திருச்சபையின் பனைமர வேட்கை – 7


திருச்சபையின் பனைமர வேட்கை – 7

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

போதிசத்துவர் வென்ற மரம்

மூதூரிலிருந்து சுமார் நான்கு மணிக்கு மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். கடற்கரைச் சாலை முழுவதும் பனைமரங்களே நிறைந்திருந்தன. எனது பயண திட்டம் குறித்து கேட்டபோது அவைகள் பெரும்பாலும் பனை மரங்கள் இருக்கும் பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்கள். இங்கு தான் இலங்கையின் நில அமைப்பும் மக்கள் வாழும் முறையும்  பின்னிப்பிணைந்து இருப்பதைக் காணமுடிகிறது. பனைமரங்கள் இருக்கும் பகுதிகள் யாவும் பெரும்பாலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே இருக்கிறது. அம்பாந்தோட்டை பகுதிகளில் பெருமளவில் சிங்களவர் வாழ்கிறார்கள் இலங்கையின் பனைகளில் ஒரு சதவிகிதம் அங்கே இருக்கிறது. ஆகவே தான் பனை ஓலையில் மட்டும் செய்தால் போதாது தென்னை ஓலைகளிலும் நீங்கள் பயிற்சி அளிக்கவேண்டும் என ஜோசப் அவர்கள் கேட்டார்கள் என நான் புரிந்துகொண்டேன்.  ஆம் இலங்கையைப் பொருத்த அளவில் பனை என்றால் தமிழரைக் குறிக்கவும் தென்னை சிங்களவரைக் குறிக்கவும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. வெறும் பனைஓலைகளை மட்டும் பயன்படுத்தினால் அது தமிழர் சார்புடையதாக எண்ணப்பட்டுவிடும் என்ற கவலை அவரது சொற்களில். தொனித்தது.

பனை மரங்களைப் பொறுத்த அளவில் அவைகள் ஒருவகையில் வறட்சி மற்றும் காட்டுத்தீயில் தப்பிப்பிழைத்த தாவரங்கள். மனிதனே அவைகள் இருக்கும் வறண்ட பகுதிகளைத் தெரிவு செய்கிறான். இவ்வகையில் பார்க்கையில் திருமறையில் காணப்படும்  நிலம் பாகம் பிரிக்கும் ஒரு பண்டைய நிகழ்ச்சி கண்முன் வருகிறது. ஆபிரகாமும் லோத்தும் திரளான ஆடுகளை வைத்துக்கொண்டிருக்கையில் அவர்களின் வேலைக்கார்களுக்குள் சண்டை வருகிறது.  ஆகவே ஆபிரகாமும் லோத்தும் பிரியவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

“ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில் நாம் உறவினர்.

நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது”. (தொடக்கநூல் 13: 8 – 10, திருவிவிலியம்)

இப்படியாக விட்டுக்கொடுக்கும் ஒரு தன்மையுடன் தமிழ் மூதாதையர்கள் வறண்ட பகுதிகளை தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது, வறண்ட பகுதிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தத்தெரிந்த மக்களினம் அப்பகுதி நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் பனை சார்ந்த வாழ்விட தேர்வு என்பது வெகு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கும் என்பதே எனது புரிதல்.

ஒருவேளை காலங்கள் நழுவிச் செல்கையில் பனைக்கும் பவுதத்திற்குமான இடைவெளி பெருகியிருந்தாலும், பனை பவுத்த மதத்தையும் தழுவிய ஒரு மரமாக இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். தேராவத பவுத்த சுவடிகள் பாலி மொழியிலும், மஹாயான பவுத்த சுவடிகள் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. கொல்லாமையை முக்கிய விழுமியமாக கொண்டவர்கள், தோல் புத்தகங்களை விடுத்து பனை மரங்களின் ஓலைகள் தங்கள் சிந்தனைகளை பதித்து பரப்ப ஏற்றது என கண்டிருக்கலாம்.

சங்கமித்திரை, இலங்கைப் பயணத்தின் போது

சங்கமித்திரை, இலங்கைப் பயணத்தின் போது

கி மு மூன்றாம் நூற்றாண்டில் சங்கமித்திரை இலங்கை வந்த போது ஒரு சிறு அரச மரச்செடியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த மரம் இலங்கையின் முற்கால தலைநகரமான அனுரதாபுரத்தில் இன்றுவரை பேணி வளர்க்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற போதி மரக்கிளையிலிருந்து எடுத்து வந்ததால்  அது புனிதமென கருதப்பட்டாலும், அரச மரம் பொதுவாகவே சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயரே ஃபைகஸ் ரிலிஜியோஸா (Ficus religiosa) இத்துணை அழகாக சமயம் சார்ந்து பேர்பெற்ற தாவரம் வேறு இருக்காது என்றே எண்ணுகிறேன். ஆலமரமும், அரசமரமும், அத்திமரமும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. இவைகள் வேறு மரங்களில் முளைத்து தொற்றி படர்ந்து பிற்பாடு அவைகளை அழித்து வளரும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் பனை மரங்களில் ஆலமரமும் அரசமரமும் படர்ந்திருப்பதை நான் இலங்கையில் பார்த்தேன். பனைமரத்தை பேணவில்லை அல்லது அதிலிருந்து எந்த  பயனையும் எடுக்கவில்லை என்பதை அவைகள் சுட்டி நிற்கின்றன.

பட்ட சித்திரா என ஒரிசாவில் காணப்படும் பனை ஓலையில் செய்யப்பட்ட ஓவியங்கள் பிரபலமனவை. அவைகள் காலத்தால் முந்தியவை என நாம் உணரத்தக்க  ஒரு படைப்பு. இவைகள் தற்போதைய ஒரிசாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இன்றும் ஒரிசாவில் காணப்படும் பனை மரங்கள் அசோகரின் காலத்திலும் இருந்திருந்தால் அவைகள் கலிங்கப்போரைக் கண்டிருக்கும். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில், கொன்றொழிக்கப்பட்ட  மக்களை விட அதிகமாக பனைமரங்களே அழிந்திருக்கின்றன. இரு தரப்பிலிருந்தும் பங்கர் (பங்கர்) என்று அழைக்கப்படும் பாதுகாப்பு அரண்களுக்காக கண் மண் தெரியாமல் அவைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை அசோகரும் போர் வேளையில் மனிதர்களுடன் பனைகளும் வெட்டி சாய்க்கப்பட்டதைக் கண்டிருப்பாரோ?  அவர் மனம் வருந்திய நிகழ்ச்சியில் பனைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா? அசோகர் எழுப்பிய ஸ்தூபியே பனையின் வடிவில் தானே இருக்கிறது?

கலிங்கப்போர்

கலிங்கப்போர்

போதிசத்துவரின் திருமணம் குறித்து லலிதவிஸ்தாராவில் கூறப்படுகையில், 500 சாக்கியர்கள் தங்கள் பெண்களை கொடுக்க முன்வந்தபோது சித்தார்த்தருடைய கண்களுக்கு யெசோதாவே அழகாக காணப்பட்டாள். அவளது தந்தையாம் தண்டபாணிக்கு சித்தார்த்தன் தன்னை வில்விவித்தையில் நிரூபித்தாலே தனது மகளை மணம் பிடிக்க ஒப்பை இயலும் என்று கூறிவிட்டார். சித்தார்த்தன் எய்த அம்பு, பிற போட்டியாளர்களின் அம்புகளை விட அதிக தூரம் சென்றது என்றும் பிற்பாடு ஏழு பனை மரங்களைத் துளைத்து மண்ணில் புதைந்தும் விட்டது என்று சொல்லப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆக பழைமையான ஓலைச்சுவடிகள் முதலாம் நுற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். மேலும் இவைகள் நேபாளத்திலிருந்து கிடைக்கப்பெற்றிருப்பதால், பவுத்தமும் பனையும் இணைந்து இருப்பதற்கான ஒரு சான்றாக கொள்ளலாம். குளிர் இல்லா பிரதேசங்களில் ஓலைகள் இத்தனை நீண்ட காலம் எஞ்சியிருக்காது என்பது உண்மை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆக பழைமையாக கிடைக்கப்பெற்ற ஒரு நூல் தான் மிகவும் பழையது எனச் சொல்ல வாய்ப்புகள் இல்லை. அதற்கு முன்னரே புழக்கத்தில் இருந்த ஓலைகளில் எழுதும் பழக்கத்தை அது உறுதி செய்கிறது என்பதே சரியாயிருக்கும். ஆகையால் மொழி வாரியாக பிளவுபட்டிருக்கும் சூழலில் பனை மரம் இலங்கையில் ஒரு இணைவை அளிக்க இயலும் என்றே நான் நம்புகிறேன். திருச்சபை அதற்கான முயற்சியை எடுப்பது மிகச்சரியான ஒன்றே.

மாலை ஏழுமணிக்கு மெதடிஸ்ட் பெண்கள் விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். மட்டகளப்பின் புளியந் தீவு பகுதியில் அது அமைந்திருந்தது. அதற்கு நேர் எதிரில் ஒருசில சீமைப்பனைகள் நின்றுகொண்டிருந்தன. சீமைபனைகள் காண்பதற்கு பனையைப்போலவே காட்சியளித்தாலும் அதற்கு பல கிளைகள் உண்டு. சீமைப்பனையின் ஓலைகளும் பனைஓலையைப்போலவே இருக்கும் ஆனால் வடிவில் சற்று சிறிதாக இருக்கும். அதன் பழங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தாலும் உண்பதற்கு ஏற்றவை அல்ல. அங்கே நான் அதனை பார்த்துக்கொண்டிருந்தபோது, அம்மரத்தில் “சீமைப் பனைகளை காப்போம்’ என்று எழுதிய அட்டையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அந்த கரிசனை எனக்குப் பிடித்திருந்தது. மட்டக்களப்பின் பெரும்பாலான இடங்களில் சீமைபனைகளை நான் கண்டேன்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பனை மரங்களையும் காக்க அது முன்னணியில் நிற்கும் ஒரு அரசு தான். பனை மரங்களை வெட்டுபவர்கள் பிணையில் வர இயலாதபடி சட்டம் அவர்கள் மேல் பாயும். தமிழகம் கண்டுணரவேண்டிய ஒரு பாடம் என எண்ணிக்கொண்டேன். பனையோடு ஒப்பிடுகையில் பொருட்படுத்தத்தக்க  பெரும் பயன் ஏதும் இல்லையென்றாலும்  சீமைப்பனையையும் காக்கும் அந்த சிந்தனை வரவேற்கத்தக்கது. தமிழகம் எங்கும்  பனைமரங்களைக் காப்போம் எனும் எண்ணம் ஏற்றுக்கொள்ள படும் காலம், தமிழகத்தில் பாலும் தேனும் ஓடும்  நாளாகவே இருக்கும்.

மட்டகளப்பு பகுதியை “மீன் பாடும் தேன் நாடாம் மட்டு மா நாகர்” என குறிப்பிடுகிறார்கள். மட்டகளப்பில் உள்ள  வாவியில் (Lagoon), ஒரு காலத்தில் மீன்கள் பாடும் என்று சொல்லுகிறார்கள். இரவு நேரத்தில் அவைகள் பாடும் மெல்லிய சத்தத்தைக் கேட்கலாம் என்று இன்றும் சொல்லுகிறார்கள். அது எப்படிஎன்று பிற்பாடுதான் நான் கண்டுகொண்டேன். அந்த வாவியில் மீன்பிடிக்கும் தூண்டில் இடுபவர்கள் கூட புழுக்களைப் போடுவது இல்லை, இறாலையே இட்டு மீன் பிடிக்கின்றனர். அந்த அளவிற்கு செழுமையை ருசித்தவை மட்டு மாநகர் மீன்கள். பாடல் என்ன, அவை மொத்தம் இணைந்து பெரும் நடன நிகழ்வையே நிகழ்த்திவிடும் அளவிற்கு மகிழ்வுடன் இருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் தேன் அதிகம் கிடைக்கும் இடங்களில் மட்ட க்களப்பும் ஒன்று. இங்குள்ள  வாகரை, கரடியனாறு போன்ற இடங்களில் மிக அதிகமாக தேன் கிடைக்கிறது.   அதற்கு காரணமும் பனை தான். இலங்கையின் பனைவளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டகளப்பில் இருக்கிறது. அப்படியானால் பனை மிகுதியாக உள்ள  யாழ்பாணத்தில் ஏன் தேன் மிகுதியாக கிடைக்கவில்லை? என்பது ஆய்வுக்குரியது. என்னைப்பொறுத்தவரையில் பனை திரளாக இருப்பதனால் யாழ்பாணத்திலும் தேன் மிகுதியாக கிடைக்கலாம். ஆனால் பனை பொருட்களின் பெருமையை யாழ்பாணம் சூடி நிற்பதால் தேன் சார்ந்து யாழ்பாணம் நினைவுகூறப்படுவதில்லை போலும். மேலும், பனைத் தொழில், யாழ்பாணம் அளவிற்கு மட்டக்களப்பில் தீவிரமாக செயல்படவில்லை. ஆகவே தேனீக்களுக்கு பெருமளவில் மனிதர்களால் தொந்தரவு இல்லாத இடமாக மட்டக்களப்பு இருக்கலாம் என நினைக்கிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: