திருச்சபையின் பனைமர வேட்கை – 27


திருச்சபையின் பனைமர வேட்கை – 27

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

முதல் கட்டளை

 

வேத ஆராய்ச்சி என்று திருச்சபையில் சொல்லும் தோரும் அது ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் அமைவதையே நான் கண்டிருக்கிறேன். ஆகையினால் எனது வார்த்தைகள் ஒரு மாபரும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பப் போகிறது என்ற அச்சம் என்னுள் இருந்தது. ஆனாலும் கடவுளே எனக்கு உதவி செய்யும் என்ற மன்றாட்டுடன் அவர்களுடன் பேச நான் ஆயத்தமானேன்.

ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுவின் திருப்பெயரால் உங்களை இக்கூடுகைக்கு நான் வரவேற்கிறேன். காலை ஆராதனையில் வந்தவர்களில் பெரும்பகுதியினர் இந்த மதிய வேளை திருவசன ஆய்வுக்காக வந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. காலையில் அனேகர் நிறைவுடன் சென்றதை நான் அறிவேன், இப்போதுள்ள நிகழ்ச்சி எப்படியிருக்கும் என்று ஒரு சிறு கதை மூலம் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கிறேன்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனை ஒரு தூதன் அழைத்துச் செல்லுகிறான். செல்லும் வழியில் அவனுக்கு பரலோகம் போகவேண்டுமா  இல்லை நரகம் போகவெண்டுமா என தூதன்  கேட்கிறான். ஏன் இங்கே முன்பே தீர்ப்பு கொடுக்கப்படவில்லையா? என்று அவன் கேட்க, இல்லை நீங்களே பார்த்து முடிவெடுக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்ற புது முறையை தூதன் குறிப்பிடுகிறான். சரி அப்படியானால் நான் நரகத்தைப் பார்க்க முடியுமா என்று மனிதன் கேட்க தூதன் அவனை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுகிறான்.

சாத்தான் தனக்கு கிடைத்த புது நபரை அழைத்துக்கொண்டு நரகத்திற்கு சென்றான். அங்கே மனிதனால் நம்பமுடியாத காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. குடி சூதாட்டம் மற்றும் பல்வேறுவகையான கவர்ச்சிகரமான காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தனது பேராயர், போதகர் உட்பட திருச்சபையின் பெரும்பான்மை அங்கத்தினர்கள் பலர் அங்கே இருப்பதை அறிந்த மனிதன் குழம்பித்தான் போனான். திடீரென ஏதோ நினைத்தவனாக  நான் பரலோகத்தையும் பார்க்கவேண்டுமே என்றான். சாத்தான் கவலையேப் படவில்லை. தாராளமாக என்று கூறி அவனை தூதனிடம் ஒப்படைத்தான்.

பரலோகம் பார்க்க வேண்டும் என்ற உற்சாகத்தில் இருந்த மனிதன் பரலோகம் என்று காண்பிக்கப்பட்ட இடத்தில் மக்கள் பலவித வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு முகம் சுளித்தான். பரலோகம் இளைப்பாறுதலின் இடமில்லையா? இங்கும் வேலை செய்ய சொல்லுகிறார்களே என்று நினைத்துக்கொண்டான். தனது நண்பர்களில் எவரையுமே பரலோகத்தில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் வேறு அவனை வாட்டி எடுத்தது. ஆகவே, தூதனிடம், நான் வந்து இரு இடங்களையும் பார்த்தபோது தான் இங்குள்ள வித்தியாசத்தை உணர முடிந்தது ஆகவே, என்னை நரகத்திற்கே அனுப்பிவிடுங்கள் என்று கூறினான்.

தூதனும் அனுமதியளிக்க சாத்தான் மனிதனை நரகத்தின் உள்ளே அழைத்துச் செல்லுகிறான். உள்ளே சென்றவுடன் பளீரென ஒரு சாட்டை சொடுக்கப்படுகிறது, உள்ளே அனலென வெப்பம் தாக்குகிறது. பெரும் பாரம் சுமக்கும் திரளான மக்களுடன் சங்கிலியில் மனிதன் இணைக்கப்படுகிறான். இப்படி மாட்டிக்கொண்டோமே என வேதனையுடன் கண்ணீர் மல்க சாத்தானிடம், சற்று முன்பு நீங்கள் காண்பித்த இடம் இப்படி இல்லையே? இது எவ்வகையில் நியாயம் என்று கேட்க, சாத்தான் வெகு அலட்சியமாக ” சற்று முன் நீங்கள் பார்த்தது எங்கள் விளம்பர அலுவலகம்” என்று பதிலளித்தானாம்.

காலையில் நான் பேசியது போலவே இப்போது  அமையவில்லை என்று சொன்னால் என்னைப் பொருத்தருள வேண்டுகிறேன். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றுடன் இணைந்து இலங்கையில் நான் செய்யும் பணிகளைக் குறித்து திருமறையின் ஒளியில் சில காரியங்களைச் சொல்லவே நான் முற்படுகிறேன். கண்டிப்பாக இவைகள் இதுவரை தாங்கள் கேள்விப்படாதவைகளாகவும் இதுவரை திருச்சபை கவனத்துக்குட்படுத்தாதவைகளாகவும்  இருக்கும் என்று நம்புகிறேன்.

திருமறையை நாம் வாசிக்க துவங்குகையில் கடவுள் உலகத்தைப் படைக்கும் நிகழ்ச்சி காணப்படுகிறது. அந்த திருமறைப்பகுதிகளில் எங்கும் பாவம் என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் பிற்பாடு பவுலின் வார்த்தைகளைக் கொண்டு முதல் பாவம் அல்லது வீழ்ச்சி என்ற இறையியல் கோட்பாடுகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. திருச்சபை இவ்விதமான  இறையியலை இன்னும் மறு பரிசீலனை செய்யாமல் இருப்பது ஆச்சரியமானது. பல வேளைகளில் அதுவே ஆபத்தையும் விளைவிக்கக்கூடியதாக மாற்றிவிடுகிறது.

இவ்விதமாகவே திருமறையின் சாரம் என நாம் எடுத்துக்கொள்ளுவதையும் மறு சீரமைப்பு செய்ய கடமைப்பட்டுள்ளோம். இன்று இயேசுவின் இறுதி கட்டளை மிதமிஞ்சி திருச்சபையில் அழுத்தப்படுகிறது. இயேசுவின் இறுதி கட்டளை பொருள் இழந்ததோ அல்லது அதனைக் குறைத்து மதிப்பிடவோ நான் கூறவில்லை, அதற்கு இணையாக அவர் கூறியவைகள், திருமறை எங்கும் விரவிக்கிடக்கின்றன, அவைகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்தாது அவரது இறுதிக்கட்டளை என்று மத்தேயு நற்செய்தி நூலில் வரும் பகுதியை மட்டும் பிடித்துக்கொள்வோமானால் நாம் இயேசுவின் மொத்த  ஊழியத்தையும் குறைத்து மதிப்பிடுகிறவர்கள் ஆவோம்.

இறுதி கட்டளை என்றால் என்ன? “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்”. (மத்தேயு 28: 18 – 19 திருவிவிலியம்). “அனைத்து அதிகாரம்” என்பதனை மக்கள் எவ்விதம் புரிந்துகொள்ளுகிறார்கள் என்பது சித்திக்கத்தக்கது. பலரைப் பொருத்த அளவில், இயேசுவின் அதிகாரம் என்பது அவர் இந்த உலகத்தைப் படைத்ததால் வரும் “சர்வ வல்லமை” பொருந்திய அவரது தன்மையால் என்று பொருள் படுகிறது. ஆனால் இயேசுவோ தமது ஊழியத்தின் போது இவ்வசனங்களைக் கூறாமல், தனது மரணத்திற்குப் பிறகே இவ்வசனங்களைக் கூறுகிறார். அது ஏன்?

நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் இறுதி கட்டளை அமைந்திருந்தாலும் நான்கு பதிவுகளும் சற்றே கோணங்கள் மாறுபட்டு இருப்பதை அறிகிறோம். குறிப்பாக ஒற்றுமை என்று சொல்லுகையில் இயேசு மரணமடைந்து உயித்தெழுந்தபின்பே இக்கட்டளை அவரது சீடர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே அனைத்து அதிகாரமும் என்று சொல்லும்போது, தம்மை நொறுக்க சித்தமாக்கிய அவரது அற்பணிப்பே அனைத்து அதிகாரங்களையும் அவர் பெற்றிருக்கிறார் என்பதை சுட்டி நிற்கிறது. நம்மை அற்பணிக்க விழையவில்லை என்று சொன்னால் நம்மால் ஒருபோதும்  எந்த அதிகாரத்தியும் எடுத்துக்கொள்ள இயலாது, அப்படி எடுத்துக்கொள்ளும் அதிகாரங்கள் பிறரை அடிபணியவைக்கு அதிகார வெறிபிடித்த மானுட அதிகாரங்கள் மட்டுமே.

“அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்” என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார். (யோவான் 20: 19 – 21  திருவிவிலியம்)

மிகவும் நெகிழ்ச்சியான இந்த சம்பவம் எப்போதும் ஆண்டவரின் இறுதி கட்டளை குறித்து பேசுவோரால் பேசப்படுவதில்லை. சிலுவையில் அவர் இருக்கையில் கூட அவர் தம்மை நிந்தித்த கள்வனை மன்னிக்கிறார். அவரது பணி அவரை கொலை செய்தவர்களையும் மன்னிக்கத் தூண்டியது. அனைவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம்,  அனைவராலும் துன்புறுத்தப்பட்டவருக்கே உரியது என அவர் கூறிச் செல்லுகிறார். “என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார் (யோவான் 16: 33, திருவிவிலியம்)

ஆகவே பொருள் பொதிந்த இயேசுவின் இறுதி கட்டளைக் கூட நமது சுய கவுரவத்தின் பொருட்டே முன்னெடுக்கப்படுகிறது. அப்படியிருக்கையில் திருமறையில் காணப்படும் முதல் கட்டளை எவ்விதம் பார்க்கப்படும். அவைகள் பொருட்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதே பதிலாக அமையும் என்பதே வேதனையான உண்மை. இவைகளை நாம் உணர்ந்தே செய்யவில்லை மாறாக ஒரு காலனீய ஆட்சிக்குட்பட்டு நாம் இருக்கையில் காலனீய பார்வையில் திருமறை வாசிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு இது என்று திருமறை அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

ஒரு வேளை இறுதி கட்டளை தான் முக்கியம் எனக் கருதுவோமானால் திருமறையில் காணப்படும் முதல் கட்டளை என்ன என எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். முதல் கட்டளையை நாம் நிறைவேற்றாமல் இறுதி கட்டளை நோக்கி நகர்வது இயேசுவே விரும்பும் ஒன்றாய் இராது என்றே நான் நம்புகிறேன்.

ஏதேன் தோட்டம்

ஏதேன் தோட்டம்

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார் (தொடக்க நூல் 1: 28, திருவிவிலியம்) இவை பார்ப்பதற்கு ஆசி என்றே தோன்றினாலும் சற்றே ஆழ்ந்து நோக்குவது கடவுள் ஏன் இவைகளைக் கூறினார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும்.

“பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்” என்பது பல வேளைகளில் குடும்ப கட்டுப்பாட்டிற்கு எதிரான திருச்சபையின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. ஆனால் கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்பதும் அவர்களை ஏதேன் என்னும் தோட்டத்தில் வைத்தார் என்பதும் தொடக்கநூல் முதல் இரண்டு அதிகாரங்களில் நாம் பார்க்கும் உண்மை. மேலும்  “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.” (தொடக்க நூல் 2: 15)

இவ்விரண்டும் இறைவனின் படைப்பில் மனுக்குலத்தை அவர் இணைக்கிறார் என்பதை நமக்கு விளக்குகிறது. மனிதர் மட்டுமே பலுகி பெருகுபவ ராக அல்ல அவர்கள் அமைந்திருக்கும் தோட்டமே ஆண்டவர் பலுகி பெருகும்படி தான் அமைத்திருக்கிறார். தமது சாயலில் படைக்கப்பட்டதால் “அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்” என்றார். இது மனிதருக்கான ஒரு ஆற்றல் என்பதாக கொள்ளாமல் இறைவனின் படைப்பூக்கத்தின் ஆற்றால் மனிதர் வரமாக பெற்றிருக்கிறார்  என கொள்ளுவோமாயின்  எவ்வித ஆற்றலால் நாம் இவைகளை பேணவேண்டும் என கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

“ஆளட்டும்” என்கிற வார்த்தை காலனியாதிக்கத்தில் எப்படி செயல்பட்டது என்பதை நாம் பார்த்தோம். பிறிதொருவரை அடைக்கி ஆளும், ஒரு எண்ணம் காலனீய எண்ணமே அன்றி ஆண்டவரின் ஆளுகையினை வெளிப்படுத்துவது அன்று. ஆகவே தான் அவரது நிட்திய ஆளுகைக்கு நாம் ஆயத்தமாகவேண்டும் எனச் சொல்லுகையில், எனது அரசு இவ்வுலகத்திற்குரியதல்ல என சொல்லுவதை நாம் கவனிக்க அழைக்கப்படுகிறோம்.

தொடக்க நூல் ஒன்றும் இரண்டும் அதிகாரங்கள் இருவேறு மூலங்களிலிருந்து ஒன்றிணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே வேத ஆய்வாளர்களின் கருத்து. அவ்வகையில் இரண்டாம் அதிகாரம் நமக்கு கூறும் கட்டளை “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.” பண்படுத்தவும் பாதுகாக்கவும் என்னும் வார்த்தைகள் மேலும் தெளிவுகளைத் தருகிறது. இன்று உலக திருச்சபையின் எண்ணத்தில் படைப்பினை பண்படுத்தவும் காக்கவும் எழைக்கப்பட்டிருக்கிறோம் எனும் கருத்து முக்கியமென கருதப்பட்டாலும், உள்ளுர் திருச்சபைகள் இவைகளை “ஆன்மீக” வாழ்விற்கு பொருள் அளிப்பதாக இல்லை என கருதுகிறார்கள். அது திருச்சபையையும் ஆண்டவர் நமக்கு படைத்து கையளித்த இயற்கை எனும் அருங்கொடையையும் நாம் இழக்கும் சூழலுக்கு நம்மைத் தள்ளுகின்றது.

விதைக்கிறவன் உவமை நம்மால் ஒரு அருட்பொழிவு பெற்ற அருட்பணியாளரை நினைவுகூறச்செய்யுமே அன்றி ஒருபோதும் விதைக்கிற விவசாயியை நமது எண்ணத்தில் அவைகள் எழுப்புவதில்லை. நல்ல மேய்ப்பன் என்பவர் இயேசு ஒருவரே என்பவர், திருச்சபையில் ஆடு மாடுகளை வைத்திருப்பவரை இழிவாகவே பார்க்கிறது. எனது வாழ்வில் கிறிஸ்தவ பெயரைக்கொண்ட ஒரே ஒரு குளம் நாகர்கோவிலில் இருந்தது, அதனை பெதஸ்தா குளம் என்பார்கள். நான் சிறுவனாக இருக்கையில் அதைச் சுற்றி இருந்த கிறிஸ்தவ சமூகம் தங்கள் வீட்டு சாக்கடைகளை அதில் விட்டு அதனை நோய் உருவாக்கும் குளமாக மாற்றிவிட்டார்கள். அப்படியே விடுவது சரியாயிராது என்று எண்ணியதால் அந்த குலத்தில் ஒரு பெரிய வணிக வளாகத்தை கட்டியெழுப்பி அந்த இடத்திற்கே சமாதி கட்டிவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் ஒருவருக்கும் அதனைக்குறித்த கவலை இல்லை. ஆனால் இந்து கோயில்களின் அருகிலுள்ள குளங்கள் இன்றும் பாதுகாகப்படுகிண்றன, அவைகள் அவர்களின் மதச்சடங்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாலேயே இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளன.

இயற்கையோடு நமக்கு ஒரு பிணைப்பு  இருக்கிறது என்றே படைப்பு குறித்த திருமறை வசனங்கள் நமக்கு போதிக்கின்றன. அவைகளை பேணுவது நமது கடமை என்றே திருமறை நமக்கு அறிவுறுத்துகிறது, இன்று நாம் வெகுவாக விலகி வந்துவிட்டோம் என்பது வேதனையான உண்மை. ஆகவே நாம் மீண்டும் கடவுள் நமக்கு பணித்த கட்டளையை செய்ய அழைக்கப்படுகிறோம், சிறிய முயற்சிகள் முதல் உலகளாவிய முயற்சிகள் வரை நாம் அவைகளை முன்னெடுப்பது அவசியமாயிருக்கிறது.

எதைப் பேண வேண்டுமோ அதனைப் பேணாமல் எதனை சொந்தம்கொண்டாடக் கூடாதோ அதனை சொந்தம்கொண்டாடி மகிழ்ந்ததே கீழ்படியாமை என திருவிவிலியம் கூறுகிறது இல்லையா?

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: