Archive for திசெம்பர், 2016

ஆம் அவ்வாறே ஆகுக

திசெம்பர் 27, 2016

கிறிஸ்மஸ் வாழ்த்துக்களில் இவ்வருடம் நான் மலர்ந்து பார்த்தது, அருட் தந்தை ஃபிரான்ஸிஸ் ஜெயபதி அவர்கள் எனக்கு அனுப்பிய “ஆண்டவன் ஆண்டியானான்” எனும் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட குடில். ஆகவே இதை நான் அறிந்த அனைவருக்கும் அனுப்பினேன். பெரும்பாலும் ஒரு சிறு அதிர்ச்சிக்குப் பின் சிலர் இதை சிலாகித்து எனக்கு பதில் அளித்தனர். வேறு சிலருக்கு கந்தை கோலம் எடுத்தார், ஏழை பாலனானர், என வழமையாக பொருள் கொள்ளப்பட்டாலும் “ஆண்டி” எனும் வார்த்தை பெரும் துணுக்குறலை கொடுத்திருக்கிறது.

ஆண்டவன் ஆண்டியானார்

ஆண்டவன் ஆண்டியானார்

ஆண்டி எனும் வார்த்தை பண்டாரம் எனும் பூசை செய்யும் எளியவரோடு தொடர்புடையது  ஆனபடியால் ஒருவித ஒவ்வாமை எழுந்ததை உணர முடிந்தது. இருப்பினும் ஆண்டி எனும் வார்த்தைக்கு பூசை செய்யும் அடியவர் என்றும், வேறு தேசத்திலிருந்து வந்தவர் என்றும், ஏழை எனவும் பொருள் கொள்ளலாம். அனைத்துமே பாலனாக பிறந்த இயேசுவை சுட்டி காண்பிக்கும் பொருளடக்கம் உள்ளதாக நான் உணர்ந்தேன்.

ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி, என்பது பழமொழி. அதற்காக இயேசு எப்போது பிள்ளையார் கோவில் பூஜாரியாக இருந்தார் என கேள்வி எழும்பாது என நம்புகிறேன். எளிமை உருவெடுத்தவரை ஆண்டி என பொருள் கொள்ளுகிறோம். இந்த பொருள் இதுகாறும் வழக்கில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப் படாததாகையால், அதன் பொருள் சார்ந்து ஒரு ஆழ்ந்த கவனிப்பை கோரிற்று. இயேசுவின் எளிமையின் தன்மையை மேலும் ஒரு துணுக்குறலோடு அனுபவிக்க கோரிய ஒரு கூற்றாகவே அமைந்தது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் மீது காணப்படும் ஏழ்மையின் தன்மை மீது ஒரு வித விலக்கம் ஏற்படுவதைக் சமீப காலங்களில் காண முடிகிறது. இயேசுவின் தந்தை அரண்மனைகளையும் மாட மாளிகைகளையும் அமைக்கும் ஒரு கட்டிட பொறியாளர் என கூறும் ஆய்வுகள் இன்று முன்னெடுக்கப்படுகிறது. தச்சன் எனும் சொல் அவரை கீழ் மட்டமாக எண்ண வழிவகுக்கிறது என்பதும், அவரை ஒரு கலைஞரின் மகன் என விளிப்பதோ, கட்டிட கலை நிபுணரின் மகன் என அழைப்பதோ அவரை ஒரு உயர் மத்திய வர்க்க மனிதராக உயர்வடையச் செய்யும். ஆகையால் பொருளாதாரத்தில் முன்னணியில்  உள்ள கிறிஸ்தவர்கள் மூலவார்த்தையை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுவதை, எப்படி இயேசு “ராஜா” என நிறுவனமாக்கப்பட்ட கிறிஸ்தவம் அவர் தலை மேல் தங்க கிரீடம் வைத்ததோ அப்படி தான் இதையும் நான் பார்க்கிறேன்.

அப்படியான ஒரு வலுவான பின்னணி உடையவராயிருந்தால் அவருக்கென ஒரு மாளிகை இருந்திருக்கும். அவர் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார் “அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். (லூக்கா 9: 57 – 58 திருவிவிலியம்). அவரது வாழ்வில் பெரும்பாலும் அவர் ஒரு இரவல் வாழ்வையே வாழ்ந்தார் என்பதும் உறுதி. ஆகவே தான் “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர்,கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப்பியர் 2: 5 – 8 திருவிவிலியம்)

அடிமை எனும் வார்த்தை ஆண்டியை விடவும் ஒப்பீட்டளவில் தாழ்ந்தது. கடவுள் தம்மைத் தாழ்த்தும் பாங்கில் அவர் எவ்வளவு உயர்வானவரோ அதற்கு நேர் எதிர் திசையில் தம்மை தாழ்த்திய ஒரு பெரும் தியாகத்தை நாம் காண்கிறோம். அதில் நாம் சமரசம் செய்ய முற்படுவோமென்றால் நாம் அவரின் தாழமையை ஏற்கவில்லை என்பதே பொருள். அவரின் தியாகத்திற்கு வேறு எந்த இழிவும் நாம் மேலதிகமாக செய்துவிட முடியாது.

இவைகள் ஒரு புறம் இருக்க அந்தப் படத்தின் முற்பகுதியில், தேவனாகிரியில் பொறிக்கப்பட்ட, வெண்கலத்தாலான “ஓம்” வைக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் என்ன என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், குடிலின் பிற்பகுதியில் ஒரு நட்சத்திரம் காணப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு வார்த்தை தன்னில் பாதியை நட்சத்திரத்தின்  பின் மறைத்துக்கொண்டிருந்தது. “உருவி” பிற்பாடு சுமார் நான்கு எழுத்துக்கள் மறைக்கப்பட்டு “ருவானவர்” என எழுதப்பட்டிருந்தது. உருவின்றி உருவானவர்? உருவின்றி கருவானவர்? எனது வாசிப்பில் தான் பிழையா? ஆனால் எனக்கு முன்பகுதியில் வைக்கப்பட்ட “ஒம்” எனும் வார்த்தைக்கு பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் தொடர்பு இருக்கும்  என்றே எண்ணத் தோன்றியது.

ஓம் எனும் வார்த்தை மிக முக்கியமாக இந்திய மதங்களில் கையாளப்படுகிறது. ஆகவே அது இந்து மதம் சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மதமும் தனக்கான விளக்கங்களை “ஓம்” எனும் வார்த்தைக்கு கொண்டுள்ளது. கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் ஓம் எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லையென்றாலும் அது குறித்த சிந்தனைகள் கிறிஸ்தவ ஆன்மீகத்தில் விரவிக்கிடந்தன என்பதை அறியமுடிகிறது. குறிப்பாக நமது கீர்த்தனைகளில் “ஓம்” எனும் வார்த்தை, இன்று கிறிஸ்தவத்தில் வழக்கொழிந்த வார்த்தைகளை நாம் மீட்டெடுக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக காணப்படுகிறது.

இன்று பாடல் பாடும் கிறிஸ்தவர்கள் ராகத்தை தொடர்வதில் கவனமளித்து  வார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்க மறந்துவிடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகின்றது. பல வகையான குத்துப்பாடல்கள் இன்று ஆராதனையை நிரப்பி, கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்பட்ட சமய ஒன்றிணைப்பின் கூறுகளை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் இந்தியாவில் ஒரு நெகிழ்வை கொண்டிருந்த காலம் இன்று போய்விட்டதோ எனும் அச்சமே மேற்கொள்ளுகிறது.

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார் சரபோஜி மன்னரின் பள்ளித் தோழர். இருவருமாக சுவார்ட்ஸ் அய்யரின் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள். தனது நண்பனாம் சரபோஜி மன்னரின் அவையில்   கவிராயராக இருந்தவர். கிறிஸ்து மீது தனக்கிருந்த பக்தியை பிற மதத்தினர் முன் துணிந்து ஆனால் அவர்கள் மனம் புண்படாமல் சொன்னவர். ஆழ்ந்த புலமை பெற்றவர். சாஸ்திரியார் தனது பாடலில் “ஒம்” என்ற வார்த்தையைக் பயன்படுத்துகிறார்.

பல்லவி

ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா

ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

 

அனுபல்லவி

ஓம் அனாதி தந்தார், வந்தார் இறந்

துயிர்த்தெழுந்தரே, உன்னதமே –

 

சரண்ங்கள்

வெற்றிகொண் டார்ப்பரித்து- கொடும் வே

தாளத்தை சங்கரித்து, முறித்து ;

பத்ராசனக் கிறிஸ்து – மரித்து

பாடுபட்டுத் தரித்து , முடித்தார் .

 

சாவின் கூர் ஒடிந்து , மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,

ஜீவனே விடிந்து ,- தேவாலயத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-

 

வேதம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,

மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்.

 

 

கிறிஸ்தவ புத்தக இலக்கிய சேவை தொகுத்தளித்த கிறிஸ்தவ கீர்த்தனைகள் தொகுதியில் “ஓம்” என்பதற்கு “திருவார்த்தை” என பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாஸ்திரியாரின் புலமைக்கும் அவரது பல்சமய நல்லிணக்கத்திற்கான உரையாடலுக்கும் ஒரு சிறந்த மாதிரியாக நம்முன் காணப்படுகிறது. மேலும் அவர் இதை தவறுதலாக உபயோகித்தார் எனக் கூறி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இதையே விளக்கும் வண்ணமாக கிறிஸ்து பிறப்பைக் குறித்து அவர் பாடிய பாடலில்

 

ஆதி திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார்

ஆதன் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட

ஆதிரையோரை ஈடேற்றிட

 

இந்த மூன்று வரியில் மட்டுமே அவர் கண்டிருக்கும் களம் பிரம்மாண்டமானது. இன்னும் எவரும் அவரை தாண்டிச் செல்ல இயலாதபடி அவர் பன்முகத்தன்மையுடன் இவைகளை கவியாக்கியிருக்கிறார். இந்திய சிந்தனை மரபு, கவி மரபு,  கிறிஸ்தவ இறையியல் மரபு, போன்றவற்றை விடாமல் அவைகளுள் சமயங்களை உள்ளடக்கிய ஒரு விரிந்த பார்வையை கொடுக்க இறையருள் வேண்டும். எள்ளி நகையாடுவோருக்கு ஏதும் தேவையில்லை.

“ஓம்”, “திருவார்த்தை” என்பனவைகள் எவ்வாறு இவ்விடத்தில் வந்து அமைகின்றன?

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”  (யோவான் 1: 1- 5)

தனது பண்பாட்டு வெளியிலிருந்து இந்த வார்தைகளை அவர் கவர்ந்து கவி படைக்கிறார். கவியை மாத்திரம் அல்ல அதன் மூலம் சமயங்களுக்கிடையில் ஒரு மிகப்பெரிய பாலத்தையும் அவர் அமைக்கிறார். இன்று அவைகள் பொருளற்றவைகளாக காணப்படுவதற்கு காரணம், ஆண்டியை விரும்பாமல் அரசனை காணும் வேட்கையினால் அல்லவா?

சாது சுந்தர் சிங்

சாது சுந்தர் சிங்

இந்தியாவில்  ஒரு நெடிய பாரம்பரியம் உள்ளது. அவைகளைக் களைந்து எங்கோ ஒரு புது ஆன்மீகம் படைக்க நம்மை கடவுள் அழைக்கவில்லை. இருக்கும் இடத்தில் நாம் முதலில் சான்று பகர அவர் அழைக்கிறார். வெள்ளை அங்கி தரிக்காதபடி காவி அணிந்த சாது சுந்தர்சிங் இன்றும் மேற்குலகிற்கு சவால்விடும் ஒரு அருள் தொண்டர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரத்தம் சிந்தும் கால்களையுடைய ஒரே அப்போஸ்தலர் அவரே. தான் ஒரு கிறிஸ்தவர்  ஆனதற்கு தூய ஆவியர் பொறுப்பென்றால், தன் ஒரு துறவியானது தனது தாயால் என அவர் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த அனைத்து பெண்களிலும், ஏன் கிறிஸ்தவ பெண்மணிகள் உட்பட, தனது தாயே பக்தியில் ஒழுகும் ஒரு சிறந்த முன்மாதிரி பெண்மணி என அவர் தயக்கமின்றி கூறுகிறார். இவ்விதமாக ஒரு கலாச்சார பின்னணியத்தை அவர் ஏற்று கிறிஸ்தவ ஆன்மீகத்தை முன்னெடுக்கிறார்.

பேராயர் அப்பாசாமி

பேராயர் அப்பாசாமி

இன்னும் சமீபத்தில் நம்முடன் வாழ்ந்த பேராயர் அய்யாதுரை ஜேசுதாசன் அப்பாசாமி, பாளையங்கோட்டையில் பிறந்தவர் (3.9.1891). இந்திய சமயங்களுடன் கிறிஸ்தவம் எப்படியெல்லாம் முயங்கி தெளிவடையமுடியும் என்பதை முயற்சித்துப் பார்த்தவர். 1975ஆம் ஆண்டுவரை பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு கிறிஸ்தவ உலகிற்கு தொண்டாற்றியவர். சாது சுந்தர்சிங் குறித்த புத்தகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். இன்று அவரை திருநெல்வேலி நினைவில் கொண்டிருக்கிறதா? இல்லை என்பதே நிதர்சனம்.

ஸ்டான்லி ஜோண்ஸ்

ஸ்டான்லி ஜோண்ஸ்

இருபதாம் நூற்றாண்டின் அப்போஸ்தலன் எனப் பெயர் பெற்ற ஸ்டான்லி ஜோண்ஸ், மெதடிஸ்ட் திருச்சபையின் சார்பாக இந்தியாவில் பணி செய்தவர். இருமுறை நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மகாத்மா காந்தியோடு நெருங்கி பழகிய அவர், எழுதிய புத்தகம் “The Christ on the Indian Road” அன்றைய விற்பனை உலகை அசைத்தது. முதன் முதலில் கிறிஸ்தவ ஆஸ்ரமத்தை துவங்கிய முன்னோடி அவர். எனது 10 ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபை அனுபவத்தில் அவர் பெயர் பொதுவிடங்களில்  நினைவுகூறப்பட்டதே இல்லை. இன்றும் இவர்களின் தொடர்ச்சி அறுபடாமல் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் திருச்சபையினின்று மறைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஆற்றிய ஆன்மீக தொண்டை நாம் எவ்வகையில் குறை கூற இயலும்? நெடிய பயணத்தில் தங்களின் பங்களிப்பாக இவர்கள் விட்டுச்சென்ற ஆன்மீக தேடல்களின் ஒரு பகுதியைக் கூட நம்மால் கண்டடையவோ, அவற்றின் வீரியத்தை உணரவோ முடியாதபடி இருந்தால் அது தான் தெளிந்த ஆன்மீகமா? ஏன் இவர்கள் நம்மைப்போலல்லாது மாறுபட்ட கோணங்களில் கிறிஸ்துவத்தை புரிந்துகொள்ள தலைப்பட்டார்கள்? அவர்களின் பங்களிப்பை எவ்வளவு தூரம் நாம் நெருங்கி அறிய முயற்சிக்கிறோமோ அத்துனை தூரம் நம்மால் அவர்களின் ஆன்மீக எழுச்சியினைக் கண்டடைய இயலும் இல்லையா?. அவைகள் கொண்டுள்ள தொன்மையின் வேர்முடிச்சுகளில் ஒரு கூட்டான இறை தரிசனம் இருக்கத்தான் செய்கிறது.

கிறிஸ்தவம் இந்திய சமயங்களில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றவேண்டுமென்றால் அது சமயங்களுக்குள் தயக்கமின்றி கடந்துசெல்லவேண்டும். நட்சத்திரம் எப்படி இஸ்ரவேலைத் தாண்டி கிழக்கிலுள்ள ஞானிகளை ஈர்த்ததோ, அப்படியே  எளிமையைக் கண்டு சேவிக்க காத்திருக்கும் ஞானிகளை, பிரம்மாண்டத்தை காட்டி விலக்கிவிடாதிருப்போம்.

ஜாஸ்மின் செல்லும் பள்ளிக்கூடத்தில் மராட்டி மொழி பேசுகிறவர்கள் அனேகம் உண்டு. அவள் கற்று வரும் மராட்டிய வார்த்தைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுவாள். நேற்று நாங்கள் சென்ற வாகனத்தில் எங்களோடு வந்த பெண்மணி ஓட்டுனரோடு பேசிக்கொண்டு வந்தாள். ஒரே “ஓம்” மயம். ஜாஸ்மின் என்னிடம் காதில் சொன்னாள். “ஓம்” என்றால் மராட்டியில் ஆம் என்று அர்த்தம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

உண்மையான கிறிஸ்மஸ்?

திசெம்பர் 24, 2016

கிறிஸ்மஸ் காலம் நெருங்குகையில் எது உண்மையான கிறிஸ்மஸ் என்ற விவாதங்களும் அறிவு பூர்வமான பல விளக்கங்களும் முன்னெழுவதைப் பார்க்கலாம். அறிவு சார் ஆன்மீகம் நமக்கு தேவை தான் என்றாலும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாக கலந்துவிட்டவைகளை ஒதுக்கி தனித்துவமாக திருமறை நோக்கி திரும்பவேண்டும் எனும் குரல்கள் அடிக்கடி ஒலிக்க ஆரம்பிக்கின்றன. இவைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என எண்ண முற்பட்டாலும் இவைகளை முன்னெடுக்கிறவர்களின் அதீத பக்தியைப் பார்க்கையில் மனது சற்று பின்வாங்குகிறது. பாரம்பரியங்களைக் கடந்து செல்ல வேண்டுமென்றால் அவைகள் தவறு என சொல்வதோடு நிறுத்துவதில் பயனில்லை. அவைகளின் வேர்காரணங்களை உணர்ந்து நாம் அவைகளைக் கையாளவேண்டும். மேலான கருத்தியல்களால் அவைகளை மேற்கொள்ளவேண்டும். வெறுமனே இதுவல்ல கிறிஸ்மஸ் எனக் கூறி நாங்கள் மட்டுமே மிகச்சரியாக கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறோம் என் கூறத்தலைப்படுவது வீணான மமதையின் அடிப்படியிலானது. அவைகளுக்கு என்னளவில் மதிப்பு ஏதும் இல்லை. இவ்விதமான முடிவு நோக்கி நான் வர எனது வாழ்வில் நடைபெற்ற இரண்டு காரணங்களை உதாரணமாக கூறுகிறேன்.

கிறிஸ்து பிறப்பு: பழைய காகிதத்தில் உருவாக்கியது

கிறிஸ்து பிறப்பு: பழைய காகிதத்தில் உருவாக்கியது

முதலாவதாக மும்பையின் பெரும் பணக்கார கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்தும் கிறிஸ்மஸ் விழா “சவ்பாட்டி” கடற்கறையோரம் வருடம்தோரும் நடைபெறும். கடந்த வருடத்தில் தான் நான் முதன் முறையாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடை. கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் தாத்தா போன்றவைகள் இல்லை. அவைகள் கிறிஸ்மசுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவைகள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தெளிவுற எடுத்துக்கூறப்பட்டது. புதுமை படைத்த அனைவரும் கிறித்துவை மட்டுமே காண்பிக்கும்படி மேடையில் வீற்றிருந்தது கண்கொள்ளா காட்சி. எளிமை உருவான ஒருவரை கூட அந்த மேடையில் அவர்கள் ஏற அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சி இறுதியில் உலக புகழ்பெற்ற ஹில்சாங் எனும் உலக பிரசித்திபெற்ற மேற்கத்திய இசைக்குழுவை முன்னிறுத்தினார்கள். அவர்களினின் பாடல்களுக்கு இளைஞர்கள் வெறியாட்டம் இட்டதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இதுவே உண்மையான கிறிஸ்மஸ் எனும் கருத்தை பிறர் எப்படி புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை உணர எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

நான் பணிபுரிந்த திருச்சபையில் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள் நிறைந்திருந்தனர். அல்லது அப்படி நடிப்பதில் அதீத ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் எண்ணம் முழுமையாக எனக்கு தெரிவந்தபோது மீண்டும் சோர்பே ஏற்பட்டது. பெரும்பாலோனோர், போதகருக்கு நாம் கொடுக்கும் பணத்தில் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, ஆகவே அவர் நாம் சொல்லும்படி தான் நடக்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள். ஊழியம் செய்ய உங்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கிறோம் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு நீங்கள் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என துணிந்து கூறும் நல் உள்ளங்கள். ஆனால் தங்களின் வாழ்வை சற்றும் சீர் செய்ய முன்வராதவர்கள். ஏன் தங்கள் தங்கள் அலுவலகத்திற்கு நேரம் தவராமல் செல்பவர்கள் ஏனோ ஆலயத்திற்கு மட்டும் நேரத்தில் வாருங்கள் என்றால் வராதவர்கள். இப்படியான நீதியின் சூரியன்களை ஒன்றிணைத்து நீங்களும் என்னுடன் வாருங்கள் நாம் இணைந்தே பணி செய்வோம் எனக் கூறினேன். அதற்கான ஒரு தருணத்தையும் நான் அமைத்தேன்.

இந்திய அளவில் எந்த மத விழாவாக இருந்தாலும் சரி, அதனை கொண்டாடுகையில் என்ன தான் வெறுப்பு கொண்டிருந்தாலும் ஒரு சகிப்புதன்மையை பிறர் கையாள்வது  மரபு. ஆகவே, பிறர் அறிந்த கிறிஸ்மஸ் தாத்த உடையணித்த ஒருவரை முன்னிறுத்தி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கலாம் எனக் கூறி, அதற்கான பரிசு பொருட்கள் எவ்விதம் தயாரிப்பது, கைபிரதி எப்படி தயாரிப்பது என பார்த்துப் பார்த்து செய்து “கிறிஸ்மஸ் தாத்தா பவனி” குறித்து திருச்சபையினருக்கு அறிவித்தேன். ஆராதனிக்குப் பின்பு நான் இதை விளக்கி அறிவிக்கையில் அங்கிருந்த எவரும் இதன் சாதக பாதகங்களைக் கூற முற்படவில்லை.

மெத்த படிட்தவர்கள் நிறைந்த திருச்சபை ஆதலால், இது குறித்து மின்னஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. கிறிஸ்மஸ் தாத்தா பவனி என பெயர் வைக்க கூடாது கிறிஸ்து பிறப்பு பவனி என்றே பெயர் வைக்க வேண்டும் ஏனென்றால் கிறிஸ்மஸ் தாத்தா கிறிஸ்துவை இல்லாமலாக்கிவிடுவார் என்கிற நோக்கத்தை அவர்கள் பதிவு செய்தார்கள். நான் கூறினேன், பிறரை சந்திக்கையில் கிறிஸ்மஸ் தாத்தா ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறார், இப்பெயர் பிறருக்கானதே அன்றி நமக்கானதல்ல எனக் கூறினேன்.

எப்படியாகிலும் இவர்களை ஒன்றிணைத்துக் கூட்டி செல்லவேண்டும் எனும் ஆர்வத்தால், பெயரில் என்ன இருக்கிறது என்றே எண்ணினேன், பெயரை மாற்றவும் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர்கள் மீண்டும் எனக்கு கிறிஸ்து பிறப்பு என்றால் என்ன என விளக்கம் அளிக்க முற்படுகையில் எனக்கு உண்மையிலேயே எரிச்சல் தான் வந்தது. நான் சொன்னேன் முதலில் நமது திருச்சபையில் நாட்டியமாடும் கிறிஸ்மஸ் தாத்தாவை நிறுத்துங்கள் பிற்பாடு பிறருக்கு உண்மையான கிறிஸ்து பிறப்பு என்ன என்று சொல்லலாம் என காட்டமாக கூறினேன். நம்புங்கள் பிறருக்கான “கிறிஸ்மஸ்  பவனி” தோல்வியிலும் திருச்சபையினருக்கான “கிறிஸ்மஸ் தாத்தா” நிகழ்வு வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது.

இந்த இரட்டை அர்த்த கிறிஸ்மஸ் புரிதல் கொண்டவர்களே இன்று நம்முடன் கிறிஸ்மஸ் குறித்த விளக்க உரைகளை விளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் எரிச்சலுடன் கவனிக்கிறேன். எது உண்மையான கிறிஸ்மஸ் என தொலைக்காட்சி பேட்டி, முக நூல் பேட்டி, முகநூல் பதிவு போன்றவைகள் அனைத்தும் பாரம்பரிய விழா மனநிலையை குலைக்க களமிறங்கியிருக்கிறதே அன்றி சற்றும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் சிறு மாறுதலையும் கொணர முயலவில்லை என்பதே காணக்கிடைக்கும் உண்மை. இவர்களில் எவர் ஒருவர் களமிறங்கி ஒரு மாற்று கிறிஸ்மஸ் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் எனக் கேட்டுப்பார்த்தால் தங்களின் சுய பிரதாபத்தையே கடவுளின் ஈகைக்கு மேலாக குறிப்பிடும் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

 

கிறிஸ்மஸ் விழாவை ஒட்டி நாம் சீர் செய்ய வேண்டிய காரியங்கள் அனேகம் உண்டு. பாரம்பரியமாக நம்மில் நுழைந்துவிட்டவைகள் பலவும் நமக்கு தேவையற்றவைகள் தாம். அவைகளை நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும். மாற்றம் என்பது நுழைந்துவிட்ட பாரம்பரிய குறியிடுகளை அழிப்பது அல்ல மாறாக அந்தக் குறியீடுகளை உன்னதப்படுத்துவதன் வாயிலாக மேலான காரியங்களைச் செய்ய முயற்சிப்பதே. ஆகவே அவைகளின் பொருளிழந்த தன்மையை மாற்றி நமது நம்பிக்கைகளை ஆழப்படுத்தும் தன்மை நோக்கி அவைகளைக் கொண்டு செல்வது ஒரு சிறந்த பயணமாக இருக்கும்.  பாரம்பரிய குறியீடுகளில் நமது நம்பிக்கையைக் காக்கும் விழுமியங்கள் ஏதும் இல்லை என்போர், திருமறையில் உள்ளவைகளை பிறர் அப்படியே நம்பவேண்டும் எனக் கருதுவார்களாயின், அவர்களின் எண்ணம் ஈடேற ஆண்டவன் தான் உதவி செய்யவேண்டும்.

ஏன் நட்சத்திரங்கள் போடவேண்டும்? என்று யாரேனும் கேள்வி கேட்பார்கள் என்று சொன்னால் ஏன் சிலுவை நமக்கு முக்கியம் என்பதே விடையாக முடியும். இரண்டுமே நமக்கான அறிவுறுத்தல்களைக் கொண்டது எனும் வகையில் முக்கியமானது. சிலுவை கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு சுட்டிகாட்டுகிறது என்றால் நட்சத்திரம் தந்தையாம் கடவுளின் தியாகத்தின் சாட்சியாக ஒளிர்கிறது. தங்கச் சிலுவை அணிபவர்களின் வாழ்வு எப்படியோ அப்படிதான் நட்சத்திரம் இடுபவர்களின் வாழ்வும் இருக்கும். அதற்காக தங்கத்தில் தாலியிட்டவர்களின் சங்கிலியை பிடித்து இழுக்கவா முடியும்? அது ஒரு நினைவுறுத்தல். அதற்கான பின்னணியம் வேறானது. சிலுவை ஒரு கொலைக்கருவியிலிருந்து தியாக அடையாளமாக மாறுமென்றால், பேரழிவிற்குப்பின் எழுந்த வானவில் சமாதானத்திற்கு அடையாளமாகுமென்றால், நட்சத்திரமும் “வழிகாட்டியாக” உருவெடுப்பதை நாம் தவிர்க்க இயலாது. எரிந்து சாம்பலாகும் நட்சத்திரமாக பிறருக்கு ஒளிகாட்டும்படி  அந்த தியாக வாழ்வை தொடருங்கள் எனும் ஒரு வேண்டுகோளாக நாம் அதை முன்வைக்கலாம். அதைவிட்டுவிட்டு, கிறிஸ்தவ தாலிபானியம் வளர விடுவது நல்லதல்ல.

கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக சிறு குடில்கள் அமைப்பது குமரி மாவட்டத்திலுள்ள வழக்கம். குடில் அமைப்பதில் அப்பா அம்மா மற்றும் குழந்தைகள் சேர்ந்து ஈடுபடுவது அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்வின்  குடும்ப தருணத்தை அமைத்துக்கொடுக்கிறது. சிறு பிள்ளைகளின் கற்பனா சக்தியை தூண்டும் ஒரு தருணமாக இது இருக்கிறது என்றே நினைக்கின்றேன். கிறிஸ்தவ குடும்பங்களில் கலை சார்ந்த ஈடுபாடு நிறைந்த மற்றொரு தருணத்தை நம்மால் இதற்கு இணையாக சுட்டிக்காட்ட முடியுமா? கலைக்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பே இல்லாதபடி நமது சமயம் விலகிச்சென்றுகொண்டிருக்கையில், இவைகளின் பங்களிப்பு முக்கியமானது தான் என்று நான் கருதுகிறேன்.  கிறிஸ்மஸ் குடில் அமைத்தால் தான் கிறிஸ்து பிறப்பாரா என்ற கேள்விகள் தேவையற்றது. அது நாங்கள் தனித்திருந்து ஜெபித்தால் மட்டுமே அவர் பிறப்பார் என்னும் சிறுமைக்கு ஒப்பானது. ஆயினும் இன்று மிகப்பெரிய குடில் அமைப்பது, போட்டிகளாக மாறிவிட்ட சூழலில் லெட்சக்கணக்கில் குடில் செட்டுகள் இன்று அமைக்கப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீணான ஆடம்பரத்தை செய்ய முற்படுவோருக்கு கூட நாம் சற்றே புரியும்படியாக எடுத்துக் கூறினால், இயேசு பிறப்பதற்கு இடமில்லாமல் இருந்ததுபோல் இன்றும் நம்மிடம் வாழும் வீடில்லாத ஏழைகளுக்கு “கிறிஸ்மஸ் வீடுகளாக” கிறிஸ்மஸ் குடில்கள் மாற  நாம் முயற்சிக்கலாம்.

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாதா? கூடும்! கூட வேண்டும்!. இயேசு சிலுவையின் மூலம் நமக்கு போதுமான பரிசுகளைத் தந்தார் நமக்கு எதற்கு பல பரிசுகள் வழங்கும் கிறிஸ்மஸ் தாத்தா? எனும் நியாயமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. கிறிஸ்மஸை சார்ந்து கிறிஸ்மஸ் தாத்தாவால் வழங்கப்படும் பரிசுகள் யாவும் சிறு பிள்ளைகளின் மகிழ்வுக்காக கொடுக்கப்படுபவைகளே. இயேசுவை சிரிப்போராக அல்லாமல் தண்டிப்பவராகவும் தண்டனை பெற்றவராகவும் சிறு பிள்ளைகளுக்கு காண்பித்த பின் அவர்களின் ஒரே வடிகாலான கிறிஸ்மஸ் தாத்தாவை தங்களின் சுய சிந்தனைகளுக்கு காவு கொடுப்பது நியாயமா? நாம் ஏன் கிறிஸ்மஸ் மாமாவாக கூடாது? நாம் ஏன் கிறிஸ்மஸ் அத்தையாகக் கூடாது? கிறிஸ்மஸ் அன்று சிறுவர்களுக்கு ஏன் கிறிஸ்துவின் தியாகத்தை  விளக்கும் நல்ல கதைகளைக் கூற முன்வரக்கூடாது? கிறிஸ்மஸ் நன்னாளில் சிறு குழந்தைகளின் வாழ்வை எப்படி நல்ல பெற்றோராக அர்த்தம் பொதிந்ததாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களுக்கான இடைவெளிகளை அன்று எப்படி நிரப்ப திட்டமிட்டிருக்கிறோம்? இப்படி எந்த சிந்தனையும் முன்னெடுக்காமல், வெறுமனே பாரம்பரியங்கள் யாவற்றையும் தடுத்து நிறுத்திவிட்டு  நேரே பரலோகம் செல்லவேண்டும், இம்மியளவும் சிறு துரும்பையும் எடுத்துச் செல்லும் அற்பணிப்பு இல்லாதவர்கள் பேசத்தான் செய்வார்கள்.

கிறிஸ்மஸ் மரம் எப்போது வந்தது எனத் துவங்கி விக்கிபீடியா, கூகுள் என துளைத்தெடுத்து கட்டுரைகள் வரையும் கிறிஸ்தவர்கள், ஒருபோதும் நமது சூழியல் குறித்து பேசுவதில்லை. கிறிஸ்மஸ் மரம் எனும் கருதுகோள் நாம் சூழியலை மேம்படுத்த நம்மிடம் உள்ள  ஒரு சிறந்த ஊடகம்.  நம்மிடம் இருந்த காடுகள் என்னவாயின? எனக் கேட்டால் அது ஆன்மீகம் சார்ந்ததல்ல என பதில் வரும்.  நமது திருச்சபை வளாகத்தில் கடைசியாக நடப்பட்ட மரத்தைக் குறித்து கேளுங்கள். எத்தனை வருடங்களாக கிறிஸ்மஸ் மர விழாவினை திருச்சபைகள் கொண்டாடியிருக்கும்? ஒருமுறையாவது ஒரு மரக்கன்றை நட்டு ஒரு கிறிஸ்மஸ் மர விழா கொண்டாடியிருப்போமா? 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புயலால் வேர் பிடுங்கி வீசப்பட்ட மரங்களுக்கு மாற்றாக எத்தனை மரங்களை நட இவர்கள் முன்வருவார்கள் எனக் கேளுங்கள். தமிழக மாநில மரமாகிய பனை மரத்தினை கிறிஸ்மஸ் மரமாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முயற்சித்தால் எத்தனைக் குடும்பங்களில் அடுப்பெரியும் என யோசிக்கச் சொல்லுங்கள். இது வேண்டாம் அது வேண்டாம் எனக் கூறுவதை விட, அனைத்தையும் முயற்சித்துப் பார்த்து இறுதியில் தனது ஒரே குமாரனையும் தந்த கடவுளை ஒருமுறை எண்ணிப்பார்ப்பது நலம். நாமே இன்னும் நியாயம் தீர்க்கப்படாமல் தான் இருக்கிறோம்.

கிறிஸ்மஸ் என்னும் வார்த்தையே திருமறையில் இல்லாதது. அந்த வார்த்தையின் மூலம் பயன்பாட்டில் வந்து சுமார் 1000 ஆண்டுகளே இருக்கும். “கிறிஸ் + மாஸ்” எனும் வார்த்தை கிறிஸ்து பிறப்பை ஒட்டி நடைபெற்ற ஒரு திருச்சபையின் ஆராதனைக்  கூடுகையையே குறிக்கும். இன்று ஆராதனைக்கு வருபவர்கள் வண்ண உடைகளை அணிவதை விட புதிய வாகனங்களை கொண்டுவரும் அளவு நிலமை மாறிப்போய்விட்டது. ஏழைகளுக்கு துணி கொடுப்பதில் என்ன தான் செலவாகிவிடப்போகிறது? நமக்கு ஆரணி பட்டு என்றால் அவர்களுக்கு ஆடிக்கழிவில் வாங்கிய துணிகளோ அல்லது தீபாவளி அதிரடி தள்ளுபடியில் வாங்கிய துணியோ வள்ளன்மையோடு வழங்கப்படுகிறது. இதற்காகவே கிறிஸ்மஸ் துணிகளை பெற ஒரு கூட்டம் உருவாக்கப்படுகிறது.

நான்கு நற்செய்திகளும் கிறிஸ்து பிறப்பு குறித்து பேசுகின்றவைகளில் வேறுபடுகிறார்கள். குறிப்பாக மாற்கு, “பிறப்பு” குறித்து வாயே திறக்கவில்லை. யோவான் வெகு தத்துவார்த்தமாக இயேசுவின் பிறப்பை “வார்த்தை மாமிசமாகியது” என பதிவிடுகிறார். தீர்கதரிசிகளின் வார்த்தை எழுத்துக்கு எழுத்து வைத்து பொருள்கொள்ள இயலாதபடி இருக்கிறது. ஏன் இப்படி? ஒன்று பிறப்பு சார்ந்து பல்வேறு புரிதல்கள் இருந்திருக்கின்றன. பிறப்பு முக்கியமானது என்றும், பிறப்பு அல்ல ஆண்டவரின் செயல்களும் அவரின் மரணமுமே முக்கியமானது என்றும் இரு போக்குகள் முன்னமே இருந்திருக்கலாம். மேலும், கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் என்பது திருச்சபையில் பின்னாட்களில் ஏற்பட்ட ஒரு விழாவாக இருக்கவேண்டும். ஆதி கிறிஸ்தவர்கள் அவரின் பிறப்பை தம்மளவில் முக்கியத்துவப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதற்காக ஆதி கிறிஸ்தவர் வாழ்வை மட்டுமே நாங்கள் பின்பற்றுவோம் ஆகவே கிறிஸ்மஸைக் கொண்டாட மாட்டோம் என்பவர்கள் யாவரையும் மிகவும் நல்லவர்கள் என ஒப்புக்கொள்ளுகிறோம். சொம்பை எடுத்து உள்ளே வைக்கவும் சொல்லுகிறோம். ஆனால் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு சில காரணங்கள் உண்டு அவைகளை அவர்கள் இந்த நாட்களில் பேசினால் நலம்.

இயேசுவின் பிறப்பு: உலகை இரட்சிக்க வந்தவர் “என்னையும் இரட்சித்தார்” என்னும் கூற்றின் உண்மைத்தன்மையை எவராலும் சோதிக்க முடியாது. ஆனால், தங்க இடமின்றி தெருவில் சென்ற ஒரு குடும்பத்தாருக்கு ஒரு இரவு எங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்தோம் என உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் சொல்லட்டும்.

முதலாம் குடிமதிப்பு எழுதபட்டபோது இயேசுவின் பெற்றோர் அடைந்த அலைக்கழிப்பை இன்றைய பணமதிப்பிழப்புடன் ஒப்பிட்டு பார்த்து கிறிஸ்தவர்கள் இந்த கிறிஸ்மசில் எப்படி செயல்படவேண்டும் என உண்மை கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் கூறட்டும்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனேகம் இன்று இறந்து போகும் ஒரு தேசத்தில் நாம் வாழுகின்றோம். தனது குழந்தையை இழந்த ஒருவருக்கு இந்த கிறிஸ்மஸ் காலத்தில் ஆறுதலாயிருப்போம் எனக் கூறுவோம். அல்லது ஊட்டசத்து இன்றி வாழ்வா சாவா என போராடும் ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுக்க முன்வருவோம்.

பாலனாக பிறந்த இயேசுவை  தேடிவருவோருக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக நாங்கள் ஒளிருவோம் என்று சுய தம்பட்டம் அடித்துவிட்டு, ஏரோது போல் பிறர் உதவியுடன் கிறிஸ்து எப்படி பிறப்பார்? என வசனங்களை தேடாதிருப்போம்.

திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பிரச்சனை அதிகரித்திருக்கும் சூழலில் இந்திய  திருச்சபை எவ்வித நிலைப்பாடுடன் செயலாற்ற வேண்டும் என மன்றாடுவது நமக்கு மிகப்பெரிய சவால்.

ஞானிகள் ஒரு சிறு குழந்தையின் முன்பு மண்டியிடும் எளிய செயலைக் கூட புரிந்துகொள்ள முடியாமல், அறிவு பெருத்து கிறிஸ்மஸ் விளக்கம் அளிக்க முன்வரும் அனைவரும் சற்றே தாழ்மை உருவெடுத்த இயேசுவை பார்ப்பது நலம்.

ஆம் கிறிஸ்மஸை தவற விடுகின்றவர்கள் மிக அருகிலிருந்து, அனைத்தும் அறிந்து வழிகாட்டியவர்களே. ஏரோதின் அரண்மனை சுகவாசிகள் தான் அவர்கள்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

 

ரசாயனி – மும்பை.

 

malargodson@gmail.com

 

8888032486


%d bloggers like this: