திருச்சபையின் பனைமர வேட்கை – 15


திருச்சபையின் பனைமர வேட்கை – 15

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

காந்தி பூங்கா

கோட்டைமுனை திருச்சபையிலிருந்து எனது அறைக்கு மீண்டும் நடந்தே வந்தேன். போதகர் டெரன்ஸ்  எனக்கு என்று புழுக்கொடியல் நிறைந்த பொதியலை பரிசாகக்  கொடுத்தார்கள். அன்றிலிருந்து பெரும்பாலான நேரங்களில் புழுக்கொடியலை வாயிலிட்டு மென்றபடியே இருந்தேன். ஒரு மரக்கட்டையைப்போல் உறுதியாக இருக்கும் புழுக்கொடியல் துண்டை வயிலிட்டவுடன் அதனை வரவேற்கும் வண்ணமாக  உமிழ் நீர் சுரந்துவிடுகிறது. பிற்பாடு அந்த உமிழ் நீரின் அன்பில் நனைந்த புழுக்கொடியல் துண்டு, இறுக்கத்தை நெகிழ்த்தி இளகி மென்மையாகிறது. மெல்ல மெல்ல கரைந்து பெரும் சுவை அளிக்கிறது. அதன் பின்பு நான் சந்தித்த அனைவருக்கும் புழுக்கொடியலின் ஒரு துண்டைக்கொடுத்த பின்பே பேச ஆரம்பித்தேன். இவ்விதம் புழுக்கொடியலை பகிர்ந்து துவங்கும் பேச்சுக்கள் யாவும் பனை மரக் காவிங்களைப் பாடும் வல்லமை பெற்றது என்பது நான் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.

 

புழுக்கொடியல் என்பது பனங்கிழங்கை புழுக்கி (அவித்து) கொடியில் காய இடுவது ஆகும். முதலில் கிழங்குகளை வரிசையாக அடுக்கி பெரிய பானையில் வைத்து வேகவிடுவார்கள். அதன் பின்னர், முன்று நாட்கள் நல்ல வெயிலிலே காயும் படியாக ஒரு கொடியிலே இரண்டாக வகிர்ந்து  தொங்கவிடுவார்கள். மூன்று நாட்கள் சென்ற பின்பு அவைகளை இரண்டாகப் பிரித்து ஓலைப்பாயில் இட்டு காயவிடுவார்கள். நன்றாக காய்ந்தவைகளை சேமிப்பார்கள் அல்லது விற்பனை செய்வார்கள். இவைகளையே மாவாக அரைத்து விற்பனை செய்வதும் உண்டு. அது புழுக்கொடியல் மா.

 

வாவியைக் கடந்துவருகின்ற பாலத்தின் ஒரு புறம் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இரவானாலும் சரி பகலானாலும் சரி அந்த வாவி பாலத்திலிருந்து பார்க்கையில் மிகவும் அழகுடன் இருக்கும். வாவியின் அருகில் ஒரு பூங்கா இருக்கிறது அதன் பெயர் காந்தி பூங்கா. காந்தி மட்டக்களப்பு வந்ததில்லை ஆனால் இலங்கை வந்திருக்கிறார். 1927 ஆம் ஆண்டு மகாத்மா  காந்தி இலங்கையில் மூன்று வாரங்கள் பயணித்திருக்கிறார். நானும் மூன்று வாரங்கள் பயணம் தானே சென்றேன் என எண்ணிக்கொண்டேன். காந்தி சென்ற பகுதிகளில் அவர் மாணவர்களுடனும் பொதுமக்களுடனும் உரையாடியிருக்கிறார். அவர் சென்ற பகுதிகளில் யாழ்பாணமும் நுவெரெலியா, கண்டி போன்ற இடங்களும் அடங்கும். இவ்விடங்கள் முறையே இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவழியினர் மற்றும் பவுத்தர்கள் வாழுகின்ற பகுதிகள் ஆகும். காந்தி அவ்வகையில் அனைவரையும் ஒன்றிணைத்திருக்கிறார்.

 

இலங்கையில் புத்தரின் சிலைகளுக்கு அடுத்தபடியாக மிக அதிக சிலைகள் காந்திக்கே உண்டு. காந்தியையும் அவரது அகிம்சை வழிகளையும் அவர்கள் விரும்பினார்கள். கந்தியிடம் கற்றுக்கொண்ட போராட்ட முறைகளே இலங்கை நம்மைத் தொடர்ந்து விடுதலை பெற காரணமாயின என்றால் அது மிகையாகாது. நாம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலைப் பெற்றோம் என்றால் இலங்கை மக்கள் பெப்ருவரி 4ஆம் தேதி விடுதலைப்பெற்றனர். 1815 முதலே பிரிட்டிஷாருக்கு எதிராக துவங்கிய இலங்கை விடுதலைப்போராட்டத்தை காந்தி “அகிம்சை வழியில்” வெற்றிபெற வழியமைத்துக் கொடுத்தார்.

 

காந்தி தனது எளிய உடையிலேயே இலங்கைப் பயணத்தை நிகழ்த்தினார். என்றாலும் அவரைக் கண்டவர்கள் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.  மக்களின் மத்தியில்  ஒரு அரசனாகவே அவர் தென்பட்டார். காந்தி தனது இலங்கைப் பயணத்தின் இறுதியில்தான் யாழ்பாணம் சென்றார். “உங்களைப்பார்க்கையில் எனக்கு வேறொரு நாட்டில் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. உங்கள் முகங்களும் மொழியும் எனக்கு அன்னியமானவைகள் அல்ல” என குறிப்பிட்டார். கிறிஸ்தவ பிரசாகரர்களைக் குறித்து அவரிடம் முறையிட்டபோது, காந்தி பொறுமையாக “அவர்கள் இங்கு அற்பணிப்புடன் வந்து பணியாற்றுகிறார்கள், கல்வியில் மக்கள் மேம்பட உழைக்கிறார்கள், அவர்கள் கல்வியை கல்வியாக மட்டுமே பார்த்து, மத பிரச்சாரத்தைக் கைவிடவேண்டும்” என்றார். மேலும் அவர் யாழ்பாணத்திலுள்ள தமிழர்கள் மலையக தமிழர்களை கண்டிப்பாக கல்வி கொடுத்து கரையேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் மற்றும் பவுத்தர்கள் யாவரும் வெவ்வேறு விதங்களில் செயல்பட்டாலும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்து இயங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காந்தியின் பேச்சு மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறுகிய நோக்கில் அவர் தனது சித்தனைகளை முன்வைக்காமல் பரந்துபட்ட சூழலில் வைத்தே ஆய்ந்து தனது சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார்.

 

மிக அழகிய அந்த பூங்காவை அன்று இரவு மீண்டும் நான் சுற்றி வந்தேன். காலையில் மீண்டும் இங்கே வரவெண்டும் என அப்போது எண்ணிக்கொண்டேன். ஒரு இஸ்லாமிய குடும்பம் அந்த பூங்காவிலிருந்து தங்கள் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

காந்தி பூங்கா, மட்டக்களப்பு

காந்தி பூங்கா, மட்டக்களப்பு

எவரும் இல்லாத அந்தப் பூங்காவின் மத்தியில் காந்தி சிலை  இருந்தது. அதைக் கடந்து செல்கையில் கடைசியாக ரெவரெண்ட். வில்லியம் ஆல்ட் என்ற மெதடிஸ்ட் மிஷனெரியின் ஒரு சிலையும் இருந்தது. ஒரு மெதடிஸ்ட் போதகராக பெருமையுடன் அந்த சிலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தனது கரத்தில் ஒரு விளக்கை ஏந்திப்பிடித்தபடி நின்றார்.  காந்தியின் பூங்காவில் இவருக்கான இடம் அமைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமானது என எண்ணிக்கொண்டேன். காந்தி கிறிஸ்தவ மிஷனெறிகளை மிக கூர்ந்து அவதானித்தவர். அவர்களின் அற்பணிப்பின் மீதோ சேவை மனப்பான்மையின் மீதோ அவர் ஒருபோதும் ஐயம் கொண்டது இல்லை.  மிஷனெரிகள் தங்கள் வெளிப்படுத்தும் கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலிக்கவில்லை என்றும், அவர்கள் (காலனிய) வாழ்கை முறையையே வாழும்படி மக்களை வழிநடத்துகிறார்கள் என்பதே அவரது ஆதங்கமாயிருந்தது. இலங்கையிலும் கிறிஸ்தவ ஆசிரம வாழ்க்கையை காந்தியே முன்னெடுத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.

 

1813ஆம் ஆண்டு லிவர்பூலில் நடைபெற்ற மெதடிஸ்ட் கான்ஃபரன்சில் டாக்டர் கோக் என்பவர் இலங்கைக்கு மிஷனறிகளை அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார்.  கோக் அவர்களுக்கு அப்போது வயது 66. கோக் அவர்களின் வயதினை சுட்டிக்காட்டி அவரால் இப்பயணத்தை செய்ய இயலாது என கைவிரித்துவிட்டனர். தனது வீடு திரும்புகையில் அவர் கண்ணீர் வழிய தேம்பி தேம்பி அழுதபடி தனது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தனது வீட்டில் அன்று இரவு அவர் எடுத்த மன்றாட்டிற்குப் பின், மறுநாள் அவர் தனது சொந்த்ப் பணத்திலிருந்து 6000 பவுண்டுகளை எடுத்துக் கொடுத்து எப்படியாகிலும் இலங்கைக்கு மிஷனறிகள் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். காண்ஃபரன்ஸ் அவரை அனுமதித்தது.

 

தனது மனைவி உட்பட 9 பேர்களை அடங்கிய அந்த குழு இலங்கை நோக்கி வந்தது.  ஆறு மாத கப்பல் பயணம் மிகக்கடுமையாக இருந்தது. கோர அலைகள் எழும்பி கப்பல் பயணம் மிகவும் வருத்தத்திற்குரியதாக மாற்றியது.   கோக் அவர்களின் மனைவி உட்பட் பலர் மரணமடைந்தனர். கப்பல் மும்பை வந்தபோது கோக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரித்தார். கையில் பணமோ அத்தாட்சிக் கடிதங்களோ இன்றி தலைமையும் இல்லாமல் எப்படி தொடர்ந்து பணியாற்றுவது என்று கலங்கி இருக்கையில், மும்பையைச் சார்ந்த வணிகர் ஒருவர் நிற்கதியாய் நின்றவர்களுக்கு உதவியதால் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பயணித்தனர்.

அருட்பணி. வில்லியம் ஆல்ட்

அருட்பணி. வில்லியம் ஆல்ட்

இலங்கை வந்த பின்பு  வில்லியம் ஆல்ட் அவர்கள் பணிசெய்யும் இடமாக மட்டக்களப்பு தெரிவாகியது. அவர் முதன் முதலாக வந்து இறங்கிய  இடத்தில் தான் காந்தி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லியம் ஆல்ட் அவர்களின் நினைவாக அழகிய மட்டக்களப்பு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. 1814ல் இலங்கை வந்த அவர் ஒரு வருடத்திற்குள் தமிழ் கற்று மெதடிஸ்த மத்திய கல்லூரி உட்பட 8 பள்ளிகூடங்களை நிறுவினார். 1915 ஜனவரி மாதம் அவர் நோய்வாய்ப்பட்டு மூறே மாதங்களில் இறை அழைப்பை ஏற்று நித்தியத்திற்குச் சென்றார். அவர் இலங்கை கிழக்கு மாகாண மெதடிஸ்ட் திருச்சபையின் விடி வெள்ளி என அழைக்கப்படுகிறார்.

பனை மற்றும் தென்னை பின்னணியத்தில் இருக்க, மட்டக்களப்பு வெஸ்லியன் சிற்றாலயம்

பனை மற்றும் தென்னை பின்னணியத்தில் இருக்க, மட்டக்களப்பு வெஸ்லியன் சிற்றாலயம்

மிஷனறிகளின் வாழ்வு ஒரு சாகச வாழ்வு. கடவுளுக்காக ஒருவன் தன்னை முழுமையாக அற்பணிக்கும் தியாக வாழ்வு. சிறு வயதில் ப்ல மிஷனறியின் கதைகளே எனக்கு சொல்லப்பட்டன. தெரியாத ஊர்கள், தெரியாத மொழி, உறவுகளை ஊரைவிட்டு புரப்பட்டு சென்ற பலர் தங்கள் சொந்த நாட்டிற்கோ வீட்டிற்கோ திரும்பியது இல்லை. ஆயினும் அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் குறிப்பிடும்படியாகவே இருந்திருக்கிறது. காலனீய எண்ணங்கள் அவர்களுக்குள்ளும் இருந்திருக்கலாம், சில வேளைகளில் அவர்களை மீறி அவை வெளிப்பட்டுமிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர்களின் தியாகத்தினூடாக அவர்கள் அதனை சமன் செய்கிறார்கள் என்றே எண்ணுகின்றேன். என்னையும் அவ்விதம் ஒரு பனை மிஷனறியாக  நான் உருவகித்திருக்கிறேன். இக்காலகட்டத்தின் குறைகள் என்னிலே மிகுந்திருக்கலாம், என்றாலும் எனது பயணத்தில் பெரும்பாலும் எளிய விஷயங்களையே சொல்ல முனைகிறேன், நான் சந்திக்கும் மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுவதையே முதன்மைப்படுத்துகிறேன். அவர்களின் சூழியலில் அவர்கள் ஈடுபாட்டுடன் பங்கெடுக்க என்னாலான ஒரு சிறு திறப்பை அளிக்கிறேன்.

 

அதிகாலை எழுந்தவுடன் நான் தங்கியிருந்த இடத்திற்கு வலதுபுறமாகச் சென்றேன். சிறிய கிராமச்சாலைகள் வழியாகச் சென்று வாவியின் கரை வரைக்கும் நடந்தேன். ஊர் மிகவும் சுத்தமாக பேணப்பட்டிருந்தது. வாவியின் அக்கரையில் பனைமரங்கள் திரளாக நின்றதைக் கண்டேன். ஒரு சுற்று நடந்து முடித்து வருகிற வழியில் இரண்டு பாட்டிமார்கள் காலையில் பூஜைக்காக மலர்களைக் கொய்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் மிகவும் கரிசனையுடன், சிரித்தபடி யாரைத்தேடுகிறீர்கள் என்றார்கள். காலை நடைக்கு வந்தேன் நீங்கள் மலர்கொய்வதை ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன். சரி என்றவர்கள், நான் எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டம் என்றவுடன் ஒரு பாட்டி தனது தந்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளவர் என்றும் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். மற்றொரு பாட்டியின் பூர்வீகம் திருச்சி. எனது பயணத்தைக்குறித்து விசாரிக்கையில், அக்கரைக்குப் போக இயலுமா என்று கேட்க, ஒரு பாட்டி “சின்னவனே’ என்று அழைத்தபடி என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கே இருந்த ஒரு பெரியவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு  அவரிடம், இவருக்கு படகு வேண்டுமானால் நீங்கள் ஒழுங்கு செய்து கொடுங்கள் என்றார். இவைகளை அவர் மகிழ்ச்சியுடனும் உரிமையுடனும் செய்தார். எனக்கு காலையில் நிகழ்ச்சி இருந்ததால் இப்போது இயலாது, மாலையில் முடியுமென்றால் வருகிறேன் எனக் கூறிச் சென்றேன்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 15”

 1. Logamadevi Annadurai Says:

  எல்லாவற்றிலும் அன்பையே காணும அருட்பணியாளராகிய நீங்கள் புழுக்கொடியல் உமிழ்நீரின் அன்பில் நனைந்ததென்று எண்ணியதில் வியப்பொன்றுமில்லை
  இலங்கையில் நான் சுவைக்கத்தவறியதில் இதுவும் ஒன்று
  அருட்பணி. வில்லியம் ஆல்ட் அவர்களின் கல்விப்பணி அறிந்து வியந்தேன். எத்தனை எத்தனை இழப்புகளுக்குபின்னும் இதை மேற்கொண்டு நடத்தியிருக்கிறார்? விடிவெள்ளிதான் அவர் மிகச்சரியான பெயர்.
  காலனீய எண்ணங்களை அவர்கள் தியாகத்தால் சமன் செய்திருக்கலாம் என்பது மிக சாதுர்யமான ஆனால் சரியான விளக்கம். அப்படித்தான் இருந்திருக்கும்.
  கற்றுக்கொள்ளுதலை பிரதானப்படுத்தி சூழலியலில் ஈடுபாட்டுடன் இருப்பதோடு பிறரையும் ஈடுபட வைக்கும் நீங்களும் பனை மிஷனரிதான், வேறென்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: