Archive for மார்ச், 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 26

மார்ச் 31, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 26

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

கன்னியா வென்னீர் ஊற்று 

காலை உணவிற்கு போதகர் இல்லத்தில் சென்றபோது, போதகர் நிஷாந்தா, தனக்கு மீண்டும் 10 மணிக்கு செயற்குழு இருப்பதாக கூறினார். மீண்டும் இரண்டுமணிக்கு தான் நமக்கு ஆலயத்தில் திருமறை ஆய்வு நிகழ்கிறது என்று கூறினார். அது வரை நான் சும்மாவே இருக்க வேண்டுமா?என எண்ணியபடி, ஏதேனும் இரு சக்கர வாகனத்தை ஒழுங்கு செய்ய இயலுமா? என்றேன். முயற்சிக்கிறேன் என்றார். சற்று நேரத்தில் ஒரு இளைஞர் வந்தார். அவரது கரத்தில் இரண்டு ஹெல்மெட் இருந்தது. இலங்கையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஓட்டுபவரும் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்தே ஆகவேண்டும். சாலை விதிகள் மிகவும் கவனத்துடன் பேணப்படுகின்றன என்பதை மீண்டும் உணர்த்தியது

காட்டு வழியில்

காட்டு வழியில்

அன்று நானும் என்னுடன் வந்த தம்பியும் மூதூர் செல்லும் பாதையிலேயே சென்றோம். பிற்பாடு அவர் திரும்பி சென்ற அந்த பாதை மிக விரிவாக இருந்தது. நான்கு வாகனங்கள் ஒரே நேரம் செல்லத்தக்க அளவு பெரிய பாதை. ஆனால் அது ஒரு மண் பாதை. நேராக நெடுஞ்சாலைப்போல் காணப்பட்டது. யானைகள் அடிக்கடி அந்தபாதையை கடக்குமாம். ஆளரவமற்ற பகுதி. தூரத்தில் ஒரு நன்னீர் குளம் அதனைச் சுற்றி பனைமரங்கள் காணப்பட்டன. ஒரு சிறு கிராமத்தையும் கடந்துபோனோம். ஒரு பெந்தேகோஸ்தே ஜெப வீடு கூட இருந்தது. மீண்டும் தார் சாலைக்கு நாங்கள் வந்தபோது எங்களுக்கு வலதுபுறம்  கடலும் அதன் அருகில் ஆங்காங்கே பனைமரங்களும் காணப்பட்டன. பாறைகள் நிறைந்து மனதை மயக்கும் அழகிய இடமாக அது காட்சியளித்தது.

நட்சத்திர மீனை பரிசளித்த மீனவர்கள்

நட்சத்திர மீனை பரிசளித்த மீனவர்கள்

அந்த தம்பி என்னைக் கன்னியா வென்னீர் ஊற்று நோக்கி அழைத்துச் சென்றார். அங்கே கடைகள் இருந்த இடத்திலே அனேக பனைமரங்கள் இருந்தன. அனேகமாக பனைமரங்கள் மட்டுமே இருந்தன என்று எண்ணுகிறேன். பனை மரம் சார்ந்த பொருட்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. பெரும்பாலும் சிங்களவர்களே கடைகளை வைத்திருந்தனர் என அவர் கூறினார். ஒரு மனிதர் பனம்பழங்களை விற்றுக்கொண்டிருந்தார். பனங்கிழங்கு கருப்பட்டி போன்ற பனை பொருட்களும் தாராளமாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. பனை மரங்கள் அவ்விடத்தின் தொன்மையை பறைசற்றும்படி இருந்தது முக்கியமானது. வென்னீர் ஊற்றையும் பனைமரத்தின் பிஞ்சு வேர்கள் தொட்டு காலம் காலமாக நலம் விசாரித்தபடி தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

கன்னியா ஊற்று இராவணனின் தாயின் மரணத்துடன் தொடர்புடையது என்ற செய்தியே கிடைத்தது. வென்னீர் ஊற்றுகள் செல்ல நாங்கள் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டோம். ஏனோ அந்த இடம் எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு பொது குளியலறை போன்றே அந்த இடம் காணப்பட்டது. இலங்கை தனது பழைமையைப் பேணும் விதத்தில் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்றே தோன்றியது.

வெளியே வந்தபோது ஒரு வயதான புத்த பிக்கு ஒரு பெரிய அரச மரத்தடியின் கீழ் நின்று சருகுகளைக் கூட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தார். நான் “ஏ பனை மரத்தைப் பற்றிப் பிடித்து வளர்ந்த அரச மரமே” என்று எண்ணியபடி அந்த பிரம்மாண்ட மரத்தை பார்த்தேன். அவரைச் சுற்றிலும் சில மக்கள் நின்றுகொண்டிருந்தனர். இலங்கையின் மக்கள் வித்தியாசம் இன்றி மத குருக்களை மதிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

இவை ஒரு புறம் இருந்தாலும் இலங்கையின் வரலாற்று பக்கங்களில் பல இடைவெளிகள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. இலங்கை பாராளுமன்றத்தில் கூட சீனித்தம்பி யோகேஸ்வரன் எம் பி இலங்கை ஒரு இந்து நாடு என கூற, அமைச்சர்  மேர்வின்  சில்வா மறுத்து இலங்கை ஒரு பவுத்த நாடு என்றும் குறிப்பிடுகிறார். அரசியல் சார்புடைய இன்நோக்கில் கிறிஸ்தவர் நடுநிலையுடன் வரலாற்றை அணுகுவது அவசியமாயிருக்கிறது.

என்னை அழைத்துச் சென்ற தம்பி அவரது நண்பர்கள் இன்னும் சற்று தொலைவில் இருப்பதாக கூறி என்னை அழைத்துச் சென்றார். இப்போது நாங்கள் திருகோணமலையிலிருந்து வெகுவாக தள்ளி வந்துவிட்டோம். பனைமரங்களை அதிகமாக சாலையின்  இரு மருங்கிலும் பார்க்க முடிந்தது. ஆனால் பெரும்பாலான மரங்களில் ஆரசு, ஆல் மற்றும் பெயர் தெரியாத மரங்கள் தொற்றிப் படர்ந்திருந்தன.  திருகோணமலைப் பகுதிகளில் பனையேற்றம் குறைவாகவே நடைபெறுகிறது என்பதர்கான சான்று இவை.

நாங்கள் ஒரு பாலத்தில் சென்றபொது  ஒருபுறம் கடலும் மற்றொருபுறம் வாவியும் இருந்தது. நாங்கள் தேடி வந்த நண்பர்களைக் காணவில்லை. என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு  மீனவர்கள் தங்கள் வலைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எங்களைப்பார்த்தவுடன் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டனர். நான் இந்தியாவில் இருந்து வருவதாக கூறியபடி பாலத்தில் இருந்து கீழிறங்கி சென்றேன். மிகவும் நட்பாக பேசினார்கள். எனக்கு நட்சத்திர மீன் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். அதற்கு சற்றே உயிர் இருந்தது. அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் என்னை அழைத்துச் சென்ற தம்பிக்கு அழைப்பு வந்தது. அவர் இறால் கிடைக்குமென்றால் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றார். நாங்கள் அடுத்திருந்த ஒரு குப்பத்திற்குச் சென்றோம் ஒருவரும் அங்கே இல்லை.

ஓலை அலங்காரம் செய்யப்பட்ட மரத்துண்டு

ஓலை அலங்காரம் செய்யப்பட்ட மரத்துண்டு

ஆனால் அந்த குப்பத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இருந்தது. குமரி மாவட்டத்தில் அவைகளை குருசடி என்று சொல்லுவோம். நான்கே பேர் அமரக்கூடிய இடம். அப்போது என் கண்ணில் ஒரு உருளை தென்பட்டது. பழைய மட்கிய மரத்திப்போன்றிருந்த அதை நான் உற்று பார்த்தபோது அது பனை ஓலைகளினால் பொதியப்பட்டிருந்தது தெரிந்தது. ஒருவித அலங்காரத்திற்காக அது அமைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக கடந்த குருட்தோலை ஞாயிறு வழிபாட்டின் போது இந்த அலங்காரம் இங்கே வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது குருத்தோலை சார்ந்த பவனியின் போது ஒரு அலங்கார ஊர்தியில் இது எடுத்து செல்லப்படிருக்கலாம். எவரிடமும் கேட்க முடியவில்லை. ஓலைகள் சடங்குகளில் இடம்பெறுவது மக்களின் ஆன்மீக வாழ்வில் ஓலைகள் ஒரு முக்கிய குறியீடாக உணர்த்தி நிற்பதை உணர்ந்தேன். அவைகள்  மக்களின் வாழ்வில் தொன்றுதொட்டு இடம்பெற்று வருவதை மறுப்பதற்கில்லை.

வாவியின் அருகில்

வாவியின் அருகில்

நாங்கள் அங்கிருந்து நண்பர்கள் மீன் பிடிக்கிற இடத்திற்குச் சென்றோம். அது பாலத்திற்கு அப்பால் வாவியின் கரையில் அமைந்துள்ள அலையாத்தி காடுகளுக்குள் இருந்தது. நேரடியாக சென்றால் 100 மீட்டர் தொலைவு தான் இருக்கும் ஆனால் செல்ல வழியில்லை. ஆகவே பைக்கில் முன்று கிலோ மீட்டர்  சுற்றி அந்த இடத்தை சேர்ந்தோம். அங்கே இருவர் இருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மேற்கொண்டு பிடிக்க இறால் இல்லாததால் என்ன செய்வது என்று எண்ணியபடி இருந்தார்கள்.

மீன் சுடுதல்

மீன் சுடுதல்

நான் மீனைச் சுடுவோமா என்றேன். லைட்டரை பற்றவைத்தபோது தீ பிடிக்கவில்லை. அனைத்து விறகுகளும் நமுத்துப்போய் இருந்தன. அப்படியே விட முடியாது என்று சொல்லி இரண்டு கிலோமீட்டர் போய் தீப்பெட்டி வாங்கி வந்தனர். 20 குச்சிகளுக்கு மேல் செலவு செய்திருப்போம், நெருப்பை பற்ற வைக்கவே முடியவில்லை. எல்லாரும் என்னைப் பார்த்தனர். “போதகரைய்யா உங்களுக்கு யோகம் இல்லை என்றனர்”. அப்படியிருக்காது என்று கூறி நானும் களத்தில் இறங்கினேன். எனது பர்சிலிருந்து தேவையற்ற டிக்கட்டுகள் மற்றும் காகிதங்களை எடுத்துக் கொடுத்தேன்.  சற்றே உலர்ந்த குச்சிகளையும் சருகுகளையும் எடுத்துக்கொடுத்தேன். எப்படியே தீ பற்றிக்கொண்டது. உப்பு புளி மிளகாய் ஏதுமற்ற அழகிய ஊன் உணவு தயாராகியது. அதன் செதிள்கள் வெடித்தபோது வெந்துவிட்டதை அறிந்து எடுத்து சாப்பிட்டோம். மீன் முறுகிவிட்டாலும் நன்றாகவே இருந்தது.

பாப்பாளி விருந்து

பாப்பாளி விருந்து

நாங்கள் சாலைக்கு வந்தபோது மேலும் இருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர்.  நாங்கள் வரும் வழியில் ஒரு பப்பாளி தோப்பை பார்த்து அங்கே வண்டியை நிறுத்தி பப்பாளி சாப்பிட்டோம். பப்பாளி தோப்புகளின் அருகிலேயே வைத்து பழுத்த பப்பாளிகளை விற்றுக்கொண்டிருந்தனர். சாலையோரத்தில் அப்படி பல தோட்டங்கள் இருந்தன. மணி கிட்டத்தட்ட ஒன்றை நெருங்கியிருந்தது. சீக்கிரமாக திரும்பவேண்டும் என நினைத்து புறப்பட்டோம்.

வழியில் நிலாவெளி என்ற இடத்தை நான் கண்டிப்பாக பர்க்கவேண்டும் எனக் கூறி அழைத்து சென்றனர். அப்படி என்ன அங்கே இருக்கிறது எனக் கேட்டேன், அதற்கு அவர்கள், சென்னையின் மெரீனா போன்ற இலங்கை கடற்கரை என்றார்கள். மிக அழகிய கடற்கரை. அனேகர் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். பெரும் கூட்டமாக மக்கள் அந்த பகுதியில் அந்த விடுமுறை நாளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக திரும்பி வந்தோம், என்னிடமிருந்த நட்சத்திர மீனை நான் அவர்களுக்கே கொடுத்துவிட்டேன். இந்தியாவிற்கு அதனைக் கொண்டு வர இயலுமா என என்னால் கணிக்க இயலவில்லை. கடல் பொருட்கள் பலவும் தடை செய்யப்பட்டாலும், அவைகள் நமது சுற்றுலா தலங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.

போதகர் வீட்டில் நான் வந்து சேர்ந்தபோது மணி இரண்டு. போதகர் நிஷாந்தா என்னை உணவருந்தச் சொன்னார்.  எப்படியும் மக்கள் வருவதற்கு சற்று தாமதிக்கும் என்றவர் எனக்கான உணவை ஒழுங்கு செய்தார். நான் சாப்பிட்டுவிட்டு அங்கே சென்றபோது கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. சத்தமாக  உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். நான் சென்று அமர்ந்துகொண்டேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 25

மார்ச் 30, 2017

 

(திருச்சபையின் பனைமர வேட்கை – 25

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

காரிருள் போக்கும் சுடரொளி

காலை 6 மணிக்கு ஈஸ்டர் அங்கிளிடம் என்னை எழுப்பும்படி கூறியிருந்தேன். ஆனால் 4.30 மணிக்கே விழித்துக்கொண்டேன். காலை நடைக்கு மீண்டும் கோணேஸ்வர் மலையடிவாரத்திற்குச் சென்று திரும்பினேன். அங்கிள் 6 மணிக்கு சரியாக காஃபி கொண்டு வந்தார்கள். நான் உடைமாற்றி நேரடியாக போதகர் இல்லத்திற்குச் சென்றேன்.  காலை வழிபாடு 7.30 மணிக்குத்தான் ஆரம்பமாகும் ஒரு மணி நேரத்திற்கு முந்தியே அங்கே போய்விட்டேன். ஏழு மணிக்கு நானும் போதகருமாக ஆலயத்திற்குச் சென்றோம். மிக அழகிய மற்றும் பழைமையான ஒரு கோவில். இருநூறு வருடங்கள் கடந்துவிட்டிருக்கிறது. கோயில் இன்று தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கிறது. ஒரு ஆணி அடிக்கவேண்டுமென்றாலும் பிடுங்கவேண்டுமென்றாலும் தொல்லியல் துறையின் அனுமதி வேண்டும். நல்லது தானே.

குமரி மாவட்டத்தில் பழைய ஆலயங்களை இடித்து புது கோபுரங்களை எழுப்பும் ஒரு கலாச்சாரம் சமீப காலங்களில் உருவெடுத்திருக்கிறது. இடிப்பதில் கைதேர்ந்தவர்கள் அனேகர் எழும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அதுவே சான்று. பொதுவாக புது ஆலயங்கள் கட்டப்பட ஒரே ஒரு காரணம் தான் தேவை. ஆலயம் பழுதடைந்து சீரமைக்க முடியாத அளவு பலவீனமாகி தொழுகைக்கு வருவோருக்கு ஆபத்தை வருவிக்கும் என்று சொன்னால், அதனை இடித்து கட்டலாம். இல்லை என்று சொன்னால் தொழுகையில் ஆலயம் கொள்ளாமற் போகுமளவு மக்களின் வருகை இருந்தால் புது ஆலயம் எழுப்பலாம். தவறில்லை. ஆனால் அதற்கு வேறு இடம் பார்க்கவேண்டும்.

மெதடிஸ்ட் டாக்யார்ட் சபை, திருகோணமலை

மெதடிஸ்ட் டாக்யார்ட் சபை, திருகோணமலை

பழைமையை பேணும் சந்ததிகள் இல்லாமற் போனது “நான் கட்டிய மகா பாபிலோன்” என்ற நேபுகாத் நேச்சாரின் ஆவியின் தூண்டுதல் என்றே நான் கருதுகிறேன். பணம் இருக்கிறது ஆகவே இடிக்கிறோம் என்பது சற்றும் அறிவுடைய செயல் அல்ல. ஒருவேளை விரிவாக்கப் பணிகள் செய்யும் அளவு நிலங்கள் இல்லை என சிலர் கூறலாம், ஆனால், அனேக ஆலயங்களின் அருகில் திருமண மண்டபங்கள் எழுப்பப்பட்டு கொண்டிருப்பது அனுதின நிகழ்ச்சியாக இருக்கிறது.

நானும் போதகர் நிஷாந்தாவும்  மக்கள் இருக்குமிடத்தில் முன்வரிசையில் அமர்ந்துகொண்டோம். அன்றைய வழிபாட்டினை ஒரு வாலிப பெண் முன்னின்று நடத்தினார்கள். மிக நேர்த்தியான நெறியளரின் குரல். பிசிறின்றி இலங்கைத்தமிழில் அழகாக நடத்தினார்கள். இலங்கை மெதடிஸ்ட் திருச்சபை பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. பழைய ஏற்பாட்டுத் திருமறைப்பகுதியாக ஏசாயா 9: 1 – 4 வாசித்தார்கள், புதிய ஏற்பாட்டு திருமறைப்பகுதியாக  மத்தேயு 4: 12 – 23 முடிய வாசித்தார்கள். திருமறைப்பகுதிகளை வாசிக்கையில் பழைய திருப்புதலையும் புதிய திருப்புதலையும் இலங்கையில் பாவிக்கிறார்கள். புதிய திருப்புதலுக்கு விரோதமான போக்கு அங்கே இல்லை.

செய்திக்கான நேரம் வந்தபோது போதகர் நிஷாந்தா என்னை அறிமுகப்படுத்தினார்கள். நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என அவர் சொல்லவும் அனைவர் முகமும் மின்னி மறைந்ததைக் கண்டேன். முதன் முதலாக இலங்கையில் செய்தியளிக்கப்போகிறேன் என்னும் ஒரு சிறு பயம் கலந்த மகிழ்ச்சி என்னுள் இருந்தது. அனைத்தும் சரிவர அமைய வேண்டும் என்னும் மன்றாட்டுடன் செய்தியை துவங்கினேன்.

நாம் வாசிக்கக் கேட்ட திருமறைப்பகுதி இயேசுவின் திருப்பணியின் ஆரம்ப காலத்தில் நடைபெறுகிறது என்பதை அவர் தமது சீடர்களை அழைப்பதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பணியை முன்னறிவிக்கும் பொருட்டு வந்த திருமுழுக்கு யோவான் அவர்கள் இன்நேரத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். திருமுழுக்கு யோவானை கழுத்தை அறுத்து கொலை செய்ததை நாம் அறிவோம். வெளிப்படையாக ஒரு குரூரச் செயலைச் செய்யுமளவு சூழ்நிலைக் கெட்டுப்போயிருக்கும், அறம் வழுவிய அரசு ஆட்சி புரிகையில்,  இயேசு தனது பணிகளை வேறு இடங்களுக்கு மாற்றுகிறார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திலிருந்து அவர் வெளியேறி செபுலோன் நப்தலி ஆகிய நாடுகளின் அருகிலுள்ள கப்பர்நகூம் நோக்கி வருகிறார். திருமறை அதனை ” பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே” என விளம்புகிறது. பழைய திருப்புதலின் படி “புறஜாதியாரின் கலிலேயாவிலே” என வருகிறது.

இதனை எழுதிய ஆக்கியோன், இயேசுவின் பணி மிக உன்னதமானது எனவும் தீர்க்கர்களால் முன்குறிக்கப்பட்டது எனவும் பொருள்படும்படி ” இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது; “செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” (மத்தேயு 4: 14 – 16, திருவிவிலியம்) என கூறுகிறார். அப்படி அங்கு என்ன காரிருள் இருக்கிறது? மத்தேயு வெறுமனே மேற்கோளாக மட்டும் ஏசாயா தீர்க்கரைக் குறிப்பிடுகிறாரா என்றால் இல்லை என்பதே பதிலாக முடியும்.

இயேசுவின் காலத்தில் யூதர்களுக்குள்ளே பலவித ஒழுக்கக் கோட்பாடுகள் இருந்தன. அந்த கோட்பாடுகளுள் ஒன்று யூதர் அல்லாதவரோடு எவ்வித உறவும் வைத்துக்கொள்ளாமல் இருப்பது. யூதர் ஒளி பெற்றவர் யுதர் அல்லாதவர் இருளில் இருப்பவர் என்ற வெகு தட்டையான ஒரு புரிதல். என்றாலும் இயேசு அங்கே செல்கையில் “….. மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்”(மத்தேயு 4: 17, திருவிவிலியம்). மனம் மாறும் சூழலில் அவர்கள் இருந்தனர் என்பது அவர்கள் வாழ்ந்த இருளின் வாழ்வைக் குறிப்பதாகவும் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்பது அவர்களுக்கான ஒளியின் வாழ்வை வாக்களிப்பதாகவும் அமைகிறது. இயேசுவும் தாம் யூதர் எனும் மேட்டிமை தன்மையுடனே அவர்களை அணுகினாரோ என எண்ணத் தேவையில்லை. மேட்டிமை வாய்ந்த யூதர் அப்பகுதிகளில் பயணிப்பதே இல்லை.

செபுலோன் நப்தலி ஆகிய நாடுகளை குறித்த இயேசுவின் கரிசனை நாம் உற்று நோக்கத்தக்கது. எருசலேமை ஆண்ட ஏரோது  தனது ஆட்சியின் கீழ் வரும் பகுதிகளுள் கலிலேயாவும் ஒன்று. ஆகவேதான் இயேசுவைக் கைது செய்து விசாரணைச் செய்தபோது, பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். (லூக்கா 23: 6 – 7, திருவிவிலியம்) என்று பார்க்கிறோம். ஏரோதுகலிலேயாவை   ஆட்சி புரிகையில் அதற்கென சரியான கவனம் கொடுக்கப்படவில்லை. அது பிற்படுத்தப்பட்ட பகுதியாக காணப்பட்டது. ஆகவே தான் இயேசு அவ்விடத்தில் ஒளியென செல்லுகிறார். தாம் ஒருவரே செய்யத்தக்க பணி என அவர் எண்ணாமல் அது மக்களின் பணி என எண்ணி தமது சீடர்களை அப்பகுதியிலிருந்து அவர் தெரிவு செய்து தமது பணியினை விரிவாக்க அவர்களுக்கு போதிக்கிறார்.

இயேசுவின் காலத்திலும் கூட கைவிடப்பட்டிருந்த கலிலேயாவின் மேல் இயேசு கரிசனைக் கொண்டு அனேகரை குணமாக்கும் பணிகளை அங்கே மேற்கொள்ளுகிறார். உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்திருந்தவர்களையும் காயம் அடைந்து வேதனையுடன் இருப்பவர்களையும் அவர் அணைத்து ஆசி வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி பெற செய்கிறார். இயேசுவின் கரிசனை ஏன் செபுலோன் நப்தலி மேல் காணப்படுகிறது? ஒன்று அது தமது ஜனங்களால் அது கைவிடப்பட்டது இரண்டு அரசாலும் கைவிடப்பட்டது. முன்று பல்வேறு மக்கள் இணைந்து வாழும் பகுதி அது என நாம் காண்கிறோம். ஒரே விதமான சட்டம் அங்கே செல்லுபடியாகது என்பதால் தான் அது அரசின் நேரடி கண்காணிப்பை விட்டு தூரமாக விலகிவிட்டதற்கு காரணம்.

பலர் இணைந்து வாழும் சமூகம் ஒரு நல்ல சமூகம் தானே என நாம் வினவலாம். இயேசு பல்லின மக்கள் இணைந்து வாழ்வதை விரும்புவார் என்றே நானும் கருதுகிறேன். ஆனால் அரசின் துணை இன்றியும் பாதுகாவல் இன்றியும் இருக்கும் பல்லின மக்களின் வாழ்விடங்கள் பரிதாபத்திற்குரியவை என்பதை நாம் அறிவோம். எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் நெருக்கடியான சூழலில் வாழ முற்படுகையில் அந்த இடம் குற்றங்கள் எளிதில் புழங்கும் இடமாகிவிடுகிறது. இதற்கான வரலாற்று பின்னணியம் ஏசாயாவில் காணப்படுகிறது.

டைலர் பார்டன் எட்வர்ட்ஸ் (Taylor Burton – Edwards) ஐக்கிய மெதடிஸ்ட் திருச்சபையின், சீடத்துவ வாரியம் வெளியிடும் வழிபாட்டு வளங்களின் இயக்குனர். அவர் “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.” (ஏசாயா 9: 2 திருவிவிலியம்) என்ற பகுதியை பின்வருமாறு விளக்குகிறார்.

ஏசாயா தீர்க்கரின் காலத்தில் அசீரிய அரசன் மூன்றாம் திக்லத் பிலேசர், செபுலோன் நப்தலி நாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்தவர்களை கைது செய்து நாடுகடத்துகிறான். அவர்களைக் குறித்து  பின் ஒருபோதும் வரலாற்றில் பதிவுகள் இல்லாதபடி செய்துவிட்டான் ( 1 அரசர் 16: 29). தொடர் படையெடுப்பும் அச்சுருத்தலும் அழிவும் செபுலோன் நப்தலி நாடுகளுக்கு ஏற்பட்டபடியால் போக்கிடமற்ற எளியோரைத் தவிர அனைவரும் மண்மேடுகளும் கற்குவியல்களுமாக்கப்பட்ட தங்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டனர். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு, ஐந்தாம் ஷல்மனேசர் என்ற அசீரிய அரசன், தான் பிடித்து வந்த பிற தேச மக்களை பாழடைந்து கிடந்த செபுலோன் நப்தலி நாடுகளில் வலுக்கட்டயமாக குடியமர்த்துகிறான். இது ஒரு அசீரிய படைகளின் உத்தி. ஒரு நாட்டினை கைப்பற்றியவுடன் அதன் வலிமையானவர்களை நாடுகடத்துவது, எளியவர்களை ஏதுமின்றி அதே இடத்தில் நிற்கதியாய் வாழ விட்டுவிடுவது, பிற்பாடு பிற இனத்தவரை, வேறு மொழி பேசுகிற மக்களை,  மாற்று கலாச்சாரம் கொண்டவர்களை, பிற மத பின்னணியம் கொண்டவர்களை அவ்விடத்தில் குடியமர்த்துவது. இவ்விதம் குழப்பத்தின் மேல் குழப்பம் அடைந்து, தங்கள் வாழ்வில் எவைகள் மேன்மையானவைகள் என எண்ணினார்களோ அவைகளை எல் லாம் இழந்து அடிபட்டு இருக்கும் மக்களால் ஒருபோதும் ஒன்று திரளவோ, தங்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறைக்காக குரலெழுப்பவோ இயலாது.  இச்சூழலையே ஏசாயா குறிப்பிடுகிறார்.

சுமார் 300 ஆண்டுகள் ஆன பின்பும், இயேசுவின் காலத்தில் கூட  இம்மக்களின் நிலைமைகள் சீரடையவில்லை. இயேசு அதனையே வேதனையுடன் பார்க்கிறார். கலிலேயாவின் அருகில் தானே சென்று தமக்கு சீடர்களைக் கொள்ளுகிறார், அவர்களுடன் இணைந்து அவ்விடங்களில் புது ஒளி பாய்ச்ச அவர் அனைத்து காரியங்களையும் முன்னெடுக்கிறார்.

ஏசாயா தீர்க்கரும் நம்பிக்கை நல்கும் வாக்கை அம்மக்களுக்கு இறை வார்த்தையாக சொல்லுவதை நாம் காண்கிறோம்.

ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்;

அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்;

அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்

உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்;

கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது

அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்தது போல

அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;

அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்;

அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். (ஏசாயா 9: 3 – 4, திருவிவிலியம்)

நாம் தியானித்த இந்த திருமறைப்பகுதி நமது அனுபவங்களின் தொகுப்பாக காணப்படுகிறது. செபுலோன் நப்தலி நாடுகளிலுள்ளவர்களுக்கு ஏற்பட்டவைகள் நமக்கு அன்னியமானவைகள் அல்ல. ஒருவேளை நாம் உடந்து உருக்குலைந்து இருளில் இருக்கிறோம் என்றாலும், இயேசு  ஒளியுடன் நம்மிடம் வருகிறார்.  நம்மைச் சூழ்ந்துள்ள காரிருள் சூழலில் ஒளியேற்றுபவர்களாக இருக்கவே ஆண்டவர் நமக்கு அழைப்பை விடுக்கிறார். அவ்வழைப்பு, காயம் கட்டுதலையும், குணமாக்குதலையும், நல வாழ்வையும் முன்னிறுத்துகிறது.  ஆம், அவரின் உன்னத சீடத்துவ பணியில் நாமும் இணைந்து பணியாற்றுவோம்.  ஆமேன்.

ஆரதானை முடிந்து நாங்கள் வெளியே வந்து நின்றோம். திருச்சபையின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவராக வந்து கைகுலுக்கினார்கள். பலருக்குள் செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை உணர்ந்தேன். என்னோடு அனேகர் நின்று இறைச் செய்தி சார்ந்த தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். எனது தமிழ் அவர்களுக்கு அன்னியமாகவே இல்லை என்று அவர்கள் சொன்னபோது அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. வெளியில் அனைவருக்கும் கருப்பட்டி காப்பி வைக்கப்பட்டிருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் அனுபவித்த ஒரு வாழ்வை மீண்டும் நான் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்த  ஆண்டவருக்கு நன்றி கூறினேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 24

மார்ச் 29, 2017

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

திருகோணேஸ்வரம்

கோணேஸ்வர் என்பது கோன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு வார்த்தைகளின்  புணர்ச்சியால் உருவாகும் வார்த்தை. கோன் என்றால் அரசன் அல்லது தலைவன் என பொருள்படும். ஈஸ்வரன் என்பது ஈசன் சிவனைக்குறிக்கும் வார்த்தை. கோண் என்பது வளைவு மாறுபாடு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.  மூன்று மலைகள் உயர்ந்து நிற்பதால் திரிகோணமலை என்றும், சிவனை வழிபடும் இடம் ஆகையால் திருகோணேஸ்வரம் என்றும் இவ்விடம் அழைக்கப்படுகிறது.

இராவணன் வெட்டு, கோணேஸ்வரம்

இராவணன் வெட்டு, கோணேஸ்வரம்

இலங்கையில் ராவணன் இன்றும் கதாநாயகனாகவே காணப்படுகிறான். என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த ஓட்டுனர்  சீதையை இராவணன் தனது தங்கையாகவே கவர்ந்து வந்ததாக குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தேன். புலவர் குழந்தை இராவண காவியம் ஒன்றைப் படைத்த போது அது இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு இராவண காவியத்தின் மீதான தடை விலக்கப்பட்டது.

திரு கோணேஸ்வரம் மிகவும் தொன்மையான இடம் என்பதே அதன் முக்கியத்துவத்திற்கான காரணம். இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களுள் இதுவும் ஒன்று. தென்கயிலை என்றும் இதனை அழைப்பார்கள். கிறிஸ்தவர்கள் இதன் முக்கியத்துவத்தை அறியக் கூறும் ஒரு சொற்றொடர் உண்டு அது,  கோனேஸ்வரம் என்பது “புரஜாதியாரின் ரோமாபுரி”. பவுத்தர்களும் இதே இடத்தை சொந்தம் கொண்டாடுவது உண்டு. மேலும்  1622ல் போர்த்துகேயர்களின் காலனி ஆதிக்கத்தின் போது இந்த கோயில் தகர்த்தெறியப்பட்டு அதன் உடைவுகளைக்கொண்டு கோட்டை எழுப்பப்பட்டது. அந்த கோட்டையின் பெயர் ஃபிரட்ரிக் கோட்டை. மட்டகளப்பைப்போல் பல்வேறு கரங்களுக்கு இந்த கோட்டை மாறியது. மேலதிகமாக ஃபிரான்சு படையும் இக்கோட்டையைக் கைப்பற்றியது. இங்கிருக்கும் இயற்கைத் துறைமுகமே இக்கோட்டை மீதான கவனத்தைக் கோரியது எனபதை நாம் எளிதில் யூகிக்கலாம்.

ஃபிரட்ரிக் கோட்டை,  கோணேஸ்வரம்

ஃபிரட்ரிக் கோட்டை, கோணேஸ்வரம்

எனக்கு ஈஸ்டர் அங்கிள் கூறியதற்கு மேலதிக தகவல்கள் கிடைத்தன. இராவணனின் தாயார் உடல் நலமின்றி இருக்கையில் அவர்களால் கோணேஸ்வரம் ஆலயத்தில் சென்று தரிசிக்க இயலாத சூழலில், இராவணன், தனது தாயாரிடம், நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்காக அந்த கோவிலையே எடுத்து வருகிறேன் என்றானம். தனது வாளால் பாறையை வெட்டி மலையைத் தூக்க முனைகையில் பார்வதி பயந்துபோய் சிவபெருமானிடம் முறையிட, அவரும் தனது காலால் மலையை அழுத்த இராவணனால் மலையை தூக்க இயலவில்லை. தனது சூழலை அறிந்த இராவணன், தனது 10 தலைகளுள் ஒன்றை கொய்து தந்து கரங்களில் ஒன்றை பிய்த்தெடுத்து தனது உடலிலிருந்து உருவிய நரம்புகளைக்கொண்டு வீணை செய்து வாசிக்க, சிவன் அவ்விசையில் மயங்கி காலின் அழுத்தத்தைக் குறைக்க இராவணன் உயிர் தப்பினான்.

பழங்கதைகளை விட, சமீபத்திய வரலாறுகள் நம்மை தொன்மை நோக்கி அழைத்துச் செல்ல வல்லவை. கோட்டைகள் அமையுமிடம் யாவும் மூலோபாயங்களான இடங்கள் என்பதை நாம் மறுக்க இயலாது. மட்டக்களப்பில் இரு புறமும் வாவி மற்ற இருபுறமும் செயற்கையாக செய்யப்பட்ட அகழியைப் பார்த்தோம். இந்த மலை அப்படிப்பட்டதல்ல. மூன்று பகுதிகளும் கடலுக்குள் இருக்க, ஒரே ஒரு பாதை மட்டுமே இம்மலையை நிலத்துடன் இணைக்கிறது. பெருந்தவத்திற்கும், ஆழ்ந்த தனிமைக்கும், தன்னிகரற்ற பாதுகாவலுக்கும் ஏற்ற இடமாகையால் இவ்விடம் தொன்மையான காலத்திலிருந்தே மிக முக்கியமான இடமாக கருதப்பட்டிருக்கிறது. தண்ணீருக்குள் செங்குத்தாக மேலெழும்பியிருக்கும் இவ்வதிசயம் மூதாதையரின் மனதில் முக்கிய இடம் பெற்றதில் ஆச்சரியம் இல்லை. இன்றும் வெகு தொலைவிலிருந்து எடுத்த புகைப்படங்கள் இச்சிறு மலையின் அழகை எடுத்தியம்ப போதுமானவை.

ஆனால் இன்று அந்த மலை இலங்கையில் நான் பார்த்த மிகவும் அசிங்கமான இடங்களுள் ஒன்றாக இருக்கிறது. தொன்மையின் சான்றுகளை சிமண்ட் பூசி முழுவதும் அழித்தொழித்துவிட்டார்கள். கோவிலை கண்கொண்டு பார்க்கவியலா அளவிற்கு பெயிண்ட் அடித்து நாசம் செய்திருக்கிறார்கள். மிகப்பெரிய சிவன் சிலையும் காங்கிரீட்டில் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடத்தில் தற்போது அருவருக்கத்தக்க ஒரு கட்டிட அமைப்பே எழுந்துள்ளது. ஒருவேளை இந்த கோவிலை புனரமைப்பார்கள் என்று சொன்னால் கண்டிப்பாக அதன் தொன்மையைக் கருத்தில் கொண்டு செய்வதே சிறப்பு என்று எண்ணுகிறேன்.

மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 அடி உயரத்தில் இருக்கிறது. இராவணனை தமிழர் மற்றும் சிங்களவரில் ஒரு பகுதியினர் தமது தன்னிகரற்ற தலைவனாக கொண்டாடுவது எனது இலங்கைப் பயணத்தில் ஒரு முக்கிய அவதானிப்பாக இருந்தது. ஆகவே இராவணனை முன்னிட்டு ஒரு ஒற்றுமை நிகழுமா என்ற எதிர்பார்ப்பு அனேகரின் மனதினுள் இருக்கிறது. இஸ்லாமியர்கள் கூட இராவணன் வெட்டு வரை வந்து திரும்பிச் செல்லுவதைப் பார்த்தேன். பாரம்பரிய இடங்கள் அனைவருக்குமானவை என்பதை சொல்லாமல் சொல்லிச்செல்லும் காட்சி அது. விரிந்த கரங்களுடனும் மன வலிமையுடன் எஞ்சியிருக்கும் இவ்வித ஒற்றுமைகளைப் பேண வேண்டும்.

கிறிஸ்தவம் தொன்மைகளைப் பேணும் முயற்சியில் சற்றேனும் அறிஞர்களுடன் கைகோர்க்க வேண்டும். புனித மண் என சொந்தம் கொண்டாடப்படும் இடங்களின் அகழ்வாய்வுகளில் கிறிஸ்தவர்களின் மத சார்பற்ற பங்களிப்பு சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும். அப்படி நாம் செய்கையில், நாம் இணைந்து இருக்கும் சமூகத்தின் பெருமிதங்களில் நாமும் மகிழலாம். அது குறித்த மன விலக்கமோ வெறுப்போ தாழ்வாக எண்ணும் நிலையோ வராது. பல் சமய உரையாடலின் ஒரு பகுதியாக திருச்சபை இதனையும் எடுத்துக்கொள்ளலாம். எனது அவதானிப்பில் மதுரைக் கிறிஸ்தவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் குறித்த ஒரு பெருமிதம் எப்போதும் உண்டு. அவர்கள் ஒருபோதும் தங்கள் கிறிஸ்தவ எல்லைகளைத் தாண்டியவர்கள் அல்ல, ஆனால் ஒரு கலாச்சார வடிவமாயிருக்கும் அக்கோயிலை அவர்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை.

சுயம்பு லிங்கம்,  கோணேஸ்வரம்

சுயம்பு லிங்கம், கோணேஸ்வரம்

மைக் வில்சன் என்ற திரைப்பட இயக்குனர் கோணேஸ்வரம் பகுதியில் சாகடல் அதிசயங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது இராவணன் வணங்கிய சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அவர் பின்னாளில் தன்னை சுவாமி சிவ கல்கி என  அழைத்துக்கொண்டார். நான் எதற்காக இங்கே வந்தேன் என யோசிக்கையில் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் பனைகளை தேடித்தானே எனது பயணம் நிகழ்கிறது. மைக் வில்சன் கண்டுபிடித்த லிங்கம் பார்ப்பதற்கு ஒரு பனைமரத்தண்டு போலவே இருந்தது.  கோணேஸ்வரம் மலையில் 50க்கு மேற்பட்ட பனைமரங்கள் இருக்கும் என் நம்புகிறேன். சரியாக எண்ண இயலவில்லை. ஒருவேளை ஆதி காலத்தில் முறிந்த பனையின் அடிப்பகுதி சுயம்புலிங்கமென வழிபடபட்டதா? அப்படியானால் பனை மரணித்த பின்பும் கூட அதனை வழிபடும் முறைமைகள் இருந்திருக்கின்றனவா? காலப்போக்கில் அது கல்லில் செதுக்கப்பட்டதா? எப்படியிருந்தாலும், மைக் வில்சன் கண்டடைந்த லிங்கம், அளவில் சற்றே வித்தியாசமாக இருப்பது, பனையோடு கூடிய தொடர்பினால் என்றே கருதுகிறேன். பனை அதிகமுள்ள குமரி மாவட்டத்தில் அனேகர் தங்கள் பெயர்களை “சுயம்புலிங்கம்” என வைத்திருப்பது ஏன் எனவும் என்ணிப்பார்க்கிறேன்.

மைக் வில்சன் கண்டெடுத்த சுயம்பு லிங்கம்,  கோணேஸ்வரம்

மைக் வில்சன் கண்டெடுத்த சுயம்பு லிங்கம், கோணேஸ்வரம்

லிங்க வழிபாடு மிகவும் தொன்மையானது. அது குறித்து விரிவான ஆய்வுகள் இருக்கின்றன. அவைகளை நான் மறுத்துப்பேசும் தகுதியில் இல்லை. ஆனால் இது ஒரு உணர்வு. இப்படி இருந்திருக்கலாமோ என ஒலிக்கும் ஒரு குரல் என்னிலிருந்து எழுகிறது. அதனை எந்த ஆய்வுகளுடனும் இட்டு நான் குழப்பிகொள்ள விரும்பவில்லை. நான் இப்படி உணர்ந்தேன் என்றே பதிவு செய்கிறேன்.

இறங்கி வரும் வழியில் ஒரு மானைப்பார்த்து புகைப்படம் எடுக்க விரும்பினேன். மானும் இராவணனும் ஒரே கட்சியினர். சீதையை கவர்ந்து வருவதற்கு  இராவணன் மானையே பயன்படுத்தினான். அழகிய அந்த புள்ளிமானை நான் தொடர்ந்து சென்றேன். அது தனியாக சென்று நின்ற இடம் ஒரு பனைமரத்து அடி. அந்த மான் மாய மான் அல்ல என்னை மயக்கிய மான். எனக்கும் அதற்கும் வெறும் ஐந்தடி தொலைவு இருக்குமட்டும் நான் அதனை நெருங்க அது அனுமதித்தது. பல விஷயங்களை நாங்கள் மவுனமாகவே பகிர்ந்துகொண்டோம். கீழே வந்தபோது ஏராளமான மான்கள் அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. அதற்கு முன்பு அவைகள் இளைப்பாறிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவைகள் திடீரென கேட்கும் சிறு அசைவுகளுக்கும் தங்கள் காதுகளைத் திருப்பி தங்கள் உடல் தசைகளை இறுக்கிக்கொண்டன. எப்போது வேண்டுமானாலும் எழுந்து ஓடி தப்பிக்கும் தன்மை அவைகளின் மரபணுவில் எழுதப்பட்டிருந்தது. மேலே நான் பார்த்த மானை எண்ணிக்கொண்டேன். மானசீகமான உறவுதானில்லையா?

கீழிறங்கி நடக்க ஆரம்பித்தேன், இன்னும் சரியாக இருட்டவில்லை. கடலலைகள் கோட்டையின் முன்னால் இருந்த சாலையில் வந்து அறைந்து நீர் தெறிக்க விழுந்தன. அந்த காட்சி என்னுள் வாழும் ஓயா குமரி அலைகளை நினைவூட்டியது. கோட்டையின் வாசலைக்கடந்தபோது அங்கே உள்ள கடற்கரையில் விளையாட அனேக சுற்றுலா பயணிகள் வந்திருந்ததைக் கண்டேன். நடந்து கொண்டே வருகையில், தள்ளுவண்டியில் பருப்பு வடையும் வறுத்த கிழங்கும் தொட்டுக்கொள்ள இறால் சட்னியும் இருந்தது. வாங்கிக்கொண்டு கடற்கரையில் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். நன்றாக இருட்டியதும் அங்கிருந்து கிளம்பி மெதடிஸ்ட் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அறைக்குச் சென்று குளித்துவிட்டு போதகரைப் பார்க்க சென்றேன். சுவையான உணவளித்தார்கள். போதகர் இன்னும் தனது கடமைகளில் மூழ்கி பரபரப்புடன்தான் இருந்தார். ஆனாலும் எனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டு எனக்கான காரியங்கள் அனைத்தையும் செய்தார். மறுநாள் நான் செய்தியளிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தினார். ஏற்கனவே நான் மூதூரில் இருக்கையிலேயே செய்தியளிக்கவேண்டிய திருமறைப்பகுதிகளைக் கொடுத்திருந்தார். திருமறைப்பகுதிகளை வாசித்து விட்டேன், ஆனால் அவைகளை எப்படி ஒழுங்குபடுத்தி பகிர்வது என்பதே கேள்வியாக இருந்தது. இரவு அமர்ந்து ஒரு விசை தியானிக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

நான் சென்றபோது அங்கே ஈஸ்டர் அங்கிள் இருந்தார்கள்.  என்னோடு பேசித்தீரவில்லை அவர்களுக்கு. கோணேஸ்வர் ஆலயம் எப்படி இருந்தது எனக் கேட்டார்கள். பேசிக்கொண்டிருந்தோம். காலையில் என்னை எழுப்பும்படி கூறிவிட்டு மீண்டும் குளித்து ஜெபித்து படுத்துக்கொண்டேன். நாளை அளிக்கவிருக்கும் செய்தி எப்படியிருக்குமோ என அதை எண்ணியபடியே  படுத்துக்கொண்டேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 23

மார்ச் 27, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 23

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

திரிகோணமலை

நான் மீண்டும் அந்த புற்களை பிடித்து சரிவில் ஏற எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஐந்தே நிமிடத்தில் அவர்கள் நாட்கணக்கில் காணாமல் போன ஒருவரைத் தேடிக்கொண்டிருப்பது போல் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊருக்குச் சென்றிருக்கிறோம், பயம் இருக்கும் தானே. எனது பிரகாசிக்கும் முகத்தைப் பார்த்து குழம்பிதான் போனார்கள். செல்லும் வழியெங்கும் பனை மரங்கள் இருந்தன.

பனங்கிழங்கு விற்பவர்

பனங்கிழங்கு விற்பவர்

வழியில் கருவாடுகள் விற்றுக்கொண்டிருந்த ஒரு ஊரைக் கடந்துபோனோம். மிக நல்ல தரமான கருவாடுகள். ஒரு ஊரில் கிடைக்கும் தரமான பொருள் தான் அந்த ஊரின் வளத்தை நமக்கு உணர்த்தும் உண்மையான ஆவணம். அங்கே தானே ஒருவர் தனது சைக்கிளின் பின்புறம் பனங்கிழங்குகளை ஒரு பெட்டியில் நேர்த்தியாக அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார். தமிழர் வாழும் பகுதிகள் அவ்வகையில் கடல் வளமும் பனை  வளமும் மிக்க இடங்கள். சற்று தொலைவு செல்கையில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் ஒன்றைக் கண்டு அங்கும் வண்டியை நிறுத்தினோம். சிறிய படகுகள் முதல் மிகப்பெரிய மீன்பிடி படகுகள் நெரித்தபடி அங்கு நின்றுகொண்டிருந்தன. உலகம் கடல் வளத்தை பயன் படுத்துகிறது என்று சொல்லுவதைவிட மித மிஞ்சி அதை சூரையாடுகிறது என்றே நாம் சொல்லுமளவு கடலின் மேல் மனித குலம் ஒரு தொடர் தேடுதல் வேட்டை நடத்துகிறது. ஆனால் பனைமரம் அவ்விதத்தில் எவ்வித கவனிப்பும் இன்றி கேட்பாரும் கேள்வியும் இல்லாமல் இருக்கின்றது.

மீன்பிடி துறைமுகம்

மீன்பிடி துறைமுகம்

மூதூர் முதல் திரிகோணமலை வரை  நாங்கள் சென்ற அந்த கடற்கரை சாலை என இலங்கைப் பயணத்தின் அழகிய சாலைகளுள் ஒன்று. பனைமரங்கள் ஆங்காங்கே நின்றாலும் அவைகளில் தெரிந்த அழகு தனித்துவமானது. பின்னணியில் இயற்கைக் காட்சிகள் சூழ இருக்க, கதாநாயகன் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அழகு, அச்சாலையில் நின்ற பனைமரங்களின் அழகில் நான் தொடர்ந்து பார்த்தபடி வந்தேன். திரிகோணமலையை நெருங்குகையில் ஒரு இராணுவ முகாம் இருந்தது. படை வீரர்களைப் போல் பனைகளும் அதனுள் உயர்ந்து விரைப்புடன் நின்றான. ஆம்  அவைகள் தானே நம் கடவுள் நமக்கு அருளிய காவல் மரங்கள்?. பசிப்பிணியாற்றும் அட்சயப்பாத்திரங்கள். நிழற் தாங்கல்கள். நமக்கு ஒத்தாசை அளிக்கும் உயர் பருவதம் அல்லவா?

நாங்கள் திரிகோணமலை டாக்யார்ட் மெதடிஸ்ட் திருச்சபை வந்தபோது அங்கே போதகர் நிஷாந்தா திருச்சபை பணியில் பரபரப்பாக இருந்தார். என்னைக்கண்டவுடன், எனக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார். அது மெதடிஸ்ட் மாணவர் விடுதி. ஆலயத்திற்கும் விடுதிக்கும் வெறும் 100 மீட்டர் தொலைவே இருக்கும். மெதடிஸ்ட் மாணவர் விடுதியில் இன்று மாணவர் எவரும் இல்லை. போர் சூழலில் மாணவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று அங்கே சில குடும்பங்கள் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள். எனக்கான அறைக்கு முன் நான் போய் நின்றபோது அதில் “போதகர்களுக்கு மட்டும்” என எழுதியிருந்தது. நான் எனது வாழ்நாளில் இப்படி ஒரு அறிவிப்பை பார்த்தது இல்லை. நெகிழ்ச்சியாக இருந்தது.

அந்த அறைக்குள் சென்றபோது அதில் போதகர்கள் மட்டுமே தங்கமுடியும் என்பது போல் சிதிலமடைந்து இருந்தது. விடுதி காப்பாளர் வந்து உடனே அனைத்தையும் சீர் செய்து தருவதாக வாக்களித்தார். காற்றோட்டம் இல்லாத அறை. நான் அங்கிருந்த மிகப்பழமையான மெத்தையை சோதித்துப் பார்த்தேன், நல்லவேளையாக அதில் மூட்டைப்பூச்சி ஏதும் தென்படவில்லை. எனது அறையில் தானே ஒரு குளியலறையும் இணைக்கப்பட்டிருந்தது.  மின்விசிறியை போட்டபோது அது முனகியபடி ரோடு உருளையின் நிதானத்துடன் சுற்ற ஆரம்பித்தது. போதகர் நிஷாந்தா எனது முகத்தை படிக்கத்துவங்கினார். அறை பிடிக்கவில்லையென்று சொன்னால் ஓட்டலில் நீங்கள் தங்க ஏற்பாடு செய்கிறேன்  என்றார். நான் ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள், எனக்கு ஒரு டேபிள் ஃபேன் மட்டும் ஒழுங்குசெய்தால் போதும் என்றேன். நான் வந்த அதே ஆட்டோவில் ஃபேனை எடுத்துவரச் செய்தார். எனக்கான தண்ணீர் பாட்டில்களையும் உடன் கொண்டுவந்தார். 7.30 மணிக்கு தனது வீட்டில் உணவருந்த வரும்படி கேட்டுக்கொண்டார். அவர் தனது பரபரபான சூழலின் மத்தியில் எனக்கான ஒழுங்குகளை செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்தேன். சனிக்கிழமை என்பது போதகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாள். நான் இலங்கை வந்தது கடந்த சனிக்கிழமை என்பதை அப்போது எண்ணிக்கொண்டேன்.

எனது விடுதி காப்பாளர்  ஒரு முதியவர். என்னோடு பேச மிகவும் ஆர்வம் காட்டினார். தந்து பெயர் ஈஸ்டர் என்றார். நான் ஆச்சரியமாக அவரைப் பார்க்க, ஆம் இயேசு உயிர்த்தெழுந்த நாளாகிய ஈஸ்டர் பண்டிகை அன்று அவர் பிறந்ததால் அவரது பெற்றோர் அவருக்கு அந்த பெயரினை இட்டிருக்கிறதாக கூறினார். எனது அம்மாவின் பெயர் கிறிஸ்டி, கிறிஸ்து பிறப்பு பண்டிகையாம் கிறிஸ்மசுக்கு முந்தைய நாள் பிறந்ததால் அம்மாவிற்கு அந்த பெயர். அப்பாவின் தாயார் தனக்கு பெண் பிள்ளை பிறந்ததால் ஊரார் “மலடி” என அவர்களை பழித்துக்கூறுவதை பொறுக்க இயலாமல், திருமறையில் காணப்படும் அன்னாள் என்னும் தாயாரின் வாழ்வை பின்பற்றி, எனக்கு ஒரு ஆண் மகவைக் கொடுத்தால் அவனை உமது பணிக்கென கொடுத்துவிடுவேன் என்று பொருத்தனைப் பண்ணி அப்பா கிடைக்கப்பெற்றர்கள். ஆகவே அப்பாவிற்கு சாமுவேல் என்று பெயரிட்டு மிகவும் கண்டிப்புடன் கடவுளின் வழியில் வளர்த்தார்கள். பெயர்கள் சொல்லும் கதைகள் ஆயிரம். அப்பா எனக்கான பெயர் காரணத்தை அடிக்கடி நினைவு படுத்துவார்கள். நான் ஏதோ வேடிக்கையாக கூறுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளுவேன்.

ஈஸ்டர் அங்கிள், தான் இந்திய வம்சாவழியினர் என்றும் வெகு சமீபத்திலேயே  மலையகத்திலிருந்து திரிகோணமலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மலையக வாழ்வின் கடினப்பாடுகளை அவர் கூறினாலும் அவ்விடங்களின் அழகு தூய்மை மற்றும் இணக்க வாழ்வு போன்றவை அவரிடமிருந்துகொண்டிருந்தது. ஒருவகையில் அவர் அந்த இடத்தை விட்டு வர விரும்பவில்லை என்பதையே கூறுகிறாரோ எனும் அளவிற்கு மலையகம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். எனது பணிகள் குறித்து அவர் என்னிடம் வினவியபோது, நான் பனைமரங்களை தேடி வந்திருக்கிறேன் என்றேன். எங்கள் பகுதியில் பனைமரங்கள் அதிகமாக இல்லை, ஆகவே அது குறித்து எனக்கு அதிகமாக தெரியாது என்றார். மேலும் பனை மரங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் யாழ்பாணம் தான் செல்ல வேண்டும் என்றார். அனைவரும் திசைகாட்டும் அந்த யாழ்நகரத்தை காணும் ஆசை என்னில் இன்னும் தீவிரப்பட்டது.

ஈஸ்டர் அங்கிள் என்னிடம், நீங்கள் இங்கே பார்க்க வேண்டிய ஒரு இடம் இருக்கிறது அதன் பெயர் கோணேஸ்வர் ஆலயம் என்றார். அது குறித்த ஒரு சுவையான கதையையும் அவரின் ஆசிரியர் சொன்னதாக கூறினார். இராவணனும் அவன் தாயரும் சிவ பக்த்தர்கள். ஒரு முறை கடலின் உள்ளே இருக்கும் ஆலயத்திற்குச் செல்ல இயலாதபடி இராவணனின் தாயாருக்கு பலவீனம் ஏற்படவே இராவணன் துடித்துப்போனானாம். தனது தாயாரின் வழிபாடு தொடர்ந்து நடக்கவேண்டும் என விரும்பிய அவன் கடலில் இறங்கி தனது முதுகினால் சிவவழிபாடு நடைபெற்றுவந்த கடலுக்குள்ளிருந்த அந்த மலையை தனது முதுகினைக் அடையாகக் கொடுத்து தள்ளி கரை அணையச் செய்தானாம். சைவ பக்தி கதை சுவைபட இருந்ததால் அந்த இடத்தை பர்க்கா விரும்பினேன். இங்கிருந்து எவ்வளவு தொலைவு இருக்கும் எனக் கேட்டேன். மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தொலைவு இருக்கலாம் என்றார். நடந்தே போகலாமே எனக் கேட்க, அவர், இல்லை மணி இப்போது 5 ஆகிவிட்டது, நீங்கள் போகையில் ஒரு ஆட்டோவை அமர்த்திக்கொள்ளுங்கள், வருகையில் நீங்கள் நடந்து வரலாம். நீங்கள் வழி தவறி விடுவோம் என்று கவலைப்படாதீர்கள். சாலையில் ஒரு வெள்ளைக்கோடு வரைந்திருக்கும். அதனை தொடர்ந்து நீங்கள் வந்தால் போதும் நேராக இங்கே வந்துவிடலாம் என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் 200 ரூபாய் கேட்டார். பேரம் பேசும் மனநிலையில் நான் இல்லை. அது என்ன கோணேஸ்வரம் என்று பார்க்கவும், சூரியன் ஆஸ்தமிக்கும் முன் அதன் அழகை கண்டுகளிக்க வேண்டும் என்று எண்ணி புறப்பட்டேன். கோணேஸ்வரம் ஆலயம் ஒரு சிறு மீன்பிடி துறைமுகத்தின் அருகில் இருக்கிறது. சிறிய படகுகளில் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தியிருந்தார்கள். பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுலா வாகன நிறுத்தம் அங்கே இருந்தன. சிற்றூண்டி கடையும் சுற்றுலா பயணிகளும், அவர்களுக்கு பொருட்களை நடந்தபடி விற்கும், எளிய மனிதர்களும் அங்கே நிறைந்திருந்தனர். எங்கள் ஆட்டோ அந்த பகுதியைக் கடக்கையில் மீனவர்கள் மீன்களைப்பிடித்துவிட்டு தங்கள் வலைகளை சுமந்தபடி செல்லும் ஒரு காட்சியைப்பார்த்தேன். எனது கண்கள் அவர்கள் வைத்திருந்த ஒரு பொருளின்மேல் நிலைக்க. ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்கள் என்றேன். நல்ல மனிதர், எனக்காக வண்டியை ஒதுக்கி நிறுத்தினார்.

மீன்பிடி உபகரணங்கள் வைக்கும் பெட்டி

மீன்பிடி உபகரணங்கள் வைக்கும் பெட்டி

ஓலையில் செய்த பெட்டி போன்ற ஒன்றை ஒரு மீனவர் கையில் வைத்திருப்பதை பார்த்து அவரை ஒரு நிமிடம் நிற்கச்சொன்னேன். அவருக்கு தமிழ் தெரியவில்லை, ஆனால் எனது வேகத்தையும், எனது செய்கையையும் வைத்து அவர் நான் எதை பார்க்க விழைகிறேன் என்று புரிந்துகொண்டு அவர் தன் கையிலிருந்த ஓலைபெட்டியைக் காண்பித்தார். நான் சற்று கூர்ந்து பார்த்தபோது தான் அது ஓலையில் பின்னப்பட்ட பெட்டி அல்லவென்று தெரிந்தது. செயற்கை இழையால் செய்யப்பட்ட அந்த பெட்டி பார்ப்பதற்கு அச்சு அசலாய் ஓலையில் செய்யப்பட்டது போலவே இருந்தது. அதை திறக்கச் சொன்னேன். அதனுள் அவர்கள் தூன்டில்கள் மற்றும் மீன் பிடிக்கும் நரம்புகள் போன்றவைகளை வைத்திருந்தார்கள். சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் அவர்கள் கரங்களில் வைத்திருந்தது தொன்மையான தொழிற்கருவி பெட்டி என யூகிக்க எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அங்கிருந்து வலப்புறமாக திரும்பி ஒரு கோட்டையைக் கடந்து அங்கும் ராணுவ வீரர்கள் இருக்கக் கண்டேன். கோட்டை வாயிலில் நிறுத்தச் சொன்னபோது ஓட்டுனர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதன் பின் செங்குத்தான பாதை உள்ளே செல்லுகையில் தானே சில பனைமரங்களைப் பார்த்தேன். பிரிட்டிஷார் காலத்தைய கட்டிடங்கள் பல கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. நன்றாக பேணப்பட்ட கட்டிடங்களும் இருந்தன. காவலர்கள் அங்குமிங்கும் சென்றுகொண்டிருப்பதும், பணியில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.  என்னை ஓட்டுனர் இறக்கிவிட்ட இடத்தில் அனேக கடைகள் நம்மூர் திருவிழா கடைகள் போல காணப்பட்டன.

பணாட்டு

பணாட்டு

முதலில் செருப்பை கழற்றிவிட்டு தான் ஆலயத்திற்குச் செல்லவெண்டும். கடைகளில் பனை சார்ந்த பொருட்கள் அனேகம் இருந்தன, புழுக்கொடியல், கித்துல் கருப்பட்டி, பனங் கருப்பட்டி, ஓலையில் ஊற்றப்பட்ட கருப்பட்டிகள் (கருப்பட்டி குட்டான்) சிறிதும் பெரிதுமாக இருந்தன, குறிப்பாக நான் ஆசையோடு தேடி வந்த பணாட்டு மிக அதிகமாக வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் எனக்கு அந்த வியாபார மையத்திலிருந்து எதையும் வாங்க மனம் ஒப்பவில்லை. எனது பயணம் ஒரு பண்பாட்டுத் தேடுதலாக இருக்கிறதே ஒழிய, நுகர்வு தன்மை அதில் பெருமளவில் இல்லை. ஆலயங்களின் வாசல்கள் வியாபார மையங்களாகி போன ஒரு காலத்தை இது காண்பிக்கின்றது.

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். (யோவான் 2: 13 – 17, திருவிவிலியம்)

மேற்கூறிய திருமறை வாசகங்களை எண்ணியபடி கோணேஸ்வர் ஆலயம் நோக்கி பெருமூச்சுடன் நடக்க ஆரம்பித்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 22

மார்ச் 25, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 22

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

கடல் பனை

கமல் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான் ஆகியோர், திரிகோணமலைக்கு நேராக சென்றோம். ஆட்டோ ஓட்டுனரிடம் எனக்கு வேண்டிய படங்களை எடுக்க சற்று நிறுத்தியே செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். திரிகோணமலைக்குச் செல்லும் சாலை கடற்கரைச்சாலை தான். ஆகவே அது மற்றுமொரு பனைமரச்சாலையாகவே இருந்தது. முன்று கிலோமீட்டர் சென்றிருப்போம், ஒரு அழகிய பாலமும் அதன் அடியில் செல்லும் நீர் கடலில் சென்று சேரும் ஒரு காட்சியும் தென்பட்டது கடலின் மிக அருகில் பனைமரங்கள் கூட்டமாக இருப்பதும் தெரிந்தது. உடனடியாக ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். பாலத்தில் வண்டியை நிறுத்த முடியாது என்று ஓட்டுனர் சொல்லி பாலத்தைக் கடந்ததும் நிறுத்தினார்.

வெளியே குதித்து ஓடினேன். ஆனால் எனக்கு தடைகள் இருந்தது. மண்ணைக் குவித்து அந்தப் பாலத்தை கட்டியிருந்ததால்,  என்னால் அந்த சரிவில் இறங்க இயலவில்லை. எனக்கு எனது உடலை சற்றே வளைக்கத் தெரிந்திருந்தால் அந்த சரிவு இறங்குமளவு வசதியாகவே இருந்தது. எனது வயதும் எடையும், நான் இன்னும் 100 மீட்டர் தொலைவு கடந்து சென்றே பின்னால் வரமுடியும் என்றது. ஆனாலும் என்னுள் இருந்த சாகச மனது என்னை விடவில்லை, துணிந்து இறங்கினேன், புற்களைப் பற்றிக்கொண்டு ஓரளவு என்னை சமன் செய்துகொண்டு, நான் இறங்கினேன். உடலா மனமா என்று பெரும் போராட்டத்திற்குப் பின் மனமே வென்றது. இறங்கிய பின் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. உடலை கவனிக்கவேண்டும்.

கீழே இறங்கி சென்றபோது 30 மீட்டர் தொலைவில் கடல் இருந்தது. மணல் மேல் கொடிகள் பற்றி பிடித்து பரவி  படர்ந்து பச்சைப்பாம்புகளின் படையெடுப்பு போல் காணப்பட்ட அந்த கொடிகளின் பரப்பில் பாய்ந்து முன்னேறினேன்.  இன்னும் 15 அடி தொலைவில் கடல். அலையடித்தால் எனக்கு அருகில் வரும் ஆனால் நான் சற்று மேட்டிலேயே நிற்கிறேன்.  எனக்கு இடப்புறமாக அதே அளவு தொலைவில் மூன்று பனை மரங்கள் நின்றிருந்தன. சிறப்பு என்னவென்றால் அலைகள் அதன் பாதத்தை ஓயாமல் முத்தமிட்டபடி இருந்தன. பனைமரங்கள் நின்றிருந்த இடம் மற்ற இடங்களை விட கடலின் உள்ளே தள்ளி இருந்தது. கட்டுப்படுத்த இயலா இரு மகிழ்ச்சி என்னுள் உதித்தது. யாருமற்ற அந்த இடத்தில் எனது மகிழ்ச்சியின் வெளிப்படாக சத்தமிட்டு கூவும்  எண்ணத்தை கைவிட்டேன். பின் நிதானத்திற்கு வந்தேன்.

கடலைப் பிளந்து நிற்கும் பனைகள்

கடலைப் பிளந்து நிற்கும் பனைகள்

கடந்த முறை இந்தியாவின் தெற்கு பகுதிகளில் நான் பயணித்ததை, முன்வைத்து பனைமரச்சாலை என்ற தொடரை எழுதினேன். அதில் பிச்சாவரம் சதுப்பு நிலத்தில் பனைமரங்களை நட்டால் எப்படியிருக்கும் என என் ஏக்கத்தை பதிவுசெய்திருந்தேன். அப்போது எனது தொடர் வாசகியான பேராசிரியை டாக்டர். லோகமாதேவி உப்பு நிறைந்த பகுதிகளில் பனைமரங்கள் வளராது என்பதை குறிப்பிட்டார்கள். தாவர பகுப்பிலேயே ஹேலோபைட்ஸ் (halophytes) என்ற பாகுபாடு இருப்பதாக குறிப்பிட்டார்கள். அது உண்மையும் கூட. ஆனால் என் தர்க்க மனம் அதனை உள்ளூர ஏற்கவில்லை. காரணம், நான் மாலத்தீவில் இருக்கையில் தென்னைகள் கடலின் ஓரத்தில் உப்புநீரில் வளர்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆகவே பனையும் கடற்கரையில் கடல் நீரில் நனைந்தபடி  நின்றுகொண்டிருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.

பனையைப் பற்றி வளரும் ஆல்/ அரசு

பனையைப் பற்றி வளரும் ஆல்/ அரசு

நான் அங்கே பார்த்த அந்த 3 பனைமரங்களுக்கு டாக்டர். லோகமாதேவி சகோதரிகள் எனப் பெயர் வைத்தேன். சரி உப்பு நிறைந்த பகுதியில் பனை வளரும் என்றே வைத்துக்கொள்ளுவோம், அதனால் பயன் என்ன? ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக கடற்கரைப்பகுதிகளில் வேறு தாவரம் வளர இயலாமல் இருக்கையில் பனைமரங்கள் அந்த உப்புத்தண்ணீரில் செழித்து வளரும். மேலும் கடலுக்கு வேலியிடும் மரமாகவும் இருக்கும். ஆகவே கடல் அரிப்புகள் உள்ள பகுதிகளில் இவைகளை நட்டு பேண முடியும்.  மொத்தமாக 5 நிமிடம் கூட அந்த இடத்தில் நான் நின்றிருக்க மாட்டேன், ஆனால் எனது இலங்கை பயணத்தின் உச்சக்கட்ட தருணங்களில் அதுவும் ஒன்று.

டாக்டர் லோகமாதேவி சகோதரிகள்

டாக்டர் லோகமாதேவி சகோதரிகள்

எனது சிந்தனையில் ஒரு சிறு பிழை உண்டு என்பதை நான் அறிவேன். ஆனாலும் இந்த விந்தையைக் கொண்டாட முடிவெடுத்தேன். நான் மேட்டில் நின்றுகொண்டிருந்தேன். கடலின் உள்ளே முளைத்திருக்கும்  பனை மரங்களைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று சொன்னால் நான் அலையடிக்கும் தாழ்ந்த பகுதியில் இறங்கவேண்டும். அங்கே நான் இறங்கினால் எனது கால்களில் அலையடிக்கும். என்னிடமிருக்கும் ஒரே ஷு இது.  நான் மீண்டும் சாகசத்தையே விரும்பினேன். அலையடித்துப் பின்வாங்குகையில் கிழே குதித்து படத்தை எடுத்தேன். என்னால் சிறந்த படங்களை எடுக்க முடிந்தது. கால்களில் அலை படாமல் அந்த பனை மரங்கள் நின்ற பகுதியில் சென்றேன்.

ஒருபக்கம் முழுவதும் மண் பிடிமானம் இன்றி வெறும் கற்றையான வேர் பரப்புகள் மட்டுமே காணப்பட்டது. கடலில் நான் இறங்கினால் வேர்கள் மட்டும் எனது இடுப்பின் அளவிற்கு உயர்ந்து நிற்கும் அதன் சாகசத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பாலே நடனக்கார்கள் போல் மென்மையான விரல் நுனியில் அவைகள்  சற்றே சரிந்தது போல் நின்றுகொண்டிருந்தன. அலைகளின் நாக்கு ஒரு பனை மரத்தை ஏற்கனவே சுருட்டி தனது வாய்க்குள் போட்டுக்கொண்டிருப்பதை அச்சத்துடன் பார்த்திருந்தேன். இங்கே என்ன நடக்கின்றது என எனது சிந்தனை உழன்றது.

கடலுடன் போராடி ஓய்ந்த பனை

கடலுடன் போராடி ஓய்ந்த பனை

தூரத்தில் பார்க்கையில் கடலினுள் மேலும் ஒரு பனங்கூட்டம் துருத்திக்கொண்டு நின்றது. எனக்கு மேலும் உற்சாகம் அளித்தது. 50 முதல் நூறு பனைகள் நிற்கும் அந்த இடத்தை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்றே தெளிவுகள் கிடைத்தன. பனை மரங்கள் நிற்பது தண்ணீரில் அல்ல தரையில் தான் என்ற உண்மை தெரிந்தது. ஆனால் அலை இவற்றின் அருகில்  வர வர இதன் வேர்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. பொதுவாக கடற்கரை என்றாலும் பனை மரங்களுக்கு தேவையான நன்னீர் அதன் அருகிலேயே கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது என்பதே பாலத்தின் அடியில் செல்லும் ஓடை கூறும் பாடம். ஒரு வழியாக ஒரு புதிரிலிருந்து வெளிவந்ததுபோல் உணர்ந்தேன். ஆனால் என்னை இழுத்துப்பிடித்த மற்றொரு காட்சி அங்கே இருந்தது.

இரண்டு வயதான பனங்கன்று

இரண்டு வயதான பனங்கன்று

பனை மரத்திலிருந்து உதிர்ந்த வேர்களின் மத்தியில் சில பனங்கொட்டைகள் முளைத்திருந்க்டன. அவைகளில் ஒன்று கண்டிப்பாக இரு வயதை எட்டிய கன்று என்பதைக் கண்டு உண்மையில் நான் அரண்டே போனேன். பனை விதைமுளைப்பது பெரிய காரியம் அல்ல, ஆனால் உப்புநீரில் அதன் வேர்கள் பற்றி இரு வருடங்கள் பனையால் சமாளிக்க  முடியுமென்றால் அவைகள் நமக்கு வேறு பல விஷயங்களையும் கற்றுத்தர வல்லவை.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வாயிலாக 1983 ஆம் ஆண்டு வெளியிட்ட பனைமரம் சாத்தியங்களும் கண்ணோட்டங்களும் எனும் நீண்ட கட்டுரையை  கோவூர் (A. Kovoor) எழுதியிருக்கிறார். உலகளாவிய பனை ஆய்வினைச்  சார்ந்து நாம்  சற்றே பொருட்படுத்தகூடிய சமீபத்திய பதிவு இதுவே. தாவர உற்பத்தி மற்றும் பாதுகாவல் என்னும் கட்டுரை வரிசையில் 52 ஆம் பகுதியாக இது வருகிறது. இரண்டு முக்கியமான விஷயங்கள் பனைமரங்களின் பரம்பலைக்குறித்து குறிப்பிடப்படுவது இன்றும் ஆய்வுக்குரியவைகளாக இருக்கிறது. பூமத்திய ரேகையில் இரண்டு கண்டங்களை இவைகள் கடந்து செல்லுவது இவைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற இடங்கள் இவைகளே என நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கோவூர் ஒரு யூகமாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

“பயிர் செய்யப்படும் தாவரங்களில் பனைமரம் மிகவும் தொன்மையானது தான். ஒருவேளை இதன் தாவர மூலம் ஆப்பிரிக்காவில் இருந்திருந்தாலும், வரலாற்று ஆவணங்களின் படி இவைகள் இந்தியாவை அடைந்தபின்பே வெளிப்படுகின்றன”. ஆப்பிரிக்கா தான் பனைமரத்தின் தாயகம் என பலரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். ஆனால் கோவூர் தொடர்ந்து கூறுகையில் இரண்டு கண்டங்களிலும் உள்ள பனைகளைக் குறித்த ஒருமித்த ஆய்வுகள் நடைபெறவில்லை எனவும் குறிப்பிடுகிறார். 1983ற்குப் பின் உலகளாவிய வேறு ஆய்வுகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நான் நம்புகின்றேன். உலகம் தனது போக்கையே மாற்றிவிட்டது.

கோவூர், லூபெய்ட் (Lubeigt, 1982)  எனும் அறிஞரை முன்னிறுத்தி “பனை நாகரீகம்” எப்படி வளர்ந்து விரிவடைந்தது என குறிப்பிடுகிறார். அதற்கு பவுத்தம் காரணமாக இருந்திருக்கலாம் என்றும்  அவர் தனது கருத்தை  முன்வைக்கிறார். மற்றொரு அய்வாளரான பி. சி. செவாலியர் (P.C. Chevalier) அவர்களை முன்னிட்டு கோவூர் குறிப்பிடுகையில், “கி மு 2 ஆம் நூற்றாண்டில் இந்திய பயணிகளோ அல்லது வியாபாரிகளோ செல்லாத இடங்களில் பனை மரங்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ காணப்படுகிறது”  எனக் குறிப்பிடுகிறார்.

இந்த இனப்பண்பாட்டியல் மிக முக்கியமானது எனவும் இவைகளை நாம் புறக்கணிக்க முடியாது என்றும் கோவூர் சொல்லுகிறார். அப்படியானால் ஆப்பிரிக்க பனை மரங்கள்  இந்தியா வந்தது எப்படி என்ற கேள்வி பதிலிறுக்கப்படாமல்  இருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் கிமு ஐந்தாம் நுற்றாண்டிற்கு முன்பு இந்தியாவை நோக்கி பயணித்திருக்கிறார்களா? அவர்கள் பனை பரம்பலில் கவனம் எடுத்தார்களா என்பது ஆய்வுக்குரியது.

மனிதர்களால் பனைமரம் பரம்பியது என்னும் எண்ணமே நமது நெஞ்சில் ஒரு பேரார்வத்தை ஊட்டவில்லையா? ஆதி மனிதனின் உள்ளுணர்வில் ஊடுருவியிருந்ததால் தானோ அவன் பனை மரங்களை தனது பயணத்தினூடாக எடுத்துச்சென்றிருக்கிறான். தனது வழித்தோன்றல்கள் பஞ்சகாலத்திலும் தப்பிப்பிழைக்க வேண்டி அவன் கண்டெடுத்த கற்பக விருட்சமா அது? ஆப்பிரிக்காவைப் பொறுத்த அளவில் நம்மிடம் விரித்துக் கூறும் போதிய தகவல்கள் இல்லாததால் தற்போது அவைகளை சற்று ஒதுக்கி வைத்து மற்றொரு கோணத்தில் நாம் இதனை ஆராய முற்படலாம்.

மனிதர்களால் பரம்பவில்லையெனில் இவைகள் தண்ணீரில் மிதந்து சென்று பிற நாடுகளில் குடியேறியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி பார்க்கையில் கோவூர் நமக்கு வேறொரு கோணத்தையும் திறந்து தருகிறார். பூமத்திய ரேகையில் இரண்டு கண்டங்களையும் தாண்டி பரம்பியிருக்கும் பனைமரம் குறித்த ஒரு வரைபடத்தை அவர் பதிவு செய்கிறார். அந்த வரைபடத்தை நாம் நோக்குகையில் இந்தியாவின் வலதுபுறமும் இடதுபுறமும் சம தூரத்திற்கு பனை மரம் பரம்பியிருப்பதைக் காணலாம். மேலும் கடற்கரைகளில் தான் பனைமரங்கள் திரட்சியாகவும் நிற்கின்றன.  அப்படியானால்  பனை விதைகள் தண்ணீரில் பரவி சென்றிருக்குமா என்பது விடையளிக்கப்படவேண்டிய சந்தேகம். அப்படி பார்க்கையில் மாலத்தீவில் பனை மரங்கள் இல்லாதது ஏன் என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

முடிவற்ற இந்த கேள்வியில் தான், பனைமரம் எப்படி உப்பு தண்ணீரில் தப்பிப் பிழைத்தது எனும் கேள்வி தொக்கி நிற்கின்றது. அது பனை சார்ந்த மர்மங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு கோணமும் எனக்கு தெரியவருகிறது. பனைமரங்கள் வளரும் நாடுகள் என்று சொல்லப்படுகின்ற மூன்றாம் உலக நாடுகளில் பெருமளவில் காணப்படுகின்றன. பெருமளவில் இன்நாடுகள் காலணீய ஆதிக்கத்திற்கு உட்பட்டவைகள். அனைத்து மரங்களிலும் மிக அதிக பயன் கொடுக்கும் மரம் இதுவென்றாலும், இவைகளை ஏன் பிரிட்டிஷார் சீண்டவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக முன்நிற்கிறது. ஆனால் பிரிட்டிஷ் மிஷனெறிகள் இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் செயல் பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. ஏன் இந்த எதிரும் புதிருமான பார்வைகள்.

இலங்கையிலும் ஆய்வாளர்கள் பனை மரத்தினைக் குறித்து எழுதும் பதிவுகளில் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து பல்வேறு மேற்கோள்கள் எடுத்து காண்பித்தாலும், அவர்களின் பதிவுகளில் பிரிட்டிஷாருடைய பங்களிப்பு என்ன என்பது பெருமளவில் தெரியவில்லை. பனை சார்ந்து அவர்களின் எண்ணம் என்ன என்ற போன்ற விடுபடல்கள் இருக்கின்றன.  “Description of the Palmyra Palm of Ceylon”  என்ற புத்தகத்தை  வில்லியம் பெர்குசன் (William Ferguson) அவர்கள் 1850ல் எழுதினார் என பார்க்கிறோம். பனை மரத்தைக் குறித்த விரிவான ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்ட திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் கூறுகையில் பெர்குசன் அவர்கள் தாலவிலாசத்தையே முன்னிறுத்தி தனது நூலை எழுதுகிறார் எனக் குறிப்பிட்டார். பேராயர் கால்டுவெல் (Bishop Robert Caldwell, 7 May 1814 – 28 August 1891 ) தனது அவதானிப்பாக பனை குறித்து சில பக்கங்களை எழுதியுள்ளார். தனித்துவமான இந்த தேடல்களை விடுத்து, அரசு சார்ந்த ஆவணங்களிலும் மற்றும் பிற பதிவுகளிலும் என்ன இருக்கிறது என்பதை அறிவது இன்றைய தேவையாக இருக்கிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 21

மார்ச் 25, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 21

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

 பனையாழிபுரம்

ஒரு சுற்று ஊரை சுற்றி நடந்துவிட்டு நேரடியாக முந்தையநாள் பார்த்த இஸ்லாமியரின் நகலெடுக்கும் கடைக்கு வந்தேன். என்னைப்பார்த்தவுடன் அடையாளம் கண்டு சிரித்தார். அவரை பேசவிடாமல் அவரின் நிழலுருவம் வரையத்தக்க வகையில் அவரைத் திரும்பி பார்த்திருக்கச் சொன்னேன்.  அவரும் திரும்பிக்கொண்டார். இரண்டே நிமிடத்தில் அவரது படத்தை ஓலையில் செய்துகொடுத்து  அவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காடச் செய்து விட்டு, ஒரிரு நிமிடங்கள் அவருடன் செலவுசெய்துவிட்டு  அங்கிருந்து நகர்ந்தேன். நேரம் குறைவாக இருந்ததால் என்னால் அங்கே அமர்ந்து பேச இயலவில்லை. அறைக்கு வந்து குளித்துப் புறப்படுகையில் நேரம் சரியாக ஆறுமணி.

கையில் திருமறையும் அதனுள் நான் செய்த அழகிய புக்மார்க்கையும் போதகர் நாதன் அவர்களுக்கு பரிசளிக்கும்படி கிளம்பிச்சென்றேன். கமலும் கோவில் பிள்ளையும் வந்திருந்தார்கள். போதகர் நாதன் எங்கள் மூவரையும் எதிர்பார்க்கவில்லை. சூசனா பிறந்த நாளுக்காக நாங்கள் வந்திருக்கிறோம் என காரணத்தைப் போட்டுடைத்தார்கள். அவர் அயர்ந்து போனார். இலங்கை முழுவதும் தீடீர் திடீரென அச்சரியத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள் குடும்பங்களில் நடைபெறுகின்றன. இன்ப அதிர்ச்சி அளிப்பதை அன்பின் வெளிப்பாடாக செய்கிறார்கள்.

துதி கீதம் ஒன்றைப் பாடி சங்கீதம் 84ஐ வாசித்து  போதகர் பணிக்கென அவர் தன்னை அற்பணித்திருப்பது மிகவும் உயர்ந்த ஒரு மிகப்பெரிய ஆசி என்பதைக் குறிப்பிட்டேன்.

“சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்.”  (திருப்பாடல் 84: 1 – 4, திருவிவிலியம்)

மிக அழகிய திருப்பாடல்  இது. கடவுளோடு இருப்பதுவே இன்பம் என்பதையும் அவருக்கு பணி செய்வது பேரின்பம் அளிக்கும் அரிய வாய்ப்பு  எனக் கூறி  அவரை வாழ்த்தினேன்.

அவர்கள் கேக் வெட்டுகையில் சற்றே மனவிலக்கம் அடைந்தேன். எனக்கு கேக் வெட்டும் பாரம்பரியத்தில் பெரும் ஈர்ப்பு ஒன்றும் கிடையாது. எனது பிள்ளைகளின் பிறந்தனாளின்போது பலாப்பழம் வெட்டியோ அல்லது நுங்கு வெட்டியோ வேறு ஏதேனும் செய்தே பிள்ளைகளை மகிழ்விப்பது வழக்கம். அர்த்தமுள்ள உணவு பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊட்டவேண்டுமென்று கேக்கை இதுநாள் வரைக்கும் தவிர்த்தே விட்டேன்.

வெகு சமீபத்தில் மித்திரனுடைய பிறந்த நாளின்போது ஒரு பெரிய மீனை வாங்கி அப்படியே அதை தோசைக்கல்லில் வைத்து பொரித்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்டோம். அதையே அங்கும் செயல்படுத்தலாம் என முடிவு செய்தேன். கமலிடம் இப்போது மீன் வாங்கக் கிடைக்குமா என்று கேட்டேன். கிடைக்கும் என்றார். போதகர் நாதன் அவர்களை பார்த்துக் கூறினேன், இன்று இரவு நாங்கள் உங்களுக்கு விருந்து வைக்கிறோம், ஆயத்தமாக இருங்கள் என்று சொல்லி  அங்கிருந்த மீன் கடைக்குச் சென்றோம்.

நான் நடை செல்லும் வழியிலிருந்து வேறு மார்க்கமாகப் பிரியும் ஒரு பாதை வழியாக கமல் என்னை அழைத்துச் சென்றார். அங்கே ஒரே ஒருவர் மீன் வைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான்கு மீன்கள் மட்டுமே இருந்தன. மொத்தமாக விலைபேசி வாங்கினோம். இரண்டு கிலோவிற்கும் மேல் இருக்கும். வந்தவுடன் “வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர்” எங்களுடன் இணைந்துகொண்டார் மீனைக் கழுவுவது முதல் மசாலா தடவி வாழையிலையில் சுருட்டி அடுப்பில் சுட்டு எடுப்பதுவரை சுறு சுறுப்பான இளைஞனாகவே இருந்தார். விருந்து பட்டையைக் கிளப்பியது.  அனைத்தையும் ஒழுங்குசெய்துவிட்டு போதகர் நாதன் அவர்களை அழைத்து சுவைக்கச் சொன்னோம். நெகிழ்ந்துவிட்டார். அவரது தாயாரும் உணவு ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். மிகப் பொறுமையாக ரசித்து சாப்பிட்டோம். நேரம் 9.30 ஐத் தாண்டிவிட்டிருந்தது. இலங்கைப் பயணத்தில் மிகவும் பிந்தி உணவு அருந்திய இரண்டே நாட்களில் இது முதல் நாள். போதகர் நாதன் குடும்பத்தினர் மற்றும் அனைவருமே ஒரு மகிழ்வின் தருணத்தில் திளைத்துக்கொண்டிருந்தோம். சிறப்பாக அந்த நாள் நிகழ்ச்சிகள் சென்றது மன நிறைவளிப்பதாக அமைந்தது.

நாதன் போதகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாதன் போதகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாளை நீங்கள் வந்தவுடன் “ட்ரிங்கோ” செல்லவேண்டும் என போதகர் நாதன் கூறினார். திரிகோணமலைக்குச் செல்ல கமல் மிகவும் ஆர்வமாக இருந்தார்.  ஏனெனில் இதற்கு முன்பு மூதூரில் போதகராக இருந்த நிஷாந்தா அவர்கள் திரிகோணமலைக்கு தான் மாற்றலாகி போயிருந்தார். ஆகவே ஆட்டோ உட்பட அனைத்தையும் அவரே  ஒழுங்கு செய்வதாக உறுதியளித்தார். மதியம் 2 மணிக்குத் தான் வருவதாகவும், வேறு ஏற்பாடுகள் ஏதும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

முதூர் சந்தை

முதூர் சந்தை

மீண்டும் இரவு மழை பொழிந்திருந்தது. நான் காலை நடை செல்லுகையில் மூதூரின் சந்தையைப் பார்த்தேன். உள்ளூர் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். கருவாடுகள் தாராளமாக வைக்கப்பட்டிருந்தன, வாழை குலைகளை ஒரு வாகனத்தில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். உணவில் சேரும் பல்வேறு வாசனை பொருட்களை அங்கே விற்றுக்கொண்டிருந்தார்கள்.

பாட்டாளிபுரம் செல்லும் வழியில் குரங்குகள்

பாட்டாளிபுரம் செல்லும் வழியில் குரங்குகள்

காலையில் மீண்டும் பாட்டாளிபுரம்  நிகழ்ச்சியை தொடர வேண்டி ஆயத்தமானேன். என்னை அழைக்க பாட்டாளிபுரத்திலிருந்து வேறொரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்.  அவர் பாட்டாளிபுரத்திற்கு என்னை அழைத்துச்சென்ற பாதை வேறு. நாங்கள் சென்ற பாதை மண்ணாலானதாக இருந்தாலும், மழை பொழிந்திருந்ததாலும்  சற்றே உள்ளூர பயம் இருந்தது. செல்லும் வழியில் குரங்குகளைப் பார்த்தோம்.  ஓரு புறம் காடு மறு புறம் வெட்டவெளி. சேற்றிலோ சகதியிலோ சக்கரம் புதைந்தால் யானைகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. சுற்றுவட்டாரமெங்கும் ஊர்கள் காணப்படவில்லை.  சில மரங்களைப் பார்க்கையில் சீன பாணி ஓவியங்கள் நினைவிற்கு வந்தன. அவர்களூம் சில சீன மரங்களை அறிமுகப்படுத்தியிருப்பார்களோ?

முந்தைய  நாள் வந்ததில் ஒருவர் கூட நிகழ்ச்சியை தவிர்க்கவில்லை. அனைவரும் இன்னும் உற்சாகத்துடன் வந்திருந்தனர்.  அது ஓலையில் செய்த பொருட்கள் அவர்களுக்கு அளித்த உற்சாகத்தின் பொருட்டே என எண்ணிக்கொண்டேன்.  நிகழ்ச்சியை இன்னும் சீக்கிறமாக  துவங்கினோம். மீண்டும் நான்கு பொருட்கள் செய்யக் கற்றுக்கொடுத்தேன். அதே அமைதி, அதே மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, மேலும் சிறப்பாக ஓலைகளில் படங்களைச் செய்து காண்பித்தார்கள். ஓலைகளில் வாழ்த்து அட்டை, மற்றும் பெரிய படங்களைச் செய்வதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தேன். நிகழ்ச்சி முடிகையில் அனைவரும் மிகவும் பயனுள்ள பயிற்சி என்றே சொன்னார்கள். வந்தவர்களில் ஒருவர் ஓலைகளில் பயிற்சியளிக்கும் ஆசிரியர். அவர் கூறுகையில், காய்ந்த ஓலைகளை நாங்கள் எடுத்துக்கொள்ளுவதே இல்லை அதனையும் நீங்கள் பயன்படுத்த கற்றுத்தருவது நம்பிக்கை அளிக்கும்  விஷயம் என்றார்கள். மேலும், நீங்கள் ஓலைகள் மீந்து போகா வண்ணம் அதனை முழுமையாக பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தீர்கள் மிக்க நன்றி என்றார்கள்.

பாட்டாளிபுரம் பயிற்சி

பாட்டாளிபுரம் பயிற்சி

பாட்டாளிபுரம் போதகரும் எங்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். நான் செய்தவைகளையே பல்வேறு விதங்களில் மாற்றி அவர் செய்ய முற்பட்டபொழுது, ஓலைகளில் நாம் செய்யும் பொருட்களின் வடிவங்களுக்கு எல்லை இல்லை என்னும் எண்ணத்தை அது உறுதிப்படுத்தியது. பாட்டாளிபுரம் ஊரிலுள்ள பெண்கள் அனைவரும் நெகிழ்ந்திருந்தார்கள்.  இரண்டு நாள் பயிற்சி எனும்போது இன்னும் சற்று ஆழமாக ஒருவரை ஒருவர் அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. தடைகள் பலவும் தகர்ந்து போகிறது. இயல்பாக கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் வளமாக இருக்கிறது.  ஆகவே இரண்டு நாள் பயிற்சிகள் ஒரு முழுமை நோக்கி செல்லுவதாக நான் உணர்கிறேன்.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மான்றுடன் நான் பேசுகையில் முதலில் முழுநாள் நிகழ்ச்சியையோ அல்லது  இரண்டு  நாள்  நிகழ்ச்சிகளையே விவாதித்தோம். ஆனால் உணவிற்கு ஆகும் பெருந்தொகையைக் கருத்தில் கொண்டு அவர்கள் அதனை தவிர்த்துவிட்டார்கள். மொத்தம் இரண்டே இடங்களில் தான் உணவு கொடுக்கப்பட்டது. பாட்டாளிபுரம் அதில் ஒன்று. ஆனால் அனைத்து கருவிகளையும்  மக்கள் பயன்படுத்த இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று இலவசமாக வழங்கியது. அது ஒரு பெருந்தொகை.

ஓலை என்பது என்னைப்பொறுத்தவரையில் அரிய பொருள். அவைகளை சேகரிக்க நான் மேற்கொண்ட பயணங்கள், அடைந்த ஏமாற்றங்கள் ஒன்று இரண்டு அல்ல. சரியான ஓலை நமது சேமிப்பில் இல்லையென்றால் நாம் மனதில் எண்ணுகின்றவைகளுக்கு நம்மால் வடிவம் கொடுக்க இயலாது. சிறு துண்டுகளையும் பயனுள்ள வகையில் நம்மால் ஒரு படத்தில் இணைக்கமுடியும் என்றாலும், தேடலுடனும் ஆர்வத்துடனும், புதியவைகளைச் செய்ய முற்படுகையில், குறிப்பிட்ட ஓலைகள் நம்மிடம் இல்லாது போவது சேர்பளிக்கக்கூடிய தருணமே ஆகும். ஒருவேளை அது காய்ந்த ஓலையாக இருக்கலாம் அல்லது சற்று அகன்ற ஓலையாக இருக்கலாம், இல்லை அது இலை நுனியாக கூட இருக்கலாம். சில வேளைகளில் புள்ளியடித்த ஓலைகளைக்கூட வடிவ அழகிற்காக நான் பயன்படுத்தியிருக்கிறேன். மிகப்பொருத்தமான ஓலைகள் இல்லையென்றல் செயல்பாடுகள் அப்படியே நின்றுவிடும். ஆகவே ஓலைகளை நான் எளிதில் களைவது இல்லை. மீந்த ஓலைகளை எடுத்துச் சென்றுஅவர்கள் பயிற்சியைத் தொடர கேட்டுக்கொண்டேன்.

பாட்டாளிபுரத்திற்காக நான் பரிந்துறை செய்யும் ஓலைப் பொருள் என்றால் அது சிலுவை தான். சிலுவை அவர்கள் வாழ்வின் கடினப்பாடுகளை உலகமெங்கும் எடுத்துக்கூறும் ஒரு கூறியீடாக இருக்கும். மேலும் நான் குறிப்பிட்டது போல் விலாச அட்டைகள் செய்து மீந்து வரும் ஓலைகளில் சிலுவை செய்வது ஏற்றதாக இருக்கும்.  பாட்டாளிபுரம் சிலுவை என்பது உலகளாவிய ஒரு கவனத்தை இலங்கை திருச்சபையின்மேல் குவிக்கும். அது சார்ந்த விரிவான ஒரு திட்டம் தயாரிக்கப்படவேண்டும் என எண்ணிக்கொண்டேன். பாட்டாளிபுரம் பனையாழிபுரம் எனும் பெயர் அடையும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

பாட்டாளிபுரம் வேலி அமைப்பு

பாட்டாளிபுரம் வேலி அமைப்பு

ஊரில் பல வீடுகளைச் சூற்றி பனை மட்டைகளாலான வேலிகளை அமைத்திருந்தார்கள். அதிலுள்ள தனித்தன்மை என்னவென்றால், ஓலைகளை மட்டையிலிருந்து வெட்டிவிடாமல், அதனை தலைகீழாக ஓலைகள் தரையில் பதியும்படி வைத்திருந்தார்கள். மிகச்சிறந்த ஒரு வேலியமைப்பு. பிந்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் பொருளதார சூழ்நிலைக்கு ஏற்ற வேலி அது. ஏழு வருடங்கள் வரை நல்ல நிலையில் இருந்து அது பயனளிக்கும். குமரி மாவட்டத்தில் தென்னை மரங்களில் திருடர்கள் ஏறிவிடாது இருக்க கருக்கு மட்டைகளைக் கொண்டு அதனை சுற்றி கட்டிவிடுவது வழக்கம்.

பாட்டாளிபுரம் சிறிய பனம்பழம்

பாட்டாளிபுரம் சிறிய பனம்பழம்

அருகில் இருந்த ஒரு பனை மரத்தின் காய்களைப் பார்க்கையில் அவைகள் அளவில் சிறிதாகவிருந்தன. நம்மூர் பனைமரங்களில் பல்வேறு விதமான காய்கள் விளைகின்றது. கரிய நிற காய்கள், கருப்பும் ஆரஞ்சு வண்ணமும் இணைந்த காய்கள், சிறிய அளவில் காணப்படும் ஆரஞ்சு வண்ண காய்கள் போன்றவைகளை  நாம் அதிகமாக காணலாம். உள்ளூரில் கறுப்பு காய்ச்சி வெள்ளைக்காய்ச்சி என்று சொல்லுவார்கள். வண்ணம் வடிவம் அளவு சதைப்பற்று என் பல்வேறு வகைகளில் பழங்கள் கிடைக்கின்றன. இவைகளின் தனித்தன்மை என்ன எனப்தையோ இவைகளின் உட்கூறுகளையோ பெரிதாக எவரும் ஆய்வு செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. இவைகள் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

உள்ளூரில் பெரியவர்கள் சில பனம்பழங்களை வேறுபடுத்த  கறுப்பு காய்ச்சி வெள்ளைக்காய்ச்சி என்று சொல்லுவார்கள். அவ்விதம் பழங்களின் தனித்தன்மைகளை கண்டடைத்து அவைகளைப் பெயரிட்டுப் பட்டியலிடும் தாவரவியலாளர்கள் நமக்குத் தேவை. பொராசஸ் ஃபிளபல்லிஃபர் (Borassus flabellifer) பொதுவாக 1, 2. 3 எனக் கண்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் பொராசஸ் ஏத்தியோப்பம் (Borassus sundaicus) என்பதில் 4 கண்கள் வரை  இருக்கும் என்று அறிகிறோம். நான்கு கண்கள் என்பவை மிக அதிக விளைச்சலைத் தருவது தானே?

இந்தியாவிற்கும் இலங்கைக்கும், பனைமரத்தைப் பேணுவதில் உள்ள அடிப்படை புரிதல்  மற்றும் முக்கிய வேறுபாடு பனம்பழத்தில் தான் இருக்கிறது. பனம் பழத்தை உண்ணுவதும், பல்வேறு வகையான பொருட்களைச் செய்யப் பயன்படுத்துவது இலங்கையில் உள்ள வழக்கம். இந்தியாவிலோ நுங்கினை விரும்பி சாப்பிடுகிறோம். நுங்கினை சாப்பிடுகையில் கிடைக்கும் ஊட்டங்களும் அதன் நன்மைகளும் ஏராளம். அவைகளை மறுப்பதர்க்கில்லை.  ஆனால் நுங்கினை சாப்பிடும் சமூகம், அதன் அடுத்தக்கட்ட வளார்ச்சியை பெரிதும் பாதிக்கின்றது. நுங்கு வெட்டப்படாமல் பழங்களாக கிடைக்கும் எஞ்சிய ஒரு சிறுபகுதியையும் கிழங்குக்காக விட்டுவிடுகிறோம். ஆக, நமது பழக்கவழக்கங்களினாலேயே  பனைமரத்தின் புதிய தலைமுறைகள் எழுவதற்கு நாம் தடையாகிவிடுகிறோம். பனம்பழம் சாப்பிடும்  இலங்கை மக்கள் அதிலிருந்து களியை எடுத்தபின்பு, அதனை முளைக்க விட்டு கிழங்காக மாற்றுகிறார்கள். அல்லது பனை பயிர்செய்கைக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

பனம் பழத்தினை சுடுவது கூறித்து குமரி மாவட்டத்தைச் சார்ந்த மலரமுதன் ராஜாமணி அவர்கள் கூறுகையில், அடுப்பில் வைத்துச் சுடும் பனம் பழங்களைத் தலைகீழாக வைத்தேச் சுடுவார்கள் என்றார். ஏனென்றால் அவற்றில் இருக்கும் காறல் கீழிறங்கி சுவைக்கூடிவிடும். அனுபவங்கள் தான் எவ்வளவு நுண்மையான அவதானிப்புகளை தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லுகிறது.

பனை மரங்கள் பாட்டாளிபுரம் என்ற பின் தங்கிய கிராமத்தை கை கொடுத்து முன்னுக்கு அழைக்கும் வல்லமை பெற்றது என்பது எனது ஆழ்ந்த நாம்பிக்கை. பாட்டளிபுரத்தைச் சுற்றிலும் உள்ள வானம் பார்த்த பூமியில் பனை மரங்களை நடுவது அவ்வூர் மக்களை பனையுடன் பிணைத்து அவர்களை முன்னேற்றும் ஒரு சூழியல் செயல்பாடு. அவ்விதமாகவே அவர்கள் காடுகளும் பனைமரங்களால் வேலியிடப்படலாம். இவைகள் பல்முனைகொண்ட இயற்கை செயல்பாடாக இருப்பதனால், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று அனைவருடனும் இணைந்து இப்பணிகளை முன்னெடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜெயந்தி தனது சகோதரியின் மகளை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். முதன் நாளில் மூதூரில் நான் பார்த்த அதே சிறுமி. இந்தியாவில் அவள் உறவினர்கள் இன்னும் இருக்கின்றனர். அவளிடம் நீ வளர்ந்த பின்பு எந்த துறையினை எடுத்து படிக்க விரும்புகிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் மருத்துவம் என்றாள். கல்வி அனைவருக்குமானது அல்ல என்ற நிதர்சனம் அறியாத பருவம்.  ஆனால் அதற்கான வேட்கை அவளுள் இருக்கிறது. எளிய கிராமத்தில் இருக்கும் அவளின் கனவுகளை மெய்பட திருச்சபை முன்னிற்கும் என நம்புகிறேன். அவளிடம் நன்றாக படி என்று கூறி அவளை ஆசீர்வதித்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 20

மார்ச் 23, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 20

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மூதூர் நீத்துபெட்டி

மதியம் அனைவருக்கும் உணவு மூதூரிலிருந்தே வந்தது. ஓரிரு உணவு பொதிகள் குறைந்திருந்தன. ஆகவே எனக்கான உணவை நான் மூதூரில் எடுத்துக்கொள்ளுகிறேன் என கூறி நான் அதே ஆட்டோவில் ஏறிவிட்டேன். ஜெயந்தியும் அவளுடன் வந்த அவளது உறவு பெண் போவதற்கு ஆட்டோ கிடைக்கவில்லை. ஆகவே ஒரே வண்டியில் சேர்ந்து பயணித்தோம். அவர்கள் கிராமத்திலிருந்து வருகையில் 500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உணவு எடுத்து வந்த வண்டியில் சென்றதால் அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து மொத்தம்  500 ரூபாய் பேசினோம். ஒத்துக்கொண்டார்.

அந்த பயணத்தில் காட்டுவழி நாங்கள் வருகையில் ஒரு ராணுவ முகாம் அங்கே இருந்தது. இந்த காட்டுப்பகுதியில் ஏன் ராணுவத்தினர் என ஜெயந்தியிடம் கேட்டேன். அதற்கு அவள் இவர்கள் ராணுவம் அல்ல கடற் காவல் படை என்றாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் தெரியவில்லை. மேலும் அவள், இந்த பகுதியில் தான் ஒரு ஆசிரியையை தங்கச் சங்கிலிக்காக யாரோ கொலை செய்தனர் என்றாள். அந்த இடம் ஒரு அடர்காடு. அப்போது ஓட்டுனர் சொன்னார், தமிழ் ஆட்கள் சரியில்லை, ஆள் யார் என்று தெரிந்த பின்பும் செயலற்று இருக்கிறார்கள், இதே எங்கள் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இப்படி விட்டுவைத்திருக்க மாட்டோம்.

நான் அங்கிருந்த காடுகளின் வழியாக வந்த போது ஒரு மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு கல்லைக் கண்டேன். தண்ணீர் வழிந்து உருண்ட சப்பையான கூழாங்கல். எப்போதோ எவரோ அந்த இடத்தில் அந்த கல்லை  தான் கண்ட ஒரு பெரும் தரிசனத்தின் பொருட்டு நிறுவியிருக்கிறான். ஒரு தொல் மூதாதையாகவும் இருக்கலாம்.   இன்னும் சற்றும் மாறாமல் அந்த இடத்தில் அது அமர்ந்திருக்கிறது. பழங்குடியினர் வாழ்ந்த பகுதியோ என எண்ணிக்கொண்டேன்.

திருவிவிலியத்தின் தொடக்க நூல் 28 ஆம் அதிகாரத்தில் முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபு ஒரு கல்லை தன் தலைக்கு வைத்தபடி உறங்குகையில் அவரது கனவில் வானம் தொடும்வகையில் ஒரு ஏணி இருப்பதும் அதில் கடவுளின் தூதர்கள் ஏறுவதும்  இரங்குவதுமாக இருந்த காட்சியை பார்க்கிறார். அதன் மேலிருந்து கடவுள் யாக்கோபிற்கு ஆசி வழங்குகிறார். மறுநாளில் தாம் உறங்கிய இடம் கடவுளின் அருள் பெற்ற இடம் என்பதை யாக்கோபு உணருகிறார். தாம் தலைக்கு வைத்து உரங்கிய அந்தக் கல்லை எடுத்து எண்ணை வார்த்து அதை பிரதிஷ்டை செய்கிறார்.  லூசு என்ற பெயருள்ள இடத்திற்கு பெத்தேல் என் பெயரிடுகிறார். அதற்கு ஆண்டவரின் இல்லம் என பொருள். லூசு என்று சொல்லப்படுகிற கானானிய பெயருக்கு விதை கொடுக்கும் மரம் என்று பொருள்.  கல்லையும் மண்ணையும் வணக்கும் மக்கள் என கூறி எவரையும் எளிதில் புறந்தள்ளி கடந்து விட முடியாதபடி திருமறைக்கும் அக்காட்டுபகுதிக்கும்  உள்ள தொடர்பை எண்ணிக்கொண்டேன்.

வழியில் ஜெயந்தியையும் அவள் உறவுப்பெண்ணையும் இறக்கிவிட்டு மூதூர் சென்றேன். உணவு கொடுத்தனுப்பிய கடையில்  ஓட்டுனர் உணவு பொட்டலங்கள் குறைந்ததையும் எனக்கு உணவு கொடுக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார். நான் அங்கே சென்ற நேரம் கிட்டத்தட்ட 3 மணி ஆகிவிட்டிருந்தது.  அவர்கள் தங்களிடம் இருந்த மிச்ச உணவுகளைக் கொடுத்து எப்படியோ சமாளித்தார்கள். எனக்கோ அந்த உணவு தான் உயிராக இருந்தது. நன்றி கூறி புறப்பட்டேன்.

மெதுவாக  நடந்து எனது அறைக்கு வரும் வழியில் அந்த கித்துல் விற்கும் பெண்மணியைப் பார்த்து இரண்டு கித்துல் வாங்கிவிட்டு, பனை ஓலையில் பொருட்கள் செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டேன். மிக அருகில் உள்ள ஒரு சந்தில் ஒரு பெண்மணி ஓலைப் பொருட்களை செய்கிறார் என்று கூறினார். அவர்கள் கைகாட்டிய இடத்திற்குச் சென்றபோது ஒரு வயதான பெண்மணி எனது மருமகள் தான் ஓலைப்பொருட்களைச் செய்வாள் எனக் கூறினார். என்னென்ன பொருட்கள் செய்வீர்கள் எனக் கேட்டவுடன் நீத்துபெட்டி என்றார்கள். நேரம் இருந்ததால், நீத்துபெட்டி செய்து காட்டுவீர்களா எனக் கேட்டேன். சரி என்று சொல்லி மருமகளை அழைக்க ஆளனுப்பினார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நீத்துப்பெட்டி உருவாகிறது

கண்ணிமைக்கும் நேரத்தில் நீத்துப்பெட்டி உருவாகிறது

 

மருமகள் வந்து எனக்கு நீத்துபெட்டியை செய்து காட்டினார்கள். அசரடிக்கும் வேகம் அவர்கள் கைகளில் இருந்தது. அவர்கள் செய்து வைத்திருந்த  நீத்துபெட்டிகளையும் எடுத்துக் காட்டினார்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைப்போல் மென் சருமத்துடன் மிக அழகாக இருந்தது அது.  பொதுவாக நீத்துப்பெட்டிகள்  யாவும் குருத்தோலையிலேயே  செய்யப்படுகின்றன. தற்போது ஓலைகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்றும், ஓலைகள் கிடைத்தால் மிக அதிகமாக செய்து வருமானம் ஈட்ட முடியும் என்றும் சொன்னார்கள். பனை அபிவிருத்தி சபை வந்து நடத்திய 3 மாத பயிற்சியில் தனது மருமகள் மட்டுமே அனைத்து பொருட்களையும் செய்ய கற்றுக்கொண்டாள் எனவும், அதற்கென கொடுக்கப்பட்ட சான்றிதழையும் வைத்திருக்கிறாள் எனவும் மாமியார் புகழுரை சூட்டினார்கள்.

புதிதாய்ப் பிறந்த நீத்துப்பெட்டி

புதிதாய்ப் பிறந்த நீத்துப்பெட்டி

இரண்டு காரியங்கள் உடனடியாக என் மனதில் வந்தது, இஸ்லாமியர் பனை வளத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பெண்கள் ஓலைகளில் கைப்பணிகளைச் செய்வதில் தனித் திறமை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான ஓலைகளை ஒழுங்கு செய்யும் ஒரு வாய்ப்பை திருச்சபை வழங்கலாம். இரண்டவதாக பெருமளவில்  மக்களுக்கு பயிற்சி அளித்தாலும் வெகு குறைந்த அளவிலேயே மக்கள் அதனைத் தொடர்ந்து பயிற்சி செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே புதிதாக பயிற்சியளிக்கும் இடங்களில் இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் ஓலைகள் தங்கு தடையின்றி கிடைக்கும் ஒரு இடத்தை பரிசோதனைக் களமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஓலைகள் விலை குறைவாகவும் மலிவாகவும் கிடைக்கின்ற இடங்களில் 5 முதல் 10 நபர்களைத் தெரிந்துகொண்டு அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை தயாரிக்கும் வழிகளை காண்பிக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில் அவைகள் சீராக செல்லுகின்றதா அல்லது மேலதிக உதவிகள் தேவையா என ஆராய வேண்டும். பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது என்றால், இன்னும் சில பல பகுதிகளில் இவைகளை அறிமுகப்படுத்துவது ஏற்புடையதாக இருக்கும்.

விலாச அட்டை என்பதை எடுத்துக்கொள்ளுவோம். 4 X 10 என்னும் அளவு பெருமளவில் கிடைப்பதில்லை. ஆகவே அவைகளுக்கான விலையை அதிகரிக்கலாம் என பார்த்தோம். அதையே, ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் இருந்தால் இன்னும் அதிகமாக விலை கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியென்றால் ஓலைகள் இல்லாத இடத்திற்கு ஓலைகளை அனுப்புவதில் பயனுண்டு. விலை அதிகமானாலும் சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

ஒருவேளை முதல் வருடத்தில் தேக்க நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? பொறுமையைக் கடைபிடிப்பது தான் ஒரே வழி. மேலதிகமாக திருச்சபைகள் செய்ய ஒன்றுண்டு. விலாச அட்டைகள் செய்தபின் எஞ்சியிருக்கும் ஓலைகளை எடுத்து சிலுவை செய்யும்படி திருச்சபைகள் அறிவுறுத்தலாம். இப்படிச் செய்கையில் முதலில் செய்த விலாச அட்டைகள் தேங்கினாலும் மிச்சமிருக்கும் ஓலைகளில் செய்த சிலுவைகள் எஞ்சியிருக்கும். அவைகள் கொடுக்கும் பொருளாதார ஊக்கம் இவர்களை தக்கவைக்கும். மிக பரவலாக ஓலையின் பயன் பாட்டினை மக்கள் அறிவார்கள். விலாச அட்டைகள் தனக்கான இடத்தை வெகு விரைவிலேயே கண்டடையும்.

இவைகளில் எஞ்சும் ஓலைத் துணுக்குகளை இணைத்து எப்படி வாழ்த்து அட்டை, புக் மார்க் பொன்றவைகளை செய்யலாம்  என பயிற்சியளிக்கலாம். இவ்விதம் மூன்று விதமான சுழற்சிகளுக்குப் பின் எஞ்சும் ஓலைத் துண்டுகளை கவனமாக சேகரித்து எரித்து சாம்பலாக்கி எடுத்தால் அவையும் புனித சாம்பலாக திருச்சபைகளின் தேவைக்குப் பயன்படும். சிலுவை செய்த ஓலைகளில் செய்வது தான் புனித சாம்பலாக வேண்டும் என்றில்லை, சிலுவை செய்து எஞ்சிய ஓலைகளும் புனித சாம்பலாக மாறலாம். மேற்கூறிய கூற்றில் திருப்தி இல்லையென்றால், சிலுவை சுமப்போர் செய்யும் சாம்பல் புனிதம் நிறந்தது தானே?

ஒரு காலத்தில் குருத்தோலைகளில் பொருட்களைச் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆயினும் இன்றைய சூழலை மனதில் வைத்து நோக்குகையில் குருத்தோலைகளை திருச்சபை பெருமளவில் ஊக்கப்படுத்தக் கூடாது என்பதே என் எண்ணம். சடங்குகளில் ஓலைகள் இடம்பெறலாம் ஆனால் வியாபாரத்தில் அவ்விதம் செய்வது பனைகளையே அழித்துவிட வாய்ப்பாகிவிடும். மேலும் குருத்தோலையை பாவித்தவர்கள் ஒருபோதும் சாரோலையை ஏற்கப்போவது இல்லை. அதன் அழகும் வாசனையும் அப்படிப்பட்டது. ஆயினும் நாம் தயங்க வேண்டாம். சாரோலைக்கும் ஒரு தனித்துவ  மணம் உண்டு. அதன் வண்ணம் கார் முகில் வண்ணனின் நிறக்தைப் போலிருப்பது. காய்ந்த பிற்பாடு சற்றே நீலம் பாய்ந்த பச்சை வண்ணத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த முறையில் முயற்சிகளை முன்னெடுத்தால் நம்மால் காய்ந்த ஓலைகளையும் சந்தைப்படுத்த இயலும்.  காய்ந்த ஓலைகளே மிக அழகானது போலும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. மரத்தைப் போன்ற வண்ணம் ஆனால் காகிதத்தைப் போன்ற மென்மை. இதற்கு புதிதாக பழுத்து விழுந்த ஓலைகளே சரியானவை. நாட்பட்ட ஓலைகளை நமது நுகர்வோருக்கு கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.  காய்ந்த ஓலைகளை நாம் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறப்போட்டுவிட்டால் அது மிகவும் மென்மையாகிவிடும். பிற்பாடு அவைகளை வெட்டி எடுக்க ஓலையின் ஈரப்பதம் தேவையாயிருக்கிறது. இல்லையென்றால் காய்ந்த ஓலைகள் ஒடிந்து பெரும் நஷ்டத்திற்கு வழிவகுத்துவிடும். நஷ்டம் என்பது பணத்தில் அல்ல மாறாக நமது நேரத்தை அது வீணடித்துவிடும்.

ஒருவேளை எங்களுக்கு குருத்தோலை தான் வேண்டும் என்பவர்களுக்கு விலையை 4 அல்லது 5 மடங்கு உயர்த்தி அதனைக் கட்டுப்படுத்தலாம். எப்படியாகிலும்  நுகர்வோரை அடையும்  வழிகளை முதலில் திறந்து வைத்திருப்பதே நமக்கு நன்மை பயக்கும்.  மேற்கூறிய முறைகளில்  ஏதேனும்  ஒரு வகையில் செயல்படுவது பெரிய நன்மையை வழங்காது என்று உணர்பவர்கள் தாராளமாக செயல்படும் வழிகளை தெரிவு செய்வது நலம்.

ஓலைகளில் இவ்வித பொருட்கள் செய்கையில் எளிய கருவிகளை பயன்படுத்துவது பயனளிக்கும். தொழிர்கருவிகள் தரப்படுத்தலை சீராக்கும். ஒரே முறையில் வெட்டும் கருவிகள் அதில் ஒன்று. மற்றோன்று செய்த ஓலைப்பொருட்களை பலிதீன் பைகளில் இட்டு பாதுகாப்பது. ஓலைகள் பல நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் மழைக்காலத்தில் ஓலைகளை பாலிதீன் பைகளில் பத்திரமாக சேமிக்கவில்லையென்றால் ஓலையின் மேல் பூஞ்சாணம் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பூஞ்சாணத்தை கைவிரல்களலேயே நாம் எளிதில் நசுக்கி தேய்த்து சீராக்கிவிட முடியும். ஆனால் ஒரு நுகர்வோரின் பார்வையில் அது மிகவும் தரந்தாழ்ந்த  ஒரு நுகர்பொருள் ஆகிவிடும். ஆகவே பூஞ்சைகளில் இருந்து ஓலைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

அந்த ஊரில் இன்னும் சில குடும்பங்கள் நீத்துப்பெட்டி செய்துகொண்டிருப்பதாக அந்த பெண்மணி கூறினார்கள். இஸ்லாமியர் ஓலைகளை பயன்படுத்துவது, மேலும் ஓலை சார்ந்த வியாபாரங்களில் ஈடுபடுவது காலம் காலமாக நடைபெற்று வருவது தான்.  பேரீச்சை இல்லாத இடத்தில் பனை மரம் அதன் முத்த சகோதரனாய்,  பயன் வடிவாய் இருந்ததால் இஸ்லாமிய சமூகம் பனை மரத்தினை தங்களுடன் பொருத்திக்கொண்டனர்.

நான்கரை மணிக்கு நான் அறைக்கு வந்தேன். போதகரம்மா சூசனா என்னைப்பார்த்தவுடன் அருகில் வந்து, எனது கணவருக்கு இன்று பிறந்தநாள் நீங்கள் கண்டிப்பாக வந்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றார்கள். மேலும் அவர்கள் இது போதகருக்குத் தெரியாது. மிகச்சரியாக ஆறுமணிக்கு நீங்கள், கமல் மற்றும் கோவில்பிள்ளை அனைவரும் வரவேண்டும் என்று சொன்னார்கள். சரி என்றேன்.

எனது திருமறையை எடுத்து திருமறைப்பகுதியை குறித்துக்கொண்டேன்.  கண்ணிமைக்கும் நேரத்தில் ஓலையில் ஒரு அழகிய புக் மார்க் செய்தேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதால் ஒரு மாலை நடை சென்று வரலாம் என்று கிளம்பினேன். அப்போது என் கரத்தில் மறக்காமல் சில ஓலைகளையும், ஓலையை வெட்டும் எனது கருவியையும், ஒரு சிறு கண்ணடி துண்டையும்,  ஒட்ட பசையும் மற்றும் புக் மார்க் செய்யும் ஒரு அட்டையையும் எடுத்துக்கொண்டேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 19

மார்ச் 22, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 19

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பாட்டாளிபுரம்

முன்னிரவு மழை பொழிந்த சத்தம் கேட்டது. காலையில்  நடை செல்லும்போது தண்ணீர் யாவும் வடிந்திருந்தது. ஈரப்பதம் நிறைந்த குளிரான காற்று வீசியது. மூதூரில் மழைக்காக மக்கள் காத்திருந்தனர். பருவமழை சற்று பிந்தியே வந்திருக்கிறது.  நான் சென்ற நேரம் மழையா என வியந்துகொண்டேன். நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற ஓளவையின் மூதுரையை நினைத்து என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். கமல் மூதூரின் வளத்தைப்பற்றி சொல்லுகையில் “இலங்கையில புல்லு சாப்பிடுத மாடு மூதூரில் தான் இருக்குது” என்பார். ஆசீர்வாத மழை என நினத்துக்கொண்டேன்.

காலை நடைசென்று திரும்புகையில் திரளாக வெள்ளை உடை உடுத்திய இஸ்லாமிய சிறுமிகள் சைக்கிளிலும் நடந்தும் பள்ளிகூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர். மூதூரில் என்மனதை கொள்ளைகொண்ட அழகிய காட்சி அது. பிள்ளைகள் அனைவரும் தங்கள் வெண்மையான சீருடையுடன் தலையில் இருந்து மார்பு வரை மூடுகின்ற ஒரு துணியை அனீந்டிருந்க்டார்கள். சக்கிளில் அவர்கள் செல்லுகையில் பட்டாம்பூச்சி செல்லுவது போன்ற ஒரு அழகை அது கொடுத்தது. மேலும் கறுப்பு உடைகளிலிருந்து இஸ்லாமிய குழந்தைகள் விடுதலை பெற்றதே ஒரு மன நிறைவான அனுபவம் தான். கறுப்பு என்பது எனக்கு மிகவும் பிடித்தமான நிறம். நான் எப்போதும் அவைகளையே விரும்பி அணிகிறேன். எனது சீருடையில் கூட கறுப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயினும், என்னால் நமது வெப்பமண்டல பகுதிகளில்  குழந்தைகள் கறுப்பு உடைகளில் செல்லுவதை ஏற்க இயலவில்லை. வளர்ந்த பின்பு அவர்கள் தங்கள் தேர்வுகளை செய்யட்டுமே.

பாட்டாளிபுரம் பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள்

பாட்டாளிபுரம் பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள்

போதகர் வீட்டில் காலை உணவிற்கு  புட்டு வைத்திருந்தார்கள் கூடவே சொதியும். புட்டை அடிக்கடி எதிர்கோள்ள வேண்டி இருந்ததால் புட்டினை நண்பனாக்கிக்கொண்டேன். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இதில் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணமுடிகிறது. இட்லி புட்டு இடியாப்பம் போன்ற உணவுகள் வேக வைக்கப்படுபவை. அது சுட்டு சாப்பிடும் அல்லது கொதிக்கவைக்கப்படும் உணவுகளுக்கு அடுத்தபடியான  உணவு தயாரிக்கும் முறை. ஆவியில் வேக வைப்பது பிந்தைய கண்டுபிடுப்பு, ஆனால் உணவினை தனிச்சிறப்பான ஒன்றாக தயாரிக்கும் சூட்சுமம் நிறைந்தது. மோமோ என்று சொல்லப்படுகின்ற திபெத்திய உணவும் ஆவியில் வேகவைக்கப்படுவதுதான்.

பாட்டாளிபுரம் இலங்கை வரைபடத்தில் இல்லாத ஒரு பின் தங்கிய கிராமம். மூதூரிலிருந்து சுமார்  20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. போதகர் தனது இருசக்கர வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டு போனார். எனது கரத்தில் 15 கிலோ பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று இருந்தது. சமாளித்துக்கொண்டு போனோம். மிக அழகிய சாலையில் பயணித்தோம். பனைமரங்கள் சற்று அதிகமாக நின்ற ஒரு ஆற்றைத் தாண்டிச் நாங்கள் பயணிக்கையில் சாலை பிரிந்து மண் சாலை ஆனது. அதற்குப்பின்பு சேறும் சகதியுமான சாலை தான். எனக்கு பல வேளைகளில் வண்டியிலிருந்து இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  மிக விரிவான பாதை அது ஆனால் குண்டும் குழியுமாக இருந்தது.   நாங்கள் சென்றது யானைகள் வாழும் காடு என்று வேறு போதகர் பயமுறுத்தினார்.  ஒரு இடத்தில் இனிமேல் இருவராக வண்டியில் செல்வது ஆபத்து என்பது திட்டவட்டமாக தெரிந்தது.  நான் வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு ஆட்டோ அந்த இடத்தை கடந்து செல்லவே நான் அதை நிறுத்தி ஏறினேன். ஆட்டோவில் பெரிய பாத்திரத்தில் உணவு வைக்கப்பட்டிருந்தது.   சிறுவயதில் சத்துணவு திட்டத்தில் சாப்பிட்ட சாம்பாரின் வாசனை வந்தது.  இது பாட்டாளிபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்து பள்ளிகூடத்திற்கு சாப்பாடு ஏற்றி செல்லும் வண்டி என்று ஓட்டுனர் கூறினார்.  அந்த ஆட்டோ வந்ததால் தப்பித்தேன்.

பாட்டாளிபுரம் மிகவும் ஏழ்மையில் உழலும் ஒரு ஊர். பலர் கூலிவேலைகளுக்கும், பெண்கள் வீட்டு வேலைகளுக்கும் சென்று வயிற்றைக் கழுவுகிறார்கள். மிகைளம் வயதிலேயே திருமணம் நடைபெறுகிறது. சிலர் பிச்சையெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பள்ளிகூடமோ மருத்துவ வசதிகளோ சற்றும் இல்லாத ஒரு பகுதி. ஆனால் இலங்கையின் கடற்படை அந்த ஊரின் எல்லையில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தான், பள்ளிக்கூடம் சென்று திரும்பிய முதல் தலைமுறை ஆசிரியையை யாரோ ஒருவர் கழுத்துச் சங்கிலிக்காக கொலை செய்ததாக ஓட்டுனர் குறிப்பிட்டார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்ச்சி அது.   இலங்கையில் காட்டுப்பகுதிக்குள் இப்படி ஒரு ஊரை நான் எதிர்பார்க்கவில்லை.

பாட்டாளிபுரம் மெதடிஸ்ட் திருச்சபை

பாட்டாளிபுரம் மெதடிஸ்ட் திருச்சபை

அந்த ஊரின் மையமாக ஒரு மெதடிஸ்ட் திருச்சபை கட்டியெழுப்பப்பட்டிருந்தது.  பொதுவாக பெரும் கோபுரங்களின் மேல் எனக்கு பெரு விருப்பங்கள் இல்லாவிட்டாலும் பிந்தங்கிய கிராமங்களில் கட்டப்படும் இவ்விதமான கட்டிடங்கள் அங்கு வாழ்வோரின் நினைவில் மாபெரும் நம்பிக்கையை விதைக்கிறதை கண்டிருக்கிறேன். அவர்களை கவனிக்க, அவர்களின் வாழ்வில் பங்கெடுக்க திருச்சபை தனது அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனும் உறுதிமொழியின் வடிவம் அது. நான் எண்ணியது போல அங்கே குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றினை மெதடிஸ்ட் திருச்சபை நடத்திக்கொண்டிருந்தது. மேலும் அந்த கிராமத்திற்கான பல்வேறு வளர்சிப்பணிகளில் அந்த திருச்சபை முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வகையில் புதிதாக எழும்புகின்ற ஆலயங்கள் இலங்கை மெதடிஸ்ட் திருச்சபை உயிர்ப்புடன் செயலாற்றுவதை சான்றுகளுடன் முன்வைக்கின்றது.

பாட்டாளிபுரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜெயந்தி

பாட்டாளிபுரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜெயந்தி

போதகர் நாதன் என்னை பாட்டாளிபுரம் போதகரின் பொருப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அனைவரும் வந்து சேரும் வரை காத்திருந்தோம். சுமார் 35 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் முதன் வேலையாக வந்திருந்தவர்கள் உதவியுடன் நான் கொண்டு போன படங்களை அங்கே தொங்கவிட்டேன். போதகர் ஜெபித்து கூட்டத்தை துவங்கினார். என்னைக்குறித்து அறிமுகம் செய்தபின்பு, நான் அவர்களோடு பனைமரம் குறித்து உரையாடினேன். 13 வயது முதல் 40 வயது உடைய  பெண்கள் இதில் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய அந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது. மிகவும் கட்டுக்கோப்பாக அனைவரும் அமர்ந்திருந்தனர். இடையில் அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பாட்டாளிபுரத்தில் மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பினை பாட்டாளிபுரத்தின் அருகில் வசிக்கும் ஜெயந்தி எனும் இளம் பெண் ஒழுங்கு செய்திருந்தாள். சிறந்த நிர்வாக திறமை கொண்ட பெண்.

வரிசையாக கிட்டத்தட்ட 4 பொருட்களை செய்ய சொல்லிகொடுத்தேன். முதலில் ஓலைகளை வெட்டும் விதம், பின்பு இணைக்கும் சூட்சுமம், ஓலையை புக் மார்க்கில்  ஒட்டி செய்யும் காரியங்கள் யாவும் கற்றுக்கொடுத்தேன்.  வேகமாக கற்றுக்கொண்டார்கள் மிக அமைதியாக சொல்வதைக்கேட்டு அவர்கள் அதுபோல செய்ய தலைப்பட்டார்கள். இவ்விதம் பங்குபெறுவோரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தால் மேலதிக காரியங்கள் கற்றுக்கொடுக்க வசதியாக இருக்கும். ஒவ்வொருவரின் அருகில் சென்றும் தேவைகள் என்ன எனக் கேட்டு உதவி செய்தேன். குறிப்பாக சந்தேகங்கள் இருந்தால் பொறுமையாக விளக்கி கூறினேன். புக் மார்க்காக மெழுகு வர்த்தி செய்து பழகினார்கள்.

பாட்டாளிபுரம் பயிற்சியில் பங்குபெற்றவர்கள்

பாட்டாளிபுரம் பயிற்சியில் பங்குபெற்றவர்கள்

பாட்டளி புரத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதற்கென தனித்துவமான திட்டமிடல்கள் வேண்டும். திரிகோணமலை பிரதேசத்தில் 312000 பனை மரங்கள் இருக்கின்றன. பாட்டாளிபுரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனை மரங்கள் காணப்படுகின்றது. பாட்டாளிபுரத்தின் எல்லைகளில் யானைகள் வரா வண்ணம் பனை மரங்களை நடுவது ஒரு திட்டமாக செயல்படுத்தலாம்.  பனை அபிவிருத்தி சபை,  இலங்கை வனவியல் பாதுகாப்பு திணை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று ஆகியவை மக்களுடன் இணைந்து செயலாற்றுவது முக்கியம். மெலும் சமூக காடுகள் வளர்ப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் வண்ணமாக பனை மரங்களின் எண்ணிக்கையைப் பெருக்கலாம்.

பனை மரங்கள் யானைகளை எல்லை மீறாமல் பதுக்காப்பது மட்டுமல்ல காட்டு நெருப்பும் எல்லை மீறாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. ஆப்பிரிக்க காடுகளில் காட்டுத்தீயால் காடு முழுமையாக நாசமடையாதபடிக்கு பனைமரங்களை தடுப்புச்சுவராக அமைக்கிறார்கள். இவ்வகையில் இரண்டு விதமான பயன்கள் காட்டில் நிகழ்கின்றதையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான  மூலவளத்திற்கும்  ஒருசேர தீர்வு கிடைக்கும் இத்திட்டத்தை திருச்சபை பரிந்துரைக்கலாம். அதற்கென முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

அதுவரை ஓலைகளில் பொருட்கள் செய்ய பழகியவர்களுக்கு ஓலைகளை தருவித்துக்கொடுக்கும் முயற்சியில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று உதவலாம். ஏனென்றால் 10 கிலோ மீட்டர்  சுற்றளவில் வேறு தொழில்களுக்கான வாய்ப்புகள் இல்லை. வாகனங்கள் வருவதும் அரிது. ஒரு முறை ஊரைவிட்டு வெளியே செல்ல வெண்டுமென்றால் இலங்கைப்பணத்தில் 500 ரூபாய் வரை ஆட்டோவிற்கு செலவாகும்.  ஆகவே பனை ஓலை சார்ந்த கைத்தொழில்கள் செய்ய ஊக்கப்படுத்துவது சிறந்த வழிமுறையகும். இங்கு பெறப்படுகின்ற ஓலைப்பொருட்களை இலங்கையிலும் மற்றும் பிற இடங்களிலும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக முதல் வருடம் இலங்கை திருச்சபைகளில் இருந்து உதவிகளை பெற்று அவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வது என்ற முறையில் பரீட்சார்த்த முயற்சியைக் கையாளலாம். இவ்விதம் செய்வதற்கு திருச்சபைகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றதை அறிவோம். ஆகவே திருச்சபைகளை இதற்கென பழக்க வேண்டும். குருத்தோலை ஞாயிறை பனைத் தொழில் செய்வோரையும் பனை மரத்தையும் காக்கும் ஒரு நாளாக அனுசரிப்பது. அந்த நாளின் காணிக்கையை  அவர்களின் நல் வாழ்விற்காக செலவு செய்ய ஊக்கப்படுத்துவது மிகச்சிறந்த வழிமுறையாக அமையும்.

பாட்டாளிபுரம் சிறப்பு கவனம் எடுத்து பயிற்சியளித்தல்

பாட்டாளிபுரம் சிறப்பு கவனம் எடுத்து பயிற்சியளித்தல்

போதகர்கள் இறைவார்த்தைகளை  பகிரும்போது பனை சார்ந்த வசனங்களை சற்றே அழுத்தம் கொடுப்பது  கீழ்நிலையில் உள்ள மக்கள் சற்றே உயர வழிவகை செய்யும். கிறிஸ்தவத்திற்குள் காணப்படும் பல்வேறு மத கொள்கைகளை பேசி வீணாக மக்களை வெறுமனே அனுப்பிவிடுவதற்குப் பதில், சூழல் சார்ந்த இறைவார்த்தைகளைப் பகிர்வது அவசியமாக இருக்கிறது. இன்று தனக்கு பிறன் யார் என அறியாமல் கிறிஸ்தவர்களே வாழ்கிறார்கள். இளைப்பாறுதல் தரும் ஆண்டவரிடம் வருகையில் நம்மால் எத்தனை பேருக்கு ஆறுதல் அளிக்க முடிந்திருந்தும் அதை செய்யாமற்போனோம் என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.

“பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” என்பார். அதற்கு நேர்மையாளர்கள் “ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள். அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.” (மத்தேயு 25: 34 – 40 திருவிவிலியம்)

நேர்மையாளரிடம் இவைகளுடன் “நான் வேலையின்றி இருந்தேன் எனக்கு வேலை கொடுத்தீர்கள்” எனவும் அவர் கூற வாய்ப்புள்ளது.

கிறிஸ்தவம் இன்று பல்வேறு வகையான தொழிற் பயிற்சிகளை மக்களின் நல்வாழ்விற்காக செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது.  அவ்வகையில்,  இலங்கையில் பனை சார்ந்த பணிகளை செய்வது  பொருள் பொதிந்த  ஒன்றாக நான் காண்கிறேன். ஏனென்றால் பெரும்பாலான பனைகளிலிருந்து பயன் எடுக்கப்படாமல் இருக்கும் சூழலில் அதன் ஓலைகளை மட்டும் வெட்டி எடுப்பது இலங்கையில் உள்ள மட்டை தேவைகளை பூர்த்தி செய்யும், மேலதிக பனைத்தொழிலாலர்கள்  தொழிலில் ஈடுபடுவார்கள்,  பனையில் வளருகின்ற மரங்களையும் இம்முயற்சிகள்  கட்டுப்படுத்தும்.  ஆக, ஒருங்கிணைந்த பனை நிர்வாகம் குறித்த ஒரு முயற்சியாகவும், வனவியல் பாதுகாப்பு திட்டமாகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் இவைகள் பல்முனை திட்டமாக ஒழுங்குபடுத்தப்படும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

திருச்சபையின் பனைமர வேட்கை – 18

மார்ச் 21, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 18 

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மூதூர்

மூதூரில் போதகர் டெரன்ஸ் அவர்களுக்கு பணி இருந்ததால் அவரும் அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு போதகருடன் நானும் காரில் புறப்பட்டேன்.   மூதூர் செல்லும் பயணங்கள் இத்துணை எளிமையாக இருந்ததில்லை என்றும். இரண்டு பேருந்துகளைப் பிடித்தே செல்லமுடியும் என்றும் போதகர் அவர்கள் கூறினார்கள். இரு வேறு நிலங்களாக பார்க்கப்பட்டச் சூழல் அது.

மூதூர் என்னும் சொல்லுக்கு மூதாதை வாழ்ந்த ஊர் மிகப்பழமையான ஊர் என்ற பொருள் இருக்கலாம் என்று கூறுகின்றனர். இவ்வூரின் தொன்மை குறித்து சொல்லுவதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தொன்மையான திரிகோணமலையின் அருகில் இவ்வூர் அமைந்திருக்கிறது.  மேலும்  இவ்வூரின் அருகில் கடலும்  காடும் இருக்கின்றது. பூதங்கள் அமைத்தது என நம்பப்படும் மிகத் தொன்மையான கந்தளாய் நீர்தேக்கம் இதன் அருகில் தான் இருக்கிறது.  இஸ்லாமியர் இங்கு வந்து தங்கும் அளவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு ஊர்கள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது. இஸ்லாமிய வணிகர்கள் கி. பி. 7 ஆம் நுற்றாண்டு முதலே வியாபாரத்தின் பொருட்டு இலங்கை வந்ததாக தரவுகள் இருக்கின்றன. அவர்கள் இங்கே மணந்த பெண்களும் அவர்களின் வாரிசுகளுமே மூர் என்று சொல்லப்படுகின்ற இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள்.

இரண்டாவதாக மூதூர் என்ற சொல் முத்தூர் என்ற சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனும் கணிப்பும் உண்டு. பலருக்கு இன்றும் முத்து கிடைத்த கதைகள் மூதூரில் உலாவிவருவது ஆச்சரியமளிக்கவில்லை. அங்குள்ள கடல் மற்றும் நீர் ஆதாரங்கள் உள்ளூர் மக்களுக்கு மீன் பிடிக்க மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பிரமுகர் ஒருவர் கூறினார். முத்துக்குளிக்க அனுமதி இல்லை. வியாபார நோக்கத்தில் இஸ்லாமியர் இங்கே வருவதற்கு இங்கு விளைந்த முத்துக்களும் காரணமாக இருந்திருக்கலாம்.

மூதூர், தமிழ் இஸ்லாமியர், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி. இங்கே இருக்கும் மெதடிஸ்ட் ஆலய வளாகத்தில் தான் நான் இரு நாட்கள் தங்கப்போகிறேன். இம்முறை என்னை அழைத்துக்கொண்டுவந்த  போதகர் டெரன்ஸ் அவர்கள் தனது சர்கிளில் உள்ள போதகர்களுடன் அன்று இணைந்து ஒரு அமர்வை நடத்தினார். மேலும் எனது நிகழ்ச்சிகள் குறித்து அவர்களுக்கு அவர் விளக்கமளித்திருக்கவும் கூடும். அருட்பணி  ஜெகநாதன் விஜயாநந்தன் எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குரிய சாவியைக் கொடுத்துவிட்டு கடந்த முறை உங்களை பார்க்க இயலவில்லை என்று கூப்பிட்டார். தன்னை நாதன் என்றே அழைக்கும் படி கூறினார். மிக வசதியான அறையினை அந்த சிற்றூரில் நான் எதிர்பார்க்கவில்லை.

போதகர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில்  நான் மெல்ல ஊரைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டேன். சிறிய ஊர்.  ஒரு இந்து கோவில் மற்றும் ஒரு இஸ்லாமிய பெண்கள் பள்ளிகூடத்தைப் பார்த்தேன். ஊரில் இருந்த இஸ்லாமியரின் கடையில் சென்று கறுப்பு தேயிலை ஒன்றை வாங்கிக் குடித்தேன்.  ஊரின் ஒரு பகுதியை மட்டும் தான் என்னால் பார்க்க முடிந்தது ஆனால் அனேகம் கட்டுமானங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. இவ்வளவு வேகமாக ஒரே நேரத்தில் அனேக இடங்களில் எப்படி சாத்தியம் என நினைத்துக்கொண்டேன்.  பிற்பாடு தான் தெரிந்தது போரினால் பாதிப்படைந்தவர்களுக்கு வீடுகள் கட்ட அரசு உதவிக்கொண்டிருக்கிறது. அதற்கென சில அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். இழப்பிற்கு ஏற்றபடி முழு வீடோ அல்லது பாதி வீட்டின் தொகையோ கிடைக்கும். மக்கள் குடித்து வீணாக்காமல் பயன்படுத்துகிறார்களே என்பதே பெரும் ஆறுதலாக இருந்தது.

நான் நடந்து செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே ஒரு இஸ்லாமிய பெண்மணி சிறுவர்களுக்கான மிட்டாய்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். எனக்குள் இருந்த சிறுவன் விழித்துக்கொண்டான்.  அந்தக் கடையில் போய் மிட்டாய் வாங்கலாம் என்று போனேன். இலங்கை சிறுவர்களுக்கு மிகப்பிடித்தமான  கித்துல் இருந்தது. இரண்டை வாங்கி  சுவைத்தபடி திரும்பினேன்.

ஊருக்குள்ளும் பனைமரங்கள் இருந்தன ஆனால் ஆங்காங்கே அவைகள் நின்றன. கூட்டமாக பனை மரங்களை என்னால் காண இயலவில்லை. மூதூர் பல்வேறு மக்கள் இணைந்து வாழும் பகுதியாக இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் அங்கே பதற்றமான சூழல் இருந்திருக்கிறது.  அப்படி பிரச்சனை எழுகின்ற நேரத்திலெல்லாம் மெதடிஸ்ட் ஆலய வளாகம் தான் அனைவரும் வந்து தங்கும் புகலிடமாக செயல்பட்டிருக்கிறது. திருச்சபை வளாகத்தினுள் மக்கள் பத்திரமாக இருந்தனர் என்றும், இஸ்லாமியர் இந்துக்கள் அனைவரும் தஞ்சம் புக வந்திருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்கவும் அந்த திருச்சபையின் பங்களிப்பை சிலாகித்துக் கொண்டேன். திருச்சபைகள் பல்வேறு வகைகளில் செயல்படும் சாத்தியமுள்ள ஒரு இடம். ஆலயங்களை வாரத்திற்கு ஒருநாள் பயன்படுத்துவது என்பது திருச்சபையின் வளங்களை வீணடிக்கும் செயல் என்றே கருதுகிறேன்.

மதியம் எனக்கு என்ன உணவு வேண்டும் என நாதன் என்னைக் கேட்டார். நான் வீட்டிலேயே அவர்கள் உணவை ஒழுங்குசெய்தால் போதும் என்று சொன்னேன். இலங்கையில் உள்ள கடைகளிலிருந்து வாங்கும் கீரைகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் ரம்பா இலையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறார்களோ  என தோன்றுகின்றது. போதகர் நாதன் அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு தான் திருமணமாகியிருந்தது. அவரது மனைவி, சூசனா வேல்டு விஷணில் பணியாற்றுகிறார். போதகரின் தாயாரும் அவர்களுடனிருந்தார். மதியம் மட்டும் எனக்கான உணவை வெளியிலிருந்து வாங்குவதாகவும், மீதி நாட்களில் எனக்கு அவர் தனது வீட்டிலேயே உணவை ஒழுங்குசெய்வதாகவும் கூறினர்.

உணவிற்குப் பின் கமல் என்று ஒரு இளைஞர் வந்தார். என்ன என்ன உதவிகள் தேவை என்றாலும் தான் உடனிருந்து உதவுவேன் என்றார். அவரது ஒரு கை பிறவியிலேயே சற்று அளவு குறைந்து காணப்படும். ஆனால் நான் பார்த்த இளைஞர்களில் அவர் முழுமையானவரும் கூட. தந்து குறை வெளிப்படாவண்ணம் நகைச்சுவையால் அதை கடந்துபோவதும், வேலைகளை இருகைகளும் இருப்பவர் செய்யும் லாவகத்துடனும் அவர் செய்வது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.  திருச்சபையின் அனைத்து தேவைகளுக்காகவும் ஓடோடி வரும் பண்பு அவரிடமிருந்தது. திருச்சபை அவரது உள்ளத்தில் மிக முக்கிய இடம் பிடித்திருந்தது. இதற்கு முன்பு மூதூரில் பணியாற்றிய போதகருக்கு பேருதவியாக இருந்தவர் கமல். புதிதாக பொறுப்பேறிருக்கும் நாதன் அவர்களுக்கும் உதவி செய்யும் படி தனது வேலை முடிந்த பின்பு வந்திருக்கிறார்.

கமல் அங்குள்ள கோவில்பிள்ளையை (ஆலய உதவியாளர் – செxடொன்) எனக்கு அறிமுகப்படுத்தினார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க மனிதர். அவரும் உற்சாகம் கரைபுரண்டோடும் மனிதராகவே காணப்பட்டார். கமல் அவரைக்குறித்து கூறுகையில், இவர் தான் எங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் என்றார். அவரது குடும்பத்தினர் ஊரிலேயே இருந்தாலும் அவர் ஆலயத்தின் பின்னாலுள்ள ஒரு அறையில் தான் தங்கியிருந்தார். உணவு வேளையில் மட்டும் வீட்டிற்கு செல்லுவதும், தேவையிருந்தால் தானே சமைக்கவும் செய்தார். அவரது அன்றாட செயல்படுகளுள் ஒன்று தினம் தோரும் மாலை 6 மணிக்கு கோவில் மணியை அடிப்பது. அது எப்படி உருவான  பழக்கம் எனத் தெரியவில்லை காலம் காலமாக அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

எங்களுக்கு அன்று மதியம் வேலை இருந்தது. கடைத்தெருவிற்குச் சென்று நாங்கள் தான் பொருட்கள் வாங்கவேண்டும். என்ன என்ன பொருட்கள் வாங்கவெண்டும் என்று அடையாளம் காட்டினால் அது பெருதவியாக இருக்கும் என்றார். கமல் தனது சைக்கிளிலும் நாங்கள் இருசக்கர வாகனத்திலுமாக சென்றோம். இன்று வியாழன், மறுநாள் எங்களுக்கு பாட்டாளிபுரம் என்ற இடத்தில் 40 பேருக்கு பயிற்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  இன்றே மாலைக்குள் நாங்கள் பொருட்களை வாங்கவில்லையென்று சொன்னால் மறுநாளில் வாங்க இயலாது. அனைத்து கடைகளும் இஸ்லாமியருக்குச் சொந்தம். வெள்ளி விடுமுறை. ஆகவே உடனடியாக அனைத்தையும் வாங்கும்படி புறப்பட்டது நல்லதாக போயிற்று.  ஒரு கடையில் இருக்கும் பொருள் மற்றொரு கடையில் இல்லை. பொருட்களை கடை கடையாக ஏறி இறங்கி சேகரித்தோம். எங்களுக்கு கண்ணாடி வெட்டிதருவதற்கு ஒரே ஒரு கடைதான் இருந்தது. விலையை குறைத்துப் பேசியதால், முறித்த   கண்ணாடிகளின் ஓரத்தை நாங்களே சீர் செய்ய வேண்டி இருந்தது. சுமார் ஒரு கி மீ. தூரம் அளவேயுள்ள அந்த இடத்தில்  போய் பொருட்களை வாங்கி வர கிட்டத்தட்ட  இரண்டு மணி நேரம் ஆனது.

நாங்கள் கண்ணாடி வாங்கிய இடத்திற்கு எதிரில் ஒரு பள்ளிவாசல் இருந்தது, அதன் முன்னால் பேரீச்சை மரங்களை நின்றதைப் பார்த்தேன். மட்டக்களப்பிலுள்ள காத்தான்குடியிலும் இதுபோலவே பேரீச்சைகள் நிற்பதை பார்த்தது நினைவிற்கு வந்தது. இலங்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்கான மரங்களை தெரிவு செய்து வளர்க்கிறார்கள். மரங்கள் மக்களின் அடையாளமாக இருப்பது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது மக்கள் தாங்கள் இயற்கையை விட்டு விலகவில்லை என்பதற்கான அடையாளம்.

காலையில் நான் நடக்கையில் ஒரு பிரதியெடுக்கும் கடையைப் பார்த்தேன். அதை நினைவில் கொண்டு சாயங்காலம் அந்த கடை நோக்கிச் சென்றேன்.  ஒரு இஸ்லாமிய வாலிபன் அந்த கடையை நடத்திக்கொண்டிருந்தான். நான் இந்தியன் என்றவுடன் அவனுக்கு தமிழகத்திலுள்ள உறவுகளை குறித்த எண்ணங்கள் வந்துவிட்டது. என்னை விடவே இல்லை, பேசிக்கொண்டே இருந்தான். நான் அவனிடம் மறுநாள் வருகிறேன் என்று கூறி விடை பெற்றேன். எனது நடை முடிந்து வருகையில் தான் திருமதி நாதன் அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். மணி ஏழு இருக்கும்.

கோவில்பிள்ளை மற்றும் போதகர் நாதன் குடும்பத்தாருடன், மூதூரில்

கோவில்பிள்ளை மற்றும் போதகர் நாதன் குடும்பத்தாருடன், மூதூரில்

நாதன் அவர்களின்  தாயார் எனக்கு சோறும் அதனுடன் இறால் குழம்பும் வைத்துக்கொடுத்தார்கள். இலங்கைக்கே உரிய சுவை அதில் இருந்தது. சுமார் எட்டுமணிக்கெல்லாம் அறைக்கு வந்துவிட்டேன். மறுநாள் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என எடுத்து அடுக்கிவைத்துக்கொண்டிருந்தேன்.   அப்போது மீண்டும் கமல் வந்தார். அவரது மொபைலை வாங்கி ஐ. எம். ஓவில் ஜாஸ்மினைக் கூப்பிட்டேன். இலங்கை வந்தபின் முதன் முறையாக இருவரும் பேசிக்கொண்டோம். குழந்தைகள் முண்டியடித்துக்கொண்டு பேசினார்கள். கடவுள் எனக்குச் செய்த அனைத்து நன்மைகளையும் எண்ணி அவருக்கு நன்றி கூறி இரவு மன்றாட்டை ஏறெடுத்தபின்பு தூங்கச் சென்றேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

திருச்சபையின் பனைமர வேட்கை – 17

மார்ச் 20, 2017

திருச்சபையின் பனைமர வேட்கை – 17

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பனை வளம்

மட்டக்களப்பிலிருந்து புறப்படுமுன், எனது பதிவுகளை இலங்கையில்  எழுதப்பட்ட பனை சார்ந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு முன்செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். பனைமரசாலை எழுதி முடித்த பின்பு சென்னையிலிருந்து சிவகுமார் என்னும் வாசகர் என்னைத் தொடர்புகொண்டு உங்களிடம் இலங்கையிலிருந்து பனை சார்ந்த பதிவுகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்றேன். டிசம்பர் 2016 துவக்கத்தில் அவர் எனக்கு அந்த புத்தகத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். பனை வளம் என பெயரிடப்பட்ட அந்த புத்தகம் 1977 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. மில்க்வைற் சவர்கார தொழிலகத்தின்  பொன்விழா ஆண்டினை (1927 – 1977) கருதியும், கலாநிதி ஆனந்த குமாரசுவாமி அவர்களின் நூற்றாண்டு நிறைவையும் ஒட்டி இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கென மில்க்வைற் தொழிலதிபர் வேண்டிய அனைத்து விதமான புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் சேகரித்துக்கொடுத்ததோடல்லாமல், இன்னும் வேண்டிய சந்திப்புகளையும் இன்நூலின் ஆசிரியருக்கு ஒழுங்கு செய்து கொடுத்திருப்பது பனை வளத்தின் மேல் அவர் கொண்டுள்ள அளவிடமுடியா பற்றினை எடுத்துக்காட்டுவதாகும்.

அறுபதுகளின் பிற்பகுதியில் இந்தியாவில் பனை சார்ந்த பல முக்கிய தாவல்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இப்புத்தகத்தில் நாம் ஒரு கோட்டுச்சித்திரமாக காணமுடிகிறது. இலங்கையில் எவைகளை இன்று முன்னிறுத்தி பனை சார்ந்த நிறுவனங்கள் உயர்ந்து நிற்கிறதோ அவைகளுக்கு முன்னோடியாக தமிழகத்தில் நடைபெற்ற பாய்ச்சல்களை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதற்கு உதவி செய்த கூ. சம்பத்தம் அவர்களை மில்க்வைற் தொழிலதிபருக்கு அடுத்த இடத்தில் வைத்து தனது முன்னுரையில் நன்றி கூறுகிறார். “இதற்கு அருந்துணையாக இருந்த திரு கே. சம்பந்தம்  அவர்கள் எழுதிய “பனையும் பயனும்” என்னும் நூலும், அவர் “பனைச் செல்வம்” என்னும் வெலியீட்டில் எழுதிய கட்டுரைகளும், அவரும் அவர் நண்பர்களும் மாதவரத்தில் எம்மை உபசரித்துக் கூறிய விளக்கங்களும் பெரிதும் உதவியாயின”  மேலும் அவர் குறிப்பிடுகின்ற பல முக்கிய பெயர்கள் இன்று நினைவுகூறப்படுவதில்லை என்பது, நாம் இழந்தவைகளின் சாட்சியாக குலரத்தினம் அவர்கள் நூலில் தொக்கி நிற்கின்றது.

ஆனந்தக்குமாரசுவாமி அவரது மனைவியுடன்

ஆனந்தக்குமாரசுவாமி அவரது மனைவியுடன்

காலாநிதி ஆனந்த குமாரசுவாமி (Ananda Kentish Coomaraswamy) என்னும் பெயரை இந்த நூலின் வாயிலாக தான் நான் முதன் முறையாக அறிகிறேன்.  இந்திய, இலங்கை மற்றும் இந்தோனேஷிய  ஓவியங்களின் கலை வடிவங்களின் ஒன்றுமையை ஆய்ந்து அறிந்து அவைகளை மேற்குலகில் கொண்டு சென்ற முதன்மையாளர். மனோ தத்துவம், புவியியல், வரலாறு, சமயம் போன்ற தளங்களில் சலிப்பிலாமல் இயங்கியவர். அவ்வகையில் அவர் முன்னோடி தமிழரும் கூட. அவரைக்குறித்து புத்தகத்தின் சாற்று பகுதியில் இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது.

“உலகப் புகழ்பெற்ற ஆனத்தக்குமாரசுவாமி அவர்கள், கீழைத்தேசக் கலைகளில் பேரார்வம் கொண்டு, அவற்றை ஆராய்ந்தபோது பனை மரத்தில் தன் மனதைப் பறிகொடுத்தார். பனையைப் பயன்படுத்துவதற்குக் குடிசைத் தொழில்களே மிகச் சிறந்தன எனக் கருதினார். பம்னம் பொருள்களை நாம் வெலையற்றிருக்கும்போது விளையாட்டாக செய்து பெருக்கலாம் என்றார்.”

“எங்கள் கலையும் பண்பாடும் வளர்வதற்கும் பலருக்கு வேலைவாய்ப்பு நல்குவதற்கும் குடிசைத்தொழில் சிறந்தது.  குடிசைத்தொழிலுக்குப் பனையைப்போல் அதிக மூலப்பொருளுபகரிக்கும் இயற்கைவளம் இல்லை எனலாம். கைவினையும் பழக்கவழக்கங்களும் நல்லமுறையில் அமைகின்றன. உள்ளத்தில் தோன்றும் கலையழகு கையாற் செய்யும் பொருள்களிடத்து உருப்பெற்று மலர்வதை நாம் கண்டு மகிழலாம். கைத்தொழிலால் நமது பாரம்பரியத்தை நாம் காப்பாற்றிக்கொள்ளலாம். நமது சொந்த முறைகளை உபயோகித்தலே   அபிமானமும் விவேகமும் உள்ள செயலாகும்.”

இன்நூலில் அவர் மட்டக்களப்பின் பனைத்தொழில் குறித்து  கூறுவது பொய்யல்ல என்பதை நேரில் கண்டதால் சொல்லுகிறேன்.

“கிழக்கு மாகாணத்தின் புகழ்பெற்ற மாவட்டமாயுள்ள மட்டக்களப்பிலே ஏறக்குறைய 250 ஏக்கர் நிலத்தில் பனை வளர்கிறது. அவற்றை நல்ல முறையில் அங்குள்ளவர் பயன் செய்வதாக தெரியவில்லை அவர்களைப் பனைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு மில்க்வைற் தொழிலதிபர் சிவானந்த வித்தியாலய மண்டபத்தில் பனம் பொருட்காட்சி வைத்துப் பிரச்சாரஞ் செய்துள்ளார்”

பனை சார்ந்த கணக்கெடுப்புகள் எதுவும் போர் சூழலில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனது துணிபு. என்றாலும் உத்தேச கணக்கெடுப்புகளை பல நூல்களில் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.   யாழ்பாணம் கிளிநொச்சி  பகுதிகளில் போரினால் மரங்கள் வெகுவாக குறைந்திருக்கும் என எண்ணப்படுகிறது. மட்டக்களப்பில் தற்போது 200000 பனைமரங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் 1984 ஆம் ஆண்டு கோவூர் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றூம் வேளான் அமைப்பின் வாயிலாக வெளியிட்ட ” The palmyra palm: potential and Perspectives” (FAOUN) என்ற புத்தகத்தில், மட்டக்களப்பில் வெறும் 5000 பனை மரங்கள் மட்டுமே இருந்ததாக பதிவு செய்கிறார்.  யாழ்பாணத்தில் 3500000 பனைமரங்கள் இருப்பதாக சமீபத்திய பதிவுகள் கூறுகின்றது. 1977ல் எழுதப்பட்ட பனை வளம் யாழ்பாணத்தில் மட்டும் 7700000 பனைமரங்கள் இருந்ததாக குறிப்பிடுவது நம்மை அயற்சிக்கு உள்ளாக்குகிறது. இன்றைய மதிப்பின்படி மொத்தம் இலங்கையில்  1.1 கோடி பனை மரங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்களின்படி நாம் அறிகிறோம். 1984ல் கிட்டத்தட்ட  1.06 கோடி பனைமரங்கள் இருப்பதாக கோவூர் தரவுகள் அளிக்கின்றார். இரண்டு புள்ளிவிபரங்களும் மொத்த கணக்கில் பெரிய மாறுதல் இல்லாமல் இருப்பது ஏன் என்பன ஆராயத்தக்கவை.

பனை சார்ந்த புள்ளிவிபரங்களை அரசு புள்ளியியல் அதிகாரிகள்தான் எடுத்து கொடுக்க இயலும். அவர்கள் தான் புள்ளியியல் சார்ந்த அனைத்துவித கருவிகளையும் அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்கள். அரசோ அல்லது பனை சார் துறைகளோ புள்ளிவிபரங்களை சேகரிக்கத் தேவையான பொருளுதவியைச் செய்தால் கணக்கெடுப்புகள் நடத்தப்படும். இவ்விதம் கணக்கெடுப்புகள் இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ கடந்த 30 ஆண்டுகளில் நடைபெறவில்லை என்பதே வேதனையான உண்மை.

இந்தியாவில் 5 கோடி பனைமரங்கள் இருந்ததாக தேஷ்முக் கூறும் கூற்றை குலரத்தினம் அவர்கள் பதிவுசெய்கிறார்கள். ஆனால் இன்று பனை குறித்து எழுதும் பலரும் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 50 கோடி பனைமரங்கள் இருந்தன என்பதாக கூறி இன்று வெறும் 5 கோடி தான் எஞ்சியுள்ளது என தமது விருப்பப்படி புள்ளிவிபரங்களைக் கூறுகின்றனர். என்னைப்பொறுத்த அளவில் இன்றைய முக்கிய பிரச்சனையாக நாம் கருதவேண்டியது புள்ளிவிபரங்கள் குறித்த ஆவணங்களைத்தான். அரசு 4 வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது 10 வருடங்களுக்கு ஒரு முறையோ பனை சார்ந்த கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். அது செய்யாமல் அவர்கள் வெளியிடும் புள்ளிவிபரங்களை நாம் ஒருபோதும் ஏற்கலாகாது.   தமிழகத்திலோ அல்லது இந்தியா முழுவதுமோ பனை மரங்களின் கனக்கெடுப்புகள் இறுதியாக எப்போது நடத்தப்பட்டது? எவ்விதமான முறையில் அவர்கள் கணக்கெடுப்புகள் நிகழ்த்துகிறார்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி யாரேனும் முயற்சித்தால் பல உண்மைகள் வெளிவரும்.

பனை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் ஏற்றுமதி மூலமாக பெரும் பணம் வந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் பனை வளர்ச்சிக்காக அல்லது பனை தொழிலளர் நல்வாழ்விற்காக செலவு செய்யப்பட்டவைகளை ஆராய்வோமானால் மிக குறைவாகவே காணப்படும். குலரத்தினம் தனது நூலில், இந்தியா 2 கோடி ரூபாய்க்கு பனந்தும்பு  ஏற்றுமதி செய்ததாக ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகள் ஏதும் நிதி ஒதுக்காமல் இருக்கிறது. குலரத்தினம் பார்த்த தமிழகத்திற்கு அவர் இன்று வருவாரேயானால் கண்ணீர் விடுவார் என்பது உறுதி. அவர் குறிப்பிடும் இடங்கள் பலவும் மண்மேடாகிப் போனவை.

குளச்சல்  தும்பு தொழிற்சாலையின் சிதிலமடைந்த தோற்றம்

குளச்சல் தும்பு தொழிற்சாலையின் சிதிலமடைந்த தோற்றம்

தும்பு தொழிற்சாலை 1891களில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் வருமானம் அதிகமாகவே பனைமரங்கள் காணாமல் போகுமளவிற்கு மரங்கள் மொட்டையடிக்கப்பட்டன. ஆகவே இலங்கையில் பனந்தும்பு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆஸ்பின்வால் கம்பெனி குமரி மாவட்ட குளச்சலிலிருந்து தனது ஏற்றுமதியை 1911 முதல் தொடர்ந்தது. மிக பெரிய நிறுவனமாக இருந்த ஆஸ்பின்வால் எப்போது திவாலானது எப்படி பனந்தும்பு பணிகள் குமரி மாவட்டதில் குறைவுபட்டன போன்றவைகள் பேசப்படாத மர்ம முடிச்சுகள்.

எஞ்சிய தடயம்

எஞ்சிய தடயம்

நானும் எனது நண்பன் ரங்கிஷுமாக அந்த நிறுவனம் இயங்கிய பகுதியைப் பார்க்க சென்றோம். புல் முளைத்து, மரமாகி காடுவளர்ந்து இருந்தது அவ்விடம். ஆஸ்பின்வால் கம்பெனியிடமிருந்து அந்த நிறுவனத்தை வாங்கி, அரசு ஏற்று நடத்திய பிறகே அந்த நிறுவனம் நலிவடைய துவங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதனை மெய்பிக்கும் வண்ணமாக  அங்கே ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். தேன் பாட்டிலில் ஒட்டப்படும் ஒரு ஸ்டிக்கரின் மாதிரியை அவர்கள் புகைப்படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.  தமிழ் நாடு மாநில பனைவெல்ல மற்றும் தும்பு விற்பனை என எழுதப்பட்டிருந்தது( The Tamil Nadu State Palmgur – Fibre Marketing). கிட்டத்தட்ட 80களின் இறுதியிலோ அல்லது 90களின் துவக்கத்திலோ இன்நிறுவனத்தின் மூடுவிழா நடந்திருக்கலாம் என நான் யூகிக்கின்றேன்.

குளச்சல்  தும்பு தொழிற்சாலையின் இராட்சத இயந்திரங்கள் புதர்மண்டி கிடக்கிறது

குளச்சல் தும்பு தொழிற்சாலையின் இராட்சத இயந்திரங்கள் புதர்மண்டி கிடக்கிறது

அந்த பேய் மாளிகையில் கிட்டத்தட்ட  இரண்டு மணி நேரம் நானும் அவனும் அங்கே இருந்தோம். அந்த மாபெரும் தொழிற்சாலையின் அவலத்தை நாங்கள் கண்ணீருடன் பதிவு செய்துகொண்டோம். அத்துணை பிரம்மண்டமான ஒரு பனை சார்ந்த தொழிற்சலையை அதுவரை நான் கண்டதில்லை. அது மிக விலை உயர்ந்த மரங்களால் அமைக்கப்பட்டிருந்ததால் இன்னும் தாக்குப்பிடித்துக்கொண்டு நிற்கிறது. பனை களிக்கோல்கள் மிகவும் உறுதியாக இன்றும் இருக்கின்றன.

குளச்சல்  தும்பு தொழிற்சாலையின் தற்போதைய தோற்றம்

குளச்சல் தும்பு தொழிற்சாலையின் தற்போதைய தோற்றம்

குலரத்தினம் அவர்களின் புத்தகம் ஒருவகையில் என்னை பல்வேறு தரவுகளை முன்னும் பின்னும் இணைத்து பார்க்கத் தூண்டுகின்ற ஒரு புத்தகமாக அமைந்தது.  பனை மரம் ஏன் அழிந்தது எனும் கேள்விக்குப்பின்னால் வெறும் செங்கல் சூளைகள் என நாம் சொன்னதையே திருப்பி சொல்லிக்கொண்டிருக்க இயலாது. நம்மைப் பார்த்து வளர்ந்த இலங்கை, நம்மில் 10ல் ஒரு சதவிகிதம் பனை மரங்களை மட்டுமே கொண்ட இலங்கை இன்று நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்பதை பதிவு செய்தாக வேண்டியுள்ளது.

இவ்வகையிலேயே மட்டக்களப்பின் பனைமரங்களை நாம் அணுக வேண்டும். ஒருவேளை மில்க்வைற் அவர்கள் பனைமரங்களை மட்டக்களப்பில் வைக்க பெருத்க்ட முயற்சிகள் எடுத்திருக்கலாம் இரண்டாம் தலைமுறை பனைகளும் எழுந்து வந்திருக்கலாம். ஆனால் பயன் படுத்துவார் இல்லையென்றால் என்ன பயன். ஆகவே, திருச்சபை இவ்விடத்தில் இடைபட வேண்டும். ஓலைகளை மட்டும் எடுக்கும்படி ஒரு அமைப்பை உருவாக்குவது, மரங்களில் தொற்றி ஏறும் மரங்களை தடுக்க உதவும், மேலும் எண்ணிறந்த  மக்கள் இப்பனைகளால் பயனடைவார்கள். போர்களின் பின் பொருளாதாரம் மீண்டு வருகின்ற சூழ்நிலையில் திருச்சபை பனைத்தொழிலாளர்களின் வாழ்வில் இடைபடுவது முக்கியம் என்றே கருதுகிறேன். அவர்கள் இல்லையேல் பனையும் இல்லை பனை சார் பிற தொழில்களும் இல்லை.

(மேலதிக படங்கள் விரைவில் வலையேற்றம் செய்யப்படும்)

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com


%d bloggers like this: