
கிழங்குக்காக ஊன்றப்பட்டிருக்கும் பனை விதைகள்
சில விஷயங்களை பதிவு செய்வது என்பது தற்கொலைக்கு சமம். “எப்படி புரிந்துகொள்ள வேண்டும்” என்ற உறுதியுடன் வாசிப்பவர்கள் கைகளில் போய் சேர்ந்துவிட்டால் நமது முயற்சிகள் யாவும் வீணாகிவிடும். என்றாலும் எனது அறிதலில் வந்தவைகளை உடனுக்குடன் பதிவிடுவது வழக்கமானபடியால் இதை சொல்லிவிடுகிறேன்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பனை விதைகள் வேண்டி பியுஷ் மனுஷ் என்னை தொடர்பு கொண்டார். அப்பொழுது லாரிகளில் டன் கணக்கில் பனை விதைகள் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக எடுத்துச் செல்லப்படுவதை குறிப்பிட்டார். இப்படி ஒரு காரியத்தை நான் கேள்விப்படுவது இதுவே முதன் முறை. இவைகளை என் மனதில் இருத்திக்கொண்டேன்.
பனங்கொட்டைகளை விதைக்கையில் அவைகளுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அதன் எடையை உணர்ந்தே குறிப்பிடுவார்கள். உயிர் தன்மை இல்லாத பனை விதைகளை “காஞ்ச பனங்கொட்டை”, ஊமாங்கொட்டை அல்லது ஊமகொட்டை என்ற பெயர்களில் அழைப்பார்கள். இது ஒரு சிறந்த எரிபொருள். இரண்டு வகைகளில் இவைகளை சேகரிப்பார்கள், ஒன்று காய்ந்து போன பனை விதைகள் உயிரற்றுப்போனால் அவைகளை எரிப்பதற்கு பயன்படுத்துவார்கள், மற்றொரு முறை என்னவென்றால், பனங்கிழங்குகளை அறுவடை செய்தபின்பு எஞ்சியிருக்கின்ற கொட்டைகளை எடுத்து எரிப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஒரு கிராமம் இவ்வகையில் செயல்படும்போது அது தனக்கான எரிபொருளினை மரங்களை வெட்டாமல் எடுத்துக்கொள்ளுகிறது என புரிந்து கொள்ள இயலும். இது மிகச் சரியான ஒரு சமூக – இயற்கை அமைப்பு. கிராமத்தினர் தங்கள் தேவைக்கென பழங்களையோ கிழங்குகளையோ அல்லது விறகுகளையோ தெரிந்துகொள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
இன்று காலை பனை விதைகளை சேகரிக்கும்படியாய் சென்ற எனது நண்பன் லாரிகளில் பனை விதைகளை ஏற்றிச் செல்லும் காரியங்களைக் குரித்து என்னிடம் விரிவாக பேசினார். சேலம் பகுதிகளில் விதைக்காக பனம்பழங்களை சேகரிக்க தடை இருப்பதாகவும், அதனை சேகரிக்க பனை சார்ந்த மக்களே ஈடுபடுத்தப்படுவதும், அவர்களுக்கு அதற்கென சிறிய தொகைகளே கொடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். ஆனால் நாம் விதைகளை வாங்கவேண்டும் என்று சொன்னால் ஒரு விதைக்கு ரூபாய் 2 – 5 வரை ஆகும் என்றும் கூறினார். இந்த விதைகள் யாவும் செங்கல் சூளைகளில் எரிக்க எடுத்துச் செல்லப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வித செய்திகள் உறுதிப்படுந் தோறும், நாம் இவற்றிற்கெதிராய் தீவிரமாக இயங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். இது பனை மீதான மற்றோரு அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. பனை மரங்களை அழித்தொழிக்கும் ஈனச் செயல் இது.

ஊமைகொட்டைகள்
ஒவ்வொன்றாக பனை விதைகளை சேகரிக்கும் ஆர்வலர்கள் தமிழகமெங்கும் உருவாகிவரும் காலம் இது. பனை விதை சேகரிப்பின்போது இதனால் பல தடைகள் இவர்களுக்கு வரலாம். இலவசமாக சேகரித்து கொடுக்கும் காலம் போய் இன்று விதைக்கு ரூ1/- என்ற கணக்கில் வந்து நிற்கிறது. அது தவிர்த்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் செலவும் அதிகம். இவ்விதம் பனை விதைப்பின் செலவுகளை நாம் அதிகரித்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.
பனை விதைகள் சேகரிப்பின் நோக்கம் என்பது இருமுனை கொண்டது. ஒன்று உணவு தேவைக்காக மற்றொன்று விதை பரப்புதல். குறிப்பாக பனம் பழங்கள் இன்று விற்பனைக்கான பொருளாக இல்லை. இவைகள் விற்பனைக்கு வரவேண்டு. அவைகளை உண்டு வீசியெறியும் விதைகள் முளைத்து விதை பரம்பல் நிகழ வேண்டும். அல்லது சேகரிக்கப்பட்ட விதைகள் சீராக பாவப்பட்டு கிழங்குகளாக மாறி உணவளிக்கவேண்டு. அவ்விதம் பாவிவிடப்பட்டிருக்கும் இடங்களில் தப்பிவளரும் பனைகளும் நாம் பெறும் ஆசிகளே. இவைகளுக்கு மேல் எஞ்சி இருப்பவைகள் தான் பனை நடுகைக்கானவைகள். அவைகளை நாம் பொறுப்புணர்வுடன் கையாளவேண்டும். இவ்விதம் நேரடியாக செங்கல் சூளைக்குள் நுழைத்துவிடுவது சரியாயிராது. அது நமது எதிர்காலத்தையே இல்லாமல் ஆக்கிவிடும்.
இவைகளை எதிர்கொள்ள ஒரே வழி தான் நமக்கு உள்ளது பனம் பழங்களை உண்ணும்படி தமிழ் சமூகத்தை பயிற்றுவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பனம்பழங்கள் கிடைக்கின்ற நாட்களில் வாரத்திற்கு இரு முறையாவது பனம்பழங்களை உண்டு தங்கள் உடல் நலனை பேணிக்கொள்வது நல்லது. பனம் பழத்தில் இருக்கும் தங்க நிறம் நமது உடலில் ஒளிவீசும்படியாய் அதனை உட்கொள்வது நல்லது. பல்வேறு கனிமங்கள் நிறைந்த பனம் பழம் புற்று நோய் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றிருக்கிறது. சற்றும் புளிப்பு சுவையே இல்லாத பழம் இது. இவைகள் கடைகளில் விற்பனைக்கு வருமென்றால். கிலோ 10 ரூபாய்க்கு நல்ல பழங்கள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிராமத்தினருக்கு கிடைக்கும்.
ஒருபுறம் பனையை கரும்பு உற்பத்தியைக்கொண்டு அழிக்கிறார்கள், மற்றொருபுறம் வளர்ச்சி என்ற பெயரில் சாலைகள் மற்றும் கட்டுமானக்களுக்காக ஆழிக்கிறார்கள், பன்னாட்டு உணவு ஊடுருவலால் பனைமரங்கள் வழங்கு சுவையினை இழந்துவருகிறோம். உள்ளூரில் நுங்கு சிறந்தது எனச் சொல்லி அடுத்த தலைமுறை பனை தளிர்க்க முடியாமல் மாற்றிவிட்டோம். ஒருங்கிணைந்து போராடுவதற்கே இப்போது நாம் சேகரிக்கும் விதைகள் ஆயுதமாகவேண்டும்.
சேலம் அருகில் இருக்கிறவர்கள், பனங்கொட்டை விற்பனை செய்கிறவர்களை கண்காணியுங்கள். நமது பனை மரங்கள் அழிவதற்கு முக்கிய காரணமே செங்கல் சூளைகள் தான். இன்று அதன் தலைமுறைகளையும் அழிக்க அவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கமாட்டோம் என்பதை உரக்கச் சொல்லுங்கள். வீழ்ந்த விதைகள் அனைத்து முளைப்பதற்கே, சிசு கொலை செய்யும் இக்கயவர்களை நாம் நம் சமூகத்திற்கு அடையாளம் காட்டுவோம்.
பணியாளர் காட்சன் சாமுவேல்
தேவிகோடு
தொடர்பு கொள்ள: 9080250653
மின்னஞ்சல்: malargodson@gmail.com
You must be logged in to post a comment.