கால்களைக் கழுவுதல்


கால்களைக் கழுவுதல்

பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் அல்லது வியாகுல வியாழன் என்று சொல்லப்படும் நாள் திருச்சபையின் வாழ்வில் மிக முக்கியமானது. இயேசு கற்றுக்கொடுத்த ஆக சிறந்த விழுமியமான தாழ்மை என்பதை மிக அழகாக எடுத்துரைக்கும் இயேசுவின் வாழ்வின் இறுதி நாட்களில் அவர் அவர்களுக்கு செய்த மாதிரி விளக்கம் அது. அன்று தான் இயேசு தமது சீடர்களுக்கு கால்களைக் கழுவி “….. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.” (யோவான் 13:12 – 15 திருவிவிலியம்)

ஒருமுறை எனது புதிய எற்பாட்டு ஆசிரியர் இத்திருமறைப்பகுதியை குறித்து சொல்லுகையில் “இயேசு செய்த அருச்செயல்கள் அனைத்திற்கும் இணையான, இல்லை அதற்கும் அதிகமான பல அருச்செயல்களை அக்காலகட்டத்தில் எழுந்த பல்வேறு நூல்களில் நாம் காணலாம். ஆகவே சீடர்கள் ஒருவேளை இயேசுவை உயர்த்திப்பிடிக்க அவர்களும் வேறு விதமான அருஞ்செயல்களை அவர் செய்த பணிகளுடன் இணைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இயேசுவின் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தலைவர் ஒருவர் தமது தொண்டர்களுக்கு கால்களை கழுவிய எந்த நிகழ்வும் பலஸ்தீனா அருகில் காணப்படும் எந்த இலக்கிய பதிவுகளிலும் இல்லை. ஆகவே இது சீடர்களின் கற்பனையில் உதித்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது சீடர்கள் வேறெங்கோ இருந்து கடன் வாங்கிய நிகழ்வோ அல்ல” என்றார்.

என்னை மிகவும் பாதித்த திருமறைப்பகுதி இதுவாக பின்னர் மாறிவிட்டது. தாழ்மை வேண்டும் என பொதுவாக கூறுகிறோம், ஆனால் நமது வாழ்வு ஆணவம் நிறைந்த ஒன்றாகவே அமைந்திருக்கிறது. நமது தாழ்மையை நடைமுறை வாழ்வில் பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம். செய்கிறோம், ஆனால் குனிந்து பிறருக்குச் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்மை நிமிர்த்தும்  வல்லமை கொண்டவை. ஆகவே, இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியை விட மிகப்பெரும் அருஞ்செயல் ஏதும் இல்லை என்றே நான் கூறத்துணிவேன்.

எனது சிறு பிராயத்தில், அப்பா சி ஏஸ் ஐ திருச்சபையில் போதகராக இருந்தத போது ஆலயத்தில் இவ்வகை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற்று நான் பார்த்ததில்லை. ஆனால் அதைக்குறித்து அப்பா உணர்சிகரமாக பேசிய செய்திகள் நினைவிருக்கிறது. இவ்வளவு பேசியும் ஏன் திருச்சபையில் இதனை அப்பா நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்பாவிடம் நான் இதைக்குறித்து கேட்டபோது “கத்க்டோலிக்கர்கள் தான் அப்படி செய்வார்கள்” என அப்பா சுருக்கமாக சொல்லி நிறுத்திவிட்டார். ஆனால் அப்பாவால் மத்திரம் அல்ல கால்களைக் கழுவும் நிகழ்வை திருச்சபையின் வழிபாட்டு மரபில் ஏற்றுக்கொண்ட கொண்ட திருச்சபையான மெதடிஸ்ட் திருச்சபையில் பணிபுரியும் என்னாலும் எதுவும் செய்ய இயலாது என்பதே உண்மை. ஏனென்றால் அதற்கென திருச்சபை மக்கள் பழக்கப்படவில்லை. அது வெறும் ஒரு சடங்கு என்றே எண்ணப்படுகிறது. ஆகையினால் ஒரு மனவிலக்கம் இருக்கிறது.

நான் அகமதாபாத் பகுதியில் பணிபுரிகையில், முதன் முறையாக ஒரு பெண்மணியை அழைத்து அவர்கள் கரங்களில் தண்ணீர் வார்த்து என்னிடமிருந்த  துடைக்கும் துண்டை அவர்களுக்கு கொடுத்து அவர்களை துடைத்துக்கொள்ளச் சொன்னேன். அதற்குக் காரணம் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே போகாதது ஒரு காரணம். அவர்கள் கால்கள் சுத்தமாகவே இருக்கும், ஆனால் அவர்கள் கரங்கள் அடுப்படியில் புழங்கி அழுக்குகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் இந்தியாவில் இருப்பதால் கரங்களே ஒப்புநோக்க அழுக்கானவை. ஆகவே கால்களுக்கு பதிலாக கரங்களை ஒரு அடையாளமாகச் முன்னிறுத்த முயற்சித்தேன். மேலும் பெண்களின் கால்களையோ அல்லது கரங்களையோ பொதுவான இடத்தில் பிடிப்பது  என்பது திருச்சபையில், மிக சங்கடமான சூழ்நிலைகளை  ஏற்படுத்தும்.

பெரும்பாலும் இதுவரை நடைபெறாத நிகழ்ச்சிகள் திருச்சபையில் ஒரு போதகர் புதிதாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றால், திருச்சபையின் செயற்குழுவின் ஒப்புதல் வேண்டும். நல்ல காரியம் தானே என்று நினைத்து கால்களைக் கழுவும் நிகழ்ச்சியை நாம் அறிமுகப்படுத்த எத்தனித்தால், அது கத்தோலிக்கருடைய வழக்கம் நாம் அப்படி செய்யமுடியாது என்பார்கள், அல்லது எங்களிடம் தாழ்மை இருக்கிறது தாழ்மை இல்லாத நீங்கள் எங்கள் முன் கபட நாடகம் ஆடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரடியாக சொல்லுவார்கள், அதற்கு நாம் அமைதியாக இருந்தால் அவர் ஒத்துக்கொண்டார் பார்த்தீர்களா என்ற வெற்றிக்களிப்பும் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னால் பார்த்தீர்களா திமிர் பிடித்த சாதாரண மனுஷன் இவன், எங்களை எல்லாம் ஒப்புக்கு இங்கே அழைத்துக்கொண்டு வந்து அவமானப்படுத்துகிறான் என்பார்கள். மேலும் சிலர், இயேசு சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று திருமறை குறித்து நமக்கே விளக்கம் தர ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்டவர் சடங்குகளைக் முதன்மைப்படுத்தவில்லை அவர் உள்ளத்தை தான் பார்க்கிறார் போன்ற வார்த்தைகளைக் கூறி, திருச்சபையில் இதுவரை நடக்காதது இனிமேலும் நடக்ககூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் இந்த வெளிப்படையான தடைக்கு காரணம்  வேறு என்பதை உடனிருந்த போதகராக நான் அறிவேன். யாருக்கு இந்த முதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தான் அந்த சிக்கல் உறைந்திருக்கிறது. எனக்கு கிடைத்தால் நல்லது, ஆனால் அதை பெற்றுக்கொண்ட நான் தாழ்மையின் உருவாகவே வலம்வரவேண்டும், என் உண்மை சூழல் அதற்கு ஒப்பாது. அல்லது, யாராவது இங்கே இவ்விதமாக எனக்குப்பதில் கால்களை கழுவும் வாய்ப்பினைப் பெற்றால், அது போதகருக்கும் அவருக்கும் உள்ள நெருங்கிய உறவையல்லவா காட்டுகிறது என்கிற எண்ணம். திருச்சபைகள் இரண்டாக பிளந்திருக்கிற சூழலில், நாம் அதிகமாக எதுவும் செய்ய  இயலாது. ஆகவே நான் மெல்ல அமைதலானேன். திருச்சபைக்குள் உள்ள இறுக்கமான சூழலை உணர்ந்து நாம் தான் வேறு வகையில் இவைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பாடத்தை உணர்ந்துகொண்டேன்.

ஆனால் அப்படி ஒருவரின் கால்களை கழுவுவதிலும் ஒரு முக்கிய செய்தியினை உள்ளடக்கி செய்வது இன்னும் சிறப்பாக இருக்குமே என்றும் எண்ணிக்கொண்டேன். ஆகவே எங்கிருந்து இதை தொடங்குவது என்று எண்ணுகையில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் குருத்தோலைகளை எடுத்துக்கொடுத்த மக்கள் இன்றும் ஒட்டுமொத்த திருச்சபையால்  கவனிக்கப்படாமல் இருக்கின்ற சூழலில் ஒரு பனைத் தொழிலாளியின் கால்களைக் கழுவுவது மிக முக்கியமான ஒரு மாற்றத்திற்கான விதையாக அமையும் என்று நான் எண்ணினேன்.

பழங்காலத்தில் செருப்பணிந்து அல்லது செருப்பே அணியாமல் பல மைல் தூரம் நடந்தே செல்லும் மக்கள் ஒரு சுழலில் விருந்தோம்பல் செய்யும் முன், புழுதிபடித்த பாதங்களை கழுவும் வழக்கம் பல கலாச்சரங்களில் இருந்திருக்கிறது.  திருமறையிலும் இன்நிகழ்ச்சிகளை நாம் பார்க்கலாம். ஆபிரகாம் மம்ரே என்ற பகுதியில் தேவதாரு மரங்களின் அருகில் ஆண்டவரின் காட்சியை பெறுகிறார். நடுப்பகல் வேளையில் அவர் மூன்று பயணிகளைக் கண்டு அவர்களை விருந்தோம்ப அழைக்கிறார். அவ்வேளையில்,  “இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். (தொடக்க நூல் 18: 4 – 5அ, திருவிவிலியம்).

பெரும்பாலும் வேலைகாரர்கள் தங்கள் எஜமான் கால்களைக் கழுவுவதும், விருந்தாளியை வீட்டின் உரிமையாளர் மரியாதையின் நிமித்தம் கால்களை கழுவுவதும் வழமையாக இருந்திருக்கிறது. அதே வேளையில் இயேசுவின் காலத்தில் செல்வந்தர்கள், உயர்வாய் மதிக்கப்பட்ட பரிசேயர்கள் பொன்றோர் பிறர் கால்களைக் கழுவ தயக்கம் காண்பித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இயேசு சீமோன் என்னும் பரிசேயன் இல்லத்திற்குச் செல்லுகிறார். அங்கே ஒரு பெண் வந்து அவரது கால்களை தன் கண்ணீரால் நனைக்கிறாள். அப்போது சீமோன் தனக்குள் இவர் ஏன் பாவியான பெண்கள் தன்னை தொட அனுமதிக்கிறாள் என தனக்குள் எண்ணுகிறார். அப்போது இயேசு அவனது எண்ணங்கள் என்ன என்பதை உணர்ந்துகொள்ளுகிறார். ஆகவே அவனிடம் ஒரு காரியம் சொல்லவேண்டும் எனக் கூறி, “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.” (லூக்கா 7: 44 திருவிவிலியம்) எனச் சொல்லுவதைப் பார்க்கிறோம்.

வெளிப்படையாக கால்களைக் கழுவியே தீரவேண்டுமா? எனக் கேட்பவர்கள் எப்போதும் திருமறை வாக்கியங்களை மேற்கோள் காட்டாதவர்களாய் இருப்பது நலம். ஆனால் இயேசு கூறிய முக்கிய அறிவுறுத்தல்களில் இதுவும் ஒன்றாய் இருக்கையில், இவைகளை கைக்கொள்வது சரியானது என்றே உணருகிறேன். இயேசு கால்களைக் கழுவ மற்றுமொரு முக்கிய காரணம் இருப்பதாக நான் உணர்ந்த இடத்தில் நானும் கால்களைக் கழுவ கடன் பட்டவன் என்பதை உறுதிபடுத்திக்கொண்டேன்.

இயேசு தமது சீடர்களை ஊழியத்திற்காக அனுப்புகிறார். அவ்வேளையில் அவர்களிடம் “பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.” (மத்தேயு 9: 10 திருவிவிலியம்) எனக் கூறி அனுப்புகிறார். தனது அழைப்பை ஏற்று வந்தவர்களை தனது ஊழியத்திற்காக அவர் அனுப்புகையில், அவர்கள் கால்கள் வெறுமையாக இருக்கும்படி அவர் அனுப்பியிருக்கிறார். “நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!” (ஏசாயா 52: 7 திருவிவிலியம்) தமக்கென  மலைகளில் வெறுங்கால்களுடன் பயணித்து நற்செய்தி  அறிவித்தவரின் உடைந்து நொறுங்கி சிதைந்து நைந்து இரத்தம் கசிய வரும் பாதங்கள் இயேசுவிற்கு அழகாத்தானே இருந்திருக்க வேண்டும். அவைகளை ஆற்றுப்படுத்தி சற்றே தூய்மைப்படுத்துவதை அவர் பெரு விருப்புடனேயே செய்திருக்கவேண்டும். கூடவே அவர் ஒருவரில் ஒருவர் அன்புடன் இதைச் செய்யவும் கட்டளைக் கொடுக்கிறார். இதில் நாம் பெரியவர் சிறியவர் எனப் பார்ப்பது தகாது என குறிப்புணர்த்துகிறார்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

ஆகவே துணிந்து இன்று ரசாயனி, நார்போலி பகுதியிலுள்ள பனை தொளிலளரின் வீட்டிற்கு நானும், ஜாஸ்மினும் மித்திரனுமாக மாலை 5 மணிக்குச் சென்றோம். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். அனுமன் பக்தர்கள். என்னை பல நாட்களாக நன்கு அறிந்தவர்கள். சற்று இருங்கள் எனக் கூறி பனம் பழம் எடுக்கச் சென்று பத்தே நிமிடத்தில் திரும்பும் போது அவர்கள் அங்கே இல்லை. நான் பனம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக ஒரு 20 நிமிடம் காத்திருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் வர நேரமாகலாம் என்பதை உணர்ந்ததால், மாலை ஆறு மணி ஆராதனைக்காக நாங்கள் புறப்பட்டோம். புறப்படுகையில், அவர்கள் குடும்பத்தாரிடம், நாங்கள் மீண்டும் 7 மணிக்கு பின்பு வருவோம் அவர்களை இருக்கச் சொல்லுங்கள் என சொல்லிச் சென்றோம்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

ஆராதனை நிறைவு செய்த பின் மீண்டும் அவர்களைப் பார்க்க விரைந்து சென்றோம். நல்லவேளை அண்ணன் தம்பி இருவரும் அங்கே இருந்தனர். இன்னும் வேலை இருக்கிறது என்றாலும் உங்களுக்காக தான்  காத்திருந்தோம் என்றனர். உண்மைதான், இருவரும் கடும் உழைப்பாளிகள். பனை ஏறுவதுடன் தோட்டம், பசு, கோழி போன்றவைகளையும் கவனித்துக்கொள்ளுகிறார்கள். நான் ஒரு 15 நிமிடங்கள் மட்டும் எனக்கு தருமாறு  அவர்களிடம் கேட்டேன். சரி என்றனர். இருவரையும் அவர்கள் வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் அமரச் செய்துவிட்டு, அவர்கள் கால்களில் பனம் பழக் கூழினை முதலில் தடவினேன். சேற்றிலும் மண்ணிலும் உழன்ற அழுக்கான கால்கள். முள் மற்றும் கற்களில் இடறிய  வெட்டுகள் தழும்புகள். பனை மரத்தில் ஏறிய காய்ப்புகள். அதை தொடுகையில் ஏற்பட்ட உணர்வுகள் பலதரப்பட்டவை. எனது தந்தையின் கால்களைத் தவிர எவர் கால்களையும் இவ்விதம் அணுகி நான் தொட்டது இல்லை. ஒரு மூதாதையின் கால்கள் என்றே அவைகள் என் முன் இருந்தன. நான் எனது வாழ்வில் பலமுறை மனதில் நடித்து இவை வாய்க்குமா என்று ஏங்கிய பொற்தருணம் அது. இது எனது வாழ்நாள் சாதனை. திருச்சபை யாருடைய கால்களைப் பிடிக்கவேண்டும் என சுட்டும் தகுதியை நான் பெற்ற நாள் இது.  பனை ஏறும் தொழிலாளிக்கு போதகராக நான் அளிக்கும் முதல் அங்கீகாரம். நான் இவைகளில் ஒன்றி இருக்கையில், ஜாஸ்மின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தாள். பிறரை ஊக்குவிக்க இப்புகைப்படம் உதவியாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

கால்களைக் கழுவுதல்

கால்களைக் கழுவுதல்

அவர்கள் கால்களை தண்ணிரால் கழுவி துடைத்து எழுந்தபோது ஒரு பாரம் என்னிலிருந்து அகன்ற ஒரு பெரும் விடுதலை உணர்வினை அடைந்தேன். இவ்விதமான உணர்ச்சி மிக்க ஆராதனையினை நான் எனது ஊழியத்தில் வெகு சில தருணங்களிலேயே கடந்து வந்திருக்கிறேன். அவர்களின் கால்களைக் கழுவுகையில், இயேசு தமது சீடர்களுக்காக இவ்விதம் செய்தார் எனவும், இவ்வுலகில் சிறியோர் எனக் கருத்தப்படுபவரே விண்ணுலகில் கடவுளால் பெரியவர் என்னப்படுபவர் என்ற கருத்துக்களை அவர்களுடன் சொன்னேன். எனது இந்தி உரையாடல்களில் உள்ள தடுமாற்றத்தாலும் புலமையின்மையினாலும் என்னால் அவர்களுடன் அதிகமாக எதையும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும்  அத்தருணம்  பெரும் நிறைவளிப்பதாக இருந்தது. அவர்களும் தங்கள் உள்ளாக பெரும் மாற்றம் அடைந்ததை அவர்கள் முகங்கள் காட்டியது. எங்களுக்கு இஞ்சி காப்பி கொடுத்து உபசரித்தார்கள்.

அனைத்தும்  முடித்து திரும்பும் முன்னால் அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த துணியும் ஒரு சிறு தொகையும் கொடுத்துவிட்டு வந்தேன். வசதி நிறைந்த திருச்சபைகள் பனை தொழிலாளியின் கால்களை கழுவாவிட்டாலும் இதனை மட்டும் செய்வதுவே ஒரு சிறந்த துவக்கமாயிருக்கும் என்ற நம்பிக்கையில்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

 

ஒரு பதில் to “கால்களைக் கழுவுதல்”

  1. Priyadharshini Nallaswamy Says:

    பெரும் உழைப்பாளியான என் பாட்டிக்கு, வலி நீங்க கால்களைப் பிடித்து விட்ட அனுபவம் உண்டு… நரம்புகள் புடைத்து, வெடிப்புகளுடன் இருக்கும் பாதங்களைப் பற்றி, அவற்றைக் கழுவி, நகம் வெட்டி, இடுக்குகளில் இருக்கும் மண்ணையும் சுத்தம் செய்தபின் அந்தக் கால்களைப் பார்க்கும் பொழுது, உண்மையாகவே நீங்கள் விவரித்தது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: