தூய்மைப்படுத்துதல்
எங்களது இருசக்கர வாகன பயணம், சிறு கிராமங்கள் வழியாகவும் மண் வீதிகள் வழியாகவும் முன்னேறிக்கொண்டிருந்தது. கிராமங்கள் சுத்தமாக இருந்தாலும் தூசிபடிந்து புழுதிகளுக்குள் இருந்தன, கிராமத்தின் வெளியே பசுமை ஆக்கிரமித்திருந்தன. சில நாட்களுக்கு முன்பே மழைக்காலம் முடிந்திருந்ததால் எங்களால் சற்றேனும் பசுமையினை பார்க்கமுடிந்திருக்கிறது. நிலமை எப்போதும் இப்படியிருக்காது. வெயில் காலங்களில் கொழுத்தும் வெயிலில் நிலம் வறன்டுவிடும். கிராமம் “சுத்தமாக” இருக்கவேண்டும் என்பதற்காக பசும்புல்வெளிகளையும் வளர்ந்துவரும் செடிகளையும் அப்புறப்படுத்திவைத்திருப்பார்கள் போல. புழுதிக்கான காரணம் இதுதான்.
ஒரு வீட்டினைக் கடந்து செல்லுகையில், அன்ட்த வீட்டின் மதில் சுவரில் ஏதோ ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. என்னவென்று தெரியவில்லை. அனிச்சையாக எனது கரம் தருணுடைய தோளை அழுத்தியது. தருண் தனது பைக்கை நிறுத்தினார். நான் இறங்கி எனது கண்ணில் தென்பட்ட அந்த பொருளை நோக்கி நடந்தேன். ஒரு மதில்மேல் அது வைக்கப்பட்டிருந்தது. எடுத்து பார்த்தபோது அது ஒரு குட்டைவடிவிலான விளக்குமாறு என்பது தெரியவந்தது. மேலும் அது பனையோலையா என்கிற சந்தேகம் உடனடியாக எழுந்ததால், என்ன என கை விரல்களால் நீவிப்பார்த்தேன். இல்லை இது பனையோலை அல்ல, ஈச்சமர ஓலை என்பது எனக்கு புரிந்தது.

ஈச்சமர ஓலையில் செய்யப்பட்ட விளக்குமாறு
அந்த விளக்குமாறு ஒருவர் தரையில் அமர்ந்தபடியே கூட்ட உதவும் ஒரு அமைப்பு கொண்டது. ஊர்களில் அனைத்து இடங்களும் செடிகளற்று சுத்தமாக பேணப்படுவதற்கு இதுவே முதற் காரணம். அமர்ந்திருக்கையில் மண்ணுக்கும் மனிதர்களுக்குமான உறவு நெருங்குகிறது. இடையில் வேறு எதுவும் முளைத்துவிடக்கூடாது என மனித மனம் விழிப்புடன் இருக்கிறது போலும்.
பொதுவாக விளக்குமாறுகள் மூன்று வகையில் காணப்படுகின்றன. நான் பார்த்துக்கொண்டிருப்பது பழங்குடியினரின் வாழ்வில் காணப்பட்ட ஒன்று. மண்னோடு தொடர்புடையவர்கள் பலரும் இவைகளையே பயன்படுத்திவந்தனர். ஈச்சமரத்திலிருந்து இன்னும் சற்று பெரியதாக விளக்குமாறு செய்யலாம் என்றாலும், நான் பார்த்த விளக்குமாறு ஒரு தொன்மையின் அடையாளம் கொண்டிருக்கிறது.
இரண்டாவது வகை. குனிந்துகொண்டு பெருக்க உதவுவது. “ஆம் ஆத்மி” கட்சியின் சின்னமே தான். சிறு வயதில் எங்கள் வீட்டில் எங்கள் வீட்டு முற்றங்கள் தேங்காய் ஈர்க்கிலால் செய்யப்பட்ட விளக்குமாறு கொண்டே பெருக்கப்பட்டன. “சரு வாரப்போகிறவர்கள்” (சருகு கூட்ட) கூட இவைகளைத் தான் பயன்படுத்துவார்கள். இன்றும் கூட ஈர்க்கில் எடுத்து விற்பதற்க்கு அனேக மக்கள் குமரி மாவட்டத்தில் தயாராக இருக்கிறார்கள். சொற்ப வருமானம் என்றாலும், நிரந்தரமாக வருமானம் தரும் ஒரு பொருள். நான் அகமதாபாத் திருச்சபையில் போதகராக பணியாற்றும்போது திரு. பிரின்ஸ் என்ற லாரி டிரைவர் அந்த ஆலயத்திற்கு வருவார். எங்களுக்கு தேவையான பொருட்களையும் ஒரு சில நேரம் அவர் எடுத்து வந்திருக்கிறார். அவரது லாறி குமரி மாவட்டத்திலுள்ள பாலப்பள்ளம் பகுதியிலிருந்து வெறும் ஈர்க்கில்களை மட்டுமே ஏற்றி வரும். தூய்மைப்படுத்தும் செயல் விடாது நடைபெறவேண்டும் என்பதால் தானோ என்னவோ, அவைகளுக்கான மதிப்பு குறையவே இல்லை.

தென்னை ஈர்க்கிலால் செய்யப்பட்ட விளக்குமாறு. குனிந்து பெருக்க பயன்படுவது (நன்றி: இணையதளம்)
ஆனால் சிறு வயதில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் விளக்குமாறுகள் தான் நான் பார்த்ததிலேயே பெறியவைகள். தெருக்கூட்ட பயன்படும் அந்த விளக்குமாறுகள், ஒருவர் நின்றவண்ணமே குப்பைகளை கூட்டுவதற்கு ஏற்ற வடிவில் இருக்கும். அடிப்பகுதி சீராக தென்னை ஈர்க்கில்களால் அல்லது மூங்கிலால் வரிசையாக கட்டப்பட்டு அகலமாக இருக்கும். நின்றபடி கூட்டுவதற்கு ஏற்ற வண்ணம் அவைகளுக்கு ஒரு மூங்கில் கைப்பிடியும் இருக்கும். நான் வாய் பிளந்து இவைகளைப் பார்த்திருக்கிறேன். நின்றபடி கூட்டுவது என்பது ஒருவகையில் சுயமரியாதையளிக்கும் செயல் என்பதாக கருதப்பட்டிருக்கலாம். ஆகவே பொது இடங்களில் கூட்டுபவர்களுக்கு நகராட்சி இவ்வித்ம் பொருட்களை வழங்கியிருக்கக்கூடும். மேலும் சுகாதாரம் சார்ந்து பொதுவிடங்களைக் கூட்டுகையில், தரைக்கு அருகில் நெருங்கிச் செல்லுவது துப்புறவு பணியாளர்களுக்கு மேலும் கெடுதியையே வரவாழைக்கும் என்ற நோக்கிலும் இருந்திருக்கலாம். அதிகநேரம் குனிந்து பெருக்குவது சிரமம் ஆனபடியால், எளிதாக பெருக்குவதற்கான வடிவமைப்பாக இவைகள் இருந்திருக்கலாம்.

மூங்கில்களைக்கொண்டே நின்றபடி கூட்ட உதவும் விளாக்குமாறு
இவை மூன்றையும் நமது மனக்கண் முன்னால் கொண்டு வருகையில், விளக்குமாறு சார்ந்து ஒரு பரிணாமம் நடந்திருக்கிறது என்பது உறுதி. நாம் பார்த்த பேரீச்சையும், தென்னையும் பனை வகையைச் சார்ந்த மரங்கள் தான். அப்படியானால் தூய்மைப்படுத்துவதில் பனைக் குடும்பங்கள் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படியானால் தொல் பழங்காலத்திலேயே தூய்மை எனும் கருதுகோள் இருந்ததா. ஆம், எப்போது மனித இனம் தன்னை ஓரிடத்தில் வாழும்படியாக தங்கிவிட துவங்கியதோ அப்போதே விளக்குமாற்றின் தேவை உருவாகிவிட்டது. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுத்தம் குறித்த எண்ணங்களே நமது சமூகத்தில் பல்வேறு நோக்கில் இன்றுவரை விவாதபொருளாகிவந்திருக்கிறது. விளக்குமாறு இல்லாத ஒரு உலகம் உருவாக இயலாது. குப்பைகள் கூடும்தோறும், விளக்குமாற்றின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதற்கான குறியீடுதானோ விளக்குமாறு.
பழங்காலத்தில் ஆண்மையும் பண்மையும் கலந்ததாக விளக்குமாற்றினை புரிந்துகொண்டிருக்கிறார்கள், சில சடங்குகளிலும் சுத்தம் என்பது முக்கிய கருத்தியலாக இருப்பதால் விளக்குமாறுகள் பல்வேறு நிலைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. பேய் பிடித்த்வர்களைக் கூட விளக்குமாற்றால் அடிப்பதும், சிறு வயதில் அம்மாவிடமிறுத்து கிடைக்கும் அடிகள் கூட பெரும்பாலும் விளக்குமாற்றைக் கொண்டுதான். தற்போதைய காலத்தில் “வெளக்குமாறு பிஞ்சிரும்” என்பது என்ன பொருளில் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
தொன்மை எப்படி புனிதமாகிறதோ அதுபோலவே தொன்மை என்பது இழிவானதாகவும், நவீனத்திற்கு ஒவ்வாதது எனவும், புறக்கணிக்கப்படவேண்டியது எனவும் நவீன காலத்தில் எண்ணப்படுகிறது. ஹாரி பாட்டர் நாவல்களில் வரும் “புரூம்ஸ்டிக்” குறித்த வரலாறு இவைகள் எவற்றுடனும் சம்பத்தப்படாதது. மேலும் அந்தரங்கமானது.
நான் கரத்தில் வைத்திருந்த அந்த அழகிய விளக்குமாறு தனித்துவமான ஒரு வடிவம் கொண்டிருந்தது. தூய்மைப்படுத்தும் இடம் அகலமாகவும் கைப்பிடி பக்கம் சூம்பியும் இருந்தது. ஆனால் வேறு எந்த அன்னிய பொருட்களும் அதில் பயன்படுத்தவில்லை. ஈச்ச ஓலைகளே விரிந்து பின்னர் சுருங்கி அவைகளே கயிறாக திரிக்கப்பட்டு பின்னர் முடிச்சிடப்பட்டிருந்தது. நாடி, நரம்பு, இரத்தம், சதை, மூளை, மற்றும் சிறுமூளை அனைத்தும் கலைவடிவைமைபு என ஊறிய ஒருவராலேயே இவைகளை கண்டுபிடித்திருக்க இயலும். ஒரு சாதாரண விளக்குமாறு இத்தனை நேர்த்தியாக செய்யப்படமுடியுமா என ஆச்சரியத்தில் மூழ்கிப்போனேன்.

பனை ஈர்க்கில்களால் பின்னப்பட்ட விளக்குமாறு. அங்குல், ஒரிசா
சும்மா இல்லை இயேசுவே ஒருமுறை விளக்குமாற்றை குறித்து கூறியிருக்கிறார். ஒரு பெண்மணி தனது வெள்ளிகாசு ஒன்றை தவறவிட்டால், அவள் விளக்கை பொருத்தி, தரை பெருக்கி அந்த காசு கிடைக்குமட்டும் அதனைத் தேடமாட்டாளா என்று ஒரு உவமையினைக் கூறியிருப்பார். கிடைத்தபின் அவள் பெறும் மகிழ்ச்சியானது தொலைந்த ஆத்துமா ஒன்று மீட்டெடுக்கப்பட்டால், விண்ணகத்தில் எவ்விதம் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்? அவ்விதமே இருக்கும் என குறிப்பிடுவார். அப்படியானால் கூட்டி பெருக்குவது கூட காணமல் போனவற்றை மீட்டெடுப்பதில் ஒரு அங்கமாக இருக்கிறது என்ற புரிதல் எழுகிறது. அப்படியானால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விளக்குமாறும் பனையை மீட்டெடுக்கும் ஒரு அர்த்தமுள்ள கருவ்தானில்லையா?
எந்த இடத்தில் அந்த விளக்குமாற்றை எடுத்தோமோ அதே இடத்தில் அதனை வைத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். ஆனால் எனது நினைவுகள் யாவும் அந்த விளக்குமாற்றை சுற்றியே வந்துகொண்டிருந்தது. ஒருமுறை அம்மா என்னுடன் வந்து தங்கியிருக்கும்பொழுது, பனை ஈர்க்கில்களால் செய்யப்பட்ட விளக்குமாறு மிக உறுதியாக நாட்பட உழைக்கும் என்று சொன்னது நினைவில் வந்துசென்றது. அப்படியானால் ஏன் பனை ஈர்க்கில்களால் செய்யப்பட்ட விளக்குமாறுகள் நமக்கு கிடைப்பது இல்லை?
பனை ஈர்க்கில்களுக்கான பயன்பாடு விரிவானது. பல்வேறு வகைகளில் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓலை வேய்ந்து கட்டபடும் வீடுகளுக்கு, சுளவு மற்றும் சில ஓலைச் சார்ந்த பொருட்களை பின்னுபவர்கள் ஈர்க்கிலை பயன்படுத்துவார்கள். ஆகவே பனை ஓலை ஈர்க்கில் பயன்பாடு வேறு திசை நோக்கி சென்றுவிடுகிறது. ஆகவே பிற பயன்பாடுகளுக்கு பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படாத தென்னை ஈர்க்கில்கள் வெளக்குமாறுக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டது. தென்னை ஈர்க்கில் பனை ஈர்க்கிலுடன் ஒப்பிடுகையில் எளிதாக எடுத்துவிடமுடிவது நமக்கு புரியும். தென்னை ஈர்ர்கிலின் நீளம் அனைத்துமே சற்றேரக்குறைய இன்றுபோலவே இருக்கும்.
எனது உள்ளுணர்வு மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது, கண்டிப்பாக பனை ஈர்க்கலிலும் இவைகளைப் பார்க்கமுடியும் என்று. ஆனால் அவைகளை ஒரிசாவில் அன்று தானே பார்ப்பேன் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எங்களது பயணம் சில தெருக்கள் வழியாக ஒரு சிற்றூரை அடைந்தது. அங்கே நாங்கள் அடுத்த ஊர் செல்ல தருண் வழி கேட்டுக்கொண்டிருந்தார். என்ன புரிந்துகொண்டாரோ, அங்கே தானே எங்கள் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த ஊர் எல்லையிலுள்ள வீட்டின் ஓரம் வழியாக ஒரு வயல் வெளி நோக்கிச் சென்றார். அங்கே ஒரு பெண்மணி உங்களுக்கு என்னவேண்டும் எனக் கேட்டார். எனது கன்னியாகுமரி முதல் ஒரிசா வரைக்கும் நீண்ட பயணத்தை அவர் கூறவும், அந்த அம்மா புவனேஷ்வரில் பேடி செய்கிறார்கள் “சொட்டாய்” செய்கிறார்கள் எனக் கூறத்துவங்கினார். நான் அவைகள் யாவற்றையும் நேரில் பார்த்துவருகிறேன், இங்கே பார்பதற்கு என்ன இருக்கிறது எனக் கேட்டேன்.
அவர்கள் ஏதோ ஒரிய மொழியில் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார்கள். அவர்கள் வரும்பொது கையில் ஒரு விளக்குமாறு இருந்தது. நான் அரண்டு போனேன். ஒரிசா வந்து வெளக்குமாற்றால் அடியா? நல்லவேளையாக நான் பயப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதைப்பாருங்கள் என்று காண்பித்தார்கள். நாங்கள் சற்றுமுன் பார்த்தவைகளைவிட பெரிதாக இருத்தது எனது முதல் பார்வையிலேயே புரிந்தது. ஆனால் அதே வடிவமைப்பு. நான் அவர்களிடம் அதனைக் கொடுக்கும்படி கேட்டேன். தரவில்லை அதை தரையில் போட்டுவிட்டார்கள். விளாக்குமாறு பிறர் மேல் படக்கூடாது என்பது ஒரு நம்பிக்கை. அது பொன்ற ஏதொ ஒரு நம்பிக்கை ஒரிசாவிலும் இருக்கிறது போலும்.
கீழே அவர்கள் போட்ட அந்த விளக்குமாற்றை நான் எடுத்து சோதித்தேன். அப்படியே உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது. சந்தேகமில்லை இது பனை ஈர்க்கிலில் செய்யப்பட்டதுதான். நான் கூத்தாடாத குறை. எனது மகிழ்ச்சி அந்த பெண்மணியையும் தொற்றிக்கொண்டது. அப்படியே தருணையும்.
இது ஒரு சாதாரண விளக்குமாறாக இருந்திருந்தால் கூட நான் இத்துணை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கமாட்டேன். இதன் வடிவமே ஒரு தேர்ந்த கலை வடிவம். பயன்பாட்டுப்பொருள், நீடித்து உழைக்கக்கூடியது. இந்த தொழில்நுட்பம் நாம் கொண்டாடவேண்டிய ஒன்று. மனித சமூகத்திற்கு பனையேறி வழங்கிய மற்றுமொரு கொடை விளக்குமாறுதான்.
ஆசையுடன் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பலநாட்களாக பயன்பாட்டில் இருந்ததால் அதில் மினுமினுப்பு கூடியிருந்தது. ஒருவகையில் வார்னிஷ் தான் அடித்திருக்கிறார்களோ எனும் அளவிற்கு அது ஒரு கலைப்பொருள் போல காட்சியளித்தது. கண்டிப்பாக இதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும் என நினைத்தாலும், என்னால் சுமக்க இயலாத அளவிற்கு ஏற்கனவே என்னிடம் பொருட்கள் இருந்ததால் நான் அதனை எடுத்துகொள்ள இயலவில்லை. ஆனால் அதனை விட்டுவரவும் மனதில்லை.
எடுத்துச் செல்ல இயலாது என்பது உறுதியாகிப்போனது. ஆகவே புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். பல்வேறு வகைகளில் இவைகள் அனைத்தும் எனக்கு முக்கியமானவைகள். என்றேனும் ஒருநாள் பனை பொருட்கள் சார்ந்த ஒரு தனித்துவமான அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
உலகம் முழுவதிலுமிருந்து பனை சார்ந்த பொருட்களை காட்சிக்கு வைப்பது. பனை சார்ந்து பல்வேறு கைவினை கலைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு அமைப்பினை உருவாக்குவது, பனை சார்ந்த பல்வேறு தகவல்களை திரட்டி வைப்பது என பனை கலைகளஞ்சியம் குறித்து எனது எண்ணங்கள் சென்றது. அப்படியே பெருமூச்சு விட்டுக்கொண்டேன். என் வாழ்நாளில் அப்படி ஒன்று சாத்தியமாகிவிடப்போவதில்லை. ஒரு துவக்கம் வேன்டுமானால் நான் அமைத்துக்கொடுக்கவியலும். அல்லது வேறு யாரேனும் இவ்விதமான முயற்சிகளில் இருந்தால், அவர்களுக்கு உதவியாக இருக்க இயலும். அவ்வளவுதான். ஏனென்றால் எனது கனவு பிரம்மாண்டமானது.
ஏன் எவருமே பொருட்படுத்தாத விளக்குமாற்றைக் குறித்து பேசுகின்றோம்? இல்லாவிட்டால் ஏன் பனை சார்ந்த பொருட்களை தொன்மையின் அடையாளம் என கூற முற்படுகிறோம்? இவைகளிலிருந்து நாம் பெறும் பயன் தான் என்ன? உண்மையிலேயே எதை நோக்கிப் நான் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சையம், தொல்பொருள் ஆய்வுகளின் நீட்சியாக இவைகள் இருக்கும். உலக அளவில் பனை சார்ந்த பொருட்களைத் தேடி சேகரிக்கும்போது நாம் ஒரு புது உலக வரைபடத்தை உருவாக்க இயலும். மனித நாகரீகம் மற்றும் தோற்றம் குறித்து புது பார்வைகள் கிடைக்கும் என நான் எண்ணுகிறேன். தொல்லியல் சார்ந்து நமக்கு கிடைக்கும் ஆவணங்கள் பெரும்பாலும் நிறுவப்பட்ட சாம்ராஜ்ஜியங்களிலிருந்து கிடைப்பவை. அல்லது மட்காத பொருட்களைக்கொண்டு ஆய்வுகளை நிகழ்த்துபவை. அவ்விதமான ஆய்வுகளில் விடுபடல்கள் இருக்கும், அவைளை நமது மரபில் புழங்குபொருளாக இருப்பவைகளிலிருந்து நிரப்பிவிடய் இயலும் என நான் நம்புகிறேன். இவ்விதம் பனை சார்ந்த ஒரு மனித வரலாற்றை நாம் கண்டடைவோம். விடை தெரியாத பல விஷயங்களை நாம் கண்டு தெளிய வாய்ப்பாக இவைகள் இருக்கும். இந்த விளக்குமாறு வரலாற்றையே தூய்மை செய்யும் ஒன்றுதானோ?
காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com
You must be logged in to post a comment.