திருச்சபையின் பனைமர வேட்கை – 5


(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

கடவுளின் தோட்டம் 

திரிகோணமலை செல்லும் சாலை

திரிகோணமலை செல்லும் சாலை

சாலைகள் மிக நேர்த்தியாக இருந்தன. அவைகள் சீன அரசு இலங்கைக்காக அமைத்துக்கொடுக்கிறதாக  சொன்னார்கள். இந்திய அரசு இலங்கையில் இரயில் தடங்களை சீரமைத்து கொடுக்கிறது. முன்னிருக்கையில் அமர்ந்திருக்கையில் கண்டிப்பாக பாதுகாப்பு பட்டையை இணைத்துக்கொள்ள ஓட்டுனர் அறிவுறுத்திக்கொண்டே வந்தார்.  அனைத்தும் அபராதத்தின்மேல் உள்ள பயத்தினால் தான். இந்தியாவிலோ, நூறு ரூபாய் கொடுத்து தப்பித்துக்கொள்ளலாம் எனும் தைரியம் அனைத்து சாலை விதிகளை மீறும் எண்ணத்திற்கு பின்பும் உண்டு. மேலும் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த சுத்தமான மண்ணின் வாசனையில் கட்டுண்டேன்.

முறிந்த பனையின்மேல் அமர்ந்திருக்கும் ஓணான்

முறிந்த பனையின்மேல் அமர்ந்திருக்கும் ஓணான்

எங்களது பயணம் தொடர்ந்து செல்லுகையில் வழியில் சாலையைக் கடக்கும் ஒரு கீரிப்பிள்ளையப்யைப்பார்த்தேன். கீரிப்பிள்ளைகள் ஏனோ எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு உயிரினம். நானும் எனது கல்லூரி தோழன் வின்ஸ்டனும் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணிக்கையில் தவறாது காணும் கானுயிர் இதுதான். மோப்ப சக்தி மிகுந்த கிரிப்பிள்ளையை நாங்கள் முதன்முதலில் கோதையாறு செல்லும் வழியில் பார்த்தபோது இருவருமே அதன் மூக்கின்  அழகில் மயங்கித்தான் போனோம். ரசாயனியில் ஆரோனை பள்ளிகூடம் அனுப்ப வருகையில் எங்களைத் தாண்டி ஒரு கீரிப்பிள்ளை ஓட்டமும் நடையுமாக கடந்து செல்லுவது வழக்கம். கொஞ்ச நாட்களாக அதைக் காணவில்லை. ஆனால் சமீபத்தில் ஒருநாள் வாலறுந்த பாம்பு ஒன்று எங்களைக் கடந்து சென்றது.

பொதுவாக கீரியும் பாம்பும் வைத்து வித்தைக் காட்டுவதை நாம் அறிவோம். கீரி எலி பாம்பு போன்றவற்றை வேட்டையாடுகின்ற ஒன்று. ஆகவே பனைமரத்திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன். வடலி பனைகளில் பெரும்பாலும் மட்டைகள் இழைக்கப்படாமல் இருக்கையில் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆகவே பனங்காடுகளில் கூட கீரிகள் தங்கியிருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

தேள்களைக் கூட சுவைத்துச்சாப்பிடும் வழக்கம் கீரிப்பிள்ளைக்கு உண்டு. தென்னை மரத்திற்கு தேள் கொட்டினால் பனை மரத்தில்  நெறி கட்டியதாம், என்கிற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பனையே தேள்களின் வாழ்விடம் தான். பனை பத்தைகளின் அடியில் தேள் சுகமாக தங்கியிருக்கும். ஒருவேளை கீரிப்பிள்ளை இவைகளை விரும்பி சாப்பிடுவதால் பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் வாழுகின்றனவா? பொதுவாக பனைமரங்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக தேளும் பாம்புகளும்  காணப்படுவதாக கோவூர் குறிப்பிடுகிறார். இது கீரியின்  வேட்டைக்கு போதுமானது அல்ல என்றாலும் கீரி தனது வேட்டைக்கு பனங்காட்டினுள் நுழையும் என்பதை மறுக்க இயலாது.

வழியெங்கும் மயில்கள் வயல்களில் மேய்ந்தபடி இருந்தன.  மயில்களும் பாம்பு, ஓணான், பல்லி உள்ளிட்ட சிறு பூச்சிகளை உண்ணும்  பறவை தான். இலங்கையில் கானுயிர்கள் சுதந்திரமாக திரிவதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவ்வளவு சுதந்திரம் இருக்கும் இடங்களில் கண்டிப்பாக ஒருசிலர் வேட்டையாடிக்கொண்டிருப்பார்கள். நான் இலங்கை பத்திரிகையில் வேட்டையாடியவர்களை கைது செய்த நிகழ்ச்சியை வாசித்தது நினைவிற்கு வருகிறது.

தொடர்ந்து செல்லுகையில் சாலையைக் கடந்து செல்லும் ஒரு உடும்பைக்கண்டேன்.  உடும்பு ரத்தம் உடும்பு கறி போன்றவைக்காக இவைகள் வேட்டையாடப்படுகின்றன. சாலையைக் கடக்கையில் இவைகள் சாலையில் அடிபட்டு இறந்துவிடவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. நான் சிறுவனாக இருக்கையில் பாட்டி வீட்டின் அருகில் உடும்பு ஒன்று கற்குவியல்களுக்கிடையில் இருந்து பிடிபட்டது. பார்ப்பதற்கு ஓணானைப்போலவே இருந்தாலும் உடும்பின் தோல் சற்று கெட்டியானது, கறிய நிறத்தில் சற்று அதிக நீளமாக காணப்பட்டது. பக்கத்து வீட்டு அக்கா அதனை கறிவைக்க எடுத்துச்சென்றார்கள். இதனை எப்படி கறி வைப்பார்கள் என எண்ணிக்கொண்டேன். முற்காலங்களில் போர் சமயத்தில் உடும்பின்மேல் கயிற்றைக் கட்டி அதனை கோட்டை மேல் வீசினால் உடும்புகள் தனது பிடியை விடாது பற்றியிருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த பிடியினைப் பற்றி ஏறும் போர்வீர்கள் இருந்திருக்கிறார்கள். சில திருடர்களும் உடும்பை பெரிய வீடுகளுக்குள் புகுந்து திருட இவ்விதம் பயன்படுத்தியிருக்கிறதாக  கதைகள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறேன். “உடும்பு பிடி” என்ப்து  இதிலிருந்து அனுபவத்திலிருந்து கிளைத்த வழக்கச் சொல் தான் போலும். உடும்பைப்பிடிப்பவர்கள் அதன் வாலைக்கொண்டே அதனைக் கட்டி, அந்த வாலின் நுனியை அதன் முன்னங்கால்களில் கொடுத்து விடுவார்களாம். அப்புறம் என்னதான் வந்தாலும் உடும்பு தனது பிடியை விடாதாம்.

பனைமரமும் உடும்பும் காட்டுத்தீயில் தப்பிபிழத்த உயிரினங்கள் போல. பல ஊழி காலமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் தப்பிப்பிழைக்கும் தன்மை பனைமரத்திற்கு இருக்கிறது. இலங்கையில் உள்ள ஒரு நபரோடு பேசிக்கொண்டிருந்தபோது, உடும்பு பனை மரத்தில் ஏறிவிட்டால், பிற்பாடு அதனை பிடிக்க இயலாது என்று கூறினார். உடும்பிற்கு அடைக்கலம் கொடுக்கும் பனைமரத்தை எண்ணிப் பார்க்கையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதோ என்று தோன்றுகின்றது.

இலங்கையில் முறிந்த பனையின் மேல் அமர்ந்திருக்கும் ஓணானையும் பார்த்தேன். எனக்கென பொறுமையாக அது அமர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தது.  பனையின்மேல் ஓணான் ஒய்யாரமாக இருக்கும் காட்சி நம்மை ஜுராஸ்ஸிக் யுகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்.

சிறுவயது விடுமுறை நாட்களில் எங்கள் பாட்டி வீட்டில் நான் தங்கியிருக்கையில், ஓணானை பிடித்து உரலில் இட்டு இடித்து பிழிந்து சாறு கொடுப்பது மருந்து என எண்ணப்பட்டது. பொதுவாக வர்ம அடி பட்டவர்களுக்கு ஓணானை இப்படி இடித்து கொடுப்பார்கள்.

நாங்கள் சிறுவர்களாக  இருக்கையில் ஓணானைப் பார்ப்பது கெட்ட சகுனம் என்று உடன் மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியே அணிலைப்பார்த்தால் அது நல்ல சகுனம் என்றும் கருதப்பட்டது. ஒருவேளை ஓணானைப் பார்த்துவிட்டால் உடனடியாக ஒரு பனையை பார்த்தால் “தோஷம்” தீர்ந்துவிடும் என்பது சிறுவர்களுக்கே உரிய சாதிக்கப்படக்கூடிய தீர்வு. சிறு வயதில் அணில் ஒரு அழகிய கதாநாயக அந்தஸ்து கொண்ட “வளர்க்கப்பட” வேண்டிய  ஒரு உயிரினமாகவும் ஓணான் வேட்டையடப்படவேண்டிய ஒரு உயிரினமுமாகவே பார்க்கப்பட்டது. அதற்கு ராமர் கட்டிய பாலமும் ஒரு காரணம்.

பல்வேறு பூச்சிகள் பனைமரத்தில் வாழுகின்றபடியால் அனேக உயிரினங்கள் அவைகளை கபளீகரம் செய்ய வருகின்றன. பதனீரில் பல்லிவிழுந்தாலும் அதில் விஷம் கிடையாது எனச் சொல்லப்படுவதை தென் மாவட்டங்களில் அதிகம் கேள்விப்படமுடியும்.

இலங்கை மக்கள் தயிரோடு தேனை இணைத்து சாப்பிடுவதைக் குறிப்பிட்டிருந்தேன், பனைக்கும் தேனீக்குமான தொடர்பை பனைமரச்சாலையில் விரிவாக சொல்லியிருக்கிறேன். இலங்கையைப் பொறுத்தவரையில் பனைமரம் தேனீக்களுக்கு முக்கியமான கூடு. பனைமர பொந்துக்குள் வாழுகின்ற தேனீக்களும் பனை மர பூக்களிலிருந்து தேனை உறிஞ்சி  பிற்பாடு கொம்புகளிலும் உயர்ந்த பாறை வெடிப்புகளிலும் கூடுகட்டுகின்ற தேனீக்களும் இருக்கின்றன. இலங்கையில் சாலையோரம் தேன் விற்றுக்கொண்டிருந்த நபர்களைக் கூட நான் பார்த்தேன். எனக்கு விருந்தளித்த பாக்கியராஜா அவர்கள் குடும்பத்தினர், தயிரும் தேனும் சேர்த்தே கொடுத்தார்கள். தேன் அவர்கள் சொந்த கிராமமான மன்னாருக்கு அருகில் உள்ள முருங்கன் என்னும் கிராமத்திலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். போர் சமயங்களில் பல பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆகவே தேனீக்களின் மற்றும் பனை சார்ந்து வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கலாம்.

பயணம் தொடர்கையில் பச்சைவண்ண குருவிகளைப் பார்த்தேன். அவைகளை நான் நன்கு அறிவேன். பனையில் வரும் தேனீக்களை விரும்பி சாப்பிடும் “பச்சை பஞ்சுருட்டான்” (Bee Eater) தான் அவை. அதுபோலவே தேனீக்களை சாப்பிடும் மைனாக்களும் ஏராளமாக காணப்பட்டது.

இவைகள் அனைத்தும் பனையுடன் தொடர்புடையவைகள் என்பதே எனக்கு அந்த நெடும்பயணத்தை இனிதாக மாற்றியது. பனைமரம் தனித்து ஒரு சிறிய மற்றும் எளிய மரமாக கண்களுக்குத் தென்பட்டாலும் ஒரு சிறிய காட்டிற்கு இணையாக அது செயல்படுகிறது. நான் டாக்டர். ஷோபன ராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது பொதுவாக ஒரு தாவரத்தைச் சார்ந்து எத்தனை உயிரினங்கள் காணப்படும் எனக் கேட்டேன். அவர் சுமார் 20 முதல் 30 உயிரினங்கள் இருக்கலாம் என்றார். அப்படியானால் பனை மரத்தைச் சர்ந்து வாழும் உயிரினங்களைக் குறித்து கூறுங்கள் எனக் கேட்டேன், அதற்கு அவர், அதனை எவரும் பட்டியலிட்டிருக்க வாய்ப்பு இல்லை ஆனால் கண்டிப்பாக 100க்கு அதிகமான உயிரினங்களை நாம் பட்டியலிடமுடியும் என்றார். பனை சார்ந்த ஒரு நிலம் நோக்கி நான் போய்க்கொண்டிருக்கிறேன் என்பதற்கான ஆதாரமாகவே இவைகளை நான் கூதூகலத்துடன் பார்த்தேன்.

கந்தளாய் நீர்தேக்கம்

கந்தளாய் நீர்தேக்கம்

இவ்வாறு மகிழ்வுடன் எங்கள் பயணம் சென்றுகொண்டிருக்கையில் பனைமரங்களின் சற்று கூட்டம் அதிகமாக தெரிய ஆரம்பித்தது.  நாங்கள் கந்தளாய் நீர் தேக்கம் அருகில் வந்தபோது ஓட்டுனர் கூறினர் நாம் மூதூருக்கு அருகில் வந்துவிட்டோம், அவர்கள் வர இன்னும் நேரம் இருக்கிறது, அகவே நீங்கள் நின்று சற்று பொறுமையாக இவைகளைப் பார்த்து வாருங்கள் என்றார்.  அவர் என்னை இறக்கிவிட்ட இடத்தில் இருந்து பார்த்தபோது நீர் தேக்கத்திற்கு அப்பால் பனை மரங்கள் கூட்டமாக நிற்பதைக் காணமுடிந்தது. கந்தளாய் நீர் தேக்கம் பிரமாண்டமானது மாத்திரம் அல்ல அது பழைமையானதும் கூட. கி.பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நீர்தேக்கம் இன்றும் பெருமளவில் பயன் கொடுக்கும் நீர் நிலையாக பேணப்படுகிறது. அதன் பின் எங்கள் பயணத்தில் நாங்கள் மூதூர் செல்லும்வரை பனைமரங்கள் எங்கள் கண்களுக்கு மறைவாகப்போகவில்லை. பெரும் திரளான பனைமரக்கூட்டங்கள் எனக் கூற முடியாது என்றாலும் அங்காங்கே அவைகள் நின்றுகொண்டிருந்ததே எனக்கு பெரும் மனக்கிளர்ச்சியைக் கொடுத்தது.

மெதடிஸ்ட் திருச்சபை, மூதூர்

மெதடிஸ்ட் திருச்சபை, மூதூர்

இலங்கையின் முதல் நாள் குறுக்குவெட்டு பயணம், ஏதேன் எனும் கடவுளின் தோட்டம் வழியான ஒரு பயணமாக அதை நான் உருவகித்தேன். ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு தாவரமும் கடவுளின் அழகிய சிந்தனையில் உதித்த அற்புத வடிவங்கள், வண்ணங்கள் கொண்டு அவரின் படைப்பை செழுமைப்படுத்தும் சீரிய நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கிறதை உணரமுடிந்தது. 270 கிலோ மீட்டர் பயணம் அத்துணை மகிழ்வான ஒன்றாக அமையும் என நான் நினைத்திருக்கவில்லை. மூதூர் சென்று இறங்குகையில் உற்சாகம் கொப்பளிக்கும் ஒரு சிறுவனாக மனதளவில் மாறிவிட்டேன்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 5”

 1. Logamadevi Annadurai Says:

  அன்பின் காட்சன்
  திரிகோணமலை செல்லும் சாலையில் துவங்கிய பதிவு, மெல்ல அதை சீனர்கள் அமைத்தது என்பதில் ஆரம்பித்து சாலை விதிகள் கடைப்பிடிக்கப்படுவதும் குப்பைகள் கொட்டப்படாத மண்வாசனை வீசும் சாலைகளையும் சொல்லிவிட்டு, கீரிப்பிள்ளை வாலறுந்த பாம்பு, ஓணான், அணில், தேனீக்களை சாப்பிடும் பறவைகள், தேள், மயில், உடும்பு, என பனையுடனும், உங்களின் வாழ்வுடனும் தொடர்புடைய பல உயிரினங்களை சொல்லி விட்டீர்கள். தயிருடன் தேன் கலந்து உண்பதையும் பனை சார்ந்த தேனிக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்க்கலாம் என்பதையும் தேனிக்களையும் அழகாய் தொடர்பு படுத்தினீர்கள்
  கந்தளாய் நீர்தேக்கம் புகைப்படம் அருமை
  மிக தெளிவான துல்லியமான புகைப்படம். கறுத்துக்கொண்டு வரும் மேகங்களையும் குளிர்காற்றையும் கூட உணர முடிந்தது அதிலிருந்து .
  அந்த ஓணான் புகைப்படமும் அழகு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: