திருச்சபையின் பனைமர வேட்கை – 9


திருச்சபையின் பனைமர வேட்கை – 9

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மட்டு மாநகரும் புட்டும்

பனை சார்ந்த வாழ்க்கை முறை இலங்கையில் இருக்கிறது என்பதை அனைத்து வீடுகளில் உள்ள அடுக்களைகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. காலையில் எங்களுக்கு அளிக்கப்பட்ட புட்டினை (பிட்டு) எவ்வாறு அவித்தார்கள் எனக் கேட்டேன். அவர்கள் அதற்கு புட்டு அவிக்கும் ஒரு ஓலைப் பெட்டியை காட்டினார்கள். கூம்பு வடிவில் கவிழ்த்து வைக்கப்பட்ட தொப்பிபோன்று  காணப்பட்ட அதனை “நீற்றுபெட்டி” என்று குறிப்பிடுகிறார்கள். இலங்கையைப் பொறுத்த அளவில் நீற்றுப்பெட்டி செய்வது ஒரு மிகப்பெரும் தொழில் வாய்ப்பு. எங்கெங்கும் மக்கள் அதனைச் செய்து விற்பதைப் பார்த்தேன்.

பயன்படுத்திய நீற்றுப்பெட்டி

பயன்படுத்திய நீற்றுப்பெட்டி

தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அஞ்சி ஓடும் உணவு புட்டு. புட்டைச் சாப்பிடச் சொல்லுவது என்பது என்னை கொல்ல கொண்டுச் செல்லுவது போல. கதறி கண்ணீர்மல்கி விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுவேன். எனது தொண்டையத் தாண்டி புட்டு உள்ளே செல்லவே செல்லாது. தண்ணீர் ஊற்றி, தேனீர் ஊற்றி அதை நான் உள்ளே அனுப்புவேன். அம்மாவும் ஜாஸ்மினும்   இந்த விஷயத்தில் மட்டும் என்னிடம் கருணைக் காட்டுவது கிடையாது. புட்டு பயறு பப்படம் (அப்பளம்) மற்றும் பழம் என ஒரு வரிசை குமரி மாவட்டத்தில் உண்டு.  கேரளாவில் பரவாயில்லை , புட்டுடன் கடலைக்கறியும் போத்துக்கறியும் கிடைக்கும். இலங்கையில் உள்ளவர்கள் அனைவரும் புட்டினைக் கொடுத்தே தங்கள் அன்பினை வெளிப்படுத்துபவர்கள். நல்லவேளையாக அனைவரும் “சொதி” என்னும் தேங்காய் பால் குழம்பினை புட்டுடன் இணைத்து குழைத்துச்  சாப்பிடக் கொடுத்தார்கள். மீன் குழம்பும் கிடைத்ததால் புட்டின் இனிய பக்கத்தையும்  கண்டு ருசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

இலங்கையில் புட்டு அவிக்கும் நீற்றுப்பெட்டி இல்லாத வீடுகள் குறைவு. நீற்றுப்பெட்டியினை அவர்கள் எடுத்து அதில் மாவு நிறைத்து அதனை இதற்கென அமைத்து வைத்திருக்கும் புட்டு குடத்தின் உள்ளே வைத்து அவிக்கிறார்கள். நமது புட்டுக்குடத்துடன் ஒப்பிடுகையில் அதன் கீழ் பகுதி சற்று அகலமாகவும் மேல் பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது.

குமரி மாவட்டத்திலும் ஓலை புட்டு செய்யும் வழக்கம் உண்டு எனச் சொல்லுவார்கள். நான் பார்த்தது இல்லை. ஆனால் எனது மனதிற்குள் ஓலைப்புட்டு விற்கும் கடைகள் துவங்கப்பட்டால் அவைகள் பெருமளவில் மக்களை ஈர்க்கும் என்றே கருதுகிறேன். பண்பாடு சார்ந்த உணவுகளும் அவைகளைச் செய்யும் கருவிகளும் வழக்கொழிந்துவிட்டச் சூழலில் இப்படிதான் மீட்டெடுக்க முடியும் போலும்.

புதிதாய்ச் செய்த நீற்றுப்பெட்டிகள்

புதிதாய்ச் செய்த நீற்றுப்பெட்டிகள்

மேலும் மூங்கில் குழாய்களைகைக்கொண்டும் புட்டு செய்யும் வழக்கம் இருக்கிறது. நவீன வடிவிலான பாத்திரங்களில் புட்டு செய்வதை மக்கள் விரும்பவில்லை. புட்டின் ஓரங்கள் காய்ந்துவிடும் என்கிறார்கள். ஓலைபுட்டு செய்வதற்கான பெட்டி இல்லாத தமிழர் வீடுகள் குறைவு என்பதை எனது பயணத்தில்  அறிந்துகொண்டேன். அது போலவே ஓலை ஈர்க்கிலில் செய்யப்பட்ட முறம், ஓலைப் பெட்டிகள், இடியாப்பத் தட்டு நாரில் உருவாக்கப்பட்ட துடைப்பான் போன்றவைகளும் தவறாமல் வீடுகளில் காணப்படுகின்றன.

ஜோசப் அவர்கள் தான் சந்திக்கவேண்டிய சில போதகர்களின் வீட்டிற்கு என்னையும் அவர்களுடன் அழைத்துக் கொண்டு சென்றார்கள். பனை சார்ந்த பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதை நேரில் கண்டுகொண்டேன். பழைய வீடுகளில் பனந்தடிகளைக்கொண்டே கூரை அமைத்திருந்தனர்.  பனைமர தடி இலங்கையைப்பொறுத்த அளவில் மிகவும் விலை உயர்ந்தது. இன்று எளிதில் வங்கவும் இயலாது என்றுக் கூறுகிறார்கள். மக்கள் தங்கள் தோட்டங்களில் உள்ள பனை மரங்களை வெட்டவேண்டுமென்றால் முறையான அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

புளியந்தீவில் நான் பார்த்த மெதடிஸ்ட் திருச்சபைக்கும் என்னை ஜோசப் அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அங்கே நான் அருட்பணி யோகராஜா அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் யாழ்பாணம் பகுதியைச் சார்ந்தவர்கள். எனது பனைஓலைப் பயிற்சியைக் குறித்து அவருக்கு விளக்கினோம். அவர் அதைக்குறித்த பேச்சில் வெகு விருப்பத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது திருச்சபையினருக்கு அவர் ஏற்கனவே இதக் குறித்து அறிவித்திருப்பதாகவும் கூறினார். இலங்கையில் போதகர்கள் எனக்கு அளித்த உத்வேகம் அலாதியானது.

தமிழகம் என்றால் இத்தனை வெளிப்படையாக தங்கள் விருப்பத்தைச் சொல்லுவார்களா எனத் தெரியாது. அப்படி சொன்னால்  மக்கள் தங்களை சாதி பார்ப்பவன் எனும் முத்திரைக் குத்திவிடுவார்கள் என்று ஒரு பயம். மற்றொரு வகையினர் சாதி பெருமிதம் கொண்டே இவைகளை  முன்னெடுக்கவேண்டும் எனும் வெறிகொண்டவர்கள். இவர்களின் நடுவில் நின்று செயல்படுவது அங்கி இட்டபடி பனையேறுவது போல.

மும்பையின் ஒரு முக்கிய திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு அன்று பனை ஓலைக் குருத்துக்களே பிடித்துச் செல்லுவார்கள். பல்வேறு மிஷனெறி அமைப்புகளுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கும் திருச்சபைக்கூட. அப்போதரிடம் ஒருமுறை “பனைத்தொழிலாளர்களைக்  குறித்து ஆலயத்தில் பேசுங்கள். அவர்களின் துயர் தீர திருச்சபையாக ஏதேனும் செய்ய இயலுமென்றால் செய்யலாமே” என்றதற்கு இங்கே பல்வேறு சாதியினர் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இவ்விதம் பேசுவது தகுதியாயிராது என்று கூறினார். உண்மை இப்படி இருக்கையில் நமது திருச்சபைகள் கொண்டாடும் குறுத்டோலை ஞாயிறின் பொருள் தான் என்ன? வெறும் சடங்காகிப்போனதா அது.?

திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள ஆழ்வானேரி என்ற பகுதியில், குருத்தோலை ஞாயிறு அன்று நடைபெறும் நிகழ்ச்சியை நான் முன்பு பணியாற்றிய மீராரோடு மெதடிஸ்ட் திருச்சபையின் அங்கத்தினரான ஹெப்ஸி தைரியமணி அவர்கள் கூறுவார்கள். காலையில் அலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் ஓலைகள் கொடுக்கப்படும். பிற்பாடு அந்த ஊரைச் சுற்றி குருத்தோலைகளை கரங்களில் பிடித்துக்கொண்டு பவனி செல்லுதல். அவர்கள் திரும்பி வருகையில் திருச்சபையின் அங்கத்தினர்களாக  இருக்கும் அனைத்து பனைத் தொழிலாளிகளும் இணைந்து, பெரிய பாத்திரங்கள் நிரம்பி வழிய பதனீரை கொண்டு ஊற்றுவார்களாம். அந்த நாள் அவர்கள் சேகரிக்கும் பதனீர் முழுக்க ஆலயத்திற்குத்தான். பவனி சென்று வந்த அனைவருக்கும் அந்த வேளையில் ஓலைப்பட்டைகளில் பதனீர் கொடுக்கப்படும். ஏழு பனைத்தொழிலாளிகள் இணைத்து கொடுக்கும் இவ்வித ஈகை இன்று காணாமல் போய்விட்டது. திருச்சபை இவ்விதம் தங்கள் உடலுழைப்பால் பணியாற்றியவர்களை  மறந்து போனது துரதிருஷ்டவசமானது.

மதியம் என்னை விட்டுவிட்டு ஜோசப் அவர்கள் கொளும்பு நோக்கிச் சென்றார்கள். நான் போதகர் வீட்டிலேயே இருந்து “நினைவுகளை குணமாக்குதல்” என்ற புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அன்று மதிய உணவிற்குப் பின் போதகர் டெரன்ஸ் என்னை மீண்டும் மெதடிஸ்ட் ஹாஸ்டலில் கொண்டு விட்டார்கள். கோட்டைமுனை திருச்சபைக்கும்  புளியந்தீவிற்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். மாலையில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி வாலிபர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மாலை நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் என்னைத்தேடி வருவார்கள் என்று கூறிச்சென்றார்.

அறைக்குச் சென்ற பின்பு எனது துணிகளை துவைத்து காயபோட்டேன். மேலும் நேரம் இருந்ததால் மட்டு மா நகரை வலம் வரலாம் என்று கிளம்பினேன். அங்கிருந்த வாவி, கடைதெரு போன்றவைகளைச் சுற்றி வந்தேன். அரசு அலுவலகங்கள் அனைத்தும்  புளியந்தீவு பகுதியில் தான் இருக்கின்றன. நடந்து நடந்துச் சென்று இடங்களைப் பார்க்கையில் அவை நன்றாக நினைவில் நிற்கின்றன. இலங்கையில் இருக்கும் ஒரு நிமிடத்தையும் வீணாக்கக்கூடாது என்று வெறித்தனமாக ஊர் சுற்றினேன்.

கருப்பட்டி குட்டான்

கருப்பட்டி குட்டான்

மாலை வேளையில் கடைகள் யாவும் மூடியிருந்தன . பொங்கல் ஆனபடியால் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்கள். எப்படியோ ஒரே ஒரு கடையை மட்டும் திறந்திருக்கக் கண்டு அதனை எட்டிப்பார்த்தேன். சாதாரண மளிகைக்கடைத்தான்.  அங்கே நான் காணவேண்டிய அபூர்வ வஸ்து எனக்காக காத்திருந்தது. பெருவிரல் அளவில் சிறிய ஓலைக் கொட்டான்களில் கருப்பட்டியை வைத்திருந்தார்கள். விலை அதிகம் தான் என்றாலும் அள்ளிக்கொண்டேன். எத்துணை நேர்த்தியான ஒரு பொதியும் முறைமையை நமது முன்னோர் கண்டுபிடித்திருக்கின்றனர். இத்துணை மெலிதாக ஓலையைக் கீறி அதனை முடைந்து செய்வது அரிதான செயல் தானே? இது எங்கிருந்து வருகிறது எனக் கேட்டேன். யாழ்பாணம் என்றார்கள். கூடவே அந்தக் கடையில்  அவித்து காய வைத்த  பனங்கிழங்கை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதன் பெயர் “புழுக்கொடியல்”. மிக நிறைவான ஒரு நடைபயணம் என நினைத்துக்கொண்டேன்.   பனை சார்ந்த ஒவ்வொரு பொருட்களையும் காணும் தோறும் ஒரு பேருவகை என்னைத் தொற்றிக்கொள்ளுவதை உணர்ந்தேன்.

புழுக்கொடியல், மளிகைக்கடையில்

புழுக்கொடியல், மளிகைக்கடையில்

ஐந்து மணிக்குமேல் வாலிபர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்கள்.  கோட்டைமுனை திருச்சபையில் “வாலிபன்” என்ற ஒரு குழு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வாலிபர்களை ஒருங்கிணைக்கும் நண்பர் கஜாந்தன் அவர்களை அங்கே பார்த்தேன். எனது பணியினை மிகவும் முக்கியமானது என கூறி பல விஷயங்களை பேசிகொண்டு வந்தார். இலங்கையின் அமைதியின் சூழலைக்குறித்து விவரித்தார். திருச்சபை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்யும் பணிகளில் “ஒலை கைப்பணியின்” (ஓலைகளைக் கொண்டு செய்யும் கைத்தொழிலை அப்படித்தான் அழைக்கிறார்கள்) முக்கியத்துவத்தை குறிப்பிட்டார்கள்.

இன்றைய இலங்கைத் திருச்சபை மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் ஒரு அமைப்பு. இந்திய திருச்சபைகளில் காணப்படும் ஊழல் என்னும் அமைப்பு இலங்கையில் அறவே கிடையாது. பெரும்பாலான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டதாலும், கண்ணெதிரே பலர் நலிவுற்று இருப்பதாலும் இலங்கை திருச்சபை தனது அழைப்பில் இன்னும் உறுதியோடு நிற்கிறது. என்றும் பனைபோல் அது நிமிர்வுடனே நிற்கும்.

சுமார் 10 வாலிபர்கள் கூடிய அந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்வுடன் சென்றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை அவர்களுக்கு பயிற்சியளித்தேன். திருச்சபையை அலங்கரிக்கவும், வாழ்த்து அட்டைகள் செய்யவும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன். அனைத்து வாலிபர்களும் வேலைக்குச் செல்லுகிறவர்கள். ஆகவே திருச்சபை ஒழுங்கு செய்திருந்த  புதன் கிழமை நிகழ்ச்சிக்கு வர இயலாததால் தங்களுக்கென தனித்த நிகழ்ச்சியை கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். இந்த வாலிபர்கள் தான் கண்காட்சிக்கான ஒழுங்குகளைச் செய்வதிலும் எனக்கு உதவி புரிந்தவர்கள். இறுதியில் அவர்கள் புறப்படும் முன்பதாக அனைத்து பொருட்களையும் நேர்த்தியாக அடுக்கி சீர் செய்துவிட்டே சென்றனர்.

வாலிபர்களுக்கான பயிற்சி

வாலிபர்களுக்கான பயிற்சி

இரவு உணவிற்குப்பின் நான் போதகர் அவர்களிடம் கேட்டுக்கொண்டு நடந்தே எனது அறைக்குச் சென்றேன். மீன் பாடும் சத்தம் கேட்குமா என்னும் எண்ணத்துடன் வாவியைக் கடந்து வந்தேன். அமைதியான அந்த நேரத்தில் ஒருசிலர் விளக்கின் ஓளியில் தூண்டில் இட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். 1960களில் பி பி ஸி அங்கே மீன்கள் பாடும் சத்தத்தை  ஒரு ஆவணமாக எடுத்து ஒலிபரப்பியிருக்கிறார்கள். அந்த இரவில் பாலத்தைக் கடக்கையில் நாம் அறியாத பெரும் பாடகற்குழு ஒன்று மறைந்திருந்து கடவுளை துதிக்கின்றன என எண்ணிக்கொண்டேன்.

“மண்ணுலகில் ஆண்டவரைப் போற்றுங்கள்;

கடலின் பெரும் நாகங்களே, ஆழ்கடல் பகுதிகளே,…” திருப்பாடல்கள் 148, திருவிவிலியம்)

 

இலங்கையின் பண மதிப்பு இந்திய பணமதிப்பில் சரிபாதி கூட இல்லை. போரினால் அவர்கள் இழந்தவைகளை மீண்டும் கட்டிஎழுப்பிக்கொண்டிருக்கும் தருணம் இது. மிகவும் சிக்கலான ஒரு சூழலில் எனது பயணத்தால் அவர்களுக்கு பயன் விளையுமா? என நான் எண்ணிக்கொண்டேன்.  இலங்கை திருச்சபை என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த முக்கிய காரணம் பனை மரம் அவர்களின் வாழ்வாதார மரம் என்பதால் மட்டுமே. அனேகர் இப்பயிற்சியினைக்கொண்டு பயனடைய இயலும் என்ற நம்பிக்கையால் அவர்கள் என்னை அழைத்திருக்கின்றனர்.  பெரும் பணத்தை வைத்துக்கொண்டு எப்படி செலவு செய்வது எனத் தெரியாமல் இருக்கும் திருச்சபைகளுக்கு மத்தியில் மிகவும் சிக்கனமாக தனது பணியை இலங்கை திருச்சபை முன்னெடுக்கிறது என்பதை நான் இலங்கையிலிருந்த ஒவ்வொருநாளும் கண்டுகொள்ளும் தருணங்கள் வாய்த்தன.   பொதுவாக உலக பிரசித்தி பெற்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தினால் பெரும் ஆதரவும், தேவையான பண உதவியும் கிடைக்கும் சுழலில், எளிய என்னை அவர்கள் அழைத்ததன் காரணம், பனை சார்ந்த மக்கள் மேல் இலங்கை திருச்சபை கனிவு கொண்டுள்ளது என்பதனால் தான். ஆகவே திருச்சபையின் பனைமர வேட்கைப் பயண வரலாற்றில், இலங்கைத் திருச்சபை முதன்மையான களப்பணியளராக இலங்கும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: