பனை சார்ந்த ஆய்வுகள் அதிகம் நடைபெறவில்லை என்ற குறை எனக்கு அதிகம் உண்டு. ஆனால் பிறர் என்னிடம் சமீபத்திய ஆய்வுகள் குறித்து கூறுங்கள் என்றால் என்னால் பதிலளிக்க இயல்வதில்லை. பனை சார்ந்த ஆய்வுகள் என்பதை பலரும் தவறாகவே புரிந்திருக்கின்றனர் என்றே நான் எண்ணுகிறேன். பல்வேறு தளங்களில் இன்று ஆய்வு செய்யத்தக்க வாய்புள்ள ஒரே துறை பனை மட்டும்தான் என்பதே எனது புரிதல். ஆனால் பனை சார்ந்து ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறவர்களது கேள்வி கீழ்கண்டவகையில் அமைந்திருக்கும்.
- குட்டை பனை கண்டு பிடித்திருக்கிறார்களா?
இந்த கேள்வி, பனை குட்டையாக இருந்திருந்தால் அனைவரும் வளர்பார்கள். ஏறுவது சுலபம். தென்னையைப்போல் சீக்கிரமாக பலன் தரும் போன்ற எண்ணத்தின் விளைவால் கேட்கப்படும் கேள்விகள்.
- பனை ஏறும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா?
பனை மரம் ஏறும் கருவிகள் இருந்தால் வேகமாக ஏறவும், ஒரே நேரத்தில் ஒரு தொழிலாளியால் அனேகம் பதனீரை சேகரித்து கொடுக்கமுடியும். மேலும் பெண்களையும் இத்துறைக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
முதலில் மேற்கூறிய இரண்டு கேள்விகளும் பனைஏறுபவர் சார்ந்து எழுப்பபட்ட கேள்விகள் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இக்கேள்விகள் பனை மரத்தினை நவீனப்படுத்த “பனை மேசியாக்கள்” எழுப்பும் முக்கிய கேள்விகள் என்பதனை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது. சந்தைப் பொருளியலை மையமாக வைத்துப் பார்க்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாகவே இக்கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நுகர்வு சார்ந்த இவ்வினாக்கள் குறைபாடுள்ளது என்பதே எனது புரிதல். பனை நுகர்வு கலாச்சாரத்தை மிஞ்சி நிற்கும் ஒரு ஆற்றல் மிக்க மரம். அதன் ஆற்றலை குறைத்து மதிப்பிடுகிறோமோ அல்லது முன்முடிவுகளோடு அணுகுகிறோமோ என்பதே எனது ஐயப்பாடு. ஒருபோதும் நான் சந்தித்த பனைத் தொழிலாளி தனக்கு பனை மரம் ஏற ஒரு கருவி வேண்டும் என்றோ, பனை மரம் குட்டையாக இருப்பது நல்லது என்றோ கூறியது இல்லை. ஆனால் நான் சந்திக்கும் பனை ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இவ்வினாக்களை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். ஏன், நானே கூட ஒரு காலத்தில் இவ்விதமான எண்ணத்துடனே சுற்றியலைந்திருக்கிறேன். ஆனால் எனது பயணம் அவர்களை சற்றே மதிப்புடன் நோக்க வைத்தது அவர்கள் வாழ்கை முறைதான். அதனை சற்றும் அறியாமல், அவர்களை பெருமிதத்துடன் அணுகாமல் அவர்களுக்காக நாம் செய்யும் பணிகள் வீண். இக்கருத்து அவர்களுக்காக நாம் பணி செய்யக்கூடாது என்பதல்ல, அவர்களை இன்னும் நெருங்கிச் செல்வதும் அந்த புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கான பணியினை முன்னெடுப்பதுமாகும்.
மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து பனை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் இன்றும் பனைத்தொழிலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல், பாரம்பரியமாக எவைகள் முன்னிலைப்படுத்தப்பட்டனவோ அவைகளே இன்றும் முதன்மையான பனைத்தொழிலாக தொடரப்படுவது கண்கூடு. இந்த முயற்சிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை நாம் ஆய்ந்து மேம்படுத்தவேண்டுமே ஒழிய, புதியவைகளை கண்டுபிடிக்கிறோம் என்று நேரம் செலவளித்து, இன்று வாழும் பனைத்தொழிலாளிகளை கைவிட்டுவிடக்கூடாது. விடா முயற்சியுடன் பனையேற்றத்தை செயல்படுத்திவரும் பனைத்தொழிலாளிக்கு என்ன தேவை என்பதே முக்கிய ஆய்வு.
முதலாவதாக பனையின் உயரம் குறித்து நாம் கவலைப்படுவோமானால், ஒரு பனை ஏறுபவரை நாம் உள்வாங்கவில்லை என்பதே பொருள். ஒரு பனை மரத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு பாளைகள் உருவாகும். எந்த பனையேறியும் அத்தனையிலும் கலயம் கட்டி பதனீர் இறக்க முற்பட்டதில்லை என்பதே எனது அவதானிப்பு. ஏழு கலயங்கள் வரை கட்டியிருப்பதனை நான் ஒரே பனையில் பார்த்திருக்கிறேன். வாய்மொழிக் கூறாக இரண்டு டின் (சுமார் 36 லிட்டர்) பதனீர் ஒரே மரத்திலிருந்து இறக்கியதாக கூட கூறக்கேட்டிருக்கிறேன். என்றாலும் பனையேறுபவர் பல பாளைகளைக் கழிப்பார். முதிர்ந்தவைகள், மட்டுமல்ல அளவுக்கு அதிகமாக அவருக்கு தோன்றுபவைகளைக் கூட அவர் வெட்டி வீசிவிடுவார். நமக்கு சற்றே பயித்தியக்காரத்தனமாக தோன்றும் இச்செயல்கள் நமது ஆய்வு மனப்பான்மையினைத் தொட வேண்டும்.
ஏன் இவ்விதமான அசட்டுத்தனங்களை ஒரு பனைத் தொழிலாளி செய்கிறார் என்பதனை செய்கிறார் என்பதனை அறியும் அறிஞர்களே நமக்குத் தேவை. பனைக்கு சிரை எடுப்பது பனையேறிகள் செய்யும் முதல் பணி. ஒரு மனிதன் எப்படி தனது தலை முடியினை வெட்டி தன்னை அழகுற வெளிப்படுத்துகிறானோ அது போலவே பனையேறியும் தனது ஏற்றத்தின் துவக்கத்தில் இதனைச் செய்வது வழக்கம். சிறையெடுத்த பனை அவனுக்கு அளிக்கும் மனக் கிளர்ச்சி அலாதியானது. அது அவன் தன்னையே சீரமைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்ப்பதற்கு நிகரானது. பனையும் தானும் வேறு வேறல்ல என்பதனை உணர்ந்த புரிதலின் வெளிப்பாடு. இவ்விதம் சிரை எடுத்த பின்பே அவன் பனைதொழிலினை முன்னெடுப்பான்.
பனைகளில் ஏற்படும் பதனீர் ஊற்று, கிணற்றின் ஊற்றைப்போலவே குறைந்தும் அதிகரித்தும் இருக்கும். ஒரு பனை மரம் தனது ஏற்ற காலத்தில் குறைந்த பட்சம் 2 லிட்டர் பதனீர் முதல் 10 லிட்டர் பதனீர் வரை வெகு சாதாரணமாக கொடுக்கும். இப்பனையேறிகள் இவைகளில் ஒன்றையும் தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ கருதுவதில்லை. எல்லாம் பாலூறும் “அம்மை”தான். ஆனால் சில வேளைகளில் பனையேறிகள் என்னதான் முயன்றாலும் முயங்கினாலும் சில பனைகளிலிருந்து ஒரு சொட்டு பத்னீரையும் அவர்களால் பெற இயலாது. இவ்விதமன வேளையில் அவர்கள் அன்ட்த பனையினை “கள்ளப் பனை” என்று அழைப்பார்கள். அவர்கள் மிகவும் மதிக்கும் பனைன் எனும் இந்த “திருட்டு ராஸ்கலை” என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் கைவிடுவதும் உண்டு. சில நேரங்களில், அருகிலுள்ள பனைத்க்டொழிலாளிகளை அழைத்து அவர்கள் பணியினை தொடர அழைப்பதும் உண்டு. ஆச்சரியம் என்னவென்றால், இவ்விதமான பனைகளில் புது பனைத்தொழிலாளியின் கை பட்டவுடன் பதனீர் ஊற்று ஜாக்பாட் அடித்தது போல் மிக அதிகமாக ஊறிவிடும். சில நேரங்களில் பனை தன்னை அப்படியே இறுக்கிக்கொண்டு எதுவும் கொடாது அமைதியாகிவிடும்.
இந்த உறவு அலாதியானது. தாயும் பிள்ளையும் கொள்ளும் உறவுக்கு ஒப்பானது. ஒரு தாய்க்கு எவ்வளவு பால் ஊறுகிறது என்பது அறிவியல் என்றால் தாய் பால் சொரியும் ஒரு கருவியாக எண்ணப்படுகிறாள். ஆனால் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு என்பது பால் ஊறாவிடினும் தன்னிச்சையாக ஏற்படும் பிணைப்பு. பனையுடன் பனையேறி இரண்டறக் கலந்த இவ்விதமான செயல்கள், பனையினை தன்னைப்போல் அவன் கருதுகிறான் எனவும், பனையுடன் அவன் ஒரு நேர்மையான உறவை மேற்கொள்ளுகிறான் எனவும் நமக்கு விளக்குகின்றது. பனை எனும் சூழியல் அமைப்பினை இவ்விதம் புரிந்து கொண்ட ஒருவனைவிட நாம் மேலானவர்கள் எனக் கருதி அவர்களுக்கு அறிவுறைச் சொல்ல முற்படுவதும் அவர்களுக்காக இயங்க முற்படுவதும் அசட்டுத்தனமே.
ஏறும் கருவிகள் குறித்த பார்வையும் மட்டுப்பட்டதே. ஒரு பனையேறியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, 94 மரங்கள் வரை ஏறினேன் என்று ஒருவர் என்னிடம் கூறினாரே நீங்கள் எத்தனை மரங்கள் ஏறினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த ஓய்வுபெற்ற பனையேறி, நான் சுமார் 60 மரங்கள் வரை தான் ஏறியிருப்பேன் என்றார். பின்பு அவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார். “கடைசீல எல்லாருக்கும் ஒரே அளவு தான் கிட்டும்”. திருமறையில் இதற்கு ஒப்ப ஒரு காட்சி உண்டு. இஸ்ரயேல் மக்களை கடவுள் பாலை நிலத்தின் வழியாய் மீட்டு வந்தபோது அவர்கள் பசியாற வானத்திலிருந்து மன்னா என்ற பொருளை வழங்கினார். சிலர் பேராசை மிகுதியால் அதிகமாக சேர்த்தனர் சிலர் தேவையான அளவு சேர்த்தனர், வேறு சிலர் குறைவாகவே எடுத்துக்கொண்டனர்.
“…மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு;
குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது
மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை;
குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை…” (விடுதலைப் பயணம் 16: 17, 18)
இதனை அவர் திருமறை வழிநின்று கூறவில்லை ஆனால் பனை மரத்துடன் அவர் கொண்டுள்ள உறவாலே அவர் கூறினார் என புரிந்துகொண்டேன். மேலும் சிலருடன் பேசுகையில், வேகமாக ஏறுவது என்பது இளமையின் துடுக்குத்தனத்தைப் போன்றது. அவர்களால் ஒரு பனையின் தேவையை உணர்ந்து அதனுடன் ஈடுபட இயலாது, ஆனால் சில வயதானவர்கள் பனையினை உற்று நோக்கி புரிந்துணர்வுடன் குறைவான மரத்திலேறி நிறைவான பலனை எடுப்பார்கள். அளவோடு எடுக்க விரும்பினால் வருடம் முழுக்கக் கூட பனை மரம் ஊறும் தன்மை வாய்ந்தது என்பது பனைத்தொழிலாளிக்குத் தெரியும்.
இன்று கூட 4 பனை ஏறி 20 லிட்டர் பதனீர் எடுக்கும் பனையேறியும், 5 மரம் ஏறி 8 லிட்டர் பெறும் பனையேறியையும் குமரி மாவட்டத்தில் பார்த்திருக்கிறேன். ஓக்கி புயல் அடித்து தங்கள் கலயங்கள் உடைந்து போன பின்பும், பனையேற்றம் தவறி தங்கள் பணிகளை முதலில் நின்று மீண்டும் துவங்கும் பனையேறிகளைக் காண்கையில் வியப்புதான் மேலோங்குகின்றது. பனைத்தொழிலாளி எவருக்கும் ஓக்கி நிவாரண நிதி கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த உறவில் அவர்கள் திளைப்பது ஆச்சரியமானது அற்புதமானது. இதற்கு என்ன காரணம் என்கிற ஆய்வு முக்கியமானது.

பதனீர் விற்கும் பெண்மணி, ஆலம்பாறை
உயரம் என்பதில் மற்றுமொரு அவதானிப்பை பனைத் தொழிலாளர்கள் கொண்டுள்ளார்கள் எனபது எனது புரிதல். மிக உயரமான மரங்கள், கருடன், தூக்கணாங் குருவிகள் மற்றும் வேறு பல உயிரினங்கள் தங்கும் வாழ்விடம். அந்த சூழியலை மாற்றி அமைக்காமல் பணி செய்வதே சிறந்தது என அவர்கள் கருத வாய்ப்புள்ளது. மேலும் இவைகளில் பெண் பனை இருக்குமாயின் அவைகளில் இருந்து நுங்கு பறிக்கப்படாததால் பனம்பழங்கள் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது என்பதும், பனம் பழத்தை எடுத்து முழைக்க வைத்தால் கிடைக்கும் கிழங்குகளும் அவர்கள் உணவின் ஒருபகுதி என்பதும் நாம் அறிந்ததே. மேலும், இருக்கும் பனைமரங்கள் அத்தனையிலும் அவர்கள் ஏறி பயன் எடுக்க முற்படுவதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.
பனை சார்ந்த ஆய்வுகள் என்பது பனையேறியினை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஒன்றாக இருத்தல் அடிப்படை தேவை. அதிலும் குறிப்பாக அவர்களது அறிவினை பெற்றுக்கொள்ளும் ஆய்வுகளே முதன்மையான ஆய்வுகள் என நான் கருதுகிறேன். ஏனென்னில் பனையேறி என்பவர் அத்துறையினை மனமுவந்து ஏற்று நேசித்து முன்னெடுப்பவர். பனைமரத்தினை தனது வாழ்வின் ஆதாரமாக கொண்டவர். நுகர்வு கலாச்சாரம் ஒரு தலைமுறையாக பனை மரத்தினை கைவிட்டபோதும் அதனை தன் உயிர் மூச்சாக ஒரு இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டு செல்லும் களப்போராளி. பனை சார்ந்த சூழியலை அறிந்த சூழியலாளர், பனையினை தமது சமயத்தின் அங்கமாக வைத்திருப்பவர். பனைக் கலாச்சாரத்தின் ஆணி வேர் அவர் தான். பனை மரத்தின் தொல் பழங்கால எச்சத்தை நமக்கு நவீன காலத்தில் கொண்டு சேர்க்கும் தூதுவர் அவர். நமது காலத்தில் பேணப்படத்தக்க தொல் அறிவு சமுகத்தின் கடைசி துளி அவர்கள் தான். அவர்கள் தான் நம்மைச் சுற்றி அடிக்கும் காற்றை அவதானிக்கிறார்கள், வந்து செல்லும் பூச்சிகளை கவனிக்கிறார்கள், பறவைகள், ஊர்வன, மிருகங்கள் என அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருகிறவர்கள். நம்மைவிட எவ்வளவோ படிகள் உயர இருக்கும் அவர்களை நமது நுகர்வு கண்கொண்டு பார்க்கையில் அவர்கள் நமக்கு கீழானவர்கள் என்கிற எண்ணம் ஏற்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. காலத்தின் பிழை.
பனைமரத்தினையும் இயற்கையையும் விட்டு விலகும் சமூகம் மீண்டும் அதனுடன் ஒட்டி உறவாட தேவையான ஆய்வுகள் இன்றைய தேவை. அதற்கான முன்னெடுப்புகளே அவசியம். கிட்டத்தட்ட 95 சதவிகித பனை மரங்கள் இன்னும் இந்தியாவில் மனிதர்களால் உறவு கொள்ளப்படாமல் ஏங்கியபடி தனித்து நிற்கின்றன. இவ்வுறவுகளை எப்படி புதுப்பிப்பது என்னும் ஆய்வு இன்றைய அவசர தேவையாகும். சீக்கிரம் பலன் தரும் ஒட்டு செடிகளின் உறுதியற்ற தன்மையும், 40 நாளில் வளர்ச்சி பெறும் கோழிகளின் “ஆரோக்கியத்தை” அறிந்த பின்னும் யானையினையும் பேனாக்கிப் பார்க்க விழையும் சமூகத்தின் மேல் பரிதாபம் தான் எழுகின்றது. பனை மரங்களின் அரசன், சேவை செய்பவர்களையே அது ஏற்றுக்கொள்ளும், அதனை அடக்கி ஆள நினைக்கும் எஞ்சியவர்கள் ஏதும் பெறமல் வெறுங்கையுடன் போவது நிச்சயம். டிராக்டர்களால் நிலம் இறுகி பயனற்றதாய் போய்விட்டது போல பனையும் மலடாக விட்டுவிட கூடாது. பனை மரத்தினை கட்டியணைத்து ஏறும் பனையேறியினை நாமும் தழுவி தட்டிக்கொடுப்போம். ஆய்வுகள் அனைத்தையும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
இதற்கு மேலும் ஆய்வு வேண்டும் என்று சொல்பவர்கள் செய்ய வேண்டிய பணிகள் உண்டு. நமது பாடத்திட்டத்தில் மாநில மரம் எவ்விதம் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வது நலம். பனை மரம் குறித்த பாடல்களை நமது குழந்தைகள் கற்றுக்கொள்ளுகிறார்களா? பனை ஓலை சார்ந்த ஏதேனும் கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறதா? பனையேற்றம் என்கிற ஒரு திறன் மிகு விளையாட்டை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறோமா? எதுவுமே செய்யாமல், அடிப்படையை அடித்து நொறுக்கி, பனையேறுபவன் என்ற சமூகத்தையே துடைத்தெறிந்துவிட்டு புதிய சமூகத்தை கட்டி எழுப்புவது எவ்வகையில் சாத்தியம்? முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இல்லாமலா போய்விட்டது?
கடந்த 300 ஆண்டுகளாக இயந்திரம் உலகை ஆட்கொண்டும் பனை சார்ந்த கருவிகள் ஏதும் மாற்றம் அடையாததற்கான சில முக்கிய காரணங்கள் இருந்திருக்கும். பல்வேறு முயற்சிகள் நவீன காலத்தில் முன்னெடுக்கப்பட்டும் பனை ஏறுபவர்களால் அவை புறம் தள்ளப்பட்டிருக்கின்றன. பாரம்பரிய முறைகளில் உள்ள பிணைப்பு நவீன உபகரணங்களால் கொடுக்க இயலவில்லை என்பதே இதன் பொருள். அல்லது பனை ஏறுபவரை கலந்து செய்யாத கண்டுபிடுப்புகள் இவை. நான் நினைக்கிறேன், எப்படி ஒரு நபர் பாளையினை “கடிப்பு” கொண்டு பதப்படுத்துகிறாரோ, அது போலவே பனை மரத்தினை அணைத்து ஏறுவதும் முக்கியம் என்று. அதுவே, பனை பால் சுரக்க ஏற்ற வினை.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
ஆசாரிபள்ளம், குமரி மாவட்டம்
malargodson@gmail.com
9080250653
You must be logged in to post a comment.