திருச்சபையின் பனைமர வேட்கை – 11


திருச்சபையின் பனைமர வேட்கை – 11

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

நெருக்கப்படும் பனை

பனை அபிவிருத்திச் சபையை விட்டு நாங்கள் வெளியே வந்த போது ஒரு படகுத் துறையை பார்த்தோம். படகுத் துறை, பனை அபைவிருத்திச் சபை மற்றும் கலங்கரை விளக்கம் யாவும் மிக அருகிலேயே ஒன்றிற்கு மற்றொன்று எதிர்புறமாக இருந்தன.  எனக்கு படகில் பயணிப்பது பெரும் கவற்சியான ஒன்று இல்லை ஆனால் படகில் சென்றால் அக்கரையில் நிற்கும் பனைமரங்களை இன்னும் அருகில் சென்று காண ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஏதேனும் புதிய விஷயங்கள் தென்படலாம் என எண்ணினேன். நாங்கள் படகில் செல்லுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டபோது இலங்கைப்பணம் ரூபாய்1200 என்று சொன்னார்கள். எனக்கு அது மிக அதிக தொகையாகப் பட்டது. பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். ஆகவே திரு. பாக்கியராஜா அவர்கள் என்னை அதே பகுதிக்கு  தனது வாகனத்திலேயே அழைத்துச் சென்றார்கள்.

கலங்கரை விளக்கம், மட்டக்களப்பு

கலங்கரை விளக்கம், மட்டக்களப்பு

அந்த பயணம் நான் மனதளவில் மிகவும் இரசித்த ஒரு பயணம். உள்ளே செல்லச் செல்ல பனைமரங்களின் திரட்சியைக் காணமுடிந்தது. மிக அதிகமாக பனை மரங்கள் திரண்டு நிற்கிறது என்று கூற இயலாவிட்டாலும் பனையைத்தவிற  வேறு மரங்கள் இல்லாத ஒரு வெளியாக அது இருந்ததைக் காணமுடிந்தது. பெரும்பாலும் பனை மரங்களில் ஆல் மற்றும் அரசு மரங்கள் தொற்றி இருந்ததைக் காணமுடிந்தது.

 

ஆகவே இப் பனை மரங்களும் பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதியாக கூறமுடிந்தது. போர் ஒரு காரணம் அதைத்தொடர்ந்து சுனாமி வந்தது மற்றுமொரு காரணம். அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவருமே அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். வீடுகளின் அஸ்திபாரங்களும் ஒரு சில இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்புகள் ஏதும் அப்பகுதியில் இல்லாததால் ஒருவேளை பனையேற்று நின்றிருக்கலாம். பனை மரங்களும் கூட, அவற்றின் மேல் சுனாமி அலையின் தண்ணீர்  புரண்டு சென்றவைகள் மாண்டுபோயின என்று பிற்பாடு சொல்லக்கேட்டேன். மட்டக்களப்பைப் பொறுத்த அளவில் வெறும் 15 அடி உயரமே தண்ணீர் உயர்ந்திருக்கிறது. அப்படியென்றால் பல வடலிகளும் புதிதாய் முளைத்து வருவன மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும். பனையின் உயரத்துடன் ஒப்பிடுகையில், 15 அடி என்பது பெரிது அல்ல. 60 அடி வரைக்கும் கூட பனை மரம் வளரும்.

 

டாக்டர் டி. ஏ. டேவிஸ் (T. A. Davis) அவர்கள் நெரிக்கப்படும் பனைகள் குறித்து  ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரையையே எழுதியிருக்கிறார். தென்னையில் இந்தப் பிரச்சனை வருவதில்லை. பனைகள் மற்றும் ஈச்சமரங்களில்  இவைகள் தொற்றி வளருவதற்கான காரணம் என்ன? பொதுவாக இவ்விதைகள் பறவைகளின் எச்சங்கள் வழியாக பரவிவருவதைக் காணமுடியும். பனை மட்டைகள், அவைகள் வடலியாக இருக்கையில் தென்னை மட்டைகள் போல, தானே விழுவதில்லை. ஏன் வளர்ந்த பின்பும் கூட அதனை மனிதர்களே சுத்தப்படுத்தி  பயன்படுத்தும் நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். இவ்வகையில் பனை மட்டைகளில் தொற்றி வளரும் ஒரு விதைக்குத் தேவையான அனைத்து ஊட்டங்களும்  அந்த மட்டையிடுக்குகளில் காணப்படுகிறது. தேவையான ஒளி, தேவையான இருள் காற்றோட்டம், ஈரப்பதம் மற்றும் பாதுகாப்பு அவ்விடத்தில் கிடைக்கிறது. ஆகவே பனைமரங்களில் தொற்றிப்பிடித்து வளர்ந்து சுமார் நூறு வருடங்கள் வாழும் பனைபரம் அழிந்த பின்னும் இம்மரங்கள் எஞ்சி நிற்கின்றன. அடையாறு ஆலமரம் விழுந்தபோது அதன் மையத்தில் ஒரு பனை நின்றிருக்கிறதற்கு அடையாளமாக ஒரு துளை இருந்ததாகச் சொல்லுவார்கள்.

 

அரசு (Ficus religiosa) ஆலமரம் (Ficus Benghalensis) மற்றும் அத்தி (Ficus carica)ஆகிவை ஃபைகஸ் (Ficus) எனும் தாவர பேரினத்தில் உள்ளவைகள். இவைகள் சமயங்களில் புனித மரங்களாகவும் குறியீட்டு தன்மை கொண்டவைகளாகவும் மிக முக்கிய பங்களிப்பாற்றுகின்றன. அரசமரம் பவுத்த மதத்திலும், ஆலமரம் இந்து மதத்திலும், அத்திமரம் ஆபிரகாமிய மதங்களிலும் முக்கிய குறியீடாக பங்களிப்பாற்றுகின்றது. திருமறையில்  காணப்படும் முதல் தாவரம் அத்தி தான். மனிதர்கள் 6500 வருடங்களுக்கு முன்பே அத்தியை பயிரிட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆல அரச மரங்கள் மிகவும் வணங்கத்தக்க மரங்களாக இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது. இந்தியாவில் காணப்படும் ஆல் மற்றும் அரச மரங்கள் யாவும் பனையிலோ அல்லது ஈச்சமரத்திலோ தொற்றி  வளர்பவை. இவைகளை தெரிவுசெய்த மூதாதையின் மனம் கண்டடைந்த தரிசனம் என்ன? அவைகள் தான் இம்மரங்களை சமயக்கூறியீடு பெறும் தன்மைக்கு முன்னகர்த்தியிருக்கிறது என்பது உண்மை.

பனையில் தொற்றியிருக்கும் ஆலமரம்

பனையில் தொற்றியிருக்கும் ஆலமரம்

இம்மரங்கள் மண்ணில் பிறக்காமல் விண்ணில் பிறக்கத் துடிப்பதாலா? அல்லது பனை மரத்தில் பிறப்பதால் இவைகள் மேன்மையானவைகளா? இல்லாவிடில், தன் இனத்தைச் சாராத பனையினை தழுவி நிற்பதால் இணைவு எனும் எண்ணத்துடன் இவைகள் நோக்கப்பட்டடதா? இல்லை, தான் சார்ந்திருந்த பனையினை மெல்ல மெல்ல விழுங்கி அழித்து பிரமாண்டமாக கிளை பரப்பியதால் இவைகள் பிரமிப்புடன் நோக்கப்பட்டு சமயங்களில் இக்குறியீட்டு தன்மைகளை அடைந்ததா? அல்லது அழித்த பனை மரத்தின் வடுவை தன்னுள் ஒரு வெற்றிடமாக ஏந்தியிருப்பதாலா? பிறத்தலும் இணைவும் அழிவும் எஞ்சிய  வடுக்களும் சமயங்களால் தவிர்க்க முடியாத பேசு பொருள்கள் தானே?

நம்பிக்கை அளிக்கும் இளம் பனங்கன்றுகள்

நம்பிக்கை அளிக்கும் இளம் பனங்கன்றுகள்

அப்பகுதிகளில் இருந்த மணற்பரப்பில் பனை விதைகள் ஊன்றப்பட்டு முதல் ஒரிரு இலைகள்  வெற்றி எனக் கூறி நிற்பது போல் நின்றுகொண்டிருந்தன. பனையினை எதிர்காலத்திற்கென வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியில் இலங்கை அரசு தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதை அது காண்பிக்கிறது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதுவும் ஒன்று ஆகவே  எதிர்காலத்தினை மனதில் கொண்டு பனை மரத்தினை நட்டு, அப்பகுதிகளை பேணி காக்கிறார்கள். இவ்விதமான ஆளரவமற்ற  இடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்விடத்தில் ஆளரவமற்றுப்போனதன் பின்னணியம் விரும்பத்தக்கதாக இல்லை.

பனைமட்டையால் வேலி

பனைமட்டையால் வேலி

பனை மரங்கள் அதிகமாக இருப்பதால் தானோ என்னவோ அங்கே  பனை மட்டையை வைத்து வேலிகளில் அமைத்திருந்தார்கள். இலங்கையில் ஒரு பனை மட்டையின் விலை 6 ரூபாய் இந்திய பணத்தில் வெறும் 3 ரூபாய் கூட வராது தான். மிகவும் சிக்கனமான  காலத்தால் தொன்மையான வேலியமைப்பு. மேலும் சூழியலுக்கு இணக்கமானதும் கூட. என்னைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் இவ்வித வேலிகள் அமைக்க பனை மரங்களிலிருந்து மட்டைகள் எடுக்கப்படாமலிருந்தால் இன்னும் அனேக பனை மரங்கள் ஆல மரத்திற்கும்  அரச மரத்திற்கும் தங்குமிடமாகிப்போய்விடுமோ?

 

ஆனால் இலங்கையைப் பொறுத்த அளவில் இவைகளை தழுவி நிற்கும் ஒன்றாகவே நான் காண முற்படுகிறேன். ஒன்றை  பற்றிக்கொண்டு பிறிதொன்று வளர்வது முக்கியமான குறியீடாக இருக்கிறது. இந்த இணைவின் சூழியல் முக்கியத்துவத்தையும், அரசியல் மற்றும் சமய ஒன்றுதலையும் அந்தந்த துறைகளில் உள்ள அறிஞர்களே திறம்பட நமக்கு விளக்க இயலும்.

 

ஒருவேளை இவ்விதம் பனை மரத்தில் அரசமரமோ அல்லது ஆலமரமோ பற்றிப்பிடித்து வளர்கையில், பனை மரம் அழிந்து போய்விடுமே என அஞ்சத்தேவையில்லை. நான் ரசாயனியில் பார்த்த பனை மரத்தில்  சரிபாதியாக ஒரு ஆலமரம் பற்றிப்பிடித்து கிளை பரப்பியிருக்கிறது. அதில் கிடைக்கும் கள்ளிற்காக ஒரு பனைத்தொழிலாளி அதில் ஏறுவதையும் நான் கண்டிருக்கிறேன். பொதுவாக குறைவாக பதனீர் கிடைக்கும் மரங்களை குமரி மாவட்டத்தில் கள்ளப்பனை (திருட்டுத்தனம் செய்யும் பனை) என்று குறிப்பிடுவார்கள். இங்கு ரசாயனியில், நல்ல ஊற்றுள்ள மரங்களை மட்டுமே பனைத்தொழிலளிகள் தெரிவு செய்வார்கள். அப்படி இருக்கையில் இரு மரங்களும் இணைகையில் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. பனை மரத்தின் உறுதியான வெளிப்புறத் தோடும் அதனை அதன் வாழ்நாள் முழுவதும் அதனை நெருக்கும் மரத்திலிருந்து  பாதுகாக்கிறது என்றே எண்ணுகிறேன். ஆனால் பனையை பேணுவோர் இல்லாவிடில் இவ்வித இணைவு என்பது இணைவாக கருதப்படாது மாறாக ஆக்கிரமிப்பாக, நெருக்கும் உத்தியாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

 

நான் கிறிஸ்தவ நோக்கில் பனையைக் காண முற்பட்டாலும், கிறிஸ்தவ புரிதலுடன் அதனை அணுகினாலும், பிற சமயங்களிலும் பனை அதி முக்கிய குறியீட்டு தன்மைகளுடனும் வழிபாட்டு முக்கியத்துவத்தையும்  கொண்டிருப்பதை மறுக்க மனம் ஒப்பவில்லை. ஆகவே பனையினை சமயங்களின் பொதுவான புனித மரம் என்றேன் நான் கொள்ளுகிறேன். எனது சமயத்திற்குள் வைத்து அதை நான் ஆராய்கையில், எவ்விதம் எனது சமயம் பனை மரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அதனைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வில் கிறிஸ்தவம் பாராமுகம் கொண்டு இருக்கலாகாது என்பதையும் முன்மொழிகிறேன். இவைகளையே அனைத்து சமயங்களிலும் தத்தமது புரிதல்களுடன் முன்னெடுக்க விழைகிறேன். அவ்விதம் எடுக்கப்படும் முயற்சிகளில் சமயம் சாராதவர்களும் தங்கள் பங்களிப்பை இயற்கை ஆர்வலர் எனும் நோக்கில் பகிர்ந்து கொள்ள அழைப்பை விடுக்கிறேன். இவ்விதமாக இணைந்தாலொழிய பனையின் பயன்களை நம் சந்ததி சுவைக்க இயலாது.

 

இலங்கைப் பயணத்திற்கான எனது கடித போக்குவரத்திலும் இவைகளையே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். பல சமயங்கள் சொந்தம் கொண்டாடும் பனையை நாமும் சொந்தம் கொண்டாடுவது நமது சுய லாபத்திற்கா அல்லது பனையும் அப்பனை சார்ந்த மக்களின் வாழ்வும் துளிர்பதற்கா? எங்கே நாம் அவர்களை தவறவிட்டோம். நம் அவர்களோடு இணைந்து பயணிக்காதது ஏன்? திருச்சபை ஏன் இவ்விதமாக  தன்னை அன்னியப்படுத்திக்கொண்டுள்ளது? அல்லது நாம் இம்மக்களுடன் அன்னியப்பட்டிருக்கிறோம் எனும் அடிப்படைப் புரிதலாவது இருக்கிறதா?  இவ்விதம் ஏற்படும் இடைவெளிக்கு என்ன காரணம் என ஏதேனும் ஆய்வுகள் உள்ளனவா?

 

இத்தேடல்கள் எவரோ ஒருவருக்கு இருக்குமென்றால் அது பயன் விளைவிக்காது, ஆனால் இதுவே திருச்சபையின் பணிகளின் மத்தியில் இணைவு கொண்டு இதற்கெனவும் மன்றாட்டுகளும் பணிகளும் அமையுமென்றால் நாம் சற்றே பனைக்காக களமிறங்கியிருக்கிறோம் என்பது பொருள். இன்று கிறிஸ்தவர்கள்  ஓலைகளை தூக்கியபடி பவனி செல்லுவதை விட பனை மரங்களை நட்டு, குருத்தோலை  ஞாயிறை அனுசரிப்பது அர்த்தம் பொதிந்ததாக காணப்படும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: