கிறிஸ்மஸ் பண்டிகை வணிகமயமாகிப்போனது துயரமானது என்றால், அந்த கொண்டாட்டம் நெகிழி சார்ந்த ஒன்றாக மாறிப்போனது அவலத்தின் உச்சம். கிறிஸ்துவின் எளிமையைக் கொண்டாடும் ஒன்றாக இருந்த கிறிஸ்மஸ் வெகுவாக மாறி ஆடம்பரத்தை மையப்படுத்தும் விழாவாக வலுப்பெற்றிருக்கிறது. எளியவர்களை புறக்கணித்துவிட்டு பரிசுகள் அளிக்கும் பிரபுக்களின் மன நிலையோடு மகிழ்வுறும் கிறிஸ்தவர்களே இன்று அதிகம். இவ்விதமான நிலவுடைமை சிந்தனைகளிலிருந்து மாறி, ஒரு மாற்று சிந்தனை நோக்கி நமது பயணத்தை அமைக்க இந்த கிறிஸ்மஸ் நாளில் திருச்சபையாக நாம் அழைக்கப்படுகிறோம்.
மத்தேயு இயேசுவின் பிறப்பைக் குறித்து எழுதும்போது அவரின் மூதாதையர்களின் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் பிறப்பை முன்வைக்கிறார். அப்பொழுது அவர் ஏசாயாவின் கூற்றினை, எடுத்தாள்கிறார். “ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்” என்று பெயரிடுவார். தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.” (ஏசாயா 7: 14 – 15 திருவிவிலியம்)
கிறிஸ்மஸ் காலங்களில் கிறிஸ்மஸ் மரத்தினை முன்னிறுத்துவது ஒரு முக்கிய மரபாக இருக்கிறது. இயற்கையின் அங்கமான மரங்கள் இன்று செயற்கை வடிவில் வணிக பொருளாக நமது வீடுகளையும் திருச்சபையையும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. இவ்விதமான அலங்கரிப்புகளை கடவுள் விரும்புவாரா? ஏசாயா தீர்க்கரின் கூற்றின்படி அவர் இவைகளை விரும்புகிறவர் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ” உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்துபோனேன்” (ஏசாயா 1: 14, திருவிவிலியம்) கிறிஸ்மஸ் காலங்களில் இம்மரபினை ஏற்றிருக்கும் நாம், இன்று திருச்சபையாக, உண்மையான மரங்களை நடுவோமாகில், எத்துணை அர்த்தம் பொதிந்த கிறிஸ்மஸ் விழாவாக, கொண்டாட்டமாக அவை அமையும்?
கிறிஸ்மஸ் காலங்களில் நாம் முன்வைக்கும் பிளாஸ்டிக் மரங்களுக்கு மாற்றாக நமக்கு முன்னால் கடவுள் படைத்தளித்த பனை மரம் கெம்பீரமாக எழுந்து நிற்கின்றது. அது நமது வாழ்விற்கு தேவையான அனைத்து பரிசுகளுடனும் நமக்காக காத்திருக்கிறது. அவைகளுக்கு எதிராக நாம் வீசும் கோடாரிகளை கண்டும் கரம் விரித்தபடி அமைதியாக நம்மை பார்த்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் அடிநாதமாக இருந்தவைகள் அப்புறபடுத்துவது நமக்கு வாடிக்கையாகிப் போனது. பெற்றோரை, முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் இழிசெயலுக்கு ஒப்பானது அல்லவா இது? வருகை புரிந்த இயேசு பாலகன், காணவேண்டிய மரங்களை இல்லாமல் ஆக்கிவிட்டு நாம் செய்யும் பிளாஸ்டிக் அலங்காரங்கள் அவரை முகம் கோணவே செய்யும்.
கடவுள் நமக்கு ஈவாக தந்த மரம் பனைமரம். வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், நம்மோடு உடன் நின்று நமக்கு தோள் கொடுத்த மரம் அது. கடவுளின் கொடை என்றால் என்ன என்பதனை முழுமையாக வெளிப்படுத்தும் மரம் பனை மரம். கனிகளைத் தேடிவரும் ஆண்டவருக்கு பூக்கவோ காய்க்கவோ செய்யாத உயிரற்ற பிளாஸ்டிக் கிறிஸ்மஸ் மரம் எவ்விதமான உணர்வைத் தரும்? இயற்கையோடு இணைந்து வாழும்படியாக தானே ஏதேன் தோட்டத்தில் அழகிய மரங்கள் நடுவே மனுக்குலத்தை இறைவன் படைத்தார். படைத்த ஆண்டவர், தனது வருகை பிளாஸ்டிக் மரங்களின் நடுவே இருந்தால் கவலை கொள்ள மாட்டாரா? இழந்து போனதை தேடவும் மீட்கவும் வந்த ஆண்டவர் பனை மரங்கள் இழந்து நிற்கும் சூழலில் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
கிறிஸ்மஸ் காலங்களில் பனை மரத்தினை எண்ணுவது வெகு பொருத்தமானது. வானத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் அப்பத்தை நினைப்பூட்டும் சிறந்த குறியீடு பனை மரம் தான். தன்னையே உணவாக அளித்த ஆண்டவர் தனது வருகையினை முழுமையான அற்பணிப்பு கொண்ட பனைமரத்துடன் இணைத்துக்கொள்ளுவதையே விரும்புவார். சர்வதேச பொருளியல் சுரண்டல்களிலிருந்து நம்மை மீட்கும் மரம் இதுதான். நமது ஆன்மீக வாழ்வில் ஏழையோடு ஏழையாய் தன்னை அடையாளப்படுத்திய இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு நல்கும் மரம் இது. நெகிழி இல்லா கொண்டாட்டத்தை முன்னெடுக்கையில் வரமாக வந்து நிற்கும் மரம், பனை மரம் தான். நாம் இறைஞ்சி கேட்பவை அனைத்தும் பெற்றுக்கொள்ளும் அருட்கொடை நிறைந்த மரம் கற்பக மரம் தான். அன்னையாக அமுதூட்டும் இம்மரத்தினை அன்றி பாலகனாய் பிறந்த இயேசுவுக்கு பிடித்தமான மரம் வேறு என்ன இருக்க முடியும்?
எண்ணிப்பார்க்கையில், கடந்த 25 வருடங்களில் குமரி மாவட்டத்தில் மட்டும் 25 இலட்சம் பனை மரங்களை நாம் பல்வேறு காரணங்களை காண்பித்து வெட்டித்தள்ளியிருக்கிறோம். எஞ்சியிருக்கும் பனைமரங்களையும் பராமரிக்கும் திறமைகள் அற்று இருக்கிறோம். கடவுள் தந்த ஈவுகளை எளிதாக எடுத்துக்கொள்ளுவது நமக்கோ நமது சந்ததிகளுக்கோ நல்லது அல்ல. உயிருள்ள மரங்களை கொலைசெய்துவிட்டு உயிரற்ற மரங்களை காட்சிபடுத்துவதில் உள்ள இறையியல் தான் என்ன? கடவுள் நமக்கு தந்த தாலந்துகள் குறித்து அவர் நம்மிடம் கணக்கு கேட்பார். நாம் இழந்த பனை ஏறும் தாலத்துகள் குறித்து எவ்விதம் கணக்கு ஒப்புவிக்க போகிறோம்? எளியவராகவும் வறியவராகவும் வந்த இயேசு, பனையேறிகள் அப்புறப்படுத்தப்பட்ட சமூகத்தில் எப்படி நிலை கொள்வார்? குருத்தோலைகள் கொண்டு நாம் செய்த அலங்காரங்கள் யாவும் மறைந்து வணிக பொருட்களுக்கே முக்கியத்துவம் தரும் மனநிலைக் குறித்து ஆண்டவரிடம் நாம் சொல்லப்போகும் சமாதானம் என்ன? ஓக்கி புயலில் நாம் சந்தித்த இழப்புகளை பனைமரம் பெருமளவில் குறைத்திருக்கும் என்பதை உணர்ந்தும் நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மை நாடிவரும் கடவுள் ஏமாற்றம் அடைவார்.
வறட்சி, புயல், பஞ்சம், வறுமை போன்ற அத்துணை இடர்களிலும் நமது வாழ்வில் உற்ற துணையாக, தாயாக, பிரியா நட்புறவோடு இருந்த மரம் பனை. இம்மரம் குறித்த நமது பொருளியல் புரிதலோ, சமூகவியல் புரிதலோ, ஆன்மீக புரிதலோ, வரலாற்று புரிதலோ, சூழியல் புரிதலோ இன்னும் தவழும் பருவத்தையே தாண்டவில்லை. ஒருவகையில் நாம் இறைவன் நம்மோடிருக்கிறார் எனும் பதத்தையே சரிவர புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயப்பாடு எழுவதை தவிர்க்க இயலவில்லை.
இவ்வாண்டில் நாம் ஒரு தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும். செயற்கை கிறிஸ்மஸ் மரங்களை நம்மைவிட்டு விலக்கி புறக்கணிப்போம். பனை மரங்களை தமிழ் நாட்டின் கிறிஸ்மஸ் மரமாக பறைசாற்றுவோம். உலகிலுள்ள பிற சமூகத்தினருக்கும் பனை மரத்தின் முக்கியத்துவத்தை ஆண்டவரின் வருகையை ஒட்டி அறிவிப்போம். உயிருள்ள பனை மரங்களில் நமது அழகிய அலங்காரங்களைச் செய்து ஆண்டவர் புகழ் பாடுவோம். அவ்விதம் நமது வளாகங்களில் பனை மரங்கள் இல்லையென்று சொன்னால், புதிய பனை விதைகளை விதைத்து, உயிரோட்டமுள்ள ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையினை அறிவிப்போம். பனை சார்ந்த இயற்கை பொருட்களால் நமது கிறிஸ்மஸ் அலங்காரங்களைச் செய்வோம். பனை சார்ந்த உணவு பொருட்களை பயன்படுத்துவது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். பனை ஓலைக் கலைஞர்களிடம் நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக எளியவர்களின் வாழ்வில் நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நிறைவு கொள்ளும். இவ்விதமான புரிதல் கொண்ட மாசற்ற ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையினை இவ்வருடம் முயன்று முன்னெடுப்போம்.
நம்மோடு இருக்கும்படியாக வந்த கடவுள் நமது எளிய கலாச்சாரத்தை புறக்கணிக்கிறவராக இருப்பாரா? ஆனால் நமது இன்றைய பண்டிகை வாழ்வில் கடவுளை அன்னியராகவே நாம் நினைத்துவிட்டிருக்கிறோம். நம்மில் ஒருவராக அவர் நின்று, நமது வாழ்வில் நிலைபெறுவதை இழந்துவிட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நமக்குள் ஏற்பட்ட வணிக ஊடுருவலை அறுத்து, ஏழ்மை கோலம் எடுத்தவரை நமது சூழலில் நின்று கொண்டாடுவது தேவையாக இருக்கிறது. அவ்வகையில், பனை மரம் நமது கிறிஸ்மஸ் மரமாக இவ்வாண்டு நிலைபெறுவதன் மூலமாக, கடவுள் நம்மோடிருக்கிறார் என்கிற பிரகடனத்தை முன்னெடுக்கிறவர்களாக, ஏழ்மையின் சின்னமாக பிறந்தவரை கொண்டாடும் குறியீடாக, வணிக ஊடுருவலை எதிர்க்கும் ஆற்றலாக, இறை கொடையின் அடையாளமாக பனை மரத்தை முன்னிறுத்த அழைக்கப்படுகிறோம்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
01.11.2018
9080250653
malargodson@gmail.com
You must be logged in to post a comment.