பனை தொல் குடிகள்
பனை நகரம் என்றவுடனேயே பலருக்கும் ஒரு ஒவ்வாமை எழுவதை கண்டுகொண்டேன். பண நகரத்தை எப்படி பனை நகரம் ஆக்குகிறான் இவன் என்பதே அது. என்னைப் பொறுத்த அளவில், பனை மரம் ஒரு நகரத்தில் நின்றாலே அது பனை நகரம் தான். அவ்வித நகரங்கள் பல்வேறு இன்றும் நம்மைச் சூழ உண்டு. அழிந்த பனை நகரங்கள் கூட இருந்திருக்கலாம். அந்த நகரங்களின் அடியாளத்தில் பனை சார்ந்து நாமறியாத ஏதோ ஒன்று ஆழ்துயிலில் இருக்கும். தேடி கண்டுபிடித்து தட்டி எழுப்பிவிட்டால் அது விஸ்வரூபம் எடுத்து பத்ரகாளியின் நடனம் ஆடும். ஓர் ஊழியினை எப்படி பனையும் பனை சார்ந்த மக்களும் கடந்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மை வெளிப்படும். பனை எவ்விதம் தன்னில் பல்வேறு உயிரினங்களை அடைகாத்து வந்திருக்கிறது போன்ற உண்மைகளைச் அது சொல்லும். நகரில் வாழும் தொல்குடியினரின் வாழ்கை முறையினை நமக்கு எடுத்து இயம்பும். சூழியலாளர்கள், தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், பூச்சியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், புதை படிமவியலாளர்கள், பறவையியலாளர்கள், என எண்ணிறந்த அறிஞர் கூட்டம் சேர்ந்து முன்னெடுக்கவேண்டிய ஒரு கூட்டு முயற்சி இது.
ஒரு நகரம் பனையால் சூழப்பட்டிருக்கும் என்றால் அது தன்னுடன் பல முக்கிய வரலாற்று தருணங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே உண்மை . எனது அனுபவத்தில் அவ்விதம் பல புராதன நகரங்களைக் குறித்து நான் சொல்ல முடியும். புராதான நகரங்களே பனையின் உயர மனிதன் ஏறியதால் கிடைத்த தூரக்காட்சியின் விளைவால் எழுந்ததுதான்.
ஒருமுறை நான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளைக்கு எனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலிலிருந்து சென்றேன். ஆம், நான் பனைமரச்சாலையில் பயன்படுத்திய அதே அதே எம் எஸ் எல் 8537 புல்லட் தான். செல்லும் வழியில் ஆதிச்சநல்லூரைக் கடக்கவேண்டும். ஓரிருமுறை நான் அப்பகுதியினைக் கடந்திருந்தாலும், எனது இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கிடைத்த அனுபவம் சற்று வித்தியாசமானது.
ஆதிச்சநல்லூர் என சுட்டப்படும், அகழ்வாராய்ச்சிக்கான இடங்கள் அனைத்துமே பிற பகுதிகளை விட மேடாகவும் கரடாகவும் காணப்பட்டது. வேலியமைத்துக் கொண்டிருந்தபடியால் முழுமையாக உள்ளே செல்லுவது தடை செய்யப்படவில்லை. உள்ளூர் தாத்தா ஒருவரின் வாழிகாட்டுதலோடு அப்பகுதியினை சுற்றிவந்தேன். உடைந்த பானையோடுகள் ஏராளமாக ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல்வேறு தடிமன்களில், கறுப்பு சிவப்பு மற்றும் பானையோடுகளின் நிறமும் வெளிர் நிறமுமாக பல்வேறு நிறங்களில் பானையோடுகள் காணப்பட்டன. அங்கே நான் எதைத் தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு முறட்டு விளிம்பு ஓடு எனது கரத்தில் சிக்கியது. அதனுள் ஒரு நெல்மணி தடம் பதிந்து இருந்தது. சுமார் 3000 வருட பழைமை கொண்ட ஒரு நிலம். நெல் பயிரிட்டிருக்கிறார்களா? அல்லது வெகு சமீபத்திய ஓடு தானா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. நான் அந்த மேட்டுப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கையில், வயல்வெளிகளும் பனங்காடுகளுமாக காணப்பட்டது. ஹரப்பாவிற்கு பிந்தைய சமூகம் ஒன்று இங்கே வாழ்ந்ததாக கூறும்போது பனைகளே அவர்கள் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்திருப்பதை எண்ணி விம்மினேன். எனது வாழ்வில் மிகப்பெரும் திறப்பு இது.
ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற ஜாடிகளை வைத்து அங்கு ஒரு மாபெரும் நகரம் இருந்திருக்கிறது என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள் தொல்லியளாளர்கள். மிகப்பெரும் மக்கள் தொகை இருந்தாலொழிய, இத்துணை பிரம்மாண்ட பானைகளுக்கான தேவைகள் இருந்திருக்காது எனக் கூறப்படுகிறது. சற்றே தொலைவில்தான் கொற்கை துறைமுகம் இருந்திருக்கிறது. ஆகவே மிகப்பெரிய அளவில் வணிகமும் நிகழ்ந்திருக்கிறது. பானைகள் கிளிஞ்சல்கள் யாவும் பனை சார்ந்த ஒரு வாழ்வியலோடு தொடர்புடையவைகள் தானே. இங்கு வணிகம் நிகழ என்ன காரணம் இருந்திருக்கும்? தங்கத்தால் செய்த பொருட்கள் வரை கிடைத்திருக்கும் இவ்விடம், பனையால் நிர்மாணிக்கப்பட்ட நகரன்றி வேறன்னவாயிருக்க இயலும்? இவர்களின் கணிதம் மற்றும் அத்தனை அறிதல்களும் ஏட்டிலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்விதமான அகழ்வாய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கீழடி, பாண்டிச்சேரியிலுள்ள அரிக்கமேடு போன்ற பகுதிகள் இவைகளில் மிக முக்கியமானவைகள். இப்பகுதிகளில் எங்கும் பனை சார்ந்த எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாதது ஏன் என்கிற கேள்விகள் நமக்குள் எழும்பலாம். அகழ்வாய்வில் மிக முக்கியமான தடயமாக கொள்ளுவது, செல்லரிக்காத பொருட்களை தான். பனை சார்ந்து பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் செல்லரித்துப் போகின்றவை தான். இரண்டே இரண்டு பொருட்களைத் தவிர. ஒன்று, இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள் அல்லது கத்தி , மற்றொன்று மண் கலயம்.
மண் கலயம் என தற்போது தமிழகத்தில் பனையேறிகள் பயன்படுத்தும் கலயங்கள் சிறியவை. வாய் அகன்றவை. ஆனால் அப்படித்தான் என்றும் கூற இயலாது. எனது பனைமரச் சாலை பயணத்தில் சிறிய கழுத்துள்ள கலயங்களை கூட நான் ஆந்திராவில் பார்த்திருக்கிறேன்.
மண் பாண்டங்களின் வடிவம் கூறும் பயன்பாட்டு சித்திரங்கள் வெவ்வேறானவை. முதுமக்களை அடக்கம் செய்யும் தாழிகள். தானியங்களை வைக்கும் பானைகள். நீர் மொண்டுகொள்ளும் குடங்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், கிண்ணங்கள் மற்றும் விளக்கு எரியவைக்கும் சிறு தீபங்கள் என பல்வேறு வகையில் அவை வெளிப்படுகின்றன. என்னைக் கவர்ந்த ஒரு மண் கலம் என்றால் பழனி மலையடிவாரத்தில் உள்ள பொருந்தல் எனும் மயானத்தில் கிடைக்கபெற்ற மண்குடங்கள் தான்.
குடங்கள் பொதுவாக தண்ணீர் மொள்ளுவதற்கு பயன்படும் ஒரு பாத்திரம். தமிழகத்தில் பெண்கள் அதனை இடுப்பில் வைத்து எடுத்துச் செல்லுவதை நாம் பார்த்திருக்கிறோம். சில வேளைகளில் ஆண்களால் தோளிலும் பெண்களால் அவை தலையிலும் சுமந்து செல்லப்படுவதைக் காணலாம். நிறை குடம் தழும்பாது எனும் வழக்கச் சொல், குறுகிய கழுத்தையுடைய குடங்களுக்கு பொருந்துபவை. கழுத்து சிறிதாக இருக்கும்போது நீர் வெளியேறா வண்ணம் அமைந்திருக்கும் வடிவம் ஆழ்ந்து நோக்கி உருவாக்கிய ஒன்று என்றே கருதுகிறென். இவையாவும் நமது சமீபத்திய சமூக வாழ்வில் பார்க்கின்றவைகளைகொண்டு நாம் கூறுவது. ஒரு வேளை, பனை ஏறுகின்ற ஒரு சமூகம் கலயங்களாக குடத்தை பயன்படுத்தியிருக்குமா என்கிற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அப்படி இருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதி என்றே கருதுகிறேன்.
பனை மரத்தில் இருந்து உருவாகும் பாளைகள் மிக எளிதாக ஒரு குடத்தின் வாய்க்குள் நுழையும் அளவுள்ளவைகளே. இவ்விதம் பாளைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே குடங்கள் இருந்திருக்கலாம். ஏன் இன்றைய கலயங்கள் போல் விரிந்த வாயையுடைய மட்கலங்களை அன்று பயன்படுத்தவில்லை என்கிற கேள்விகள் எழலாம். இரண்டு வகையில் இவைகளுக்கு நாம் பதில் கூற இயலும். ஒன்று, தமிழகத்தில் வெகு சமீப காலம் வரைக்கும் கூட, ஏன் இப்போதும் கரூர் பகுதிகளில் பனை ஏறுபவர்கள் சுரைக்குடுவையினைத்தான் பயன்படுத்துகிறார்கள். மிக எளிதானது, குடத்தின் வாய் போல ஒடுங்கி இருப்பது. அப்படியானால், பனை மரத்தின் மேலே இவைகள் வைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் ஒருபுறம், மற்றொருபுறம், பனை மரத்திலிருந்து இறக்கிய பதனீரை ஒன்று சேர்க்கும் தேவைக்காக இக்குடங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஏன் ஒடுங்கிய வாய். பனையேறிகள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்தே இவ்வடிவினை கண்டுபிடித்திருப்பார்கள். குறிப்பாக, பதனீர்/ கள் வடியும் கலயத்தினைத் தேடி பல்வேறு பூச்சிகள் எறும்புகள் வரும். அவைகள் பதனீரை உண்டே தீர்த்துவிடும். பழவுண்ணி, வவ்வால், குரங்குகள் மற்றும் பல்வேறு பறவைகளும் பதனீரை விரும்பி குடிக்கும். இவைகளிலிருந்து காக்க ஒருவேளை ஒடுங்கிய வாயினையுடைய குடங்கள் உருவாக்கியிருக்கலாம். பொருந்தல் பகுதியில் இவ்வித குடங்கள் கிடைக்கப்பெற்றதால் தான் எனது சந்தேகம் இவ்விதம் எழுகிறது.
இரு வருடங்களுக்குக்குள் தான் இருக்கும், பாண்டிச்சேரியிலுள்ள ஒரு முக்கிய ஆய்வகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த புதைபடிமவியல் ஆய்வகத்தில் இருந்த அறிவர் அனுபமா அவர்களை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம் எடுக்கையில் தொடர்புகொண்டேன். அவர்களிடம் எனது உரையாடலில், நான் பெற்றுக்கொண்டது மிகப்பெரும் திறப்புதான். பொருந்தல் அகழ்விடம் கி மு 2 ஆம் நூற்றான்டைச் சார்ந்தது என்றும். அது ஒரு மயானமாக இருந்திருக்கிறது எனவும் கூறியவர்கள், அங்கிருந்த புதைபடிமங்களில், பனை மகரந்தங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக் கூறினார்கள். ஆம் பனை மகரந்தங்கள் இருப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றும் பல்வேறு சடங்குகளில் சாரயங்கள் படைக்கப்படுவதும், சாமிக்கு கள் படைப்பதும் தமிழக வழக்கம் தானே. அப்படியானல், பனை சார்ந்த ஒரு வாழ்வு மிக ஊக்கமாய் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது.
பொருந்தல் பகுதியில் மற்றொரு முக்கிய குறிப்பு காணப்படுகிறது. திமில் கொண்ட காளை ஒன்று படுத்திருப்பதுபோன்ற நந்தியின் மண் வடிவம் இங்கே கிடைத்திருக்கிறது. நந்தியின் கழுத்தைச் சுற்றி போகும் கயிறு மிக அழகாக இந்த சிற்பத்தில் தெரிகிறது. இதில் என்ன முக்கியத்துவம் இருக்கவியலும்? சாதாரண கயறுதானே என்று விட்டுவிட இயலாது. வெகு சமீபத்தில் தான் மாட்டிற்கான மூக்கணாங்கயிறு பனை நார் கொண்டு செய்யப்படும் முறைமை குறித்து கேள்விப்பட்டேன். அந்த கதை மிகவும் சுவையானது.
2019 பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, பனை சார்ந்த ஒரு கண்காட்சி அமைக்க திரு. சுந்தரமூர்த்த்தி ஐயா அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் நான் திருப்பூர் சென்றிருந்தேன். அங்கே காங்கேயத்திலிருந்து தீபா என்கிற தோழி வந்திருந்தார்கள். என்னோடு பனை கண்காட்சியில் நேரம் செலவிட்ட அவர்களிடம், பேச்சுவாக்கில், காங்கேயம் காளைக்கு மூக்கணாங்கயிறு பனை நார்கொண்டு செய்வார்களா என கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். எனது மனகில் ஏழுந்த ஒரு ஊகம்தான் இது. நான் நினைக்காத அளவிற்கு வேகமாக செயல்பட்ட அவர்கள், ஒரு 90 வயது முதியவரை கண்டுபிடித்து அந்த கயிற்றினையே செய்து எனக்கு மும்பைக்கு அனுப்பிவிட்டார்கள். இதே நிகழ்ச்சிக்கு வந்த வாகை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு பனை தொழிலாளியின் உதவியுடன் அழகிய கயிற்றினை செய்து புகைப்படத்தினை அனுப்பியிருந்தார்கள். இவைகள் அனைத்தும் 30 – 40 வருடங்களுக்கு முன்னே தமிழகத்திலிருந்து வழக்கொழிந்து போய்விட்டவை என்பது தான் மிகவும் முக்கியமானது.
பண்டய நகரங்களில், நெய் மிக முக்கிய வணிக பொருள் ஆகவே ஆயர் கூட்டம் என்று தனித்து இல்லாது, மாடுகளை தனித்தனியே வளர்க்கும் மக்களும் இருந்தனர். மாடு என்றாலே செல்வம் எனும்போது, மாட்டினை கட்டி இழுத்துச் செல்லும் கயிறுகள் தேவைப்பட்டிருக்கும். இவ்விதமான கால்நடையாக்கலில், பனையே மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிறது என்பதனை நாம் உணரலாம். ஆனால், பொருந்தல் அகழ்வாய்வுப்பணிகள் சார்ந்து நான் வாசித்த குறிப்புகளில், பனை என்கிற ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. அந்த க்யிற் குறித்தும் எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.
பொருந்தல் அமைந்திருக்கும் பழனி பகுதிக்கும், குஜராத் நில பகுதிகளுக்கும் ஒரு வியாபார தொடர்பு இருந்திருக்கிறதாக தொல்லியளாளர்கள் கூறுவார்கள். பழனி அடிவாரம், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, கரூர், கோவை, பாலக்காடு என இப்பகுதியினைச் சுற்றிலும் பனை நிறைந்திருக்கும் காட்சியினை நாம் மறந்துவிடக்கூடாது.
ஏனென்றால் பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் அகழ்வாய்வுகளில் இல்லாததால், (இல்லை பனையில் என்ன இருக்கப்போகிறது என்கிற இளக்காரத்தால்) தானியங்கள் சார்ந்தே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
என்னதான் நெல் போன்ற தானியங்கள் இவ்விடங்களில் கிடைத்தாலும், விவசாயத்திற்கு முந்தைய நிலையில் தான் பனை மரங்கள் மனித வாழ்வில் பெரும்பங்கு ஆற்றியிருந்திருக்க வேண்டும். சிறு அளவில் காணப்படும் தானியங்கள் குறித்த நுண்ணிய புரிதலுக்கு முன், மிக பிரம்மாண்டமான பனம் பழங்களில் இருந்தே விதைப்பின் நுட்பத்தை மனிதர்கள் கண்டடைந்திருப்பர். இப்படியான விதைப்பின் சமூகங்கள் அனைத்தும் பனங்காட்டினை ஒட்டியே தமது வாழ்வை கட்டமைத்திருக்கும் எனக் கொள்ளலாம்.
பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் நெல்மணிகள் இன்றும் கிடைக்கின்றபோது, ஏன் பானையிலிருந்து நமக்கு பனை ஓலைச் சுவடிகள் ஏதும் கிடைக்கவில்லை என்கிற கேள்விகள் நமக்குள் எழலாம். அரிதானவைகள் பேணப்பட்டன என்று எண்ண ஓர் இடமுண்டு. இன்னும் நமது மரபினை கூர்ந்து நோக்கினால், பழைய சுவடிகளை தண்ணீரில் இட்டு அழிப்பது, நெய் ஊற்றி தீ வைத்து ஆகுருதி செய்வதோ தான் வழக்கம். இந்த முறைமை தொன்மையானதாக இருந்திருக்கும் பட்சத்தில், எழுத்துக்கள் கொண்ட ஓலைகளோ சுவடிகளோ கையில் கிட்டாமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
எனக்கு எப்போதும் பனை சார்ந்த குடியிருப்பு என்பதனை திருமறையில் கூறப்பட்டுள்ள எரிகோ என்ற நகரத்தினை தவிர்த்து எண்ண இயலாது. எரிகோ கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்கிவரும் ஒரு நகரம். இத்துணை தொன்மையான, மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்கள் வேறு இல்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல்வேறு சூழல்களில் எரிகோ வீழ்ந்தாலும் மக்கள் தொடர்ந்து வாழும் நகரமாக எரிகோ காணப்படுகிறது. எரிகோவின் மற்றொரு பெயர், பனைகளின் நகரம் (Cஇட்ய் ஒf Pஅல்ம்ச்). எரிகோவில் நாம் ஊரில் காணப்படும் பனை மரங்கள் இருக்காது ஆனால் பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை இருக்கும். தனது வாழ்வில், பேரீச்சம் பழம் என்கிற ஒன்றை மட்டுமே வழங்கும் ஒரு மரத்தினை நம்பி, ஒரு ஆதி சமூகம் கூடியிருக்குமென்றால், பல்வேறு உணவு அளிக்கும் பனை மரங்களை நம்பி ஏன் மனித நாகரீகத்தின் துவக்கம் இருந்திருக்ககூடாது. இக்கேள்விகள் என்னை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
எகிப்திய பிரமீடுகளை தேடி கண்டடைவதே மிகப்பெரும் அகழ்வாய்வு பணிகள் என்றிருந்த கால கட்டத்தில், எளிமையின் வடிவாய் வாழ்ந்த நமது வாழ்விடங்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். பேரீச்சை உலகமெங்கும் சென்று சேர்ந்த அளவில் நூறில் ஒரு பாகம் கூட பனை மரங்கள் சென்று சேர்ந்திருக்காது என்பது உறுதி. இவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்களினால், பனை சார்ந்த தொல்லியல் தடயங்கள் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் பேரீச்சைகளினை மட்டுமே கவனத்துக்குட்படுத்தியிருக்கின்றனர் என்று கொள்ள இடமுண்டு.
கி மு 9000 ஆண்டுகளில் எரிகோவினைச் சுற்றி வாழ்ந்த மக்களினைப்பற்றி கூறப்படும் காரியங்கள் விந்தையானவை. அதிலும் குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய அரிவாள் வடிவிலான கத்தி குறித்த தகவல்கள் பனைக்கும் (பேரீச்சைக்கும்) மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை காலத்தால் முன் கொண்டு செல்லுபவை. எரிகோவில் கிடக்கப்பெற்ற தடயங்களில் “பீர்” தயாரித்திருப்பதாக கூறும் இடங்களை வாசிகையில் அவர்கள் ஏன் கள் வடித்திருக்க இயலாது என்கிற கேள்வி ஒருசேர எழும்புகிறது. இவ்விதம், ஒவ்வொன்றாக நாம் தேட முற்பட்டால், ஆதி மனிதனிலிருந்து அவன் நிர்மாணித்த ஆதி நகரங்கள் பலவற்றிலும் பனை மிக முக்கிய பயிராக இருந்து வந்திருக்கிறது என்பதனை நாம் உணர்ந்துகொள்ள இயலும். மேலும், பனை சார்ந்து வாழும் மக்களை அது கைவிடாது என்பதும், வரலாற்று பூர்வமாக உண்மையே. பனைமரத்தினை பஞ்சம் போக்கி எனக் கொள்வோமென்று சொன்னால், இவ்விதம் தான் அதன் நெடும்பயணம் மனிதர்களுடன் இருந்திருக்கிறது என நாம் கூற தலைப்படலாம்.
மும்பையிலும் தொன்மைசார்ந்த பல இடங்கள் இருக்கின்றன. தொன்மை மிகு குடிகள் இங்கே இன்றும் வாழ்கின்றனர். பனை காணப்படும் இந்த நகரம் எப்படி தன்னை வெளிப்படுத்தப்போகிறது என காண நானே பேராவலுடன் காத்திருக்கிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653
You must be logged in to post a comment.