திருச்சபையின் பனைமர வேட்கை – 16


திருச்சபையின் பனைமர வேட்கை – 16

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

மட்டக்களப்பு – இறுதி நாள்

 

மட்டக்களப்பு கல்முனைத் திருச்சபையில் எனக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றேன். காலை ஒன்பது முதல் மதியம் ஒரு மணி வரை நடந்த அந்த பயிற்சியே மட்டக்களப்பின் நிகழ்ச்சிகளில் தலையாயது. பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள், மிஷனெறிகள், பல திருச்சபையினைச் சார்ந்த  அங்கத்தினர், அவர்களுடன் கூட மாற்றுத்திறனாளிகள் சிலரும் வந்திருந்தனர். ஓலைகளில் கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிலரும் வந்திருந்தார்கள்.

 

போதகர் டெரன்ஸ் ஜெபித்து என்னைக்குறித்து ஒருசில அறிமுக வார்த்தைகளைக் கூறியபின்பு பயிற்சி துவங்கியது. செய்கை மொழி பெயர்க்க ஒரு ஆசிரியை முன்வந்தார். கலவையான அந்த குழுவினருக்கு பயிற்சி அளிப்பது மிகவும் சவாலான காரியம் என்றாலும் கோட்டைமுனை திருச்சபை ஒழுங்கு செய்த ஓலை பயிற்சி வெகு வெற்றிகரமாக நடைபெற்றது. மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கு இது ஒரு அற்புத கண்டடைதலின் தருணமாக அமைந்தது. அவர்களின் உற்சாகம், பங்களிப்பு, ஈடுபாடு எனக்கு மனநிறைவளிப்பதாக இருந்தது. சுமார் 45 பேர் இந்த நிகழ்சியில் கலந்க்டுகொண்டார்கள். முந்தைய தினம் என்னை கல்முனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனரான இளம் சீமோனின் மனைவியும்  குழந்தையோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 

எவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என பயிற்சியில் ஈடுபாட்டுடன் பொருட்களை செய்துகொண்டு வந்தார்கள். மிக அதிகமான பொருட்களைச் செய்ய அவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன்.  திருச்சபையை அலங்கரிப்பது, சிலுவை செய்வது, வாழ்த்து அட்டைகள் செய்ய என விதம் விதமாக அனேக காரியங்கள் கற்றுக்கொடுத்தேன். நிகழ்ச்சி முடியும் தருவாயில் நேரம் வேகமாக சென்றுவிட்டதோ என்று தோன்றியது. இன்னும் ஓரிரு நாட்கள் தங்கி பயிற்சியளிப்பது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறினார்கள். முக்கியமாக வந்திருந்த மிஷனறிகள், மற்றும் ஓலையில் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் அனைவருமே, தங்களுக்கு இது ஒரு மிகப்பெரும் திறப்பு என்று கூறினார்கள். தங்கள் சொந்த் கிராமத்திற்கு வந்து மறுபடியும் பயிற்சியளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

 

போதகர் டெரன்ஸ் நான் ஒவ்வொன்றாக பயிற்சியளிக்கும்போதும், எளிமையாக ஆனால்  பயனுள்ள வகையில் அழகாக கற்றுக்கொடுக்கிறீர்களே என்றார். அனைவருக்கும் இணையாக அவர் வெகு உற்சாகமாக காணப்பட்டார். இலங்கையில் நான் பிற நிகழ்ச்சிகள் நிகழ்த்துமுன், என்னைக்குறித்து அவர் அளித்த நற்சான்று மீதமுள்ள நிகழ்ச்சிகளுக்கு நல்ல அறிமுகமாக இருந்தது. கோட்டைமுனை அவ்வகையில் எனது இலங்கை திருச்சபையின் பனைமர வேட்கையில்  ஒரு திறந்த வாசலாக, திருப்புமுனையாக அமைந்தது.

 

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தொடர் பயிற்சி வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டம் என்னிடம் இருக்கவில்லை. நான் கற்பிப்பவைகள் அனைத்தும் ஒரு தனி நபர் எவ்விதம் தனது சூழலிலிருந்து ஒரு பொருளை பெற்று அதனை கலை வடிவாகவோ அல்லது ஒரு விற்பனை பொருளாகவோ மாற்றுவது என்பதைத்தான். மூலப்பொருட்கள் என்பது தாங்கள் வாழுமிடத்திலேயே சேகரிக்கின்ற ஒன்றாகவும், இலங்கைப்பணத்தில் 100 ரூபாய்க்கும் குறைவான கருவிகளைக் கொண்டும் செய்யும் பயிற்சி ஆகும். இப்பயிற்சிகளை அவர்கள் மீண்டும் மீண்டும் செய்து பழகினால் வெகு அழகிய பொருட்களை செய்ய இயலும். அவைகள் விற்பனைக்கு உரியதாகவும் இருக்கும்.

 

ஆனால் கைவினைப் பொருட்களின் விற்பனை என்பது தனித்துவமானது. புதிதாக அவைகளை நாம் சந்தைப்படுத்திவிட இயலாது.  கைவினைப்பொருட்களை வாங்கும் நுகர்வோர் அவைகளைக் குறித்து அறிந்திருந்தாலே, அவர்களால் புதிதாக சந்தையில் வரும் கைவினைப்பொருட்களை அடையாளம் கண்டு வாங்க இயலும். அனேகர் மரபாக வங்குகின்றவைகளை விட்டு விலகி புதிய பொருட்களை வாங்க முற்படுவதில்லை. இப்படி இருக்கும் தருணத்தில், ஒரே நாளில் அனைவரும் அனைத்தையும் கற்று, போட்டி நிறைந்த இடங்களில் தங்கள் பொருட்களை விற்பனை செய்துவிடுவார்கள் என்று சொல்ல இயலாது.

 

ஆகவே தான் அடிப்படையாக இரண்டு பொருட்களைக் கற்றுக்கொடுக்கிறேன். 10 X 4 , 10 X 3.5, அல்லது 10 X 3 என்கிற அளவில் சீராக வெட்டப்பட்ட ஓலைகள் விலாச அட்டை (Visiting card) ஆக பயன்படுத்த முடியும். இவைகளைச் செய்வதற்கு மிகப்பெரும் பயிற்சி தேவையில்லை. ஆனால் இலங்கைப் பணத்தில் ஒரு ஓலைக்கு 25 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு ஓலையிலிருந்து 50க்கும் மேலான விலாச அட்டைகளைப் பெற முடியும். குறைந்த பட்சம் 10 X 3 என்கிற அளவில் செய்யப்படுகின்றவைகளுக்கு இலங்கைப்பணத்தில் ஒன்றிற்கு 2 ரூபாய் என்று கணக்கு வைத்தால் கூட, 25 ரூபாய் லாபம் கிடைக்கும். இவைகளில் 10 X 3.5 என்கையில் 4 ரூபாயும் 10 X 4 அலவிற்கு 5 ரூபாயும் குறைந்தபட்சமாக செய்யலாம். மேலும் பாதிக்கும் அதிகமான ஓலைகள் மீதி இருக்கும். அவைகளில் வேறு பொருட்கள் செய்ய இயலும். இவ்வகையில் ஒரு நபர், தனது பயிற்சிக் காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு பொருட்களைச் செய்யலாம்.

 

50 அல்லது 100 ஓலை விலாச அட்டைகளை சேர்ந்தார்போல் விற்பனை செய்வது மிகவும் ஏற்றது. இவைகளை எங்கு விற்பனை செய்யலாம் எனும் கேள்வி எழுமென்றால், ணம் இருக்கும் பகுதிகள் தான் அதற்கு ஏற்றவை. நமது வீட்டின் அருகில் உள்ளவர்களை அணுகுவதும், திருச்சபையினரை அணுகுவதும் சிறந்த ஒரு முயற்சியாக அமையும். 15 X 3, 18 X 3, 21 X 3  என்கிற அளவுகளில் ஓலைகளை செய்ய முற்படுகையில் அவைகளுக்கு வேறு விதமான சந்தை வாய்ப்புகள் கிடைக்க வழியுண்டு. திருக்குறளோ, திருவசனங்களோ அல்லது திருமண அழைப்பிதழ்களோ அச்சடிக்க இவைகளை பயன்படுத்த இயலும். இலங்கைத் தமிழர்கள் போரினல் தங்கள் நாடுகளை விட்டு முன்னேறிய நாடுகளில் 7 லட்சத்திற்கும் அதிகமாக தஞ்சமடைந்திருக்கிறார்கள்.   அவர்களுக்கு பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் மிக முக்கியமானவைகள். அவர்களை மட்டும் நம்பியே இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைய முடியும்.

 

ஆனால் முதலில் செய்நேர்த்தி அமைய வேண்டும். அனைத்தும் ஒன்றுபோல் இருக்கவேண்டும், தரம் குறையாதபடி ஒவ்வொன்றும் கண்ணைக்கவரும் வகையில் உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருக்கவேண்டும். அவ்விதம் தரம்வாய்ந்த விலாச அட்டைகளைச் செய்யும் பயிற்சிக் களமாக முதலில் தொடர்ந்து இயங்க வேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர் அமைப்புகள்,  தொண்டு நிறுவனங்கள், திருச்சபைகள், இந்து சபைகள், பவுத்த மடாலயங்கள் போன்றவைகளை இணைத்து இவைகளை முன்னெடுக்க முயற்சிப்பது பெரும் பலனளிக்கும். ஜெர்மனியிலிருந்து ரமேஷ் என்னிடம் கூறுகையில், இயற்கையாக கிடைக்கும் பொருளை தேவையான வடிவில் அமைத்து கொடுத்தால் அதுவே பெரும் வரவேற்பைக் கொடுக்கும் என்றார்.

 

மீந்திருக்கும் ஓலைகளில் அழகிய சிலுவைகளைச் செய்யலாம். அவைகளும் குருத்தோலை ஞாயிறுக்காக சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படலாம். இவைகளிலும் மீந்திருப்பவைகளை எடுத்து அழகிய வாழ்த்து அட்டைகள் மற்றும் புக் மார்க்குகளைச் செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு ஒலையை முழுமையாகவே  பயன்படுத்தி இலங்கைப் பணத்தில் 1000 ருபாய் வரைக்கும் ஒருவர் சேமிக்க இயலும். என்றாலும் இவைகள் சற்று காலத்தை கோருபவை, துவண்டுவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டாலே மிக அதிக பயன்களை பெற முடியும். ஆகவே முதலில் ஓலைகளை இலவசமாக சேகரித்து பயிற்சி செய்வதும் அவைகளை சந்தைப்படுத்த முயற்சிப்பதையுமே நான் பரிந்துரை செய்கிறேன். மேலும் ஒலைகளை வெட்டி எடுக்கும்படி எளிய கருவிகைளை (Punching Machines) கண்டுபிடிக்க முடிந்தால் இன்னும் இவைகளை எளிமைப்படுத்த இயலும். சந்தையை  விரிவாக்க இயலும்.

 

என்னை பாக்கியராஜா அவர்கள் குடும்பத்தினர் இரவு உணவிற்காக அழைத்திருக்கிறார்கள் என்று போதகர் டெரன்ஸ் கூறினார்கள். அது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தான். மாலை 6 மணிக்கு தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். மேலும் நாளைக் காலையில் 7 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து  மூதூர் போகிரோம் அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தயாராக இருங்கள் என்றார்கள்.

மட்டக்களப்பு வாயிலின் முன்னால்

மட்டக்களப்பு வாயிலின் முன்னால்

நான் அறைக்கு வந்து எனது பொருட்களை அடுக்கி வைத்தேன், பிற்பாடு வாவியின் அருகில் சற்று நேரம் அமர்ந்து வரலாம் என்று காந்தி பூங்காவிற்குச் சென்றேன். அங்கிருந்த அழகிய மட்டக்களப்பு வயில் அருகில் அமர்ந்துகொண்டேன். அங்கே மீன் பிடிக்கும் ஒரு நபர் அமர்ந்து மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். பொறுமையாக் தொடர்ந்து அவர் மீன்களைப் பிடித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மீன் அவருக்கு சிக்கிக்கொண்டிருந்தது. கோட்டைமுனை வாயில் மிக அழகாக இருந்தலும் பலர் தங்கள் பெயர்களை வரலாற்று சின்னங்களில் பொறிப்பதில் ஆர்வம் காட்டியதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக அமர காதலாக தங்கள் காதலை எண்ணியவர்கள் அதில் தங்கள் பெயர்களைப் பொறித்திருந்தனர். சிலர் தங்கள் மொபைல் எண்களையும் பொறித்திருந்தனர்.  நமது நினைவுச்சின்னங்கள் பெரும்பாலும் இவ்விதமாகவே   அவமதிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு பேருந்து நிலையம்

மட்டக்களப்பு பேருந்து நிலையம்

ஆறு மணி வரை நேரம் இருக்கிறதே என எண்ணியபடி நடக்க ஆரம்பித்தேன். சந்துகள் கடைத்தெருக்கள் வழியாக சென்று இறுதியில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தை அடைந்தேன். பேருந்து நிலையத்தில் ஒருசில பனைமரங்கள் நின்றன. பேருந்து நிலையத்தைத் தாண்டி செலும் சாலை இன்னும் அழகாக இருந்தது. கலங்கரை விளக்கம் செல்லும் சாலை அதுதானோ? மிக மெதுவாக அந்த இடந்தின் அழகை ரசித்தபடி சென்றேன். இலங்கை பேருந்து நிலையம் தமிழக பேருந்து நிலையங்களை விட ஒப்புனோக்க சுத்தமாக இருந்தது.

 

பேருந்து நிலையத்திற்கு  எதிரில் இருந்த டீக்கடைக்குப் போய் ஒரு கருப்பு டீயும் மீன் அடைத்த சமோசாவும் வாங்கி சாப்பிட்டேன். அந்த மனிதரிடம் பேச்சுக்கொடுக்கையில், மட்டக்களப்பிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமமே பனை ஓலைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறது என்று கூறினார். நேரமாகிவிட்டது இல்லையென்றால் அந்த கிராமத்திற்குச் சென்றிருக்கலாம் என நினைத்தேன்.  ஆனால் நான் சந்தித்த எவருமே இக்கிரமத்தைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என நினைத்தேன். பேச்சு நீண்டுகொண்டு போகையில் அவர் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடித்தேன்.  ஆகவே அவர் குறிப்பிட்ட பகுதியில் இஸ்லாமியர்களே ஓலைகளில் கைவினைப் பொருட்கள் செய்கிறார்கள் என ஊகித்தேன். அதை பின்னர் பாக்கியராஜா அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.  என்னைப்பொறுத்தவரையில்  அந்த கிராமத்தை நான் தவறவிட்டிருக்கக்கூடாது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை

மட்டக்களப்பு வாயிலின் அருகில் மீன் பிடிப்பவர்

மட்டக்களப்பு வாயிலின் அருகில் மீன் பிடிப்பவர்

மீண்டும் அரைக்கு வந்து குளித்து உடைமாற்றி ஆயத்தமானபோது திரு பாக்கியராஜா அவர்கள் தனது வாகனத்தில் வந்தார்கள். அவர்கள் வீடு சென்று சேருகையில் மணி 6.30 ஐ   தான்டிவிட்டிருந்தது. அவரது மகளை அறிமுகப்படுத்தும்போது தான் அன்று நான் ஓலையில் அவர்கள் படத்தை மின்னல் வேகத்தில் செய்ததை நினைவுகூர்ந்தேன்.  அவள் அன்று வீட்டில் வந்த உடனேயே “போதகரய்யா எண்ட முகத்த ஓலயிலே கீறி கொடுத்தினும்” என்று உற்சாகம் மேலிட குறிப்பிட்டிருக்கிறாள்.  அனேக காரியங்களைப் பேசிக்கொண்டோம்.

 

7.30 மணிக்கு உணவை உண்னும்படி அழைத்தார்கள். மேஜையில் அமரும் முன்பு, “உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் போதகரய்யா” என்றபடி வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சிம்னியுடன் கூடிய விறகடுப்பிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே முன்று பெரிய மீன்களை நெருப்பில் சுட்டு வைத்திருந்தர்கள். சந்தோஷத்தின் மிகுதியால் ஒலி எழுப்பினேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, நாங்கள் நினைத்தது போல் மீன் இன்று கிடைத்ததும் உடனே போதகரய்யவிற்கு அழைத்துச் சொன்னோம் என்றார்கள். மேஜையில் புட்டு, மீன் குழம்பு மற்றும் சொதி வைக்கப்பட்டிருந்தது.  சாதம் இல்லை. இலங்கையில் புட்டு கொடுக்காவிட்டால் விருந்தினர்களை சரியாக கவனிக்கவில்லை என்று பொருள். மிகப்பெரிய சுட்ட மீனை எனக்கு வைத்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது. தேன் கலந்த தயிர் தான் டெஸர்ட். மிகச்சிறப்பான உணவு அது. உணவை முடிக்கையில் 9 மணியாகிவிட்டிருந்தது.

 

அவர்கள் என்னை வீட்டிற்கு கொண்டு விட்டபோது 9.30 மணி. படுக்கையில் விழுந்தபொது நினைத்துக்கொண்டேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் போதகர் டெரன்ஸ், கஜாந்தன், சீமோன் மற்றும் பாக்கியராஜா ஆகியோர் மட்டக்களப்பின் பிரதிநிதிகளாக  என் மனதில் இருப்பார்கள்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 16”

 1. Logamadevi Annadurai Says:

  அருமையான பதிவு இதுவும் வழக்கம் போலவே. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தது, அனைவரும் அலட்சியபப்டுத்தும் பனையினை அடையாளம் கண்டு கொண்டு தீவிரமாக அதை காப்பாற்றும் உங்களின் பணிக்கு ஒப்பானது. அருட்பணி காட்சன் சாமுவேல் என்னும் பெயர்தான் எத்தனை பொருத்தம்.? தொடர்கின்றது உங்கள் அருட்பணிகள் கடல்தாண்டியும்.
  //ஆனால் கைவினைப் பொருட்களின் விற்பனை என்பது தனித்துவமானது. புதிதாக அவைகளை நாம் சந்தைப்படுத்திவிட இயலாது. கைவினைப்பொருட்களை வாங்கும் நுகர்வோர் அவைகளைக் குறித்து அறிந்திருந்தாலே, அவர்களால் புதிதாக சந்தையில் வரும் கைவினைப்பொருட்களை அடையாளம் கண்டு வாங்க இயலும். அனேகர் மரபாக வங்குகின்றவைகளை விட்டு விலகி புதிய பொருட்களை வாங்க முற்படுவதில்லை.//

  இது மிகச்சிறந்த அவதானிப்பு
  விலாச அட்டைகளை எப்படி நேர்த்தியுடன் செயவ்து யாரெல்லாம் முன்னின்றால் அதை சந்தைப்படுத்தலாமென்று விரிவான முறையான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
  இரவு உணவிற்கு பாக்கியராஜ் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த்தது வாசிக்கும் எங்களுக்கும் மிக்க மகிழ்வை தந்தது
  அந்த நினவுச்சின்னங்களில் காதாலர்கள் பெயர் பொறித்தல்!
  உண்மைக்காதலர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை செய்யவும் மாட்டார்கள். பொழுது போக்க வருபவர்களே இப்படி பொறித்து வைக்கின்றவர்கள். இருக்கட்டும் அவைகளும் எது காதலென்று அறியா மனிதர்களின் நினைவாக இது போன்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களிலெல்லாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: