திருச்சபையின் பனைமர வேட்கை – 14


திருச்சபையின் பனைமர வேட்கை – 14

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பனை வாழ்வு

கோட்டையின் அருகிலிருந்த வாவியின் அருகில் அந்த காலை வேளையில் அமர்ந்திருப்பது ஒரு அழகிய அனுபவம். யாருமற்ற அந்த கோட்டையின் முன்பு அமர்ந்துகொண்டு பனை கேட்டை எனக்குரியது அல்லவா?  என்ற மதர்ப்போடு உதிக்கும் சூரியனை பார்த்திருந்தேன். வாவியில் எட்டிப்பார்த்தபொழுது ஜெல்லிமீன்கள் சென்றுகொண்டிருந்தன. ஆங்காங்கே ஒருசில நீர்பறவைகள் வந்து வாவியில் நீரைத் தொட்டு எழும்பிக்கொண்டிருந்தன. தவம் செய்யும் நோக்கில் அமர்ந்திருந்த  நாரையைப் பார்த்தபொழுது சிறுவயதில் வாசித்த

“நாராய் நாராய் செங்கால் நாராய்-

பனம்படு கிழங்கின் பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

என்ற சங்கப்புலவர் சத்தியமுற்றத்தார் பாடிய வரிகள் நினைவிற்கு வந்தன. பனையை அணு அணுவாக இரசித்த புலவர் பெருமக்கள் சுவைபட அதனை பதிவுசெய்திருப்பது பண்டைய வாழ்வின் சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. வாவிக்கு அப்பால் தூரத்தில் பனைமரங்களின் திரட்சி கோட்டைக்குள் இருந்தவைகள் வெளியேற்றபட்டிருக்கின்றன என்பதை சாட்சி கூறி நின்றன. கோட்டைக்குள் இருந்த பனை மரங்களை அழித்தவர்கள் வெளியே தடயங்களை விட்டுச்சென்றிருக்கிறார்கள். பனைமரத்தை வெறுமனே கண்ட சமூகம் அல்ல இதை பதிவு செய்தது. பனை விதையிலிருந்து முளைத்த கிழங்குகளை உண்டு மகிழ்ந்திருக்கையில் தான் கண்ட நாரையையும் அதன் கூர் வாயையும் ஒப்புநோக்குகின்ற சூட்சுமம் அறிந்த மூதாதையே இவைகளுக்கு சாட்சி கூறுகிறான்.

காலை உணவு

காலை உணவு

எனக்கு காலை உணவிற்கு சம்பலும் பிரட்டும் ஆம்லேட்டும் வைக்கப்பட்டிருந்தது. பிரட்டுடன் சம்பலை வைத்துச் சாப்பிடுவது இதுவே முதல் முறை. தனித்துவமான சுவையாக இருந்தது. முட்டை பொரிப்பதற்கு இலங்கையில் ஆப்ப சட்டியை பயன்படுத்துகிறார்கள் போலும். அம்லேட்டிலும் தேங்காய் வாசனை இருந்தது.  சிறு வயதில் வீட்டில் முட்டை பொரித்தால் பெயருக்காக சிறிய வெங்கயம் இருக்கும் ஆனால் தேங்காய் தூவல் மிக அதிகமாக இருக்கும். அதன் சுவை இன்று மறக்கப்பட்டுவிட்டது. பெரிய வெங்காயம் இன்று குமரி மாவட்டத்தில் தேங்காயின் இடத்தை சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ளுகிறது.

சீமோனுடன்

சீமோனுடன்

காலை 8 மணிக்கு கல்முனை நேக்கி என்னை அழைத்துச்செல்ல ஒரு வாகனம் வரும் என்று போதகர் டெரன்ஸ் கூறினார். மகிழ்வே உருவான சீமோன் என்னை ஏற்றிச் செல்ல ஆட்டோவைக் கொண்டு வந்திருந்தார். போகும் வழியில் தான் எனது தளவாடங்கள் இருந்தது, கோட்டை முனை திருச்சபைக்குச் சென்று, அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். கோட்டைமுனையிலிருந்து கல்முனை சுமார் 45 கி மீ தூரம் இருக்கும். வழியெங்கும் பலவிதமான காட்சிகள் என்னை இழுத்துப் பிடித்தன. சீமோனிடம் கூறினேன். சில இடங்களில் நான் நிறுத்தச் சொல்லுவேன் கோபப்படக்கூடாது என்று ‘போட்டு – வாங்கினேன்”. உற்சாகம் நிரம்பி வழிய அவர், “ஒண்ணும் பிரேச்சனையில்லை போதகரய்யா என்றார்”.

ஓலைப்பொருட்களை விற்பனை செய்யும் கடை (வீட்டின் முகப்பு)

ஓலைப்பொருட்களை விற்பனை செய்யும் கடை (வீட்டின் முகப்பு)

செல்லும் வழியெங்கும் கடைகளில், பனையோலையில் செய்யப்பட்ட அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் இருந்தன. இவைகள் இலங்கைக் கலாச்சாரத்தின் ஒரு மறுக்க இயலா பகுதி என்று அவைகள் பறைசாற்றிக்கொண்டிருந்தன. வயல் வெளிகளில் பயன்படுத்தும் ஐரோப்பிய பாணியிலான ஓலைத் தொப்பிகள் பெருமளவில் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. சிறிய பொளி (ஓலையை மெல்லியதாக கீறி முடையும் தன்மையில் வைத்திருப்பது) எடுத்து செய்யப்பட்ட அவைகளில் சாயம் முக்கிய ஓலைகளையும் சில வேளைகளில் இணைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு சற்று முடிவடையாததுபோல சுற்றிலும் ஓலைகள் மடக்கப்படாமல் நீண்டுகொண்டிருக்கும். வெயில் நேரத்திற்கு மிகவும் ஏற்றது. நான் சைக்கிளில் மீன் விற்கிறவர்கள் அவைகளை வைத்துச் செல்லுவதை இலங்கையில் பார்த்திருக்கிறேன்.

ஓலைத்தொப்பி வைத்தபடி மீன் விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்

ஓலைத்தொப்பி வைத்தபடி மீன் விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்

பல்வேறு அளவுகளில் ஓலைப்பெட்டிகள் செய்து வைக்கப்பட்டிருந்தன. குமரி மாவட்டத்தில் காணப்படும் கடகம் போன்ற அமைப்பை உடையவை ஆனால் அளவில் சிறிதானவைகள். என்றாலும் மிக மிக உறுதியானவை. ஒரு வகையில் உலகமே அழிந்தாலும் இவைகள் பயன்பாட்டிற்கு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டவைகள் போல இருந்தன. பனை ஓலைகளில் செய்யப்பட்ட பொருட்கள் சீக்கிரத்தில் அழிந்துபோகும் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, பயன் படுத்தும் விதத்தில் பயன் படுத்தினால் அது ஒரு தலைமுறைக்கும் அதிகமான நாட்கள் இருந்து பயன் கொடுக்கும்.

ஓலைப்பாய்கள் இலங்கையில் இன்னும் பயன் பாட்டில் இருக்கின்றது. ஓலைப் பாயில் படுக்கையில் கிடைக்கும் சுகம் அலாதியானது. சிறு வயதில் விடுமுறைக் காலங்களில் பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது ஓலைப்பாயில் தான் உறங்குவோம். வெயில் நேரங்களில் படுத்துறங்குவதற்கு மிகவும் ஏற்றவை. பிற்பாடு கோரம்பாய்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன. இப்பொழுது பிளாஸ்டிக் பாய்களைத் தவிற வேறு அனைத்தும் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. ஓலைப்பாய்களை பொதுவாக ஒரு வருடம் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் தங்கள் திருமண நாளுக்குக் கிடைத்த ஓலைப்பாயை இன்றும் பயன்படுத்துகிறார்கள். முப்பத்தி ஐந்து வருடங்களாக ஒரே பாய் பயன் படுத்த முடியுமா என்று சந்தேகத்துடனேயே அக்குடும்பத்தாரிடம்  காண்பிக்கும்படி கேட்டேன். மிக நேர்த்தியாகவும் உறுதியாகவும் செய்யப்பட்ட பாய். பின்னிச்செல்லும் வாழ்வு உறுதியுடன் நீடிக்க பனை ஓலைபாய்களை பயன்படுத்துங்கள் என்று விளம்பரம் செய்யும் அளவிற்கு அந்த பாய் மிகவும் உறுதியுடன் இருந்தது. சேதமடைந்த இடங்களில் புதிய ஓலைகளைக் கோண்டு “பொத்தி” எடுத்திருக்கிறார்கள். இன்று இவ்விதம் ஒரு ஓலைப் பாய் செய்ய வேண்டுமென்றால் 1000  ரூபாய்க்கு மேல் ஆகும். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளுவதும் பத்திரமாக சுருட்டி பேணுவதும் நமது பொறுப்பு.

35 வருடங்களாக ஒரே பனை ஓலை பாய் பயன்படுத்தும் குமரி மாவட்ட தம்பதியினர்

35 வருடங்களாக ஒரே பனை ஓலை பாய் பயன்படுத்தும் குமரி மாவட்ட தம்பதியினர்

எங்கள் வீட்டின் அருகில் ஐயப்பன் அண்ணன் அப்போது காளை வண்டி வைத்திருந்தார்கள். அந்த வண்டியில் அவர்கள் உவரி கோயில் திருவிழாவிற்குச் செல்லுகையில் அந்த வண்டி  கூண்டு வண்டியாக மாறும். அதன் கூண்டு அமைப்பதிலும் ஓலைபாய் தான் முக்கிய இடம் வகித்திருக்கிறது.

கடைகளில் இடியாப்ப தட்டுகளை வளையலை இட்டிருப்பதுபோல தொங்கவிட்டிருக்கிறார்கள்.  அப்படியே புட்டு அவிக்கும் நீத்துபெட்டிகளும் இருந்தன.  ஒரு கடையில் நிறுத்தி அவைகளை நிதானமாக பார்த்தேன்.  மூங்கில்களில்  செய்யப்பட்ட பொருட்களையும் இவைகளுடன் வைத்திருந்தனர். சரிதானே இயற்கை பொருட்கள் யாவும் ஒன்றாயிருப்பது மக்களுக்கும் சூழியலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. பனையும் மூங்கிலும் பெருமளவில் கிராமிய பொருளியலை தீர்மானிப்பவை எளிய மக்களுக்கு சோறுபோடும் வள்ளல்கள் அவை.

மின்சார வயரிலிருந்து பாதிப்பு நிகழா வண்ணம் பாதுகாக்கப்பட்ட பனை.

மின்சார வயரிலிருந்து பாதிப்பு நிகழா வண்ணம் பாதுகாக்கப்பட்ட பனை.

மற்றுமொரு காட்சி என்னை உலுக்கியது. சாலைஓரத்தில் சென்ற பனை மர ஓலைகள் மின்சார வயர்களை தொடுகின்றன என்பதால் அவைகளை வெட்டியிருக்கின்றனர். ஆம், முதலில் நானும் மரத்தை வெட்டியிருக்கின்றனர் என்று தான் நினைத்தேன். ஆனால் பின்னர் அறிந்துகொண்டேன் அவர்கள் வெறும் ஓலையை மட்டுமே வெட்டி அந்த மரத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.  என்று. அதாவது மின்சார வயரை தொடுகின்ற சாத்தியமுள்ள ஓலைகளை மட்டும் வெட்டிவிட்டு மற்ற பகுதியில்  ஓலைகள் இருக்கும் படி விட்டிருக்கிறார்கள். இலங்கை முழுவதும் இந்த காட்சியை நான் மீள மீள பார்த்துக்கொண்டே வந்தேன்.  இலங்கை முழுவதுமே பனையை பாதுகாப்பது என்பது ஒரு தேசிய செயல்பாடாக நடைபெற்று வருவதை பிரமிப்புடன் பார்க்கிறேன். ஒரு தேசமே பனை மரத்தை பாதுகாக்க முறையான பயிற்சி எடுத்திருப்பது எப்பேர்ப்பட்ட காரியம். இலங்கை அவ்வகையில் நமக்கு முன்மாதிரியான தேசம் தான்.

பனை மரங்களைப் பேணும் கிறிஸ்தவ ஆலயம்

பனை மரங்களைப் பேணும் கிறிஸ்தவ ஆலயம்

முட்செடிகளும் பனையும் இணைந்து நிற்கின்ற இடங்களைக் கடந்து சென்றோம். வழியில் ஒரு கத்தோலிக்கத் திருச்சபை பனைகளால் சூழப்பட்டு அழகுடன் காணப்பட்டது. அதைக் காண்கையில் ஒவ்வொரு திருச்சபையும் குறைந்தபட்சம் 10 மூடு பனையை வைத்தால் எப்படியிருக்கு என ஏக்கத்துடன் நினைத்துக்கொண்டேன்.

தாவீது கடவுளுக்கு பலிபீடம் அமைக்க  நினைக்கையில் “கோதுமை விளை நிலங்களுக்கு மத்தியில் இருந்த ஓர்னானின் போரடிக்கும் களத்தை கடவுள் அவனுக்கு காண்பிக்கிறார். தாவீது ஓர்னானிடம் சென்று தனக்கு அந்த இடம் வேண்டும் எனக் கேட்கிறார்.

“தாவீது ஒர்னானை நோக்கி, “உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்; அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன்” என்றார்”. (1 குறிப்பேடுகள் 21 : 22, திருவிவிலியம்)

இவ்விதமாக தாவீது கட்டிய பலிபீடம் செழிப்பான இடத்தின் மத்தியில் இருந்திருக்கீறதைக் காண்கிறோம். எனது சிறு வயதில் கோவில் நிலத்தில் உள்ள பொருட்களை “பாட்டம்” (குத்தகை) விடும் மரபு உண்டு. திருமறையில் நாம் உற்று நோக்குகையில் தேவாலய வளாகத்தில் இருந்த மரங்களைக் குறித்து நாம் ஏதும் பார்க்க இயலவில்லை என்றாலும் சாலமோன் அந்த ஆலயத்தைக் கட்டுகையில் ஆண்டவர் சில தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். பேரீச்சை மாதுளம் மற்றும் அல்லி மலர் என்பவை மிக உறுதியாக தேவாலயத்தைச் சுற்றியிருந்த தாவரங்களைக் குறிப்பிட வல்லது. ஒருவேளை இவ்விதமான தாவரங்கள் ஆலயத்தைச் சுற்றி இருந்திருக்குமென்றால் சாலமோன் அவைகளை பேணியிருக்க வாய்ப்புகள் உண்டு.

இஸ்ரவேலரின் முக்கிய விழாவாகிய கூடாரப்பண்டிகை இவ்வகையில் இணைத்துப் பார்க்க ஏற்றது.

“ஆறு நாள்கள் நீ வேலை செய். ஏழாம் நாளில் ஓய்வு கொள். உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு. கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும், ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும். உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் திருமுன் வர வேண்டும்.” (விடுதலைப் பயணம் 34 : 21 – 23) தாவீது கோதுமை அறுவடையின் நேரத்தில் ஓர்னானின் களத்தை வாங்கும் பின்னணியம் இங்கு தெளிவாகின்றது. இப்படியாக அறுவடை நேரத்தில் ஆண்டவரிடம் கூடி வரும் ஒரு அமைப்பை திருமறையில் வாசிக்கிறோம்.

இரண்டாவதாக கூடாரப்பண்டிகையாக கொண்டாடப்படும் இவ்விழா மக்கள் எகிப்திலிருந்து விடுதலைப்பெற்று பாலை நிலம் வழியாக நடந்து செல்கையில் கடவுள் அவர்களைப் பராமரித்தார் என்னும் உண்மையினை கூறும் பொருட்டு கொண்டாடப்படுகிறது.

“நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள். முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள். ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.  ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!”  (லேவியர் 23 : 39 – 43 (திருவிவிலியம்)

இவைகள் யாவும் இறை மக்கள் எவ்விதம் தங்கள் நிலத்துடன் பிணைப்பு கொண்டிருக்கவேண்டும் எனவும் தாவரங்களின் இன்றியமையாமையையும் தன்னியல்பாக எடுத்துக் கூறுகின்றன.

பனையின் பின்னணியத்தில் நிலக்காட்சிகள் விரிந்தபடி சென்றன. பனை என்ற எண்ணம், பனையால் சூழப்பட்ட உலகம் என கனவுகளில் மிதந்து செல்லும் ஒரு பயணமாக அது அமைந்தது. நிற்கச் சொல்லும் இடங்களில் சீமோன்  நிறுத்துவதும் தொடர்ந்து பயணிப்பதுமாக இருந்தோம்.

சுண்ணாம்புக் காளவாயில் பனங்கொட்டைகள்

சுண்ணாம்புக் காளவாயில் பனங்கொட்டைகள்

மறக்க இயலாத காட்சி என்னவென்றால் சுண்ணாம்பு காளவாய்களைக் கடத்து போகும்போது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆம் அங்கே பனங் கொட்டைகள் அதிகமாக கிடந்தன. இவை எதற்காக இங்கே என்று எண்ணியபோது பொறி தட்டியது. அதாகப்பட்டது, பனம் பழங்களில் இருந்து சாறு எடுத்தபின்பு, அதனை கிழங்காக மாற்றலாம். கிழங்கை எடுத்த பின்பு கிடைக்கும் பனங்கொட்டைகளில் கிடைக்கும் பூரானையும் உண்டுவிட்டு மிச்சம் இருக்கும் மிகச்சிறந்த எரிபொருளைக் கொண்டு வந்து  இட்டிருக்கிறார்கள். அது ஒரு காளவாயின் முன்னால் மாத்திரம் அல்ல அனைத்து காளவாயின் முன்பும் அப்படியே கிடந்தன. சேகரிக்கப்பட்ட சுண்ணாம்பினோடு பனங்கொட்டைகளைக் கலந்து காளவாயில் இட்டு எரிப்பார்கள். அனைத்தும் எரிந்து தணிந்த பின் இவைகளை எடுத்து நீர் தெளித்தால் அவைகள் சுண்ணாம்புப் பொடியாக மாறிவிடும். இவைகளைத்தான் பதனீர் எடுக்க கலயங்களில் பூசுவார்கள். வெள்ளையடிக்கவும் கட்டுமான பணிகளிலும் சிமெண்டிற்குப் பதிலாக  முற்காலங்களில் பயன்பட்டிருக்கிறது.

கிறிஸ்டா இல்லப் பயிற்சியில்

கிறிஸ்டா இல்லப் பயிற்சியில்

கிறிஸ்டா இல்லம் 1950களில் அமைக்கப்பட்டது. மெதடிஸ்ட்  திருச்சபையால் பராமரிக்கப்படுகிறது. பல சிறுமிகள் இங்கே தங்கி பயனடைகிறார்கள். அங்கே சென்றபோது வடலி ஓலைகள் வெட்டி காய விடப்பட்டிருக்கிறதைப் பார்த்தேன். வடலி ஓலைகள் பயிற்சிக்கு ஏற்றதல்ல. எப்படியாவது சமாளிக்கலாம் என முடிவு செய்த்து காய்ந்த ஓலைகளை அங்கிருந்தே சேகரித்தேன்.  பின் மதியம் தான் அங்கே நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. எனக்கென ஒரு அறையும் ஒதுக்கியிருந்தார்கள்.

கல்முனை கிறிஸ்தா இல்ல பனைஓலை பயிற்சிப்பட்டறை

கல்முனை கிறிஸ்தா இல்ல பனைஓலை பயிற்சிப்பட்டறை

கல்முனை பெண்கள் இல்லம், கிறிஸ்டா இல்லம் மற்றும் கல்முனை சங்கத்திலிருந்து 30ற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அருட்பணி எஸ். டி. வினோத் இவைகளை பொறுப்பெடுத்துச் செய்திருந்தார். போதகர் வினோத் என்னுடன் மட்டக்களப்பு வரவேண்டியிருந்ததால் அங்கே இரண்டே மணி நேரத்தில் நிகழ்ச்சிகளை வேகம் வேகமாக முடித்தோம். என்றாலும் அவர்களுக்கு 5 பொருட்கள் செய்ய கற்றுக்கொடுத்தேன்.

கிறிஸ்டா இல்ல பிள்ளைகளுடன்

கிறிஸ்டா இல்ல பிள்ளைகளுடன்

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 14”

  1. Logamadevi Annadurai Says:

    தமிழ் இலக்கியத்திலும் பனம்படு கிழங்கை எடுத்துக்கொண்டீர்களே?
    உங்களின் இலைங்கைப்பதிவில் தான் அறிந்துகொண்டேன் உண்மையில் பனையின் பயன்பாடு இலங்கையில் தான் மிகுதி என்று . தென்னிந்தியாவில் இப்படி கடைகளிலும் மனிதர்களிடத்திலும் இவ்வளவு பனையின் பயன்பாட்டை காணமுடிவதில்லை. அதிலும் 35 வருடங்களாக ஒரெ பனைப்பாயா? யூஸ் அண்ட் த்ரோ புழக்கத்திலும் மயக்கத்திலும் இருக்கும் நமக்கெல்லாம் இந்த செய்தியே ஒரு பாடம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: