Archive for ஓகஸ்ட், 2018

எங்கே போனது பனங்காட்டு நரி

ஓகஸ்ட் 27, 2018

 

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” எனும் பழமொழி ஒருவர் எத்தகைய சூழலையும் கண்டு அஞ்சமாட்டார் எனும் பொருளில் வழங்கப்பட்டு வந்தது அறிவோம். உண்மைதான் நரியினை கண்டுணர்ந்த நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற பொன்மொழி அது. நரி மனிதர்களோடு நெருங்கி வாழ்ந்த ஓர் உயிரினம். நரியினை மைய்யப்படுத்திய சூழியல் நமக்கு இருந்திருக்கிறது என்பதற்கு ஓராயிரம் எடுத்துக்காட்டுகள் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இன்று நரி நம்மிடம் இல்லை. அது நம்மை விட்டு அகன்று போனதால் ஏற்படும் விளைவுகளைமட்டுமே செய்வதறியாது திகைத்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

indianfox

(திருநெல்வேலி மாவட்டத்தில் எடுத்த புகைப்படம். நண்பர் வின்சிலின் கொடுத்தது.)

பனையோடு நரிக்கு உள்ள தொடர்பினை இரு வருடங்களுக்கு முன்பு நான் உறுதி செய்யும் ஒரு தருணம் வாய்த்தது. மும்பையிலுள்ள அந்தேரி இரயில் அருகில் நூறாண்டினை எட்டும் பனை மரம் தனித்து நிற்பதைப் பார்த்தேன். மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் பனை மரங்கள் நிறைந்து நிற்கும் பகுதிகள் இன்றும் உண்டு. மும்பையின் அதிவேக வாழ்வை தடையசெய்யாத மரங்களாக எண்ணி பனை மரங்களை விட்டுவைத்திருக்கிறார்கள். மாத்திரம் அல்ல, பனை மரங்கள் தனக்கான இடத்தை வறையரை செய்துள்ளது. நெருக்கடி மிக்க மும்பையில்  மிக அதிக அளவில் இடத்தை எடுத்துக்கொள்ளாமல், ஒரு தூண் போன்று சிறிய இடத்தை மட்டுமே கோருவதால், மிக மகிழ்ச்சியாக அனைவரும் இதனை வாழ விடுகிறார்கள்.

அந்தேரி இரயில் நிலையத்தின் அருகில் திரட்சியான பனை மரங்கள் இருந்திருக்குமோ என்ற எண்ணத்தில் ஒரு இணைய தேடுதலை நடத்தினேன். ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் நரி வேட்டையாடும் வெள்ளையர்கள் குறித்த கோட்டோவியங்களின் தொகுப்பு ஒன்றில் இவர்கள் பனங்காட்டினுள் வேட்டைக்குச் செல்லுவது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நரி சுவைக்கென வேட்டையாடப்பட்டதா அல்லது வீட்டு வளர்ப்பு பிராணிகளை களவாடியதால் இவைகளை மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இருந்து துரத்தும் பொருட்டு வேட்டையாடப்பட்டதா? இல்லை வெறுமனே பொழுது போக்கிற்கென வேட்டையாடப்பட்டதா?

ஏனென்றால் நரி வேட்டை சார்ந்த நாட்டுப்புற கதைகள் நம்மிடம் குறைவு, பாட்டி வடை சுட்ட கதையில் வரும் நரி, சாத்திரங்கள் கற்ற காகத்தையே ஏமாற்றும் திறனுடையது. ஊருக்குள் வரும் நரி சாயப்பட்டறையில் விழுவது யாவும் மிகச்சிறந்த அவதானிப்பே அன்றி கதை அல்ல. பசியோடிருக்கும் நரி, திராட்சைக் குலையைப் பார்த்து சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது அதன் பசிக்கு அது சைவமாகிவிடும் தன்மை இருக்கிறது, என்பதை கோடிட்டு காட்டுகிறது.  கிறிஸ்தவ சிறுவர் பாடல்களில் “கள்ள சாத்தான் ஒரு குள்ள நரி” என மனித விரோதியாக மாறுவதைப் பார்க்கிறோம். பொதுவாக நரி வீட்டு விலங்குகளை அவ்வப்போது உணவாக எடுத்துச்செல்லுவதால் வேளான் குடிகளுக்கு அதன் மேல் ஒரு ஒவ்வாமை இருந்திருக்கும். இங்கிலாந்தில் 16 ஆம் நூற்றாண்டு முதல் நரி வேட்டைகள் நடைபெற்றவண்ணம் இருந்துவந்துள்ளன, வெகு சமீபத்தில் தான் நரிவேட்டை இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் “நரி வேட்டை”  என்கிற ஒரு சடங்கு சில நாட்டார் தெய்வ விழாக்களோடும் இணைந்து இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். கோவில் விழாக்களின் இறுதி நாளில் ஊரே சேர்ந்து நரியினைப் பிடித்து வருவது வழக்கம். இது, நில புலன் நன்றாக இருக்கவேண்டும் என்பதுபோல ஆடு கோழிகள் நன்றாயிருக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம். வருடத்திற்கு ஒரு நரி என்பது முந்தைய காலத்தில் நரியினை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கச் செய்த ஒரு உபாயமாக இதனைக்கொள்ளலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலய ஆராதனை முடிந்தபின்பு, முயல் வேட்டைக்கு சில வாலிபர்கள் தங்கள் நாய்களையும் அழைத்து செல்லுவார்கள். அவர்களோடு நானும் சென்றிருக்கிறேன். ஒருமுறை நரி ஒன்று பாய்ந்து வர அவற்றை துரத்திப் பிடித்தார்கள். பிடித்த நரியினை நாங்கள் சென்று  பார்த்தபோது சற்றே முடி அடர்ந்த சிரிய நாயைப்போலவே இருந்தது. அதைப் பிடித்தவர் நரியிடம் கடிபட்டு ஊசி போட்டுக்கொண்டு வந்தார்.

மனிதனுக்கு நரி முக்கியம். அவன் விட்டு வந்த காட்டை இணைப்பவை அவைதான். ஒருவகையில் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் உள்ள இடங்களை இணைத்து வாழும் இச்சிறு விலங்கினை பெரும்பாலும் நாம் இன்று இழந்துவிட்டோம். இதற்கு காரணம் நவீன வேளாண் சமூகங்கள், தங்கள் வாழ்வில் நரி குறுக்கிடுகிறது என எண்ணியதால் தான். பெரும்பாலும் நரிகள் இன்று வேட்டையாடப்படுவது இல்லை மாறாக விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. நரிகள் இல்லாமலாகும்போது ஏற்படும் விளைவுகள் இன்று பூதாகரமாக மாறி நிற்கின்றன.

இன்று விவசாயிகளுக்கு பல வகைகளில் தொந்தரவு கொடுப்பது தேசிய பறவையாகிய மயில் தான். மயில் விளை நிலங்களில் புகுந்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதால் விஷம் வைத்து அவை கொல்லப்படுகின்றன. நரிகள் இருந்திருக்குமானால் மயில்களின் பெருக்கம் கட்டுக்குள் இருந்திருக்கும் என்றே கூறுகிறார்கள்.

நமது சூழியலை கணிக்கத்தவறியதன் விளைவுதான் இது. மயில் தேசிய பறவை வேட்டையாடக்கூடாது என்பவர்கள், அவைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நரிகள் காணாமல் போவது பற்றிய  எவ்வித உணர்வும் இன்றி இருப்பது மாபெரும் விடுபடல். ஒன்றை சார்ந்து மற்றொன்று இருக்கிறது எனும் அடிப்படையினை உணரத்தவறியதால் ஏற்படும் விளைவு இது.

புலிகளைக் காக்கும் வகையில் அரசு ஏற்படுத்திய “புராஜெக்ட் டைகர்” என்பது புலிகளை மையப்படுத்திய ஒரு வன வரைவு திட்டம். இழந்தவைகளை மீட்பதும் சீர்செய்வதும், கானுயிர் வாழ்விடங்களை மீட்டுருவாக்குவதும் என அது ஒரு முழுமைக்கான அடிப்படை. அப்படித்தான் பனை சார்ந்த மீட்பும் அமையவேண்டும் என எண்ணுகின்றேன்.

பனை மரக்காடுகள் நரிகளுக்கான ஒரு சிறந்த அரண், வாழ்விடம் மற்றும் உணவளிக்கும் பாத்திரம். நரி அனைத்துண்ணி என்பதை அறிவோம், அது பெரிய பூச்சிகளையும், சிறிய பாலூட்டிகளையும், பறவைகளையும் உண்ணும், அப்படியே பழங்களையும் சாப்பிடும். நரிக்கு பனம்பழம் பிடித்தமான உணவு தான். பனங்காடு  பல்வேறு வகையான உயிரினங்களை வாழவைக்கும் ஒரு உயிர் சூழல். அவைகளைப் பேணும் மனிதர்களை அரசு கைவிட்டதோடு, மக்கள் இம்மரங்களை கைவிட்டனர். இன்று இலைகள் ஒவ்வொன்றாக உதிர்வது போல இழப்புகள் ஏற்படுவதை கவலையோடு கவனிக்கிறோம்.

இன்றும் நரிகள் தங்கு தேரிக்காடுகள் உண்டு. முயல் வேட்டைக்குச் செல்லும்போது நரிகளைக் கண்டால் வேட்டை நாய்கள் அவற்றைத் துரத்துமாம். சில வேளைகளில் நாய்கள் வழி தவறிவிட்டால் அவைகள் பல நாட்களுக்குப் பின்பு சடலமாக காணக்கிடைக்கும். ஒரு நாய் வாழ இயலாத சூழலில் வாழும் நரிக்கு இருக்கும் அந்த துணிச்சல் தான் அதனை பனைங்காட்டு நரி என நமது முன்னோர்களைச் சொல்ல வைத்தது. இன்று இழக்கும் பனை மரங்கள் யாவும் நமது சூழியல் மேல் விழும் அடி என்பதனை நாம் உணராவிடில் நரி என்ன… நாமே இருக்கமாட்டோம்.

இயேசு இன்று இருந்திருந்தால்…. நரிகளுக்கு பனங்காடுகளும், ஆகாயத்து பறவைகளுக்கு கூடும், மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்கவும் இடமில்லை என்றிருப்பாரோ?

அருட்பணி. காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு, கன்னியாகுமரி மாவட்டம்
எழுத: malargodson@gmail.com
அழைக்க: 9080250653


%d bloggers like this: