திருச்சபையின் பனைமர வேட்கை – 28


திருச்சபையின் பனைமர வேட்கை – 28

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

தாமார் மற்றும் விடுதலைப் பயணம்

நமது ஆலயத்தின் வாசலின் இருபுறமும்  அழகு பனை மரங்கள் இரண்டு நடப்பட்டிருக்கிறதை நாம் காணலாம். இவைகள் பார்ப்பதற்கு 50 வருடங்களுக்கு முந்தையவைப்போல் காணப்படுகிறது. காலனீய தாக்கத்தில் நாம் எப்படி வீழ்ந்து கிடக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று. இலங்கையில் பனை மரம் மிகுந்திருக்கும்  இடங்களில் திருகோணமலை 4 ஆம் இடத்தில் இருக்கிறது. நமது ஆலய முகப்பில் பயன்  தரும் பனை மரம் காணப்படாது வெறும் அழகு தரும் பனை மரத்தினை ஏன் வைத்திருக்கிறோம். இன்று ஒருவேளை இயேசு பசியுடன் நம் ஆலயத்திற்கு வந்தால் கனிகொடாது அழகுக்காக மட்டுமே நிற்கிற இந்த அழகு பனையை என்ன செய்வார். கிறிஸ்தவமும் இன்று தன்னில் ஒரு அழகை சேர்த்துக்கொள்ளுகிறது, கனி கொடுப்பதையோ மறந்துவிடுகிறது. பூத்த மரம் சீவல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் என்பதாலா?

திருச்சபைகள் இன்று அறுப்பின் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவதை நான் பார்க்கிறேன். ஒருவேளை அறுவடைக்கு எந்த தொடர்பும்  இல்லாத நகரங்களில் கூட திருச்சபைகள் வெகு விமரிசையாக அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுகிறது. மக்கள் அலைந்து திரிந்து தென்னங் குலைகள் நுங்கு மற்றும் சிறந்த உணவு பொருட்களை ஆலயத்தில் கொண்டுவந்து படைக்கிறார்கள். நல்லது தான். ஆனால் விதைக்கவே இல்லையென்று சொன்னால் எப்படி அறுக்க முடியும். சில வேளைகளில் திருச்சபை விதைக்க கற்றுக்கொடுக்காமல் அறுக்க மட்டுமே கற்றுக்கொடுக்கிறதோ என்றே தோன்றுகின்றது. இன்றைய திருச்சபைகளில் காணப்படும் போட்டிகள் பொறமைகளுக்கு அறுவடையை மைய்யப்படுத்தி விதைப்பை மறந்துவிட்ட போதனைகள் தான் காரணம் இல்லையா?

பனை மரம் குறித்து திருமறையில் எழுதப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் நாம் அனைவரும் “நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான்” என்று உடனடியாக பதில் சொல்லுவோம். பேரீட்சை மரத்தினை பனை என மொழிபெயர்த்த இலங்கை சைவ தமிழர் ஆறுமுக நாவலர் அவர்கள் நமது பனையுடன் கூடிய வாழ்வை ஆய்ந்து அறிந்ததனால் மட்டுமே இதனைச் செய்ய முடிந்தது. அறியாமல் செய்த பிழையல்ல, அறிந்தே நமக்கு அவர் விட்டுச்சென்ற பொருள் பொதிந்த மொழியாக்கம் அது. தமிழ் பேசும் இலங்கையிலும் தமிழகத்திலும் பனை மரங்கள் எப்படி மக்கள் வாழ்வில் பயனுள்ளைவைகளாக பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பதை நேரடியாக கண்டதினால் அவர் துணிந்து பனையை இடைச்சொருகிறார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் வேத திருப்புதலின் போது கூட பனை அந்த அளவிற்கு பெரும் பங்கை வறண்ட நிலங்களில் கொடையாக அளித்திருக்கிறது.

பழைய திருப்புதலில் கூட “நீதிமான் பனையைப்போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங்கீதம் 92: 12) என்று பார்க்கிறோம். அதனை நாம் வெறுமனே “நீதிமான் பனையைப்போல் செழிப்பான்” என்று கூற காரணம் என்ன? வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:18, பழைய திருப்புதல்), என்ற வசனத்தை மிக முக்கியமென  கருதி, வசனங்களில் பிழை ஏற்படக்கூடாது என எண்ணும் நம் சமூகத்தில் பனை குறித்த வசனம் துண்டுபட்டு கிடப்பது எதனால்? ஏனென்றால் நமது முன்னோர்கள் கேதுருவைப் பார்த்தது இல்லை. அவர்கள் அறிந்தது பனை மரம் ஒன்றே. ஆகவே அந்த வசனத்தை சுருக்கி பயன்படுத்தலானார்கள்.

திருமறையில் வெளிப்படையாக நாம் பார்க்கையில் பனை மரம் பாலஸ்தீனாவில் காணப்படுவதில்லை, ஆனாலும் பனையின் குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை திரளாக நின்றிருப்பதைக் காணமுடிகிறது. திருமறையின் தொடக்க நூலில் ஆரம்பித்து திருமறை எங்கும் விரவி, தகுந்த இடைவெளிகள் விட்டு தொடர்ந்து பனை குறித்த தகவல்கள் இறுதி புத்தகம் மட்டும் வருவது  அவைகள் இஸ்ரவேலரின் வாழ்வில் ஒரு பெரும் இறையியல் உண்மைகளை விட்டுச் சென்றிருக்கிறதை நமக்கு உணர்த்துகிறது. இத்திருமறைப்பகுதிகளை நமது பகுதிகளில் உள்ள பனை சார்ந்த வாழ்வுடன்  ஒப்பிட்டு மேலதிக ஆன்மீக உண்மைகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

தாமார்

தாமார்

திருமறையில் தாமார் என்கிற பெண்ணைக்குறித்து தொடக்கநூல் 38 ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். மரியாள் என்ற பெயருக்கு அடுத்தபடியாக மிக அதிக முறை வரும் பெண்ணின் பெயர் தாமாருடையது. திருமறையில் மட்டும் மூன்று தாமார்கள் வருவதை நாம் காணலாம். தாமார் என்பது பேரீச்சையின் பழம் என்றும், பேரீச்சை மரம் என்றும் பொருள் படும். பேரீச்சை என்னும் பனை குடும்ப தாவரம் மிகவும் அழகுள்ளதாயும் கனிதந்து வளம் ஏற்படுத்துகின்ற ஒன்றாக இஸ்ரவேலர் வாழ்வில் இருந்திருக்கிறதை இதன் வாயிலாக நாம் கண்டுகொள்ளலாம். மெலும் வறண்ட நிலத்தில் செழித்து வளர்ந்து கனிதரும் இம்மரத்தின் பெயரினை தம் குல பெண்களுக்கு வைப்பது தகும் இல்லையா? யூதாவிற்கும் தாமாருக்கும் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறது. இரட்டிப்பான ஆசியை கொண்டவள் எனக் கூறும் வண்ணம் தாமார் இங்கு காட்சியளிகிறார். யுதாவின் சிங்கம் என போற்றப்படுகின்ற இயேசு இவர்களின் வழி தோன்றலாக வருவது கூடுதல் சிறப்பாக அமைகிறது.  இயேசுவோடு பனை சார்ந்த ஒரு தூரத்து உறவு இருக்கிறதை இத்திருமறைப் பகுதி விளக்குகின்றது.

பேரீச்சைகள் குறித்த மிக முக்கியமான தகவல்கள்  விடுதலைப்பயண நூலில் வருகிறதை நாம் காணலாம். இஸ்ரவேலரின் வாழ்வில் அவர்களுக்கும் பேரீச்சை மரத்திற்கும் பெரும் தொடர்புகள் இல்லாதிருந்த வேளையில் (திருமறையில் அதுகுறித்த அதிக குறிப்புகள் இல்லாததினால்) அவர்கள் எகிப்த்திற்கு பஞ்சம் பிழைக்கச் செல்லுகிறார்கள். யோசேப்பால்  அவர்கள் மிகவும் வளமான பகுதியில் குடியேறுகிறார்கள். ஆயினும் அவர்கள் வாழ்வில் பேரீச்சையின் கனியை  ருசித்தார்களா என்ற குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால் தங்கள் வாழ்வில், அடிமைப்பட்டுகிடந்தபோது அது அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம்.

ஏலிம்

ஏலிம்

விடுதலைப்பயண நூலில் ஏலிம் என்கிற இடத்தில் இஸ்ரவேல் மக்கள் வந்து தங்கினார்கள் என்கிற குறிப்பு வருகிறது. பாலைவன அலைந்து  திரிதலில், “இவ்விதம் ஒரு இடம் அமைவது அவர்களுக்குள் என்னவிதமான மாற்றம் ஏற்படுத்தும் என சிந்தித்துப் பார்ப்பது நலம் என்றே எண்ணுகிறேன். பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.” (விடுதலைப்பயணம் 15: 27)

எளிய ஒரு வசனம் தான் ஆனால் சுமார் ஆறு லட்சம் ஜனங்கள் பயணிக்கும் வழியில் தங்கி இளைப்பாற இந்த இடம் போதுமானதாயிருந்தது தான் இவ்விடத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. 70 பேரீச்சமரங்கள் என்பது ஒருவேளை திரளான மரங்கள் அங்கே நின்றன என்பதை குறிக்கிறதாக அமைந்திருக்கலாம். திருமறை தோறும் 7 அல்லது 70 போன்ற எண்ணிக்கைகள் முழுமையை குறிக்க பயன்படுத்தியிருக்கிறதை நாம் அறிவோம். தங்கள் அடைமை வாழ்வில் சுவைக்கக் கிடைக்காத ஒரு கனியினை தங்கள் விடுதலை வாழ்வில் அவர்கள் சுவைப்பது விடுதலை என்றால் என்ன என்னும் பேருண்மையை விளக்க வல்லது.

இரண்டாவதாக சூழியல் சார்ந்த மற்றொரு உண்மையையும் இப்பகுதி விளக்குகிறது. அதாவது பேரீச்சைகளின் வேர்பகுதி பனையின் வேரைப்போன்றே சல்லி வேர்களால் ஆனது. இவ்வேர்கள் நிலத்தின் அடியில் சென்று அங்கே ஒரு உயிர் வேலியினை அமைத்துவிடும் வல்லமை பெற்றவைகள். பாலைவனத்தின் விடாய் தீரா அனல் நாக்குகள் பாலை நிலத்தில் காணப்படும்  இன்நீரூற்றுகளின் தண்ணீரை நக்கிப்போடாதபடி இவ்வுயிர்வேலிகள் செயல் படுவதை நாம் காண்கிறோம். நமது ஆறுகள் மற்றும் குளங்களின் அருகில் நிற்கும் பனை மரங்களின் பணி என்ன என்பதையும் இத்திருமறைப்பகுதி நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

மூன்றாவதாக இஸ்ரவேலருடைய வாழ்வில் கூடாரப்பண்டிகை எனும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அப்பண்டிகையின் ஆரம்பம் அவர்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தபோது தங்கிய கூடாரங்களை நினைவுறுத்தும்படி  கொண்டாடப்படுவது. களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய். நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள். உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய். ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும் வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.17 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!(இணைச் சட்டம் 16: 13 – 17, திருவிவிலியம்) என்று இப்பண்டிகைக் குறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்படுகிறது.

தற்கால கூடார பண்டிகை

தற்கால கூடார பண்டிகை

“ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது: ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள். நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள். முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள். ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!” (லேவியர் 23: 33 – 43)

இப்பகுதிகள் பேரீச்சை ஒலைகளின் தேவைகளை இஸ்ரவேல் மக்களின் சடங்குகளில் முதன்மை பெறுவதை உணர்த்துகிறது. இன்றும் பொங்கல் விழாவில் ஓலைகளைக் கொண்டு நாம் தீ மூட்ட துவங்குகிறோமே, மேலும் பல விழாக்களின் போது ஓலைகளால் தோரணங்கள் அமைக்கிறோமே? அது போல கூடரம் அமைக்க பேரீச்சை ஓலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதை இதனால் நாம் அறியலாம். இயேசுவின் காலத்தில் கூட இத்திருவிழா சிறப்புடன் இயங்கியதை நாம் புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம் “யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.” (யோவான் 7:2. திருவிவிலியம்) மேலும்  இன்று மட்டும் யூதர் அவ்விழாவினை தொடர்ந்து செய்துவருகிறார்கள். “சுக்கோத்” என்று அழைக்கப்படும் அவ்விழாவில் அவர்கள் அமைக்கும் கூடாரம் எவ்வித பொருட்களாலும் வேலியிடப்படலாம் ஆனால் அதன் கூரையானது இயற்கையால் கிடத்த பொருளாலேயே  அமைக்கப்படவேண்டும் என்பது விதி. இன்றும் ஓலைகளை ஒப்பிற்கு கூரையாக அமைத்து தங்கும் வழக்கம் யூதர் மத்தியில் உண்டு.

அடிமைத்தனத்திலிருந்து மீளும் போது அவர்கள் தங்கும்படி இடங்கொடுத்த பேரீச்சைகள் அவர்கள் வாழ்வில் என்று மறக்காத ஒரு உன்னத இடம் பெற்றது. அவர்களின் சடங்குகளிலாகட்டும், அவர்கள் பொருளியலாகட்டும், அவர்தம் ஆன்மீகமாகட்டும், அவரின் இலக்கியங்களாகட்டும், அவருடைய குறியீட்டுபொருட்கள் ஆகட்டும், வாழ்வின் அத்தனை திசைகளிலும் அதன் பின்பு பனைக் குடும்பத்தை சார்ந்த பேரீச்சை தவிர்க்க இயலா இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: