மத்திய கேரள தென் இந்திய திருச்சபை பேராயர் தாமஸ் கெ. உம்மன் கடந்த 16.10.2016 அன்று தி இந்துவில் வழங்கிய பெண்களுக்கும் அருட்பொழிவு எனும் பேட்டிக்கு கிறிஸ்தவ உலகம் தனது அதிருப்தியை வெளியிட்டவண்ணம் உள்ளது.
தென்னிந்திய திருச்சபையின் பேராயர்களுள் ஒருவர் பெண்ணாக இருந்தும், 150க்கும் மேற்பட்ட அருட்பொழிவு பெற்ற பெண் ஆயர்கள் இருந்தும் மத்திய கேரள ஆயர் மண்டலம் பெண்கள் அருட்பொழிவு கொடுக்கப்பட கூடாது எனும் நிலை மாறாமல் நிற்பது ஆச்சரியமானது. தற்செயலாக முனைவர். சூசன் தாமஸ் அவர்களை கடந்த வாரம் ஒரு அமர்வில் சந்தித்தேன். அருட்பணியில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் மிக முக்கிய கருத்தை பதிவு செய்தார்கள்.
http://www.missiontheologyanglican.org/article/contextual-mission-in-india-from-womens-perspective/
தனது சொந்த மனைவிக்கே அருட்பொழிவு கொடுக்க இயலா நிலையில் பேராயர் இப்பேட்டியை அளிப்பதால் பேராயர்களின் வரம்பற்ற அதிகாரம் குறித்த கேள்வி என்னுள் எழுகிறது. ஒருவகையில் திருச்சபை தன்னை சுய பரிசோதனை செய்ய அழைக்கப்படும் ஒரு தருணத்தில் நாம் நிற்கிறோம் என்பதை உணர்ந்து சற்றும் பதறாமல் பெண்களின் அருட்பொழிவினை குறித்து திருமறை சார்ந்து எண்ணிப்பார்ப்பது நலம்.
பின்வரும் இரண்டு திருமறைப்பகுதிகளை மிக முக்கியத்துவப்படுத்தி பெண் ஊழியர்களுக்கான அருட்பொழிவை “திருமறை சார்ந்து” தடை செய்ய திருச்சபையைச் சார்ந்த பெண்கள் உட்பட, அனேகர் எண்ண துணிந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
- ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். (1 தீமோத்தேயு 2:12)
- சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது.(1 கொரிந்தியர் 14: 34)
ஆனால் திருமறையை ஆழ்ந்து நோக்காது தமது எண்ணங்களுக்கு ஏற்ப திருவசனங்களை “கண்டுபிடிப்பவர்களுக்கு” நாம் உதவுவது கடினம் தான்.
ஆண் பெண் சமத்துவம் எனும் நோக்கில் அருட்பொழிவினை நாம் பார்ப்பது சரியாயிராது. மாறாக கடவுளை மையப்படுத்தி அவரது வழிகாட்டுதலைக் கோரி பெண்கள் அருட்பொழிவை சீர்துக்கிப்பார்ப்பது சரியெனத்தோன்றுகின்றது. முதன்மையாக, பெண்கள் அருட்பொழிவினை குறித்து நமது எதிர்பினைக் கூறுகையில் பெண்களை மட்டுப்படுத்துவதாக நினைத்து கடவுளை தான் நாம் மட்டுப்படுத்துகிறோம். “ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை:” (இணைச்சட்டம் 10: 17) உலகின் சரிபாதியான ஒரினத்திற்கு வேறொரு நியாயம் கற்பிக்க நீதியான கடவுள் ஒப்புவாரா என எண்ணிப்பார்ப்பது நலம்.
திருத்தொண்டர் பவுல் அவர்களை கையாள்வது மிகவும் சிரமமான ஒரு காரியம். இன்று திருச்சபை இயேசுவுக்கும் மேல் அவரது வார்த்தைகளையே உயர்த்திப்பிடிக்கிறது என்பது உள்நோக்கத்தோடு என்பதை சொல்லித்தெரியவெண்டிய உண்மையில்லை. என்றாலும் தூய பவுல், தனது வாழ்வில் தான் கொண்டிருந்த கருத்துக்களில் மாறுபட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக கொள்வோமென்று சொன்னால் அவரது கூற்றுகளை சற்று நிதானத்துடன் நம்மால் அணுக இயலும்.
- திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம். உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு, நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை. (கலாத்தியர் 2: 4)
இங்கே பவுல் குறிப்பிடுகின்ற “திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள்” குறித்து பேசாமல் பெண்களை குறித்த பவுலின் பார்வையை மட்டும் உயர்த்திப்பிடிப்பது சரியென்றாகாது. பவுல் ஆண்கள் அனேகருடன் முரண்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
- சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள் (ரோமர் 16: 17 திருவிவிலியம்).
இங்கே இரு பாலினருக்கும் ஒன்றாய் அவர் பேசுவதை அறிகிறோம். காரணம் என்ன? அவர் தனது எண்ணத்தை முழுமை செய்யும்பொருட்டு இவ்வித ஒரு மாற்றத்திற்குள் அவர் வந்திருக்கலாம் என நாம் எண்ண இடமுண்டு
- செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்! (கலாத்தியர் 2: 6 திருவிவிலியம்)
- சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல் களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.(கலாத்தியருக்கு 3: 26 – 29)
ஆகவே கிறிஸ்துவை முன்னிறுத்தி தனது பழைய நிலைப்படுகளை பவுல் மாற்றிக்கொள்ளுகிறார் என நாம் திட்டமாக அறியலாம்.
- நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். (கலாத்தியருக்கு 3: 16 -17)
கடவுளின் ஆவியர் குடியிருப்போரை, எந்த ஆவி தடை செய்ய முயலும் என நமக்கு நாமே கேள்வி எழுப்பி பதில் தேடிக்கொள்ளுவது சாலச் சிறந்தது. மேற்கூறிய அதிகாரத்தை பவுல் எழுதுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே எழுதுகிறார்.
- “சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.” ((கலாத்தியருக்கு 3: 1)
தங்களிடம் குறையுள்ளவர்களிடம் அவர் பேசியிருக்கிறார், தனது வாழ்வில் முக்கியமாக அவர் கொண்டிருந்த கருத்துக்களையும் அவர் மறு பரிசீலனை செய்திருக்கிறார். இன்னும் எண்ணற்ற வசனங்களை நாம் சுட்டிக்காட்ட இயலும். ஆயினும் பவுலை அளவீடாக கொள்ளுகையில், கிறிஸ்துவின் எண்ணத்தை நாம் புறந்தள்ளிவிடுகிறவர்களாக மாறிவிடக்கூடாது. அது இயேசுவை விட, பவுலை முக்கியத்துவப்படுத்தும் அபாய நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.
தீர்கதரிசிகளில் ஒருவரான மிரியாம், நீதிதலைவர்களில் ஒருவரான தெபோராள், கிறிஸ்துவை பெற்றெடுக்கும் முக்கிய பணியில் யோசேப்பு ஒதுங்கி நிற்க துணிந்தபோது, சற்றும் கலக்கமடையாமல் முன்னின்ற மரியாள், அனைத்து சீடர்களும் ஒளிந்து கொண்டபோதும் சிலுவை மட்டும் பின் தொடர்ந்த பெண்கள், கல்லறையில் அவரை சந்தித்த மகதலேனா மரியாள் இவர்கள் யாவரும் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இல்லையென்போமானால், நமது சிந்தனை ஒழுக்கில் ஏதோ ஓட்டை இருக்கிறது என்றே அர்த்தம்.
சமாரிய பெண் மேசியாவைக் கண்டேன் என அறிவிக்க ஓடியதைக் காண்கிறோம், நின்று நிதானித்து அருட்பொழிவு பெற்றுச் செல்வோரே சரியான தேர்வு என கொள்வோமா? அல்லது உடனடியாக நற்செய்தி அறிவிக்க தாமதியாமல் ஓடிய சமாரியப் பெண்ணின் அருட்பணியில் தான் தவறுகள் உள்ளதாக இயேசு சுட்டிக்காட்டினரா?
- இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இதை அறிந்த இயேசு, “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”என்று கூறினார். (மத்தேயு 26: 6 – 13)
திருமறை முழுக்க ஆசாரியரோ அல்லது இறைப்பணியாளரோ செய்யும் ஒரு பொழிவை சீமோன் வீட்டில்வந்த பெண் செய்வதை இயேசு ஏற்றுக்கொள்ளுகிறார். அதனை தடுக்கும் எண்ணங்களை அவர் தடை செய்கிறார். அவ்விதமாக அனைவரையும் அருட்பணிக்கு அழைக்கும் ( நான் பருகும் கிண்ணத்தில் பருகவும் உங்களால் கூடுமோ?) தம்மையே அப்பெண்மணியின் முன்னால் எளிமையாக்கி தனது சிலுவை நோக்கி செல்லுகிறார். சிலுவை சுமக்க வலுவற்று தான் பெண்கள் அருட்பொழிவிற்கு எதிராக நிற்கிறோமா?
இன்றைய தினத்தில் ஆண் போதகர்கள் என அருட்பொழிவு பெற்றோர் அனேகர் தவறிவிடுவதைக் காண்கின்றோம். பெண்களும் தவறலாம். ஆனால், ஆண்களால் செய்ய முடியாத காரியங்களை பெண்கள் இலகுவாக செய்ய இயலும் ஒரு சூழலில் வந்திருக்கிறோம். குறிப்பாக, பெண்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்படும் போதகர்கள் இன்று தேவையாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ குடும்பங்கள் இன்று சிதைவுறுவதை கண்கூடாக காண்கிறோம். இச்சூழலில் பெண்களிடம் நெருங்கிப்பழகும் உரிமைகொண்ட பெண்போதகர்கள் மிக முக்கிய பங்களிப்பை திருச்சபையில் ஆற்ற இயலும்.
நமது திருச்சபைகள் யார் தங்களுக்கு போதகராக வரவேண்டும், வரக்கூடாது என நிர்ணயிக்கும் காலகட்டம் இது, ஆகவேதான் திருச்சபை சாதி நோக்கில் தனது போதகரை தேர்வு செய்கிறது, பாலின அடிப்படையில் தனது கருத்துக்களை கூசாமல் முன்வைக்கிறது. இவ்வித எண்ணங்களிலிருந்து தான் நமது தலைமைத்துவங்களை நாம் ஏற்கிறோம். அவைகளுக்கு விலையாக கிறிஸ்துவின் சரீரமாகிய “மணவாட்டியை” அடைமானம் வைக்கிறோம்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
E-mail: malargodson@gmail.com
You must be logged in to post a comment.