திருச்சபையின் பனைமர வேட்கை – 10


திருச்சபையின் பனைமர வேட்கை – 10

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

ஓலைப்பூக்கள்

மறுநாள் காலையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. காலையில் நம்மை எழுப்பும் ஒரு உத்தியாகவே “பெட் காபி” இருக்கிறது போலும். எழும்பியபோது காலை ஆறுமணி. ஒருநடை சென்றால் என்ன என்று நினைத்துக் கிளம்பினேன். மிக அதிக தூரம் செல்லாமல் எனக்கு பழக்கப்பட்ட இடங்களிலேயே சுற்றினேன். காலை 7. 30 மணிக்கு காலை உணவும் அதன் பின் 9 மணிக்கு என்னை அழைத்துச்செல்ல ஒருவர் வர இருப்பதாகவும் போதகர் டெரன்ஸ் கூறினார்கள். ஆகவே வேகமாக  அறைக்கு வந்தேன்.

 

அருகில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு மாணவிகள் வந்துகொண்டிருந்தனர். ஒரு போக்குவரத்துத்துறை காவலாளி  நின்று அனைவரும் பத்திரமாக  பள்ளிக்குச் செல்ல வாகனங்களை நிறுத்தி உதவி செய்துகொண்டிருந்தார். இக்காட்சி மிக முக்கியமானது. சாலைவிதிகளில் பாதாசாரிகளுக்கான முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே அவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள். சாலை விதியை ஒரு தலைமுறை மதிக்கவேண்டுமென்றால் அத்தலைமுறைக்கு ஒரு முன்மாதிரி வேண்டும். வாகனங்களை வைத்திருப்போர் கூட மிகவும் கவனமாக ஓட்டுவதைப் பார்த்தேன். ஒருவர் சாலையை கடக்க எத்தனிக்கிறார் என ஓட்டுனர் உணர்ந்தால் போதும், அவர் வாகனத்தை நிறுத்திவிடுவார். மும்பையில் ஒரேநேரத்தில் வாகனமும்  மக்களும் சாலையைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை பார்க்கலாம்.

 

ஜனவரி மாதம் மாங்காய்கள் குலைத்து தொங்குவதையும் அனேகமாக பறிப்பர் இன்றி  அவைகள் உதிர்ந்து விழுகிறதையும் கண்டேன். முதல் நாள் பயணத்தில் இதற்கு நேர் எதிர் மறையான காட்சியை நான் கண்டிருந்தேன். சாலையின் இரு மருங்கிலும் மக்கள் தங்கள் வீட்டின் முன் ஒரு திடீர் கடையை திறந்திருந்தார்கள். தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை அவர்கள் அதில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக அது அவர்களின் ஒருநாள் தேவையை பூர்த்தி செய்யும் என்பது கண்கூடு. இவ்விதமான ஒரு கருத்தூன்றிய பராமரிப்பு அனைத்துத் தாவரங்களுக்கும் தேவையாகிறது. மாறுபட்ட சீசனில் விளையும் காய்கனிகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். அவ்விதம் மாங்காய்களையும் முருங்கைக்காய்களையும் விற்று நானே மீன் வாங்கியிருக்கிறேன்.

 

இன்று பெரும்பாலும் மக்களின் நேரம் தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் வீணான அனைத்து காரியங்களிலும் செலவுபடுத்தப்படுகிறது. இயற்கையைப் பேணுவது அன்றாட நிகழ்ச்சியின் ஒரு பகுதியிலிருந்து மாறி மரம் நடும் விழாவாக சுருங்கிப்போனது. அதில் மக்களின் பங்களிப்பென்ன அதன் பயனாளிகள் யார் எனக் குறிப்பிடப்படாத மரம் நடும் முயற்சிகள் யாவும் தோல்வியையே சந்திக்கும். பொதுவாக மரம் நடப்படும் பகுதியில் உள்ள மக்களின் ஆதரவோடும், அவர்கள் பயன் பெறும் வகையிலும் மரங்கள் நடப்பட்டாலே பயனுண்டு. இல்லையென்றால் மழை வேண்டி செய்யும் பிரார்த்தனையின் அளவு கூட மரம் நடும் விழாக்கள் பயன் தருவது இல்லை. அது மரம் நடுவோரை குறித்த ஒரு நல்ல பிம்பத்தை மட்டுமே  முன்னிறுத்தும் ஒரு நிகழ்ச்சியாக மாறி விடுகிறது. இவ்வகையில் பார்க்கையில் இயேசுவின் மலைப்பொழிவு கூற்றே நினைவிற்கு வருகிறது.

 

“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.” (மத்தேயு 6: 1 – 4 திருவிவிலியம்)

 

காலை ஒன்பது மணிக்கு என்னை அழைக்கும்படி திரு. பாக்கியராஜா மற்றும் அவரது மனைவி, தங்கள் வாகனத்துடன்  வந்தார்கள். எனக்கு மட்டக்களப்பை காட்டித்தரும் பொறுப்பை அவர்கள் போதகரிடத்தில்  கூறி ஏற்றிருக்கிறார்கள். அவரது மனைவி என்னைப்பார்த்து புன்னகைத்து  ‘போதகரய்யா, எங்கட மகளுட படத்தை ஓலையில நீங்க கீறி தந்ததை நாங்க பாத்தோம்” என்றார்கள். எனக்கு நினைவில்லை அனேகருடைய படத்தை கோட்டைமுனைத் திருச்சபையில் நான் ஓலையில் செய்து  கொடுத்தேன். எவராயிருக்குமென என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால் அவர்கள் அதனை மிகப்பெரும் பொக்கிஷம் என கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். அடிக்கடி அவர்கள் “போதகரைய்யா” என்று அழைத்தது இலங்கைத் திருச்சபையினருக்கே உரித்தான அழகிய விளி.

 

முதலில் என்னை அங்கிருந்த ஒய் எம் சி யே (YMCA) விற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மட்டக்களப்பு ஒய் எம் சி யே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு கிறிஸ்தவ நிறுவனம். கடந்த 1971  ஆம் ஆண்டு மட்டக்களப்பில் துவங்கப்பட்ட இன்நிறுவனம், பெருமளவில் தன்னை மக்கள் பணிக்காக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. குறிப்பாக சுனாமி நேரத்தில், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டக்களப்பும் ஒன்று. ஆகவே இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒய் எம் சி ஏ தனது சேவைகளை, தனது உலகளாவிய செல்வாக்கால் சிறந்தமுறையில் செய்து தந்திருக்கிறது.   மாத்திரம் அல்ல உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விலும் நம்பிக்கை அளிக்கும் வண்ணமாக பல தொடர் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. ஓலைக் கைப்பணி பயிற்சிகள் அவைகளுள் தவறாது இடம்பெறும் ஒன்று.

 

என்னை அங்கே அழைத்துச்செல்லுவதற்கு மேலும் ஒரு முக்கிய  காரணம் இருந்தது. செவிபுலன் அற்ற மற்றும் பேச்சு திறன் குன்றிய  குழந்தைகளுக்கு என ஒரு பள்ளிக்கூடம் ஒய். எம் .சி . ஏ நடத்துகிறது.  அப்பிள்ளைகள் அனைவரும் அபாரமான திறமை வாய்ந்தவர்கள்.  சிறப்பாக கைவினைப்பொருட்கள் போன்றவற்றைச் செய்வதில் தனித்திறமை கொண்டிருக்கிறார்கள் என்பதை, அவர்கள் அந்த பள்ளிகூடத்தைச் சுற்றிக்காட்டியபோது  தெளிவாகத்  தெரிந்தது. அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை செய்யலாமே என்பது திரு. பாக்கியராஜா அவர்களின் விருப்பம்.. அந்தச் சிறு பிள்ளைகளுக்கு மதியம் 12 மணிக்கு மேல் தான் நேரம் கிடைக்கும் என்பதால் நிகழ்சிக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

பாக்கியராஜா மற்றும் அவரது மனைவி

பாக்கியராஜா மற்றும் அவரது மனைவி

என்னை அவர்கள் அழைத்துச் செல்லும் வழியில் செவ்விளநீர்கள் இருந்த ஒரு சாலையோரக்கடையின் அருகில் வாகனத்தை நிறுத்தினார்கள். அங்கே கிட்டத்தட்ட அரை லிட்டர் அளவு பெரிதாக  இருக்கும் ஒரு பெரிய கண்ணாடி கோப்பையில் இளநீரில் ஐஸ் மற்றும் சீனி போட்டு கலக்கி கொடுக்கிறார்கள். இலங்கையின் முக்கிய உணவு  பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு சுவை மிகுந்த பானம் இது. மெய்மறந்து குடித்தேன். வெயிலுக்கு நன்றாக இருந்தது.

 

சுற்றிலும் இருக்கும் பனைமரங்களை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் வந்து தன்னை அறிமுகப்படுத்தினான். கோட்டைமுனை திருச்சபையில் தான் அங்கத்தினர் என்றும் பயிற்சிக்கு தான் வர இயலவில்லை எனவும், அருகில் தான் பணிபுரிகிறேன் என்றும் சொன்னான். வாலிபர்களை ஏதோ ஒரு வகையில் ஓலை ஈர்த்துக்கொண்டது என்பது நான் கண்ட உண்மை.  இன்று வாலிபர்கள் இயற்கையோடு ஒன்றி கலந்து உறவாடும் வாய்ப்பினை விரும்புகிறார்கள். ஆகவே திருச்சபை இயற்கை சார்ந்த தனது சிந்தனைகளை சீர்தூக்கிப்பார்ப்பது நலம். இயற்கையுடன் அவர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிகள் திருச்சபையில் தவறாது நடைபெறவேண்டும். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் பனை சார்ந்த ஒரு மாறுதலை இளைய சமூகம் முழுமனதுடன் வரவேற்க சித்தமாக இருக்கிறது. ஆனால் அதனை அவர்களுக்கேற்ற வடிவில் கொடுக்கும் தொழில் நுட்பத்தை நம் திருச்சபைகள் வளர்த்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

மீனவர்கள் பிடித்துவந்த உயிருள்ள மீன்கள்

மீனவர்கள் பிடித்துவந்த உயிருள்ள மீன்கள்

அங்கிருந்து என்னை மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் நோக்கி அழைத்துச் சென்றர்கள். அந்த பாதையே மிக அழகாக இருந்தது. வழியில் மீனவர்கள் மீன்களை துடிக்கத் துடிக்க பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தோம். மீனின் விலை கிலோ 150 இலங்கை ரூபாய் மட்டுமே. மட்டக்களப்பில் மீன் விற்கவேண்டுமென்றால் அது உயிருடன் இருக்கவேண்டும். இல்லையென்று சொன்னால் அதனைக் கருவாடாக மாற்றிவிடவேண்டும். நாங்கள் தொடர்ந்து பயணிக்கையில் தொலைவில் அந்த கலங்கரை விளக்கம் எங்களை அழைத்தபடி நின்றுகொண்டிருந்தது. வாவியின் அருகிலுள்ள சாலை வழியாக பயணிப்பது பேரின்பம். நாங்கள் கலங்கரை விளக்கம் வந்தபோது அதன் எதிரிலேயே “பனை அபிவிருத்தி சபை” இருந்தது. என்னை அதற்காகவே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

பனை அபிவிருத்திச் சபை முன்னால்

பனை அபிவிருத்திச் சபை முன்னால்

பனை அபிவிருத்தி சபையின் தலைமைச்செயலகம் யாழ்பாணத்தில் இருக்கிறது. அதன் ஒரு அங்கமாக மட்டகளப்பில் பனை அபிவிருத்தி சங்கம் செயல்படுகிறது. இதில் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பயிற்றுனர்கள் வந்து செல்லுகிறார்கள். ஒவ்வொருவரும் தான் கற்றுக்கொண்டவைகளை பிறருக்கும் கிராம மக்களுக்கும் எடுத்துக்கூறுகிறார்கள். யுஎஸ்எய்ட் (USAID) சார்பில், ஒரு அழகிய விற்பனைக்கூடம் கட்டிகொடுத்திருக்கிறார்கள். மிக அழகிய ஓலை பூச்செண்டுகளை அங்குள்ளவர்கள் அமைத்திருந்தார்கள். இந்தியாவில் நான் பார்த்த  அனைத்து பூச்செண்டுகளை விடவும் இலங்கையில் அவர்கள் செய்திருந்தது மிக அழகாக இருந்தது. ஒன்றை நானே வாங்கவேண்டும் என நினைக்குமளவிற்கு அது கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

பனைஓலையில் செய்யப்பட்ட ஆர்கிட்

பனைஓலையில் செய்யப்பட்ட ஆர்கிட்

ஓலைகளில் அவர்கள் வண்ணம் ஏற்றிய நுட்பத்தை நான் அறிவேன். இருமுறை சாயமேற்றும் முறை அது. முதலில் சாயம் ஏற்றும் வண்ணம் மெல்லியதாகவும் இரண்டாம் முறை சயம் ஏற்றுகையில் வேறு அடர்த்தியான வண்ணத்தில் ஒலையில் பாதியளவை மட்டுமே முக்கி எடுப்பது. இவ்விதம் செய்கையில், ஓலையில் வண்ணங்கள் அடர்த்தியிலிருந்து மென் வண்ணங்களாகவும், மென் வண்ணத்திலிருந்து வெளிறிய வண்ணமாகவும் இதழ்களை அமைக்கும் நுட்பம் அது. மலரிதழ்கள் சுருங்கியும் விரிந்தும் காணப்பட்டன என்றாலும் அவைகளில் ஒரு செய் நேர்த்தி காணப்பட்டது. அதை எப்படிச் செய்கிறார்கள் என அறிய விழைந்து அருகிலேயே இருந்த அவர்கள் பயிற்சி மையத்திற்குச் சென்றோம். சுமார் 20 பெண்கள் வரை குழுமியிருந்த அந்த கூட்டத்தில் என்னை பாக்கியராஜா அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

பனை அபிவிருத்திச் சபை பயிற்சியாளர்களுடன்

பனை அபிவிருத்திச் சபை பயிற்சியாளர்களுடன்

சற்றே அசிரத்தையாக என்னை கவனித்தவர்கள், நான் கொண்டுசென்றிருந்த படங்களைப் பார்த்தவுடனேயே மிகவும் உற்சாகமாகிவிட்டார்கள். என்னைச் சுற்றி வளைந்து கொண்டார்கள். இலங்கை முழுவதிலும் இவ்விதம் ஒரு கலை வடிவம் கிடையாது. எங்களுக்கு பயிற்சி தாருங்கள் எனக் கேட்டார்கள். மேலும் காய்ந்த ஓலைகளில் நான் இவ்விதம் பொருட்களைச் செய்கிறேன் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. எப்படி இவைகளைச் செய்கிறீர்கள் என கேட்டார்கள். செய்முறை விளக்கம் அளித்தேன். அங்கே அன்று அவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலவில்லை. தங்கள் நிர்வாக அதிகாரியைத் தொடர்புகொள்ள  வேண்டி எனக்கு எண்ணைக் கொடுத்தார்கள்.  பாக்கியராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது, தான் வேலை விஷயமாக வெளியில் இருப்பதாகவும் வருவதற்கு நேரம் ஆகும் என்றும் சொன்னார்கள். மேலும் நான் யாழ்பாணம் செல்லுவேனென்றால் அங்கே என்னை சந்திக்க அவரது உயர் அதிகாரிகளை தான் கேட்டுக்கொள்ளுவதாகவும் அவர் கூறினார்.

ஓலை இதழ்களில் சுருக்கங்கள் ஏற்படுத்தும் கருவி

ஓலை இதழ்களில் சுருக்கங்கள் ஏற்படுத்தும் கருவி

பனை என்றாலே ஏன் யாழ்பாணம் என்று அனைவரும் கூறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் கூடத்தான்   அனேக பனை மரங்கள் இருக்கின்றதை நான் என் கண் முன்னே காண்கிறேன், ஆனாலும் யாழ்பாணம் நோக்கி செல்லவே அனைவரும் கைகாட்டுவதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். ஆகவே யாழ்பாணத்தை காணாமல் திரும்புவதில்லை என உறுதி பூண்டேன். ஆனால் நான் யாழ்பாணம் செல்ல ஏற்கனவே ஜோசப் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் நான் சந்தித்தவர்கள் பனையைக் குறித்து நான் பேசுகையில், நாங்கள் யாழ்பாணத்துக்காரர்கள் என சொல்லத் தலைப்படுவதை கவனித்திருக்கிறேன். அது பனைக்குரியவர்கள் நாங்கள் எனும்  பெருமிதம் தொனிக்கும் குரல் என்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.

ஓலை இதழ்களில் பயிற்சியளிக்கும் சகோதரி

ஓலை இதழ்களில் பயிற்சியளிக்கும் சகோதரி

ஓலைகளில் வளைவும் நெளிவும் எப்படி வருகிறது என்பது எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது. அதனை அவர்கள் எனக்கு விளக்க முடியுமா என்று கேட்டேன். உற்சாகமாக ஒரு சகோதரி முன்வந்தார்கள். ஓரு நீண்ட இரும்பு கம்பியின் ஒரு ஓரத்தில் ஒரு கோலிக்குண்டை விட சிறிதான ஒரு இரும்பு குண்டை ஒட்டியிருந்ததைக் காண்பித்தார்கள். பிற்பாடு ஒரு சிறு மணல் மூட்டையை எடுத்து மேஜைமேல் வைத்தார்கள். ஓலைகளில் இதழ்களை வெட்டியபின்பு, அந்த ஓலை இதழை மணல் மூட்டையின் மேல் வைத்துவிட்டு  கூறினார்கள், இந்த இரும்பு குண்டை நெருப்பில் சரியான அளவு வெப்பத்தில் சூடாக்கி பின் இந்த ஓலையின்மேல் வைத்து அழுத்தினால்  இந்த ஓலை வளைவு நெளிவு கொண்டு உயிரோட்டமுள்ள ஒரு பூவின் இதழ்களைப்போல் ஆகும் என்றார்கள். ஆம், அவர்கள் ஆர்கிட் போன்ற மலர்களைக்கூட இதே உபாயத்தை பயன்படுத்தி தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள்.

கார்மென், மலர் சீரமைப்பாளர்

கார்மென், மலர் சீரமைப்பாளர்

சுவிச்சர்லாந்தில் எனக்கு கார்மென் ரோத்மேயர் என்ற ஒரு தோழி உண்டு. அவர்கள் பூக்களை மட்டும் வைத்து அலங்காரம் செய்யும் கலையைக் கற்றவர்கள். நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி சங்கத்தில் இருந்தபோது தான் அவர்களை முதன் முறையாக சந்தித்தேன். அன்று அவர்களுடன் வந்த ஒருவருக்கு பிறந்த நாள். ஆகவே கார்மென் அவர்கள் தானே எங்கள் தோட்டத்திலிருந்து பறித்த செம்பருத்தி பூ, தெற்றிப் பூ மற்றும் அங்கிருந்தே பறித்த சாதாரண இலைகளைக் கொண்டும் ஓலைகளைக் கொண்டும் கையடக்க மலர்செண்டு ஒன்றைச் செய்து பரிசளித்தார்கள். அந்த செண்டை சுற்றியிருந்தது காய்ந்த வாழையிலை. ஆனால் அதன் வடிவ நேர்த்தியில் நான் மனதை பறிகொடுத்தேன். இந்திய அளவில் இத்தகைய அழகிய வடிவங்களைச் செய்யும் எவரையும் நான் பார்த்தது இல்லை. சுமார் 10 வருடங்களுக்குப் பின்பு தொடர்பு கொண்டபோது அவர்கள் தான் இக்கபானா (Ikebana) எனும் ஜப்பானிய பூ அமைக்கும் கலையை பயின்று வருவதாக கூறினார்கள். என்னால் நம்பவே இயலவில்லை. அவர்களே தன்னளவில் ஒரு பெரும் கலைஞர் தான் மேலும் எதற்காக இப்படி படிக்கிறீர்கள் என்று கேட்டேன், “இக்கபானா தனித்துவமான கலை, நான் அதனை முறைப்படி கற்கவேண்டும் என விரும்பினேன்” என்றார்கள். இக்கபானாவில் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நாம் ஒரு மலர்கொத்தை அமைக்க இயலும், கண்பதற்கு எளிமையாக இருந்தலும் வடிவில் அது முழுமை கொண்டிருக்கும். அப்படியான ஒரு கலைப்படைப்பை ஓலையில் கூட கொண்டுவர இயலும். நாம் தான் அதற்கு ஆயத்தமாக வேண்டும்.

கார்மென் அமைத்த மலர் அலங்காரம்

கார்மென் அமைத்த மலர் அலங்காரம்

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: