திருச்சபையின் பனைமர வேட்கை – 12


திருச்சபையின் பனைமர வேட்கை – 12

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மொழிகளைக்கடந்த ஓலை

உற்சாக மிகுதியில் மாணவர்களும் நானும்

உற்சாக மிகுதியில் மாணவர்களும் நானும்

மீண்டும் நாங்கள் ஒய் எம் சி யே வந்த பொழுது சிறுவர்கள் ஆயத்தமாக இருந்தார்கள்.  உலகில் பேசத்தெரிந்த மக்கள் அனைவருமே செய்கை செய்யும் மக்கள் தான்.  ஒரு சராசரி மனிதர் ஒரு நாளில் தான் செய்யும் தகவல் தொடர்புகளில் வெறும் 7 சதவீதம் மட்டுமே சொற்களை ஒலிகளாக்கி பயன்படுத்துகிறான். மற்ற நேரங்களில் அவர் வெறும் ஒலிகளையோ அல்லது செய்கைகளையோ பயன்படுத்துவதாக  டாக்டர் ஆல்பர்ட் மெராபியன் (Dr. Albert Mehrabian) குறிப்பிடுகிறார். அதற்காக நான் துணிந்து செய்கை மொழியில் இறங்க முடியாது. அம்மொழியினை மிகச்சரியாக கற்றவர்களின் உதவி எனக்குத் தேவை. எனது பேச்சினை செய்கை மொழியில் எடுதுக்கூற ஒரு ஆசிரியை முன்வந்தார்கள்.  பேச்சைவிட  செயலே முக்கியம் எனக் கருதி அவர்களை பாராட்டும் முகமாய் ஒரு முன்னுரையைக் கூறிவிட்டு களத்தில் இறங்கினேன். அவர்களது மொழி செய்கை மொழியாயிருந்தபடியால் ஒவ்வொரு சிறு குழந்தையின் உணர்ச்சிகளையும் என்னால் நன்கு உள்வாங்க முடிந்தது.  முகத்தில் அத்தனை துல்லியமாக உணர்ச்சிகளை கொண்டுவருகிறார்கள். குறிப்பாக எனது பேச்சினை ஆசிரியர் செய்கை மொழியில் பேசுகையில், அச்சிறு பிள்ளைகளின் கூட்டமே அதே செய்கைகளை திருப்பிச் செய்தே புரிந்து கொண்டார்கள். அது மிக அழகாக இருந்தது. ஒன்றிணைந்து கற்றுக்கொள்ளும் பாங்கு கொள்ளை அழகு.

அவர்களின் விருப்பங்களை ஒட்டியே கற்றுக்கொடுத்தேன்.  முதலில் ஒரு மெழுகுவர்த்தியும் பின்னர் ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையும் செய்யக் கற்றுக்கொடுத்தேன். அதன் பிற்பாடு அவர்கள் கூறிய மிருகம், பறவை மற்றும் அவர்களில் ஓரிருவர் படங்களையும் செய்துகொடுத்தேன். அங்கிருந்து கிளம்புகையில் அவர்கள் அனைவரும் கரங்களை உயர்த்தி எனக்கு நன்றி சொன்னார்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிகழ்ச்சி திடீரென உதயமாகி குறிப்பிடத்தகுந்த ஈடுபாட்டை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது அனைவருக்குமே மகிழ்சியளிப்பதாய் இருந்தது.  உடனிருந்து அனைத்தையும் பார்த்த  செயலாளர் எனக்கு ஒரு “காஃபி மக்” பரிசளித்தார். நிகழ்சிகள் மிக அருமையாக இருந்தது என்றும் மீண்டும் வருகையில் எங்களுக்கு  முன்னமே தகவல் தெரிவித்தால் இன்னும் அனேகர் பயன்பெறும் வண்ணமாக நிகழ்சிகளை ஒழுங்குசெய்யலாம் என்றார்கள்.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் சற்றேரக்குறைய ஒன்றுபோல் அமைந்திருந்தது  ஏன் என எண்ணுகையில், இலங்கையின் தேவை அப்படிப்பட்டது என்றே தோன்றியது. ஏதேனும் ஒரு சிறு கைத்தொழில்  கற்றுக்கொண்டாலும் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதே எதார்த்த நிலை. இவ்விதம் அவர்கள் கைத்தொழிலை முன்னெடுக்கையில் அவற்றை ஊக்குவிக்க திருச்சபைகள் முதலில் களமிறங்கவேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது. ஏனெனில் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளும்போது முதலில் அவைகள் சந்தையில் உள்ள பொருட்களோடு போட்டியிட தகுதியுள்ளவைகளாக இராது. அவைகளை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தேவை. திருச்சபைக்கு அவ்விதம் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு நினைத்தால் ஒரு கைத்தொழில் செய்யும் பணியாளரை ஊக்குவிப்பது பெரியகாரியம் இல்லை. மேலும் மாற்று நிகழ்ச்சிகளை தங்கள் திருச்சபையின் நிகழ்ச்சிகளோடு ஒன்றிணைப்பதும் சாத்தியம் தான்.

திருச்சபையின் திருவிழா காலங்களில் இவ்விதம் கைத்தொழில் செய்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பது பெரும் பயனைக் கொடுக்கும். ஒன்று அது உள்ளூர் பொருட்களையும் கைவினைக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் ஒரு அரும்பணியாக இருக்கும். மேலும் பிளாஸ்டிக் மற்றும் மட்கா பொருட்களைக் கொண்டு செய்யும் அகங்கார அலங்கோலங்களிலிருந்து ஒரு பெரும் விடுதலையையும் அளிக்கும். பாரம்பரியத்தை நவீன உலகின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்ததாகவும்  இருக்கும். பல்வேறு விதங்களில் ஓலைகளை அலங்காரத்தில் பயன்படுத்த திறமையான கலைஞர்கள் முன்வருவார்கள். உள்ளூரில் வீணகப்போகும் பொருட்களிலிருந்து ஏற்றுமதி செய்யும் அளவு பெரும் சந்தையை கைப்பற்ற ஒரு அரிய வாய்ப்பாக இது அமையும்.

ஆனால் இவ்விதம் செய்ய ஒரு முன்மாதிரி வடிவம் வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்தும்  அருட்தந்தை அமலதாஸ் டென்சிங் அவர்கள் குறிப்பிடுவார்கள். எங்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் மேடையை நீங்கள் ஓலையில் செய்து தாருங்கள் அடுத்த வருடமே குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவைகளை மக்கள் பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகளை நாங்கள் முன்னெடுக்கிறோம் என்றார்கள். என்னை கடந்த இரு வருடமாக அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனால், மும்பையிலிருந்து வந்து  அவைகளை என்னால் அமைத்துக்கொடுக்க இயலவில்லை. ஆனால் வெகு சீக்கிரமே ஒரு மேடையை பனை ஓலைகளால் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு அமைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு முன்னோட்டமாக கடந்த குருத்தோலை ஞாயிறு அன்று நான் பணியாற்றும் ரசாயனி திருச்சபையில் இளைஞர்களின் உதவியோடு ஓலைகளால் ஆலயத்தை அலங்கரித்தோம். தமிழகத்திலும் இலங்கையிலும் இவைகளை எவரேனும் இன்னும் பெரு வீச்சுடன் செய்தால் மட்டுமே அவை ஒரு மரபை உருவாக்கும்.

நான் முதன் முதலாக ஓலைகளில் பொருட்களைச் செய்ய முற்படுகையில் அவைகள் வெறும் புக் மார்க், அல்லது வாழ்த்து அட்டை போன்று செய்யவே முற்பட்டேன். வேறு எதுவும் அவைகளில் செய்ய இயலாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அலங்காரங்களைச் செய்ய முயன்றபோது  இருவேறு விதமான வாய்ப்புகள் நமக்கு முன் இருப்பதை அறிந்துகொண்டேன். கைப்பட்டைகள் வேறு ஒரு அகன்ற வாசலைத் திறந்தளித்திருக்கிறது. மேலும் சிறுவர்களைக் கவரும் அழகிய உடனடி விளையாட்டுப்பொருட்களை நம்மால் செய்ய இயலும்இவைகளையும் தாண்டி நாம் வேறு பல பயன்பாட்டுக் காரியங்களையும் முன்னெடுக்கலாம் என்றே தோன்றுகின்றது.

ஓலையில் செய்யப்பட்ட ஒட்டடைக் குச்சி

ஓலையில் செய்யப்பட்ட ஒட்டடைக் குச்சி

எங்களுக்கு மதிய உணவு ஒய் எம் சி யே வில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. உணவுகளை பாலிதீன்  தாளில் தான் பொதிந்து கொடுக்கிறார்கள். இலைகளில் பொதிந்து கொடுக்கப்பட்ட உணவை நான் எங்குமே பார்க்கவில்லை.  உணவு உண்டுவிட்டு வரும் வழியில் பனைஓலையைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு துடைப்பத்தைப் பார்த்தேன். அது அங்கே பணியாற்றுகிற எவரோ தன் கைப்படச் செய்தது என்பதைக் கண்டவுடனே உணர்ந்துகொண்டேன். இவ்விதம் செய்யப்படும் பொருட்களுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. மக்கள் தாம் வாழும் இடத்தில் கிடைக்கும் பொருட்களில் இருத்து சாத்தியப்படும் அத்தனை பொருட்களியும் செய்ய முற்படுவது அம்மக்களின் வாழ்வில் அம்மரத்தின்  முக்கியத்துவத்தையும் மக்களின் படைப்பூக்கத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம்.

அங்கிருந்து புறப்படுகையில் பாக்கியராஜா அவர்கள் மனைவி, எங்கள் தோட்டத்திலும் பனை மரங்கள் நிற்கின்றன, நீங்கள் உங்களுக்குத் தேவையான காய்ந்த ஓலைகளை எடுக்கலாம் என்று அழைத்தார்கள். சரியென்று அவர்களின் தோட்டத்தைற்குச் சென்றோம். வேலிகளின் அருகில் பனைமரங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அவைகளில் ஒரு பனை மட்டும் கருகி ஆனால் உயிருடன் இருந்தது. எப்படி தீ பிடித்தது என நான் கேட்கையில் “குளவிகள் அந்த மரத்தில் பெரிய கூடு ஒன்றை அமைத்ததாகவும், அதனால் அனேகர் அதைக்குறித்து பிராது தெரிவித்தார்கள் என்பதால் அவற்றை அழிக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்கள். குளவிகள் பனை மரத்தில் கூடு கட்டுகின்றன என்ற கருத்தை குறித்துக்கொண்டேன்.  பனை ஏறும் ஆட்கள் ஏதும் இல்லாததால் கடந்த சில வருடங்களாக பனை மரம் பயன்படுத்தப்படாமலே இருக்கிறது என்றார்கள்.

அந்த  தோட்டத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். அங்கே ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப் இயங்கிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய காற்றாடி ஒன்றைக் கண்டு இது எதற்காக செய்கிறார்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “திருச்சபைக்கு சொந்தமன ஒரு பண்ணை எங்கள் சொந்த ஊரான முருங்கனில் இருக்கிறது. அவர்களுக்கு காற்றினால் இயங்கும் இந்த நீரேற்றுக் கருவியை நன்கொடையாக வழங்க இருக்கிறோம் என்றார்கள். அப்போது எனக்கு அவர்கள் கூறிய “ஜீவோதயம் பண்ணை” என்ற வார்த்தை மனதிற்குள் தங்கவில்லை ஆனால் அந்த காற்றாடி என் மனதில் இருந்தது. அந்த காற்றடியை நான் மீண்டும் அது நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு அமையும் என நான் அப்போது எண்ணவில்லை.

இன்சுவை

இன்சுவை

எங்களது பயணம் அப்படியே தொடர்ந்தது. மாலை வேளையும் நெருங்கிக்கொண்டிருந்தது. எனக்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றொரு இடத்தையும் காண்பிக்க விரும்பி என்னை அழைத்துச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு சந்தை இருந்தது. மீன்கள் விற்பனை செய்யப்படும் சந்தை அது.. ஒரு முழு மீனை வாங்கி சுடலாமா என்று கேட்டேன். மன்னிக்கவும் இன்று நேரம் இல்லை என்றார்கள். அங்கே தானே ஒரு தள்ளுவண்டிக்கருகில்  பாக்கியராஜா  தனது வண்டியை நிறுத்தினார்.  அந்த வண்டியில் இருந்த கண்ணாடி பேழைக்குள் மரச்சீனி கிழங்கை வேகவைத்து பின் பொறித்து எடுத்த துண்டுகளும் அளவில் சிறிதான பருப்புவடைகளும் இருந்தன. இரண்டு பொட்டலங்கள் வாங்கினோம். முக்கியச் செய்தி என்னவென்றால் அதனுடன் கிடைத்த மிளகாய்ப்பொடி சட்னியின் சுவை தான். ஜாஸ்மினுக்கு அன்றே தகவலை அனுப்பிவிட்டேன். கடவுளை வேண்டிக்கொள், இலங்கையின் சுவை என்னை இங்கேயே கட்டிப்போட்டுவிடும் போல என்று. அந்த் மிளகாய்பொடி சட்னியில் வெறும் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் மிக சிறிய அளவில் இறால் கருவாட்டை சேர்த்து பொடிக்கிறார்கள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.

நாங்கள் சென்ற பகுதியின் ஒரு புறம் கடலும் மறுபுறம் வாவியும் இருந்தது. பல வீடுகள் உடைந்து கிடந்தன. சுனாமி நேரத்தில் கிணறுகளின் உள்ளே பதிக்கப்பட்டிருந்த வட்டுகளைக் கூட, அலை மேலே இழுத்து வந்திருக்கிறதைக் காண்பித்தார்கள். சுனாமியால் பட்டுப்போன பனைமரத்தைப் பார்த்தோம்.  அந்த இடமும் மக்கள் வாழ தடை செய்யப்பட்டிருக்கிறது. என்னை அவர்களின் உறவினரின் தோட்டம் வழியாக வாவிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து  பார்க்கையில் காலையில் பார்த்த  கலங்கரை விளக்கம் தூரத்தில் அதே கெம்பீரத்துடன் நின்றுகொண்டிருந்தது.  திரும்பி வருகிற வழியில் பெரிதாக காணப்பட்ட பாழடைந்த வீட்டிற்குள் நான் நுழைந்தேன். அந்த வீட்டின் கூரைகள் முழுவதும் பனந்தடியால் செய்யப்பட்டிருந்தது.  12 வருடங்களாக அந்த கூரை விழாமல் இருப்பதுவே ஆச்சரியம்.

என்னை அவர்கள் புளியந்தீவில் கொண்டு விட்டபோது மாலை ஆறுமணிக்கும் மேல் இருக்கும். அவர்களது மகளை பேருந்து நிலையத்தில் சென்று அழைக்கவேண்டியிருப்பதால் இன்னும் தாமதிக்க இயலாது என்று கூறி விடைபெற்றார்கள்.  ஒருநாள் முழுவதும் எனக்காக அவர்கள் ஒதுக்கியது பெரிய விஷயம்.  இருவருக்கும் நெகிழ்ந்தே நன்றி கூறினேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 12”

  1. Logamadevi Annadurai Says:

    அவிழ்ந்த ரிப்பனும் கையில் பிடித்த ஓலையும் உற்சாகமுமாய் அந்த தேவனுக்கு மிகப்பிரியமான குழந்தைகளும் நீங்களும் இருக்கும் புகைப்படம் அழகு. பனை ஓலையில் செய்யப்பட்ட ஒட்டடைகுச்சி , பனையின் மீட்சிக்கு மிகுந்த நம்பிக்கையை தருவதாக இருந்த்தது. பனையின் பலதரப்பட்ட பயன்பாட்டிற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
    குளவிகளாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பனைமரங்கள், இருந்தாலும்ம் 12 வருடங்களாக உத்திரத்தைதாங்கும் பனந்தடிகளுடன் பனையின் பயன்கள் இலங்கைபயணத்தில் கூடிக்கொண்டேசெல்வது மிக்க நம்பிக்கையயும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: