பீல் பனைகுடியினர்


குஜராத் முழுவதும் உள்ள பனை மரங்களின் எண்ணிக்கை மொத்தம் 17 இலட்சம் என குறிப்புகள் கிடைக்கின்றன. இவைகளை பனை மரங்கள் மிகுதியான தமிழகத்தோடு  பொருத்திப்பார்த்தால், வெறும் மூன்று சதவீதமே பனைமரங்களே உள்ளன. குஜராத்தில் நான் தங்கியிருக்கும்போது பனை மரங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவைகள் பெரும்பான்மைகள் அல்ல. அவைகள் ஆங்காங்கே நிற்பவை. தனிப்பட்ட ஆர்வத்தினால் பேணப்படுபவை. முதன் முதலாக நான் ஓலைகளைப் பார்த்தது சி டி எம் அருகிலுள்ள இஸ்லாமியர் தங்கியிருக்கும் சேரியின் அருகில் சுமார் 50 மரங்களை பார்த்ததே. அவர்களும் அதனை பயன்படுத்துவதுபோல் தெரியவில்லை.

பீல் பழங்குடியினர் வாழும் பகுதியில் பனைமரங்கள்

பீல் பழங்குடியினர் வாழும் பகுதியில் பனைமரங்கள்

2014ஆம் வருடம் திருச்சபையாக குருத்தோலை ஞாயிறு நடத்த வேண்டும் என திட்டமிட்டு, ஓலைகள் எடுக்கவேண்டும் என முயற்சித்தால், ஓலைகள் எடுத்து தர பனை தொழிலாளிகள் இல்லை. அப்பொழுதுதான் சாந்திப்பூர் குறித்த எண்ணம் வந்தது. குஜராத் பகுதியில் கிறிஸ்தவம் பரவியபொழுது அங்கே மிஷனெறிகள் புதிய கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் வாழ பல ஊர்களை அமைத்தார்கள். முக்திப்பூர், சாந்திப்பூர் போன்ற பெயர்கள் இட்டு கிறிஸ்தவர்கள் அங்கே குடியேற வழிவகை செய்தார்கள். நாங்கள் அகமதாபாத்திலுள்ள  போதகர்களாக முதன் முறையாக சாந்திப்பூர் சென்றபோது அதன் அழகில் நான் மயங்கிவிட்டேன். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், நிலக்கிழார்களாக இருப்பதைக் காணமுடிந்தது.

அவர்களில் ஒருவரது வீட்டில் 10 பனைமரங்கள் வடலியும் பெரிதுமாக இருப்பதை அப்போதே பார்த்தேன். பனை மரங்கள் அபூர்வமானபடியால் எனக்கு அது மறக்கவியலா கிராமம். அந்த இடத்தை நினைவில் நிறுத்திக்கொண்டேன். நாங்கள் இருந்த சி டி எம் பகுதியிலிருந்து சுமார் 20 கி மீ தொலைவில் இருக்கும் அந்த கிராமத்திற்கு எனது புல்லெட்டில் 10 முறைக்கும் மேல் நான் சென்றிருப்பேன். குழந்தைகளையும் ஜாஸ்மினையும் அழைத்துச் செல்லுவது வழக்கம்.

முதன் முறையாக ஆலய அலங்கரிப்பிற்கு ஓலைகளை பயன்படுத்தவேண்டும் என நினைத்து அதற்கான அனைத்து ஒழுங்குகளும் முடித்தபோது, ஆலயத்திலுள்ள சுரேஷ் என்ற வாலிபனையும் அழைத்துக்கொண்டு, இருவருமாக அங்கே சென்றோம். அங்கே தான் நான் முதன் முறையாக வடலி பனையில் ஏறினேன். வடலியில் ஏறுவது பெரிய விஷயம் கிடையாது ஆனால் நாற்பதை நெருங்குகையில் உடல் வளையாமல் போய்விடுகிறது. ஆகவே உடலெங்கும் சிராய்ப்புகள். எப்படியென்றாலும் ஓலைகளை வெற்றிகரமாக பெற்று வந்தோம்.

குஜராத் பகுதியில் பனைமரங்களை பேணுவது சாத்தியமில்லாதது என்றே எண்ணினேன். குறிப்பாக நாங்கள் இருந்த பகுதியில் ஏழு டிகிரி வரை  குளிர் இருக்கும். குமரியில் 17 அல்லது 18 வரை இறங்கும் குளிரில் மட்டும் பனை மரங்கள் வளரும் என்று நினைத்த எனக்கு, குஜராத்தில் வளர்பவை மிகுந்த ஆச்சரியமளித்தன.

இதே வேளையில் எனது அப்பா பணியாற்றிய சூரத்தை அடுத்த வாலோட் தாலுகாவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு பனை மரங்களைக் கண்டேன். கமித் எனும் பழங்குடி இனத்தவர் தோட்டங்களில் வளருபவற்றில் இருந்து பொதுவாக நுங்கு மட்டுமே எடுப்பதை கவனித்தேன். குருத்தோலைகளை எடுக்க அவர்கள் ஒப்புவதே இல்லை.  இவைகள் அனைத்தும், பனை மரங்கள் குஜராத்தில் தப்பிபிழைத்து வளருபவை என்ற எண்ணத்தையே எனக்கு அருளியது.

நமது முடிவுகள் எப்போதும் சரியாயிராது என்பதை பயணங்கள் மட்டுமே உறுதி செய்யும் என்பதை உணரும் சூழல் வந்தது. பனை மரச்சாலை நிறைவு நாளின்போது சொற்பொழிவாற்றிய திரு டேவிட்சன் அவர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் என்னை அழைத்து, குஜராத்தில் பனை மரங்கள் அதிகம் இருப்பதாக   அங்கு பணிபுரியும் பேராயர் தேவதாஸ் அவர்கள் குறிப்பிட்டதாகவும், அங்குள்ள மக்களுக்கு கருப்பட்டி தயாரிக்கும் பயிற்சியை வழங்க இயலுமா என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

நான் அகமதாபாத்தில் இருந்ததாலும் சூரத் பகுதிகளில் பயணம் செய்திருப்பதாலும் பனை மரங்கள் மிக அதிகமாக குஜராத்தில் இல்லை என்பதை அறிவேன். ஆனாலும் மும்பையிலிருந்து பால்கர் வரை ரயில் பயணத்தில் நாம் பனை மரங்கள் திரட்சியாக நிற்பதை காண முடியும். ஆகவே பனை மரங்கள் நிற்கும் பகுதியை ஆய்வு செய்யும் நோக்குடன் ஒரு முறை போய் வரலாம் என்று ஒப்புக்கொண்டேன். மேலும் அவர்களுக்கு  நாம் எந்த வகையில் பயனுள்ள பங்களிப்பாற்ற முடியும் என்று எண்ணி, திட்டமிடத் துவங்கினோம்.

பனை மரங்கள் சார்ந்து ஒரு கணக்கெடுப்பு நடத்தவும், மேலும் அங்கே உள்ள மக்களுக்கு கருப்பட்டி காய்க்கும் நுட்பத்தை கற்றுக்கொடுக்க ஏதேனும் முயற்சிகளை  எடுக்கலாமா என்பது திட்டம். இதற்காக மும்பையிலிருந்தோ அல்லது தமிழகத்திலிருந்தோ ஒரு குழுவினரை அழைத்துச் செல்ல திட்டம் வகுக்க என்னைக் கேட்டுக்கொண்டார்கள். மும்பையிலிருந்து என்னால் இவைகளை ஒழுங்கு செய்ய இயலுமா என எனக்குத் தெரியவில்லை. கருப்பட்டி காய்க்கும் தொழிலாளர்களை தமிழகத்திலிருந்தே நான் அழைக்க இயலும். அப்படி ஒரு பெரும் பொருட்செலவில் இவைகளை செய்வதற்கு முன்னால், அந்த பகுதியை கள ஆய்வு செய்து தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனைத் தொடர்ந்து திட்டம் வகுக்கலாம் என்று கூறினேன்.

பனை மரம் மீதிருந்த உணர்வெழுச்சியால் மட்டுமே அங்கு செல்லலாம் என முடிவெடுத்தேன்.  அப்பொழுது, நான் சில நாட்களுக்கு முன்பு வாசித்த பனை மரமும் தேனீ வளர்ப்பும் என்ற கட்டுரை என் நினைவிற்கு வந்தது. அது வேளாண் பல்கலைக்கழகம், நவ்சாரியிலிருந்து வெளியிடப்பட்டதாகையால் அங்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். ஒரு உள்ளுணர்வின் வெளிபாடாக நான் கருதியது எனக்கு மிகப்பெரிய வாசலை திறந்தளிக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

நவ்சாரி ரயில் நிலையத்தில் நான் இறங்கியபோது மணி மாலை 4.30. நான் பல்கலைக்கழகம் சென்று சேருகையில் அனைவரும் அங்கிருந்து புறப்படும் வேகத்தில் இருப்பார்கள் என எண்ணினேன். ஆனால் நான் எவரை எல்லாம் காணவேண்டும் என நினைத்தேனோ அவர்களைக் காண முடிந்தது.

முதலாவதாக நான் பேராசிரியர் பாடக் என்பவரை காணச் சென்றேன். தேசிய அளவிலான பனை மரம் சார்ந்த ஒரு கருத்தரங்கை ஜனவரியில் தான் முடித்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியின் கட்டுரை தொகுப்பு அவரது மேஜையில் இருந்தது. பல்வேறு ஆய்வுக்கட்டுரை சார்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பங்கேற்புடன் செய்யப்பட்டிருந்தது அந்த தொகுப்பில், தமிழர்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளும் மேலோட்டமாக காணப்பட்டன. என்றாலும் என்னைப் பொருத்தவரையில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.

பேராசிரியர் பாடக் என்பவர் பனை தொளிலாளிகளோடு தொடர்புடையவர். நவ்சாரிக்கு அருகில் உள்ள டேட்வாசன் என்ற பகுதியில் சுமார் 10000 பனைமரங்கள் ஒன்று போல ஒரே இடத்தில் இருப்பதாக கூறினார்கள். முன்பு  பனை வெல்லம் தயாரிக்கின்ற இடமாக இருந்தது, தற்போது உள்ள சூழலினால்தற்போது வெறும் பதனீர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்றும், லிட்டருக்கு 40 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றும் கூறினார். தமிழகம் தாண்டி பனை வெல்லம் தயாரிக்கும் நுட்பம் அறிந்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது மீண்டும் இதன் மூலம் உறுதியானது. இங்கு பனை மரம் ஏறும் தொளிலாளர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என கேட்க, அனைவரும் பழங்குடியினர் என்று கூறினார்.

இங்கு பனை தொழிலாளர்களுக்கான ஒரு சங்கமும் 1974 முதல் இயங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான காரணங்கள், உறுதுணையாக நின்றவர்கள் என ஒவ்வொன்றாக கூறிக்கொண்டு வந்தார். வருகிற 2017 ஆம் ஆண்டும் ஒரு தேசிய அளவிலான ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

மேத்தா அவர்களை சந்தித்தபொது தேனீ வளர்ப்பு அவரது விருப்ப தேர்வு என்றும், தேனீக்களுக்கு மிக அதிக அளவில் தேனை வழங்குவதில் பனை மரங்கள் முன்னணியில் நிற்பதால் தனக்கு பனை மரத்தின் மீது கவனம் குவிந்தது என்றும், தனது கட்டுரை, பல கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வடிவமே என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். பருவ காலத்தில் கிடைக்கும் தேனில் 66 சதவிகிதம் பனைமர மகரந்தம் இருப்பதை கூறி, பனை மரத்திற்கும் தேனீக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் கூறினார். என்னை இரயில் நிலையத்தில் பேராசிரியர் அவர்களே கொண்டு விட்டார்கள்.

பச்சை பஞ்சுருட்டான் - தேனீக்களின் எமன்

பச்சை பஞ்சுருட்டான் – தேனீக்களின் எமன்

அன்று இரவு பரோடா சென்று சேருகையில் மணி 10. அங்கிருந்து தாகோத் செல்வதற்கு மீண்டும் மீன்று மணி நேர பயணம். இரவு இரண்டு மணிக்கு தாகோத் வந்து சேர்ந்தேன். என்னை அழைக்க கலைவாணன் என்ற நண்பர் வந்திருந்தார். அவர் பீல் பழங்குடியினரின் மொழியில் திருமறையை மொழிபெயர்த்து வருகிறார். இலக்கணம், வரிவடிவம் போன்றவைகளிலிருந்து ஒவ்வொன்றாக அவர் கட்டமைத்து, தற்போது மாற்கு நற்செய்தி நூல் வெளியிடும் அளவிற்கு ஆயத்தமாகியிருக்கிறார். என்னைப் பார்த்தவுடன், காலை ஆறுமணிக்கு ஆயத்தமாகவேண்டும் என்று கூறினார்.

மறுநாள் காலை ஆறுமணிக்கு பேராயர் தேவதாஸ் அவர்களை சந்தித்து பேசினேன். ஷாலோம் என்ற பெயரில் குஜராத் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அவர்கள் பணி செய்துவருவதாகவும், நூற்றிற்கு மேற்பட்ட கிராமங்களில் பனை தொழிலாளர்கள் இருப்பதாகவும் கூறினார். நான் எவ்வித முன் வரைவு திட்டத்தோடு வரவில்லை என்றும், அவர்களைக் கண்டு அவர்கள் சூழலிலிருந்து நாம் தேவையான திட்டங்களை வகுக்கலாம் என்று கூறினேன். பேரீச்சை மரங்களைக் குறித்த திருமறையின் குறிப்புகளை எனது பார்வையில் கூற பேராயர் மகிழ்ந்துபோனார். அங்கிருந்து மன்றாட்டுடன் கிளம்பினோம்.

பீல் பழங்குடி தாய் கரத்தில் ஓலையில் செய்யப்பட்ட உறியோடு

பீல் பழங்குடி தாய் கரத்தில் ஓலையில் செய்யப்பட்ட உறியோடு

மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே மக்களுடன் செலவளிக்க கிடைக்கும் ஆனால் 4 மணி நேரம் பயணிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பயணித்தோம். காருக்கு வெளியே ஆறு டிகிரியாக இருந்தது. உடன் வந்தவர்கள், குளிர் நேரத்தில் ஒரு டிகிரி மட்டும் வரும் என்று கூறினார்கள். இங்கு பனை மரம் வளருமா என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முதலில் மத்தியபிரதேசத்திலுள்ள அலிராஜ்பூர் என்ற இடத்திற்குச் சென்றோம்.

ஆனால் எனது எண்ணத்திற்கு மாறாக மிக செழிப்பான பனை மரங்கள் ஒவ்வொன்றாக தென்பட்டது. ஒவ்வொரு வீடுகளுக்கும் அருகில் பனைமரங்கள் காணப்பட்டன. அவர்களின் தோட்டத்திலும் எல்லைகளை வகுக்கும் வண்ணமாகவும் பனைமரங்கள் காணப்பட்டன. குமரி மாவட்டத்தில்  சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எப்படி பனை மரங்கள் இருந்தனவோ அப்படியே பனை மரங்கள் இருப்பதைக் காணமுடிந்தது.

புதிதாக செய்யபட்ட ஓலை உறியுடன்

புதிதாக செய்யபட்ட ஓலை உறியுடன்

பீல் பழங்குடியினர் தாம் இம்மரத்தில் ஏறுகின்றனர் என்றும், ஒவ்வொரு வீட்டிலுள்ள ஆண்மகனும் பனை மரம் ஏறும் கலை அறிந்தவர். பதனீர் எடுக்க தெரியாவிட்டாலும், முன்று மாதங்கள் தொடர்ச்சியாக கள் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் வெயில் காலம் கொளுத்தும். வெயில் தாக்கத்தால் அனேகர் மயங்கி விழுவதும் மரித்துப்போவதும் உண்டு. சுமார் 47 டிகிரி வரை செல்லும் வெம்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் கள் பருகுவார்கள் என்றே நினைக்கின்றேன். நான்கு பனை மரம் இல்லாத குடும்பத்திற்கு பெண் கொடுக்க மாட்டார்களாம்.

குஜராத் பகுதியிலுள்ள சோட்டா உதைப்பூர் மாவட்டத்திலும் பனை மரத்துடன்  பீல் பழங்குடியினருக்கான தொடர்பை கண்டேன். அங்கே, பனை ஏறும் முறை தென்னிந்தியாவிலிருந்து வெகுவாக வேறுபடுகிறது. மூங்கில் களிகளில் கணுக்கள் இருக்கும்படியாக தறித்து அவைகளை பனை மரத்தில் மூங்கில் நாரினால் கட்டி விடுகிறார்கள். பிற்பாடு அந்த கம்பை பற்றிக்கொண்டே ஏறுகிறார்கள். பனை ஏறுவதற்காகவே வீட்டின் அருகில் மூங்கில்களைப் பயிரிட்டு வளர்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பழைய கழிகளை அகற்றிவிட்டு புது கழிகளை இணைக்கிறார்கள்.

மூங்கில் கழிகளை பனைமரத்துடன் இணைக்க பயன்படும் மூங்கில் நார்

மூங்கில் கழிகளை பனைமரத்துடன் இணைக்க பயன்படும் மூங்கில் நார்

பனை ஓலையில் உறி செய்கிறார்கள். வேறு என்ன செய்கிறார்கள் என்றோ அது குறித்த வேறு தகவல்களை திரட்டவோ நேரம் போதுமானதாக இல்லை. ஆனால், அவர்கள் கண்டிப்பாக பனைக்குடியினர் என்பது உறுதியாக தெரிந்தது. பழங்குடியினரின் உணவாகிய கிழங்கும் இவர்களுக்கு பனை மரத்திலிருந்து கிடைக்கிறது. இன்றும் உலர்த்தி சேமிக்கும் உணவுகளையே இவர்கள் பெரும்பாலும் பயிரிடுகிறார்கள். மக்கா சோளம், கோதுமை, துவரம் பருப்பு, உழுந்து, சணல் ஆகியவற்றை இவர்கள் பயிர் செய்கிறார்கள். மா, கொய்யா, சீத்தா, நாவல்  பழ மரங்களும் உண்டு.

இந்த பயணம் நிறைவடைந்தபோது என்னை பரோடாவிலுள்ள மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்தில் விட்டார்கள். அங்கே இருந்த சிறுவர்களுக்கு ஓலையின் பயன்பாட்டினை எடுத்துக்கூறினேன். சில எளிய ஓலை பொருட்கள் செய்ய கற்றுக்கொடுத்தேன். விடுதி காப்பாளர் ஸ்மிதா முத்தையா, எனக்கு முன் அகமதாபாத்தில் போதகராக பணியாற்றிய அருட்பணி. ஏசா முத்தையா அவர்களின் மனைவி. போதகர் அகமதாபாத் சென்றிருந்ததால் அவர்களை சந்திக்க இயலவில்லை.

பேருந்தில் நான் திரும்புகையில், அந்த பழங்குடியினரின் வாழ்வில் பனை மரம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை குறித்தே எண்ணிக்கொண்டு வந்தேன். பனை மரம் குறித்த எந்த ஆய்வும், தமிழகத்திலிருந்து செய்யப்படுவதை விட, பழங்குடியினரிடமிருந்து செய்யப்படுவதே மிகச்சரியான துவக்கமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஆம் உணவிற்காக தேடி அலையும் தொல் பழங்காலத்தில் இருந்தே மனிதனுக்கு பனை மரம் பேருதவியாக இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

அவர்கள்  உணவு சார்ந்து சொன்ன ஒரு விஷயம் அதை நிரூபிக்கிறது. பனம்பழத்தினுள் ஒரு கம்பினை நுழைத்து அதில் வடியும் சாற்றினை அவர்கள் பருகுவார்களாம். ஆம் கோடையின் வெம்மை தாக்கும் நேரத்திற்கு மிகச்சரியான பானம் இது. இவ்வுணவை உண்ணும் முறையில் தொன்மையான முறைமை கையாளப்பட்டிருக்கிறதை காணமுடியும், சாறு பிழிந்து வீசியெறியப்பட்ட இதே விதைகள் மழை முடியும் தருணத்தில் கிழங்கு ஆவதையும் அவர்கள் கண்டு சேகரித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

பீல் பழங்குடியினர் பனையேற்றிற்கு பயன்படுத்தும் மண் பானைகள்

பீல் பழங்குடியினர் பனையேற்றிற்கு பயன்படுத்தும் மண் பானைகள்

அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டமும் எனது எண்ணத்தில் பெரிய அலையை ஏற்படுத்தியது. சிந்து சமவெளி நாகரீகத்தின் ஏதோ ஒரு தொடர்ச்சியா இங்கு வாழும் மக்கள்? பனை என்னை இத்தனை தூரம் அழைத்துவரும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அருகில் செல்ல செல்ல மிக உயர்ந்து செல்லுகிறது பனைமரம். மிக நீண்ட பயணம் செய்தாலே சற்றேனும் என்னால் பனைமரத்தை உணர முடியும் போலும். ஆனாலும்  உலகம் முழுவதும் உள்ள பனைக்குடியினர் அனைவரையும் தேடிச்செல்லும் பேராசைமட்டுமே என்னிடம் இருப்பதாக எனக்கே தோன்றுகின்றது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: