திருச்சபையின் பனைமர வேட்கை – 13


திருச்சபையின் பனைமர வேட்கை – 13

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பனைக்கோட்டை

அன்று மாலை அருட்பணி யோகராஜா அவர்கள் ஒரு செயர்குழுவை நான் தங்கியிருந்த  அதே கட்டிடத்தில் நடத்தி முடித்துவிட்டு திரும்புகையில் என்னைப்பார்த்து  விட்டார். அந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது. பனை மரம் குறித்து ஏதேனும் நான் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் யாழ்பாணத்திற்கு நான் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் இலங்கையில் ஏற்பட்ட போரினால் சாதிகள் காணாமல் போய்விட்டது என்றாலும் பள்ளர் மழவர் எனும் இரு சாதிகளே பனை ஏற்றத்தில் ஈடுபட்டனர் என்று கூறினார். என்னைப்பொறுத்த வரையில் அது ஒரு முக்கிய தகவல். இதுவரை எவரும் பேசாத ஒன்று. பிற்பாடு என்னிடம் பேசிய எவரோ என்னிடம் மழவர் தென்னை ஏறுகிறவர்கள் மட்டும் தான் என்று கூறியதாகவும் ஒரு நினைவு உண்டு. பள்ளர் என்பது பல்லவரின்  வழிதோன்றல் என வேறொரு நண்பர் குறிப்பிட்டார்.   ஆனால் அவைகள் எல்லாவற்றையும் விட, தமிழகத்தில் பனையேற்றை தொடாத ஒரு ஜாதி இலங்கையில் பனை மரத்துடன் தொடர்புடன் இருப்பது நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

பனைமரத்திற்காக  பாடுபட்ட “மில்க் வொயிற்” (Milk White) கனகராஜா என்பவரைக் குறித்தும் அவர் கூறினார். மில்க் வொயிற் என்பது பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்ட தமிழருடைய சோப்பு தயாரிக்கும் நிறுவனம்.  தனது விற்பனையினை பிற எந்த நிறுவனங்களை விடவும் மிக அதிகமாக  அவரால் விரிவாக்க முடிந்தது. தனது பொருட்களை விற்க “உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறி முன்னெடுத்திருக்கிறார். தமிழ் மீது இருந்த தீராத பற்றினால் திருவள்ளுவரின் குறளையோ பாரதியின் பாடல்களையோ பனை ஓலையில் அச்சடித்து தனது சோப்புகளுடன் வினியோகித்திருக்கிறார். தனது தயாரிப்புகளையும் அவர் பொதிந்து கொடுக்க களிமண்ணில் செய்த அழகிய பேழைகளில் வைத்து இலவசமாக கொடுத்திருக்கிறார். நூற்பவர்களிடம் இருந்து பெற்ற துணிகளைக் கொண்டு தந்து சோப்பை பொதிந்து விற்பனை செய்திருக்கிறார். இவைகளின் மூலம் அவர் குயவர்களையும், நெசவாளர்களையும் ஆதரித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிரைய பனை விதைகழை எடுத்துக்கொண்டு தந்து பணியாளர்களைக்கொண்டு சாலைஓரங்களில் விசிறி எறியச் சொல்லுவாராம். பனை மீது மீளக் காதல் கொண்ட களப்போராளியான அவரது தயாரிப்புகள் இன்று வளர்ந்து வரும் தலைமுறையின ரின் வெளிநாட்டு மோகத்தால்  வீழ்ச்சியடைந்து வருகிறது.

இலங்கையில் பனை மரம் மீதான கவனம் குவிய மில்க் வொயிற் கனகராஜா என்ற தனிநபர் ஒரு பனைப்போராளியாக நின்றிருக்கிறார் என எண்ணுகையில் தமிழகம் அவ்வகையில் எவரையும் முன்னெடுக்கவில்லையே என்ற ஏக்கமும் ஒருசேர வருகிறது. இன்று ஒரு சுய உதவிக்குழுக்களை நாம் இணைத்து உண்ணும் பொருட்களையும் உண்ணாப்பொருட்களையும் பொதிகின்ற வண்ணமாக நம்மால் ஓலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை. லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் இரயில்வே மந்திரியாக  இருக்கையில் குயவர்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக எடுத்த முயற்சிகளை நாம் அறிவோம். பிளாஸ்டிக் கப்புகளைத் தவிர்த்து மண் கோப்பைகளை அவர் முன்னெடுத்தார். இவ்வகை முயற்சிகள் ஒருவித பிடிவாதத்துடன்  எடுக்கப்பட்டாலே அடிமட்ட கைவினை கலைஞர்கள் வாழ்வில் நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க இயலும்

ஒரு பொருளை பொதிய ஓலையை பயன் படுத்துவதால் அதன் விலை அதிகமாக மாறிவிட வாய்ப்பு இல்லை. ஆனால் வரிலிலக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அனேகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூழியல் மாசடைவதில்லை. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படும். ஒருவேளை தங்கள் பொருட்களுடன் இணைக்கும் விலைப்பட்டியலை  பனைஓலைகளால் செய்ய எவரேனும் முன்வருவார்கள் என்று சொன்னால் அதுவே ஒரு மாபெரும் சந்தை வாய்ப்பை அளிக்கும். இன்றைய இலங்கை மற்றும் தமிழக தொழிலதிபர்கள்  இதற்கென முன்வருவார்களா?

போதகர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் இலங்கை மெதடிஸ்ட் திருச்சபையின் போதகர் ஒருவர் யாழ்பாணம் மக்களுடன் இணைந்து பனை வெல்லம் காய்ச்சும்  ஒரு அமைப்பை நடத்திக்கொண்டிருந்ததாகவும் கூறினார். இலங்கை மெதடிஸ்ட் திருச்சபை இவ்வகையில் ஒரு மாபெரும் முன்னுதாரணமாக இருப்பதை கண்முன்னே கண்டு வியப்படைகிறேன். பல்வேறு சூழல்களில் பல்வேறு தரப்பு மக்களுக்காக இலங்கை போதகர்கள் முன்னின்று செயல்பட்டிருக்கிறார்கள். அவைகளில் பலவிஷயங்கள் நமது சித்தனைக்கு எட்டாதவைகள்.

இப்படியாக இலங்கைத் திருச்சபையிலும் நமக்கு ஒரு முன்னோடி இருக்கிறார் எனும் செய்தி எனக்கு புது தெம்பைக் கொடுத்தது. ஒருவகையில் அந்த போதகரின் பனை சார்பு எனும் படிமம் மக்களின் ஆழ்மனதில் உறங்கிக்கொன்டிருக்கும், அதனை தட்டி எழுப்புவது சிரமமான காரியம் இல்லை. எனது இலங்கைப் பயணம் அவ்விதமானோரின் அடிச்சுவடுகளிலேயே நிகழ்த்தப்படுகிறது. இந்தியத் திருச்சபை பனைமர வேட்கைக்கு தன்னை அற்பணிக்கும் நாள் என்றோ என எண்ணிக்கொண்டேன்.

பனைத்தொழிலாளர்கள் அல்லது பனையேறிகள் எனும் பதங்களை  இலங்கையில் எவரும் பயன் படுத்துவது இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கை சமுதாயம் அவர்களை “சீவல் தொழிலாளிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். நாம் சொற்களில் மட்டும் பனையை வைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் இலங்கையில் பனை வாழ்வில் கலந்திருக்கிறது என்பதை அவருடனான உரையாடல் மூலம் அறிந்துகொண்டேன். பனை என்பதை உயிருக்கு இணையாக வைத்திருக்கிறார்கள் இலங்கை மக்கள். இல்லையென்றால் ஒரு மூத்த போதகர் இத்துணை நேரமெடுத்து எனக்கு இலங்கை பனை சார்ந்த காரியங்களை விளக்கத் தேவை இல்லை.

என்னை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது போலும், இலங்கையில் அருட்பணி. எஸ் எஸ் ஞானராஜா என்பவர் என்னைப்போன்றே செவிப்புலன் அற்றோர் மற்றும் செய்கை மொழி பாவிப்போர் மத்தியில் செயல்படுகிறார் என்றும் அவரை நான் சந்திக்கவேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் பனை மரத்தில் உள்ள பயன்களையும் பட்டியலிட ஆரம்பித்தார். பணாட்டு, ஒடியல் கூழ் போன்றவைகளை நான் இன்னும் கண்ணால் பார்க்கவில்லை.  எதிர்பாராத இந்த சந்திப்பு இத்துணை அரிய ஒரு வாய்ப்பாக அமையும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை.

மாலை வேளையில் மீண்டும் ஒரு நடை சென்று வந்தேன்.  காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் நடப்பதை இலங்கைச் சென்றபின் வழக்கமாக்கிக்கொண்டேன். நான் இலங்கை சென்றபின் தான் தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டது. ஒரு கணத்தையும்  வீணாக்கக்கூடாது என்று நேரம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சுற்றிப்பார்க்க கிளம்பிவிடுவேன். இரவு 9 அல்லது 10 மணிக்கும் உள்ளதாகவே உறங்க முடிந்தது. ஆகவே அதிகாலையில் எழுந்து கொள்ள சிரமமாக இருக்கவில்லை.

மறுநாள் அதிகாலையில் 4.30 மணிக்கே எழுந்துவிட்டேன். 5 மணிக்கு ஒரு காலை நடைசெல்ல எண்ணி கிளம்பினேன். நான் சென்ற இடம் புளியந்தீவில் காணப்படும் ஒல்லாந்தார் கோட்டை. நான் இருக்கும் இடத்திலிருந்து 5 நிமிட நடை தான். நான் எனது வழக்கமான காலை நடை முடித்துவிட்டு நல்ல வெளிச்சம் வந்தபின் அந்த  கோட்டைக்குப் போனேன். ஆனால் அங்கே ஒரு காலம் உறங்கிக்கொண்டிருந்தது. பொதுவாக கோட்டைகள் யாவும் மிகவும் திட்டமிட்டே கட்டப்படுகின்றன. மேலும் அவைகள் வெல்லப்படாது இருக்கவேண்டும் என பல்வேறு கோணங்களில் அலசி ஆராயப்பட்டு பலம் வாய்ந்தவைகளாக அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் இக்கோட்டை மிக சிறப்பாக அமைக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனைக்கோட்டை, மட்டக்களப்பு

பனைக்கோட்டை, மட்டக்களப்பு

கோட்டையின் இருபுறமும் விரிந்திருக்கும் வாவி அரணாகவும் மேலும் இருபுரங்களில் பெரிய அகழியும் அமைத்திருக்கிறார்கள். மிக நல்ல முறையில் இருக்கும் இந்த கோட்டையில் தான் பல அரசு அலுவலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. காலை சூரியன் உதிக்குமுன்பே அந்த இடத்தில் சென்றது மிக அருமையான ஒரு தருணம்.  கோட்டைக்கு செல்கையில் என்னைத் தடுத்து நிறுத்தும்  காவலாளிகள் ஒருவரும் இல்லை. அதனுள் நான் நுழைகையில் அதன் வாயிலில் ஒரு விரிந்த புத்தகம் போன்ற ஒன்றை வைத்திருந்தார்கள். அந்த புத்தகத்தில் கோட்டையின் வரலாறு எழுதப்பட்டிருந்தது.

சிமென்டில் நிர்மாணிக்கப்பட்ட அந்த சிலையின்  நடுவில் விரிந்த  காகிதம்போல் இருந்தது ஒரு தாமிர தகடு. அந்த தகடில் வரையப்பட்டிருந்த கோட்டையின் வரைபடத்தில் அனேக தென்னை மரங்களும் பனை மரங்களும் காணப்பட்டன. அது என்னவோ உள்ளுணர்வு பிடித்து தள்ளி அழைத்துச் செல்லும் இடங்களில் பனை எனக்காக  காத்திருக்கிறது போலும்.

கோட்டையின் வரலாற்றை மிக சுருக்கமாக பார்க்கவேண்டும் என்றால். 1662ல் கட்டுமான பணி போர்த்துகீசியரால் துவங்கப்பட்டு 16628ல் நிறைவுற்றது. பத்தே ஆண்டுகளில் டச்சுப்படை இக்கோட்டையை கைப்பற்றியது. பின்னர்  அவர்கள் அந்த கோட்டையை மறுசீரமைத்தார்கள். 1766ல் அவர்களிடமிருந்து கண்டி அரசர் கைகளுக்குப் போனது. 1796ல் பிரிட்டிஷார் இக்கோட்டையை முற்றுகையிட்டபோது எந்தவித எதிர்ப்பும் இன்றி கோட்டை அடிபணிந்தது. கோட்டையின் வலிமை அதனை திட்டமிடுகையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுபவைகளோ அல்லது அதன் உறுதி என்பதிலோ அல்ல, மாறாக அதை கைப்பற்ற வருவோரின் மன உறுதியே அதை தீர்மானிக்கின்றது என்பதே மட்டக்களப்பு கோட்டை கற்றுத்தரும் பாடம்.

கோட்டையில் காணப்பட்ட பனை மரங்களும் தென்னை மரங்களும் மட்டக்களப்பின் பூர்வீக மரங்களைச் சுட்டி நிற்கின்றது.  ஆனால், அக்கோட்டையில் பனையோ தென்னையோ மரங்கள் தற்போது காணப்படவில்லை.  கோட்டை கட்டப்படுகையில் இம்மரங்களை நம்பி வாழும் சமூகம் அங்கிருந்திருக்கிறது என்பதையே இவைகள் சுட்டுகின்றதாக அறிகிறோம். அவைகளை ஓவியமாக ஆவணப்படுத்திய அந்த மனிதன் இலங்கை மக்கள் இணைந்து வாழ்ந்த தடயங்களாக இப்படத்தை விட்டுச்சென்றிருக்கிறான்.  இலங்கையில் வந்த ஒல்லாந்தர் பனைமரங்களை மிக அரிய தாவரமாக கருதியிருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாக பார்க்கையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சற்று நேரம் அக்கோட்டையின் அருகிலேயே இருந்தேன். பனை இவ்விதம் காணாமற்போவதன் காரணம் என்ன என யூகிக்க முயன்றேன். பனையும் கடலும் மாபெரும் செல்வங்கள். இவைகள் இக்கோட்டையினை நிர்மாணித்தவர்கள் அங்கிருந்த சூழலை வைத்து உணர்ந்திருப்பார்கள். பிற்பாடு கோட்டை அழிக்கப்பட்டு மறு சிரமைப்புச் செய்கையில் சில மரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். என்னைப்பொறுத்த அளவில் அது ஒரு பனைக்கோட்டை.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 13”

  1. Logamadevi Annadurai Says:

    மில்க் வொயிட் கனகராஜா அவர்களின் வியாபார உத்திகளும் பனையை மீட்டெடுக்க அவ்ர் செய்த நமக்கு நாமே திட்டங்களும் அந்த காலகட்டத்தில் மிக அதிசயமே. சீவல் தொழிலாளிகள் எனும் பதம் அருமை என்றால் நீங்கள் அதைதொடர்ந்து நமக்கெல்லாம் வைக்கும் குட்டு அதைவிட அருமை. நாம் பெயரில் மட்டும் பனையை வைத்திருக்கிறோம் அவர்கள் செயலில் வைத்திருக்கிறார்கள் என்கிறீர்கள் சரியாக!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: