பனைக் கடவுள்
மும்பை சென்ட்ரல் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு இடம். மும்பை வந்தபோது இளம் போதகர்களாக இங்கே நாங்கள் தங்கியிருந்தோம். மெதடிஸ்ட் சென்டர் என்று அழைக்கப்படும் மும்பையின் மெதடிஸ்ட் கட்டிடம் இங்கே தான் இருக்கிறது. எங்கள் முன்னாள் பேராயர் இருந்த வீடும் இதன் அருகில் தான் இருக்கிறது. பைகுல்லாவில் உள்ள எங்கள் பொருளர் அலுவலகத்திற்கு செல்ல்வேண்டும் என்றாலும், அவ்விடத்தில் வசிக்கும் போதகர்களை சந்திக்க வேண்டும் என்றாலும், மும்பை சென்டிரல் ஒரு முக்கியமான நிறுத்தம். ஆகவே இந்த இடம் மெதடிஸ்ட் போதகர்களுக்கு மிக முக்கியமான ஒரு இடமாகவே இருந்தது. என் வாழ்நாளில் நான் மிக அதிகமாக ஒரு இரயில் நிலையத்தில் ஏறி இறங்கியிருப்பேன் என்றால் அது மும்பை சென்ட்ரல் தான்.
மும்பை சென்ட்ரல் இவ்வளவு என்னோடு தொடர்புடையாதாக இருந்தாலும் இப்பகுதியில் நான் பலமுறை சுற்றிவந்திருந்தாலும் நான் நேராக போய்வரும் சில வழிகள் உண்டு. எங்கள் அனைத்து அலுவல் சார்ந்த பணிகளும் மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தான் இருக்கிறன. ஒருமுறைக்கூட நான் தவறியும் இந்த இரயில் நிலையத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றதில்லை. ஒருவேளை நான் அவ்விதமாக சென்றிருந்தாலும்கூட என்னால் பனைக்கும் இப்பகுதிக்குமான தொடர்பினை எவ்வகையிலும் இணைத்து யோசித்திருக்க இயலாது, அந்த அளவிற்கு நர்கர்மயமாக்கலின் உள் இழுக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதி இது.
மும்பை சென்டிரல் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த பின் மேற்குபக்கமாக இரண்டு நிமிடங்கள் நடந்தால் வருகின்ற முக்கிய இணைப்புச் சாலை தான் “தார்தியோ” (Tardeo) என்ற இடம். இந்தியாவின் மிக உயரமான இரட்டைக்கோபுரங்கள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றது. இப்பகுதிக்கும் பனைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமென்று சொன்னால் நானே நம்பமாட்டேன். ஒரு பனை மரத்தையோ அதன் ஓலை துணுக்குகளையோ கூட இன்று இந்த சந்திப்பில் நாம் காணமுடியாது.
பனை சார்ந்த எனது தேடுதலில் ஒரு வாரத்திற்கு முன்பு, பாலமோகன் சிங்கடே என்பவர் எழுதிய “A Letter from Bombay or Mumbai: On the Troubles of Renaming as a Decolonial Act” என்ற கட்டுரை கையில் கிடைத்தது. இந்த கட்டுரை, மும்பையின் பெயர் மாற்றங்கள் எவ்வளவு அபத்தமானது எனபதை சுட்டிக்காட்டும் விதமாக எழுதப்பட்டது. நான் வாசிக்கையில் எனக்கான ஒரு முக்கிய திறப்பு அங்கே இருந்தது. போகிற போக்கில் ஆசிரியர் எழுதிய அந்த குறிப்பு என்னை அலைக்களித்த சொற்களை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. மும்பையின் பல்வேறு இடங்கள் அங்கிருந்த தாவரங்களைக்கொண்டு பெயரிடப்பட்டவைகளே என்பது தான் அது. ஆகவே நான் அதனை இன்னும் கவனத்தோடு படிக்கையில், மும்பையில் உள்ள தார்தியோ என்ற இடம் பனைகளால் அப்பெயரை பெற்றிருக்கிறது என்ற வார்த்தை வந்ததும் எனது இதயதுடிப்பு எகிறியது.
எனது 10 வருட மும்பை வாழ்வில் ஒரு முறைக்கூட தார்தியோ என்கிற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அது எப்படி மும்பையில் பனை சார்ந்த பெயருடைய ஒரு இடத்தை நான் அறியாமல் இருந்திருப்பேன்? ஏன் எவரும் எனக்கு கூற முற்படவில்லை? இந்த பதிவு சரியானதுதானா? இந்த இடம் இன்றும் பனைத் தரவுகளைக் கொண்டிருக்குமா? அப்படியானால் இந்த இடத்திற்குச் சென்று நான் பனை மரங்களைக் கண்டுபிடிக்க முடியுமா? போன்ற பல கேள்விகள் என்னுள் அசைந்தமர்ந்தன. எனது தூக்கம் கலைந்தது. என்னுள் எனை ஆளும் இறைவன் வந்தமர்ந்து எனது எண்ணங்கள் கூர் பெறச் செய்ததை உணர்ந்தேன். ஆகவே அன்று எனது உறக்கத்தை ஒத்திவைத்தேன். எப்படியாவது தார்தியோ என்ற பகுதிக்கு உடனே சென்று சேரவேண்டும் என நினைத்தேன்.
அதற்கு முன்பதாக தார்தியோ பகுதியில் பனை மரங்கள் இருக்கின்றனவா என எண்ணி இணையதளத்தில் தேடினேன். ஒரு படமும் கிடைக்கவில்லை. ஆகவே அன்று இரவு தகவல்களைத் திரட்டியபடியிருந்தேன். மும்பையின் மிக முக்கிய தூதரகங்கள் தார்தியோ பகுதியில் தான் இருக்கின்றன என்கிற தகவல் கிடைத்தது. மிக முக்கிய மனிதர்கள் வாழும் இடம் என்பதாகவும் லதா மங்கேஷ்கர் வாழும் பகுதி எனவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஜாஸ்மினிடம் ஒரு அருமையான இடத்தைக் கண்டுபிடித்thiருக்கிறேன், ஆகவே அந்த இடத்தைப் பார்த்து வரப் போகிறேன் என்று சொன்னேன். “தூங்கவே இல்லியா” என்று கேட்டாள். “பிறகு போய்கொள்ளலாமே” என்றும் சொன்னாள். என்னால் அப்படி அமைந்துவிட முடியாது. என்னுள் எரியும் நெருப்பு அப்படிப்பட்டது. நான் புறப்பட்டுவிட்டேன். வெறும் ஒரு அரைக்கால் சட்டை, ஒரு கை வைத்த பனியன், அதற்கு மேல் எனது பயணத்திற்கான ஜாக்கெட் அணிந்து கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் மழை பொழிய காத்திருந்தது. அதிகாலை இருட்டோடு எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கோரேகாவுன் நோக்கிச் சென்றேன். மழை ஓடைகள் சாலைகளை பெயர்த்துப்போட்டிருந்தன. சில இடங்களில் சாலையினைக் கடந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சந்திர மண்டலத்தின் குழிகள் போல சில இடங்களில் வட்ட வடிவ குழிகள் கிடந்தன. எனக்கு முன்னால் சென்ற வாகனத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், ஒரு தவளை எகிறியது. ஐந்தாம் எண் வரைக்கும் சாலை மழையினால் வெகுவாக பாதிப்படைந்திருந்தது. தூரல் அடிக்கத்துவங்கியது. எனது வாகனத்தை இரயில் நிலையம் அருகில் இருக்கும் கட்டண பாதுகாப்பு நிறுத்தத்தில் விட்டுவிட்டு, நான் இரயில் பிடித்தேன். காலை நான்கரை மணிக்கு பிடித்த இரயில் மும்பை சென்ட்ரல் சென்று அடைந்த போது மணி ஐந்தரை. இன்னும் பொழுது புலரவில்லை. மழை மேகங்களும் தூறலும் என அவ்வேளையிலும் இருட்டியபடியே இருந்தது.
சாலையைக் கடந்து தார்தியோ நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த இரட்டைக்கோபுரங்கள் மிதர்ப்பாக நின்றுகொண்டிருந்தன. பணக்கட்டுகளை உயரமாக அடுக்கிவைத்தது போன்ற தோற்றம். மும்பையின் செல்வ செழிப்பின் அடையாளமே தார்தியோ. கோடிகளுக்கு குறையாத குடியிருப்புகள். மும்பையின் முக்கியமான ஒர் அடையாளமான செல்வச் செழிப்பை அங்கிருந்த அத்தனை கட்டுமானங்களும் பறைசாற்றியபடி இருந்தன. சாலைகள் நேர்த்தியாகவே அமைந்திருந்தன. எதைத் தேடுகிறேன்? ஏன் இந்த அதிகாலையில் இங்கே புறப்பட்டு வந்திருக்கிறேன்? எப்படி எனது தேடுகையை நான் துவக்கப்போகிறேன்? போன்ற கேள்விகள் உள்ளத்தில் சலசலத்துக்கொண்டிருந்தன. இவைகளை ஒருங்கமைத்து விடைகாணுவது எளிதல்ல.
தார்தியோ சாலை சந்திப்பில் சிறு பூங்கா ஒன்று இருந்தது. பனை மரத்தின் வடிவில் ஒரு மரம் நின்றது ஆனால் அதன் அருகில் செல்லச் செல்ல அது நான் தேடும் பனை மரம் அல்ல அழகுக்காக வைக்கப்பட்ட ஒரு பனை என்பதைக் கண்டு உளம் சோர்ந்தேன். இரட்டைக்கோபுரங்கள் செல்லும் பாதையில் பல்வேறு மரங்கள் நின்றன. ஆனாலும், பனை சார்ந்து ஒரு சிறு தடயம் கூட தென்படவில்லை. சற்று தொலைவில் ஒரு டாக்சி டிரைவர் நின்றுகொண்டிருந்தார். தார்தியோ எப்படி போகவேண்டும் என்று கேட்டேன். என்னை மேலும் கீழும் புரியாதமாதிரி பார்த்தார். பின்னர் “தாட்தேவ்”? என்றார். நான் மையமாக தலையசைத்தேன். ஒருவேளை நான் தான் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லையோ? அவர் இதுதான் தாட்தேவ் என்றார். நான் பனை மரத்திற்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன், இங்கு எங்காவது பனை நிற்கிறதா என்று கேட்டேன். என் வாழ்கையில் பனை சார்ந்த தேடுகையில் அப்படி ஒரு குருட்டுத்தனமான பந்தை நான் வீசியதில்லை. அவர் எனது மனம் நொறுங்கும்படி தான் பதில் கூறினார். முற்காலங்களில் இருந்திருக்கலாம் இப்போது இங்கு பனை மரங்களே கிடையாது என்றார். எனது நடை தளர்ந்தது. உற்சாகம் அப்படியே வடிந்துவிட்டது. அந்த டாக்சி டிரைவர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
மும்பையில் நுங்கினை “தாட்கோளா” என்று தான் சொல்லுவார்கள். தாட் என்றால் பனை என்றும் கோள என்றால் உருண்டை என்றும் பொருள். நுங்கினை வெட்டி அப்படியே கண் கண்ணாக தான் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அல்லது பனம் பழத்தின் சற்றேரக்குறைய உருண்டை வடிவம் இப்பெயரினை பெற்றுதந்திருக்கும். ஆகவே நான் தார்தியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் அப்பெயர் இந்தியில் “தாட்தேவ்” என அழைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பனை கடவுள் வாழுமிடம் என்பதாக ஒரு பெயர். மும்பை ஒரு பனை நகரம் மட்டுமல்ல பனை கடவுள் வாழுமிடம் என்பதாகவும் இருந்திருக்கிறது. மென் மழையா? சில்லென்ற காற்றா அல்லது மனம் அடைந்த உணர்ச்சிப்பெருக்கா. மயிர்கால்கள் சில்லிட்டன. எதோ ஒரு உணர்வு என்னுள் கடந்து சென்றது. நான் தேடி வந்த இடம் இதுதான். பனை சார்ந்து இம்மண்ணில் நிகழ்ந்தவைகள் இன்று என் கண்களுக்கு மறைவாக இருக்கலாம், ஆனால் விண் எட்டும் இந்த இரட்டைக்கட்டிடங்கள் ஒன்று ஆண் பனையெனவும் மற்றொன்று பெண் பனையெனவும் என் கண் முன்னால் எழுச்சியோடு நிற்கின்றன. தொல் மூதாதை பனையினை பற்றி ஏறி விண்னை அளந்துவிடும் கனவினை, நவீன மனிதன் விடாது முன்னெடுக்கும் ஒரு தொடர்ச்சியாகவே அந்த இரட்டைக் கட்டிடங்களைப் பார்க்கையில் நான் உணர்ந்தேன்.
எப்பாடியாவது இன்று இப்பகுதியில் ஒரு பனை மரத்தையாவது நான் தேடி கண்டுபிடித்த பின்னரே வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற உறுதியுடன் நின்றேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. எந்த திசை நோக்கி நடக்கலாம் என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், என்னையே ஒரு டாக்சி டிரைவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் கண்டேன். ஒருவேளை என்னை சவாரி என எண்ணிக்கொண்டாரா? பரவாயில்லை, அவரிடம் கேட்டுத்தான் பார்போம் என எண்ணி அவரை அணுகினேன்.
பனைக்கும் இந்த இடத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அறிந்து வந்தேன், ஆனால் இங்கே பனை மரம் ஏதும் எனது கண்ணில் தென்படவில்லை அருகில் எங்காவது பனை மரங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். அவர் முதலில், இங்கு பனை மரங்கள் ஏதும் இல்லை என்றார். பின்பு யோசித்தவராக பெடர் ரோடில் ஒரே ஒரு பனை மரம் இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அது “தாட்தேவ்” பகுதியில் இல்லை. இன்னும் சற்று தொலைவு செல்ல வேண்டும் என்றார். என் முகம் பிரகாசமடைந்தது. மும்பையின் மிக முக்கியமான ஓரிடத்தில், பனை ஒன்று நிற்கிறது என்பது நான் அவணப்படுத்தவேண்டிய ஒரு தகவல் தான்.
பொதுவாக, நாம் ஓரிடத்தில் பனை மரத்தினைத் தேடிச்செல்லும்போது, மிகச்சரியாக அவ்விடத்தில் பனை இலையென்றால், அதன் சுற்றுவட்டாரங்களை தேடுவது மிக முக்கிய ஒரு பணியாகும். காணாமல் போன பனைகளின் சுவடுகள் எங்காவது ஏதேனும் ஒரு வகையில் தனது எச்சங்களை விட்டு வைத்திருக்கும் என்பது உறுதி. ஆகவே அந்த பனை மரத்தினைப் பார்க்க எண்ணினேன். சற்றேரக்குறய ஒரு கி மீ தூரம் செல்லவேண்டும் என்றார். முதலில் நடந்தே செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், அது சரியில்லை, எனக்கு உதவி செய்த இந்த மனிதருக்கு முதல் “போணி” அமைத்துக்கொடுப்பதுவே சிறந்தது என எண்ணி, எனக்கு அந்த மரத்தைக் காண்பிப்பீர்களா என்றேன். ஏறுங்கள் என்றார்.
அவர் சென்ற சாலையின் இரு மருங்கிலும் பத்து அல்லது இருபது வருடங்களேயான பல வகை மரங்கள் சீரான இடைவெளிகளில் நின்றன. ஒரு அரை மைல் தூரம் சென்றிருப்போம். எனது இடது பக்கம் ஒரு மாபெரும் குன்று எழுவதைப் பார்த்தேன். கட்டிடங்கள் மிக உயரமான இடத்தில் அமைந்திருந்தன. இத்தனை வருடத்திலும் நான் இங்கே வந்ததில்லையே என எண்ணியபடி வந்தேன்.
அப்பகுதியில் இருந்த வணிக கட்டிடங்களைத் தொடர்ந்து ஒரு இடைவெளி தென்பட்டது. புதிதாக கட்டுமானத்தை துவக்கிய இடம் அது. ஆகவே தகரங்களை வைத்து அடைத்திருந்தார்கள். கட்டிடங்களின் பின்புறம் இருந்த குன்றுகள் அங்கிருந்த வீடுகள் இவ்விடைவெளி மூலம் தேளிவாகவே தெரிந்தது. இருள் விலகாத அத்தருணத்தில் தென்னையோலைகள் மரங்களின் செறிவு பழங்கால பங்களாக்கள் என அந்த பகுதி மும்பையின் ஒரு நூறு வருட தொன்மை கொண்டிருந்தது. வாகனம் சென்றுகொண்டிருக்கையில் என் கண்களில் ஏற்பட்ட பிரமையா என தெரியவில்லை பனை மரங்களைப் பார்த்தேன். ஆம் பனை மரங்களே தான். ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் அதிகம். நிறுத்துங்கள் எனக் கூவினேன். ஓட்டுனர் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தினார்.
சாலையிலிருந்து பார்க்கையில் கூட்டமாக சில பனை மரங்கள் அந்த உயர்ந்த இடத்தில் நின்றன. குறைந்தது ஐந்து பனை மரங்களாவது இருக்கும் போல் தோன்றியது. இன்னும் சற்று தொலைவில் மேலும் இரண்டு பனை மரங்கள் நின்றன. எனது முகம் புன்னகை ஏந்தியது. இது தாட்தேவின் மறு பகுதிதான் சந்தேகமில்லை. இங்கிருக்கும் பனை மரங்கள் எப்படியோ நகர்மயமாக்கலில் தப்பித்து இவ்விடம் பனைக்கானதுதான் என சொல்லும்படி நிற்கின்றன. இந்த பனைகளைப் பார்த்தபின்பு மிகவும் நிறைவாக உணர்ந்தேன். எனது உள்ளம் இழுத்துவந்த திசை மிகச்சரியானது என்ற எண்ணத்துடன் மீண்டும் டாக்சியில் வந்தமர்ந்தேன். ஓட்டுனர் என்னை ஆச்சரியமாக பார்த்தபடி, பெட்டர்ரோட் போகவேண்டுமா என்றார். ஆம் என்றேன்.
ஹாஜி அலி சந்திப்பு தாண்டி மேலும் ஒரு 100 மீட்டர் தூரம் தான் சென்றிருப்போம், நீங்கள் கேட்ட பனை என்றார். எனக்கு இருளில் எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒரு மரம் அங்கே இருந்தது. கூர்ந்து பார்த்தபோது அங்கே ஒரு மாமரம் தெரிந்தது, அதன் பின்னால் இருளில் நிற்கும் யானையென பனை தன் கால்களை ஊண்றி நின்றது. பாய்ந்து வெளியேறினேன். இந்த பகுதியில் வேறு எங்கும் பனை நிற்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மிக இள வயது மரம். சுமார் 30 வயதுகளில் இருக்கலாம். அந்த மரத்தில் 41 என எண் எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு அதன் அருகில் சென்று தொட்டுப்பார்த்தேன். விலகி நின்று பார்த்தேன். காய்கள் பழுத்திருக்கும் பெண் மரம். மனமே குதூகலத்தில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனது செல் பேசியில் புகைப்படமும் எடுத்தான் துக்கொண்டேன். இதன் தாய் இங்கே நின்றிருக்க வேண்டும் அல்லது இதன் அருகில் ஏதோ ஒரு பனை சில பத்தாண்டுகளுக்கு முன்பு நின்றிருக்க வேண்டும்.
எனது பயணம் இப்படி செயலாக்கம் பெறும் என நான் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை. நான் அங்கிருந்து திரும்புகையில், தொப்பென ஒரு சத்தம் . எனக்கு மிகவும் பழக்கமான ஒரு சத்தம் தான் அது. பனை தனது பழத்தினை விருந்க்டோம்பலாக எனக்கு கொடுத்திருக்கிறது. எங்கே விழுந்தது என தேடினேன். உடனேயே கண்களில் தென்பட்டது. கரத்தில் எடுத்துப் பார்த்தேன். அதன் தோல் பரப்பு மேலிருந்து கீழாக வரி வரியென காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரியும் இது மிகவும் சுவையான பழம் தான் என. அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டேன். நான் வீடு வரும் வரை அந்த பனம் பழம் என்னோடு கூடவே இருந்தது. மடியில் வைத்து கொஞ்சியபடியே வந்தேன். அதனை எனது கரத்தில் பிள்ளை என வைத்துக்கொண்டேன்.
எனது திருச்சபையின் மாவட்ட கண்காணிப்பாளர் அழைத்திருந்ததன் பேரில் அங்கே சென்றுவிட்டு வரும் வழியில் மீண்டும் தாட்தேவ் சென்றேன். முதன் முறையாக அங்கே இருளில் சென்றதால், மீண்டும் அங்கே பகலில் செல்வதுதான் சிறந்தது. நான் முதலில் பார்த்த பனைக் கூட்டங்கள் அல்டமன் ரோடில் இருப்பதாக ஓட்டுனர் கூறியது நினைவிற்கு வந்தது. இம்முறை டாக்சி எடுக்கவில்லை, நடந்தே சென்றேன். இம்முறை அந்த பசுமை நிறைந்த குன்றினை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. ஒரு எளிய குடியிருப்பைப்பார்த்து அதனுள் நுழைந்தேன். ஒரு பாட்டி என்னை விசாரித்தார்கள். அவர்களிடம் மலைக்கு எப்படி போகவேண்டும் எனக்கேட்டேன். அவர்கள் சாலை வழியாகத்தான் போக வேண்டும் எனக் கூறினார்கள். என்றாலும் இக்குடியிருப்பின் பின்புறம் வழியாக நான் சென்று பார்க்கலாமா என அனுமதி கேட்டேன். சரி என்றார்கள். அந்த இடம் ஒரு டோபி காட் தான், மும்பையிலுள்ள வண்ணாரப் பேட்டை. அங்கிருந்து பார்க்கையில் ஒரே ஒரு பனை மரம் மட்டும் தனித்து தெரிந்தது. நான் கும்பலாக பார்த்த பனை மரங்களைக் காணவில்லை.
மீண்டும் சாலைவழியாக வந்து தேடியபோது கிட்டத்தட்ட 7 பனை மரங்களை ஓரிடத்திலேயே என்னால் எண்ண முடிந்தது. இன்னும் அதிகம் இருக்கலாம். அன்று நான் மீண்டும் பெடர் ரோடு சென்றேன். எனக்கு பனம் பழம் கொடுத்த அந்த மரத்தின் அருகில் நின்று அதன் அழகை பார்த்தபடி நின்றேன். மீண்டும் பனம் பழம் கிடைக்குமா என்று காத்திருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. வாழ்வில் சில தருணங்கள் அப்படித்தான் மீண்டும் வராது. நான் சாலையைக் கடந்து இந்த மரத்தைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என கடக்கையில் எனக்கு எதிரே ஒரு சாலை சென்றது. அந்த சாலையின் முடிவில் ஒரு பனை மரம் நின்றது. அது நான் சற்றும் எதிர்பாராதது. பனை பரவலாக இப்பகுதிகளில் நின்றிருக்கிறது என்பதர்க்கான அடையாளம் தான் இவைகள்.
இப்போது நான் நிற்கும் இடத்தின் அருகில் தான் கிரான்ட்ரோடு. அதன் அருகில் தான் காமதிப்புரா. நான் நிற்கும் இடத்திலிருந்து 100 அடிக்குள் கடல் இருக்கிறது. ஹாஜி அலி தர்க்கா வெகு அருகிலெயே இருக்கிறது. பனை மரத்தோடு தொடர்புடைய மலபார் ஹில்ஸ் எனக்கு இடதுபுறமாக இருக்கின்றது.
மும்பை ஒரு பனை நகரம் என்பதற்கு வேறு சாட்சியங்கள் வேண்டுவதென்ன என என் மனம் உரக்க கூவியது. அன்று முழுவதும் நடந்துகொண்டே இருந்தேன். மீண்டும் ஹாஜி அலி சந்திப்பு வந்தபோது புத்திதாக பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டிருந்ததைப் பார்த்தேன்.
வீட்டிற்கு வந்தபின்பு கூகுள் மேப் உதவியுடன் அந்த பகுதியினை ஆராய்ந்தேன். 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அங்கே நிற்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் எனக்குக் காட்டின.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653
You must be logged in to post a comment.