திருச்சபையின் பனைமர வேட்கை – 19


திருச்சபையின் பனைமர வேட்கை – 19

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பாட்டாளிபுரம்

முன்னிரவு மழை பொழிந்த சத்தம் கேட்டது. காலையில்  நடை செல்லும்போது தண்ணீர் யாவும் வடிந்திருந்தது. ஈரப்பதம் நிறைந்த குளிரான காற்று வீசியது. மூதூரில் மழைக்காக மக்கள் காத்திருந்தனர். பருவமழை சற்று பிந்தியே வந்திருக்கிறது.  நான் சென்ற நேரம் மழையா என வியந்துகொண்டேன். நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற ஓளவையின் மூதுரையை நினைத்து என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். கமல் மூதூரின் வளத்தைப்பற்றி சொல்லுகையில் “இலங்கையில புல்லு சாப்பிடுத மாடு மூதூரில் தான் இருக்குது” என்பார். ஆசீர்வாத மழை என நினத்துக்கொண்டேன்.

காலை நடைசென்று திரும்புகையில் திரளாக வெள்ளை உடை உடுத்திய இஸ்லாமிய சிறுமிகள் சைக்கிளிலும் நடந்தும் பள்ளிகூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர். மூதூரில் என்மனதை கொள்ளைகொண்ட அழகிய காட்சி அது. பிள்ளைகள் அனைவரும் தங்கள் வெண்மையான சீருடையுடன் தலையில் இருந்து மார்பு வரை மூடுகின்ற ஒரு துணியை அனீந்டிருந்க்டார்கள். சக்கிளில் அவர்கள் செல்லுகையில் பட்டாம்பூச்சி செல்லுவது போன்ற ஒரு அழகை அது கொடுத்தது. மேலும் கறுப்பு உடைகளிலிருந்து இஸ்லாமிய குழந்தைகள் விடுதலை பெற்றதே ஒரு மன நிறைவான அனுபவம் தான். கறுப்பு என்பது எனக்கு மிகவும் பிடித்தமான நிறம். நான் எப்போதும் அவைகளையே விரும்பி அணிகிறேன். எனது சீருடையில் கூட கறுப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயினும், என்னால் நமது வெப்பமண்டல பகுதிகளில்  குழந்தைகள் கறுப்பு உடைகளில் செல்லுவதை ஏற்க இயலவில்லை. வளர்ந்த பின்பு அவர்கள் தங்கள் தேர்வுகளை செய்யட்டுமே.

பாட்டாளிபுரம் பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள்

பாட்டாளிபுரம் பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள்

போதகர் வீட்டில் காலை உணவிற்கு  புட்டு வைத்திருந்தார்கள் கூடவே சொதியும். புட்டை அடிக்கடி எதிர்கோள்ள வேண்டி இருந்ததால் புட்டினை நண்பனாக்கிக்கொண்டேன். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இதில் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணமுடிகிறது. இட்லி புட்டு இடியாப்பம் போன்ற உணவுகள் வேக வைக்கப்படுபவை. அது சுட்டு சாப்பிடும் அல்லது கொதிக்கவைக்கப்படும் உணவுகளுக்கு அடுத்தபடியான  உணவு தயாரிக்கும் முறை. ஆவியில் வேக வைப்பது பிந்தைய கண்டுபிடுப்பு, ஆனால் உணவினை தனிச்சிறப்பான ஒன்றாக தயாரிக்கும் சூட்சுமம் நிறைந்தது. மோமோ என்று சொல்லப்படுகின்ற திபெத்திய உணவும் ஆவியில் வேகவைக்கப்படுவதுதான்.

பாட்டாளிபுரம் இலங்கை வரைபடத்தில் இல்லாத ஒரு பின் தங்கிய கிராமம். மூதூரிலிருந்து சுமார்  20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. போதகர் தனது இருசக்கர வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டு போனார். எனது கரத்தில் 15 கிலோ பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று இருந்தது. சமாளித்துக்கொண்டு போனோம். மிக அழகிய சாலையில் பயணித்தோம். பனைமரங்கள் சற்று அதிகமாக நின்ற ஒரு ஆற்றைத் தாண்டிச் நாங்கள் பயணிக்கையில் சாலை பிரிந்து மண் சாலை ஆனது. அதற்குப்பின்பு சேறும் சகதியுமான சாலை தான். எனக்கு பல வேளைகளில் வண்டியிலிருந்து இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  மிக விரிவான பாதை அது ஆனால் குண்டும் குழியுமாக இருந்தது.   நாங்கள் சென்றது யானைகள் வாழும் காடு என்று வேறு போதகர் பயமுறுத்தினார்.  ஒரு இடத்தில் இனிமேல் இருவராக வண்டியில் செல்வது ஆபத்து என்பது திட்டவட்டமாக தெரிந்தது.  நான் வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு ஆட்டோ அந்த இடத்தை கடந்து செல்லவே நான் அதை நிறுத்தி ஏறினேன். ஆட்டோவில் பெரிய பாத்திரத்தில் உணவு வைக்கப்பட்டிருந்தது.   சிறுவயதில் சத்துணவு திட்டத்தில் சாப்பிட்ட சாம்பாரின் வாசனை வந்தது.  இது பாட்டாளிபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்து பள்ளிகூடத்திற்கு சாப்பாடு ஏற்றி செல்லும் வண்டி என்று ஓட்டுனர் கூறினார்.  அந்த ஆட்டோ வந்ததால் தப்பித்தேன்.

பாட்டாளிபுரம் மிகவும் ஏழ்மையில் உழலும் ஒரு ஊர். பலர் கூலிவேலைகளுக்கும், பெண்கள் வீட்டு வேலைகளுக்கும் சென்று வயிற்றைக் கழுவுகிறார்கள். மிகைளம் வயதிலேயே திருமணம் நடைபெறுகிறது. சிலர் பிச்சையெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பள்ளிகூடமோ மருத்துவ வசதிகளோ சற்றும் இல்லாத ஒரு பகுதி. ஆனால் இலங்கையின் கடற்படை அந்த ஊரின் எல்லையில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தான், பள்ளிக்கூடம் சென்று திரும்பிய முதல் தலைமுறை ஆசிரியையை யாரோ ஒருவர் கழுத்துச் சங்கிலிக்காக கொலை செய்ததாக ஓட்டுனர் குறிப்பிட்டார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்ச்சி அது.   இலங்கையில் காட்டுப்பகுதிக்குள் இப்படி ஒரு ஊரை நான் எதிர்பார்க்கவில்லை.

பாட்டாளிபுரம் மெதடிஸ்ட் திருச்சபை

பாட்டாளிபுரம் மெதடிஸ்ட் திருச்சபை

அந்த ஊரின் மையமாக ஒரு மெதடிஸ்ட் திருச்சபை கட்டியெழுப்பப்பட்டிருந்தது.  பொதுவாக பெரும் கோபுரங்களின் மேல் எனக்கு பெரு விருப்பங்கள் இல்லாவிட்டாலும் பிந்தங்கிய கிராமங்களில் கட்டப்படும் இவ்விதமான கட்டிடங்கள் அங்கு வாழ்வோரின் நினைவில் மாபெரும் நம்பிக்கையை விதைக்கிறதை கண்டிருக்கிறேன். அவர்களை கவனிக்க, அவர்களின் வாழ்வில் பங்கெடுக்க திருச்சபை தனது அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனும் உறுதிமொழியின் வடிவம் அது. நான் எண்ணியது போல அங்கே குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றினை மெதடிஸ்ட் திருச்சபை நடத்திக்கொண்டிருந்தது. மேலும் அந்த கிராமத்திற்கான பல்வேறு வளர்சிப்பணிகளில் அந்த திருச்சபை முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வகையில் புதிதாக எழும்புகின்ற ஆலயங்கள் இலங்கை மெதடிஸ்ட் திருச்சபை உயிர்ப்புடன் செயலாற்றுவதை சான்றுகளுடன் முன்வைக்கின்றது.

பாட்டாளிபுரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜெயந்தி

பாட்டாளிபுரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜெயந்தி

போதகர் நாதன் என்னை பாட்டாளிபுரம் போதகரின் பொருப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அனைவரும் வந்து சேரும் வரை காத்திருந்தோம். சுமார் 35 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் முதன் வேலையாக வந்திருந்தவர்கள் உதவியுடன் நான் கொண்டு போன படங்களை அங்கே தொங்கவிட்டேன். போதகர் ஜெபித்து கூட்டத்தை துவங்கினார். என்னைக்குறித்து அறிமுகம் செய்தபின்பு, நான் அவர்களோடு பனைமரம் குறித்து உரையாடினேன். 13 வயது முதல் 40 வயது உடைய  பெண்கள் இதில் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய அந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது. மிகவும் கட்டுக்கோப்பாக அனைவரும் அமர்ந்திருந்தனர். இடையில் அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பாட்டாளிபுரத்தில் மக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பினை பாட்டாளிபுரத்தின் அருகில் வசிக்கும் ஜெயந்தி எனும் இளம் பெண் ஒழுங்கு செய்திருந்தாள். சிறந்த நிர்வாக திறமை கொண்ட பெண்.

வரிசையாக கிட்டத்தட்ட 4 பொருட்களை செய்ய சொல்லிகொடுத்தேன். முதலில் ஓலைகளை வெட்டும் விதம், பின்பு இணைக்கும் சூட்சுமம், ஓலையை புக் மார்க்கில்  ஒட்டி செய்யும் காரியங்கள் யாவும் கற்றுக்கொடுத்தேன்.  வேகமாக கற்றுக்கொண்டார்கள் மிக அமைதியாக சொல்வதைக்கேட்டு அவர்கள் அதுபோல செய்ய தலைப்பட்டார்கள். இவ்விதம் பங்குபெறுவோரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தால் மேலதிக காரியங்கள் கற்றுக்கொடுக்க வசதியாக இருக்கும். ஒவ்வொருவரின் அருகில் சென்றும் தேவைகள் என்ன எனக் கேட்டு உதவி செய்தேன். குறிப்பாக சந்தேகங்கள் இருந்தால் பொறுமையாக விளக்கி கூறினேன். புக் மார்க்காக மெழுகு வர்த்தி செய்து பழகினார்கள்.

பாட்டாளிபுரம் பயிற்சியில் பங்குபெற்றவர்கள்

பாட்டாளிபுரம் பயிற்சியில் பங்குபெற்றவர்கள்

பாட்டளி புரத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதற்கென தனித்துவமான திட்டமிடல்கள் வேண்டும். திரிகோணமலை பிரதேசத்தில் 312000 பனை மரங்கள் இருக்கின்றன. பாட்டாளிபுரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனை மரங்கள் காணப்படுகின்றது. பாட்டாளிபுரத்தின் எல்லைகளில் யானைகள் வரா வண்ணம் பனை மரங்களை நடுவது ஒரு திட்டமாக செயல்படுத்தலாம்.  பனை அபிவிருத்தி சபை,  இலங்கை வனவியல் பாதுகாப்பு திணை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று ஆகியவை மக்களுடன் இணைந்து செயலாற்றுவது முக்கியம். மெலும் சமூக காடுகள் வளர்ப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் வண்ணமாக பனை மரங்களின் எண்ணிக்கையைப் பெருக்கலாம்.

பனை மரங்கள் யானைகளை எல்லை மீறாமல் பதுக்காப்பது மட்டுமல்ல காட்டு நெருப்பும் எல்லை மீறாமல் தடுக்கும் வல்லமை கொண்டது. ஆப்பிரிக்க காடுகளில் காட்டுத்தீயால் காடு முழுமையாக நாசமடையாதபடிக்கு பனைமரங்களை தடுப்புச்சுவராக அமைக்கிறார்கள். இவ்வகையில் இரண்டு விதமான பயன்கள் காட்டில் நிகழ்கின்றதையும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான  மூலவளத்திற்கும்  ஒருசேர தீர்வு கிடைக்கும் இத்திட்டத்தை திருச்சபை பரிந்துரைக்கலாம். அதற்கென முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

அதுவரை ஓலைகளில் பொருட்கள் செய்ய பழகியவர்களுக்கு ஓலைகளை தருவித்துக்கொடுக்கும் முயற்சியில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று உதவலாம். ஏனென்றால் 10 கிலோ மீட்டர்  சுற்றளவில் வேறு தொழில்களுக்கான வாய்ப்புகள் இல்லை. வாகனங்கள் வருவதும் அரிது. ஒரு முறை ஊரைவிட்டு வெளியே செல்ல வெண்டுமென்றால் இலங்கைப்பணத்தில் 500 ரூபாய் வரை ஆட்டோவிற்கு செலவாகும்.  ஆகவே பனை ஓலை சார்ந்த கைத்தொழில்கள் செய்ய ஊக்கப்படுத்துவது சிறந்த வழிமுறையகும். இங்கு பெறப்படுகின்ற ஓலைப்பொருட்களை இலங்கையிலும் மற்றும் பிற இடங்களிலும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக முதல் வருடம் இலங்கை திருச்சபைகளில் இருந்து உதவிகளை பெற்று அவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வது என்ற முறையில் பரீட்சார்த்த முயற்சியைக் கையாளலாம். இவ்விதம் செய்வதற்கு திருச்சபைகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றதை அறிவோம். ஆகவே திருச்சபைகளை இதற்கென பழக்க வேண்டும். குருத்தோலை ஞாயிறை பனைத் தொழில் செய்வோரையும் பனை மரத்தையும் காக்கும் ஒரு நாளாக அனுசரிப்பது. அந்த நாளின் காணிக்கையை  அவர்களின் நல் வாழ்விற்காக செலவு செய்ய ஊக்கப்படுத்துவது மிகச்சிறந்த வழிமுறையாக அமையும்.

பாட்டாளிபுரம் சிறப்பு கவனம் எடுத்து பயிற்சியளித்தல்

பாட்டாளிபுரம் சிறப்பு கவனம் எடுத்து பயிற்சியளித்தல்

போதகர்கள் இறைவார்த்தைகளை  பகிரும்போது பனை சார்ந்த வசனங்களை சற்றே அழுத்தம் கொடுப்பது  கீழ்நிலையில் உள்ள மக்கள் சற்றே உயர வழிவகை செய்யும். கிறிஸ்தவத்திற்குள் காணப்படும் பல்வேறு மத கொள்கைகளை பேசி வீணாக மக்களை வெறுமனே அனுப்பிவிடுவதற்குப் பதில், சூழல் சார்ந்த இறைவார்த்தைகளைப் பகிர்வது அவசியமாக இருக்கிறது. இன்று தனக்கு பிறன் யார் என அறியாமல் கிறிஸ்தவர்களே வாழ்கிறார்கள். இளைப்பாறுதல் தரும் ஆண்டவரிடம் வருகையில் நம்மால் எத்தனை பேருக்கு ஆறுதல் அளிக்க முடிந்திருந்தும் அதை செய்யாமற்போனோம் என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.

“பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, “என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” என்பார். அதற்கு நேர்மையாளர்கள் “ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள். அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.” (மத்தேயு 25: 34 – 40 திருவிவிலியம்)

நேர்மையாளரிடம் இவைகளுடன் “நான் வேலையின்றி இருந்தேன் எனக்கு வேலை கொடுத்தீர்கள்” எனவும் அவர் கூற வாய்ப்புள்ளது.

கிறிஸ்தவம் இன்று பல்வேறு வகையான தொழிற் பயிற்சிகளை மக்களின் நல்வாழ்விற்காக செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறது.  அவ்வகையில்,  இலங்கையில் பனை சார்ந்த பணிகளை செய்வது  பொருள் பொதிந்த  ஒன்றாக நான் காண்கிறேன். ஏனென்றால் பெரும்பாலான பனைகளிலிருந்து பயன் எடுக்கப்படாமல் இருக்கும் சூழலில் அதன் ஓலைகளை மட்டும் வெட்டி எடுப்பது இலங்கையில் உள்ள மட்டை தேவைகளை பூர்த்தி செய்யும், மேலதிக பனைத்தொழிலாலர்கள்  தொழிலில் ஈடுபடுவார்கள்,  பனையில் வளருகின்ற மரங்களையும் இம்முயற்சிகள்  கட்டுப்படுத்தும்.  ஆக, ஒருங்கிணைந்த பனை நிர்வாகம் குறித்த ஒரு முயற்சியாகவும், வனவியல் பாதுகாப்பு திட்டமாகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் இவைகள் பல்முனை திட்டமாக ஒழுங்குபடுத்தப்படும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “திருச்சபையின் பனைமர வேட்கை – 19”

 1. Logamadevi Annadurai Says:

  திரு காட்சன்
  இந்த பதிவு மிக அருமை. மழைபொழிந்த ஈரத்தை உணர்ந்தபடியே வாசித்தேன்.வெள்ளை உடையில் இஸ்லாமிய சிறுமிகள் சென்றதை விளக்கியதும் அவர்களை பின்னிருந்து புகைப்படம் எடுத்த மாண்பும் பாராட்டத்தக்கது. இணையத்தில் பெண்களின் புகைப்படம் வருவது அதுவும் இஸ்லாமியப்பெண்களின் புகைப்படம் வருவதை முறையாக சரியாக செய்திருக்கிறீர்கள்
  . இதை நானும் உணார்ந்திருக்கிறேன். என்னிடம் பயிலும் மாணவிகளில் 3 தோழிகள் இருக்கிறார்கள் மூவரும் இஸ்லாமியர்கள் எனவே அந்த முறைபப்டி கறுப்பு புர்காவில் தினம் கல்லூரிக்கு வருவார்கள், ஏன் இந்த வயதில் இந்த இளம் பெண்கள் இந்த நிறத்தில் வரவேண்டும் வெள்ளையாகவாவது இருக்கலாமே? திருமணத்திற்கு பிறகாவது இந்த நிறத்திற்கு வரலாமே என்று நான் அடிக்கடி நினைபேன். கருப்பு எனக்கு பிரியமான வண்ணமென்றாலும்!!!.
  பிந்தங்கிய இடங்களில் இருக்கும் கட்டிடங்கள் குரித்த உங்கள் கருத்து மிக மிக அருமை. தேர்ந்த எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் நீங்கள் என்பதற்கான அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.
  எத்தனை அழகாக சொல்லி விட்டீர்கள் இந்த ஆழமான கருத்தை?// பிந்தங்கிய கிராமங்களில் கட்டப்படும் இவ்விதமான கட்டிடங்கள் அங்கு வாழ்வோரின் நினைவில் மாபெரும் நம்பிக்கையை விதைக்கிறதை // அருமை அருமை
  வெறும் மதம் சார்ந்த விஷயங்களை போதகர்கள் பேசிக்கொண்டிருக்காமல் சூழல் சார்ந்தவற்றையும் பேச வேண்டும் என்னும் கருத்தை ஒரு அருட்பணியாளராகிய நீங்கள் சொல்கையில் அதற்கு மேலும் அர்த்தம் உண்டாகின்றது .நன்றி அனைத்திற்கும்
  அன்புடன்
  லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: