திருச்சபையின் பனைமர வேட்கை – 2


 

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மின்னும் சாம்பல்

சாம்பற் புதன் அன்று ஓலை சாம்பல் தயாரிப்பதற்கான காரணங்கள் உண்டு;  அது என்னவென்றால், திருச்சபையில் பயன் படுத்தியதாலும் ஓலை சிலுவை வடிவாக மாற்றப்பட்டதாலும் அது ஒரு புனித பொருளாக உருப்பெறுகிறது. அப்புனிதம் அந்த ஓலைக்கு விசேஷித்த தன்மையை அளிப்பது என்பதாக அல்ல மாறாக அந்த ஓலைகளை எவரும் அஜாக்கிரதையாக கையாள கூடாது என்பதற்காக அவ்விதம் அறிவுறுத்தப்படுகிறது. தங்கள் வீடுகளுக்கு ஓலைகளை எடுத்துச் செல்லுபவர்கள் அந்த ஓலைகளை மிக அழகாக வாசலிலிலோ அல்லது வீட்டின் உயரமான இடங்களிலோ இணைத்து வைப்பது வழக்கம். சிறுவர்களோ அல்லது பெரியவர்களோ அதை அஜாக்கிரதையாக தூக்கி வீசாமல் இருப்பதை உணர்த்தும் வண்ணமாக இது கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் , ஓலைகள்,  ஏடு எனும் வடிவம் பெறுகையில் அதற்கு ஒரு சிறப்பு தன்மை வந்துவிடுகிறது. ஆகவேதான் ஓலைகள் பழைமையாகிப்போனால் கூட அவைகளை எடுத்து வீசிவிடாதபடி ஓடும் தண்ணீரில் விடும் வழக்கம் இங்கு உண்டு. ஓலைகள் தன்னளவில் முக்கியத்துவம் பெற அவைகளில் இருந்து பெறப்படும் பயனுள்ள பொருட்களே காரணமாகின்றன. அதிலும் சமய பயன்பாட்டிற்கான தன்மை அது கொண்டுள்ளதால் அதனை உலகமெங்கும் மிகவும் கவனமாகவே கையாள்கிறார்கள்.

மீண்டும் ஓலைகளை ஆலயத்திற்கு எடுத்து வரப்படுகையில், அருட்பொழிவு பெற்றோர் அல்லது திருச்சபை அங்கத்தினர் ஒருவர் அவைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரித்து அவைகளுக்கான ஒரு மன்றாட்டை ஏறெடுத்து கீழிருந்து தீ பற்றும் விதமாக அவைகளை எரிப்பார். மக்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த எளிய சடங்கில் மரங்களோ தீப்பிடிக்கும் பொருட்களோ அருகில் இல்லாதபடியான இடத்தை தெரிவு செய்வார்கள். முற்றிலும் ஓலை எரிந்து முடிந்த பிற்பாடு, கனல் அவிந்து அனைத்தும் சாம்பல் ஆகி குளிரும் வரை காத்திருப்பார்கள். பிற்பாடு அருட்பொழிவு பெற்றோர் அல்லது திருச்சபை அங்கத்தினர் தங்கள் கரங்களால் அவைகளைப் பிசைந்து சாம்பலில் கிடக்கும் சிறு கரித்துண்டுகளை கவனமாக நீக்கிவிடுவர். தெரிவுசெய்யப்பட்ட  சாம்பலை மிக நேர்த்தியாக ஒரு புனித கிண்ணத்திலே சேமித்து தண்ணீர் சேர்க்காமல் அதனை திருச்சபையாரின் நெற்றியிலே சிலுவை அடையாளமாக அருட்பொழிவு பெற்றோர்  வரைவார்கள்.

ஓலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கும் முறை

ஓலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கும் முறை

மேற்குலகில் உள்ள சில திருச்சபைகளில், திருச்சபை அங்கத்தினரே இவைகளைப் பாரம்பரியமாக  பொறுப்பெடுத்து செய்வதுண்டு. நெருப்பு சார்ந்த காரியமானபடியால், கவனமாக கையாளவும் அதற்கு ஏற்ற வாய்ப்பு வசதி உள்ள இடத்திலே மாத்திரம் இவைகளை தயாரிக்க இயலும். ஓலையில் தீ என்பது பஞ்சில் நெருப்பு பற்றிப் பிடிப்பது போல. மேலும் காற்று வீசினால் அவை பறந்து சென்று வேறு இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. ஆகவே கவனமாக இவைகளை கையாள வேண்டியிருக்கிறது. இவ்விதமாக கவனமாக ஓலைகளை எரித்து அதிலிருந்து சம்பலை பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்புகள் அற்ற சூழ்நிலை நிலவுமானால் அத்திருச்சபைகள் தங்களுக்கு தேவையான சாம்பலை அதற்கான புனித பொருட்களை விற்கின்ற கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆம் நம்புங்கள், புனித சாம்பலை விற்கவும் மேற்குலகில் கடைகள் இருக்கின்றன.

கடந்த வருடத்தில் பனைஓலைகளில் அனேக கைபட்டைகளை நான் தயாரித்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பினேன். அவைகளில் மீந்த துணுக்குகள் இரண்டு சாக்குகளில் என்னிடம் இருந்தன. அவைகளை எப்படி அப்புறப்படுத்துவது  என்பது எனக்குள் ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. சிறு துணுக்குகளாக இருந்துபடியால் வீட்டின் பால்கனியில் ஒரு பெரிய இரும்பு டப்பாவில் அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக இட்டு எரித்து சாம்பல் ஆக்கினேன்.

இந்தியாவிலும் இலங்கையிலும் ஓலைகளைக் கொண்டு பணி செய்பவர்கள் அதிகம் உண்டு. பயனற்ற எஞ்சிய ஓலைகளை அவர்கள் வீட்டின் அடுப்பெரிக்கவே பயன்படுத்துவார்கள். தங்கள் குடும்பத்தின் குழந்தைகளை வளர்க்க பாலுட்டும் கருணையுடன் தாய்மார் செய்யும் ஓலைக் கைவினை பணிகள் புனிதமானவை அல்லவா? இவர்களுக்கு இவ்விதமான ஒரு சந்தை வாய்ப்பை நல்குவது ஒரு புனித செயலாகவே இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

மின்னும் சாம்பல்

மின்னும் சாம்பல்

எல். ஜி. பி. டி. கியூ (LGBTQ) சமூகத்திற்காக போராடும் நியூ யார்க்கைச் சார்ந்த பாரிடி (Parity) எனும் வாதிடும் குழு ஒன்று 2017 மார்ச் 1ஆம் தேதியை ‘மின்னும் சாம்பல்’ (Glittering Ash) பூச வேண்டி திருச்சபைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அழகு சாதனங்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு  தயாரிக்கப்பட்ட மினுங்கும் வண்ணங்களுடன், பாரம்பரியமாக பெறப்படும் சாம்பலை இணைத்து இதை அவர்கள் இலவசமாக கொடுக்கிறார்கள். இலவசமாக அவர்கள் இதைக் கொடுத்தாலும் தங்களுக்காக அவர்கள் நன்கொடையை கேட்கிறார்கள். பல்வேறு திருச்சபைகள் இந்த புதுமையான போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதை நான் ஆச்சரியமாக கவனிக்கிறேன். திருச்சபை இந்த அளவிற்கு வெளிப்படையாக சார்பெடுக்கும் ஒரு சூழலில் பனை தொழில் செய்பவர்களுக்காக வாதிடுவோர் எவரும் ஏன் இல்லை என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. ஒருவேளை பனைத்தொழிலாளிகளைக் கரையேற்றும் எண்ணமுடன் திருச்சபை வரும் நாட்களில் தங்கள் அங்கத்தினர் நெற்றியில் சாம்பல் பூச முன்வருவார்கள் என்றால் அதுவே பனைக்கும் பனைத்தொழிலாளிகளுக்கும் மின்னும் வாழ்வு தருவதாக இருக்கும்.

பனைதானே லெந்து காலத்தில் கூறியீட்டளவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது?. இயேசு பெத்தானியாவிலிருந்து எருசலேம் நோக்கிய தனது இறுதி பயணத்தை முன்னெடுக்கையில் அவரை வாழ்த்தியவர்கள் தங்கள் கரங்களில் குருத்தோலைகளைப் பிடித்துச் சென்றனர் என்பதாக காண்கிறோம். பேரீச்சம் பனையில் ஏறத்தெரியாமலா அம்மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துச் சென்றனர்? அம்மக்களுக்காகவன்றி வேறு எதன் பொருட்டு இயேசு எருசலேம் நோக்கிச் சென்றார். அவர் சுமந்த சிலுவை, துன்புறும் மக்களை விடுவிக்க வேண்டியல்லவா? இயேசுவின் சிலுவை மரணம் கூட பேரீச்சம் பனையில் ஏறும் பெத்தானியாவைச்சார்ந்த  தொழிலாளிகளின் சார்பில் அவர் எடுத்துக்கொண்ட நிலைபாட்டினால் தானே?

அப்படியிருக்க ஏன் திருச்சபை பனைத் தொழிலாளிகளை பெருமளவில் கண்டுகொள்ளவில்லை. தனது உழைப்பை செலுத்தி, திருச்சபையின் பண்டிகைகளான சாம்பல் புதன், மற்றும் குருத்தோலை ஞாயிறு போன்ற சிறப்பு வழிபாடுகளில் மறைமுகமாக பங்களிப்பாற்றும் இப்பணியாளர்கள் மறைக்கப்பட்டு போவது எவ்வகையில் நியாயம்? இவ்விதமாக ஒரு சாரார் இந்தியாவிலும், இலங்கையிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் ஆப்பிரிக்காவின் பெரு நிலத்திலும் சிதறி வாழ்கிறார்கள் என்பதனை திருச்சபை ஏன் குறிப்பிடத்தகுந்த முறையில் இதுகாறும் வலியுறுத்தவில்லை?

இச்சூழலில் தான் இலங்கை திருச்சபை தன்னை “திருச்சபையின் பனைமர வேட்கையில்” ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. முதன் முறையாக கிறிஸ்தவ உலகமே தன்னை உற்றுநோக்கும்படியான ஒரு அறைகூவலை அது விடுக்கின்றது. இரண்டாயிரம் வருட திருச்சபை செய்யதவறிய  ஒரு நிலைப்பாட்டை அது முயன்று முன்னெடுக்கிறது. பனை மரத்தையும் பனைத் தொழிலாளியினையும் உலக திருச்சபை உற்று நோக்குகின்ற ஒரு பொற்தருணத்தை அது நம் முன்  வைக்கின்றது.

இலங்கையினை நான் தெரிவு செய்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக நில அமைப்பில் நமக்கு மிகவும் ஒத்திருக்கும் ஒரு இடம் அது. தொலைவும் இல்லை.  இரண்டாவதாக அங்கே பேசப்படும் மொழி எனக்கு அறிமுகமானது. தமிழில் எனக்கான தரவுகளை நான் எளிதில் சேகரிக்க இயலும். ஆகவே இலங்கையினை நான் தெரிவு செய்தேன். ஆனால் எல்லாவற்றிற்கும் மேல் இலங்கை என்றவுடன் அது நமது தேசத்தை தாண்டி சர்வதேச வரைபடத்தில் வரும் இடமாகிறது. ஆக, தமிழகத்தில் பனைத்தொழிலாளிகளை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடைக்கும் நிலையினை விட்டு வெளியே வரும் ஒரு வாய்ப்பு அமையும் என்று நான் நிச்சயமாக கருதினேன்.

உலகளாவிய பனைத் தொழிலாளர்களுக்கான குரலை இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளான இலங்கையிலிருந்து எழுப்புவது சரியானது என நான் கருதினேன். இன்னும் சொல்லப்போனால் வேறு வாய்ப்புகள் ஏதும் அற்ற நிலையில் இங்கிருந்து துவங்குவதை தவிற வேறு வழியில்லை என்பது தான் உண்மை. இப்படியான நெருக்கத்தில் இலங்கை செல்லுவது என்பதே எனக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது.

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஆய்வுக்காக நான் களமிறங்கியிருக்கையில், திருநெல்வேலி பனைத்தொழிலாளர்கள்  இலங்கையிலிருந்து வந்திருக்கலாம் எனும் யூகத்தை பேராயர் கால்டுவெல் அவர்கள் முன்மொழிந்திருப்பதைக் கண்டுகொண்டேன். அப்போதே எனக்கு இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பனை சார்ந்த தொடர்பை கண்டுணர வேண்டும் என்ற வேகம் இருந்தது. நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர் அ. கா. பெருமாள் அவர்கள் குமரி மாவட்டத்தில் வழங்கப்படும் வெண்கலராசன் கதையை கூறுகையில் அவர் இலங்கையிலிருந்து வந்து அகஸ்தீஸ்வரம் என்ற பகுதியில் தனது கோட்டையைக் கட்டி எழுப்பினார் என்று சொல்லக்கேட்டேன். கால்டுவெல் ஒருவேளை வெண்கலராசன் கதையை கருத்தில் கொண்டிருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக  இலங்கையின் போர் சூழல் மேலும் தடை கோரும் வண்ணமாக பூதாகரமாக எழுந்து நின்றது. இவ்வாறாக இலங்கைச் செல்லுவது எனக்கு சவாலாகவே  இருந்துவந்தது. எது எப்படி இருந்தாலும்  அனைத்திற்கும் ஏற்ற நேரம் என ஒன்று உண்டு போலும். இவ்வருடங்களில் எனது இலங்கைபயணத்திற்காக  நான் மேலும் பண்பட்டேன் பக்குவப்பட்டேன் என்றே சொல்லவேண்டும். வெறுமனே ஒரு ஆய்வாளனாக  அல்லாமல் ஒரு போதகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு எளிய கைவினைக் கலைஞராகவும், ஒரு பனை போராளியாகவும் நான் அங்கு செல்லவேண்டும் என்பது தான் கடவுளின் ஆணை என்றே ஏற்றுக்கொள்ளுகிறேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 2”

 1. Logamadevi Annadurai Says:

  காட்சன்
  ஓலைகளை சாம்பலாக்கும் முறைகளையும் அவை விற்பனைக்கு மேற்குலகில் கிடைப்பதும் புதிய தகவல்கள்.
  நெருப்பின் பிண்ணணியில் ஓலைச்சிலுவை இருக்கும் அந்த நிழற்படம் மிக அருமை. அதை பனைத்தொழிலாளர்களின் புறக்கணிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கும் ,மறைக்கப்பட்ட பனைதொழிளாளர்களின் துயர்களுக்குமானதோர் குறியீடாகவே நான் நினைக்கிறேன்
  இலங்கை சென்றதன் காரணங்களை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறீர்கள்.2000 வருடங்களாக செய்ய மறந்த ஒரு பணியினை மேற்கொள்ள அதற்காக பாடுபடுபவர்களில் ஒருவராக நீங்களும் தெரிவு செய்யபட்டிருப்பது இறையின் கருணை என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?
  தொடருங்கள் காட்சன்
  பனைப்பயணத்தை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: