 1. Logamadevi Annadurai Says:

  என்ன ஒரு பொருத்தமான அற்புதமானதோர் உரை மாணவர்களுக்கு மத்தியில்
  சுருக்கமானதோர் அறிமுகம் பனையைக்குறீத்து, அதனையும் மற்ற மரங்களையும் ஒரு ஒப்ப்பிடு. பனை சார்ந்த தொழில்கள் மற்றும் பனிபொருட்களின் பயன்பாட்டு வரலாறு, தற்போதைய நிலை, அதன் ஆபத்து அதை செப்பனிட்டாகவேண்டிய அவசியம் 3000கிலோமீட்டர் பயணத்தில் கண்டுகொண்ட பல பனைசார்ந்த உண்மைகள், பனை மதங்களை தாண்டியது எனும் உண்மை, அருமை அருமை பாஸ்டர்
  இளைஞர்களுக்கு மத்தியில் பனையைக்்குறித்ததோர் விழிப்புணர்வுக்கு இதைக்காட்டிலும் ஆகச்சிறந்த உரை வேறு இருக்கவே முடியாது.
  அரசும் மக்களூம் கூடி தொடங்கவேண்டியது மட்டுமே இனி மீதமிருக்கும் வேலை
  திரண்டு அனைஅவ்ரும் எழும் நாள் மிக அருகிலேயெதான் உள்ளது பாஸ்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: