திருச்சபையின் பனைமர வேட்கை – 3


 

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

இலங்கை கனவு

பனை சார்ந்த எனது தேடல்களுக்கு காரணம் இலங்கை தான் என நான் உறுதியுடன் கூறமுடியும்.  இந்த இலங்கைப் பயணம் நிகழ்ந்த வரலாறு குறித்து நான் சற்றேனும் சொல்லியாகவேண்டும். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தியன் கதையை மிஞ்சும் ஒரு நெடுங்கதை அது. சுருக்கமாக எழுத்தில் வடிக்க முயல்கிறேன்.

1984 ஆம் வருடம் அப்பா இலங்கை சென்று வந்தார்கள். அப்பொழுது அவர்கள் ஓலையில் செய்யப்பட்ட ஒரு அழகிய அடைவை (File) எடுத்துக்கொண்டு வந்தார்கள். அந்த அடைவு பார்ப்பதற்கு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அந்த ஓலையை கூர்ந்து கவனித்த போது தான் அது “பனையோலையில்” செய்யப்பட்டது அல்ல என்பது விளங்கியது. மெல்லிய ஓலை.  சீரான வடிவம். தந்த நிறத்தில் காணப்பட்ட அந்த அடைவே, நான் முதன் முதலாக பார்த்த ஓலை அடைவு. அல்லது இயற்கை பொருளில் செய்யப்பட்ட ஒரு அடைவு.

சுமார் 10 வருடங்கள் அது அப்பாவின் மேசையில் இருக்கும் இங்க் பாட்டில், கேம்லின் பசை டப்பா, அப்பாவின் இன்ன பிற அலுவலக பொருட்களுடன்  ஒரு முக்கிய பொருள் ஆகியது. அப்பா பொதுவாக தனது பழக்கவழக்கங்களை  மாற்றுபவர் அல்ல. ஓலைப்பாயில் செய்யப்பட்ட அடைவு அவர்களை எப்படி கவர்ந்தது என்று தெரியவில்லை ஆனால்   தனது அலுவலக காகிதங்களை அதற்குள்ளிலும் அப்பா வைக்கத்துவங்கினார்கள்.

இச்சூழலில் நான் பனை ஓலையில் சுவடிகள் செய்ய கற்றுக்கொண்டிருந்தேன். திருக்குறள் மற்றும் நான் விரும்பிய பொன்மொழிகள் யாவையும் எழுதி ஓலைச்சுவடியில் எழுதி பாதுகாத்தேன். இன்றும் எனது பழம் பொருட்கள் உள்ள பெட்டியில் அவைகள் இருக்கும் என நம்புகிறேன். இதை கவனித்த   எனது சகோதரி ஒருமுறை தனக்கு சில ஓலை அடைவுகளை செய்து தர இயலுமா என்று கேட்டார்கள். நான் அதைச் செய்யலாம் என கூறி மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் சென்றேன். அங்கிருந்து அருமனை அருகில் இருக்கும் புண்ணியம் எனும் பகுதிக்கு நேரே என்னை அவர்கள் வழிகாட்டினார்கள். அனேக நாட்கள் அவர்களோடு ஈடுபட்டு தேவையான ஓலை தடுக்குகளைப் பின்னி பெற்றுக்கொண்ட பிறகே, பனை ஏறும் சமூகம் வேறு, பனை ஓலையில் கைவினைப்பொருட்கள் செய்யும் சமூகம் வேறு என்பதை கண்டுகொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டே சமூகம் தான் இவ்வுலகில் உண்டு. ஒன்று பனை சார்ந்த சமூகம் இன்னொன்று பனை சாரா சமூகம்.

கன்னத்தில் முத்தமிட்டால் போஸ்டர்

கன்னத்தில் முத்தமிட்டால் போஸ்டர்

அப்போது தான் எனக்கும் மாணவர் கிறிஸ்தவ இயக்கத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. ஏலகிரியில் நடைபெற்ற ஒரு கூடுகைக்கு. அருட்பணி கிறிஸ்டோபர் ராஜ்குமார் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தனது இறையியல் உயர் கல்வியை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த தருணம் அது என்று  நினைக்கிறேன். சுமார் 10 பேர் சென்றிருந்த அந்த கூட்டத்தை அவர்கள் மிக அழகாக கையாண்டார்கள். இயற்கையை திருமறை நோக்கில் காண ஒரு அடிப்படையை கற்றுக்கொடுத்தவர்கள் அவர்களே.

பிற்பாடு 1999ஆம் ஆண்டு பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது எனது ஆர்வத்தை எனது ஆசிரியர்களும் உடன் மாணவர்களும் கூர்தீட்டினார்கள். இரண்டு பனை சார்ந்த ஆய்வுகளை நான் அங்கே சமர்ப்பித்தேன். இன்று அவைகளை திரும்பி நோக்குகையில், அவைகள் மிகவும் எளிய புரிதல்களாக காணப்பட்டாலும் எனது பனை சார்ந்த தேடுதலை நான் அறுபடாமல் தொடர்ந்து காத்திருக்கிறேன்  என்பதற்கான சான்று அது.

2004 ஆம் வருடம் முதல் 2007 ஆம் வருடம் முடிய நான் மார்த்தாண்டம் பனை தொழிலாளர்  வளர்ச்சி இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். பனைத் தொழிலாலர்களுக்காக மனம் கசிந்து பணியாற்றிய பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களை கண்டுகொண்டேன். அவர்களது தரிசனம் மிகப்பெரியது. அவர்கள் சாதித்தவைகளும் வரலாற்றில் எனக்கு முன்னோடியாக மிக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.

2008 முதல் மெதடிஸ்ட் திருச்சபையில் நான் பணியாற்றினாலும் பனை சார்ந்த காரியங்களில் நான் 2011 வரை பெரிய அளவில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. பனை என்னுள் உறைநிலை கொண்டிருந்த  காலம் என்றோ அல்லது பனை சார்ந்த எண்ணங்கள் என்னுள் அடைக்காக்கப்பட்ட காலம் அது  என்றோ கூறலாம். 2011ஆம் வருடம் முதல் நான் ஓலைகளில் செய்த படங்களை கண்காட்சி வைத்து  திருச்சபையின் மக்களுக்கு பனைமரத்தின்  பயன்களை எடுத்துச் சொல்லி வருகிறேன்.

இவ்வகையில் என்னை முதன் முதலில் ஊக்கப்படுத்தியது “பீப்பிள்ஸ் ரிப்போர்ட்டர்’ என்ற இந்திய கிறிஸ்தவ ஆங்கில பத்திரிகை. எனது முதல் கண்காட்சியின் அழைப்பிதழை அப்படியே அச்சில் வெளியிட்டார்கள். என்னிடம் அதற்கென ஒரு காசையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதன் பதிப்பாளர்களோ அல்லது நிர்வாகிகளோ எவரையும் அதற்கு முன்பு நான் தனிப்பட்ட முறையில் அறிந்தது கிடையாது.  பிற்பாடு 2014 ஆம்  ஆண்டு கொல்கத்தாவில் வைத்து அதன் ஆசிரியர் மாமன் வர்கியைச் சந்தித்தபோது இத்துணை எளிய மனிதரா இந்த பத்திரிகையின் ஆசிரியர் என்ற எண்ணமே மேலோங்கியது.

டாக்டர். கிறிஸ்டோபர் ராஜ்குமார்  அவர்கள் 2014 ஆம் ஆண்டு, இந்திய தேசிய திருச்சபைகளின் மாமன்ற (NCCI – இ தே தி மா) நிற்வாக செயலாளராக பணியாற்றிய தருணத்தில்,  அதன்  நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன . அனைத்து இந்திய கிறிஸ்தவ திருச்சபையினரின் தலைவர்களும் ஆசிய திருச்சபையின் தலைவர்களும் கூடிய அவ்விழாவில் ஓலைகளால் நான் செய்த பொருட்களை அங்கு காட்சிபடுத்தவேண்டி என்னை அழைத்திருந்தார்கள். என்னை அங்கு அறிமுகப்படுத்துகையில் டாக்டர். கிறிஸ்டோபர் ராஜ்குமார்  அவர்கள் என்னை ஒரு “பனை இறையியளாளர்” (Palmyra Theologian) என்றே கூறினார். எனக்கு முதலில் அந்த அறிமுகம் கூச்சமாக இருந்தாலும்  அதுவே என்னை பிறரிடம் கொண்டும் செல்லும் விசையாக அமைந்தது.

அதற்கு முந்தைய வருடம் தான் நான் கம்போடியாவில் ஆசிய கிறிஸ்தவ மாநாடு (CCA) நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓலை படங்களை   அவர்களுக்கு வழங்கியிருந்தேன். அவர்கள் எனது படத்தினை தங்கள் பத்திரிகையின் முன் அட்டையில் இட்டு, என்னைப்பற்றிய ஒரு கட்டுரையையும் வழங்கியிருந்தார்கள். அந்த பத்திரிகை அன்று அங்கே கூடியிருந்த திருச்சபை தலைவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இவர்கள் அனைவருமே அன்று தங்கள் நிகழ்ச்சியினூடக என்னையும் கவனத்துக்குட்படுத்தினார்கள்.

அங்கு நடைபெற்ற ஓலைப் படங்கள் கண்காட்சியை கொளும்பு திருச்சபையின் பேராயர் அருட்பணி திலோராஜ் கனகசபை அவர்கள் மன்றாட்டுடன், இ தே தி மா தலைவரும் மெதடிஸ்ட் திருச்சபையின் பேராயருமான தாரநாத் சாகர் ரிப்பன் வெட்டி அல்ல, “ஓலையைக் கிழித்து” திறந்துவைத்தார்.  பேராயர் அவர்கள் இருவருமே முகம் மலர்ந்து இருந்தார்கள். அந்த நாளின் நெருக்கடிக்குள்ளும் என்னையும் பொருட்டாக மதித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கிறிஸ்டோபர் ராஜ்குமார் என்றும் என் நன்றிக்குறியவர். இவ்விதமாக திருச்சபை எனக்கு கொடுத்த அரிய வாய்ப்புகளை நான் மறுக்க இயலாது.

இப்படியாக இ தே தி மா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தான் எனது இலங்கைப் பயணம் குறித்த ஒரு புது நம்பிக்கை ஏற்பட்டது. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற பொதுசெயலாளர் அருட்பணி எபனேசர் ஜோசப் அவர்களை இந்த நிகழ்ச்சியில் தான் நான் முதன் முறையாக சந்தித்தேன். அவர்களும் கொழும்பு திருச்சபையின் பேராயர் கனகசபை அவர்களும் இணைந்து நான் இலங்கை வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். அனைத்தையும் ஒழுங்குசெய்துவிட்டு என்னை அழைப்பதாக உறுதி கூறினார்கள். ஒருவழியாக இலங்கை செல்லும் வாசல் திறந்தது என்ற நம்பிக்கை என்னுள் வந்தது.

அன்றிலிருந்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றிற்கு  நான் தொடர்ந்து கடிதம் எழுதினேன். என்னை அழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் ஆனால் அதற்கான பொருளாதாரம் மற்றும் சூழல் அமையுமட்டும் என்னிடம் காத்திருக்க வேண்டினார்கள். நான் அவர்கள் என்னைத் தவிர்க்கிறார்களோ என எண்ணும் அளவிற்கு காலம் கடந்து சென்றுகொண்டிருந்தது.

இவைகள் யாவும் நடந்து முடிந்து மூன்று வருடங்களுக்குப் பின்பு நான் “பனைமர வேட்கைப் பயணத்தை” முன்னெடுத்தேன். வெற்றிகரமாக அவற்றை ஆவணப்படுத்தியபின்பு எனக்குள் மீண்டும் இலங்கைப் பயணத்தின் அவசிய தேவை உருக்கொண்டது. இவ்வேளையில், பனைமரம் சார்ந்து நான் எதைச் செய்தாலும் அதற்கென தயங்காமல் பொருளுதவி  செய்யும் நட்பு வட்டம் ஒன்று எனக்கு அமைந்தது நல்லூழ். குறிப்பாக எனது பால்ய நண்பனான ரமேஷ் செல்லதுரை ஜெர்மனியிலிருந்து எனக்கு எது தேவையோ அதை தயங்காமல் கேட்கும்படி கட்டளையிட்டிருந்தான். மும்பை நண்பர் குமார் வால்டர் அவர்களிடம் எதையும் கேட்டு பெற்றுக்கொள்ளும் நெருக்கமிருந்தது. எனது உறவினரான ஜுடில்சன் அவர்களுக்கு, நான் அவர்களின் கனவுகளை வாழ்கிறேன் என்னும் குதூகலம் இருந்தது. இவர்களே என்னை அடுத்த கட்டம் நோக்கி தயங்காமல்  நகர ஊக்குவித்தவர்கள்.

ஆகவே இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றிற்கு நான் மீண்டும் எழுதிய கடிதத்தில் எனது பயணத்தின் அவசியத்தைக் மீண்டும் கூறி,  இலங்கை பயணத்திற்கான விமான செலவை எனது நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றும், இலங்கையில் உள்ள  நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று பொறுப்பெற்றால் போதும் என்று கடிதம் எழுதினேன்.  அந்த கடிதத்திற்கு பதில் அனுப்பிய எபினேசர் ஜோசப் அவர்கள், தான் எனது  பயண  விபரங்களைக் குறித்து பேராயர் கனகசபை அவர்களிடம் விரிவாக பேசினார் என்றும், 2017 ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் இரண்டு வாரங்கள் நீங்கள் இங்கே இருப்பதற்கு நாங்கள் நிகழ்ச்சிகளை ஆயத்தம் செய்கிறோம் என்றும் கூறினர்கள்.

இதை அவர்கள் என்னிடம் கூறுகையில் நான் இலங்கைப்புறப்பட என்னிடம் முழுதாக மூன்று மாதங்கள் இருந்தன. ஒருபுறம் கட்டற்ற மகிழ்ச்சி ஆனால் அதே நேரத்தில் தமிழகம் தழுவிய ஒரு பயணத்தை நான் முன்னெடுக்க விரும்பி காத்திருந்தேன். எதை தெரிவு செய்வது என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வந்த அழைப்பை நழுவவிடுவது சரியல்ல என்று எண்ணி இலங்கைப் பயணத்திற்கு ஆயத்தமானேன். அவர்கள் எனக்கு அளித்த இரண்டு வாரத்தை மூன்று வார காலமாக நீட்டிக்க கேட்டுக்கொண்டேன்.

முதலில் எனது மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர், ரெத்தினமணி அவர்களிடம்  பேசி, மும்பை பிராந்திய பேராயர் டாக்டர். அனில்குமார் சர்வண்ட்  அவர்களுக்கு விடுமுறை விண்ணப்பக் கடிதம் அனுப்பினேன். எனது திருச்சபையில் ஒருமாத நிகழ்ச்சிகளை எவர் பொறுப்பெடுக்கவேண்டும் என்றும் ஒழுங்கு செய்தேன். இந்தியாவை விட்டு வெளியே செல்லுமுன் பேராயரின் ஒப்புதல் தேவையாயிருந்தபடியால் திக் திக் என அவரின் ஒப்புதல் கடிதம் வரும்வரைக் காத்திருந்தேன். எனது மன்றாட்டுகள் வீண்போகவில்லை; பேராயர் எனது பயணத்திற்கு இறுதி நேரத்தில் ஒப்புதல் அளித்தார்கள்.

சென்னையிலிருந்து விமான பயணம் என்பதாலும் முன்னமே பயண சீட்டினை எடுத்திருந்தபடியாலும் பயணச்சீட்டுக்கான செலவு குறைவாகவே இருந்தது. வரும் வழியில், மும்பையிலிருந்து ஹைதராபாத்திலுள்ள ஹென்றி மார்டின் இஸ்டியூட் செல்லவேண்டி இருந்தது. மீண்டும் ஒரு முழு இந்திய பயணத்தை அவர்களோடு இணைந்து நடத்துவது குறித்த ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை. அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்தேன்.

நாகர்கோவிலில் ஜெயமோகன் அண்ணனைப் பார்த்து பேசி, இலங்கையில் உள்ள அவர்கள் வாசகர்களை சந்திக்க இயலுமா என்று கேட்டேன். கண்டிப்பாக பதிவை இடுங்கள் நான் அறிமுகம் செய்கிறேன் என்றார்கள். என்னால் அப்பதிவை வலையேற்றம் செய்ய இயலவில்லை. மும்பையிலிருந்து கிளம்பி இலங்கை செல்லுமட்டும் மின்னஞ்சல்களைப் பார்க்கவோ பதிவிடவோ நேரம் அமையவில்லை. மேலும் சாகுல் ஹமீது  எனக்கென டாலர் மாற்றி வைத்திருந்தார்கள். அதையும் பெற்றுக்கொண்டு சென்னை நோக்கி இரவு பேருந்தில் சென்றேன்.

டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் என்னை அழைத்து உன்னைப்பற்றி ராணி பத்திரிகையில் 54, 55 பக்கங்களில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது என்று சொன்னார்.  அதையும் தான் பார்ப்போமே என்று வங்கிப்பார்த்தால், பனைமரக் காதல் பாதிரியார் என்று ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த பத்திரிகை இலங்கை பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

ஜனவரி 13 ஆம் தேதி சென்னை, அம்பத்தூரில் இருந்து மாலை 7 மணிக்கு பேருந்தை எடுத்து கோயம்பேடு வருவதற்குள் மணி 8 ஆகிவிட்டிருந்தது. பொங்கல் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. விமான நிலையத்திற்குச் செல்ல இயலாது என்றே கருதினேன். அப்போது ஒருவர், தெய்வாதீனமாக  மெட்ரோவை கைகாட்டினார். 9.30க்கெல்லாம் விமான நிலையம் வந்து சேர்ந்துவிட்டேன். இறங்கும்போது என்னைத்தவிர ஒன்றோ இரண்டோ பயணிகளே இருந்தனர்.

விமான நிலையத்தில் எனக்கு முன்பாக மிகப்பெரிய வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மிக நீண்ட வரிசைகள் தற்போதைய வங்கிகளை எரிச்சலுடன் நினைவுபடுத்தியது. இலங்கைச் செல்ல இயலுமா என்றே தோன்றிவிட்டது. நத்தை போன்று நகரும் அதில் பொறுமையாக நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது ஜாஸ்மின் என்னை அழைத்து,  விமானம் சற்று தாமதமாக வருகிறது என்று கூறினாள். மேலும் என்னை அழைக்க இலங்கை விமான நிலையத்தில் காத்திருப்பவர் குறித்த விபரத்தையும் எனது மின்னஞ்சல் பார்த்து அவள் குறிப்பிட்டாள். நான் அது குறித்து யோசிக்கவே இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

அனைத்தும் முடிந்து விமானத்திற்காக காத்திருந்த போது இயக்குனர் மணிரத்தினத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” நினைவிற்கு வந்தது. ஆம் என்னை இந்தியாவில் பெற்றுப்போட்டுவிட்டு இலங்கை வந்துவிட்ட பனை அன்னையைத் தேடிய பயணம் கூடத்தான் இது.  இலங்கை எப்படி இருக்கும்?

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 3”

 1. Logamadevi Annadurai Says:

  மிக இளம் வயதிலேயே புண்ணியத்திற்கான வழிகாட்டப்பட்டவர் என்பதாலேயே இன்னும் இந்த மகத்தான பனைச்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள் காட்சன். பனை சார்ந்த எண்ணங்கள் அடைகாக்கப்பட்ட காலம் என்பது மிகச்சரியான, நல்லதோர் வார்த்தைப்பிரயோகம்.இலங்கைப்பயணத்திற்கு உதவிய நட்புகள், உறவுகள், கிருத்துவ அமைப்புகள் மற்றும் டாலர் மாற்றித்தந்தவர்கள் வரையிலும் முறையாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
  இந்த முயற்சியில் சற்றும் மனம் தளராத உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
  அன்புடன்
  லோகமாதேவி
  இலங்கைப்பயணத்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: