பனைதொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த இயேசு


“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;

லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (திருப்பாடல்கள் 92:12, திருவிவிலியம்)

 

திருமறையை வாசிக்கும்போது, மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை இயற்கையைச் சார்ந்து எழுதிவைப்பது ஒரு முறையாகவே இருந்துள்ளதை நாம் காணமுடியும். இயற்கையை கூர்ந்து அவதானிப்பதனாலும் இயற்கை கடவுளை வெளிப்படுத்தியமையினாலும் அவ்விதமான ஒரு எழுத்தை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். இவ்வெழுத்துக்கள் அவர்களின் வாழ்வை கடவுளுக்கு நேராக திருப்பியிருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (சங்கீதம் 92:12) இந்த வசனத்தை எங்கள் ஊரில் பயன்படுத்தும் போது, அவர்கள் பழைய மொழிபெயர்ப்பில் உள்ள வசனத்தின்  முற்பகுதிஐ மட்டும் எடுத்துக்கூறுவார்கள். நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான் எனக்கூறி, பிற்பகுதியில் காணப்படும் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் என்கிற பகுதியை விட்டுவிடுவார்கள். ஆகவே வசனமே அவ்வளவுதான் என நான் எண்ணிக்கொள்வேன். பிற்பாடு திருமறையை வாசிக்கதுவங்கியபோது பின்னிணைப்பாக கேதுரு மரம் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மலைத்துப்போனேன். ஏன், வசனத்தின் ஒரு உறுப்பாகிலும் ஒழிந்துபோவதில்லை என எண்ண தலைப்படும் நம் மக்கள், வெறும் பனை மரத்தை மட்டும் முன்னிறுத்திவிட்டு, கேதுருவை விட்டுவிட்டார்கள் எனும் கேள்வி என்னுள் அலைமோதியது.

இரண்டு காரியங்கள் உடனடியாக என் மனதில் வந்தது, எம்மக்கள் கேதுருவைக் கண்டதில்லை. இரண்டு, பனைமரம் அவர்களை வாழ வைத்த மரம். பனைமரம் வாயிலாக கேதுருவை அவர்கள் கற்பனை செய்துகொண்டிருந்திருப்பார்கள். மிக பிற்பாடு தான் நானே திருமறையில் கூறப்படும் பேரீச்சைக்கும், தமிழகத்தில் காணப்படும் பனைமரத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதைக் கண்டடைந்தேன். ஆனாலும் அவைகள் ஓரிலைத்தாவர்ம எனும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்பது எனக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஆகவே இவ்வரிகளை எழுதிய ஒரு யூத கவியின் மனதிற்குள்ளதாக என்னால் எளிதாக புக முடியும் என்றே நான் எண்ணுகிறேன். தமிழகத்தின் ஐவகை நிலங்கள் போல இஸ்ரவேலின் மக்கள் கண்ட நிலப்பரப்பும் மிகுதியான வேற்றுமைகள் கொண்டது. ஒன்றிற்கு ஒன்று எதிர் துருவத்தில் இருக்கும் நிலவெளி அது. ஆகவே தான் பனிமலையில் வாழும் கேதுருவும் பாலையில் காணும் பனைமரமும் ஒருசேர பொருள்படுகிறது.

கவி இங்கே இருவேறு சூழலில் வளரும் வேறுபட்ட மரங்களைக் குறிப்பிட்டு அவைகளை நேர்மையாளருக்கு (நீதிமானுக்கு) ஒப்புமையாக்குவதைக் காண்கிறோம். நேர்மையாளர்  எனும் உயர் விழுமிய மனிதனை இஸ்ரவேல் வார்த்தெடுத்தது. அதற்கு முழு முதல் காரணம் அவர்கள் வணங்கும் கடவுள் நேர்மையளர்  எனும் கருத்தாகத்தில் இருந்து எழுந்ததை நாம் அறிவோம். எனில் கடவுளின் சாயல் மனிதனில் பிரதிபலிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கவி வெளிப்படுத்துவதாக மேற்கூறிய வரி அமைகிறது. அது கடவுளைக் கண்டடைய கவி உள்வாங்கிய ஒரு இயற்கைப் படிமம் என நாம் கண்டுகொள்ளுகிறோம்.

மேலும் கடவுளின் தன்மை மண்ணினால் உருவாக்கிய மனிதனுக்குள் இருப்பதை நம்பும் நம் மனது, மண்ணில் முளைத்தெளும்பிய பனை மரத்தில் அதே உணர்வு இருப்பதை கண்டுணர்ந்த தருணமாக இக்கவிதை பொருள் பட்டு நிற்கிறது. கடவுள் மனிதன் மரம் இவைகள் ஒரே தன்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக இருக்குமா? இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டில் நாம் அமர்ந்திருக்கும்போது, இயற்கையின் ஒவ்வொரு கூறும் இறைவனை நோக்கி நம்மை முன்னெடுக்கும் ஒரு பரவசத்தில் நாம் ஆழ்கிறோம். அப்படியானால் பனை மரம் என்பதை எனது மண்ணின் இறையியலின் மையமாக வைத்து பார்ப்பதுவே எனது அருட்பணியாக இருக்கும். அதுவே நேர்மையாளராம் கடவுளின் உருவை நான் பெற்றேகும் பொற்தருணம்.

பனை மரம் பார்பதற்கு ஒரு தூணைப்போல நெடுநெடுவென்று இருக்கும். மனித தலையைப்போல உச்சியில் அதன் ஓலைகள் மயிர்களாய் சிலுபி நிறைந்திருக்கும். ஆண் மரம், பெண் மரம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், இரு தன்மைகளும் இணைந்த “உம்மங்காளி” பனைமரங்களை காணும்போது, கவியின் ஆழ்ந்த அவதானிப்பு தெரியவருகிறது. மேலும் மரங்களில் மிக குறைவான தண்ணீரை எடுத்துக்கொண்டு மிக அதிக பொருட்களை வழங்கும் ஒரே மரம் பனைமரமே. ஆகவே, தன்க்கு எஞ்சிய குறைவான வாய்ப்புகளிலும் கூட உன்னத விழுமியங்களை வழங்கும் வாழ்வு கொண்டோரை நேர்மையாலர் என கவி வருணிப்பது நமது பார்வைக்கு வைக்கப்படுகிறது. வறண்ட பகுதியில் தண்ணீர் இன்றி வாடும் மக்களுக்கு உச்சியில் ஊறும் பதனீர் எனும் தாகம் தணிக்கும் பானத்தை தாயைப்போல் பிரதிபலன் அற்று சுரந்து கொடுக்கிறது. பனைமரம் மண்னையும் விண்ணையும் இணைக்கும் ஒரு அற்புத மரம். கடவுளும் மனிதனும் இணையும் நேர்கோடு அல்லது மையம் அது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பனைமரம் மிகுதியாக காணப்படுகிறது, இம்மக்களின் வாழ்வில் இரண்டர கலந்த மரம் இது. இவர்களது வாழ்வில் உணவு உறைவிடம், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என பல வகைகளில் பனை வாழ்வளிக்கும் மரமாக காணப்படுகிறது. இப்பகுதியில் வாழும் எச்சமயத்தவரானாலும் அவர்களை ஒன்றிணைக்கும் ஒரே மரம் இதுவே. ஆகவே நமது அருட்பணியின் நோக்கில் மிக முக்கிய செயல்  இம்மரத்தை கூர்ந்து அவதானிப்பது, அதை பாதுகாப்பது, மற்றும் இம்மரத்தை கடவுளின் தன்மையை வெளிப்படுத்தும் முக்கிய குறியீட்டின் தன்மையாக உணர்ந்து வலர்த்தெடுப்பது ஆகும்.  இறைவன் வழங்கும் அருட்செய்தியினை உள்வாங்கி,  இதைச் சார்ந்து வாழும் மக்களினங்களின் வாழ்வில் எவ்விதம் நமது அருட்பணியை ஆற்ற இயலும் என்பது மிக முக்கியமான கேள்விகளாக எஞ்சி இருக்கின்றன.

பல்வேறு மக்களினங்களுக்காக தன்னை அற்பணித்த அருட்பணியாளர்கள் பனைதொழிலாளர்களுக்காக தன்னை அற்பணிக்காதது ஒரு குறையாகவே இருந்திருக்கிறது. பனை மரமும் பனைத்தொழிலாளிகளும் அத்துணை முக்கியத்துவம் பெறவேண்டிய காரணம் தான் என்ன? திருமறை சார்ந்து ஏதேனும் சான்றுகள் உள்ளனவா? என நாம் தேடினால் நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு திருமறைப்பகுதி வாசிக்க கிடைக்கிறது. “குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்”. (யோவான் 12: 13 திருவிவிலியம்)

இயேசுவின் எருசலேம் பயணம் பெத்தானியாவிலிருந்து துவங்குகிறது. பெத்தானியா என்பதற்கு பேரீச்சையின் வீடு என்பது பொருள். அவருக்கு எதிர்கொண்டு போக பனைமர கிளைகளை எடுத்துச் சென்றவர்கள் திரளான பனைமரங்கள் இருந்த இடத்திலிருந்தே குருத்தோலைகளை எடுத்திருக்கவேண்டும். அதுவும் பனை ஏறும் தொழிலாளிகளின் உதவி கொண்டு அல்லது பனை ஏறுகிறவர்களே அவைகளை எடுத்துச் சென்றிருக்கவேண்டும். பனை ஓலைகள் வெற்றியின் சின்னம், நீடித்த வாழ்வு, அமைதி போன்ற பல்வேறு எண்ணங்களை பிரதிபலிப்பதாக பொருள் பட்டாலும், சுழலை ஆழ்ந்து கவனிக்கும்போது வேறு சில எண்ணங்களும் அதன் உட்பொருளாய் ஒளிந்திருக்குமோ என எண்ண தோன்றுகின்றது.

இயேசுவை சிலுவையில் அறைய மிக முக்கிய காரணியாக இருந்தது சமய தலைவர்கள் என்பது உண்மை என்றாலும், அவர் மீது சுமத்தப்பட்ட இறுதி குற்றச்சாட்டு மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த குற்றச்சாட்டு யாவும் வரி செலுத்துவது குறித்ததே. ஆக வரி மக்கள் மேல் மிக அதிக பாரத்தை  சுமத்தியிருப்பதையும் இயேசு அவற்றை வரித்தண்டுவோருடன் அமர்ந்து விவாதிப்பதையும் காணுகையில், திராட்சை தோட்டம், அத்திமரம், மற்றும் பேரீச்சகளை பராமரிப்பவர்கள் ரோம அரசின் வரி கொள்கையால் பாதிப்படைதிருந்தனர் என்பது உறுதியாகிறது. இவர்களே குருத்தோலைகலை எடுத்தபடி இயேசுவுக்கு எதிர்கொண்டு போயினர் என்பது பொருத்தமானது. அப்படியானால் இயேசுவின் பணி பேரீச்சை மரம் ஏறுகிறவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

 

இன்று நமது ஆலயங்களிலிலோ ஆலய வளாகங்களிலோ பனை மரங்கள் காணப்படுவதில்லை. அவைகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பனை தொழுலாளர்கள் குருத்தோலை ஞாயிறு அன்று நினைவு கூறப்படுவதில்லை, அவர்களது வாழ்வை எண்ணாமலேயே 2000 வருட கிறிஸ்தவ அருட்பணி  கடந்து வந்திருக்கிறது. இத்துணை நெடிய ஆண்டுகளில் ஒருமுறை கூட நமது ஆலயங்களில் பனை ஏறி காய்த்து வெடித்த பனைத் தொழிலாளிகளின் கால்கள் கழுவப்பட்டதில்லை. சாம்பல் புதனன்று நாம் எரிப்பது வெறும் ஓலைகள் மாத்திரம் அல்ல பனைத்தொழிலாளிகள் எனும் ஒரு விரிந்த சமூகத்தைக் கூட.

இந்திய அளவில் வேலைவாய்ப்பை பெருக்கும் தன்மையில் பனை மரங்களின் பங்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திருச்சபையோ அரசோ பனை மரங்களுக்கோ பனை தொழிலாளர்களுக்கோ நல திட்டங்கள் எதுவும் செய்ய முன்வரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக பனை மரங்களின் எண்ணிக்கை குறித்த எந்த அறிக்கையும் அரசால் வெளியிடப்படவில்லை. பனை தொளிலாளர்களுக்கான எந்த நலதிட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்படவில்லை. உலகமயமாக்கலில் உலகத்தோடு திருச்சபையும் சேர்ந்துகொள்ளுகிறது. இறைவனும், இயற்கையை முன்னிறுத்தும் பனை மரமும், அதனோடு தொடர்புடைய மனிதனும் இன்றுவரை எந்த சூழியல் இறையியலாளராலும் கவனத்துக்குட்படுத்தவில்லை.

இச்சுழலில் கவி காணுகின்ற ஒன்றை நாமும் நமது வாழ்வில் கண்டடையவெண்டும். அது நமது அருட்பணியாக அமையவேண்டும், இறைவன் இயற்கை மனிதன் என ஒன்றிணைந்து செயல்படும் கவியின் கூற்றை மெய்பிக்கவேண்டும். கிறிஸ்து அதையே செய்தார்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: