திருச்சபையின் பனைமர வேட்கை – 29


திருச்சபையின் பனைமர வேட்கை – 29

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

பழைய ஏற்பாட்டில் பேரீச்சை

இஸ்ரவேலருக்கு ஆண்டவர் வாக்களித்த நாட்டினை கடவுள் மோசேக்கு காண்பிக்கும் பகுதி ஒரு முக்கிய குறிப்பைக் கொண்டுள்ளது. “அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்; மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார். அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்'” (இணைச் சட்டம் 34: 1 – 4, திருவிவிலியம்) வாக்களித்த அத்தனை நிலபரப்பிலும் எரிகோ என்ற இடம் மட்டுமே பேரீச்சை மாநகர் என அடைமொழி கொண்டு அழைக்கப்படுகிறது. பேரீச்சைகள் ஒரு முக்கிய வணிக பொருளாகவும், உபரியை சேமிக்கும் அளவிற்கு அது பெரும் வளங்களைக் கொடுத்திருக்கிறது என்பதையுமே எரிகோவில் அமைந்திருந்த கோட்டை நமக்கு விளக்குகிறது. எருசலேம் என்னும் மாநகரே வரலாற்றில் மிகத் தாமதமாக எரிகோவிற்குப் பின் அமைக்கப்படுவது ஏன் என்பது இதன் மூலம் நாம் அறியலாம்.

எரிகோ பேரீச்சைகளின் நகரம்

எரிகோ பேரீச்சைகளின் நகரம்

யோசுவா 6 ஆம் அதிகாரம் முழுவதும் நூனின் மகன் யோசுவா எரிகோ பட்டணத்தை வெற்றி பெற்ற கதையைக் கூறுகிறது. எரிகோவின் வீழ்ச்சி என்பது குறித்த முக்கிய ஆவணங்கள், எதுவும் தொல்லியல் சான்றாக கிடைக்கவில்லை. பேரீச்சை நகரம் எப்படி வீழ்ந்திருக்கும்?  எவ்விதமான கோட்டை அது என்பது போன்ற கேள்விகள் இன்னும் தொக்கி நிற்கின்றது. ஆனால் அது வளம் மிக்க பகுதியாக தொன்மையான ஊராக இன்றும் காணப்படுகிறது. பனை சார்ந்து தமது வாழ்வை, தொல் மானுடர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக எரிகோ இன்றும் எழுந்து  நிற்கிறதைப் பார்க்கிறோம். எரிகோ குறித்து மற்றதிக தகவல்கள் புதிய ஏற்பாட்டின் காலத்தில் காணலாம்.

பனை சார்ந்து திருமறையில் காணப்படும் மற்றொரு பெண்மணி தெபோராள். அவள் இஸ்ரவேலின் நீதி தலைவியாக இருந்தாள் என்பதுடன் அவள் மட்டுமே இஸ்ரவேலில் எழும்பிய ஒரே பெண் நீதி தலைவர். தெபோராள் என்றால் தேனீ என்று பொருள். இஸ்ரவேல் மக்கள் முடியாட்சிக்கு உட்படுமுன் தங்கள் விடுதலைப் பயணத்தை முடித்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாடு வந்தபோது அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அந்த கடினமான சூழலில்  அவர்களை வழி நடத்தியதில் நீதி தலைவர்கள் பெரும் பங்கு ஆற்றினார்கள். கானான் நாட்டை அவர்கள் கைப்பற்றியபோது யோசுவாவை அடுத்த முக்கிய தலைவியாக தெபோராள் திகழ்கின்றாள்.

தெபோராள் ஒரு ஆலோசகராகவும், போர் செய்பவராகவும், இறைவாக்குரைப்பவராகவும், தலைவியாகவும் சிறந்த பாடல் இயற்றுபவராகவும் காணப்படுகிறார். நீதித்தலைவர்கள் என்ற புத்தகத்தில் 5 ஆம் அதிகாரம் முழுவதும் யாபின் என்ற அரசனை வென்ற அவரது வெற்றி பாடல் காணப்படுகிறது. யாபின் என்ற அரசனுக்கு தொள்ளாயிரம் இருப்பு இரதங்கள் உண்டு என்றும் சீசரா என்ற சிறந்த படைத்தலைவனும் உண்டு எனவும் காண்கிறோம். இதுவே தெபோராளின் வெற்றியின் சிறப்பை எடுத்துக்கூற வல்லது. ஒரு படை இன்றி, ஒரு தேசமாக திரளும் முன்பே தம் மக்களைக் காக்கும் தெபோராள் நமக்கு கடவுளின் ஆச்சரிய கருவியாக இன்றும் தென்படுகிறாள்.

தெபோராளின் தலைமைத்துவத்திற்கான  காரணம் என்ன? அவள் எப்பிராயீம் மலை நாட்டில் பெத்தேல் முதல் ராமா வரைச் செல்லும் பகுதிகளில் உள்ள பேரீச்சை மரத்தின் அடியில் தங்கி இஸ்ரவேலர்களுக்கு நீதி வழங்கிக்கொண்டிருந்தாள் என திருமறை வாயிலாக அறிகிறோம். இன்றும் இந்திய நாட்டில் நீதி வழங்கும் பஞ்சாயத்து போன்றவை மரத்தடியில் நடப்பதை நாம் அறிவோம். குஜராத்தி மக்கள் பரந்து கிளை பரப்பிய ஆலமரத்தின் கீழ் நின்று தங்கள் பொருட்களை விற்பனை செய்ததும் நாம் அறிவோம். மரங்கள் நிழல் தருவனவாக மாத்திரம் அல்ல சில இடங்களை குறிப்பிடும் அளவிற்கு அடையாளம் பெற்றதாகவும் இருக்கிறது. பேரீச்சையின் கீழ் நின்று நீதி விசார ணை செய்த தெபோராள் தேனீ போன்று தனது சமூக மக்களின் வாழ்வில் சேமிப்பை உணர்த்தியிருப்பாள் என நான் நம்புகிறேன்.

பனை மரங்களுக்கும் தேனீக்கும் பெரும் தொடர்பு உண்டு. மிகப்பெரும் மலர் செண்டுகள் உள்ள பனைமரங்களை அல்லது பேரீச்சைகளை தேனீ தேடி வருவது வாடிக்கை என்பது நாம் அறிந்த உண்மை. இஸ்ரவேலின் மற்றொரு நீதித் தலைவனாகிய சிம்சோன் ஒரு இறந்து போன சிங்கத்தின் வாயிலிருந்து தேன் எடுக்கும் காட்சியை நாம் பார்க்கிறோம். ஆகவே பேரீச்சை மரங்களின் அடியில் அவள் இருக்கையில் இஸ்ரவெலரின் வணிகங்களை அவள் தொகுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. நெடுஞ்சாலையில் செல்லும் வணிகர்களின் வணிகம் தடைபடாது இருக்க அவள் ஒரு சிறு படையையும் நடத்தியிருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கிறதைக் காண்கிறோம். ஒருவகையில் தேனீ போன்று பல துறைகளில் அவள் சுறுசுறுப்புடன் செயல்பட்டே தலைமை பொறுப்பினை அடைகிறாள்.

முற்காலங்களில் பயணிகளின் உணவு பட்டியலில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகித்தது. மாத்திரம் அல்ல நாம் கண்ட ஏலிம் என்ற பகுதியில் அனேகம் நீரூற்றுகளும் இருந்ததை நாம் பார்த்தோம். அவ்வகையில் தெபோராள் ஒரு வணிக பாதையின் மையத்தை தனது மதியூகத்தால் வளைத்துப் பிடித்து இஸ்ரவேலின் பொருளாதாரத்தை முன்னகர்த்துகிறாள். மாத்திரம் அல்ல தனது சிறு படையைக்கொண்டும் அவர்களுக்கு பாதுகாவலும் அளிக்கிறாள்.

பேரீச்சையின் கீழ் நீர் அருந்தும் எகிப்திய படம்

பேரீச்சையின் கீழ் நீர் அருந்தும் எகிப்திய படம்

திருப்பாடல்களில் பனை சார்ந்த குறிப்புகள் வெளிப்படையாக அல்லாமல் சற்றே அமைதலாக வருவதை நாம் காண இயலும்.”நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.”(திருப்பாடல் 1 திருவிவிலியம்) “என்றும் பசுமையாய் இருக்கும் மரம்” என்பதை டாக்டர் ஷோபன ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில் அது பேரீச்சையாய் இருக்குமோ என்றார். அது  திருப்பாடலகளில்  காணப்படும்  “நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;” (திருப்பாடல்கள் 92: 12அ) என்பதை உறுதிபடுத்துகிறது.

வருடத்தின் முதல் நாளில் திருச்சபையில் வாசிக்கப்படும் பகுதிகளில் திருப்பாடல்கள் 66 முக்கியத்துவம் வாய்ந்தது.   பழைய திருப்புதலின்படி “வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகின்றீர் உமது பாதைகள் நெய்யாய்ப்பொழிகின்றன” எனவும் “நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர்.” என்று சுலப வாசிப்பு மொழிபெயர்ப்பிலும் அவ்வசனம் காணப்படுகின்றது. எனக்கு பழைய ஏற்பாட்டினை கற்றுக்கொடுத்த ஆசிரியர் டாக்டர் ஜெயக்குமார் ஜோசப் அவர்கள் சமீபத்தில் என்னை அழைத்தார். அவர் தாம் வாசித்த திருமறைப்பகுதியை எனக்கு அனுப்பி இதனை வாசித்து பார் என்றார். “ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன”.(திருப்பாடல்கள் 65: 11, திருவிவிலியம்) என்ற திருமறைப்பகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதனை நான் தமிழில் மொழிபெயர்க்க முயல்கையில்  “ஆண்டினை உமது நல்ல ஈவுகளால் முடி சூட்டுகின்றீர். மேலும் பனை மரங்கள் பதனீரை சுரக்கின்றன” என்பதாக வருகின்றது. வளமையான என்ற பதத்தை பல்வேறு வகைகளில் மொழிபெயர்க்கையில் பனை மரத்திற்கும் (அல்லது ஈச்சமரத்திற்கும்) ஒரு இடம் திருமறையில் காணக்கிடைப்பது ஆச்சரியமானது தான் இல்லையா?

“திராட்சைக் கொடி வாடிப் போகின்றது; அத்தி மரம் உலர்ந்துபோகின்றது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது. (யோவேல் 1: 12 திருவிவிலியம்) இத்திருமறைப்பகுதி இஸ்ரவேலரின்  ஆழ்ந்த சூழியல் அவதானிப்புகளை சுட்டி நிற்கின்றது. வறட்சி மற்றும் பஞ்ச காலத்தில் எவ்விதத்தில் பயன் தரும் தாவரங்கள் ஒவ்வொன்றாக பட்டுப்போகின்றன என்பதை வெளிப்படுத்தும் இவ்வசனம், பஞ்சத்தை கடந்து வந்த கொடிய நாட்களை நினைவுறுத்துவதுடன், நீண்டகாலம் வறட்சியை சமாளிக்கும் பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரம் ஒரு சிறந்த வறட்சி தாங்கும் தாவரம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.” இந்த நுண்ணிய அவதானிப்பு அவர்கள் வாழ்வில் எதைச் சார்ந்திருக்க வேண்டும் என கற்பித்தது. பேரிலந்தை  வறட்சியின் உச்சக்கட்ட காலத்தில் கிடைக்கும் ஒரே பழமாக இருக்கக்கூடும். ஆனால் பசியாற்றும் பேரீச்சையின் முன்பு அவைகள் எம்மாத்திரம்?

கெருபுகள் மற்றும் பேரீச்சை இவைகள் இணைந்து வரும் திருமறைப்பகுதிகள் அனேகம் இருக்கின்றன. திருமறையில் இவ்விரண்டும் இணைந்து வருவதைப் பார்க்கையில் நமக்கு வேறு பல எண்ணங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பேரீச்சையின் இலைகளைப் பார்க்க சிறகுகளைப்போலவே இருக்கும். கேருபுகளின் சிறகுகளை  அவை ஒத்திருப்பதாக அவர்கள் மனம் எண்ணியிருக்குமோ? குறிப்பாக ஆகார் தண்ணீர் விடாய்த்து தனது மகனை சாகக்கொடுக்கலாம் என்றிருக்கையில் ஒரு தூதன் வந்து அவளுக்கு தண்ணீர் கொடுப்பதாக திருமறைப்பகுதியில் நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.” (தொடக்க் நூல் 21: 19, திருவிவிலியம்) அவ்வகையில் நாம் பார்க்கையில், பேரீச்சைகள் அண்டையில் துரவு காணப்பட்டிருக்குமோ, மயங்கிய சூழலில் ஆகாருக்கு பேரீச்சை தான் கேருபு என தோற்றமளித்ததோ?

இஸ்ரவேலர் அமைத்த ஆசரிப்புக்கூடாரம் மற்றும் சாலோமோனின் ஆலயம் போன்றவைகளில் பேரீச்சை முக்கிய இடம் வகிக்கின்றதை நாம் காண்கிறோம். பல்வெறு சூழல்களில் திருமறை முழுவதும் பேரீச்சைகள் கடவுளின் ஆசியாக நமக்கு முன் நிற்கிறது. இஸ்ரவேலர் அவற்றை தங்கள் சொந்தமான மரமாக சுவீகரித்துக்கொள்ளுகிறார்கள்.

“கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவும், மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும் கோவில் முழுவதும் அமைந்திருந்தன. தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள், பேரீச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.” (எசேக்கியேல் 41:18- 20, திருவிவிலியம்)

கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன. (2 குறிப்பேடுகள் 3: 5 திருவிவிலியம்)

கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள் ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். (1 அரசர் 6 திருவிவிலியம்)

திருநூல் வல்லுநரான எஸ்ரா

திருநூல் வல்லுநரான எஸ்ரா

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து இரண்டு குழுக்களாக திரும்பினர். முதற்குழுவினர் செருபாபேலின் தலைமையில் திரும்பி வந்து இடிபாடுகளாயிருந்த  எருசலேம் தேவாலயத்தைக் கட்டி எழுப்பினர். சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் குழுவினர் எஸ்ராவின் தலைமையில் மீண்டு வந்தனர். எஸ்ரா தாம் ஒரு குருவாக இருந்ததாலும் திருச்சட்ட வல்லுனராக இருந்ததாலும், பழைமையான புனித தோல் சுருள்களைக் கண்டுபிடித்து  அவற்றை மக்கள் முன்னிலையில் வாசிக்கிறார்.

“இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள். அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள். ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள். எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது. எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர். (நெகேமியா 8: 13 -18, திருவிவிலியம்)

இவைகள் அனைத்திலும் இஸ்ரவேலின் விடுதலை வாழ்வு சார்ந்த ஒரு நுண்ணிய தொடர்பு பேரீச்சைகளில் காணப்படுவதை நாம் புரிந்துகொள்ளலாம். அவர்கள் வரலாற்றில்  பேரீச்சை தொடர்ந்து அவர்களோடு வெற்றியின் சின்னமாக, ஆன்மீக அடையாளமாக, சமய சடங்குகளின் அங்கமாக, உணவாக, வாழ்விடமாக, திருவிழாவாக வந்துகொண்டிருப்பது ஆச்சரியமில்லை.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: