Archive for மார்ச், 2018

உயிர்த்தெழுதல் – முளைவிடும் நம்பிக்கை

மார்ச் 31, 2018

Palmyra Palm

பனை மரங்கள் திரளாய் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நாம், நமது முன்னோர்கள் பனை மரங்கள் எனும் கடவுளின் ஈவையே நம்பி இருந்தனர். அன்றாட உணவும், வாழ்வும், ஆன்மீகமும் பனையோடே தொடர்புடையாதாகவே நமக்கு இருந்தது. நமது வாழ்வில், பனையா பணமா என்ற ஒரு சூழலை நாம் சந்தித்தபோது பணமே வாழ்வு என பனையை கைகழுவினோம். பனையோடு சேர்த்து பனையேறி பாதாளத்துக்கு தள்ளப்பட்டார். இதற்கு நாம் அனைவருமே சாட்சிகள். அப்படியிருக்க பனையும் பனையேறியும் உயிர்த்தெழும் அதிசயத்தை தேவன் செயல்படுத்துகிறார் என்பதையும் கண்டு சாட்சியளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. படைப்பின் மீட்சியில் நாம் இணைந்து பங்காற்றுகிறவர்கள் என்பதை உணர்த்தும் நல்ல ஒரு விடியலின் சாட்சி இதுவே.

இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு விடுதலை பெற்று செல்லுகின்ற சூழலை பஸ்கா விழாவாக கொண்டாடிவருகிறார்கள். ஒரு வயது நிரம்பிய ஆட்டுகுட்டியை அடித்து குடும்பமாக புசித்த நிகழ்வு ஒரு சிறந்த குறியீடாக அவர்கள் வாழ்வில் அமைந்தது. அதாவது ஆடுகளை மேய்பவர்கள்  எகிப்திலே அடிமைகளாக மாறிவிடும் சூழலில், கர்த்தர் மோசேயை அவர்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்துகிறார். மோசே ஆடு மேய்க்கும் அந்த மக்களிடம், கூறிய விஷயங்கள் என்னவாக இருக்கும் என நாம் யூகிக்க அனேக தரவுகள் திருமறையில் காணக்கிடைக்கின்றது. குறிப்பாக முற்பிதாக்கள் வாழ்வில் ஆடு என்பது உணவு, ஆனால் அடிமைத்தனத்தில் நம்மால் அந்த உணவினைக்கூட உண்ண இயலவில்லை. நாம் இந்த உணவினை உண்ண கர்த்தர் நமக்கு அருளியிருக்கிறார். ஆகவே நாம் வளர்க்கும் ஆடுகளை நாம் புசிக்கும் உரிமை நமக்கு உண்டு, அதை தைரியமாக செய்யுங்கள் மற்றவைகளை கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார். இதனை அவர் சில சடங்கு சார்ந்த வழிமுறைகளைக் கொண்டே விளக்கியிருக்கிறார். ஆகவே அவர்கள் விடுதலை பெற ஏற்ற ஒரு சூழல் அங்கே அமைகிறது. இஸ்ரவேலர் அடிமைத்தனத்தை விட்டு புறப்படுகிறார்கள்.

நேரடியாக இறைவனோடு இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு தொடர்பு இல்லாததால், மோசே கடவுளிடம் “கேட்டு” அவர்கள் செய்யவேண்டியவைகளை அறிவுறுத்துகிறார். கடவுளோடு நேரடி தொடர்பில்லாத இந்த மக்கள் கடவுளையோ அல்லது மோசேயையோ அரைகுறை மனதோடுதான் நம்புகிறார்கள் என்பதனையே “அவர்கள் மோசேயை நோக்கி, ″ ″ எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! எங்களை விட்டுவிடும்: நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம் என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்″ ″ என்றனர்”(விடுதலைப்பயணம்  14: 11,12) கடவுளோடு நமக்கு உறவு இல்லாதபோது நாம் கடவுளின் அருட்செயல்களையோ, நம்மை வழிநடத்தும் கடவுளின் அருட்தொண்டர்களையோ புரிந்துகொள்ள இயலாமல் போகின்றது. பனையினை நமக்கு உணவும் வாழ்வுமாக வழங்கிய கடவுள் மீது நம்பிக்கை இழப்பதே ஒரு மரணம் தான். உயித்தெழுதல் மேல் நம்பிக்கை கொள்ள கடவுளோடு நமக்கு உறவு அவசியம் என்பதனை செங்கடலைக் கடக்கும் சூழல் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

உயிர்த்தெழுதல் மேல் நம்பிக்கையற்றவர்கள் அனேகம் உண்டு. திருமறையில் கூட உயிர்த்தெழுதல் மேல் நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் குறித்து நாம் காண்கிறோம். “சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்”. (திருதூதர்பணிகள் 23: 8)  உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,( லூக்கா 20: 27) இன்னும் பல பகுதிகளில் இவர்களை நாம் காணலாம்.  இன்றும் நம்மிடையே வாழுகின்ற சிலர் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள் உண்டு. இவ்வித நபிக்கை உள்ளோர்களுக்கு இயேசு பதில் அளித்திருக்கிறார். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, “ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்” என்று கூறியிருக்கிறார்.அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார். ( லூக்கா 20: 37, 38) ஆகவே உயிர்த்தெழுதல் குறித்த ஒரு புரிதலை இயேசு தாம் வாழும் காலத்திலேயே நமக்கு கொடுத்திருக்கிறார். அவரின் சீடர்களில் பலர் இதனை உணராதிருந்ததும் உண்டு. நாம் அப்படி இருக்கலாகாது.

கொரிந்து பட்டணம் ஒரு துறைமுகப்பகுதி, பணம் கொழிக்கும் இடம். கொரிந்தியரைப் போல் வாழ்வது என்பது பாவ வாழ்வை குறிப்பிடும் சொற்றொடர். பணமே இங்கு அனைத்தையும் முடிவு செய்யும் ஒன்றாயிருக்கிறது. பவுல் தனது ஊழிய பயணத்தில்  புதிய திருச்சபையினை இங்கு நிறுவுகிறார்.  இத்திருச்சபையினருக்கு அவர் தன்னை வெளிப்படுத்தும் முகமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி கூறும் விதமாகவும் இப்பகுதியில் அவர் விளக்குகிறார். இஸ்ரவேலர்களுக்குள் பெண்களின் சாட்சி செல்லாதிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய இத்திருமறைப்பகுதியில், கேபா எனப்பட்ட பேதுருவுக்கு ஆண்டவர் தன்னை முதலில் வெளிப்படுத்தினார் எனவும், கடைசியாக தனக்கும் ஆண்டவர் காட்சியளித்தார் எனவும் கூறுகிறார்.  பவுலின் சாட்சி மிகவும் முக்கியத்துவமானது, ஏனென்றால் அதுவரை இயேசுவுடன் இருந்தவர்கள் மட்டுமே அவரின் உயிர்த்தெழுதலை கண்டிருந்தனர். முதன் முதலாக கிறிஸ்துவுக்கு விரோதமாக நின்றிருந்த ஒருவருக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினார் என்பது உயிர்தெழுதலின் புரிதலை விரிவுபடுத்தும் ஒன்றாக அமைந்தது. அதுவரை நம்பிக்கை சார்ந்து மட்டுமே காணப்பட்ட உயிர்த்தெழுதல், அந்நம்பிக்கைக்கு எதிராக இருந்த ஒருவர் வாழ்வில் கூட நேரடியாக இடைபடமுடியும் என்பதை பவுல் தனக்கு நேர்ந்த அனுபவம் மூலமாக வெளிப்படுத்துகிறார்.

இந்த வரிசையில் தான் நாம் இயேசுவின் உயிர்தெழுதல் நிகழ்வினை அருகில் நின்று காணும் ஒரு வாய்ப்பினைப் பெற்ற மரியாளைக் காண்கிறோம். அந்த நிகழ்வு யோவான் நற்செய்தி நூலில் காணப்படுகிறது. “மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். (யோவான் 20: 18)  இத்துணை அருகில் நின்று ஒருவர் இயேசுவின் உயிர்தெழுதலை அவரின் சீடர்களுக்கும் முந்தி காண்பது எப்படி சாத்தியமானது? மரியாள் ஆண்டவரை மிகவும் நேசித்தாள், அவரின் ஊழியத்தில் உடன் நின்றாள். அவரின் மரணத்தில் உடன் நின்றாள். அவரின் கல்லறைக்கு முதலில் சென்றவளும் அவளே, அவரைக் காணாமல் அந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என்ற உறுதியுடன் அவள் அங்கே நிற்பதைக் நாம் காண முடிகிறது. இந்த உறுதி நமக்கு இன்று தேவையாக இருக்கிறது. உலகம் செல்லும் திசையில் செல்லாமல், இயேசுவை நோக்கியே நகரும் மரியாளைத் தேடி உயிர்த்தெழுந்த இயேசு வருகிறார். ஆகவே தான் மரியாளுக்கு வேறு எவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பாகிய சீடருக்கு நற்செய்தி கூறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

நாம் வாழும் சூழலில் உயிர்த்தெழுதலை வைத்துப் பார்க்கும் கடமை நமக்கு உண்டு. ஆண்டவர் வாழ்வளிப்பவர். நமது வாழ்விற்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். நாம் அழியா வாழ்வு பெற அவர் திருவுளம் கொண்டிருக்கிறார். நமது பகுதிகளில் பனை மரங்களை வாழ்வுதரும் மரமாக அவர் கொடுத்து நம்மை பாதுகாத்தார். பனை ஏறுபவர்களே ஆண்டவரின் தூதுவர்களாக நமக்கு வானத்திலிருந்து இறங்கிய அப்பமாகிய மன்னாவை கொடுத்து வந்தனர். நாம் ஆண்டவர் அருளிய அந்த அருட்கொடையாம் பனை மரங்களையும் அதன் பணியாளர்களையும் கொலைசெய்தவர்களாக மாறிப்போனோம். நமது தெரிவு பல வேளைகளில் அழிந்து போகும் உலக பொருளுக்கானதாகவே இருக்கிறது. கடவுளின் ஆசிகளை உதறி மனிதர் வழங்கும் ஆசிகளுக்கு பின்னே போவதால் நம்மால் உயிர்த்த இயேசுவை தரிசிக்க இயலவில்லை. பல வேளைகளில் நமது நம்பிக்கை தடுமாறுகிறது. அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை நம்மை உயிர்ப்பிக்க வேண்டும். இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் வந்த கடவுளின் செயல் நம்மில் துளிர்விடவேண்டும். செத்த வாழ்வை தொடருவதை விடுத்து நம்பிக்கை அழிக்கும் இறை வாழ்வு நோக்கி நாம் பயணிக்க வேண்டும். புதிய உதயம் மலரும் ஈஸ்டர் நிகழ்வு நமது மண்ணிலிருந்து துளிர்விடட்டும். அதுவே நமது சாட்சியாக இருக்கவேண்டும். சீடர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்த இயேசுவையே முன்னிறுத்தினார்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

தேவிகோடு, குமரி மாவட்டம்

E-mail: malargodson@gmail.com

Mobile: 9080250653

பனை பொறியியல்

மார்ச் 30, 2018

பனை பொறியியல் என்றால் என்ன? பனை சார்ந்த பொருட்களை வடிவமைப்பது என்று ஒற்றை வரியில் பொருள் கொள்ளலாம் அல்லது பாரம்பரியமாக பனைப் பொருட்களைக் கொண்டு மக்கள் செய்யும் பொருட்கள் குறித்த அறிவு மற்றும்  பனை மரத்தினை மக்கள் தங்கள் வாழ்வியலோடு இணைத்து புரிந்து வைத்திருக்கும் நுட்பம் எனவும் அதனை புரிந்துகொள்ளலாம். பொருட்களை வடிவமைப்பது என்பது இன்று ஒரு தனித்த துறையாக மேலெழுந்து வந்திருக்கிறது. அவ்வகையில் பனை சார்ந்தும் பல்வேறு புதிய வடிவமைப்புகள் இன்றும் பாரம்பரிய முறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுவருவதைக் காண்கிறோம். பெரும்பாலான ஏற்றுமதி பொருட்கள் அவ்விதம் வடிவமைக்கப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்றிருந்தாலும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான சந்தை அதிகரித்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் குறைந்துவருவது கண்கூடு. ஆகவே சர்வதேச சந்தை சார்ந்த பொருட்களை வடிவமைப்பதை விடுத்து தற்சார்பு வடிவங்களே இன்றைய தேவையாக இருக்கிறது.

Kanjanoor sambu Engineering

இரண்டாவதாக பாரம்பரிய வடிவமைப்புகள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மேல் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அறிந்தே அவை உற்பத்திசெய்யப்பட்டன. அவைகளின் தரம், விலை, வடிவமைப்பு, நேர்த்தி யாவும் உள்ளூர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுமிருந்தன. சந்தை பொருளாதாரத்தின் காலத்தில் இவைகள் பொருளிழந்து  காணப்பட்டாலும் இவைகள் மீது நான் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். நமது பாரம்பரிய பொருட்கள் அவைகளின் வடிவத்திற்காகவே வாங்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழகமெங்கும் அவ்விதம் நூறு விதமான வடிவங்கள் செய்பவர்களை நாம் கண்டடைய முடியும். விசிறியில் மட்டுமே 6 விதமான வடிவங்கள் எனக்குத் தெரிந்து சாத்தியப்பட்டிருக்கிறது. இன்னும் தேடினால் வேறு பல வடிவங்களும் இருக்கக்கூடும்.

வடலி ஓலைகளை ஒரு பகுதியாக கிழித்து சுற்றிக் கட்டி செய்யும் முறை ஒரு தொன்மையான வடிவம் இதில் ஓலையுடன் மட்டையும் இணைந்தே இருக்கும். ஓலைகளை சிறு அளவில் வட்டமாக வெட்டி மற்றொரு கம்புடன் இணைத்து வடிவமைப்பது மற்றொரு வகை. பாய் போல் பின்னுவதில் இரண்டு முறைமைகள் இருக்கின்றன. அவைகளையும் மற்றொரு கம்பில் இணைத்து விசிற முடியும். முழு ஓலையைஉமே சுற்றி கட்டி ஒருவரால் அழகிய விசிறி செய்ய முடியும். இலங்கையில் சாமரம் போன்று இவைகலை குடப்பனை ஓலையில் செய்வார்கள். ஓலைகளை நறுக்கி ஏடுகள் போலாக்கி ஜப்பானிய மடக்கு விசிறி செய்யலாம். மடக்கு விசிறிகளிலும் தனிதன்மைகள் உண்டு. இத்தனை விசிறிகளும் உருவாகும் பண்பாட்டுச் சூழல், தேவை போன்றவை இன்னும் ஆராயப்படாதது. அதற்குள் மற்றொரு வடிவம் தேவையா என்றொரு கேள்வி எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எனது முகநூல் நண்பரும், என்மீது மிக அதிக அன்பு வைத்திருப்பவருமான, அறிவர். அரிசி சுவாமிதாஸ் அவர்கள் என்னிடம் பனை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்.  புதிய பொறியியல் நுட்பம் வேண்டும் என விரும்புகின்றவர்களை அனுதினமும் கடந்துவருகிறேன். நவீன சமூகத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் வடிவமைப்புகளுக்கான ஒரு ஏக்கம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு சில வேளைகளில் நான் அதன் சிக்கல்களை மேலோட்டமாக சுட்டி, விளக்க முற்பட்டதுண்டு. அது போதாது என நான் உணர்வதால் விரிவாக எனது பணி மற்றும் எனது பார்வையினை நான் முன்வைக்க இந்த பதிவினை எழுதுகிறேன்.  பலருக்கும் பனை ஒரு மாற்று வழிக்கான பாதை என்பது தெரிகிறது ஆனால் அது உழைப்பு கோரும் ஒரு பணி, என்பதும், இன்னும் முறைப்படுத்தப்படவேண்டிய விஷயங்கள் அனேகம் உள்ளன என்பதும் தெரியாது.

பனை மரம் நமது கையை விட்டு செல்வதற்கு முதல் காரணம் எளிமையுடனிருந்தவைகளையே மறுத்து எளிதானவைகளை நோக்கி சென்ற நமது முதிரா மனம், அதனைக் கட்டமைத்து வெற்றி கண்ட நுகர்வு கலாச்சாரம் என்பதே. ஆக நமது கலாச்சாரத்தில் உள்நுழைந்த ஒரு கருத்தியலையும் சேர்த்தே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கிறோம்.  இவைகள் ஒரு முழுமையான புரிதல் தன்மையுடனே செய்யப்படவேண்டும். அப்புரிதலில் ஒரு பண்பாடு குறித்த பார்வை, அந்த பண்பாட்டு மக்கள் வாழ்ந்த மண், அதன் சூழியல், தட்பவெட்பநிலை, பிற இன மக்களோடு இம்மக்கள் கொண்டுள்ள உறவுகள் என எண்ணற்ற காரணிகள் இதனை தாங்கி நிற்கின்றன என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

பனை பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டபின்பு நான் பல்வேறு வடிவங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சில வடிவங்களை நான் மட்டுமே செய்தாலும், பனை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நான் வடிவமைத்த பொருட்களே அதிகம்.  இவைகள் பயன்பாட்டு அளவிலும், பண்பாட்டு அளவிலும் வெகு தேவையாக இருந்தாலும், இவ்வடிவங்களைச் செய்யும் நபர்கள் குறைவாக உள்ளதால் எனது எளிய வடிவங்களையேக் கூட இன்னும் பெருமளவில் தயாரிக்கமுடியவில்லை. மேலும், வடிவமைப்பில் மாறுதல் செய்கையில் அதனைச் செய்வதற்கான நேரம் அதிகமாகிக்கொண்டு செல்லும். அளவு மாறவிடினும், நேரம் எடுத்துக்கொள்ளப்படும் பணி சுமை இருக்கையில், வாடிக்கையாளர்கள் துணிந்து அதிக பணம் செலுத்த முன்வருவதில்லை.

இங்கே தான் நாம் சந்திக்கும் முதல் சிக்கல் வந்துவிடுகிறது, ஓலையில் ஒரு நவீன பொறியியல் வடிவம் “கண்டுபிடிப்பது” மட்டும் அல்ல சவால், அதனைத் தொடர்ந்து அந்த புதிய வடிவமைப்பை தயாரிக்க பயிற்சியளிக்கவேண்டும், அதை கற்றுக்கொள்ள மக்கள் வேண்டும், அவர்களை ஒருங்கிணைக்கவேண்டும், ஒருங்கிணைக்கும் இடத்திலும் தயாரிக்கும் இடங்களிலும் மூலப்பொருள் கிடைக்க வேண்டும். சந்தையை உருவாக்க வேண்டும், பரவலாக வாடிக்கையாளர்களுக்கு “கிடைக்கும்படி” செய்யவேண்டும், விலை குறைவாக இருக்கவேண்டும்… தெளிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு புது வடிவமைப்பை நாம் கண்டுபிடித்துவிட்டால் கூட அது நடைமுறைக்கு வர கால தாமதமாகும் அல்லது புரவலர்களோ தன்னார்வலர்களோ தேவைப்படும், பொருட்செலவின்றி இன்று எதையும் நாம் சந்தைப் படுத்திவிட இயலாது. ஆகவே ஒரு வடிவமைப்பை தயாரிக்கும் முன்பு அதற்கான தேவையை உணர்ந்து வரும் வாடிக்கையாளரே இதில் முதன்மையான வடிவமைப்பாளர் ஆகிறார்.

Kanjanoor Design

சமீபத்தில் நான் சம்பு என்ற ஒரு மழை அணியினை விழுப்புரம் பகுதியில் செய்வார்கள் என அறிந்து அதை தேடி பயணித்தேன். இன்று சம்பு வழக்கொழிந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவலே எனக்கு கிடைத்தது. அதை செய்யும் திறன் உள்ளவர்கள் இருந்தாலும் அதனை செய்யத்தக்க சந்தை வாய்ப்புகள் இல்லாமற் போய்விட்டது. ஆகவே கடந்த 20 ஆண்டுகளாக சம்பு என்ற பொருளினை ஒருவரும் செய்வாரில்லை. சம்பு செய்யத்தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலே எனக்கு மாபெரும் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாயிருந்தது. ஆகவே சம்பு செய்ய நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். விழுப்புறத்திலிருந்து செஞ்சி செல்லும் பாதையில் கஞ்சனூர் என்ற ஒரு ஊர் இருக்கிறது அதன் அருகே சின்னபாண்டி என்ற கிராமம் முழுக்க பனை ஓலைகளால் வேய்ந்த வீடுகள் நிறைந்திருக்கும். சுமார் 150 பனையேறிகள் இன்றும் தொழில் செய்யும் ஒரு உயிர்புள்ள கிராமம். எனது பணிக்களம் விரைவில் இந்த பகுதியில் மையம் கொள்ளும் அளவிற்கு அந்த கிராமத்தின் மேல் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

செம்மை பனைபணி நிகழ்த்திய வீட்டுக்கு வீடு கருப்பட்டி காய்ச்சும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்ற போது, நான் திரு. பாண்டியன் அவர்களை சந்தித்தேன். அவர்களே எனக்கு மேற்கூறிய தகவல்களைக் கூறினார்கள். அவர்களின் உதவி பெற்றே சம்பு செய்ய தலைப்பட்டேன். சம்பு செய்வதற்கு ஈச்சமரத்தின் மட்டைகள் மட்டும் 10 எண்ணங்களுக்கு மேல் வேண்டும். சற்றேறக்குறைய  3 மட்டைகளிலுள்ள ஓலைகளைக் கொண்டு தான் சம்பு செய்கிறார்கள். இதற்கு மேல் பனை நார் தேவைப்படுகிறது. இவைகள் அனைத்தும் பல்வேறு விஷயங்களை சுட்டி நிற்கிறது என்பதனை அறிந்தாலே பனை பொறியியலினை நாம் கண்டடையமுடியும். இதற்கு அந்த மண்ணிலுள்ள ஒரு மனிதர் தன்னை அர்ப்பணித்து முன்வர வேண்டும் அல்லது புதிய நோக்கில் பனைபணி செய்ய வருபவர் அந்த மண்ணை நேசிப்பவராகவும், அர்ப்பணிப்புள்ளவராகவும், தனது நேரத்தை பனை பணிக்கென ஒதுக்குபவராகவும், கற்றுக்கொள்ளும் திறன் பெற்றவராகவும், கற்பிக்கும் திறன் யாவும் ஒருங்கே பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பு செய்ய பொருட்கள் பட்டியலிட்ட பின்னர், இவைகளை எப்படி ஆயத்தம் செய்யவேண்டும் எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பது இப்பொறியியலின் அடிநாதமான காரியம். ஓலைகளை பொதுவாக நனைத்தே பயன்படுத்துவார்கள். சம்பு செய்கையில் ஓலை முடையப்படாததால் இது ஒரு தொன்மையான வடிவம் என நாம் எளிதில் புரிந்துகொள்ள இயலும். மேலும் இப்பகுதிகளில் ஈச்சமரத்தின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்திருப்பதே இப்பொருளின் வடிவமைப்பில் அதன் பங்களிப்பு என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருட தொன்மை சம்புவிற்கு வெகு சாதாரணமாக இருக்கலாம். சம்புவை ஒத்த வேறு பலபொருட்களாலான வடிவமைப்புகளை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாம் காணமுடியும். இது பொறியியலைத் தாண்டி ஒரு சமூகவியலை நமக்கு காட்சிப்படுத்துகிறது.

பாண்டியனோடு பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ஒரு இசைக்கருவியை தயாரிக்க சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அதனை சொல்லுகையில் ஓலையின் உட்புறம் நோக்கி மடிக்கையில் ஓலை ஒடியும் எனவும் வெளிப்புறம் நோக்கி மடிக்கையில் அது வளையும் என்றும் எனக்கு செய்து காண்பித்தார். பனை ஓலைகளுடனான எனது இருபத்து ஐந்து வருடங்களில் இது எனக்கு ஒரு மாபெரும் தகவல். இந்த அடிப்படை தகவல் எந்த ஏட்டிலும் நாம் காண இயலாதது, எவரும் எப்போதும் நமக்கு சொல்லிவிட மாட்டார்கள். நாம் ஒரு சூழலின் அங்கமாகும்போது மட்டுமே இவ்விதமான நுண்ணிய தகவல்கள் நமக்கு கிடைக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான ஓலை, அதன் தன்மை, அதை பயன்படுத்தும் முறை, ஈர்கில் வேண்டுமா வேண்டாமா? பின்னல் எவ்விதம் திரும்பவேண்டும், எங்கே அடி வைக்க வேண்டும், எங்கே “முக்கு “ மடக்கவேண்டும், எங்கே “பொத்தவேண்டும்” என எண்ணற்ற  முறைகள் இங்கு பதிவு செய்யப்படாமலே பயன்பாட்டில் இருந்துவருகிறது. 10க்கும் அதிகமான பின்னுதல், முடைதல் வடிவங்கள் இங்கு உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பொருளைச் செய்ய உதவும் ஒன்றே தவிர, அனைத்திலும் அனைத்தையும் செய்துவிட முடியாது. அனைத்து அடிப்படைகளையும் கற்றால் தான் எங்கே எதை வைத்து நாம் புதிய வடிவமைப்பினை பெற இயலும் என்பது நமக்குத் தெரியும்.

இன்றய நவீன சமூகம் பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு பொருளை மிக எளிமையான ஒன்றாக பார்க்கிறது. அந்த எளிமை என்பது உள்ளூரில் கிடைக்கும் இயற்கை பொருளினாலும், நுற்றாண்டுகள் கடந்து வந்த தொழில் இரகசியங்கள், சூழியலுக்கு உகந்த வகையில் அடுக்கடுக்காய் ஏற்பட்ட மாற்றங்கள், வட்டார தனித்தன்மைகள், பயன்பாட்டிற்கான நோக்கங்கள், பொருளியல் பார்வைகள் என பல்வேறு காரணிகளால் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஒரு ஓலை 10ரூ தானே, 100 ரூபாய்க்கு வாங்கும் பொருள் தானே எளிமையாக மற்றியமைத்துவிடலாம் என்பது ஒரு கற்பனை மாயை.

பொறியியல் வடிவமைப்புகளில் மாறுதல்கள் எப்படி நிகழ்கின்றன? வடிவமைப்பிற்கென ஒரு நெடிய வரலாறு  இருக்கின்றது, அந்த வரலாறு அறியாதவர்கூட பொறியியல் வடிவங்களை உள்வாங்கியிருக்கவேண்டும், புதிய பொருளுக்கான ஒரு “தேவை” எனப்படும் – வாடிக்கையாளர் அல்லது ஒரு அவசியம் ஏற்படவேண்டும். அதற்கான பொருளியல் பின்னணியம் இருக்கவேண்டும் முக்கியமாக சூழியலை எவ்வகையிலும் மாசுபடுத்தாத ஒரு வழிமுறை பின்பற்றப்படவேண்டும்.

காகிதம் – ஓலை என இரண்டு பொருட்களை நாம் சீர்தூக்கிப் பார்க்கலாம். ஓலையினை விட காகிதம், பல்வேறு வகைகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது, என்றாலும் புறக்கணிக்கப்பட்ட ஓலையானது காகிதத்தைவிட வாழ்நாள் கூடியதாகவும், சூழலை மாசுபடுத்தாததாகவும், மக்களின் அறிவு சார் வளர்ச்சியினை சுட்டிக்காட்டியபடி இன்றும் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.

நாம் ஓலைகளை புறக்கணிக்கும் ஒரு கலாச்சார காலத்தில் வாழ்ந்துவருகிறோம். எப்படியும் நம்மால் இன்றைய நவீன யுகத்திற்கான பொருட்களை ஓலையில் செய்து அதனை சந்தையில் விற்பனை செய்வது இயலாது. பிளாஸ்டிக் முதற்கொண்டு போட்டியாளர்கள் அனேகம் உண்டு. அப்படியானால் புதிய வடிவங்கள் தேவையில்லையா? அதற்கான முயற்சிகள் என்ன?

KanjanOOr sambu

குமரி மாவட்டத்தில் மழை நேரம் வயல் பணிகளைச் செய்ய “தலைக்குடை” என்ற வடிவத்தை பயன்படுத்தினார்கள். அழிந்துபோன இந்த வடிவம், தலையிலேயே அமைந்திருக்கும். கைகளால் பிடித்துக்கொள்ளவேண்டாம். மேலும் குடப்பனை ஓலையால் செய்யப்பட்டவைகளை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நாம் பயன்படுத்தும்  ஓலைகளை ஏன் இதற்கென பயன்படுத்தவில்லை என்பதற்கும் வடிவமைக்கும் மூலப்பொருளுக்கும் தொடர்பு இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். குடப்பனை என்பது நாம் குறிப்பிடும் பனையினை விட மூன்று மடங்கு பெரியது. ஆகவே இந்த வடிவமைப்பிற்கு   பனையோலை தேவைப்படவில்லை. மேலும் ஓலைச்சுவடிகள் மற்றும் திடமான பல பொருட்கள் செய்ய பனை ஓலைகளுக்கான ஒரு  தேவை இருந்துகொண்டே இருந்ததையும் நாம் உணருகிறோம். மேலும் பனை ஓலையில் செய்யப்பட்ட குடைகள் உயர் சாதியினருக்கான அடையாளமாக முற்காலத்தில் இருந்திருக்கலாம். ஆகவே அந்த வடிவம் இன்று நமது கைகளில் வந்து சேரவில்லை அல்லது, அந்த வடிவமைப்பாளரை இன்று நம்மால் தொட்டுணர முடியவில்லை.

ஒரு 5 நாட்கள் ஒதுக்கினால் நம்மால் ஒரு பனியோலைக் குடையினை மீட்டுருவாக்க இயலும். ஆனால் இவ்விதம் சிறு சிறு முயற்சிகள் செய்வதை  ஊக்குவிப்பவர்கள் இருந்தாலே அது சாத்தியம். 5 நாட்கள் ஒருவர் பணி செய்வதற்கு குமரி மாவட்டத்தின் கூலியுடன் மேலதிக பணத்தையே அவர்கள் வாங்குவார்கள். 50 ரூபாய் குடைக்கே பேரம் பேசும் உலகில் 5000 ரூபாய் கொடுத்து ஓலைக்குடை செய்யச் சொல்லும் பண்பாட்டு முக்கியத்துவம் அறிந்தவர்கள் குறைவே. ஆகவே, எனக்கு கிடைத்த நேரத்தில் மறைந்து போகும் இவ்வடிவங்களை, அதன் முக்கியத்துவத்தை, அவைகள் தயாரிக்கப்படும் இடங்களை, அதன் சமூக பங்களிப்பை, வரலாற்று முக்கியத்துவத்தை, தயாரிக்கும் கிராம மனிதர்களை நான் பதிவு செய்கிறேன். முடிந்தவைகளை மீட்டெடுக்கிறேன்.இதுவும், என்னால் முடிந்தவரை தான். இந்த மீட்டெடுக்கும் பணிக்கென எனக்கு எவரும் ஊதியம் தரவில்லை, எனது சொந்த விருப்பினால் மட்டுமே நான் செய்வது. இதை வணிகமாக்கும் நோக்கும் எனக்கு கிடையாது.

என்னைப்பொறுத்த வரையில், இந்த பனை சார்ந்த வாழ்கைமுறையினை நாம் முதலில் பட்டியலிடவேண்டும், எங்கு, எப்போது, யாரால், எதற்காக, எப்படி செய்தார்கள் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இப்பட்டியல் அமையவேண்டும். நூற்றுக்கணக்கானோருக்கு, இப்பட்டியலில் உள்ள பொருட்களை, கல்லூரி, பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பயிற்றுவிக்கவேண்டும். இவர்களில் இருந்தே அடுத்த தலைமுறைக்கான பனை பொறியியலாளர்கள் எழும்ப வேண்டும். கால தாமதம் ஆனாலும், இதன் மூலம் நாம் பாரம்பரிய வடிவமைப்புகளை பல்வேறு பகுதிகளுக்கென விரிவுபடுத்துகிறோம், இவ்விரிவுபடுத்தும் முறைமைகள் அப்பகுதிகளில் உள்ள பாரம்பரிய முறைமைகளுடன் முயங்கி புதிய மாற்றங்களைக் கொண்டு வரும்.

மேற்கூறிய சூழலில், நான் ஒருமுறை ஒரு பொறியியல் கல்லூரியின் முதல்வரைக் கண்டு பனையேறும் கருவிகள் இன்றைய தேவையாக இருக்கிறது, உங்கள்  கல்லூரியில் ஏன் ஒரு கருவி செய்து முயற்சிக்கக் கூடாது எனக் கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு நிறைவளிப்பதாக இருந்தது ” இங்கே இருக்கிறவர்களுக்கு பனையேறவே தெரியாது…. எப்படியோ இந்த வேலையில் நுழைந்திருக்கிறார்கள்” .

அருட்பணி. காட்சன் சாமுவேல்

தேவிகோடு, குமரி மாவட்டம்

e-mail: malargodson@gmail.com

Mobile: 9080250653

பனங்கொட்டை ஞாயிறு/ பனம்பழ பவனி

மார்ச் 18, 2018

பனங்கொட்டை ஞாயிறு/ பனம்பழ பவனி

Mithran

குருத்தோலை பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாயிருக்கும் திருச்சபையினர்களுக்கும் போதகர்களுக்கும்…

நமது திருச்சபை வரலாற்றில் குருத்தோலைப் பண்டிகை மிகவும் முக்கியமானது. இயேசு எருசலேம் நுழையும் போது  மக்கள் அவருக்கு குருத்தோலைகளை காண்பித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு இது. இதனை பிரதியெடுத்து பெரும்பாலும் திருச்சபையினர் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு ஊருக்குள் வலம் வரும் ஒரு நிகழ்ச்சி தமிழகத்தில் பெருமளவில் நடந்துகொண்டிருக்கிறது. நமது சடங்குகளில் ஒன்றாக மாறிவிட்ட இக்கொண்டாட்டத்தை மறுசீரமைப்பு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். நாம் ஆலயத்தை விட்டு வெளியே வருவது அபூர்வமே. அவ்விதமான ஒரு அபூர்வ நிகழ்வினை நாம்  ஆக்கபூர்வமாக / பொருள் செறிந்ததாக அமைப்பது நமது கரத்தில் தான் இருக்கிறது.

இம்முறை குருத்தோலை பண்டிகை அன்று கீழ்கண்டவற்றை செய்ய முற்படுங்கள்.

  1. குருத்தோலைகளுக்குப் பதில் பனம்பழங்களை உங்கள் பவனியில் எடுத்துச் செல்லுங்கள்.

 

திருமறைக்கு புறம்பாக பேசுகிறேன் என்று எண்ணாதிருங்கள். இயேசு தனது பயணத்தினை பெத்தானி என்ற பகுதியிலிருந்து துவக்குகிறார். பெத்தானி என்றால் “பேரீச்சைகளின் வீடு” என பொருள். அதாவது, பேரீச்சையினை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழும் பகுதி. தங்கள் வாழ்விடத்திலிருந்து புறப்பட்ட இயேசுவுக்கு பேரீச்சையினை அவர்கள் கொடுத்து உபசரித்ததாக திருமறையில் நாம் பார்க்க இயலவில்லை, அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? ரோம அரசு அவர்கள் மேல் திணித்த வரியினால் அம்மக்களிடம் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. இயேசுவைக் காண்கையில் அவர்களின் நம்பிக்கை குருத்தோலைப் போல் துளிர்க்கிறது. ஆகவே தங்களிடம் எஞ்சியிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அவர்கள் குருத்தோலைகளைப் பிடித்துச் சென்றனர்.

அப்படியானால் இன்று நாம் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விக்கு முன், நாம் என்ன செய்ய தவறியிருக்கிறோம் என்பதை புரிந்து உணர்ந்து கொண்டோமானால் திருச்சபை தன்னை இந்த 2000 ஆண்டுகளில் சுயபரிசோதனை செய்த அற்புத கணமாக இத்தருணம் மாறும். இது நாள் வரை நாம் குருத்தோலைகளைப் பிடித்தபடி பவனி செல்வதே நம்மியல்பாய் இருந்தது. ஆனால் குருத்தோலைகளை வழங்கும் பனை மரங்களை நாம் அறிந்துகொள்ளவில்லை. “நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.” (சங்கீதம் 92:12) என்ற வசனம் நமக்கு பொருள் அளிக்காதபடி போய்விட்ட காலத்தில் வாழ்கிறோம். பனை மரங்கள் அழிக்கப்படும் இன்றையச் சூழலில் “நீதிமான் மடிந்து போகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை” (ஏசாயா 57: 1) என்ற வசனமே பொருத்தமாய் இருக்கிறது.

நாம் வாழும் சூழலில் நீதிமானுக்கு ஒப்புமையான ஒரு மரமும் நீதிமான்களும் அழித்தொழிப்புக்குள்ளக்கப்படும் சூழலில், ஓலைகளை பிடித்து நாம் கொண்டாட என்ன நியாயம் இருக்கிறது? நமது கடமை நீதிமான் பனையைப்போல் செழித்து வளர வேண்டுமென்பது அல்லவா?

நமது முன்னோர்கள் பனை சார்ந்த வாழ்வை வாழ்ந்தனர். இயற்கையோடு ஒன்றிணைந்திருந்தனர். நாம் இயற்கையை விட்டு விலகி வந்துவிட்ட பின்பு, இவ்வோலைகளை உயர்த்திப்பிடிக்க என்ன அருகதை இருக்கிறது? நாம் நட்டோமா? அப்பல்லோ நீர்பாய்ச்சினாரா? வாய்க்கச்செய்யும் இறைவனுக்கே இடமளிக்காமல் மரங்கள் துண்டுபட்டுக்கிடக்கையில், கண்ணீரின் மன்றாட்டும் பனை விதைப்பின் பண்டிகையும் அல்லவா இந்நாளினை அர்த்தமுள்ளதாக இயலும்?

Jesus Palmyra

ஏழைகளோடு ஏழையாய் வாழ்ந்த இயேசு ஏழ்மையில் உழலும் பனையேறிகளுக்காக எருசலேம் சென்று, அன்றைய வணிக வல்லமைகளை புரட்டிப்போட்டும்,  அவரின் பணியின் தீவிரம் சற்றும் நம்மில் ஒட்டிக்கொள்ளவில்லை.  திருச்சபை இன்றும் தன் வாசலில் உள்ள லாசருவை புறக்கணிக்கும் ஐசுவரியவான் மனநிலையிலேயே இருக்கிறது. ஏழைப் பனையேறிகளின் வாழ்வில் வணிகமயமாக்கப்பட்ட உலகு தொடர்ந்து வஞ்சிப்பதை வேடிக்கைப் பார்பது தான் நமது ஆன்மீகமா? அவர்களுக்கென எஞ்சியிருக்கும் ஒரே ஆதாராமான பனை மரங்களை  மட்டுமாவது விட்டுவைக்கக்   கோரும் மனநிலைக் கூட  நமக்கு இல்லையா? குருத்து ஓலைகளைப் பிடித்துச் செல்லும் நமது தார்மீக கடமையல்லவா இது?

ஆகவேதான் பனம் பழங்களோடு இனி வரும் குருத்தோலை பண்டிகைகளைக் கொண்டாடுங்கள். அழிந்து வரும் பனைமரங்களையும் அதை நம்பி வாழும் பனையேறிகளுக்காகவும் திருச்சபை இந்த ஒரு எளிய காரியத்தையாவது வருடத்திற்கு ஒருமுறை செய்யட்டும். பனையேறிகளை நேசிக்கும் ஆண்டவர், உங்கள் நற்செயல்களைக் கண்டு, பனை மரங்களுக்கு மேலிருந்து மகிழ்வார் உங்களை வாழ்த்துவார்.  (நாங்கள் பனை ஓலைகளையே பயன்படுத்துவதில்லை தென்னை ஓலைகள் தான் பயன்படுத்துகிறோம், எங்களுக்கும் பனைக்கும் தொடர்பில்லை என கையை விரிக்காதீர்கள். கை குவித்து ஒரு தென்னம்பிள்ளையாவது நட்டுவிடுங்கள். பண்பு மாற்றப்பட்ட / மரபணு மாற்றப்பட்ட தென்னை அல்ல, பாரம்பரிய நாட்டு ரகத்தினைத் தேடி நடுங்கள்.)

 

  1. பனைத்தொழிலாளியினை கவுரவப்படுத்துங்கள்

ஆம், எல்லம் சரிதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடுவதற்கும் பனைத்தொழிலாளிக்கும் என்ன தொடர்பு. அவரை ஏன் கவுரவப்படுத்தவேண்டும்? என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடலாம். இன்றளவும் நமது குருத்தோலைக் கொண்டாட்டத்திற்கு பனை மரம் ஏறி நமக்கு ஓலைகளைக் கொடுத்தவர்கள் அவர்கள் தான். அவர்களுக்காக நமது திருச்சபையில் பிரார்த்தனைகள் ஒலிப்பதே கிடையாது. இந்த விடுபடல் எப்படி, ஏன் திருச்சபையில் நிகழ்ந்தது என என்றாவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா? எங்கோ இருக்கும் கிராமங்கள் நோக்கி மிஷனெறிகளை அனுப்பிக்கொண்டிருக்கும் நமக்கு, நமது வாழ்விடத்தின் அருகில் இருக்கும் பனைத் தொழிலாளியின் ஆன்மா மீதும் வாழ்வு மீதும் அக்கரையில்லாமல் போனது ஏன்?

ஏனென்றால் ஒரு காலத்தில் நாம் தான் பனை சார்ந்த வாழ்வு வாழ்ந்தவர்கள். இன்று அந்த வாழ்வு ஒரு அவமான சின்னமாக கருதப்படுகிறது. நமது மனமேட்டிமை,  பனையேறிகளைப் பார்க்கையில் சுக்குநூறாகிப்போகிறது. பனையேறியிடம் காணப்படும், காலம் தவறாமை, நேர்மை, கடமை உணர்ச்சி,  உழைப்பு, அற்பணிப்பு, ஆன்மீகம், ஈகை, அனைத்து உயிர்களிடமும் விரியும் பாசம், போன்ற எண்ணற்ற நற்பண்புகள் நம்மைவிட்டு அகன்றுவிட்டன. “அவன்   கோயிலுக்கு வாறதில்லை சார்” என்பதே நமது குற்றச்சாட்டாக இருக்கிறது. 1008 ஜீவனுக்கு படியளக்கும் அவன், அற்பர்களான நாம் கூடி இருக்கும் இடத்திற்கு வராததற்கு காரணம் அவனது பெருந்தன்மை. சிறியோர்களின் பிழை பொருத்தருளும் அவனின் அக்குணைத்தை நாம் ஒருபோதும் உணர்ந்ததில்லை.  அவன் மட்டும் நமது ஆலயத்திற்குள் வந்திருப்பான் என்று சொன்னால், தனது உக்கிரமான கோபத்தால் சாட்டைக்குப் பதிலாக பாளையருவாளை எடுத்து தேவையற்றதை சீவித்தள்ளியிருப்பான்.

ஒரு காலத்தில் தென் மாவட்ட திருச்சபை பீடங்களண்டையில்  வைக்கப்பட்டிருக்கும் காணிக்கையில் கண்டிப்பாக பனையேறியின் குருதியும், அவன் மனைவியின் வியர்வையும், அவன் பிள்ளைகளின் கண்ணீரும் பசியும்  கலந்த கருப்பட்டியே நிறைந்திருக்கும். காலம் அவர்களின் பெருங்கொடையினை நம் கண்களுக்கு மறைத்துவிட்டது. தன்னை விற்று திருச்சபையினை வளர்த்தகாலம் போய் திருச்சபையினை விற்று தன்னைக் காப்பாற்றும் கயவர்கள் கைகளில் இன்று திருச்சபை முடங்கிக்கிடக்கிறது.

இச்சூழலிலேயே, இயேசுவின் சாயலை அணிந்த, தலை சாய்க்கவும் இடமில்லாத, புழுதியிலும் முட்களிலும், பனை சிராய்ப்புகளைத் தன் கால்களில் ஏற்ற பனியேறியின் வருகை நமது திருச்சபைக்கு தேவையாக இருக்கிறது. நமது வரும் தலைமுறைகளுக்கு அவர்களை மிகச்சரியாக அடையாளம் காட்டினால் மட்டுமே, நம்மில் நற்குணங்கள் பெருகும்,  நம் சந்ததியினர் நீதியின் வழி நடப்பர்.  இல்லையேல் திருச்சபை ஆண்டவரின் பணியினை செய்யத் தவறியதாகவே கொள்ளப்படும்.

ஆகவே, உள்ளூரில் இருக்கும் வயோதிப பனையேறிகளை குருத்தோலை ஞாயிறு அன்று அழைத்து வாருங்கள். அவர்களின் ஆன்மீகம் எத்தகையது என சாட்சி கூற கேளுங்கள், மனத்தாழ்மையோடு அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சீர்களைச் செய்யுங்கள். (குறைந்த பட்சம் ஒரு வேட்டி துண்டு கொடுத்து சிறப்பு செய்யுங்கள்) அவர்கள் இன்றி இவ்விழா முழுமையடையாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள், அறிக்கையிடுங்கள்.

 

  1. ஆலயத்தில் வைத்து பனை சார்ந்த உணவை உண்ணுங்கள்

இதுவரை சொன்னது எல்லாம் சரி, ஏற்றுக்கொள்ளுகிறோம், ஆனால் குருத்தோலை பண்டிகை அன்று பனை மர உணவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது விசித்திரமாகவும், வேடிக்கையாகவும், நடைமுறைக்குச் சாத்தியப்படாததாகவும் இருக்கிறதே என்று ஒரு வினா எழும்பலாம். ஆண்டவரால் ஆற்றல் பெற்ற திருச்சபைக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையோடு இவைகளைச் செய்யவேண்டும். நமது உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல் தான் பனைத்தொழிலை அழித்தது. அரிசி என்பது (கார்த்திகை கொளுக்கட்டை) பண்டிகைக்கு என இருந்த நிலை மாறி சோறாக நமது தட்டில் நிரம்பி வழிய ஆசைப்பட்டோம். இன்று அந்த சோறு தான் வெள்ளை பிசாசின் கூட்டாளியாக நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. நாம் பனம் பழம், தவண், பதனீர், பனக்கிழங்கு, நுங்கு, கருப்பட்டி என விதம் விதமாக தின்றவர்கள். ஒவ்வொன்றிலும் நமது உடலுக்கு உரமூட்டும் ஒவ்வொருவிதமான வேதிப்பொருள்  கொண்ட உயிர்ச்சத்துக்கள் நிரம்பிருந்தன. அவைகளை நாம் நிர்தாட்சண்யமாக கைவிட்டோம், அவைகளைப் பெற்றுத்தரும் பனையேறிக்கு உரிய ஊதியம் வழங்கத் தவறினோம். தன்மானமிக்க அவன் உங்களை இன்றுவரை ஏன் என்றுகூட கேட்காமல் தான் உண்டு தன் பனை மரம் உண்டு என கடைமை தவறாது இருக்கிறான்.

ஒரு பனையேறியின் வாழ்வாதாரம் அவனது உழைப்பின் மேன்மையை உணர்ந்து நாம் கொடுக்கும் சமூக ஏற்பால் மட்டுமே தான் இருக்கமுடியும். அவன் நம்மிடம் கையேந்த மாட்டான், அதற்கான அவசியமும் அவனுக்கு இல்லை ஆனால், பணிவுடன் நாம் தான் அவனுக்கு பணிவிடை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். அவன் தரும் உணவு அனைத்தும் வானத்திலிருந்து இறங்கி வந்த மன்னாவிற்கு ஒப்பானது. பசியோடிருந்தவர்களின் பசியை நீக்கியது அந்த உணவு. இவைகளை நினைவில் கொண்டு பதனீரோ, சுக்கு காப்பியோ, பனங்கிழங்கோ, ஏதோ ஒன்றை இன்னாளில் பனையேறியிடமிருந்து  திருச்சபையாக பெற்று பகிர்ந்து கொள்ளுவோம். இவ்வுணவுகள் நம்மை விட்டுப் போனால் இம்மரங்களும் இம்மாந்தர்களும் இருக்கமாட்டார்கள். இறைப்படைப்பின் அங்கம் ஒன்று மறைகையில், என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்ற காயீனின் கூற்றை அப்போது முணுமுணுத்துக்கொண்டிருப்போம் நாம் .

ஒரு சிலர் இது என்ன புதுவிளக்கம் எனவும், வேறு சிலர் காழ்ப்புடனும்  இதுகாறும் இப்பதிவினை கடந்து வந்திருக்கலாம். உங்களுக்காக ஒரு திருவசனம் காத்திருக்கிறது.

“இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.” (வெளி 7: 9)

குருத்தோலைகளைப் பிடிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும், அது ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் நமது உடைகள் கழுவப்பட்டிருக்க வேண்டும் என்பதே. சலவை செய்து, இஸ்திரி போட்டு, மடிப்பு கலையாமல்  ஆலயத்திற்கு வரும் நமக்கு கோவணத்துடன் அவமான சின்னமாக ஒரு பனையேறி தெரிவானென்றால், அவன் கிறிஸ்துவின் சாயலில் இருக்கிறான் என்று பொருள். நாம் அச்சாயலை இழந்துவிட்டிருக்கிறோம் என்பது அதன் மறுபக்க உண்மை.

அருட்பணி காட்சன் சாமுவேல்

தேவிகோடு, குமரிமாவட்டம்

e-mail: malargodson@gmail.com

Mobile: 9080250653


%d bloggers like this: