திருச்சபையின் பனைமர வேட்கை – 6


திருச்சபையின் பனைமர வேட்கை – 6

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

நினைவுகளை குணப்படுத்துதல்

மூதூர் ஆலய வளாகத்தில் உள்ள வேப்பமரத்திலிருந்து பச்சைக்கிளிகள் கீச்சிட்டபடி எழுந்து அமைந்தன. பெரும்பாலும் கிளிகளின் கூடு மொட்டைப் பனை என்று சொல்லப்படும் இறந்துபோன பனைகளில் உள்ள பொந்து தான். எவரும் தொந்தரவு செய்யாத இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் அவைகள் காணப்படுகின்றன. மூதூரைச் சுற்றிலும் பனை மரங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது.

பயணக் களைப்பை உணராமல் நான் உற்சாகத்துடன் இருந்ததாலும், இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றின் பொதுச்செயலாளர் வந்துகொண்டிருந்ததாலும் இருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என என் கை பரபரத்தது. ஆகவே எனது ஓட்டுனரையே ஓலையில் வரைய தலைப்பட்டேன். ஓட்டுனருக்கு ஒரு நிழல் உருவத்தை வரைந்து கொடுத்து ஆச்சரியத்தில் மூழ்கடித்த பின்னும் அவர்கள் வந்து  சேரவில்லை. அவர்கள் மிக அருகில் வந்துகொண்டிருப்பதாக ஓட்டுனர் சொன்னார். ஆகவே நான் அவர்கள் வரும் வழியிலேயே மூதூரைச் சுற்றிப்பார்க்க கிளம்பினேன். ஐந்து நிமிடத்திற்குள் நான் செல்லும் வழியில் தானே அவர்கள் வரும் வாகனத்தைப் பார்த்தேன். ஒரு யூகம் தான் என்றாலும் வாகனத்தைக் கைகாட்டி நிறுத்தினேன். நான் நினைத்ததுபோலவே ஜோசப் அவர்கள் உள்ளே இருந்தார்கள். கைகுலுக்கிவிட்டு, முன்னால் செல்லுங்கள் நான் நடந்தே வருகிறேன் என்றேன். வாகனம் முன்னால் சென்றது, அதன் பின்னால் நான் நடக்கையில் எனக்குள் சில எண்ணங்கள் எழும்பியதை தவிர்க்க இயலவில்லை. உற்சாகம் இழந்து காணப்படுகிறாரோ என நினைத்துக்கொண்டேன். யாழ்பாணத்திலிருந்து பயணிப்பதால் களைப்பாக இருக்கலாம். ஆனாலும் என்னை பார்த்த பின் சம்பிராதயமான புன்னகையை செய்தது ஏனோ? நான் இலங்கை வந்தது பிடிக்கவில்லையா அல்லது நான் வந்த நேரம் தான் சரியில்லையா என்று நினைத்தபடியே ஆலயவளாகத்தினுள் நுழைந்தேன்.

ஆலய வளாகத்தினுள் மீண்டும் நான் அவரைப் பார்த்தபோது அவர் முற்றிலும் வேறு ஒரு மனிதராக இருந்தார். இரண்டு நிமிடத்திற்கு முன்  பார்த்த முகத்திற்கும் தற்போதைய முகத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மகிழ்வே உருவான அந்த முகத்துடன் என்னைத் திரும்பி பார்த்தவர், வாங்க என்று சொல்லி என்னைக் கட்டிக்கொண்டார். “அங்கே வைத்துப் பார்க்கயிலே உங்களை அடையாளம் தெரியேலே” என்று சொன்னார். எனக்கு அப்போது தான் சற்று நிம்மதி வந்தது. என்னை அவர் வழியில் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னைக் காணும் அவசரத்தில் தான் என்னையே அவர் தவிர்த்திருக்கிறார். ஆம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் பார்ப்பதல்லவா? வேடிக்கையான நிகழ்ச்சிதான்.

நீங்கள் உடனடியாக உணவு உண்ணுங்கள் என்று கூறி எங்களுக்காக வாங்கி வந்திருந்த  உணவு பொட்டலங்களைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, நீங்கள் சாப்பிடுங்கள், நான் ஒரு சிறு அமர்வை நடத்திக்கொண்டிருக்கிறேன் என்றார். பாட்டாளிபுரம் என்ற கிராமத்திலிருந்து ஒரு இளம்பெண்ணும் சிறுமியும் வந்திருந்தார்கள்.  எனக்கு பாட்டாளிபுரத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட  நிகழ்ச்சியைக் குறித்து பேசுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். அவர் இறுதிவரை சாப்பிடவே வரவில்லை. கோவில் குட்டிக்கு சாப்பாட்டைக் கொடுத்துவிட்டார்.

சாப்பிட்டு முடித்தபின்பு நானும் அவர்களோடு அமர்வில் இணைந்துகொண்டபோது நீங்கள் எழுதியிருக்கிற பொருட்களைக் குறித்த தெளிவுகள் எங்களுக்கு இல்லை சற்று விளக்கிச் சொல்ல இயலுமா என்று கேட்டார்கள்.

நான் ஸ்கேல் (Scale) என எழுதியிருந்ததை – ரூலர் (Ruler) அல்லது அடிமட்டம் என்று மாற்றிக்கொண்டார்கள்

தெர்மாகோல்  கட்டர்  என நான் எழுதியதை – பேப்பர் கட்டர் (Paper Cutter) அல்லது கத்தி என்றார்கள்

சார்ட் பேப்பர் (Chart Paper) என எழுதியிருந்ததை – பிளாக் போர்ட் (Black Board) என மாற்றிக்கொன்Dட்ஆர்கள்

ஃபெவிகால் (Fevicol) என எழுதியிருந்ததை பைன்டர் கம் (Binder gum) என பதித்துக்கொண்டார்கள்

சாண்ட் பேப்பர் என எழுதியதை தேய்ப்புத்தாள் என எழுதுவார்களோ என நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அதனை மணல் தாள் என எழுதிக்கொண்டார்கள்.

எனக்கு தலையைச் சுற்றியது. தகவல் தொடர்பில் இவ்வளவு பெரிய இடைவெளியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அந்த அமர்வு ஒரு பெரும் திறப்பாக அமைந்தது. கடைசியில் பயிற்சிக்கான  பொருட்கள் என்ன என்ன என்பதை அவர்களுக்கு ஓரளவு புரியவைத்துவிட்டேன் என நிம்மதி கொண்டேன். பயிற்சிக்குத் தேவையான  ஓலைகளைக்குறித்தும் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

மூதூர் போதகர் அங்கே பொறுப்பெடுத்து ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை . நாங்கள் சென்ற வேளையில் அலுவல் நிமித்தமாக அவர் வேறு எங்கோ சென்றிருந்தார். ஆகையினால் அவருக்காக எடுத்துவந்த பொருட்களை ஜோசப் அவர்கள் கோவில்குட்டியிடம் கொடுத்ததைப் பார்த்தேன். குழந்தைகளுக்கான மன்றாட்டு சார்ந்த சில புத்தகங்களும் அட்டைகளும் வேனிலிருந்து இறக்கப்பட்டன. அப்பொழுது முன்னூறு பக்கம் அளவில் காணப்பட்ட ஒரு பெரிய புத்தகத்தில் ஒருசிலவற்றையும் அவர்களுக்கு கொடுத்து யார் யார் அதனை வாசிக்கவேண்டும் என பட்டியலையும் கொடுத்தார். மூதூர் அருகில் உள்ள போதகர்களுக்கும் மேலும் சில திருச்சபை அங்கத்தினர்களும் அந்த புத்தகத்தை வாசிக்கும் படி அறிவுறுத்தினார். இந்தியாவில் இவ்விதம் புத்தகங்கலை யாரும் வினியோகிப்பது கிடையாது. பெரும்பாலும் புத்தகங்களுக்கான ஊக்கத்தொகையே கொடுக்கப்படும். அந்த பணத்தை எவரேனும் புத்தகம் வாங்க பயன்படுத்துகிறர்களா என்ற எண்ணத்துடன் திருச்சபை அதனை சரிபார்ப்பதும் இல்லை. இலங்கையில் கிறிஸ்தவ இலக்கியங்கள் உயிர்ப்புடன் இருக்கும் சாட்சியாக அதைக் கண்டேன்.

அப்புத்தகத்தின் அட்டையில் ஒரு மனிதர் தனது கரத்தில் ஒரு கொக்கியை மாட்டியபடி இருந்தர். தலைப்பாக “நினைவுகளைக் குணப்படுத்துதல்” என எழுதியிருந்தது. சற்று கூர்ந்து நோக்கியபோது தான் அவர் கரங்கள் வெட்டி நீக்கப்பட்டுவிட்டு அதற்குப் பதிலாக ஒரு கொக்கியை மாட்டியிருக்கிறார்கள் எனத் தெரிந்தது. உடனடியாக அப்புத்தகத்தை வாங்கி வாசிக்க விருப்பப்பட்டேன். எனது எண்ணத்தை உணர்ந்தது போல ஜோசப் அவர்கள், நீங்கள் இதனை சுமக்கவேண்டாம், நீங்கள் மீண்டும் கொழும்பு வருகையில் உங்களுக்கான ஒன்றை நான் தருகிறேன் என்றார்.

மொழியாக்கம் இலங்கைத்தமிழில் இருந்தாலும் அதன் வீரியம் சற்றும் குறைவுபடாதவண்ணம் மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார்கள். ஃபாதர் மைக்கேல் லெப்ஸ்லி எனும் கத்தோலிக்க குருவானவரை கொலை செய்யும் நோக்கோடு ஒரு கடித வெடிகுண்டு அனுப்பப்படுகிறது. அந்த கடித உறையை அவர் பிரிக்கையில் அது வெடித்து அவர் கைகள் இரண்டும் பறிபோகிறது. ஒரு கண் தனது பார்வைத் திறனை இழக்கிறது. ஒரு காதும் செவிடாகிப்போகிறது. அவர் அந்த நிகழ்விலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறார். விவரணைகள் விரிவாகவும் தெளிவாகவும் அங்கதத்துடனும் காத்திரமாகவும்  முன்வைக்கப்படுகிறது.

பல்வேறு சந்திர சிகிழ்சைகளில் அவருக்கும் மருத்துவர்களுக்கும் நடைபெற்ற உரையாடலையோ, அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணங்களையோ அவர் பதிவு செய்கையில் இந்த மனிதருக்கு இந்த நிதானம் எப்படி அமைந்தது என்கிற எண்ணமே மேலோங்குகிறது. ஆனாலும் அவர் தன்னை ஒரு புனிதர் என சிலர் முன்வைப்பது போன்று தன்னை முன்வைக்காமல் ஒரு எளிய மானுடனாக தான் சந்தித்தவைகளை பதிவிடுகிறார்.

தனது பற்றுமையை வெளிப்படுத்தும் அவர், அதனை மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைப்பது சிறப்பு. ஆனால் ஆழம் மிகுந்க்ட புத்தகம். ஒரு வகையில் அவர் அப்புத்தகத்தின் வாயிலாக அவருக்கு வெடிகுண்டு வைத்தவ்ர்கள் தோற்றுப்போயினார் என்பதை உரக்கவே கூறுகிறார் மேலும் அவ்விதம் எண்ணுவது அவருக்குள் நிகழ்ந்த மாற்றமும் அவர்ச் சூழ்ந்திருந்த நிகழ்வுகளின் மாற்றமும் காரனம் என ஒப்புக்கொள்ளுகிரார். தான் ஒரு அவதார புருஷனாக முன்வைக்கப்படுவதை அவர் தவிர்த்து கடவுள்  தனக்கு கொடுத்திருக்கும் மற்றொரு அரிய வாய்ப்பாக இதனைக் கருதி தன்னை அற்பணிக்கிறார். அதற்குள்ளாக போதகர்கள் மற்றும்  கிறிஸ்தவர்களுக்குள்ளிருக்கும் ஐயத்தையும், நம்மிக்கையின்மையையும் அவர் மெலிதாக கோடிட்டு கடந்து செல்லுகிறார். தனது  அங்கவீனம் அடைத்த வாழ்விற்கும் ஒரு பெறுமதி ஒன்று உண்டு என்பதை அவர் குறிப்பிடும் விதம் மிக அழகானது.

பேராயர் டெஸ்மண்ட் டுடூவுடன் ஃபாதர் மைக்கேல் லெப்ஸ்லி

பேராயர் டெஸ்மண்ட் டுடூவுடன் ஃபாதர் மைக்கேல் லெப்ஸ்லி

ஃபாதருக்கு புதிதாக ஒரு திருச்சபை நியமித்திருந்த வேளையில் தான் இந்த பேரிடர் நிகழ்ந்தது. மருத்துவமனியில் இருந்ததால் அவரால் பொறுப்பெடுத்துக்கொள்ள இயலவில்லை.  மருத்துவமையில் தங்கி சிகிழ்சைபெற்று அவரது கரங்களில் கொக்கிகளை மாட்டிய பின்பு, தந்து புதிய திருச்சபைக்கு அவர் செல்ல முற்படுகையில் இவரால் அங்கு வேலை செய்ய இயலாது என கூறி பரிதாப்பபடும் மூத்த போதகரைக் குரித்து பதிவு செய்கிறார். அப்படியே பேராயர் டெஸ்மண்ட் டூடூ இவரை தனது திருச்சபையில் பணியாற்ற அழைப்பு விடுப்பதில் குறியாக இருப்பதையும் குறிப்பிட்டு. இருவேறு நோக்கங்கள் எப்படி திருச்சபைக்குள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவருக்கு தான் சுமை எனவும் மற்றொருவருக்கு கிடைப்பதற்கரிய வரம் எனவும் அவர் பதிவு செய்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. நடுநிலையுடன் எழுதும் அந்த நிதானம் என்னை பிரமிக்கவைக்கிறது. எவரையும் புண்படுத்திவிடக்கூடாது எனும் கவனம் அவர் பெற்ற காயங்களின் வீரியத்தை அவர் மனதளவிலும் உடலளவிலும் நன்கு உணர்ந்திருப்பதால் தான் என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக அவர் கடந்துவந்த மரண வேதனை, மீண்டும் மீண்டும் பல்வேறு சந்திர சிகிழ்ச்சைகளுக்குள் தான் கடந்து சென்றது யாவற்றையும் அவர் கூறுகையில், வார்த்தைகளை தாறுமாறாக பிரயோகித்து மக்களின் பரிதாபத்துக்குரியவராக மாற முர்படாமல், தன்னை ஒத்த சூழலில் இருப்போர்க்கு நம்பிக்கை வரும்படியே எழுதுகிறார்.  அவரது  வாழ்வில் கரிப்படிந்த நாட்களை அவர் வண்ணமென தீற்றியிருக்கிறார். அது சாத்தியம் என தனது வாழ்வை முன்னிறுத்தி “நினைவுகளைக் குணப்படுத்துதலை” அவர் முன்வைக்கிறார்.

 

இலங்கையின் இருள் கவிந்த சூழலில் இப்புத்தகம்  மிக முக்கியத்துவமானது என்று நான் கருதுகிறேன். திருச்சபையின் பங்களிப்பு எவ்விதம் காயப்பட்ட நெஞ்சங்களில் செயல்பட விளைகிறது என்பதை என் கண் முன்னால் காண்கையில் எனது இதயம் கசிந்தது.  பகைவனுக்கும் அருளும் பேறுபெற்றோர் அவர்கள் என்றே என் நெஞ்சம் விம்மியது.

இலங்கைச் சூழலைப் பொறுத்த அளவில் திருச்சபை பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசியது வரலாற்று உண்மை. ஒப்புரவாகுதல் எனும் உயர்விழுமியத்தை திருச்சபை  உயர்த்திப்பிடிக்கவே விழைகிறது. இதனை அரசும் உணர்ந்தே இருக்கிறது. எனது குறுகிய கால புரிதலின்படி, சமய சடங்குகளை செய்பவர்களை இலங்கைச் சமூகம் மிகவும் மதிக்கிறது. பேருந்துகளில் கூட மத குருக்களுக்காக என்று மூன்று இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே திருச்சபை இன்னும் பொறுப்புடனும் பாரத்துடனும் இலங்கையில் செயல்படுகிறது.

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் ஜோசப் அவர்கள் என்னிடம், நீங்கள் பனை ஓலைகளை மாத்திரம் அல்ல தென்னை ஓலைகளையும் பயன்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். என்னால் அவருக்கு அந்த வாக்குறுதியைக் குடுக்க இயலவில்லை, ஆனால் அவரது இதயம் எவ்விதம் இருவித மக்களுக்கும் தான் ஒருபோல் நீதி செய்ய வேண்டும் என துடித்ததை என்னால் நன்கு உணர முடிந்தது. இவ்வகையில் ஃபாதர் மைக்கேல் லெப்ஸ்லியிடமிருந்து நான் கற்றுக்கொள்ள அனேகம் இருக்கின்றது.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 6”

 1. Logamadevi Annadurai Says:

  வேப்பமரத்துக்கிளிகள் கீச்சிட துவங்கிய இந்த பதிவு ஒரு சிரு கதையைப்போல இருந்தது.நினைவுகளைக்குணப்படுத்துதல், மிக வித்தியாசமான புத்தகம் மற்றும் விளக்கம்.
  கோவில் குட்டி என்பது எனக்கு எவர் என்று
  விளங்கவில்லை. அது ஒரு பணி அல்லது பதவியிலிருக்கும் ஒருவரைக்குறிப்பிடும் பிரத்யோகப்பெயராக இருக்கலாம் என்று யூகிக்கிறேன்
  இலங்கைத்தமிழின் அழகே தனி. அவர்களே தூய தமிழை பேசுபவரகள், எழுத்பவர்கள், புகை இரத நிலையம் என்னும் ரயில் நிலைய பெயர்ப்பலகையிலேயே நான் மனம் பறிகொடுத்து நின்றிருந்தேன் முதல் முறை இலங்கை சென்ற போது.
  //வாழ்வில் கரிப்படிந்த நாட்களை அவர் வண்ணமென தீற்றியிருக்கிறார்.// இது நீங்கள்இப்பதிவில் அவ்வப்போது எழுதும் கவிதை வரிகளில் ஒன்றல்லவா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: