திருச்சபையின் பனைமர வேட்கை – 4


 

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

 உணவு வேலி

இலங்கையில் விமானநிலையத்தை விட்டு வெளியே வரும்போது மணி கிட்டத்தட்ட அதிகாலை மூன்று. திரு சந்தானா அவர்கள் அங்கே எனக்காக காத்திருந்தார்கள். அங்கிருந்த எக்ஸ்பிரஸ் ஹைவேயைப் பிடித்து என்னை அவர் மூன்றரைக்கு எல்லாம் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். நான் அறைக்குள் நுழைந்து படுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கையில் ஓட்டுனர் சொன்னார், நாம் திரிகோணமலைக்கு அடுத்துள்ள மூதூர் என்னும் இடத்திற்கு செல்லவேண்டும். அங்கே உங்களை சந்திக்க இ தே கி ம பொதுச்செயலாளர் வந்துகொண்டிருக்கிறார் என்றார். ஆகவே காலை ஆறுமணிக்கு தயாராக இருங்கள் என்றார். நான் அவரை புரியாதது போல பார்த்தேன். என்னைப்பார்த்து சற்று பரிதாபப்பட்டவர், பின்னர் என்னிடம் 6.30மணிக்கு செல்லலாம் என்று சொன்னார். திரிகோணமலை கொழும்புவிலிருந்து சுமார் 6 மணிநேர பயணம். 270 கிலோமீட்டர் வந்த நாளிலேயே பயணிக்கப்போகிறேன். அது இலங்கையை குறுக்கு வெட்டாக கடக்கின்ற ஒரு நெடும் பயணம் தான். மிகவும் பரபரப்பான ஒரு நிகழ்ச்சி நிரலில் நான் இணக்கப்பட்டிருக்கிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

அதிகாலையில் கொழும்பு நகரத்தைக் கடக்கையில் ஆங்காங்கே தனித்து நிற்கும் ஒருசில பனை மரங்களைப் பார்த்தேன்.  இந்த மண் பனைக்குரியது தான் என்று தோன்றியது. ஆம் தென்னையை பயிர்செய்பவர்கள் பனையை அப்புறப்படுத்தியே அதைச் செய்வார்கள். குறிப்பாக நீர்பாசனம் போதுமான அளவு இருக்கையில் அதுவே இலாபகரமான பயிர். இதற்குச் சான்றாக செல்லும் வழியெங்கும் செழிப்பான தென்னந்தோப்புகள் காணப்பட்டன.

காலை ஒளியில் கிராமங்களைக் கடந்தபடி சென்றோம். வாகனம் எழுபது கிலோமீட்டருக்கு மேல் வெகமாக செல்ல முடியாது. ஆங்காங்கே காவலர்கள் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். சாலை விதிகள் என்பது இலங்கையில் பெரும்பாலும் சாலையில் வரையப்பட்டது தான். அவைகளை எவரும் மீறி நான் பார்த்ததில்லை. மக்கள் கடந்து செல்ல அடையாளம் இடப்பட்டிருக்கும் இடத்தில் வாகனம் நின்று தான் புறப்படுகிறது. பாதாசாரிகளுக்கு இத்துணை மதிப்பு இந்தியாவில் இல்லவே இல்லை.

வழியெங்கும் பலர் பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்தது ஒரு அழகிய இலங்கை காட்சி. சாலைகள் சந்திக்கும் இடங்களில் மணிக்கூண்டுகளை நிறுவுவது அவர்கள் வழக்கம் போலும். நேரத்தை மிக முக்கியமாக கருதும் மக்கள். அவர்களின் நாள் பொழுது புலர்ந்ததுமே துவங்கிவிடுகிறது. மாலை 6 மணிக்கெல்லாம் கடைகள் அடைக்கப்பட துவங்கிவிடுகின்றன என்பதை இங்கிருக்கும் நாட்களில் கண்டுகொண்டேன். 9 மணிக்கு மேல் எவரையும் வெளியில் பார்ப்பது அபூர்வம்.

காலை உணவிற்காக நிறுத்தியபோது

காலை உணவிற்காக நிறுத்தியபோது

காலை 8 மணிக்கு சாலையோரத்தில் காலை உணவுக்காக நிறுத்தினோம். காலை உணவிற்காக சோறு வைக்கப்பட்டிருந்ததையும் எனது ஓட்டுனர் உட்பட அனேகர் அதை விரும்பி உண்பதையும் கவனித்தேன்.  புட்டு, இடியாப்பம் மீன், கணவாய், பன்றிகறி ஆகியவை காலையிலேயே அட்டகாசமாக வைக்கப்பட்டிருந்தன. எனது ஓட்டுனர் சாப்பிட்டது பால் சோறு ஆகும். சிங்களவர்களுக்கு, அவர்களது கலாச்சாரம் சார்ந்த எந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கீரிபாத் என்ற பால்சோறு கண்டிப்பாக இடம்பெறும். தேங்காய் பாலில் வேகவைக்கப்பட்ட இந்த உணவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிற்பாடு தான் அறிந்துகொண்டேன்.

தொடர்ந்து நாங்கள் செல்லுகையில் சாலை ஓரங்களில் மண் சட்டிகளில் தயிர் வைத்து விற்றுக்கொண்டிருந்தனர். இலங்கையின் முக்கிய உணவுகளில் தயிரும் ஒன்று. பெரும்பலும் கெட்டியான எருமைப்பாலில் தயிரை தயாரிக்கிறார்கள். ஒருமுறை தயிர் தயாரித்த சட்டியை மறுபடியும் தயிர் வைக்க பயன்படுத்துவது இல்லை. தயிர் கெட்டிபடாது. தயிரை தேனோடும் கித்துல் (Fish tail palm) என்று சொல்லப்படுகின்ற ஒலத்தி பனையிலிருந்து எடுக்கும் கூப்பனி போன்ற இனிப்பான கெட்டி திரவத்துடனும்  இணைத்து சாப்பிடுகிறர்கள். விரிந்த நிலத்தில் எருமைகளும் மாடுகளும்  நூற்றுக்கணக்கில்  மேய்ந்துகொண்டிருந்தன. மெய்ச்சல் நிலம் செழிப்பாகவே இருந்தது.

பனை உணவு வேலி

பனை உணவு வேலி

செல்லும் வழியில் மின்னேரியா தேசிய பூங்காவைக் கடந்து சென்றோம்.  வனப் பயணம் செல்லும் நுழைவாயிலைக் கடக்கையில் எங்களுக்கு அருகில் ஒரு யானை நின்று மேய்ந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் யானைகள் இருக்கும் வனப்பகுதிகளை ஓட்டிய சாலையில் மின்வேலி இட்டிருக்கிறார்கள். சாலையின் இருமருங்கிலும் மின்சார வேலியிட்டு யானைகள் நுழையாதவாறு பார்த்துக்கொள்ளுகிறார்கள். இலங்கையில் தான் முதன் முறையாக மின்சார வேலிகளுக்குப் பதில் பனைமரங்களை நட்டு வேலி அமைக்கும் பணியினை முன்னெடுத்தது குறிப்பிடத்தகுந்தது. பனைமரங்களால் அமைக்கப்படும் வேலியினை உணவு வேலி என்று குறிப்பிடுகிறார்கள்.

பனைமர உணவு வேலி என்பதை, கானுயிர் பதுகாப்புத் துறை, கொப்பேகடுவா வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பனை அபிவிருத்தி சபை ஆகியோரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணந்து முன்னெடுக்கப்படுகிறது. மிகவும் முக்கியமான இம்முயற்சி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இலங்கையில் யாத்திரம் அல்ல இந்தியாவிலும், ஆசியா முழுவதும் ஏன் ஆப்பிரிக்கா வரை இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். மக்களும் யானையும் உட்பட பிற வன உயிர்களும் காக்கப்பட இது ஒரு மிகச்சிறப்பான திட்டம் என்றே நான் கருதுகிறேன். இதை முன்னெடுக்கும் மனிதர்களை நான் நேரில் சந்திக்க இயலாதது எனக்கு வருத்தமே.

யானையும் மனிதனும் மோதுகின்ற ஒரு சூழல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியினால் என்றால் அது மிகையாகாது. காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்கள் பெருகிவிட்ட தருணத்தில் யானைகளின் வாழ்விடமும் வழித்தடங்களும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிறது. மேலும் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை பிரித்துச் செல்லும் சாலைகள் பலவும் யானைகளின் வாழ்விடங்களை அழித்தும் கலைத்தும்  தான் இடப்பட்டிருக்கின்றன. இவ்வகையில் யானையும் மனிதனும் மோதுவதால் இரு பக்கமும் ஏற்படும் இழப்புகளை இன்று கவனத்துடன் கையாளப்படவேண்டிய ஒன்றாக  சமுக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கவனத்துக்குட்படுத்துகிறார்கள்.

யானைகள் குடியிருப்புகளில் நுழையும்தோறும் பயிர்கள் நாசமடைந்து மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. யானைகள் சுவை விரும்பிகள் கூட.  மிகவும் சுவையென கருதும் உணவுகளை அவைத் தேடிச் சென்று விரும்பி உண்ணும். நெல், வாழை, கரும்பு, மற்றும் தென்னை ஓலைகள் அவைகளின் சுவைப்பட்டியலில் முதன்மையானவைகள். இவைகளை உண்ண வருகையில் யானையின் பெரிய உருவத்தால் இயல்பாகவே பயிர்கள் நாசமடைகின்றன. அவைகளை எதிர்க்கொள்ளும் மனிதர்களின் உயிருக்கும் சில நேரங்களில் பெரும் ஆபத்தாக  அது அமைகிறது. மேலும் மழைக்குறைவுபடும் வறட்சி காலங்களில், யானைகள் தண்ணீர் தேடி காட்டிலிருந்து வேளாண் பகுதிகளுக்கு வருவது அதிகரித்திருக்கிறது.

மின்னேரியா தேசிய பூங்கா அருகில்

மின்னேரியா தேசிய பூங்கா அருகில்

இவ்வித சூழலினால் வேளாண்மையை நம்பியிருக்கும்  மனிதன் யானைகளை தனது விரோதியாக பார்க்க தலைப்படுகிறான். யானைகளுக்கு விஷம் வைத்த நிகழ்ச்சிகள் இந்தியாவில் பதிவாகியிருக்கின்றன. இலங்கையில் ஒரு யானைக் குட்டி, வாகனங்களால் மோதப்பட்டு இறந்ததால் தாய் யானை ஒரே நேரத்தில் 15 வாகனங்களை சேதப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 350 மரணங்கள் யானையினால் நிகழ்த்தப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அபாயகரமான நிலையில் குறைந்து  வரும் காடுகளைப் பாதுகாக்க ஒரு பகுதியில் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டாலும் யானைகளை கட்டுப்படுத்தும் வண்ணமாக மின்சார வேலிகள் அமைப்பது வழக்கத்திற்கு வந்தன. 2007 ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பிற்காக கோவை சென்றபோது தான் இவ்விதமான மின்சார வேலிகளை நான் முதன் முதலில் பார்த்தேன்.

யானைகள் ஒரு காலத்தில் தந்தங்களுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டது. யானைகள் மனிதர்களால் கோவில்களில் வளர்க்கப்படுகையில் மேலதிக துன்பங்களும் அவைகளுக்கு ஏற்படுவதை நாம் சமீபகாலங்களில் பார்க்கிறோம். தங்கள் வாழ்வாதாரம் அழிகையில் விவசாயிகள் யானை வேட்டையாடுபவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்துவருவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  என்னதான் உருவத்தில் பெரிதாயிருந்தாலும், காட்டின் அரசனாகவே கருதப்பட்டாலும் இம்மோதலில் அதிகம் இழந்தவைகள் யானைகளே என்பதே என் கணிப்பு.

யானைகளால் வரும் தொல்லைகளிலிருந்து காப்பதற்கு மனிதர்கள் இரண்டுவிதமான உத்திகளைக் கையாளுகிறார்கள் ஒன்று தற்காலிகமாக யானைகளை விரட்ட ஆட்களை அமர்த்தி காவல் செய்வது. உயரமான மரங்களில் பரண் அமைத்து காவல் காப்பது, தேவை வரும்போது தீப்பந்தங்களுடன் சென்று சத்தமிட்டு வெடி வெடித்து யானைகளை துரத்துவது போன்ற செயல்களை விவசாயிகளும் காட்டிலகா ஊழியர்களும் செய்துவருகிறார்கள். இவைகள் ஓரளவிற்கு பலன் தருகிறது என்றே நம்புகிறார்கள்.

ஆனால் நீண்டகால தேவை இன்று உருவாகியுள்ளதை மறுக்க இயலாது. அப்படியிருக்க  அவைகளைச் செய்கையில், பெருமளவில் காட்டைச் சார்ந்து வாழும் மக்களால் நீண்டகால வேலியமைப்புத் திட்டங்கள் வெறுக்கப்படுகின்றன. குறிப்பாக மின்சார வேலியினால் கால்நடைகளும் பாதிக்கப்படுவதை காணமுடியும்.

இந்தியாவில் மூங்கில்களைக்கொண்டு வேலியமைத்த முயற்சிகளுக்கு மக்களின் எதிர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் கானுயிர்கள் இவைகளினுள் பல்கி பெருகுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்கையில் தான் பனைமரங்களைக் கொண்டு உயிர் வேலி அமைப்பது முக்கியமான ஒன்றாக முன்னெடுக்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பனைமரங்களை எல்லைகளைக் குறிப்பிட நடுவதும் வேலியோரங்களில் நடுவதும் தொன்றுதொட்டு வரும் ஒரு வழக்கம். இவ்வழக்கைத்தையே சற்று மாறுதல் செய்து உயிர் வேலி அமைக்க இலங்கையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 10 அடி இடைவெளியில் இரு வரிசைகளைக்கொண்ட பனைமரங்கள் குறுக்காக அமைக்கப்படும்பொழுது உணவு வேலி பலம் வய்ந்ததாக மாறிவிடுகிறது. இவ்விதமான முயற்சியில் முதலில் தற்காலிகமான மின்சார வேலிகளை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், மின் வேலிகள் இல்லாவிடினும் இவைகளை நாம் பராமரிக்க இயலும். மின் வேலிக்கும், பனை மரங்களைக் கொண்டு அமைக்கும் உணவு வேலிக்கும், அமைப்பதற்கு ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு காலங்களின் அளவு பெருமளவில் வேறுபடுகின்றது.

சுமார் ஒருகிலோ மீட்டர் மின்வேலி அமைக்க சுமார் 2.5 லெட்சரூபாய் ஆகும் என்றும் அதுவே பனை விதைகளை ஊன்ற சுமார் 20 ஆயிரம் மட்டுமே தேவைப்படும். மேலும் மின்வேலிக்கு மாதம் தோறும் பராமரிப்பு செலவு மின்கட்டணமாக செலுத்தப்படுகையில் பனை உணவு வேலிக்கு முதல் மூன்று வருடங்கள் மட்டுமே பராமரிப்பு தேவையாகிறது. இதுவும் மின் செலவில் ஐந்தில் ஒரு பங்குதான் ஆகும். இறுதியாக மின் வேலியின் ஆயுள் சுமார் 10 வருடங்கள் ஆனால் பனை உணவு வேலியோ எப்படியும் 100 வருடங்கள் இருக்கும் மேலும் அது யானைகளுக்கு உணவும் மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தையும்  அளிக்கும் இரட்டை பயனுடையதாக இருக்கிறது.

இவைகளிலும் குறை இருக்கலாம். ஆனால் தனியார் தோட்டங்களைப் பாதுகாக்க மட்டுமாவது முதலில் இவைகளைச் செய்ய முன்வரலாம். பின்வரும் காலங்களில் தற்போது அமைத்திருக்கும் மின்வேலிகளை அப்புறப்படுத்திவிட்டு பனையின் வளங்களை பயன்படுத்த இயலும்.  கிருஷ்னகிரியைச் சார்ந்த திரு மணிவண்ணன் அவர்களை நான் தொடர்புகொண்டபோது தன்னிடமிருந்து இம்முறை விதைகளை வாங்கிச்சென்றவர் இதே காரணத்தையே கூறினார் என்றார். தமிழகமும், இந்தியாவும் ஏன் ஆப்பிரிக்க காடுகளும் இவைகளை பின்பற்றி பயன் பெறலாம் என்றே கருதுகிறேன்.

குப்பை மேயும் யானைகள்

குப்பை மேயும் யானைகள்

அங்கிருந்து இன்னும் சற்று தூரம் சென்றபோது மூன்று யானைகள் குப்பையை மேய்ந்துகொண்டிருந்தன. குப்பைகளில் பெருவாரியானவை பிளாஸ்டிக் பைகளும், உணவு பொதிய பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களும் ஆகும். இதுவேறு யானைகளுக்கு எவ்வித பிரச்சனைகளை கொண்டுவரும் என்று தெரியாது. குப்பை மேயும் யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வகையில் பார்க்கையில் உணவு வேலிக்கான தேவை இருக்கிறது என்றே நாம் உணருகிறோம். அதற்கான  முயற்சிகளை பரிந்துறை செய்வதில் தவறில்லை தானே.

திருமறையில் தான் யானைகளைக் குறித்து கூறவில்லையே, யானைகளைக் குறித்து பேசுகிறவர்கள் யாவும் வன உயிர்  ஆர்வலர்கள் இல்லையா?. அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும் நாம் இறைப்பணியை மட்டும் செய்வோம் என்பவர்களது கவனத்திற்காக ஒரு திருமறைப்பகுதியை குறிப்பிடவேண்டும்.  லெந்து காலத்திலும் பெரிய வெள்ளி அன்றும் வாசிக்கப்படும் திருப்பாடல் 22 தான் அது. கையறு நிலையில் கடவுளை நோக்கி மன்றாடும் இப்பாடல் மனிதர்களை விலங்குகள் சூழும் போது ஏற்படும் உச்சகட்ட பய உணர்வுகளை விவரிக்கிறது. இவ்வேளையில் ஆண்டவர் அருகில் இருப்பதே தனக்கு அரண் என திருப்படலாசிரியர் பாடுகிறார்.

11 என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;

ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;

மேலும், உதவி செய்வார் யாருமில்லை.

12 காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன;

பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.

13 அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;

இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

14 நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;

என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;

என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;

என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.

15 என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;

என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது;

என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது;

நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்;

என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.

கடவுள் மனிதர்களை மாத்திரமல்ல வன உயிர்களையும் நேசிக்கிறார் என்பதை விளக்கும் வசனங்களையும் நாம் அறிந்திருக்கிறோம். என்றாலும் அவைகளில் ஒருசிலவற்றை ஒருமுறை நாம் நினைவுகூறத்தக்க வகையில் எடுத்துக்கூறுகிறேன்.

10 பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;

அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;

11 அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்;

காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;

12 நீருற்றுகளின் அருகில்

வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன;

அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;

13 உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;

உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.

14 கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்;

மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்;

இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு

உணவு கிடைக்கச் செய்கின்றீர்;

15 மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும்,

முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்

மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.

16 ஆண்டவரின் மரங்களுக்கு –

லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு –

நிறைய நீர் கிடைக்கின்றது.

17 அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன;

தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.

18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;

கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.

19 காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்;

ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.

20 இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது;

அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.

21 இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன;

அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.

22 கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று

தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.

23 அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;

அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை!

நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!

பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;

அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக

வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.

26 அங்கே கப்பல்கள் செல்கின்றன;

அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! [2]

27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று

இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.

28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன;

நீர் உமது கையைத் திறக்க,

அவை நலன்களால் நிறைவுறுகின்றன.

29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்;

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,

அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;

மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

(திருப்பாடல் 104, திருவிவிலியம்)

கடவுள் இவ்வுயிர்களைக் கப்பாற்ற முற்படுகையில் அவைகளுக்கு இடையூறு செய்பவர்கள் கடவுளின் நீதி செயலுக்கு எதிராக இருப்போர் என்பதை மேலும் விளக்க வேண்டுமா?

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 4”

 1. Logamadevi Annadurai Says:

  இலங்கையில் எனக்கு மிக பிடித்தமான பால் சோற்றுக்கட்டிகளையும் மண்சட்டியில் இருக்கும் நல்ல மணமுள்ள கட்டித்தயிரையும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த்து விட்டீர்கள் காட்சன்
  பனையைபோலவே யானைகளைக்குறித்தும் ஆழமான பதிவு இது. உயிர்வேலித்திட்டம் மிக அருமை. அத்தனை அதிக அளவிலான பனைமரங்களை நெருக்கமாக வரிசையாக பார்ப்பது பெரும் நிம்மதியையும் நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது.
  பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் விலங்குகளின் வரிசையில் யானைகளும் வந்துவிட்டது மாபெரும் அவலம்
  //கொட்டப்பட்ட நீர் போல ஆனேன்// என்ன ஒரு கவித்துவமான வசனம் இது?
  தொடர்ந்து எழுத வாழ்த்துக்களுடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: