திருச்சபையின் பனைமர வேட்கை – 8


திருச்சபையின் பனைமர வேட்கை – 8

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மட்டக்களப்பு பிரகடனம்

மட்டக்களப்பு பகுதியில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் காணப்பட்டாலும், இஸ்லாமியர் மற்றும் இந்துக்கள் சேர்ந்து வாழும் பகுதியாகவே காணப்படுகிறது. தமிழர்கள் பெருமளவு காணப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று. கிறிஸ்தவம் வேரூன்றிய பகுதியாக காணப்படுகிறது. “மெதடித மத்திய கல்லூரி” இலங்கையின் முதல் பாடசாலையாகும்.  நான் தங்கியிருந்த மெதடிஸ்ட் பெண்கள் விடுக்கு அடுத்ததாக இருந்தது. இலங்கையில் உள்ள மிகப்பழைமையான ஒரு மெதடிஸ்ட்  கல்லூரி இறுநூறு ஆண்டுகள் கடந்து இருப்பதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் மெதடிஸ்ட் திருச்சபையினரின்  வருகை 1856க்கு பின்பே நிகழ்ந்தது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் தாமதமாக.

நாங்கள் பெண்கள் விடுதிக்கருகில் அமைக்கப்பட்டிருக்கும் விருந்தினர் அறைக்குப்போனோம். குளிரூட்டி அமைக்கப்பட்ட அறை மூவர் படுக்கும்படியான ஒற்றை அறை. எளிய படுக்கைகள் மிகவும் சுத்தமாக அமைக்கப்பட்டிருந்தன. காளைப்பாக இருப்பதால் சீக்கிரம் உறங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், ஜொசப் அவர்கள், தயாராகுங்கள் நாம் வெளியே போகவேண்டும். அரை மணி நேரத்திற்குள் நான் வருகிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார்கள். “மீண்டுமா” என நினைத்துக்கொண்டு தயாரானேன்.

எதற்கும் இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு எனது தளவாடங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டேன். குறிப்பாக ஓலையில் செய்யப்பட்ட படங்களையும், ராணி பத்திரிகையில் என்னைக்குறித்து வந்த கட்டுரையையும் எடுத்துக்கொண்டேன். உண்மையிலேயே ராணியில் அந்த கட்டுரை எப்படி வெளிவந்தது என எனக்குத் தெரியாது. என்னிடம் எப்போது பேட்டி கண்டார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவில் இல்லை. ஆனால் கட்டுரையாளர் பெரும்பாலும் “பனைமரச்சலையில்” இருந்தே எடுத்து அந்த கட்டுரையை அமைத்திருந்தார் என அதைப் பார்த்தவுடன் புரிந்தது. “பனைமரக் காதல் பாதிரியார்” என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையைக் கண்டவுடன் ஜோசப் அவர்கள் வெடித்துச் சிரித்துவிட்டார்கள். நாங்கள் படிக்கிற நாட்களில் ராணி பொதுவாக நடிகைகளின் காதல்களை அல்லவா வெளியிடுவார்கள் என்றவர், போதகருக்கு அவர்கள் ஒரு பகுதியை திறந்துவிட்டிருப்பது ஆச்சரியமானது என்றார். இப்படியாக ‘ராணியின்” பனைமரக் காதல் கட்டுரையின் தயவால், நான் இன்னும் ஊன்றி கவனிக்கப்படலானேன்.

நாங்கள் இணைந்து கோட்டைமுனை மெதடிஸ்ட் திருச்சபைக்குச் சென்றோம். அங்கே போதகராக இருந்த அருட்பணி. டெரன்ஸ், அவர்களைச் சந்தித்தோம். அவர் பல திருச்சபைகளை கண்காணிக்கும் பொறுப்பிலிருப்பவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர். உள்நாட்டு போர் நடக்கையில் மக்களை எப்படி பாதுகாக்க முடிந்தது என்றும், இருபுறமும் ஆயுதங்கள் இருக்கையில்  போதகர்களின் பொறுப்பு அந்நாட்டகளில்  எப்படி இருந்தது எனவும், நகைச்சுவை உணர்வுடன் சொல்லிக்கொண்டு வந்தார். அனைத்தும் மயிர் கூச்செறியும் நிகழ்வுகள். மரணத்தைக் கண்டு எள்ளி நகையாடிய ஒரு மனிதரால் மாத்திரமே இவ்விதம் ஒரு சூழலை எதிற்கொள்ள இயலும். பிற்பாடு தான் நான் அறிந்துகொண்டேன், பாதிப்பிலிருந்து மீழ்வதற்கு இதுவே சிறந்த வழி. போர் நடக்கையில் கருவில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு கூட பாதிப்பு இன்னும் இருக்கையில், போர்களினூடாக பொறுப்புடன் பணியாற்றியவர்கள், அன்புக்குரியவர்கள் பலரைச் சாகக் கொடுத்து கண்ணீர் வற்றியே சிரிக்க தொடங்கியிருக்கின்றனர் என்று எண்ணுகின்றேன்.

மிகச்சுவையான இரவு உணவை போதகரம்மா தயாரித்துக் கொடுத்தார்கள். இரவு உணவை உண்ணுகையில் ஏன் நாம் பயிற்சிக்கான பொருட்களை வாங்க முயற்சிக்கக் கூடாது என எண்ணியபடி கடைகளுக்குப் புறப்பட்டோம். பொங்கல் ஆனபடியால் அங்கே கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருக்கிறது என்றும் இஸ்லாமியர் வாழும் காத்தான்குடி பகுதியில் கடைகள் திறந்திருக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்கள். காத்தான்குடி பகுதியின் சாலையை பிரிக்கும் இடத்தில் பேரீச்சைகளை நட்டு வளர்ப்பதைப் பார்த்தேன். இந்திய சாலையிலும் இப்படியே பனை மரங்களை வளர்க்கவேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு. அரசு சார்ந்த நிலங்களில் கண்டிப்பாக பனை தாராளமாக  நிற்கும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் சென்றபோது நல்ல வேளையாக கடைகள் திறந்திருந்தன.  அனைத்து பொருட்களையும் அந்த சாலையிலேயே வாங்க முடிந்தது. மீண்டும் நாங்கள் திரும்பி வருகையில்  மணி 9.30 நான் தள்ளாடும் நிலையில் இருந்தேன். அப்போது நாளைய தினம் ஆலயத்திற்கு வரும் மக்கள் காண இப்பொருட்களை கண்காட்சியாக வைக்கலாமே என்ற எண்ணம் பகிரப்பட்டது. உடனடியாக எப்படி அமைப்பது என்று அவர்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். ஆலய வளாகத்திலேயே ஒரு மண்டபம் இருந்தது. அவைகளில் எப்படி அமைக்கவேண்டும் என்று சில இளைஞர்களுக்கு அறிவுறுத்திவிட்டு வந்து படுக்கையில் இரவு மணி 11. இப்போது படுத்தால் நாளை மதியம் தான் கண்விழிக்கமுடியும் என நான் நினைத்துக்கொண்டிருக்கையிலேயே ஜோசப் அவர்கள், காலையில் ஏழு மணிக்கு நாம் ஆலயத்தில் இருக்கவேண்டும். ஏழரை மணிக்கு ஆராதனை என்றார்கள். நான் உறங்கினேனா அல்லது மயங்கிவிழுந்தேனா என்பது எனக்கே தெரியது.

தென்னை ஓலையில் முகப்பு அலங்காரம்

தென்னை ஓலையில் முகப்பு அலங்காரம்

மறுநாள் காலை ஆறு மணிக்கு நான் எழுந்தபோது ஜோசப் அவர்கள் கட்டிலின் அருகில் முழங்கால்படியிட்டு ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். நானும் ஜெபித்து முடித்து குளித்து தயாராகினேன். 7 மணிக்கு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி கல்முனை மெதடிஸ்ட் திருச்சபைக்கு செல்ல ஆயத்தமாகி வெளியே வந்தபோது பொங்கல் நிகழ்ச்சிக்காக மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் இணைந்து அலங்கரித்திருந்தார்கள். முழுவதும் தென்னையோலையால் செய்யப்பட்ட அழகிய கலை வெளிப்பாடு அது. ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லி அதன் அருகில் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். பொதுவாகவே இவ்விதமாக விழாக்களின் போது ஓலைகளை கொண்டு அலங்கரிப்பது இலங்கையிலுள்ள வழக்கம். பின்னியும் முடைந்தும் வெட்டியும் இணைத்தும் இதனை அவர்கள் செய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் அற்ற ஒரு அழகிய கலை உணர்வை ஊட்டவேண்டி அவர்கள் அப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதாக கோணியில் எழுதப்பட்டிருந்தது. அம்மாணவர்களின் எண்ணமே திருச்சபையிலும் நிலைகொள்ளவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அதன் அருகிலேயே ஒரு சிறிய பாரம் ஏற்றும் வண்டியில் காகிதத்தால் செய்யபட்ட ஒரு பானையும்  ஓலை அலங்காரத்தால் அழகுபடுத்தப்பட்டு நின்றது. மிகச்சரியான நாளில் தான் இலங்கை வந்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன். ஆராதனைக்கு நேரம் ஆகிவிட்டபடியால் நாங்கள் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டோம்.

தென்னை ஓலையில் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் ஊர்தி

தென்னை ஓலையில் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் ஊர்தி

கோட்டைமுனை மெதடிஸ்ட் ஆலயத்தின் வளாகத்தில் நாங்கள் சென்றபோது எங்களை முன்னால் வந்து அமரும்படி அழைத்தார்கள்.  அதனை பணிவுடன் தவிர்த்து, பின்வரிசையிலேயே அமர்ந்துகொண்டோம். ஜோசப் அவர்கள் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றின் பொதுசெயலாளர் மட்டுமல்ல, அவர் 5 வருடங்கள் மெதடிஸ்ட் திருச்சபையின் பேராயராகவும் இருந்துள்ளார். இலங்கை கிறிஸ்தவ உலகத்தோடு தொடர்புடைய அனைவரும் அவரை தவறாது குறிப்பிடுவார்கள். மிகவும் எளிமையானவர். அவருக்கு நான் எழுதிய கடிதத்தில் அவரை பேராயர் என நான் அழைக்க, தயைகூர்ந்து என்னை அப்படி அழைக்காதிருங்கள் என்று கூறிவிட்டார்.

பிளாஸ்டிக் பாவனையற்ற பொங்கல் அறிவிப்பு

பிளாஸ்டிக் பாவனையற்ற பொங்கல் அறிவிப்பு

ஆராதனையை திருச்சபையின் லே கமிற்றி (Lay Committee) தலைவர் நடத்தி செய்தியளித்தார்கள். ஆராதனைக்குப் பின்பு அறிவிப்புகளை கூற வந்த கோட்டைமுனை திருச்சபை ஆயர் டெரன்ஸ் அவர்கள், முதலில் எங்கள் இருவரையும் வரவேற்றுவிட்டு,  எனது பணியினைக்குறித்து மக்களிடம் சொல்ல என்னை அழைத்தார்கள். நான் பேசிய பின்பு பனைஓலை பொருட்களில் நான் அமைத்திருக்கும் கண்காட்சியினை  மக்கள்  கண்டு அதன் பிற்பாடே வீடுகளுக்குச் செல்லமுடியும். ஆகவே மிகச்சுருக்கமாக பேசுவது சரியென எண்ணினேன்.

திருச்சபையைப் பொறுத்தவரையில் எவ்வளவு தான் தலை போகின்ற விஷயமக இருந்தாலும், திருவசன ஆதாரம் இல்லாமல் எதையும் நாம் சொல்ல முடியாது. அந்த ஆதாரம் என்பது வெளிப்படையான வசனமாக இருப்பது மட்டுமே ஏற்புடையது ஆகும். மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வசனங்கள், பலமுறைக் கூறி நிறுவப்பட்ட வசனங்களே அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானது. இவைகளிலும் பாரம்பரிய விளக்கங்களுக்கு அப்பால் செல்லுவது எளிதானதல்ல. முதன் முறையாக கத்திமேல் நடக்கும் திக் திக் தருணத்துடன் தான் அந்த பீடம் நோக்கிச் சென்றேன். எனது மன்றாட்டுக்கள் யாவும், ஆண்டவரே இம்மக்கள் எனது வார்த்தைகளையல்ல உமது சித்தமே உணர வழிவகை செய்யும் என்பதாகவே இருந்தது.

மோசேயின் இறுதி பாடல் ஒன்று உபாகமம் 32 ல் வருகிறது. அதில் இருந்து கடவுள் எவ்விதம் இஸ்ரவேலரைக் காப்பற்றினார் என அர்த்தம் தொனிக்கும்  ஒரு வசனத்தை எடுத்து மக்களிடம் பேசினேன்.

பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள் அவன் உனக்கு அறிவிப்பான், உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். (உபாகமம்  32: 7, பழைய திருப்புதல்).  இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய கடவுள் எவ்விதம் நம்மை வழினடத்தினார் என எண்ணிப்பார்ப்பது நலம்.  நமது மூதாதைகளே அதை நமக்குச் சொல்லும் அறிவுடையவர். அவர்களே கடவுளின் வழி நின்று அவர் பதையில் நாம் நடக்க வழிகாட்டியவர்கள். ஒன்றுமில்லாமை எனும் வறட்சி சூழ்ந்திருக்க, கடவுள் தந்த மன்னா என பனை மரத்தினை ஏற்றுக்கொண்டனர், ஆன்மீகத்தில் நம்மை வழிநடத்திய நமது பெற்றோர்.  தன்னை முழுவதும் மனிதர்களின் பயன்பாட்டிற்கென அற்பணித்த மரம் அல்லவா பனை? வறண்ட பகுதிகளில் வாழும் மக்களின் அனைத்து தேவைகளையுமே சந்திக்க கடவுள்  திட்டமிட்டு வழங்கிய அருட்கொடை அல்லவா பனை. பனையைச் சார்ந்திருக்கையில் நமக்குள்ளும் அதன் நற்குணங்கள் ஊறி வழிந்தோடுமில்லையா? குருத்தோலைப் பண்டிகை கொண்டாடும்  திருச்சபை இன்று பனை மரத்தையும் பனை தொழிலாளியைய்ம் மறந்தே அவைகளைக் கொண்டாடுவது முரண் இல்லையா?

கடவுள் நீதிபரர் ஆகவே அவரின் பிள்ளைகளும் நீதி செய்வோராய் இருக்கவெண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இதை உணர்ந்தே சங்கீதக்காரன்  நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் (சங்கீதம் 92: 12, பழைய திருப்புதல்) என்ற வசனத்தை நாம் நன்கு அறிவோம்.  நமது மூதாதைகள் கேதுருவைப் பார்க்காதபடியினால் அவர்கள் தாங்கள் கண்டுணர்ந்த பனை மரத்தையே நீதிமானுக்கு ஒப்புமையாக கூற தலைப்பட்டார்கள். அவ்விதம் தான் அந்த முழு வசனம் சுருங்கி  “நீதிமான் பனையைப்போல் செழிப்பான்” என பெருமளவில் நம் எண்ணங்களில் நிறைந்திருக்கிறது.  இன்றோ தமிழகத்திலும் இந்தியாவிலும் பனைமரங்களை வெட்டிசாய்த்துக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் பனை மீதான ஒரு கரிசனை இருக்கும் என நான் கருதியதால் உங்களிடம் மன்றாடுகிறேன். பனையும் பனை சார் தொழிலாளிகளும் திருச்சபையால் பேணி வளர்கப்படவேண்டியவர்கள். அவர்களை நாம் மறப்போம் என்றால்  நேர்மையாளர் (நீதிமான்) அழிந்து போகின்றனர்; இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை; இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்; அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை; ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். (ஏசாயா 57:1 திருவிவிலியம் )” என்ற கூற்றை மெய்ப்பிக்கிறவர்கள் ஆவோம். இன்று நேர்மையாளருக்கு ஒப்புமையாக கூறப்படும் மரம் நம்மைவிட்டு காணாமல் போய்கொண்டிருக்கிறது, அது சார்ந்த மக்களும் அடையாளம் தெரியாமல் நம்மைவிட்டு மறைந்து போய்கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் திருச்சபை ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விழைகிறது. ஆகவே இவைகளையே நான் முன்னிறுத்தி இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றுடன் இணைந்து கூறத் தலைப்படுகிறேன். எனக்கு உங்கள் ஆதரவும் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும்  தேவை என்றேன்.

முதன் முறையாக  திருச்சபையில் பனை சார்ந்த ஒரு உரையை மக்கள் கேட்டு இதுவென்ன புதுமை என்பதுபோல் என்னைப் பார்த்தனர். ஒருவேளை எனது இந்திய தமிழ் புரியவில்லையோ என கேட்டபோது, ஜோசப் அவர்கள், “எங்கட பேச்சுதான் உங்களுக்கு புரியாது, நீங்க கதைகிறது எல்லாருக்கும் விளங்கும்” என்றார்கள்.

கோட்டைமுனை பனைஓலைக் கண்காட்சியின்போது

கோட்டைமுனை பனைஓலைக் கண்காட்சியின்போது

கோட்டைமுனை மெதடிஸ்ட் திருச்சபை மக்களில் பெரும்பாலானவர்கள் யாழ்பாணத்தைச் சார்ந்தவர்கள் என பின்னர் அறிந்துகொண்டேன். யாழ்பாண தமிழர்கள் “பனை எங்கள் உயிருக்கு நேர்” எனும் எண்ணம் கொண்டவர்கள். ஆகவே கோட்டைமுனை மக்கள் அனைவருமே பெரும் திரளாகக் கூடி வந்து கண்காட்சியைக் கண்டு என்னை வாழ்த்திச் சென்றனர். சும்மா அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் வந்திருந்தவர்களின் தலைகளை நிழலுருவங்களாக ஓலையில் வரையத் துவங்கினேன். என்னைச் சுற்றி பெருங்கூட்டம் திரண்டுவிட்டது. அரைமணி நேரத்தில் வேகமாக 15 நபர்களுடைய  படங்கள் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன். காலை உணவினை போதகர் இல்லத்தில் எடுத்துக்கொண்டோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 8”

  1. Logamadevi Annadurai Says:

    அந்த தென்னை ஓலை அலங்காரம் பிரமாதம் கூடவே தமிழக அலங்காரங்களிலிருந்து மிக வேறுபட்டிருந்த்தது. அந்த கோணிப்பை யுத்தி அபாரம். நான் பணி புரியும் கல்லூரியில் இதை முயற்சிக்கிறேன்
    திருவசனத்துடன் கூடிய உங்களின் பனை உரை அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: