Archive for திசெம்பர், 2018

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 11

திசெம்பர் 5, 2018

வாழ்வின் அடைக்கலம்

எங்களுக்கு பனை ஈர்க்கில் விளக்குமாற்றை எடுத்துக்காட்டிய பெண்மணி நாங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்த ஒரு மாட்டு கொட்டகையை சுட்டிக்காட்டினார். சிமண்ட் தூண்கள் தாங்கிநின்ற அந்த கொட்டகையில் அப்போது மாடுகள் ஏதும் இல்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் ஒரு கொட்டகை போலால்லாது ஆஸ்பெஸ்டாஸ் ஓடு இட்டிருந்தார்கள். அதனைத் தாங்கிபிடிக்கும் பனை மர தடிகள். புரிந்துகொண்டேன். எனது பயணத்தில் முழுக்க, பனை இருக்குமிடங்களில் பனை மரத்தடிகள் கட்டுமானத்தில் மிக முக்கிய பங்களிப்பு ஆற்றியிருக்கிறது என்பது நான் காணத் தவறாத ஒரு உண்மை. இது மகிழ்வளிக்கக்கூடிய செய்திதான்.

DSC06201

பனை மரத் தடி எப்படி கட்டுமான பொருளாகியிருக்கும்? பனங்காட்டில் ஆதி மனிதர்கள் வாழ்ந்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கும்போது, மூப்படைந்த பனைகள் சாய்ந்து விழுவதை எடுத்து நாட்டுகின்ற வழக்கம் இருந்திருக்கலாம். ஒரு வேளை இறந்த மரங்களை  திரும்பவும் நடுவதன் மூலமாக மீட்டுவிடலாம் என எண்ணியிருப்பார்களோ. ஆகவே தான் பிற்காலங்களில் மட்கிப்போகின்ற மரங்களுக்கு பதிலாக மட்காத கற்களை எடுத்து நாட்டுகின்ற வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் காணப்படுகின்ற நடுகல் என்கிற வழக்கத்திற்கும், கொடிமரம் என்கிற நீண்ட பண்பாட்டிற்கும் ஆதி காரணமாக வீழ்ந்த பனை மரங்கள் இருந்திருக்கலாம்.

இதற்கு அடுத்தபடியாக குடிசைகள் அமைக்கும் சூட்சுமங்கள் உலகெங்கிலும் ஒன்றுபோலவே இருந்திருக்கிறதை நாம் கண்டுகொள்ளுகிறோம். வட்ட வடிவான குடிசைகள். அவற்றின் நடுவில் ஒரு நீண்ட பனை மரத் தடி நாட்டப்பட்டிருக்கும். உயர்ந்திருக்கும் பனைமரத்தடியிலிருந்தே மற்ற இடங்கள் சரிந்து செல்லும். இவ்வித ஒரு அமைப்பு தான் ஆரம்ப கட்டுமானங்கள் கொண்டிருந்தன என நான் எண்ணுகிறேன்.மழை நீர் ஒழுகவும் வீட்டின் உள்ளே போதுமான இடங்கள் அமையவும் இந்த நெடிந்துயர்ந்த உருளை மரம் முக்கியம்.

பனை மரத்தடிகளை முதலில் உருட்டிதான் சென்றிருப்பார்கள். மிகவும் நீளமான சக்கரம் இது. அப்படியே சக்கரம் கண்டுபிடிப்பதற்கான முதல் எண்ணம் பனை மரத்தடியிலிருந்தே பெறப்பட்டிருக்கும். இவ்விதமான ஒரு சடங்கு இன்றும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொடிருக்கிறதை சமீபத்தில் ஈசன் தங்கு என்ற கோவில் விழாவில் பார்த்தேன். கார்த்திகை மாதத்தில், சொக்கப்பனைக் கொழுத்துவது வழக்கம் பல்வேறு ஆலயங்களில் உண்டு. ஈசன்தங்கு ஆலயத்தைப் பொறுத்த அளவில், சொக்கப்பனைக்கான பனையினை யாரேனும் நேர்ந்துவிடுவார்கள். நேர்ந்துவிடப்படும் பனை எந்த வளைவும் சுளிவுமின்றி, நேராக நேர்த்தியாக இருக்கவேண்டும். பக்தர் ஓரிருவர் இதற்கென விரதமிருப்பர். குறிப்பிட்ட நாளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பனை நோக்கிச் செல்லுவார்கள். விரதமிருந்தவர் கைகளில் கோடாலி இருக்கும். பனை இருக்கும் இடம் சென்றபின்பு வெட்ட இருக்கும் பனை மரத்திற்கான பூசைகள் செய்யப்படும். இன்றைய தினங்களில் “அய்யர்” வந்து பூசைகள் செய்கிறார்.

விரதம் இருந்தவர்கள் இருவர் பனை மரத்தினை கோடாலிகள் கொண்டு வெட்ட ஆரம்பிக்கிறார்கள். எந்த பகுதியில் இந்த மரம் சாய்ந்து விழவேண்டும் என்ற நோக்கோடே மரத்தை குறிபார்த்து வெட்டுகிறார்கள். விழுந்த மரத்தினை கண்டு சுற்றியிருக்கும் பெண்கள் குலவையிடுகிறார்கள். மரத்தின் மீது ஆப்புகள் அறையப்பட உளிகளால் குழிகள் எடுக்கப்படுகின்றன. பின்னர் அறையப்பட்ட ஆப்புகளுடன் கயிறுகள் கட்டப்பட்டு  இழுத்துச்செல்லப்படுகின்றது.

இந்த பனை மரத்தினை இழுத்துச் செல்லுவதற்கு அவர்கள் மிக அதிகமான மனித ஆற்றலை செலவிடுகின்றனர். இந்த காட்சிகள் யாவும் தொன்மையான மரபின் நீட்சி தான். அப்படியிருக்கையில் எப்படி, இவைகள் ஒரு உருளையாக பயன்பட்டிருக்கும்? முதலில், ஒரு பரந்து விரிந்த நில அமைப்பிலிருந்து இவைகளை உருட்டிக்கொண்டு வந்திருக்கலாம், பிற்பாடு பனைமரக் காடுகளுக்குள் விழுந்துகிடக்கும் பனைமரங்களை எப்படி வெளியில் கொண்டுவருவது என்ற எண்ணத்தில் இவைகள் ஆப்படிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டிருக்கும். இப்படி இழுத்துவரப்படும் வேளைகளில் சாலையில் உராய்ந்து, உருளையான மரங்கள் சற்றே சதுரவடிவை எட்டிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். இது ஒரு கட்டிடக்கலையின் அடிப்படையாக காணப்படுவதை ஒருவரும் மறுக்கவியலாது.

இன்றும் கற்களை உருட்டிச் செல்வதற்கும் பாரமான மரத்தடிகளை உருட்டிச் செல்லுவதற்கும் பனந்தடிகளே பயன்படுகின்றன. குறிப்பாக மயிலாடியில் இருந்து ஏற்றப்படும் கற்கள் யாவும் வாகனங்களுள் எந்த சேதமும் இன்றி அமைந்திருப்பதற்காக பனங்கம்புகளும், அவற்றை இறக்குவதற்கும் பனங்கம்புகளே தேவைப்படுகின்றன. இவைகள் நமது கட்டுமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன என்பதை எவராலும் மறுக்கவியலாது.

பனங்கம்பைச் வெட்டிபிளப்பதற்கு  ஏற்ற பொருள் கோடாலிதான். தென்மாவட்டங்களில்  வாச்சி எனப்படும்  ஒரு கருவியினை வைத்திருப்பார்கள்.  வாச்சி கோடாலியின் கனத்துடன் மண்வெட்டி வடிவிலிருக்கும் ஒரு இரும்பு ஆயுதம். இன்று குமரி மாவட்டம் முழுவதும் நாம் தேடி எடுத்தோம் என்று சொன்னால் வாச்சி பிடிக்கத்தெரிந்தவர்கள் 10 நபர்கள் கூட தேறமாட்டார்கள். இத்தனைக்கும் பனங்கம்பு வியாபாரம் குமரி மாவட்டத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறது. பூக்கடை என்ற பகுதியில் முப்பது வருடங்களுக்கு முன்பு கூட 7 பனங்கம்பு வியாபாரிகள் இருந்திருக்கின்றனர். இன்று ஒட்டுமொத்த மாவட்டத்திலும் ஏழு கடைகள் இருக்குமா என்பது சந்தேகமே.

பனங்கம்புகளில் செய்யப்படும் வீடுகள் உறுதியாகவும் கலை நேர்த்தியுடனும் இருக்கும். வாஸ்து என்பதே பனை மர கழிகோல்கள் இட்ட வீடுகளைக் குறிப்பதாகவே இருந்திருக்கிறது. குவிந்து மேலெழும் ஓடுகள் கொண்ட வீடுகளுக்கு வாஸ்து அமைப்பு தன்னளவில் சிறப்பாக இருப்பதாக புரிதலுள்ளவர்கள் கூறுவார்கள். அதனால் தானோ என்னவோ, பனை மரங்களை வெட்டுவது வீடு கட்டுவதன் ஒரு அங்கமாகவே வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். நமது முன்னோர்கள் வைத்த வீடுகள் மூன்று தலைமுறைகளையும் தாண்டி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறதை நாம் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.

பனைமரங்களை மட்டும் கொண்டு ஒரு அழகிய வீடு கட்டவேண்டும் என்பது எனது நெடுநாள் எண்ணம். ஆனால் இன்று பனை சார்ந்த புரிதல் கொண்ட ஆசாரிகள் குறைவு. என்னைப்பொறுத்த அளவில், பனை சார்ந்த வீடுகளை அமைப்பது என்பது ஒருவகையில் சூழியலை மேம்படுத்தும் பணிதான். மரங்களை வெட்டக்கூடாது என சொல்லுபவர்கள் மரங்களோடு மிகப்பெரிய தொடர்பு இல்லாதவர்கள். தங்கள் வீட்டிற்கென மர பொருட்களை வாங்கி குவித்திருக்கும் இவர்களின் பேச்சைக்கேட்டு மரங்களின் பய்ன்பாட்டைக் குறைத்தால், இறுதியாக இரும்பு பொருட்களையோ அல்லது பிளாஸ்டிக் கதவுகளையோ தான் நாட வேண்டி இருக்கும்.

பனை மரம் கொண்டு ஒரு வீடு அமைப்பது என்பது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல. ஏழைகளே பனை சார்ந்த ஒரு வீட்டினை தனதென உரிமைக்கொண்டாட இயலும். இவ்வித கட்டுமானங்கள் எவ்வகையிலும் சூழியலை மாசுபடுத்துவது அல்ல. ஒரு மரம் வெட்டப்பட்டது என்றால் ஒராயிரம் மரங்களை நடும் உளப்பாங்கு கொண்டவர்களே பனை மரங்களை தமது வீட்டிற்கென பயன்படுத்துவார்கள். அவ்விதமான ஒரு கொடுக்கல் வாங்கல் என்பதனை புரியாதவர்கள் மற்றும் சூழியலுக்கு அன்னியமானவர்களே மரங்களை வெட்டவே கூடாது என கொடிபிடிப்பவர்கள்.

இன்றுபோல முற்காலங்களில் பனை மரங்களைக் மின் ரம்பங்களிக் கொண்டு கண்ணை மூடியபடி வெட்டி வீழ்த்தும் முறைமை நமக்கு கிடையாது. பனை மரத்தினை ஆய்வு செய்யும் ஆசாரி ஒருவர் வருவார். பனைகளை  ஆய்வு செய்வார். அந்த ஆய்வில், பனை மரம் நேராக இருக்கிறதா? விளைந்திருக்கிறதா? பறவைகளோ அணில்களோ கூடுகள் ஏது வைத்திருக்கிறதா போன்றவைகளை ஆராய்ந்து பின்னர் அவர் காட்டும் வழிமுறைகளை பின்பற்றியே பனைகள் முறிக்கப்படும்.

ஒருவேளை எதிர்காலத்தில் நான் பனை மரங்களை அடிப்படையாக கொண்டு வீடு ஒன்று அமைத்துவிட்டேன் என்றால், கண்டிப்பாக அது எனது விருப்பம் சார்ந்த ஒன்றாக மாத்திரம் அல்ல, சூழியலையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படும். கண்டிப்பாக சில நியாயவாதிகள் நாளைக்கு கிளம்பி வருவார்கள். பனை பாதுகாப்பு எனக்கூறிவிட்டு பனை மரங்களையே வெட்டி பயன்படுத்துகிறீர்களே என கண்டிப்பாக கேள்விக்கணைகள் தொடுக்கப்படும். குறிப்பாக என்னைப் பார்த்து பனை மரங்களை அனேகர் வெட்டி வீழ்த்திவிடுவார்கள் என சொல்லப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நான் முவைக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. பனை சார்ந்த பாதுகாப்பு பணிகளை நீங்களும் தொடர்ந்து முன்னெடுங்கள். அது பனை சார்ந்த புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தும், பிற்பாடு உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் பனை வீடுகளைக் கட்ட முடியும். அது சூழியலுக்கு மிகப்பெரும் பங்களிப்பாற்றும் ஒன்றாக இருக்கும்.

இன்று நாம் அமைக்கும் வீடுகள் காங்கிரீட் மூலமாக கட்டப்படுகின்றன. இவைகளை இருபது முப்பது வருடங்களில் உடைத்து போட்டுவிடுகிறார்கள். இவ்விதமாக வீணாகும் பொருட்கள்  மிக அதிகம் என்பதால் இவைகளின் பயன்பாட்டை எப்படி சுருக்குவது என்கின்ற எண்ணங்களையே கட்டிடவியல் வல்லுனர்கள் இன்று முன்வைக்கின்றார்கள்.

இன்று எனது நட்பு வட்டத்தில் அனேகர் பனை சார்ந்த குடில்களை அமைப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அடுத்த வருடம்  முதல் தமிழகமெங்கும் பனைசார்ந்த குடிசைகள் எழும்பும். அரசு அவ்விதம் குடிசை அமைப்பவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. அந்த அளவிற்கு அவைகள் எளிமையாகவும், பொருளியல் சார்ந்து எண்ணத்தலைப்படுகையில் விலை குறைவாகவும் இருக்கும். தற்சார்பு பொருளியலின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப அவைகளை நாம் புனரமைத்துக்கொள்ளலாம்.

அந்த வீட்டின் முன்னால் நாங்கள் பார்த்தவைகள் மாத்திரம் அல்ல இன்னும் அனேக இடங்களில் பனை மரமே வீடுகள் கட்டுவதற்கு அடிப்படையாக இருந்திருக்கிண்றது. இவைகளை மீண்டும் நமது வாழ்வில் கொண்டுவர, நாம் முயற்சிக்க வேண்டும். அதுவே பனை ஒரு பயன்படு மரம் என்ற விழிப்புணர்வைத் தர வல்லது.

சமீபத்தில் பனை சார்ந்து எங்கள் தேடுகையை நாங்கள் முன்னெடுக்கையில் மணப்பாடு அருகில் ஒரு மிகப்பெரிய ஓட்டுக்கட்டிடம் எங்கள் கண்களில் தென்பட்டது. அனைத்தும் மிகப்பெரிய பனை மர தூண்களால் அமைக்கப்பட்ட அந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். பனை மரங்கள் அப்படியே நாட்டப்பட்டதால், அங்கே மரங்கொத்திகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் வந்துசெல்லும் வாய்ப்புகள் இருக்கிறது போலும். குறிப்பாக பெரும்பாலான மரத்தூண்களில்  சிறிய ஓட்டைகள் இருந்தன. நூற்றுக்கணக்கான கிளிகள் அங்கே தங்கியிருந்ததைக் கண்டு வியந்துபோனோம்.

அப்படியென்றால்  பனை சார்ந்து நாம் அமைத்துக்கொள்ளும் வாழிடம் இயற்கை சார்ந்த  ஒன்றாக இருப்பதுடன், பல்வேறு உயிரினங்களுக்கும் அடைக்கலமாக விளங்கும் என்பது உண்மை. பல்வேறு உயிரினங்கள் எனச் சொல்கையில் பனை சார்ந்த வேறு பல உயிரினங்களும் இவைகளுடன் இருக்க வாய்ப்புள்லது. குறிப்பாக, பாம்பு, பூரான், தேள், சிலந்தி போன்ற சில விஷ ஜந்துக்களும் இவைகளுடன் இணைந்தே இருக்கும். இவைகளை எதிர்கொள்ளும் திராணியற்ற எவரும், இயற்கை சார்ந்த இவ்வித முன்னெடுப்புகள் நோக்கிச் செல்லாமல் இருப்பது நலம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் வேறொரு வாலிபனும் எங்களுடன் இணைந்துகொண்டான். அப்போது தருண் இந்த மரம் இரும்பை ஒத்தது என கூறிக்கொண்டிருந்தார். இவ்விதமான கட்டுமானங்களின் பயன்பாடுகள் அருகிக்கொண்டுவருகிறது எனக் கூறினார். பாரம்பரிய கட்டுமானங்களில் உள்ள எளிமையையும் நுட்பத்தினையும் நமது பொறியியல் மாணவர்கள் கண்டடையவேண்டும். அவ்வித கட்டுமானங்களை நவீன வாழ்விற்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்தவேண்டியது நம்மேல் விழுந்த கடமை.

நமது கட்டிட கலைகளில் கூடி நிற்கும் அம்சம் என ஒன்றுண்டு. அது பனை நமது வாழ்வின் அடைக்கலம் எனும் உண்மையினை பறைசாற்றுகின்ற ஒன்றாகவே இருக்கிறது.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

 

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 10

திசெம்பர் 3, 2018

அறுபடாத  சரடுகள்

அந்த ஊரில் நாங்கள் பார்த்த இரண்டு காட்சிகளை நான் பதிவு செய்தாகவேண்டும். ஒன்று வழி நெடுகிலும் இருந்த ஈச்சமரங்களில் காணப்பட்ட வடுக்கள். பனை மரத்திலிருந்து பதனீர் இறக்கையில் அதன் பூங்கொத்திலிருந்தே பதநீர் வடித்தெடுக்கப்படும். ஈச்சமரங்களைப் பொறுத்தவரையில் அதன் தண்டுகளில் உள்ள வடுக்கள் தெரியுமாளவிற்கு காயங்கள் ஏற்படுத்தியே கள் இறக்கப்படுகிறது. நான் சென்ற நேரம் கள் விற்பவர்களையோ அல்லது ஈச்சமரம் ஏறுபவர்களையோ காணமுடியவில்லை. ஆனால் கள் இறக்கப்படும் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது. எனது முந்தைய பனைமரச்சாலை பயணத்தில் ஈச்சமரத்திலிருந்து கள் எப்படி பெறப்படும் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். ஒருவேளை இடத்திற்கு இடம் பதனீர் சீவும்  விதங்கள் சற்றே மாறுபடலாமோ, தெரியவில்லை. பனையைப் பொறுத்த அளவில் பதனீர் சீவுவதில் வேறுபாடுகள் உண்டு.

இது குறித்து நான் மேலும் விசாரிக்கையில் பனை மரம் ஏறி எவரும் கள்ளோ பதனீரோ இறக்குவதில்லை எனவும் கள்ளிற்காகவும் பதனீருக்காகவும்  ஈச்சமரங்களே பயன்படுத்க்தப்படுகின்றன என்றும் கூறினார்கள். ஏன் இந்த தெரிவு? பனை ஏன் கைவிடப்பட்டது? அதற்கு முதன்மையான காரணம் ஒரிசாவைப்பொறுத்த அளவில் மக்கள் தங்கள் தேவைகளுக்கென தெரிவு செய்ய இருக்கும்  வாய்ப்புகள் பலவாறாக விரிந்திருப்பதுதான் என்று  நான் எண்ணுகிறேன். ஆம் அங்கே மூங்கில் இருக்கிறது, தென்னை இருக்கிறது, ஈச்சமரம் இருக்கிறது மேலும் பனையும் இருக்கின்றன. எதிலிருந்து எவைகளை எளிதாக எடுக்கமுடியுமோ அவைகளைலிருந்தே தேவயானவற்றை மக்கள் எடுத்துக்கொள்ளுகின்றனர். மூங்கிலைக்கொண்டு பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் செய்துகொள்ளுகின்றனர், அவ்விதமாகவே ஈச்சமரத்தையும் பயன்படுத்துகின்றனர். ஈச்சமரத்தை தெரிவு செய்வதற்காண காரணம் அதன் உயரம் பனையோடு ஒப்பிடுகையில்  குறைவே. ஆகவே எளிதாக ஏறலாம் மேலும் ஒருவரே அனேகம் எண்ணிக்கையில் மரங்களையும் ஏற முடியும். ஒருவகையில் பனைக்கான மாற்றாக ஈச்சமரம் அங்கே பங்களிப்பாற்றுவதை நான் உணார்ந்துகொண்டேன்.

இந்த தெரிவும் மக்கள் காலம் காலமாக தங்கள் சூழலில் உள்ள மரங்களை நன்கு அவதானித்து தங்கள் வாழ்விற்கு எது ஏற்றது என்ன என தெரிந்துகொண்டதால் ஏற்படுத்திய வழிமுறைகள். ஆகவே இந்த இடத்தில் எந்த மரம் பெரியது? எது மிக பயன்பாடுள்ளது என்ற கேள்விகளுக்குள் போகாமல், இந்த தெரிவு செய்ய காரணமாயிருந்தவைகள் என்ன என எண்ணிப்பார்ப்பதே சிறத்தது.

பனை மரம் எல்லாம் தரவல்லதாயிருந்தாலும், ஒரியமக்கள் (இதை நான் உறுதிபட சொல்லவில்லை, நான் கண்டவைகளையும் கேட்டவைகளையும் வைத்தே சொல்லுகிறேன்) பனை மரத்தினை முழுவதுமாக பயன்படுத்தவில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் எங்கே எவைகள் இலகுவாக கிடைக்கிறதோ அவைகளை அங்கே தானே பெற்றுக்கொள்ள விழைகிறார்கள். இது எவ்வகையிலும் அவர்கள் பனை மரத்தினைக் குறைத்து மதிப்பிட்டார்கள் என சொல்லுவதற்கில்லை. மாறாக, பனையின் பல்வேறு பரிணாமங்களை அவர்கள் ஆய்ந்தரிந்திருக்கிறார்கள் என்பதில் நாம் மாற்று கருத்து கொள்ளவியலாது. குறிப்பாக பனை ஓலைகளின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் ஒரிய மக்கள். அவைகள் மிக முக்கிய எழுதுபொருளாக இருந்திருக்கிறது. ஆகவே பனை மரத்தினை, அதன் எழுத்து சேவைகளுக்காகவே பேணியிருக்கிறார்களோ என்கிற எண்னமும் ஏற்படுகின்றது. அப்படியானால் பனை மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு என்பது அபாரமானது. எவரும் எளிதில் கண்டுகொள்ள இயலாத அதன் தனித்தன்மையினை யாவும் அவர்கள் பனையிலிருந்து கண்டடைந்து அந்த மரத்தினைப் பேணிவருகிறார்கள் என்றே நான் எண்ண தலைப்படுகிறேன்.

இவ்விதமான வாசிப்பு இருவேறு வகைகளில் நமக்கு நன்மை பயக்கக் கூடியது. ஒன்று, இம்மக்களின் பனை சார்ந்த புரிதலில், பதனீர் மற்றும் கள் அவைகளின் உப பொருளான கற்கண்டு மற்றும் கருப்பட்டி போன்றவைகள் குறித்த  எண்ணம் அவர்களிடம் குறைந்திருக்கும் அளவு, அவர்களிடம் பனை சார்ந்த வேறு பல காரியங்கள் உயர்நிலையடைந்திருக்கும். இவ்விலகல் இம்மக்களிடம் இருப்பதால் இப்பகுதிகளிலேயே பனை சார்ந்த இன்னும் பல்வேறு வேலை வாய்ப்புகள் இன்றும் வளமுடன் இருக்கின்றன என்கிற நற்செய்தி.

ஒரிய மக்களில் 22 சதவிகிதம் பேர் ஆதிவாசிகள். ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள ஆதிவாசி இனக்குழுக்களின் எண்ணிக்கை 437 என்பதாகவும், அதில் 62 இனக்குழுக்கள் ஒரிசாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வாழ்வில் பனை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் என்னால் எந்தவிதமான ஆதிவாசிமக்களுடனும் உறவுகளை இப்பயணத்தில் ஏற்படுத்தமுடியவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம். கண்டிப்பாக நான் ஒரு மிகப்பெரிய கலை வளத்தை கண்டுணறத் தவறியிருக்கிறேன் என்பதனை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆகவே சற்றே மனக்குறையுடனே எனது ஒரிய பயணத்தை நான் பதிவுசெய்யவேண்டி இருக்கிறது.

அதே நேரம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை உண்டு. பனை சார்ந்த தகவல்கள் பெருமளவில் நம்மைத் தேடி வந்தடைவதில்லை. நாம் தான் அவைகளை நோக்கிச் செல்லவேண்டும். அவ்விதம் செல்லுவதற்கு மிக அதிக பொருளியல் பலம் வேண்டும். தொடர் உழைப்பு கோரும் பணி அது. கடந்த இரு வருடங்களில் மட்டும் நான் தமிழகத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பனை ஓலைப் பொருட்களை குறித்து முதன் முறையாக அறிந்து அவைகளை ஆவணப்படுத்தியிருக்கிறேன். தமிழகத்திற்குள்ளேயே நம்மால் அறிந்து கொள்ள இயலாத பொருட்கள் பயன்பாட்டில் இருக்குமென்றால், ஒரியாவினை ஐந்து நாட்களில் நான் காண முற்படுவது என்பது வெறுங்கையால் முழம் போடுவது போன்றதுதான். எனது இக்குறைப்பாட்டுடனே  இவைகளை நான் அவதானிக்கின்றேன்.

தமிழகம் முழுக்க பல்வேறு பனை சார்ந்த பொருட்கள் அழிந்துவருகின்றன. காரணாம் கடந்த தலைமுறைகள் அறிந்திருந்த பனை ஓலை கலை பொருட்கள் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் யாவும், நவீன காலத்தில் மரத்தாலும், இரும்பாலும், பிளாஸ்டிக்காலும், காகிதங்களினாலும் பயன்பாட்டிற்கு வருகின்றன. ஒரே நேரத்தில் நான்கு எதிரிகளைச் சமாளிக்கும் கடும் போட்டி இது. போட்டிகள் கடுமையாக இருக்கையில், காலம் பனை சார்ந்த பயன்பாட்டுப்பொருட்களை பின்னுக்குத் தள்ளுகிறது.

இவ்வித சூழலில் பனை மரத்திலிருந்து பெறப்படும் பொருட்களை நாம் இலகுவில் பேண இயலாது. புகைப்படங்கள் ஒருவகையில் ஆவணப்படுத்துதல் என்றாலும், ஓலையில் செய்யப்படும் பொருட்கள்,  நமது ஊர்களில் உள்ள ஒரு ஓரிடத்தில் அருங்காட்சியகமாக பேணுவதும் செலவேறிய ஒரு செயல். மாறாக, இப்பொருட்களச் செய்யும் மக்களை நாமே முன்வந்து தாங்குவது மிக எளிய செயல். அவ்விதமாக இம்மக்களின் பொருட்களுக்கு ஒரு சந்க்டை வாய்ப்பை அளிப்பதோடு நிறுத்திவிடாமல், இப்பயன்பாட்டு பொருட்களை அடுத்த தலைமுறைகளுக்கு ஏற்ற வகையில் கடத்துவதும் நமது பணியாக இருக்கவேண்டும். எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் பனை ஓலைக் குடுவை செய்ய ஒருவரே இருக்கிறார். நாம் தேடி அலைந்தோம் என்றால் தமிழகம் முழுக்க 10 நபர்களை நம்மால் கண்டடையமுடியுமாயிருக்கும். இவ்விதம் கண்டடைபவர்களை அந்த அந்த பகுதிகளில் தானே பயன்படுத்தி இக்கலைகள் உயிர்ப்புடன் இருக்கச்செய்யவேண்டியது நமது பணி.

DSC06195

இரண்டாவதாக நாங்கள் பார்த்த ஒரு காரியம், பனை ஓலைகளை எடுத்து அவர்கள் கயிறாக பாவிப்பது.  விறகுகளைக் கட்டுவதற்கு அவர்கள் பனை ஓலைகளை பயன்படுத்துகிறார்கள்.  உண்மையில் ஓலைகள் கயிற்றின் பணியைச் செய்கின்றனவே அன்றி அவைகள் கயிறாக திரிக்கப்படவில்லை. ஓலை கயிற்றின் பணியைச் செய்கிறது என்பது எனக்கு மிகப்பெரிய ஒரு தகவல். நான் மும்பையில் மீரா ரோடு என்ற பகுதியில் பனியாற்றியபோது அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டருக்குள் தான் கோரே பீச். சில வேளைகளில் நானும் எனது பிள்ளைகளும் அங்கே செல்வோம். என்னோடு சில நேரங்களில் பயணிப்பது போதகர் எமில். ஒருமுறை பனை ஓலைகள் வேண்டும் என தேடிச்செல்லுகையில், போதகர் எமில் அவர்கள் என்னோடு கூட வந்தார்கள். அவர்கள் தான் நாங்கள் வாங்கிய ஓலைகளை ஓலையைக்கொண்டே கட்டினார். புத்தம் புது காட்சியாக அது எனக்கு எப்படி தென்பட்டதோ அதைவிட ஒரிய மக்கள் ஓலைகளை பயன்படுத்தி விறகு கட்டுகளை இணைத்திருப்பது பிரமிப்பளிக்கும் ஒன்றாகவே இருந்தது.

DSC06197

இதே அளவுள்ள விறகுகட்டுகளை கட்டுவதற்கு மட்கிப்போகின்ற தென்னை நார் பொச்சம் ஒன்று வாங்கவேண்டுமென்றால் சுமார் 12 ரூபாய்க் கொடுக்கவேண்டும். மட்காத நெகிழி நாடாக்களோ/ கயறுகளோ இருந்தாலும், அவைகளும் இக்கிராம சூழல்களுக்கு ஏற்றவைகள் அல்ல. காடுகளுக்குள் சென்று தேவையான விறகுகளை இலவசமாக பெற்றுக்கொண்டு வருகின்ற மக்கள், அவற்றைக் கட்டுவதற்கும் இலவசமாக காட்டுக்கொடிகளை எடுத்க்டுக்கொள்வதே இயல்பு. அவ்வகையில் பனையோலைகள் அங்கே காணப்பட்டதால் எளிதாக கிடைக்கும் ஆகையால் மக்கள் இன்றளவும் அதனை பயன்படுத்துகின்றனர்.

DSC06196

என்னைப்பொறுத்தவரையில் மிக முக்கிய தடயம் இது.  பனை சார்ந்த தேடுதலில் ஒரிசா ஏன் முக்கியம் என்பதற்கு இதை விட பெரிய சான்று கிடையாது. மேலும் ஒரிசா தன்னுள் இன்னும் பனை சார்ந்த ஆதி பயன்பாட்டு பொருட்களை கொண்டுள்ளது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது என கொள்ளுமளவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.

சமீபத்தில் எனது நண்பர் மரியதாஸ் அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பழங்குடியினர் செய்யும் பனை ஓலை கயிற்றின் படங்களை எனக்கு அனுப்பியிருந்தார். நான் அந்த படங்களை எனது வாழ்நாளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கொண்டாடிக்கொண்டிருந்தபொழுது, அனேகர், இது ஒரு விஷயமே அல்ல, எங்களூரில் இதுபோன்றே அனேகர் செய்திருக்கிறார்கள் எனக் கூறினார்கள். அப்படியானால் ஒரே ஒரு நபரை நான் பார்க்க உதவி செய்யுங்கள் என்று பலரிடம் கேட்டும் ஒருவராலும் எனக்கு உதவி செய்ய இயலவில்லை.

Africa

சாதாரண கயிறு தானே என நாம் எண்ணிக்கொள்ளுவோம், ஆனால் கயிறு திரிக்கும் 40,000 வருடத்திற்கு முந்தைய யானைத் (Mammoth) தந்தத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் கயிறு திரிப்பது எத்துணை பழங்கால தொழில் வடிவமாக இருந்திருக்கும்? கயிறு தான் சக்கரங்களுக்கு முந்தைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு. தனக்கு மட்டுமல்ல தனது குடும்பத்திற்கும் உணவை எடுத்துச் செல்ல வெண்டும் என்கிற எண்ணத்திலிருந்து பெற்ற ஒரு தொல் அறிவு இது. இன்று கிராமப்புறங்களிலும் பழங்குடியினரிடமும் மீன்களை ஈர்க்கிலில் கட்டியெடுத்துச் செல்லும் ஒரு வழக்கம் உண்டு. மிக எளிதான முறையில் செய்யப்படும் இந்த நடைமுறை அறிவே பிற்காலங்களில் ஓலைகளை திரிக்கும் ஞானமாக உயர்ந்து, தென்னை நார் மற்றும் பல்வேறுவகையான செயற்கை இளைகளை திரித்து கயிறாக்கும் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது.

Africa 2

கைகளைக்கொண்டே எளிதாக கயிறு திரிக்கலாம் எனும்போது அது ஒருவருடைய உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒன்றாக இருக்கிறது. வணிக வலைகளுக்குள் சிக்காமல் இவ்விதமாக மக்கள் இயற்கை சார்ந்து வாழ்வது அவர்கள் தேவைக்கான அனைத்தும் அம்மண்ணிலிருந்தே பெறப்படுகின்றன என மெய்பிக்கும் சான்றுகளாகும்.

Africa 1

நான் பார்த்த அனைத்து விறகு கட்டுகளும் புத்தம் புதிய ஓலைகளை கீறியெடுத்து கட்டப்பட்டவைகள் என நான் உணர்ந்தபோது பல்லாயிரம் வருட அறுபடாத தொடர்பு ஒரிய மண்ணில் இருக்கிறது என உணர்ந்துகொண்டேன். கயிறுகள் தான் வீடு கட்டவும், கப்பல் கட்டவும், வலையென மாற்றுரு கொள்ளவும் அடித்தளமாயிருந்தவைகள். ஆகவே நாகரீகத்தை இணைக்கும் சரடுகள் இவைகளே. சுமார் 30 கிலோ எடை வரை தாங்கும் இந்த ஓலைகள் கயறுகளாக இன்றும் செயலாற்றுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. பனை ஓலைகள் அனைத்தையும் கட்டிப்போட்டிருக்கும் மந்திரக்கயிறுதான்

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com


%d bloggers like this: