Archive for ஏப்ரல், 2019

பின்னிச்செல்லும் காலம்

ஏப்ரல் 4, 2019

பனை சார்ந்த பொருட்களை தேடி ஓடும் எனது செயல் எனக்கே வியப்பளிக்கக்கூடியது. ஏன் இவ்வாறு செய்கிறேன்? யாருக்காக செய்கிறேன் போன்றவை விடையளிக்கமுடியா கேள்விகள். எதை நோக்கி செல்கிறேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பனை சார்ந்த ஒரு பொருளைக் காணும்போது நான் பெறும் கிளர்ச்சி இன்று வேறெந்த வடிவிலும் எனக்கு கிடைப்பதில்லை என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு புது பொருளும் பொருள் பொதிந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. வடிவம், நுட்பம், அளவு, பயன்பாடு, செய்பவர், செய்யும் நிலம், போன்ற எண்ணிறந்த காரணிகள் இணைத்தே பனை சார் பொருட்கள் உருப்பெருகின்றன என்பது நான் கண்டுணர்ந்த உண்மை.

a

பனை சார்ந்த வடிவங்கள் குறித்து உற்று நோக்கத் துவங்கியது தி இந்து தமிழ் நாழிதழுக்கு நான் எழுத துவங்கியபோதுதான். வெகு சமீபத்தில். ஆனால், அதற்கு முன்பே நான் பனை பொருட்களை கூர்ந்து அவதானிக்க துவங்கியிருந்தேன். பனை சார்ந்த பொருட்களைச் செய்பவர்களோடு எனது தொடர்பு சிறு வயதிலிருந்து ஏற்பட்டது என்பது மிகையல்ல. அச்சிறு வயது அனுபவங்களே இன்று ஒவ்வொருபொருளினையும் எனக்கு கூர்தீடி தர ஆதாரமாக இருக்கின்றன. ஒருவகையில் அறுபடாத ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டுதானிருந்திருக்கிறது.

மிக முக்கியமான ஒரு தருணம் என ஒன்று உண்டு. 1997 ஆகஸ்ட் 15 நடைபெற இருந்த ஒரு கிறிஸ்தவ மாணவர் இயக்க நிகழ்விற்காக பனை ஓலையில் சில ஃபைல்கள் செய்து கொடுப்பதற்காக முயன்றுகொண்டிருந்தேன். அந்த வேளையில் எனக்கு உதவியவர்கள் உத்தரங்கோடு பகுதியைச் சார்ந்த புஷ்பா என்ற சகோதரி. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களோடுள்ள தொடர்பு இருக்கிறது. இத்தனை நாட்களுக்குள், பல்வேறு விதமான முயற்சிகளை நாங்கள் இணைந்து முன்னெடுத்திருக்கிறோம்.

ஒருமுறை பனை ஓலைகளைக் கொண்டே புகைப்படங்களை வைக்க ஒரு ஃபிரேம் செய்தால் என்ன என அவர்களிடம் கேட்டு, அதனையும் மிகச் சிறப்பாக அவர்கள் எனக்கு செய்துகொடுத்தார்கள். அப்போதுதான் பனை ஓலையைக் கொண்டு செய்யப்படுகின்ற பொருட்களில் உள்ள சவால், அதின் நுட்பம், திறமையின் முக்கியத்துவம், கடும் உழைப்பு போன்றவை ஒருங்கே குவிந்திருக்கும் ஒன்றாக இவைகளை நான் கண்டேன்.  என்னால் இவைகளை செய்துகொள்ள முடியாது என ஒதுங்கிக்கொள்ள அந்த கலை நயம் கொண்ட பொருட்களில் காணப்பட்ட பிரம்மாண்டம் தான் காரணம்.

கடந்த இருபது வருடங்களில் நான் குமரியை விட்டு பெரும்பாலும் வெளியே  தான் இருந்தேன். ஆகவே என்னால் பனை ஓலை செய்யும் கலைஞர்களை தேடிச் செல்லவோ, அவர்களுடன் உறவுகளை வைத்துக்கொள்ளவோ இயலவில்லை. பனை ஓலையில் நானே என்ன செய்துகொள்ளலாம் என்றே எண்ண தலைப்பட்டு அவைகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பனை ஓலையில் நான் செய்யும் பொருட்கள் யாவும், பாரம்பரிய பொருட்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்ற கொள்கையினையும் நான் என்னையறியாமலே வகுத்திருந்தேன் போலும். முதலாவதாக எனக்கே எனக்காக ஒரு ஓலைச் சுவடி, பிற்பாடு ஓலைகளிலான ஆட்டோகிராஃப், பின்னர் ஒரு புத்த்க குறிப்பான் (புக் மார்க்) அப்படியே படிபடியாக சில படங்களை ஒத்தை ஓலையில் செய்வது, வாழ்த்து அட்டைகள் செய்வது, பிரம்மாண்ட படங்கள், தத்ரூபமான படங்கள் என விரிவடைத்துகொண்டே போனது. எப்படி இருந்தாலும் பனை ஓலையில் பொருட்களைச் செய்பவர்கள் மீது எனக்கிருந்த காதல் அணையவே இல்லை. கடந்த இரு வருடங்களில் நான் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் கை தேர்ந்தவர்கள். மிக உன்னதமான கலைஞர்கள், நமது கலை மரபினை நீட்டித்துக்கொண்டிருக்கும் களப்போராளிகள் என்றே நான் சொல்லுவேன். சர்வதேச அளவில் நாம் முன்னணியில் நிற்கத்தக்க ஆக்கங்களும் இங்கு உண்டு, அதுபோலவே இக்கலைகள் அழியாதபடி இதுவரை நம்மிடம் இப்பொருட்களை கொண்டு சேர்த்த இறுதி கண்ணிகளும் உண்டு.

aa

பனை தொழிலால் வாழ்ந்தவர்களே குமரி மாவட்டத்தில் அதிகம். ஆனால் ஒருவர் கூட பனை சார்ந்த கலைஞர்களை முக்கியமானவர்கள் என எண்ணியது கிடையாது. அதற்கு காரணம், பனை ஓலையில் பொருட்கள் செய்பவர்கள், நவீன காலத்தில் மிக அதிகமாக சம்பாதிக்க முடியாது என்பது ஒன்று. இரண்டாவதாக, பனை சார்ந்த பொருட்களை செய்பவர்கள் அனைவருமே குடும்ப உறுப்பினர்கள். சகோதரியோ, சகோதரனோ, தந்தையோ, தாயோ செய்கின்ற ஒன்றுதான். அதுமட்டுமல்ல சுற்றிலுமிருக்கிறவர்கள் பெரும்பாலானோர் இப்பொருட்களை செய்யக் கற்றவர்கள். ஆகவே இவைகளைக்குறித்த பெருமை என்ன இருக்கப்போகிறது என்ற எண்ணமாக இருக்கலாம். மேலும், நவீன காலத்திற்கு இவைகள் ஒவ்வாது என எண்ணியபடியால், பனை சார்ந்த நினைவுகளையே பதிவு செய்ய தவறியிருக்கிறோம்.

ஆங்கிலேயர்கள் வந்தபோது பனையேறிகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு பதிவு செய்த கோட்டோவியங்களே இன்று நமக்கு ஆவணங்களாக கிடைக்கின்றன. பனையேறிகளைக் குறித்த முதல் விரிவான பதிவு பேராயர் கால்டுவெல் மூலமாகவே நமக்கு கிடைக்கிறது. பின்னர் வில்லியம் ஃபெர்கூசன் அவர்கள் பனை குறித்து விரிவான புத்தகம் ஒன்றினை 1888ல் எழுதுகிறார். பிற்பாடு உருப்பெற்ற அகிலத்திரட்டு, பனயேறிகளின் வாழ்வை இம்மண்ணிலிருந்து உற்று நோக்கிய சமய ஆக்கம். இப்படியிருக்க, நாம் ஏன் பனை குறித்து  விரிவாக ஆராயவில்லை அல்லது விரிவாக பதிவு செய்யவில்லை என்பது பதிலளிக்கவேண்டிய ஒரு கேள்வி.

பனையேறும் வாழ்வை மையமாக கொண்ட நாடார் சமூகத்தினர், இந்த காலகட்டங்களில் கடந்துவந்த பாதை மிகவும் துயரமானது. தங்கள் துன்ப வாழ்வை எவ்விதம் ஒழுங்கமைக்க இயலும் என்ற பதைபதைப்புடனேயே அவர்கள் இருந்தார்கள். அவர்களின் பனை சார் உறவு அவர்களின் சமூகக்திற்குள்ளேயே புறக்கணிக்கப்பட துவங்கியது. அனைத்துமாக சேர்ந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டு தொடர்ச்சி கடந்த 30 வருடங்களுக்குள் மீள இயலா ஒரு சரிவை நோக்கிச் சென்றது.

பனை ஓலைப் பொருட்கள் செய்வதற்கு மிக அடிப்படையான காரணம், பனை ஏறுபவர்கள் தான் என்பதையே நான் வெகு பிந்தி தான் உணர்ந்துகொண்டேன். ஒரு பண்பாட்டின் அடிநாதமாக இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுகையில் அந்த பண்பாடு மறைந்து அழிந்து இல்லாமல் போவது உறுதி. அதை ஒட்டியே அன்னிய படையெடுப்பும் நிகழ்ந்தது. தொண்னூறுகளின் ஆரம்பத்தில், தராளமயமாக்கல் ஏற்பட்டபோது நெகிழியின் பயன்பாடு அதிகரித்தது. மக்கள் பனை ஓலையை பயன்படுத்தவே கூச்சப்பட்டனர். செய்கின்ற பொருட்கள் வாங்குவாரில்லாமல் போனதால் ஒருவரும் பனை சார்ந்த பொருட்களைச் செய்ய விரும்பவில்லை, முன்வரவுமில்லை. பனை ஓலை சார்ந்த பொருட்களைச் செய்யும் 40 வயதிற்குட்பட்ட ஒருவரையும் எனது பயணத்தில் நான் காணவில்லை. இப்படி ஒரு தலைமுறையே தங்கள் பாரம்பரிய அறிவை இழந்து நிற்கிறது

பனை சார்ந்த பாரம்பரிய அறிவினை அறிவியல் பூர்வமாக நோக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். பனை பொருட்களின் உள்ளே இருக்கும் கணிதம் குறித்து எவருமே பேசியது கிடையாது. இதன் வடிவம் சார்ந்த பொறியியல் புரிதல்கள் கொண்ட பொறியியல் பேராசிரியர்களே இங்கு கிடையாது. பனை பொருட்கள் சார்ந்து ஆய்வு நோக்கில் முன்னகரும், தமிழ் பேராசிரியர்களோ, வரலாற்று ஆசிரியர்களோ கிடையாது. பனை பொருட்கள் செய்வபர்களைக் குறித்த மானுடவியல் பார்வைகளோ, சூழியல் பார்வைகளோ, பெண்ணிய பார்வைகளோ இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. இந்திய தொல்லியல் துறை செய்யவேண்டிய ஒரு பணியினை நான் செய்கிறேன் என்றே நான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அந்த அளவிற்கு ஆழ்படிமங்கள் நிறைந்த ஒரு துறை இது என்பதை ஒருவரும் இதுவரை உணரவில்லை.

பனை ஓலைப் பொருட்களில் மிகவும் வித்தியாசமான ஒரு வடிவம் கொண்ட பொருள் என்றால் அது முறம் தான். முறத்தின் வடிவம் உலகெங்கிலும் சற்றேரக்குறைய ஒன்றுபோலவே இருப்பது எப்படி? மேலும் 2000 ஆண்டுகளுக்கும் முன்பே முறம் பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் வாயிலாகவும், திருமறையின் வாயிலாகவும் நாம் அறிகிறோம். முறத்திற்கான அறிவு ஒரு சமூகத்தில் இருந்திருக்குமென்றால் அது மிக உயர்ந்த ஒரு விவசாய தன்னிறைவு பெற்ற சமூகமாக இருந்திருக்க வேண்டும். அப்படி காடழித்து நாடு சமைத்த சூழலில் தான் தமிழ் மறப்பெண்ணொருத்தி வழி தவறி வந்த புலியினை தனது கரத்திலிருந்த முறத்தினைக் கொண்டு விரட்டுகிறாள். அப்படியென்றால், முறத்தினை எவ்வாறு செய்திருப்பார்கள்? இதுபோன்ற ஒரு வடிவம், பாரம்பரிய போர்வீரர்களது மார்பு கவசம் செய்வதிலிருந்து உருவானதா? இல்லை, பின்னல்களை கற்றுத்தேர்ந்த ஒரு சமூகத்தில், பின்னல்களின் தோற்றம் பனை மரங்களிலிருந்துதான் பிறந்ததா போன்ற கேள்விகள் எழுகின்றன.

பயன்பாட்டு பொருட்கள் அனைத்துமே பனை ஓலைகளிலிருந்து பிறக்கின்றன எனும்போது, பனை ஓலைகளை நுட்பமாக பயன்படுத்தும் மக்கள் எவ்வித அறிவுசார் மக்களாக இருந்திருக்க இயலும் என சற்றும் நாம் சிந்தித்து பார்ப்பதில்லை. முறத்தின் வடிவம் சற்றே மாட்டின் முகத்தை ஒட்டியிருக்கும்போது, வேளான் சமூகம், இடையர் சமூகம், பனையேறும் சமூகம் போன்ற சமூகங்களின் கொடுக்கல் வாங்கல்களை குறித்த நுட்பமான பார்வைகளும் இல்லை. இவைகளை வைத்துப் பார்க்கையில் தான், பனை சார்ந்த பொருட்களைச் செய்பவர்களுக்கு உள்ளிருக்கும் கலைஞானம், அறிவு வெளிப்படுகின்றது. ஒரு சமூகத்தின் தேவைக்கேற்ப பல பொருட்கள் ஓலைகளைக் கொண்டே உருபெற்று, உயிர்பெற்று எழுந்திருக்கின்றன.

குமரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளின் பின்புறமும் ஓரிரு கடவங்கள் இருக்கும், சருகு வாரவோ, புளி பொறக்கவோ, மாங்காய் பறிக்கவோ, தேங்காய் சுமக்கவோ இவைகளை பாரம்பரியமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். மீனவ பெண்களும் கடவத்தினை பெருமளவில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்த உண்மை. குமரி மாவட்டத்தில் திருமண வீடுகளில் பப்படம், பழம், சோறு மட்டுமல்ல இலை எடுக்கவும் கடவங்களே பயன்படுத்தப்பட்டன. கடவம் எந்த சூழலிலும் நம்மோடு இருக்கும் ஒன்று என ஆகிப்போனது. ஆனால் அதனைக் கூர்ந்து நோக்குகையில் தான் பின்வரும் உண்மைகளை நான் உணர்ந்துகொள முடிந்தது.

கடவம் செய்பவர்கள், ஓலைகளில் இருக்கும் ஈர்க்கில்களை எடுப்பதில்லை என்பதனை தெரிந்துகொண்டேன். ஈர்க்கிலின் எதிர்புறத்கை வயறு என்றும் அவற்றில் கழித்துப்போடுவதை குடல் என்றும் கடவம் பின்னும் கலைஞர்கள் குறிப்பிடுவார்கள். ஈர்க்கில்களை வைத்து பின்னப்படும் ஓலைப்பொருள் குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் இது மட்டும்தான். இதன் உறுதி, பல வருடங்கள் கடவத்தினை வைத்து பயன்படுத்த ஏதுவாக அமைகிறது.

கடவத்தின் வடிவை ஒட்டிய பொருட்கள் ஏராளம் உண்டு. அதாவது நான்கு முக்கு பெட்டிகளில் பெரும்பான்மையானவைகள் கடவத்தினை செய்யும் வழிமுறைகளையே கொண்டிருக்கும் சிற்சில எளிய மாறுதல்களுடன். ஆனால் அனைத்திலும் நான் கண்ட ஒற்றுமை என்னவென்றால், நான்கு முக்கு சேர்த்து செய்யப்படும் இந்த பெட்டிகளின் வாய்கள் எல்லாமே வட்ட வடிவிலேயே இருக்கும். அப்படியிருந்தாலும், இங்கே பெட்டிகள் ஒருபோதும் வட்ட வடிவில் செய்யப்படுவது இல்லை. கீழே முக்குகளும் விளிம்பில் வட்டவடிவமுமே உறுதிக்கு சான்று என கண்டுபிடித்த ஒரு சமூகம் இருக்கிறதே அது மிகவும் புத்தி கூர்மை மிக்க சமூகம் தான். ஒரே பொருளில் இரு வடிவியல்கள் சங்கமம் ஆவது என்னைப்பொறுத்த அளவில் பேரதிசயம் தான். பொறியியல் கற்றவர்கள் இதன் நுட்பத்தினை அறிந்திருந்தால் நலமாயிருக்கும்.

மிகச்சிறிய மஞ்சணப்பெட்டியினை விஸ்வகர்மா என்ற சமூகத்தினர் செய்துவந்திருக்கின்றனர். மிகப்பெரிய மாவிடித்து வைக்கும் பெட்டியினை  இஸ்லாமியர்கள் பெருமளவில் செய்திருக்கிறார்கள். ஒமல் மற்றும் மடப்பெட்டி போன்ற பொருட்களினை கிறிஸ்தவ மீனவ சமூகத்தினர் செய்து வந்திருக்கிறார்கள்.  பாய் அரிவட்டி போன்ற தனித்துவமான வடிவங்களை தலித் சமூகத்தினர் செய்துவருகிறார்கள். பெரும்பான்மையான பொருட்களை செய்ய அறிந்திருந்த கிறிஸ்தவ மற்றும் இந்து நாடார் சமூகத்தினர், இன்று பெரும்பாலும் ஓலைப் பொருட்கள் செய்வது குறைவே.

பல்வேறு பொருட்களைச் செய்பவர்கள் இன்று இல்லை என்பதுதான் நிதர்சனம். பல இடங்களைத் தேடிச் சென்று ஏமாற்றத்துடன் வருவது உண்டு. ஒரு இடத்திற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியது இருக்கும். ஒரு பொருளினை மீளுருவாக்கம் செய்யவேண்டும் என்றால், கலைஞர்களின் நம்பிக்கை பெறுவது மட்டுமல்ல அவர்களின் உடல்நிலை, தேவையான நேரம் போன்றவற்றையும் நாம் அளிக்கவேண்டும். பனையேற்றுக்காலத்தில் பனை பொருள் செய்ய தெரிந்த ஒரு கலைஞர், தனது நேரத்தை அந்த கலைக்காக செலவளிக்க மாட்டார். எப்படி இருந்தாலும் ஓலை சார்ந்த ஒரு கலையினை மீட்டு கொடுக்கும் இவ்வித கலைஞர்களுக்கு நாம் ஈடாக ஒருபோதும் பணத்தை அளித்துவிட முடியாது. அத்துணை விலைமதிப்பில்லா பொருளிது.

சமீபத்தில் ஒமல் செய்யும் மீனவர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அவரைக் குறித்து நான் அறிந்திருந்தேன், ஆனால் எனக்கு ஓலைகள் கிடைக்கும் நேரத்தில் அவரைப் பார்க்க செல்ல வாய்க்காததாலும், நேரம் இருக்கையில் ஓலைகள் கிடைக்காமல் போய்விடுவதாலும், ஒமல் குறித்து நான் எந்தவித முன்னேற்றமும் இன்றியே இருந்தேன். இவ்வித சூழலில், நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் அருகிலேயே இருந்த ஒரு முதிய பெண்மணி, எனது அப்பா ஒமல் செய்வதை நான் பார்த்திருக்கிறேன், நான் வேண்டுமானால் முயற்சிக்கட்டுமா என்றார்கள். சூரிய கிரகணம் போல வட்டவடிவாக ஓலைகள் கதிர்வீசி நிற்க, பனை ஈர்க்கில் கொண்டு அதனை கட்டி வளர்த்துச் சென்றார்கள். ஆண்களே ஒமல் செய்வார்கள் எனவும், மிகப்பெரிதாக சேய்யும் ஒமலின் உள்ளேயே அமர்ந்து பின்னுவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள். சில வேளைகளில் ஒமல் மீதே படுத்துறங்குவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைவுகளைக் கூறுகையில் நான் ஆனந்த கூத்தாடினேன்.

தி இந்து தமிழ் திசையில் ஒமல் குறித்த எனது கட்டுரை வெளிவந்த போது  வறீதையா கான்ஸ்டன்டைன்  அவர்கள் என்னை பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் இறுதியாக, ஒமலின் வடிவம் சரியாக வரவில்லை என்பதனை சுட்டிக்காட்டியிருந்தார்கள். எனக்கு உண்மையிலேயே ஒமல் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு, அந்த தாயார் செய்ததில் உள்ள பிழையினை யூகிக்க முடியவில்லை. ஆனால், கடல் சார் மக்களது வாழ்வினை தனது படைபுக்க களமாக கொண்ட ஒருவரது அவதானிப்பையும் என்னால் மறுக்க இயலவில்லை. அது அப்படியே பதில் கூறப்படாமல் இருந்தது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஒமல் என்ற மீனவர்கள் செய்யும் பெட்டியினைக் குறித்து முதன் முறையாக கேட்டபோது, பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் சுற்றி இறுதியாக முட்டம் கடற்கரைப் பகுதிக்கு வந்தேன். அங்கே இருந்த மக்களின் வழிகாட்டுதல் படி சார்லஸ் என்ற நபரை குறித்து கேள்விப்பட்டு அவரைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கே சார்லஸ் அவர்கள் இல்லை, ஆனால் அவரது மனை மற்றும் பிள்ளைகள் இருந்தார்கள். நான் தேடி வந்த விஷயத்தைச் சொன்னவுடன், அவர்களிடம் இருந்த ஒமலை எனக்கு காட்டினார்கள், பிளாஸ்டிக் நாடாவால் செய்யப்பட்ட ஒரு சாக்குபோல அது காணப்பட்டது. நான் அவர்கள் எண்ணை எடுத்துக்கொண்டேன், ஆனால் ஒரிருமுறை தொடர்பு கொண்டபின் அந்த தொடர்பும் விட்டுப்போனது.

சமீபத்தில் ஒமல் தேடி  முட்டம் பகுதிக்குச் மீண்டும் சென்றேன்.  சார்லஸ் அவர்களின் வீட்டினைக் கண்டடைந்து அங்கே நின்ற மனிதரிடமே சார்லஸ் என்பவரைத் தேடி வந்திருக்கிறேன் என்றேன்.  அவர் நாந்தான் என்றார். கடந்த வருடத்தில் ஒமல் குறித்து நான் விசாரித்ததை அறிந்திருந்தபடியால், என்னை அழைத்துக்கொண்டு உற்சாகமாக ஒமல் பின்னுகிறவருக்கு அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றார்.

நாங்கள் சந்திக்கச் சென்ற பெரியவரின் பெயர் ஜோசப். வயது 79. வயதிற்கு ஏற்ற அளவில் முதுமை தெரியவில்லை. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். கரிய சிறிய உறுதியான உடல். முகத்தில் தபசுகால வெள்ளை முட் தாடி தாடி இருந்தது. மிகுந்த அன்புடன் என்னை வரவேற்று, சிறு பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லுவதுபோல ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். ஒமல் குறித்து அவரிடம் நான் கேட்கவேண்டியவைகள் அனைத்தும் கேட்டு, எனக்கு ஒரு ஒமல் செய்துகொடுங்கள் என விண்னப்பம் வைத்து, இறுதியாக ஓலைகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒரு வார காலம் சென்ற பின்பு அவர் என்னை அழைத்தார். அன்று அவர் ஒரு ஒமல் செய்து முடித்திருந்தார். அவ்வளவு நேர்த்தி. ஆனால், நான் கொடுத்த ஓலைகள் சிறியவைகளாக இருந்ததனால், ஒமலின் அளவும் சிறிதாகவே இருந்தது. ஓமலினை கையில் வாங்கிப்பார்க்த்து எனக்கு ஆசை தீரவில்லை. ஆனால், ஒமல் குறித்து நான் கட்டிவைத்திருந்த பிம்பம் தகர்ந்ததால், அதுகுறித்து அவரிடமே கேட்டேன். மிகப்பெரிதாக உள்ளமர்ந்தே பின்னுகின்ற ஒமலினை எண்ணியல்லவா நான் வந்தேன் என சொன்னேன். “ஓ நீங்க வட்ட ஒமலச் சொல்றீங்களா” என்று கேட்டார். அவரது வார்த்தைகளில் கடல்புறத்து தமிழ் சிறிதும் இல்லை.

பிற்பாடு அவர் சொன்னது தான், நான் ஏன் இவைகளை அவசரமாக செய்யவேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது. “வட்ட ஒமல் செய்யுறவங்களெல்லாம் போய்ச் சேர்ந்தாச்சு. நாங்க அதுக்கு அடுத்த தலைமுறை தான்” நான் துணுக்குற்றேன். 79 வயது நிரம்பிய ஒரு மனிதர் இவ்விதம் கூறுகிறார் என்றால்? சுமார் 90 வயதாவது மதிக்கத்தக்கவர்களுக்கே வட்ட ஒமலினைச் செய்யத்தெரிந்தவர்களாக இருப்பார்கள். எவ்வகையில் அவர்களால் இன்று நமக்கு ஒரு ஒமலினை செய்துதர இயலும்? அதற்கான உடல் வலு இருக்குமா போன்ற கேள்விகள் மனதுள் வந்துகொண்டிருந்தன. எனது வீட்டின் அருகில் இருந்த முதிய பெண்மணியின் தந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக 90 – 100 வயதை அடைந்திருப்பார் என எண்ணத்தோன்றியது.

பனை சார்ந்த பொருட்களின் காலம் என்பது அது பயன்பாட்டிலிருக்கும் கால சூழலைப் பொறுத்தது.  நமது மரபில் கூட, அவைகள் நிழல் போலவே தொடர்ந்து வந்துகொண்டிருந்திருக்கின்றன. இவைகளை இன்று ஆவணப்படுத்துவது பெரிதல்ல, இவைகளை அதே வீச்சுடன் அடுத்த தலைமுறைக்கு கடத்த இயலுமென்றால் அதுவே வெற்றி.

நான் அங்கிருந்து புறப்பட்டபோது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நமது வாழ்வே குறுகியது தான்… இருக்கும்வரைக்கும், நம்மால் இயன்றவைகளை மீட்டெடுத்து ஆவணப்படுத்துவோம். என்றோ யாருக்கோ பயன்படலாம்.

 

காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

malargodson@gmail.com


%d bloggers like this: