பனையிலிருந்து இறங்கிய சமூகம்


பனையிலிருந்து இறங்கிய சமூகம்

DSC05983
“தலைக்கு 50 பனை ஏறிய பிறகும் அன்று ஏன் சமூகம் உண்ண உணவும் உடுக்க உடையும் படிக்க வசதியும் இல்லாமல் இருந்தது? ஏன் நமது முன்னோர்கள் பனையை விட்டு வெளியேறினர்”.
இவ்விரண்டு கேள்விகளையும் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தவுடனே பனை சார்ந்த முன்னெடுப்புகள் வீண் என்பதை கேள்வியெழுப்பும் நோக்குடன் பதிவுசெய்யப்பட்டது என உணரலாம். தனித்துவமாக “ஏன் நமது முன்னோர்கள் பனையை விட்டு வெளியேறினர்” என்ற கேள்விக்கு பதில் தேடுவது ஒன்று… இல்லாமல் மேற்படி “தலைக்கு 50 பனை ஏறிய பிறகும் அன்று ஏன் சமூகம் உண்ண உணவும் உடுக்க உடையும் படிக்க வசதியும் இல்லாமல் இருந்தது?” இக் கேள்வியையும் இணைத்துக்கொண்டால், கேள்வியின் பொருள் வேறாகிறது. முன்முடிவுகளுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உய்த்துணரும் பதில்கள் போதுமானவை அல்ல. என்றாலும் கேள்விகள் பதில் நோக்கி நிற்பவை. அவைகளுக்கு சொல்லப்படும் பதில்கள் வேட்கையுடன் இருப்போரை சென்றடையும்.
50 பனை ஏறியவர்களுக்கு உண்ண உணவில்லையா? கூடவே ஏன் என்ற கேள்வியும் எழும்பியிருக்க வேண்டும்
ஒரு பனைக்கு சராசரி 3 லிட்டர் பதனீர் கிடைக்குமென்றால் கூட (சில பனைகளில் 18 லிட்டருக்கும் மேல் ஒரு பனையேறி பெற்றிருந்த தகவல்கள் தாராளம் கிடைக்கின்றன) ஒரு நாளைக்கு 150 லிட்டர் பதனீர் அவருக்கு கிடைக்கும். இதனையே முறைப் பதனீர் என்று பிறிதொருவருக்காய் ஒரு பனையேறி ஏறுவாரென்றால் அவருக்கு இரு நாட்களுக்கு ஒரு முறை வரும் பதனீர் கிடைக்கும் ஆகையால் 75 லிட்டர் பதனீர் கிடைக்கும் என வைத்துக்கொள்ளலாம். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் 9 மாதங்களும், பாண்டிக்கு 3 மாதங்களும் போய் தொழில் தடைபடாமல் நடப்பது வழக்கம். பதனீர் ஊறும் பருவம் 15 நாட்கள் மற்றும் ஊற்று நிற்கும் பருவம் 15 நாட்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என வைத்துக்கொண்டால் கூட… இரு மாதங்களைத் தவிர்த்து பனையிலிருந்து பதனீர் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
75 லிட்டர் பதனீரைக் காய்ச்சி எடுக்கையில் 10 கருப்பட்டிகள் விளும். ஒவ்வொன்றும் 1.6 கிலோவிற்கும் மேல் இருக்கும். ஒரு சராசரி மனிதனின் உணவு தேவை இன்றைய அளவின் படி 300 கிராம் என்றால். 2 + 5 பிள்ளைகள் கொண்ட பனியேறி குடும்பத்திற்கு 2.1 கிலோ கருப்பட்டி மட்டும் ஒரு வேளைக்குத் தேவையாகிறது (இப்படி முழுமையாக கருப்பட்டியை மட்டுமே எவரும் சாப்பிடுவதில்லை). மீதமிருக்கும் கருப்பட்டிகளில் ஒன்றைமட்டுமே எடுத்துசென்றால் கூட ஒருநாள் சந்தை பொருட்களை வாங்க வல்லன. அந்நாட்களில் சந்தை வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான்.
மேலும் பனை சார்ந்த ஒரு உணவு சங்கிலியை நாம் மறந்துவிடக்கூடாது. இவைகள் இதுவரை பேசப்பட்டது இல்லை. பாளை தெரிய ஆரம்பித்ததும் பனையேறிகளுக்கு பருவகாலம் வந்துவிடும். பதனீர் இறக்க ஆறு மாதம் (குறைந்த பட்சம் என வைத்துகொண்டாலும் கூட) பருவகாலம் துவங்கி மூன்று மாதத்திலேயே நுங்கு கிடைக்க ஆரம்பித்துவிடும், பதனீர் பருவகாலம் முடியும் தருவாயில் பனம் பழம் கிடைக்க ஆரம்பிக்கும். பனம்பழங்கள் முடியும் தருவாயில் பதனீர் கிடைக்க ஆரம்பித்துவிடும். இப்போது குருக்கப்போட்டிருந்த பனம்கிழங்குகளும் கிடைக்கும். சில குறிப்பிட்ட பருவ காலத்தில் பனங்கிழங்கு, பனம்பழம், நுங்கு மற்றூம் பதனீர் மேலும் தவண், கற்கண்டு, கருப்பட்டி யாவும் ஒரே இடத்தில் கிடைக்கும். இது பன்முகப்பட்ட உணவு முறை. இதுபோக பயறு, கிழங்கு மற்றும் காய்கறிகள் போன்றவற்றையும் இவர்கள் பயிரிட்டுக்கொள்ளுவார்கள். முற்காலங்களில் பனியேறிகளுக்கு பெண் கொடுப்பதற்கு காரணம், பனையேறி வீட்டில் செல்லும் தன் மகள் ஒருபோதும் பட்டினியாய் இருக்கப்ப்போவதில்லை என்பதால் மட்டுமே. அப்படியானால் பசி எப்படி வந்தது? இவ்விதமான ஒரு சமச்சீர் உணவை உணவென்று கருதாமல், அரிசி சோறு சாப்பிடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது… (பனையேறிகள் வாழ்ந்த இந்த நாட்டை “நாஞ்சில் நாடு என யார் பெயர் மாற்றினார் என தேடிக்கொண்டிருக்கிறேன்”) பெரும்பாலும் கிழங்குகளையே உணவாக சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்கள் வாழ்வில் கலப்பை பிடித்து வந்தவர்களின் உணவுபழக்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அன்றெல்லாம் அரிசி சோறு அபூர்வம் என்பார்கள். நாஞ்சில் நாட்டில் ஏன் இந்த அரிசிக்கான பஞ்சம் என எவராவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?
பனையேறிகளின் உடை அமைப்பு ஒரு தொன்மையான உடையமைப்பு. தென் திருவிதாங்கூரின் போர் வீரர்களின் உடையமைப்பை ஒட்டியது அது. குமரி நாட்டின் உழைக்கும் வர்க்கம் தன் உடலில் வெயிலை வாங்குவதை விட மழையை அதிகம் வாங்கியிருக்கும் போல. இப்பகுதியின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உடை அமைப்பே அதுதான். இங்கு நிகழ்ந்த மேலாடைக் கலகம் கூட உடை குறித்த புதிய பார்வைகள் இங்கு ஊடுருவியதால் வந்தது எனும் கூற்று கூட விரிவாக பேசப்பட்டிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்னோக்கி பார்க்கையில் ஏற்படும் காட்சிப் பிழை அது.
கல்வியைப் பொறுத்த அளவில் உடல் உளைப்பாளிகளான சாணாரை மூளை உளைப்பாளிகளாக மாற்ற வேண்டும் என மிஷனெறிமார்கள் எண்ணினார்கள். அதனை செய்தும் காட்டினார்கள். காமராஜரின் காலத்தில் தான் அரசு பள்ளிகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டது… அனைவருக்கும் கல்வி சாத்தியமாகியது (பனையேறிகளின் பிள்ளைகளுக்கு மாத்திரம் அல்ல). கல்வியே கண்திறக்கும் என்றிருந்த காமராஜர் காலம் மாறி, கல்வியினால் கண்கள் அடைக்கப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்ற புரிதல் கூட நமக்கு இன்று இல்லை.
“கொப்பன போல இல்லாம நீயாவது படிச்சு குடும்பத்தைக் கரையேற்று”, “நீயெல்லாம் பனையேற தான் இலாயக்கு” போன்ற “அக்கறை” மிகுந்த வார்த்தைகள் குமரியில் பனையேறிகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதைகளைச் சுட்டும் ஆவணம். “கல்லார் அறிவிலாதார்” என்பதை பள்ளிக்குச் சென்று கல்வி பயிலாதார் அறிவற்றவர் என்றே அன்றைய சமூகம் எடுத்துக்கொண்டது. பாரம்பரியமாக பனையேறியவர் கொண்டுள்ள அறிவு எத்தைகையது என்பதனை இதுவரை எந்த படித்த மனிதரும் பதிவு செய்யவில்லை. ஒவ்வொரு பனைக்கும் பெயரிட்டு, அவைகளின் குணமறிந்து இடுக்கி, பதனீர் சேகரித்த அவர்களது பனை உளவியல் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. காற்றுகளைக் கோண்டு காலம் அறிந்த அவர்களது பருவ ஞானம் நாம் கைமாற்றிக்கொள்ளாதது, பனை சார்ந்த உயிரினங்கள் எத்தனை எத்தனை என்ற அவர்களது உயிரியல் அறிவு நமக்கு துளியும் இல்லை, வானத்தில் உதிக்கும் வெள்ளியினைக் கண்டு பனையேறப்போகும் காலம் குறித்தும் நாம் அறிந்திருக்கவில்லை…. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
தனக்காக குறைந்த உடையே வைத்துக்கொண்டவன், தனக்காக குறைந்த உணவே எடுத்துக்கொண்டவன், தேவையான கல்வியை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டவன், ஏமாளி என படித்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்டான். சொந்த பிள்ளைகளே அவனை தூற்றினர், சொந்த சகோதரர்களே அவனை விட்டு விலகினர். திருச்சபைக்கு அவர்களின் கருப்பட்டி தேவைப்பட்டது, அவர்கள் தேவைப்படவில்லை. 1008 ஜீவராசிகளுக்குப் படியளந்தவன் – கடவுளுக்கு நிகரானவன், பிடியரிசிக்காக ஏங்கும்படி காலம் கட்டமைக்கப்பட்டது. சொந்த இனமே அவனைச் சூரையாடியது, கருப்பட்டி வியாபாரிகள் கொடிகட்டி பறந்தார்கள், பனையேறிகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டார்கள்.
உலகில் எங்கும் காணக்கிடைக்காத சமத்துவம் இந்த மண்ணில் உண்டு. வாரப்பனை என்று சொல்லுகின்ற முறைமைதான் அது. உலகில் எங்கும் காணக்கிடைக்காத மிகச்சிறந்த ஒரு பகிர்வு தன்மையை கோமணம் அணிந்த பனையேறி நீறுவியிருக்கிறார். உலகில் வேறெங்கும் எந்த காலத்திலும் இலாபத்தில் சரிபாதியான பகிர்வு இன்றுவரை சாத்தியப்படவில்லை. ஆனால் பனையேறி அதை சாதித்துக் காட்டினார். நாமோ, அவன் விட்டுச் சென்ற பகிர்தலைக் கூட பேண இயலாதவர்களாக ஏற்றத்தாழ்வுகளை குமரி மண்ணில் இன்று வளர்த்துவிட்டிருக்கிறோம். நாம் அணிந்திருக்கும் எந்த ஆடையும், நாம் செல்லும் விலையுயர்ந்த வாகனமும், நாம் குவித்து வைத்திருக்கும் கண்க்கில்லாத சொத்துக்களும் கோமணம் அணிந்து பனையினை கவ்வி ஏறும் வளைந்த கால்களையுடைய  அவனின் தன்மானத்திற்கு முன் ஒன்றுமே இல்லை. அவனை இழந்தது நமது மண் பெற்ற சாபம். அவ்வீழ்ச்சியினை விதந்தோதும் மனநிலை கீழ்மையே உருக்கொண்டது.
நேரம் தவறாமை, தொழில் பக்தி, கடின உழைப்பு, குடும்பத்துடன் ஒன்றித்திருத்தல், இயற்கையை அணைத்து நேசிக்கும் பேராற்றல், உணவு தன்னிறைவு, உடலை பேணுதல், யாவற்றையும் இன்று இழந்து நிற்கின்றோம். தற்சார்பிற்கு இலக்கணமான அவனை அப்புறப்படுத்தியே நம்மை இன்று அடிமைகளாக வைத்திருக்கின்றனர். அவனைக் குறித்த ஏளனம் தான் இன்று நம்மை போலிகள் நிறைந்த இவ்விடம் நோக்கி அழைத்து வந்திருக்கிறது. வெட்கி, நாணி, தலைகுனியும், இடத்தில் நாம் தான் இருக்கிறோம். அவன் எப்போதும் போல மேலே உயரத்தில் தான் இருக்கிறான். பனையிலிருந்து கீழிறங்கிய சமூகத்திற்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. Climbin technique

அருட்பணி காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
malargodson@gmail.com
9080250653

ஒரு பதில் to “பனையிலிருந்து இறங்கிய சமூகம்”

  1. logamadevi Says:

    அன்பின் காட்சன்
    இது வரையிலான உங்களின் பனைமரச்சாலைப்பதிவுகளில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் எழுதப்பட்டது இப்பகுதியாகத்தான் இருக்கும்.
    //சொந்த பிள்ளைகளே அவனை தூற்றினர், சொந்த சகோதரர்களே அவனை விட்டு விலகினர். திருச்சபைக்கு அவர்களின் கருப்பட்டி தேவைப்பட்டது, அவர்கள் தேவைப்படவில்லை. 1008 ஜீவராசிகளுக்குப் படியளந்தவன் – கடவுளுக்கு நிகரானவன், பிடியரிசிக்காக ஏங்கும்படி காலம் கட்டமைக்கப்பட்டது// இந்த வரிகளில் கண்கள் நீர்மை கொள்வதைத்தவிர்க்க முடியவில்லை. கசக்கும் உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒற்றைக்கேள்விக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில் பலருக்கும் பலவற்றை புரியவைக்கும் விதத்தில் உள்ளது
    நாஞ்சில் நாடு என பெயர் வைத்தவரைதேடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு தகவல்
    ’’ கல்குளம் மங்கலம் என்ற ஊர் தொட்டு அகஸ்தீஸ்வரம் மணக்குடி காயல்வரையிலான நெல்கொழிக்கும் நீர் வள நாட்டை “நாஞ்சில் நாடு” என்கின்றனர். இந்நாட்டை நாஞ்சில் வள்ளுவனும் அவன் வழியினரும் ஆண்டு அனுபவித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை’’
    மேலும் பனையேறிகளைக்குறித்தும் நாடார் சமூகத்தைக்குறித்துமான கொஞ்ச்ம கடுமையாகவே எழுதப்பட்டிருக்கும் ஒரு பதிவிற்கான சுட்டியையும் தந்திருக்கிறேன் நேரமிருக்கையில் வாசிக்கவும்
    https://marshalnesamony.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
    தவண் என்பது என்னவென்று தெரியவில்லை எனக்கு
    குருக்கப்போடுவது என்றால் முளைக்கப்போடுவதுதானென்றெண்ணுகிறேன்
    பட்டறிவுக்கும் படிப்பறிவுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள். ஏட்டுச்சுரைக்காயை கறிசமைக்க இயலாதல்லவா!
    இன்றும் இது தொடர்கின்றது அனுபவ அறிவுள்ளவர்களை நாம் மிக எளிதில் ஏளனம் செய்கிறோம் பெயருக்கு பின்னால் வால் போல் நீண்டிருக்கும் பட்டங்ளே ஒருவருக்கான சமுதாய அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன.
    //அவனைக் குறித்த ஏளனம் தான் இன்று நம்மை போலிகள் நிறைந்த இவ்விடம் நோக்கி அழைத்து வந்திருக்கிறது//
    இவ்வரிகளில் தெரிவது ஒருவிதத்தில் பனையேறீகளை புறக்கணித்துக்கொண்டே இருக்கும் நமக்கான justification என்று மனம் ஏற்றுக்கொள்கின்றது முன்னால் படித்த அவர்களின் அத்தனை அவலங்களும் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால்.
    கடைசி வரிகளுக்கு மிகப்பொருத்தமான புகைபப்டமும்
    வாழ்த்துக்கள் காட்சன்
    நீங்கள் இத்தொடரை எழுதத்துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரையில் பார்த்தால் பனைமரங்களுக்கான முக்கியத்துவம் சமுதாயத்தில் பெரிதும் உணரப்பட்டு அதை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் வேகமாக நடந்துகொண்டுதன் இருக்கின்றது எனவெ இன்னும் இன்னும் எழுதுங்கள் பனையேறிகள் வெகுவிரைவில் உண்மையிலேயே உயரத்திலிருக்கும் காலம் வரும்
    அன்புடன்
    லோகமாதேவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: