திருச்சபையின் பனைமர வேட்கை – 1


(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பனைஓலை சாம்பல் புதன்

ஒரு மெதடிஸ்ட் போதகராக நான் பனை மரங்களைத் தேடிச் செல்லுவது பாரம்பரிய திருச்சபையினருக்கும் ஏன் நவீன கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பெரும் அறைகூவலாக காணப்படுகிறது. பலர் தங்கள் திருமறை வாசிப்பிலிருந்து மேய்ப்பன் – மந்தை எனும் ஒரு உன்னதமாக்கப்பட்ட சித்திரத்தை எடுத்தாள்கையில், பனை சார்ந்து எவ்வித இறையியலை ஒருவர் முன்னெடுக்கவியலும் எனும் கேள்விகளோடு என்னை உற்றுநோக்குவதை நான் அறிவேன். திருச்சபையால் இன்றுவரை கவனத்துக்குட்படுத்தாத ஒரு புது தளத்தை கட்டிஎழுப்புவது சாமானியமான காரியம் இல்லை. அவ்விதமான ஒரு முயற்சியில் திறந்த மனதுடன் கிறிஸ்தவர்கள் இணைவது இன்றைய தேவையாக இருக்கிறது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் கடந்த 2017 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 ஆம் தேதிவரை “திருச்சபையின் பனைமர வேட்கை” என்ற தலைப்பில் என்னை அவர்களோடு இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருந்தது. திருச்சபை முன்னெடுத்த பனை சார்ந்த முதல் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இதுவே. ஆகவே இந்திய திருச்சபைகளின் சார்பாக போதகராக  நானும் இலங்கை திருச்சபைகளும் இணைந்து ஒரு பன்னாட்டு திருச்சபைகளின் ஒருமித்த பனைமர வேட்கைக்கு இந்த இணைவு ஒரு முக்கிய துவக்கமாக அமைகிறது.

திருச்சபையின்  பனைமர வேட்கை எனும்போது அது திருச்சபை அல்லாதவர்களை விலக்கி விடுகிறது போல் தோன்றினாலும், அவ்வாறாக நானோ இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமோ எண்ணி இவைகளை முன்னெடுக்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். திருச்சபை இன்றுவரை பனை சார்ந்த ஒரு விரிவான பார்வையை முன்வைக்காதபடியினாலும், அதற்கான ஒரு தருணம் அமைந்திருக்கின்றபடியினாலும் இந்த முயற்சி பரீட்சார்த்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்திற்கோ அல்லது எனக்கோ இவ்விதமாக விரிவான தளத்தில் பனை மரத்தினை வைத்தும் நோக்கும் அனுபவம் புதிது. ஆகையினாலே மிகவும் கவனமாக மிக எளிய முறையில் இம்முயற்சியை மன்றாட்டுடன் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

மறக்கப்பட்ட வாசனை

மறக்கப்பட்ட வாசனை

முதலில் இப்பயண நிகழ்வினை பனைமரச் சாலைபோல் தொடர்ந்து எழுத நான் எண்ணினாலும், இலங்கைப் பயணத்திற்குப் பின்பு எனது மனம் அடைந்த அலைக்களிப்பினால் என்னால் இப்பயண கட்டுரையை  எழுத இயலுமா என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது. நான் கண்ட அறிந்துகொண்ட அனைத்தையும் எழுதுவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்ததால் அவைகளை என் மனதில் வைத்து மன்றாடியபடியிருந்தேன்.  மேலும் கடந்த வருடம் தான் நான் பனை மரச் சாலையை எழுதியிருந்தபடியாலும், அதில் கூறப்பட்டவைகளின் சாயல் பெருமளவில் இதில் பிரதிபலிக்கும் என்பதாலும் மீண்டும் இவ்விதம் ஒரு கட்டுரைகளின் தொடர் தேவையா என்றும் என் மனம் அலை பாய்ந்தது.

ஆனால், சாம்பல் புதனாகிய இன்று எனது காலை மன்றாட்டு வேளையில் இக்கட்டுரைத் தொடரை நான் துவக்க வேண்டும் என நான் உந்தப்பட்டேன். லெந்து காலம் என்பது கிறிஸ்தவர்களுக்கான தவக்காலம். இக்காலத்தில் பனைமரம் சார்ந்த ஒரு இறையியல் பார்வையை தியானிப்பது அவற்றை ஒரு வடிவாக திரட்டுவது எனக்கு தேவையானதாகப் பட்டது. ஆகவே வருகின்ற லெந்து நாட்களை நான் கருத்துடன் பயன்படுத்த கடவுள் அருளிய ஒரு வாய்ப்பாக  கருதுகிறேன்.

மேலும் லெந்து நாட்களின் ஆரம்பமாகிய இந்த நாளை கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் விதம் எனது பயணத்தை மிக சிறந்த முறையில்  நான் முன்வைப்பதற்கு ஏற்ற நாள் ஆகும். ஒவ்வொரு திருச்சபையும் கடந்த வருடம் குருத்தோலை ஞாயிறு அன்று எடுத்து சென்ற குருத்தோலைகளை சாம்பற் புதன் அன்று சேகரித்து அதனை எரித்து சாம்பலாக்குவார்கள். இது சாம்பலிலிருந்து துளிர்க்கும் ஒரு புதிய ஆன்மீகத்தை நினைவுறுத்துகிறது. ஒன்றுமில்லாமை என எஞ்சியதிலிருந்து புத்தொளியோடு துளிர்க்கும் ஒரு ஆன்மீகத்தை அது நினைவுறுத்துகிறது. ஆகவே இந்த  நாளில் இழந்துபோன பனை சார்ந்த வாழ்வை திருச்சபையின் ஆன்மீகத்தோடு இணைத்து பொருள்கொள்ளுவது அர்த்தம் பொதிந்ததாக உணருகிறேன்.

குருத்தோலை ஞாயிறில் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்ட அல்லது ஆலய வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குருத்தோலைகள் பெரும்பாலும் சிலுவை வடிவாக பின்னப்பட்டிருக்கும் அல்லது எளிமையாக முடையப்பட்டிருக்கும். குருத்து ஓலை என்பதே மிக மென்மையான ஒன்றுதான்  ஆனால் அது பல வருடங்கள் உறுதியோடு இருக்கும் தன்மைகொண்டது. ஒரு வருடம் ஓடியபின்பு இந்த ஓலை காய்ந்து தீ பற்றிகொள்ளும்  தன்மையுடன் இருக்கும். சிலுவை வடிவில் இருக்கும் இந்த ஓலைகளை எரித்து நெற்றியில் சிலுவை அடையாளம் இடுவது வழமையானது.

திருமறை சாராத இந்த பாரம்பரியம் தேவையா என பல்வேறு கேள்விகள் மெதடிஸ்ட்  திருச்சபையிலும் எழுப்பப்பட்டன. மெதடிஸ்ட் திருச்சபையினை ஆரம்பித்த ஜாண் வெஸ்லி அவர்கள் உருவாக்கிய வழிபாட்டு முறைமையில் லெந்து காலத்தை இணைக்காவிடினும் , அவர் தான் சார்ந்திருந்த இங்கிலாந்து திருச்சபை கைக்கொண்ட திருமறை பகுதிகளை தக்க வைத்துக்கொண்டார். இதற்கு காரணம் மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் இயேசு கூறுகின்ற காரியங்களை அவர் கருத்தில் கொண்டிருக்கிறார் என்பதாக நாம் யூகிக்க இடம் உண்டு.

“மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.  நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 6: 16 – 18, திருவிவிலியம்)

இங்கே மெதடிஸ்ட் திருச்சபை சாம்பல் புதன் அன்று சாம்பலை பயன்படுத்துவதை ஒரு விருப்பத் தேர்வாக வைத்திருக்கிறதே அன்றி  அதனை கண்டிப்பான ஒன்றாக திணிக்கவில்லை என்பதையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் அது தனது திருச்சபையினர் கடந்த நாட்களில் சாம்பல் பூசிக்கொள்ளும் தன்மையினை தவிர்த்ததை அறிந்திருப்பதனால், சாம்பலின் பயன்பாட்டை அர்த்தம் பொதிந்ததாக பயன்படுத்துவதை வரவேற்கிறது. இன்று மெதடிஸ்ட் திருச்சபைக்குள் மீண்டும் சாம்பல் பூசிக்கொள்ளுகின்ற தன்மை மீண்டெழுவதற்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ளவேண்டும். அவைகள்  திருச்சபையின் பனைமர வேட்கைக்கு மேலும் பொருள்சேர்ப்பதாக அமைகிறதை நாம் காணலாம்.

பொதுவாக சாம்பல் பூசிக்கொள்ளும் தன்மை கத்தோலிக்க மரபில் இருப்பதால் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் அவைகளை கத்தோலிக்கரின் ஆசரிப்பு என விலக்கிவிடுவது நிதர்சனம். ஆகவே திருச்சபைகளுக்குள் உள்ள ஒற்றுமையினை பறைசாற்ற சாம்பல் பூசிக்கொள்ளுவது ஒரு அருமையான முன்னுதாரணம் என மெதடிஸ்ட் திருச்சபை கருதுகிறது.

இரண்டாவதாக மனந்திரும்புதலின்  அடையாளமாக  கிறிஸ்தவ மற்றும் யூத பாரம்பரியத்தில் சாம்பல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வித எண்ணங்கொண்டவர்களில் பலரும் இயேசுவின் கூற்றை நினைவு கூர்ந்து, ஆலய ஆராதனையில் சாம்பல் ஒரு முக்கிய குறியீடாக பயன்படுத்துவதை பொருளுள்ளதாக கண்டு ஏற்றுக்கொண்டு, ஆலயத்தின் சடங்குகள் முடிந்த பின்னர், தங்கள் நெற்றியில் இட்ட சாம்பல் சிலுவை அடையாளத்தை நீக்கிவிடுவது வழக்கம்.

பின்நவீனத்துவ காலமாகிய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் நாம் வாழும் தருணத்திலும் மேலும் ஒரு மாற்றம் இயல்பாக நடைபெறுவதை நாம் காணமுடியும். இன்று சாம்பல் என்பது நம்மிடையே காணக்கிடைக்காத ஒரு அரிய பொருளாக மாறிவருகிறது. சமையலில் சாம்பல் இல்லா சமையலை கண்டு வாழும் ஒரு தலைமுறை எழுந்து வருகிறது. அவர்களுக்கு சாம்பல் ஒரு மிக உக்கிரமான ஒரு குறியீடாக காட்சியளிக்கிறது. குறியீட்டு சார்ந்த ஒரு விருப்பத்தையும் சடங்குகளில் தொக்கி நிற்கும் ஆன்மீக புரிதலையும் மீட்டெடுக்க விளையும் ஒரு தலைமுறை எழுந்து வருகிறது. உலகம் முழுக்க பல்வேறு சமயங்களில் ஏற்படும் இந்த அர்த்தம் பொதிந்த மாற்றத்தை மெதடிஸ்ட் திருச்சபை தனது இளம் தலைமுறையினருக்காக பாதுகாத்து அளிக்க கடமைப்பட்டிருக்கிறதாக உணருகிறது. காட்சி சார்ந்த ஊடகங்களில் திளைத்து எழும் ஒரு சமூகத்திற்கு தலையில் இடப்படும் “ஓலைச் சாம்பல்” மிகப்பெரிய ஆன்மீக தரிசனத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது. ஆகவே குறியீடுகளின் வாயிலாக ஒரு உரையாடலை அவர்களுடன் நிகழ்த்த சாம்பல் புதன் ஒரு அரிய வாய்ப்பு இன்று நம் முன்னால் இருக்கிறது.

சாம்பல் புதன் எனபதை திருச்சபை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளுகிறது ஒன்று நாம் நமது மரணத்தை எதிர்கொள்ளுகிறோம், இரண்டாவது பற்றாளர்கள் முன்னிலையில் நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தோம் என்பதை  அறிக்கையிட்டு மனம்திரும்புகிறோம். இவைகளை இயேசு கிறிஸ்துவின் அளவிட முடியா அன்பின் ஒளியில் வைத்து கடவுளின் மீட்பை புரிந்துகொள்ளுகிறோம்.

ஆம் “பனைஓலை சாம்பல் புதன்” ஒரு முக்கிய த்துவக்கமாக திருச்சபையின் பனைமர வேட்கையில் அமையும் என்றே விரும்புகிறேன். அதுவே எனது தவக்கால மன்றாட்டு.

அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி
8888032486

 

Advertisements

3 பதில்கள் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 1”

 1. Logamadevi Annadurai Says:

  Lent

  அன்பின் காட்சன்
  நெடுநாட்களுக்குப்பிறகு உங்களின் இலங்கைப்பயணப்பதிவும் சாம்பல் புதனன்று மீளவும் எழுதத்துவங்கியதும் மிக்க மகிழ்வைத்தருகின்றது.
  திருச்சபையால் இன்றுவரை கவனத்துக்குட்படுத்தாத ஒரு புது தளத்தை மட்டுமல்ல ஒரு புது கருத்தயோ சொல்லையோ கூட எழுப்புவது சாமானியமான காரியம் இல்லை அல்லவா?
  சாம்பல் புதன் இந்து மதம் சொல்வதையேதான் சொல்கிறதா? மண்ணிலிருந்து வந்தாய் மண்ணிற்கே செல்கிறாய் என்கிறதா?
  எல்லா பாதைகளும் சென்று சேரும் இடம் ஒன்றே என உங்கள் பதிவிலிருந்து நான் உணருகின்றேன்

  நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் ,நெற்றி குறித்தும்,சாம்பல் புதனைக்குறித்தும் சாம்பல் அடையாளம் குறித்துமான விவிலியப் பார்வையை எனக்கு கொஞ்சமேனும் தெளிவுபடுத்துகின்றது

  இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் இருந்த தவக்காலம் அல்லவா இது?
  கண்ணெதிரே பனை அழிந்தும் காப்பாற்றாத நமது இயலாமைகளை, பனையை அழிக்கும் பாவங்களை, அம்மரத்தை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத நம் பிழைகளை கண்டறியும் காலமாகட்டும் இந்த காலம்.
  பனை சார்ந்த நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்வோமாக
  இயேசு உயிர்த்தது போல பனையும் உயிர்த்தெழட்டும்
  நெடும் பனைமரச்சாலையில் உங்களின் இந்த பயணம் தொடரவும் பனையைக்காப்பாற்றவேண்டிய செய்தி மக்களுக்கு சரியான முறையில் சென்று சேரவும் பிரார்த்திக்கிறேன்
  அன்புடன்
  லோகமாதேவி

 2. Jayant Judilson (@Judilson) Says:

  vandhutaraiyya vandhutaraiyya!

 3. தாமரை குணாளன் Says:

  பனையும் உயிர்த்தெழட்டும் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: