பனைமர ஓலை


முதல் ஓலை

பனை மரம் கற்பக தரு என தேவருலக மரத்திற்கு ஒப்புமைக் கூறப்படுகிறது. அப்படியாயின் தமிழகம் பனைமரங்கள் செழித்து வளரும் தேவருலகிற்கு ஒப்பான ஒரு இடமாக காணப்படுகிறது. ஆயினும் தமிழக மாநில மரமாகிய பனை மரம் இன்று அரசாலும் அதனை பராமரித்து வந்த சமூகத்தாலும் பெருமளவு கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் எனும் கூற்று ஓரளவிற்கு மரங்களின் முக்கியத்துவத்தைக் எடுத்துக்கூறினாலும் பனை மரங்கள் தொடர்ந்து அழிந்து வருவதை முரண் நகையாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். ஒரு மரத்தை பேணி பாதுகாக்க பலவித வழி முறைகளை எதிர்கால சந்ததி கையாள வேண்டி இருக்கிறது.

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்

இக்குறளில் காணப்படும் பயன்மரம், பனை மரம் என்றே வாசிக்கையில் பொருள் தருவதாக அமைகிறது. பயன் தரும் மரங்கள் யாவும் ஊருக்கு வெளியே தம் இடம் தேடி செல்லும் காலத்தில், பனை மரத்தினை எவ்விதம் பயன்மரமாக உள்ளுரில் தக்கவைப்பது என்பது முக்கிய கேள்வியாக அனைவர் முன்பும் நிற்கிறது.

இன்றைய காலகட்டட்தில் பல்வேறு முயற்சிகள் பனை மரத்தினைக் காக்க செலவிடப்படுகிறது. பெரும்பாலும் பனைமரங்களை விதைப்பது ஒரு முக்கிய பணியாக பல்வேறு நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இம்முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்கும் அதே நேரம், இம்முயற்சிகள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று குறைந்த பட்சம் 60 விழுக்காடு பயன் அமையும் என்று கூட திருப்திகொள்ள இயலாது. இப்போது நடுகின்ற பனைவிதைகள் பல்வேறு காரணிகளால் இன்னும் 10 ஆண்டுகளில் வெறும் 10 சத்விகித பனை மரங்களே தப்பிக்கும் என்பது எனது கணிப்பு. அப்படியானால் ஏன் இந்த விரயமான முயற்சிகள்?

எந்த முயற்சியும் விரயம் என கொள்ளப்படவேண்டியதில்லை. குறிப்பாக பனை மரத்தைப் பொறுத்தவரையில் தப்பிபிழைக்கும் அத்தனை தகுதியும் கொண்ட மரம் என்றே நான் உள்ளூர நம்புகின்றேன். ஆகவே தொடர்ந்த நமது ஒருமித்த பயிர் செய்தலும் அனேகரை பனை மரம் குறித்த புரிதலுக்கு நேரே வழி நடத்துவதும் வரும் பத்தாண்டுகளுக்கு சீராக நடைபெற்றாலே அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தமாக முடியும் என்பது அடிப்படை. ஆகவே தற்பொது நடைபெறுகின்ற விதைப்பு தொடர்ந்தாகவேண்டும். அவை முறைப்படுத்தப்படவேண்டும், பேணுதலில் உள்ள குறைகளைக் கண்டடைந்து அவைகள் சீர்பட தொடர் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

விதைகளை நட்டு தண்ணீர் ஊற்றி மரங்களை பாதுகாப்பது ஒரு முறை. பனை மரம் அவ்வகையில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட மரம். குறைந்த மழை பொழிந்தாலே தானாகவே முளைத்துவிடும் தன்மை கொண்டது, வறட்சியையும் தங்கி வளரும் உயிரிச்சை கொண்டது. ஆனால் கொலைக்கருவிகளுடன் நடமாடும் மனித வர்க்கங்களின் முன்னால் அவைகள் நிராயுதபாணியாக நிற்கின்றன. அவைகளை பேணுவதற்கு தடையாக நிற்கும் காரணிகளை நாம் வரும் அத்தியாயங்களில் காணலாம்.

இன்றைய சூழலில் நமது கண்களின் முன்னால் நடைபெறும் பல அழித்தொழிப்புகளையும் சுரண்டல்களையும் காணுகையில், பனைமரமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இன்று புது வியூகங்களுடன் நமக்கென அளிக்கப்பட்டிருக்கும் பனை மரத்தினை அழிக்க வேறெவரும் தேவையில்லை நமது அறியாமையே அதற்கான மூலதனம்.

சாலை அருகில் இருக்கும் குளத்தில் குளிப்பதைவிட விட்டினுள் வரும் குழாயில் குளிப்பது பலவகையில் நல்லது என கற்பிக்கப்பட்டது. பிற்பாடு நாம் குளிக்காத குளத்தில் அழுக்கு நீர் பாய்ந்தாலென்ன என ஒரு சிலர் நினைக்க அனைவரும் அவ்வழியே நம்வழி என எண்ண தலைப்பட்டனர். அவ்விதம் அழுக்கடைந்த குளத்தின் ஓரத்தில் குப்பைகளைக் கொட்டுவதில் தான் தவறு ஏதும் இல்லையென முடிவு செய்யப்பட்டபோது குளம் பாதி நிரம்பிவிட்டது. மீதி பாதியை நிரப்பினால் வணிகவளாகமோ அல்லது பேருந்து நிலையமோ அமைக்கலாம் என கண்டடையப்பட்டு அதிலும் ஊழல் நிரம்பி வழிந்தது. இன்று பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் வாங்குகையில் நாம் நிற்கும் இடத்தில் மண்ணள்ளி போட்டவர்கள் நாம் தான் என சற்றும் உறுத்தா மனதுடன் நிற்கும் உலகில் நாம் வாழ்கின்றோம்.

பனைமரம் சந்திக்கும் பிரச்சனைகளும் அப்படிப்பட்டதே. பனை மரம் ஏறுவார் இல்லையென்றால் பனை பயனில்லா மரம் என்றே இன்றைய சமூகத்தால் கருதப்படும். சாதிகளால் பிரிந்திருக்கும் சமூகத்தில் பனைத்தொழிலானது நாடார் சமூகத்துடன் இணைத்து பார்க்கப்பட்டதால் பனை மரத்தின் பொதுவான சமூக பங்களிப்பு மழுங்கடிக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்த அளவில் சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பனை மரங்களை பராமரித்து வந்த நாடார் சமூகம், இன்று தனது சமூக அந்தஸ்தினால் பனைத்தொழிலிலிருந்து வேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது.  ஆகவே, இதுநாள் வரை பனை மரத்தை பேணி பாதுகாத்தோர் தான் அவற்றின் முற்றும் முதல் பொறுப்பாளிகள் என்று நாம் விட்டுவிட முடியாது. அனைவருக்கும் பொதுவான ஒரு மரத்தை அனைவருமாக பேணி பாதுகாக்கும் ஒரு வரலாற்று தருணத்தில் வந்து நிற்கிறோம் எனும் உண்மையை நாம் உணர்ந்து கொள்ளுவது நல்லது.

தமிழக மக்கள் அனைவருக்கும் பனை மரத்திற்கும் உள்ள தொடர்பை இன்று பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினாலே பனைமரம் பாதுகாக்க அனைத்து தரப்பிலிருந்தும் கரங்கள் நீழும். அதுவே நமது மாநில மரம் மிக முக்கிய சமூக பொருளாதார பங்களிப்பை ஆற்ற வழிகோலும். அப்படியே பனைமரம் சார்ந்த நீடித்த வளர்ச்சி  சாத்தியமாகும். நமது மண்ணிலிருந்து பனை எனும் ஒரு புது நம்பிக்கை முளைத்தெழும். ஆகவே சமயம் கடந்து ஜாதி கடந்து, மொழி கடந்து பனை வாழும் மண்ணிலெங்கும் நம்பிக்கையை நம்மால் விதைக்க இயலுமென்றால் ஒருவகையில் பனை நமது எதிர்காலத்திலும் நமது சந்ததிகளுடன் தொடர்ந்து வாழும் அவர்களையும் வாழ வைக்கும்.

பனை ஓலையில் தெரிந்துகொண்ட இயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்தி செயற்கை சாயங்கள் ஏதும் இல்லாமல் செய்த தீபாவளி வாழ்த்து அட்டை.

பனை ஓலையில் தெரிந்துகொண்ட இயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்தி செயற்கை சாயங்கள் ஏதும் இல்லாமல் செய்த தீபாவளி வாழ்த்து அட்டை.

பனை மரம் சார்ந்த உணவுகளான கருபட்டி, பனங்கிழங்கு, பனம்பழம், பதனீர் மற்றும் கள் ஆகியன இன்று அரிதினும் அரிதான பொருளாகிவிட்டன. ஒரு சமூகம் அதன் மண்ணின் விளைச்சலை வியர்வை சிந்தி சாப்பிடுகையில் அது ஆரோக்கியமாக இருக்கிறது.

நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். (தொடக்கநூல் 3: 19) இவ்வரிகள் ஆதாமிடம் கூறுகையில் சாபமாக கூறியதாக ஒரு மரபான புரிதல் இருந்தாலும், வியர்வையற்ற உணவை உண்பதே இன்றைய சாபம் என்பது நாம் அறிந்ததே.

பனை மரத்திலிருந்து பெறும் உணவுகள் அனைத்தும் பனை மரம் வாழும் மண்ணில் வாழ்பவரின் உடலுக்கு உரம் சேர்ப்பதாக கடவுள் படைத்துள்ளார். தொலைவில் இருக்கும் கனிகள் விலக்கப்பட்டவை என்பது அறியாமல் அவைகளுடன் தீவினைகளையும் வருவித்துக்கொள்ளுகிறோம். பனையை இழக்கும் தோறும் ஏதேனை விட்டு விலகிய ஒரு சாபச் சூழலில் தாம் வாழுவோம்.  இழந்த சொர்க்க மரத்தை மீட்டெடுக்கும் ஒரு நெடிய பயணம் நமக்கு முன்னால் அமைந்து காத்திருக்கிறது. சான்றோர் வாழ்த்த, வீழ்ந்தோர் எழ, விண்ணவரும் தொழ, முடிவிலாது செல்லும் பயணம் கனிகளையும் சுவை குன்றா பனஞ்சாற்றையும் வழங்குகையில், எப்படியும் இனிய பயணம் காத்திருக்கின்றது.

இப்பயணத்தில் பனைமர ஓலை நம்முடன் வர இருக்கிறது. ஓலை என்பது பல பொருட்களை உள்ளடக்கிய வார்த்தை. ஆவணம், அழைப்பு, கடிதம் மற்றும் ஒருவரின் சுய அடையாளம் கூட. தமிழகத்தின் தொல் மரபின் ஒரு சிறு துளியை ஓலையில் சுமந்தலய நான் கண்ட கனவு. எப்போது வேண்டுமானாலும்  மறைந்து விடும் தன்மை கொண்ட கனவு ஆகையால் வண்ணங்கள் சுழித்தோடும் கனவுப்பெருக்கு இது.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்
மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com
8888032486

 

2 பதில்கள் to “பனைமர ஓலை”

  1. Logamadevi Annadurai Says:

    பனைமரச்சாலையில் பயணித்துவிட்டு இப்போது பனைமர ஓலையை பார்க்கவும் உங்களுடன் வந்துவிட்டோம் காட்சன்
    அருமையானதோர் பதிவு.
    கிருத்துவரான நீங்கள் தீபாவளி வாழ்த்து அட்டையை பனை ஓலையில் செய்து எங்களுக்கு அளித்திருந்தாலும் அது பார்க்க wine கிண்ணம் போலவும் அதன் மீதிருக்கும் அந்த அகலின் சுடர் அப்பமாகவுமே எனக்கு தெரிகின்றது . மதங்களைக்கடந்ததுஅல்லவா நம் பனை?
    //கொலைக்கருவிகளுடன் நடமாடும் மனித வர்க்கங்களின் முன்னால் அவைகள் நிராயுதபாணியாக நிற்கின்றன// என்கிறீர்கள் காட்சன். அதுசத்தியமான வாக்கியம்
    பனையோலையின் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பை கருக்கு என்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் இந்தக் கருக்கை மன்னர்களின் வாளுக்கு ஒப்பிட்டு

    உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை
    ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்
    கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்
    காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே..-என்கிறார்
    இந்த பகைசூழ் உலகினை உங்களைப்போன்றவர்களின் துணையுடன் வெல்லட்டும் பனை
    அன்புடன்
    லோகமாதேவி

  2. Logamadevi Annadurai Says:

    அன்பின் காட்சன்
    நாங்களும் இணந்தே இருக்கின்றோம் இந்த பனைச்சாலையிலும் பின் இந்த பனையோலையிலும் நிறைய பேருக்கு இந்த தகவல்கள் சென்றடைய வேண்டும் அதுதான் இப்போதைக்கான முதல் முயற்சி. இந்த லின்க் சென்று பாருங்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தில்ல் எத்தனை பேர் தனக்கு பனையின் தேவை உள்ளதென்று சொல்லி இருக்கின்றனர்|!!!
    http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabafba9bcd-ba4bb0

    நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் பனைஓலைபெட்டிகளையும் பிற பனைஓலைப்பொருட்களையுமே பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதேய் நம் அனைவரின் விருப்பமும்

பின்னூட்டமொன்றை இடுக