சமீபத்தில் ஒரு அசம்பிளீஸ் ஆஃப் காட் திருச்சபையின் போதகர் என்னை அழைத்து, இன்று உங்களைக் காணவேண்டும் என்று கடவுள் என்னிடம் சொன்னார் என்றார். கடவுள் சொன்னால் கண்டிப்பாக நாம் மறுக்கக்கூடாது இல்லையா, “வாருங்கள்” என்றேன். பேருந்து பிடித்து வந்து சேர்ந்தவரை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அழைத்து வந்தேன்.
தனக்கு வயது 35 ஆகிறது என்றும் நல்ல ஒரு பெண்ணைத் தான் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். நான் பொதுவாக திருமண பொருத்தம் பார்ப்பதில் தேர்த்தவன் அல்ல. ஆகவே உங்களுக்கு ஏற்ற வரன் வரும்போது சொல்லுகிறேன் என்றே சொல்லிவைத்தேன். அன்று இரவு எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அந்த சூழலில் சலிக்காமல் உணவை சமைத்து ஜாஸ்மின் அவர்களுக்கு கொடுத்தாள். இரவு உணவு உண்டபின் அவர் பேருந்தை தவற விட வாய்ப்பு உள்ளதால் பரபரப்பாகவே உணவளித்தோம். நேரமாகிறது என உணர்ந்த பின் புறப்படும்போது ஜெபிக்க ஆரம்பித்தார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29: 11 திருவிவிலியம்) என்ற வசனத்தை கர்த்தர் அவருக்கு காண்பித்து என்னிடம் சொல்ல சொன்னதாகவும் கூறினார்.
இந்த வசனம் பல்வேறு கிறிஸ்தவ வீடுகளில் அலங்காரமாக மாட்டப்பட்டிருக்கும், பலரால் சிறந்த மேற்கோளாக எடுத்து காட்டப்படும். உலகில் நடைபெறும் அனைத்துமே நமது நன்மைக்காக எனும் எண்ணம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கு, இந்த வசனம் கருப்பட்டியை முழுமையாக உடைத்து படைத்து வைத்தத்போல போல. எவர் இந்த வசனத்கைக் கேட்டாலும் உருகி மயங்கிவிடுவார். கடவுள் இப்போதே நம் வாழ்வில் ஏதோ மாய மந்திரங்களைச் செய்துவிடுவார் போலிருக்கும். சற்றே நிதானித்து இந்த வசனங்கள் எவைகளைக் கூற முற்படுகிறது என்பதை அறிவோம்
1 எருசலேமிருந்து பாபிலோனுக்கு
நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள்
எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள்,
இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும்
இறைவாக்கினர் எரேமியா
எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.
2 அரசன் எக்கோனியா, அரச அன்னை,
அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள்,
தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர்
எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், [1]
3 சாப்பானின் மகன் எலாசா,
இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப்
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம்
யூதாவின் அரசன் செதேக்கியா
அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.
4 அதன் சொற்களாவன:
“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான்
எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு
நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே:
5 வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்;
தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.
6 பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள்.
உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்;
உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்!
இவ்வாறு அவர்களும் தங்களுக்குப்
புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்.
அங்கே பல்கிப் பெருகுங்கள்;
எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
7 உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ,
அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்;
அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;
ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான்
உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.
8 இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே:
உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும்
குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.
9 அவர்கள் காணும் கனவுகளை
நீங்கள் பொருட்படுத்தாதீர்கள்.
ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப்
பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.
நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
நாடு கடத்தப்பட்டிருந்த மக்கள் அரசர், தலைவர்கள், தச்சர்கள் என ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு என ஒரு கடிதத்தை எரேமியா இறைவாக்கினர் எழுதுகிறார். அது அரசனின் கரங்களில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார். அந்த கடித்தத்தில் பின்வருவனவற்றை அவர் மிகவும் கருத்தூன்றிச் சொல்லுகிறார்.
வீடுகளை அமைத்துக்கொள்ளவும், தோட்டங்களை அமைத்துக்கொள்ளவும், திருமணங்கள் செய்துகொள்ளவும் நாடுகடத்தப்பட்ட மக்களை கடவுள் அறிவுறுத்துகிறார். நாடு கடத்தப்பட்ட இடத்தில் இருந்த மக்களைப் பார்த்து மேலதிகமாக அவர் சொல்லுவது நீங்கள் இருக்கும் நகரை வாழ்த்துங்கள் எனவும் அதற்காக மன்றாடுங்கள் என்பதாகவும் அந்த மடல் விரிகிறது. அதற்கு காரணம் அந்த நகர் நன்றாயிருந்தாலே நீங்களும் நன்றாயிருப்பீர்கள் என்பதாக அந்த வார்த்தைதைகள் தெளிவுபடுத்துகின்றன.
அப்படியே இஸ்ரவேலருக்குள் இருக்கும் இரைவாக்கினர் “கடவுளின் பெயரால்” என எதைக்கூறினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் எனவும் அவர் எச்சரிக்கிறார். இவைகள் எப்படி கடவுளின் பெயரால் பொய்மை உரைப்பவர்கள் அங்கே இருந்த்திருக்கின்றனர் என்பதை நமக்கு தெளிவுற காண்பிக்கின்றது. நாடு கடத்தப்பட்ட மக்களின் “மன உளைச்சலைக் கூட்டும்” வித்தை தெரிந்தவர்கள் போலும் இந்த போலி இறைவாக்கினர்.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” என்கிற இந்த வசனத்தில் காணப்படும் முதல் பகுதியில் சொல்லப்படும் “நீங்கள்” என்னும் வார்த்தை “நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைக்” குறிப்பதாக வருகிறது. நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலருக்கு என்ன “எதிர்பார்த்திருக்கும் முடிவு” இருக்கும்? அது – எப்போது தாய் நாடு திரும்புவோம் என்பதாகத்தானே? இவைகளை கர்த்தர் அறிவார். அவைகள் தீமையானவைகள் அல்ல சமாதானத்துக்கானவைகள் என்றே அவர் உறுதி கூறுகிறார்.
நாடுகடத்தப்பட்ட மக்களது வாழ்வில் உடனே கடவுள் செயலாற்ற விரும்பினால் மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டியது தானே? எதற்காக இந்த கடிதங்கள் போக்குவரத்துகள், இன்ன பிற வியாக்கியானங்கள்? கடவுள் தம் மக்கள் விரும்பும் காரியம் சரியானதாக இருந்தாலும் கூட அவ்விருப்பங்களைச் செய்து முடிக்க சற்று காலத்தை வசூலித்துக்கொள்ளுகிறார். இதனை நாம் 10 ஆம் வசனத்தில் தெளிவுறக் காண்கிறோம்.
“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
‘பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின்
நான் உங்களைச் சந்திக்க வருவேன்;
உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி
உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன். (எரேமியா 29 திருவிவிலியம்)
மிகத் தெளிவாக கடவுளின் திட்டம் வெளிப்படும்படியாக இந்த கடிதம் அமைந்திருக்கிறது. இப்போது பொறுமைக் காருங்கள். எழுபது ஆண்டுகள் நீங்கள் பாபிலோனிலே இருக்கவேண்டும். ஆகவே சமாதானத்தைத் தேடுங்கள். உங்களுக்கு அல்ல (பெரும்பாலும்) உங்கள் சந்ததியினருக்கே விடுதலை அமையும் என்பதே உறுதிமொழி. ஒரு தேசத்திற்காக கூறப்பட்ட உறுதிமொழியினை தனி நபர்களுக்காக பிய்த்தெடுத்து தீர்க்கதரிசனம் உரைப்பதும் நலமுறைப்பதும் எப்படி சரியாயிருக்கும்?
ஆகவே அசம்பிளீஸ் ஆஃப் காட் சபை போதகரின் வாக்குத்தத்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் அமைதி காத்தேன்.
அப்புறம் திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே என்கிற பாடலைப் பாடினார். பின்பு என் மனைவியைத் திரும்பிப்பார்த்து சிஸ்டர் நீங்க வேலைக்குப் போகணும் என்றார். கடவுள் சொல்லுகிறார், நீங்கள் உங்கள் வழியைத் திருப்பணும் என்றார். பேருந்தை விட்டால் இந்த மனுஷன் என்ன செய்வார் என நான் பதைபதைத்துக்கொண்டிருந்தேன். ஆண்டவர் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார் என்றார். ஜாஸ்மின் குழம்பிப்போய் நின்றாள். நான் சரி… முடித்துவிடுவார் என நினைக்கையில், சிஸ்டர் நீங்க செய்வது சரியில்லை, வீட்டிலே தினந்தோரும் ஜெபிக்கணும், குழந்தைகளுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கணும்… ஆண்டவருக்க வளிகள்ள பிள்ளைகளை நடத்தணும் என்றார். எனக்கு எரிச்சலாயிருந்தாலும் நான் அடக்கிகொண்டேன். மீண்டும் மீண்டும் அவர் ஜாஸ்மின் ஒரு கொலை குற்றம் செய்ததுபோலே பேசிக்கொண்டிருந்தார்… நான் கண்களால் அவளை சமாதானப்படுத்தினேன்.
நான் எப்போதுமே எனது வாழ்வே ஜெபம் தான் என பிதற்றித் திரிகிறவன். எனக்கு முழங்கால் இட்டோ… ஒரு நேரம் ஒதுக்கியோ ஜெபம் செய்ய வேண்டும் என்கிற பழக்கம் எல்லாம் கிடையாது. எனக்கு எப்போதெல்லாம் உணவு வருகிறதோ அப்போது மனதிற்குள் நன்றிகளை முணுமுணுத்துக்கொள்வேன். வார்த்தைகளை சொல்லி நான் ஜெபிப்பது, பாரம்பரியமாக கிறிஸ்தவ முறைகளில் செய்யப்படும் ஜெபங்களை எனது வாழ்வில் நான் பெரும்பாலும் வைத்துக்கொள்ளவில்லை. சில நேரம் எனக்கு ஜெபத்தினை எழுத்தில் வடிக்கவேண்டும் என தோன்றுகையில் அவைகளை எழுத்தில் வடிப்பேன். சில பாடல்கள் மன்றாட்டின் அமைப்பில் இருக்கும் ஆகவே அவைகளை முழுதுணர்ந்து பாடுவேன். எனக்கும் கடவுளுக்குமான உறவு என்பது அவர் என்னை ஆசீர்வதிக்காமல் போனாலும் நான் அவர் பிள்ளை என்பதே. கடவுளிடம் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாது இருப்பதே சிறந்தது என எண்ணுபவன் நான். அவர் எனது உள்ளத்தில் ஏந்திய சிறு நெருப்பை காட்டுத்தீயாக்கினால் போதும் என்றே எண்ணுவேன். ஒரு செயல் வடிவான ஜெபம் அது. யாரேனும் என்னிடம் மன்றாட்டுக் கூறச் சொன்னால் மன்றாட்டை ஏறெடுப்பேன்.
எனது பெரும்பாலான மன்றாட்டுக்கள், திருமறை வாசிப்பினூடாகவே நடைபெறும். ஏன் இப்படி புரிந்துகொள்ளப்படுகிறது? ஏன் இவைகள் நமக்குப் புரியவில்லை? எப்படி நமது வாழ்வில் இந்த வசனங்கள் அர்த்தம் பெறும் என்பதாகவே எனது மன்றாட்டுக்கள் இருக்கும். அது நானும் கடவுளும் பேசிக்கொள்ளும் தருணம். திருமறையை விரித்து வைக்காமல் என்னால் கடவுளுடன் உரையாட இயலாது. பெரும்பாலும் எனது தட்டச்சில் அந்த மன்றாட்டுக்கள் பதிவாகிக்கொண்டே இருக்கும். அவ்விதமான பொற்தருணமாகவே நான் எனது மன்றாட்டைக் கொள்ளுவேன். ஒரு போதகரிடம் மக்கள் என்ன எதிபார்க்கிறார்களோ அந்த இலக்கணங்களுக்குள் சிக்காதவன் நான். அதை பெருமையாக கூறவில்லை… எனது இயலாமையாக …. அல்லது எனது வழிமுறைகள் அப்படித்தான் என்பதை நேர்மையாக பதிவு செய்ய வேண்டியே சொல்லுகிறேன்.
ஆனால் ஜாஸ்மின் எனக்கு நேர் எதிர்… நேரம் ஒதுக்கி பாரம்பரிய முறைப்படி ஜெபிப்பாள், பாட்டு பாடுவாள், வசனம் வாசிப்பாள், சிறுவர்களுக்கு திருமறை சார்ந்து கதைகள் சொல்லிக்கொடுப்பது முதல் திருமறையை மிக அழகாக விளக்கிக்கொடுபவள் அவள் தான். அதாவது ஒரு கிறிஸ்தவ பெண்மணி எப்படி இருக்கவேண்டும் என கிறிஸ்தவ சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகிறதோ அந்த சர்வலட்சணமும் பொருந்திய அவளைப்பார்த்தா இப்படி என எண்ணிக்கொண்டேன். ஆகவே உள்ளாக சற்றே எரிச்சலுற்றேன். ஆனால் எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
பிற்பாடு என்னைத் திரும்பிப்பார்த்து. மீண்டும் எரேமியாவின் மேற்கோளை விளக்கினார். அதைத் தொடர்ந்து… நீங்க… கடவுள் உங்களுக்கு என்ன சொன்னாரோ அதைச் செய்யுங்க பாஸ்டர் என்றார்… உடனே… இப்போதே… பாம்பே போங்க. கடவுளுடைய ஊழியத்தைச் செய்ங்க. இங்கேயே இருக்காதீங்க. கர்த்தர் சொல்லுகிறார். இப்படியே சொல்பவரின் பேச்சு சற்றே மாறிக்கொண்டு வந்தது. பிள்ளைகள் மேல் சாபத்தை வருத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் உடனே போங்கள் என்று சொல்லிகோண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், இனி பஸ் கிடைக்காதே எப்படிப் போய்ச் சேருவார் என்பதையே நான் கவலையுடன் எண்ணிக்கொண்டிருந்தேன்.
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல. (லூக்கா 9:62) என்கிற வசனத்தைச் சொல்லி, நீங்க தவறு செய்கிறீங்க, ஆண்டவருடைய அழைப்பு உங்களுக்கு இருக்கு உடனே போங்க என்றார். இது பொதுவாக போதகப் பணியில் இருக்கிறவர்கள் வேறு வேலையினை தேடிக்கொண்டால் அனைவரும் எடுத்தாளும் ஒரு வசனம். எப்படி இந்த வசனத்தை புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. ஆமாம்! இங்கே “கலப்பையில்” கைவைத்திருக்கிற போதகர்கள் யாரேனும் உண்டா? கலப்பையில் கைவைக்கக் கூடாது என உறுதிமொழியினை கிறிஸ்தவர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. அப்படியானால், பனையில் கைவைத்துவிட்டு ஏறாமல் இருக்கும் சமூகம் எப்படி தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு உகந்ததாக இருக்கும்?. யாவற்றையும் கோர்த்துப் பார்க்கையில் எனக்கு தலை சுற்றியது. இவர்களெல்லாம் எங்கிருந்து கிளம்பி வருகிறார்கள் என எண்ணிக்கொண்டேன்.
அவரது ஜெபம் “பொதுவான நம்பிக்கைகளின்படி” மிக வல்லமையான ஜெபம். என்னைக் கடிந்துகொண்டார், கடவுளை செயலாற்ற கட்டளையிட்டார், அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் என்பதை அந்த ஜெபத்தில் நான் கண்டேன். இறுதி பஸ் போகின்ற சத்தம் கேட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி அவர் என்னை மும்பை புறப்படச் சொன்னவுடனே நான் புறப்பட இயலாதோ அது போல ஒரு சூழ்நிலையில் அவர் இருக்கிறார். ஒருவழியாக அவர் ஜெபம் முடிந்தது. நான் கருங்கல் பேருந்து நிலையத்தில் அவரை விட்டால் போய்விடுவாரா என்கிற வேகத்தில் அவரை அழைத்துக்கொண்டு கீழிறங்கினேன். கருங்கல் போய் பார்த்தபிறகு இறுதி பேருந்தும் போய்விட்டிருந்தது.
கருங்கல்லிலிருந்து அவரது வீட்டிற்குப் போக சுமார் 12 கிலோ மீட்டராவது இருக்கும். நேரம் 10.45 ஆகிவிட்டது என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில், அவர் என்னிடம் மீண்டும் பேச முற்பட்டார். நான் சொன்னேன்… பைக்ல ஏறுங்க இல்லாட்டி வீட்டுக்கு போக முடியாது என்று கூறிவிட்டு அவரை ஏற்றிக்கொண்டு அவர் வீடு நோக்கிப் புறப்பட்டேன்.
எனது பயணத்தில் அவரோடு நான் பேச ஆரம்பித்தேன். உங்கள் திருச்சபையில் பனை ஏறுபவர்களுக்காக மன்றாட்டுக்கள் உண்டா எனக் கேட்டேன். இல்லை என்றார். கூடவே, பனை ஏறுபவர்கள் இன்று இலை என்றும் சொன்னார். இருக்கிற பனையேறிகளுக்காக ஜெபிக்கிற அல்லது பணி செய்கிற திருச்சபைகள் உண்டா என்றேன். இல்லை என்றார். ஏன் திருச்சபை தனது மன்றாட்டுகளில் பனை ஏறுபவர்களை தவிர்க்கிறது? என்றேன்.
பனை ஏறுபவர்களை பொருட்டாக மதிப்பது என்பது நமது வழக்கத்தில் இல்லை. அவன் கல்லாதவன், அவன் தனது “பாவ” வழிகளை விட்டு ஆண்டவரிடம் வந்தால் வியர்வை சிந்தாத வேலையில் அமரலாம். அப்படிப்பட்ட வேலைக்காக எவ்வளவு லஞ்சமும் கொடுக்கலாம். “எல்லாரையும்போல” அவனும் மாறவேண்டுமே ஒழிய. அவன் தனது தனித்துவத்தைப் பேணும் ஒருவனாக இருக்கக்கூடாது என்பதே திருச்சபையில் உள்ளோரின் புரிதல்.
வருத்தப்பட்டு பாரம்சுமக்கிறவர்களை இயேசு தன்னிடம் அழைக்கிறார்… ஆனால் திருச்சபையோ அவர்களை புறம்பே தள்ளுகிறது. இப்படி இருக்கையில், எனது அழைப்பு என்ன என்கிற கேள்வி என்னுள் ஆழமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? நான் பணி செய்துகொண்டிருக்கும் திருச்சபைக்கு திரும்பிப்போகவேண்டுமா? அல்லது இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வேண்டுமா? போதகராக நீடிக்க வேண்டுமா அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக செயலாற்ற வேண்டுமா?
திருச்சபையில் காணப்படும் வியாக்கியானங்கள், திருமறை சார்ந்த புரிதல்கள் இறையாசியினால் அம்மண்ணிலிருந்து கிளைத்தெழுந்தவை. அப்படியிருக்க, நமது மண் சார்ந்த புரிதல்கள் என்ன? நமது மரபிலிருந்து நாம் பெற்றெடுக்கும் இறையியல் புரிதல் என்ன? கலப்பையில் கை வைக்காமல் இருக்கும் புத்திசாலித்தனமா? இல்லை பனையேறாமலிருக்கும் பெருமிதமா?
வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் நம்முள் இருக்குமென்று சொன்னால், என்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதில் உள்ள துணைச்சல் நம்மிடம் இருக்கும். இலையென்று சொன்னால் இன்றும் நாம் நமது ஆசைகளுக்காக பலிகொடுக்கிற பாரம்பரிய இஸ்ரவேலர்களாக இருப்போம். எளிய வடிவில் காட்சி தரும் பனையேறும் மேசியாக்களை அனுதினமும் நமது இறையியல் கோட்பாடுகளால் பலிகொடுத்துக்கொண்டும் இருப்போம்.
ஆண்டவரின் அழைப்பின் பேரிலேயே அப்போதகர் வந்ததாக எடுத்துக்கொள்ளுகிறேன். ஆண்டவரே எனது வழிகாட்டி. எனது வாழ்வு எப்படியிருக்கவேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கும்படியாக என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இப்பணி இறைச் சித்தத்திற்கு ஏற்புடையாதாயிருந்தால் அவர் என்னை வழிநடத்துவார். இலையென்று சொன்னால், நான் எவற்றை விதைக்கிறேனோ அவற்றையே அறுவடை செய்வேன்.
இயேசுவின் மன்றாட்டு தான் என்னுடையதும்….
“இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது …”. மத்தேயு 26: 39 (திருவிவிலியம்)
காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
You must be logged in to post a comment.