நுங்கின் பயன்பாட்டைக் குறைத்து
பனம்பழ பயன்பாட்டை பெருக்குவோம்.
‘இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள். உணவு தன்னிறைவிலும் கிராம மேம்பாட்டிலும் முதலீடு செய்யுங்கள்’ என்பது உலக உணவு தினத்தின் மையக்கருத்தாக இவ்வண்டு ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டிருக்கின்றது. போர், வறுமை, வறட்சி, வேலையின்மை மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் பாதிப்படைந்துள்ள மக்கள் பல கோடிபேர் உணவு இன்றி தவிக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் அறிக்கை சமர்பிக்கின்றது. பனை சார்ந்த சமூகம் தன்னை இன்னாட்களில் மீட்டுருவாக்கம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளைத் தேடுவதன் மூலம் உணவு தன்னிறைவை அடைவதும், அவைகளை முதலீடாக மாற்றுவதும் அவசியம்.
பனை மரம் பல்வேறு உணவுகளையும், உணவு சாரா பொருட்களையும் அள்ளிதரும் ஒரு வறண்ட நில தாவரம். தமிழகத்தில் காலம் காலமாக பனை உணவு இருந்து வந்திருக்கின்றது. நமது தலைமுறையில் ஏற்பட்ட உலகமயமாக்க மாற்றத்தினால் நமது உணவு பழக்கவழக்கங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாரம்பரிய சத்தான உணவுகள் பலவும் நமது மண்ணிலிருந்து மறைந்துவிகொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழக மாநில மரமான பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுகள் பலதரப்பட்டவை. பூக்காம்புகள் என சொல்லப்படுகின்ற அலுவாச்சியோ (அண்பனையின் பாளை) அல்லது பருவ பாளையிலிருந்தோ (பெண் பாளை) எடுக்கப்படும் உணவுகளை மைய்யப்படுத்தியே பனைத்தொழில் இருந்துவந்துள்ளது. பனையின் பருவகாலம் பெருமளவில் பாளை தலைக்காட்டத் துவங்கிய பின்னரே அமையும் என்றாலும், அது ஆண்டு முழுவதும் உணவளிக்கும் தன்மை படைத்தது என்பதை நாம் மறந்துபோகக்கூடாது.
பாளை வரும் பருவம் தமிழகத்தில் மூன்றாக பிரிந்து கிடப்பதாக திரு குமரி நம்பி அவர்கள் குறிப்பிடுவார்கள். எனினும் பெரும்பாலும் குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், இங்கே ஆறு மாதமும், பாண்டியில் (திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்) மூன்று மாதமும் பனையேற்றுத் தொழில் செய்வது பல நூற்றாண்டுகளாக அறுபடா தொடர் சங்கிலியாக இயங்கி வந்துள்ளது. இச்சங்கிலியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் மிகவும் வேதனை அளிப்பதாக மட்டுமல்ல பெருமளவில் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஒன்றாக நம்முன் எழுந்து நிற்கின்றது.
பனைமரத்திலிருந்து கிடைக்கும் கள் குறித்த பதிவுகள் சங்க கால இலக்கியத்தில் பெருமளவில் குறிப்பிடப்பட்டாலும், தற்போது தமிழகத்தின் அரசியலில் காணப்படும் முதிரா நிலைப்பாட்டின் காரணமாக கள் ஒரு போதை தரும் பானம் என முத்திரைக்குத்க்டப்பட்டுள்ளது. இந்த துயர நிலைப்பாட்டினை எதிர்த்து திரு கள்ளு நல்லசாமி என்பவர் தொடர்ந்து போராடி வருகிறார். நமது அரசியல் சாசனம் வழங்கும் மக்களின் உணவு தேடும் உரிமையை இது பறிக்கின்றது என அவர் குற்றம் சாட்டி தீவிரமாக போராடி வருகிறார். கள்ளில் காணப்படும் ஆல்கஹாலின் அளவு 4.5% எனவும் இது நாம் பாரம்பரியமாக உண்டு வரும் பழைய சோற்றில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு தான் எனவும் அவர் ஆதாரங்களை அடுக்குகிறார். தாய்பாலிலும் ஆல்கஹால் இருப்பதாகவும், சிறிய அளவிலான ஆல்கஹாலின் இருப்பு அனைத்து உணவுகளிலும் சேர்ந்தே கலந்திருக்கிறது என்பது அவரது வாதம்.
இவ்விதமாக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நமது வாழ்வின் அங்கமாயிருந்த கள் நமது காலத்தில்தானே, நமது கண்களின் முன்பாக, கடந்த நாற்பது வருடங்களுக்குள் நமது கலாச்சாரத்திலிருந்து மறைந்துபோய்விட்டது. இது வெறுமனே உணவு சார்ந்த ஒரு அழித்தொழிப்பு மட்டுமல்ல பத்து லட்சம் தொழிலாலர்களையும் வேலை நீக்கம் செய்த ஒரு துயர சம்பவம். இவ்வகையில் பனை சார்ந்த தொழில் வெறும் பதனீர் இறக்கும் தொழிலாக கடந்த நாற்பதாண்டுகளாக அறியப்பட்டு வருகின்றது. இவ்வறலாறு தெரியாதவர்கள், டாஸ்மாக் விற்பனை கோலோச்சும் இன்றும் கள்ளுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை நிறுவ முற்படுவது வேடிக்கை. கள் வெறும் ஒரு உணவு பொருளல்ல சூட்டினால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது கண்கண்ட மருந்து ஆகும்.
பனை மரத்தின் பாளையினைச் சீவி, அதிலிருந்து வரும் சாற்றினை மண்கலயத்தில் சுண்ணாம்பு சேர்த்து எடுப்பது பதனீர் ஆகும். இவ்விதம் எடுக்கப்படும் பதனீரிலிருந்து கருப்பட்டிகளில் பல வகைகளும், கற்கண்டின் பல வகைகளும் செய்யப்படுகின்றன. இவைகள் பல்வேறு அளவில் முறைகளில் “நாட்டு மருந்துகளில்” இடம் பெறுவதோடு சித்தா ஆயுர்வேதா போன்ற மருந்துகளில் முக்கிய சேர்மானமாக இருக்கின்றன. பெரும்பாலும் தென் தமிழகத்தில் கருப்பட்டி காப்பி இடுவது, தண்ணீர் கேட்பவருக்கு கூடவே ஒரு துண்டு கருப்பட்டி வழங்குவது போன்றவை அன்றாட வழக்கம்.
தற்போது சுண்ணாம்பு சேர்காமல் பதனீரை சேகரிக்கும் குடுவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில் நாம் பார்க்கையில், பனை சார்ந்த உணவு பொருட்களின் வேதியல் சேர்மானங்கள் புளிக்க வைத்த கள்ளில் ஒருவிதமாகவும், சுண்ணாம்பு சேர்த்த பதனீரில் மற்றொருவகையிலும் சுண்ணாம்பும் சேர்க்காமல், புளிக்கவும் விடாமல் தனித்துவமான இயற்கை பானமாக குடுவையில் சேகரிப்பது “னீரா” எனும் பெயரில் கிடைக்கிறது. இவைகள் நீராகாரங்களாக கிடைப்பினும் இவைகளில் பதனீர் மற்றும் நீரா ஆகியவை நமக்கு கருப்படி, பனஜ் சீஈனி, கற்கண்டு போன்றவைகளை தயாரிக்க உதவுகின்றது.
தற்போது பெருமளவில் பனைத் தொழில் நடை பெறுவது இல்லை என்பதாலும் 95 சதவிகிதத்திற்கும் மேலாக பனை மரங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாலும் உணவுகளை பெருமளவில் நாம் வீணடிக்கிறோம் என்பது உறுதியாகின்றது. ஆகவே ஒரு உணவு மேலாண்மையினை பொதுமக்களே செய்ய கடமைப்பட்டுள்ளனர். பொதுமக்கள் என கூறுகையில், பனை மரம் ஏறத் தெரியாத பெரும்பான்மை மக்கள், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுவதன் மூலம் இவ்வித முன்னெடுப்புகளை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் இவைகளை பரிசீலிக்கலாம் எனவும் பரிந்துரைக்கிறேன்.
பெண் பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு மிகவும் சத்தான ஒரு ஆகாரம். அது வெப்ப நோய்களுக்கு அருமருந்து கூட. இன்றைய தினத்தில் பனையினைச் சுட்டிக்காட்டகூடிய ஒரு முக்கிய அடையாளமாக நுங்கு இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் நுங்கினை நாம் நுகரும் தோறும் பனை மரத்தினை அழிக்க நாம் துணை போகிறோம் என்பதே உண்மை. நுங்கு என்றால் முதிராத பனை விதை என்பது தான் அர்த்தம். அதன் உட்பகுதியை நாம் விரும்பி உண்கையில் பனை விதைகள் கிடப்பது அரிதாகின்றது. நுங்கினை உண்கையில் விதைகள் இல்லாமல் போகின்றன என்பதே உண்மை.
ஆனால் பனம் பழத்தினை நாம் பயன்படுத்தத் துவங்கினால் நமக்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கின்றன. பனம்பழ சாற்றினையும் நாம் நேரடியாக சுவைக்கலாம், அவைகளை பிழிந்து மாவோடு கலந்தும் உண்ணலாம் அல்லது இலங்கையில் செய்வதுபோல் பணாட்டு செய்யலாம். பனம்பழத்திலிருந்து ஜாம் மற்றும் ஸ்குவாஷ் போன்றவைகளும் தயாரிக்கலாம். விதைகளின் வெளிப்புற தோலில் இருக்கும் இனிப்பான சாற்றினை பிழிந்து எடுத்த பின்னர், பனை விதைகளை நடுவோமாகில், அவைகளிலிருந்து பனங்கிழங்கினையும் நாம் பெற்றுக்கொள்லலாம். எஞ்சியவற்றை நாம் பயிரிட முடியும். இல்லையென்று சொன்னால் பனம் பழங்களை சாப்பிட்டுவிட்டு விதைகளை வீசுகையில் அதுவே ஒரு விதை பரம்பலாகும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றது. பொதுவாக பனம்பழத்தினை சுட்டோ அல்லது அவித்தோ சாப்பிடுவார்கள். பனை விதையின் ஓடுகள் மிக உறுதியாக இருக்கின்றது என்பதனைக் கூற ” வகுத்தவன் வல்லவனானால் வறுத்த முத்தும் முளைக்கும்” என்பது பழமொழி. பனம் பழத்தினை நுகராத ஒரு சமூகத்தால் பனை மரத்தினை காக்க இயலாது என்பது தான் உண்மை.
இலங்கையில், யுத்க்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பனை மரங்கள் தாம் உணவாகவும், சோப்பாகவும், பல் துலக்கும் பற்பசையாகவும் இருந்திருக்கிறது. இக்கட்டு வந்தால் மட்டுமே பயன்படுத்த இது ஒன்றும் சுவையற்ற பழம் இல்லையே?
தமிழகம் முழுவதும் ஆண்டிற்கு பல்லாயிரக்கணக்கான பனம்பழங்கள் வீணடிக்கப்படுகின்றன. இவ்வீணடிப்பைத் தடுக்கவே பல்வேறு நண்பர்கள் இணைந்து இன்று பனை விதைகளை நடும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். இவர்கள் பல இடங்களுக்குச் சென்று விதைகளை சேகரிக்கின்றனர். இவர்களின் முயற்சியின் அங்கமாக பனம்பழம் சாப்பிடும் நிகழ்வினையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பனம்பழங்களை உண்டு பயன் பெறுவது உணவு தன்னிறைவு நோக்கி நம்மை வழி நடத்தும். நமது மரபான உணவை உண்ணும் விழாக்களிலும் பனம் பழங்களை நுங்கிற்கு மாற்றாக இணைக்க வேண்டும். இவ்விதம் செய்கையில் அது உணவு பரம்பலுக்கு பேருதவியாக இருக்கும். உலக உணவு தினத்தில் பனை உணவுகளை முறைப்படுத்தி உண்போம், பனை மரத்தினைக் காப்போம்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
தேவிகோடு, குமரி மாவட்டம்
9080250653
malargodson@gmail.com
You must be logged in to post a comment.