பனைமரச்சாலை (90)   


நிறைவாக

நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அனைவரும் ஒவ்வொன்றாக விடைபெற்று சென்றபோது தான் ராஜாதாஸ் சித்தப்பா குறித்த  நினைவு வந்தது. எனக்கு சால்வை இட்டவுடனேயே பொய்விட்டார்கள். நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்கள். எனது பனையோலை படங்களை தலிகீழாக நின்று உற்சாகப்படுத்தும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அவர் ஒருவர் தான். நான் கால தாமதமாக வந்ததால் இருக்கும். அமிர்தராஜும் மாயமாக மறைந்துவிட்டார்.  அவர் முதலிலேயே சொல்லிவிட்டார், உங்களை நாகர்கோவில் வரை கொண்டு சேர்ப்பது எனது பொறுப்பு. அதன் பின்பு நான் நிற்கமாட்டேன் என. ஆனாலும் இப்படி நழுவிவிடுவார் என நான் சிறிதும் எண்ணவில்லை. மற்றபடி அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியே விடைபெற்றேன்.

எனது பைக்கின் முன்புறம் மித்ரனும்  பின்பகுதியில் ஆரோனும் ஜாஸ்மினும் ஏறிக்கொள்ள மீண்டும் கலெக்டர் ஆபீஸ் கடந்து சென்றோம். பனைமர வேட்கைப் பயணம் வந்துசென்ற எந்த சுவடும் தெரியவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப்  பின்பு சொந்த ஊரில் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளையும் சுமந்து எனது வண்டி சென்றது. அவர்கள் தான் எனக்காக மிகப்பெரும் தியாகம் செய்திருக்கிறார்கள், அவர்களை வேறு எப்படி அங்கீகரிப்பது. பார்வதிபுரம் நோக்கி எனது வண்டி உற்சாகத்துடன் சென்றது.

எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரையில் பைக்கில் செல்லும் கணங்கள் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுப்பது. ஆரோனும் மித்திரனும் எதையும் இழப்பார்கள் ஆனால் என்னோடு வண்டியில் பயணிப்பதை இழக்க விரும்பமாட்டார்கள். எனது வண்டியின் பெட்ரோல் டாங்க் மித்திரன் அமரும் இருக்கை எனவும் பின்பக்க ஃபூட் ரெஸ்ட் ஆரோன் நிற்கும்படியாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதை எண்ணி நான் வியக்காத நாள் இல்லை. அவர்கள் இல்லையென்று சொன்னால் பயணம் அதன் ருசிகர தன்மையை இழந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். வழி நெடுக இருவரும் பேசிக்கொண்டே வருவார்கள். மித்திரன் பேசுவது எனக்கு கேட்காது. ஆரோன் நின்றபடி எனது காதில் பேசுவான். மித்திரன் பேசுவதை கேட்கவேண்டும் என்று சொன்னால் எனது உடலை முன்வளைத்து காதை அவன் வாயருகே கொண்டு சென்று கேட்கவேண்டும். ஒரிரு சொற்களில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்துவிடும். இப்பயணத்தை அவர்கள் இருவருடனும் இணைந்து முடிப்பது நான் பெற்ற பெரும் பாக்கியம்.

பனங்காட்டில் சிறு நரிகளுடன், ரசாயனி

பனங்காட்டில் சிறு நரிகளுடன், ரசாயனி

நான்  பனைகளை பார்க்கச் சென்ற இடங்களெல்லாம் அவர்களை என்னோடு அழைத்துச் சென்றதல்லாமல் தனிமையாக எங்களுக்கு வேறு இனிய பயணம் என ஒன்றை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. எனது பிள்ளைகளுக்கு பனை மரத்தை என்னை விட சிறப்பாக அறிமுகம் செய்யும் ஆசிரியர் கிடைப்பது அரிது. அவர்களிடம் இருந்தே நான் எனது பரப்புரையை துவங்கினேன். அவர்களுக்கே எனது வாழ்வின் முக்கிய கணங்களை முதலில் அறிமுகம் செய்தேன். ஆகவே நான் உள்ளாக நம்பிய ஒன்றை எனது நண்பர்களுக்கும், நாம் பேசும் மொழியில் எனது கருத்துக்களை பரிசீலிப்பவர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். ஒருவகையில் பனை எனும் பிம்பம் அனைவரது நினைவுகளின் அடியாழத்திலிருந்து முளைத்து ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணும் ஒரு வாய்ப்பு கிடத்தது மகிழ்ச்சியே.

இவ்வெண்ணங்கள் நமது வாழ்வில் புது சிந்தனைகளை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு பனை புரட்சி ஏற்படுமென்றால். தமிழகம் இழந்த பனை வாழ்வின் ஒரு சில பகுதிகளையாவது மீட்டெடுக்கும் அரிய வாய்ப்பு அருகில் வந்திருக்கிறது என்றே பொருள். நமக்கு கிடைத்திருக்கும் இருபத்தி ஓராம் நூற்றாண்டின் அறிவியல், எந்திரவியல் சார்ந்த சாத்தியங்களும் மற்றும் பொருளியல் விடுதலைகளையும் இணைத்து இழந்தவற்றை வரலாற்றுணர்வுடன் மீட்டெடுப்பது நமது கடமையாக முன்னிற்கிறது.

பார்வதிபுரம் சானல் தாண்டி, பழைய சர்குலர் நிறுத்துமிடம் வழியாக பெருவிளை சாலையைப் பிடித்தோம். அஞ்சலகம் எதிரிலே ஒரு ஒற்றைபனைமரம் நின்றது கண்ணில் பட்டது. எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை ஆனால், பெருவிளை கிராமத்தில் பொதுவிடத்தில் நிற்கும் பனை மரம் இது ஒன்றுதான் என நினைக்கிறேன். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கூட ஊரில் தனியார் தோட்டங்களில் பனைமரங்கள் அதிகம் நிற்பதை பார்க்கலாம். நான் கூட தலைக்கு ஷாம்பூ போடுவதற்கு பதிலாக பனம்பழங்களை தேடி எடுத்து வருவேன். பெரிசுகள் என்னை ஸ்னேகமாக பார்த்து புன்னகைப்பார்கள். இன்று வீடுகள் அமைப்பதற்காக பெரும்பாலானவற்றை வெட்டி வீழ்த்திவிட்டார்கள். பெருவிளையின்  ஒற்றைப்பனைமரம் காப்பாற்றப்பட ஒரு இயக்கத்தை அமைப்பது நல்லது என்று கூட தோன்றியது. பெருவிளையில் இடத்தின் மதிப்பு அப்படி.

வீடு வந்து சேர்ந்தபோது அனைவரும் வந்திருந்தார்கள். அப்பாவின் முதல் நினைவு நாள் ஜுன் 6ஆம் தேதி. ஆகவே இன்னும் மூன்று நாள் மாத்திரம் இருக்கிறது. எங்கள் வீட்டில் என்னைத்தவிர மூன்று அக்கா முன்று அண்ணன்கள். என்னைத்தவிர அனைவரும் கிட்டார் வாசிப்பார்கள். அப்பா தான் அமெரிக்காவிலிருந்து முதலில் கிட்டார் வாங்கி வந்து ஆர்வத்தை ஏற்படுத்தியது. குடும்பமாக காலையும் இரவும் ஜெபிக்கும்போது அப்பா ஆர்மோனியம் வாசிப்பார்கள். எல்லாரும் கூடிவிட்டால் அது ஒரு பரலோக அனுபவம் தான். கிறிஸ்தவ பக்திப் பாடல் பாடிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. உள்ளே நுழைந்த போது அம்மா என்னை உச்சி முகர்ந்து வரவேற்றார்கள். பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறி அம்மா பிரார்த்தனை ஏறெடுத்தார்கள்.

மேல் மாடியிலிருக்கும் எனது அறைக்குச் சென்றேன். அது தான் எனது வாழ்வினை வரலாற்றினைச் சொல்லுமிடம். அந்த ஒரு அறை குறித்தே ஒரு வரலாற்று நாவல் எழுதிவிடும் அளவு அதனுள் பல்வேறு நினைவுகள் ஆவணங்கள், தொல்பொருள்கள், கடிதங்கள், புத்தகங்கள், மற்றும் ஓலைச்சுவடிகள் சேமிக்கப்பட்டிருக்கும் இடம். நான் அனிச்சையாக திருமறையை எடுத்தேன். எனக்கு மிகவும் பிரியமான திருமறை வசனத்தை தேடிக் கண்டடைந்து வாசித்தேன்.

“இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.” (திருவெளிப்பாடு 7: 9)

வாசித்து முடிக்கையில் எனது உடல் சிலிர்த்திருந்தது. மயிர் கூச்செரியும் உணர்வு. பரவசமான ஒரு தருணம் என்னை ஆட்கொண்டது. கனவில் ஆழ்ந்தது போலவும், மேகங்கள் என்னைச் சூழ்ந்தது போலவும் உணர்ந்தேன். கடவுளின் அன்பின் கரம் பரிவுடன் என்னை அணைத்துக்கொள்ளும் தாயின்  மென்மையும் வெம்மையும் உணர்ந்தேன். எனக்குப் பிரியமான நார் கட்டிலில் கண்களில் நீர் வழிய  அப்படியே படுத்துவிட்டேன்.

இந்த வசனத்தை நான் முதன் முதலில் பயன்படுத்தியது ஐக்கிய இறையியல் கல்லூரியில் எனது மாதிரி ஆராதனையின் ஆரம்ப அழைப்பு வாக்கியமாக தான். அன்று எனக்கு எதிர்வினையாற்றிய  ஆசிரியர் டாக்டர் மைகேல் டிரேபர், அர்த்தம் பொதிந்த வசனத்தை, அதன் பிரகாசமான சாத்தியங்களை நான் தொட்டெடுக்க தவறிவிட்டேன் என்றார்கள். அது எனது வாழ்வைப் புரட்டிப்போட்ட விமர்சனம். ஆம் அந்த வசனத்தை நான் பிரயோகிக்கையிலேயே அறிந்துகொண்டேன், மொத்த சிற்றாலயமும் அந்த வசனத்தால் கட்டுண்டிருந்தது. அந்த வசனத்தின் வீச்சு என்ன என நான் பிற்பாடு எண்ணாத நாட்கள் குறைவு.

யோவான் எனும் சீடன் பரலோக காட்சியொன்றைக் காணும் தருணத்தை மேற்கூறிய வசனம் காட்சிபடுத்துகின்றது. பரலோக வாழ்விற்காக இப்பூவுலகிலேயே வெள்ளை அங்கி தரித்து பரலோக பாடல்களையும் நடனங்களையும் பயிற்சி செய்வோர் கூட பொருட்படுத்தாத ஒரு வார்த்தையாக  குருத்தோலை இவ்வசனத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ பொது மனநிலையில் பரலோகம் போகவேண்டும் எனும் விருப்பத்தையே அடிநாதமாக கொண்டு பரப்புரைகள் செய்யப்படுவதுண்டு. தொலைவில் இருக்கும் கடவுளைச் சேரும் வழியாக இயேசுவை பார்க்கிறார்களே அன்றி அருகில் வந்த கடவுளாக அல்ல. இந்த வேறுபாட்டினால் அனேகருக்கு பரலோகம் செல்லும் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்வது கடைசி கட்ட பணியாக துரிதமாக நடந்துகொண்டிருக்கிறது. அது நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு சொல்லாதவைகளாயும், உதாசீனம் செய்பவைகளாயும், எதிர்காலத்தை   சுட்டிக்காட்டி நிகழ் காலத்தை காவு வாங்கும் ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஒரு முறை ஒரு சகோதரி என்னிடம் கேட்டார்கள் பாஸ்டர் ஜீவ விருட்சம் என்று சொல்லுகிறார்களே அது பனைமரமா? அது ஒரு தொன்மையான நம்பிக்கையிலிருந்து கிளைத்திருக்கிறதை நாம் காண முடியும். பனை மரத்தையே பூலோக கற்பக தரு என அழைப்பதை நாம் பார்க்கிறோம். கர்பக தரு தேவர்களின் உலகில் இருக்கும் ஒரு மரம். கேட்பதைக் கொடுக்கும் மரம். கேட்பது எப்படி என்பதுதான் கேள்வியே. அதன் பதில் இவ்விதமாக இருக்கலாம், மனிதனும் இயற்கையும் ஒன்றிணையும் சமநிலைப் புள்ளியே தேவருலக வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் அனைத்தும் தத்தமது பங்களிப்பை அளிப்பனவாக, பகிர்ந்துகொள்ளுபவையாக, சார்ந்திருப்பனவாகவும்  இருக்கும்.

இத்திருமறைப் பகுதி கூறும் வெளிப்பாடு விண்ணக வாழ்வை சுட்டுவதாக பொருள் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகில் இறைவனின் திருவுள எண்ணம் நிறைவேறும் ஒரு காட்சியாகவும் நாம் உருவகிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் விண்ணக வாழ்வு என்பது இழந்தவைகளை மீண்டும் பெற்றுகொள்ளும் வாய்ப்பு என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

“9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

10 அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

12 “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்”

என்று பாடினார்கள்.

13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.

17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

விடுதலைப்பயணத்தில் கண்ட பேரீச்சைகள் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை இஸ்ரவேலர் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது. அது கிறிஸ்தவ வாழ்விலும் பெரும் குறியீடுகளை அளித்தபடி இருக்கிறது. “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்”. பெரும்பாலும் இதைச் சிலுவையுடன் ஒப்பிட்டுச் சொல்லுகையில் பெத்தானியிலிருந்து புறப்பட்ட இயேசுவின் பயணம் சீர்துக்கிப் பார்க்கப்படுவதில்லை. அப்படி நாம் பார்கத் துவங்கினால் இயேசு ஏன் சிலுவை நோக்கிச் சென்றார் என்பது தெளிவாகும்.

யாருடைய கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், யார் பசியடையாமல் இருக்கவேண்டும்? யார் வெயிலின் உக்கிரத்தில் வாடாமல் இருக்கவேண்டும்? தங்கள் வாழ்வில் அவைகளை இழந்தவர்கள் அல்லவா? ஆகவே, பனை தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து  வரும் திருச்சபை, சமூகம் மற்றும் அரசு யாவையும் விசையுடன் திருப்பும் ஒரு அலை எழும்பவேண்டும். அவ்விசை ஒர் அங்கீகாரம் பெற்றுத்தரும் வரையில் உச்ச விசையுடன் ஆர்ப்பரித்து எழ வேண்டும்.

பரலோகம் செல்வோர் என கருதிக்கொள்ளும் அனைவருக்கும் நான் நகைச்சுவையாக சொல்லும் ஒன்று உண்டு. அங்கே இருக்கும் பனைமரத்தில் என்ன செய்ய போகிறீர்கள். ஓலைகளை கரத்தால் தீண்டவும் வெட்கப்படும் சூழலில் கடவுளின் முன்னால் நிற்பவர்கள் அனைவரும் வெறும் பனை தொழிலாளர்களாக மட்டுமே இருந்துவிடப்போகிறார்கள். ஒன்றில், அனைவரும் பனை ஏற கற்றுக்கொள்ளட்டும், இல்லையேல் குறைந்தபட்சம் பனை ஏறுபவர்கள் கரத்திலிருந்து தாழ்மையுடன் ஓலைகள் வாங்கட்டும். ஓலை இன்றேல் பரலோகம் இல்லை.

எனது அறையை விட்டு வெளியே வந்தேன். தெருவில் எனது பைக் குருத்தோலையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

Advertisements

4 பதில்கள் to “பனைமரச்சாலை (90)   ”

 1. Logamadevi Annadurai Says:

  முதலாவதாக, என் இந்த பின்னூட்டத்தை தொடங்கும் முன்பாக உங்களின் அந்த நிறைவாக எனும் தொடக்கத்தை நான் இந்த பயணத்தின் நிறைவாக என்று எடுத்துக்கொள்ளாமல் இதை எழுதிய உங்களுக்கும்தொடர்ந்து வாசித்த எங்களுக்கும் மனதிற்கு நிறைவான என்ற அர்த்தத்திலெயே எடுத்துக்கொள்கிறேன் சார்.
  பிரபஞ்சத்தின் மீதும் மானுடத்தின் மீதும் இறைவனின் படைப்புக்களின் மீதும் கொண்டிருக்கும் மாறாக்காதலுக்கெல்லாம் நிறைவென்ற ஒரு முற்றுப்புள்ளி உண்டா என்ன?

  இது நிறைவுறும் பணியுமல்ல பயணமும் அல்ல. என்றென்றும் தொடரும் பனைப்பணி. மக்கட்ப்பணி, மகேசன் பணி. ஒரு வேளை உங்களால் தொடர முடியாத பட்சத்தில் வேறு யாரோ ஒருவரால் உடன் தொடங்கி நடத்தபப்டும் பணி ஏனெனில் இது இ்றைவன் மனிதர்களுக்காக, மனிதகுமரனின் மூலமாக துவங்கிய பணி.
  உங்களின் குடும்பததைப்பற்றி நெகிழ்வுடன் சொன்னதும் மகிழ்ச்சி ஏனெனில் பனைக்காக நீங்கள் பெற்றதும் கற்றதும், இழந்ததும் அனேகமெனில் அவர்கள இழந்த்தது உங்களின் அருகாமையல்லவா?
  வளரும் வயதில் ஒரு சிறு பிள்ளைகள் தகப்பனையும், இளம் மனைவியாய் ஜாஸ்மின் தன் கணவரையும் தற்காலிகமாகவெனினும் பிரிந்திருந்தார்களல்லவா?அவர்களை கட்டாயமாக இந்த பதிவில் இப்படித்தான் கெளரவப்படுத்தவேண்டும்

  அந்த பனங்காட்டில் மகன்களுடனான அந்த புகைப்படம் எத்தனை அழகு? நீங்கள் தொலைதூரத்தில் சுட்டிக்காட்டுவது புனர்வாழ்வு பெற்ற பனையைத்தான். இந்த புகைப்படம் ஒரு பாஸிடிவ் குறியீடு.
  குழந்தைகளின் வாழ்வில் இது ஒரு முக்கியதருணம் மட்டுமல்ல உன்னதமானதோர் தருணமும் கூட

  திருமறையைப்பிரித்ததும் வந்த அந்த குருத்தோலையைக்குறித்த வசனம் இறைவனின் செயலன்றி வேறு என்ன?

  யாருடைய கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், யார் பசியடையாமல் இருக்கவேண்டும்? யார் வெயிலின் உக்கிரத்தில் வாடாமல் இருக்கவேண்டும்? தங்கள் வாழ்வில் அவைகளை இழந்தவர்கள் அல்லவா? ஆகவே, பனை தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் திருச்சபை, சமூகம் மற்றும் அரசு யாவையும் விசையுடன் திருப்பும் ஒரு அலை எழும்பவேண்டும். அவ்விசை ஒர் அங்கீகாரம் பெற்றுத்தரும் வரையில் உச்ச விசையுடன் ஆர்ப்பரித்து எழ வேண்டும்.

  இதைவிட இந்த 90 பதிவுகளில் சொன்னதை அழகாக சுருக்கமாக சொல்ல இயலாது சார்.
  கடவளைஅருகிலிருக்கும் இந்த பனையின் வடிவில் காணாமல் ஆலயங்களில் சென்று தேடுவதும்,,
  கிரிஸ்து பனையிலும் இருக்கிறார் எனும் உண்மையை உணராமலிருப்பதும் எத்துனை அறிவீனம்?

  கேளுங்கள் கொடுக்கப்படுமென்றார் ஏசு. நமக்குஇதுநாள் வரையிலும் எப்படி கேட்பது என்ன கேட்பதென்று தெரியாமலிருந்த்து. இதோ இப்போது இந்த 90 நீண்ட நெடும் பயணப்பதிவுகளில் நீங்கள் என்ன எப்படி, எங்கு கேட்பதென்று சொல்லி இருக்கிறீர்கள் இனிகேட்கையில் கி்டைக்கும் தேடுகையில் தென்படும், விழைகையில் அருளப்படும், த்ட்டுகையில் திறக்கப்படும்

  நம் முன்னோர்கள் நமக்கென்ன விட்டுச்சென்ற பனைகளை நாம் அழித்ததோடல்லாமல் நமது தொடரும் சந்ததிகளைக்குறித்து எந்த கவலையுமின்றி இருக்கும் இந்த நிலை கட்டாயம்மாக மாறும் எனும் நம்பிக்கையுடன் உங்களின் அடுத்த பயணத்தின் பதிவுகளுக்கு பின்னூட்டமெழுதும் ஆவலுடன் காத்திருக்கும்
  லோகமாதேவி

 2. Jayant Judilson (@Judilson) Says:

  A little boy running across a valley with a palm leaf in hand, with a huge palm tree in the background. Filled with enthusiasm and eternal joy.
  Your passion for the palm tree is truly special.
  Your language is so rich and the ease with which you reveal yourself as a doting father, to a philosopher, to a responsible sibling, and then a man in his room (his inanimate companion) lost in his thoughts, all in one article, is commendable.
  Thoroughly enjoyed this journey with you, through this blog. I pray that this reaches many more people.
  Wishing you many more such fruitful journeys and also good luck in all your endeavors in Palmyra conservation.

 3. Jayant Judilson (@Judilson) Says:

  “யாருடைய கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், யார் பசியடையாமல் இருக்கவேண்டும்? யார் வெயிலின் உக்கிரத்தில் வாடாமல் இருக்கவேண்டும்? தங்கள் வாழ்வில் அவைகளை இழந்தவர்கள் அல்லவா? ஆகவே, பனை தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் திருச்சபை, சமூகம் மற்றும் அரசு யாவையும் விசையுடன் திருப்பும் ஒரு அலை எழும்பவேண்டும். அவ்விசை ஒர் அங்கீகாரம் பெற்றுத்தரும் வரையில் உச்ச விசையுடன் ஆர்ப்பரித்து எழ வேண்டும்.” -very powerful words. Have told you earlier also, your thoughts/vision/actions are important for a dying identity.

 4. காட்சன் – பனைமரப்பாதை Says:

  […] https://pastorgodson.wordpress.com/2016/09/29/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: