கிறிஸ்மஸ் காலங்களிலும் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளிலும் போட்டிகள் வைத்தோ அல்லது வருகை பதிவினை முன்னிட்டோ திருச்சபையின் சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கும் மரபு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இந்த கலாச்சாரம் தேவையா என்கிற கேள்விகளை சிலர் எழுப்புவார்கள். கடவுளுக்காக செய்கிற நிகழ்ச்சிகளில் பரிசுகளை முன்னிறுத்துவது ஒருவகையில் உவப்பளிக்காத செயல் தான். இன்று எண்ணிப்பார்கவியலாத விலையுயர்ந்த பரிசுகளைக் கூட பெற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்பு கொண்ட திருச்சபை பிள்ளைகள் திருச்சபையில் கொடுக்கப்படும் பரிசுகளை கண்டு புளகாங்கிதம் அடைவதில்லை. வெல்கிறோம் என்ற எண்ணமே பெரும்பாலும் போட்டிகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தவும் பரிசளிக்கவும் காரணமாக அமைகிறது. சில இடங்களில் உற்சாகப்படுத்துகிறோம் என்ற எண்ணமும் உண்டு. திருமறை சார்ந்த அறிவு தெளிவை திருச்சபையினர் பெற வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்படும் பரிசுகள் தான் அனைத்தும். அவ்வகையில் நான் திருச்சபையில் பரிசுகள் கொடுப்பதை ஏற்கிறேன்.

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச் சங்கிலி
எனது சிறு வயதில், அனைத்து போட்டிகளிலும் நான் முதல் பரிசை வென்றாக வேண்டும் என்பது எனது வீட்டினரின் எதிர்பார்ப்பு. பெரும்பாலும் நான் மூன்றாம் பரிசுகளை கூட எடுத்ததில்லை அதற்கும் கீழிருக்கும் பரிசுகளையே நான் பெற்றிருக்கிறேன். அது ஆறுதல் பரிசு என்று அழைக்கப்படும். எனக்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கும் பரிசுகள் தான் அவைகள். ஆனால் போதகராயிருக்கிற எனது அப்பாவிற்கு அது மிகப்பெரிய கவுரவ குறைச்சல். அவர் கையினால் நான் அந்த ஆறுதல் பரிசை வாங்கினால் அன்று வீட்டில் எனக்கு ஆறுதல் சொல்ல ஆள் தேவையிருக்கும். அந்த அடிக்கு பயந்து தான் நன்றாக படிக்க வேண்டியிருந்தது.
பரிசுகளில் எப்போதும் தரப்படுத்துதல் உண்டு. முதல் பரிசுகள் எப்போதும் விலையுயர்ந்ததாக இருக்கும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் விலை குறைந்து வந்து, ஆறுதல் பரிசு என்பது மிக குறைந்த விலையில் இருக்கும். பங்கு கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆறுதல் பரிசுகள் கொடுக்கப்பட்டாலும், வாங்குபவருக்கு அது மிக பெரிய அவமானமாக இருக்கும். ஒருமுறை அவ்விதம் ஆறுதல் பரிசு பெற்ற ஒரு சிறுவன் தனது கையில் கிடைத்த கண்ணாடி கோப்பையினை வாங்கிய மறு கணமே அனைவர் முன்னும் வீசி நொறுக்கியதை நான் விக்கித்தபடி பார்த்து நின்றேன்.
குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு திருச்சபைகளும் கிறிஸ்மஸ் காலங்களில் பரிசுகள் வாங்குவதற்காக பல்வேறு சில்வர் பாத்திரக்கடைகளுக்கு ஏறி இறங்குவது வழக்கம். ஒரு முறை குமரி மாவட்டத்திலிருந்து மதுரை வரை சென்று சில்வர் பாத்திரங்களை எடுத்து வந்த நிகழ்ச்சிகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்மஸ் பரிசுகளை எடுக்கச் செல்லுவதின் மூலம் வரும் தகராறுகள், பரிசுகள் சார்ந்து நடைபெறும் சச்சரவுகள் என பல உண்டு. என்றாலும், பரிசுகளை நாம் நீக்க இயலாத ஒரு சூழல் நிலவுகிறது என்பதாகவே நான் கருதுகிறேன். ஏதோ ஒரு வகையில் அவைகள் நமக்கு தேவையாகின்றன. அதுவும் பரிசுகளை கொடுக்கவோ வாங்கவோ செய்வது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு கலாச்சார செயல்பாடுதான்.

பனை ஓலை ஈக்காம்பெட்டிகள் பரிசு பொருட்களாக திருச்சபையில் வைக்கப்பட்டிருக்கின்றன
திருச்சபை சில்வர் மோகத்திலிருந்து விலகி, மலினமான பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் ஒரு காலகட்டத்தையும் அடைந்திருக்கிறது. தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பலவுமே இன்றைய பரிசுகளுக்கு ஏற்றவைகளாக தெரிவுசெய்யப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் பரிசுகளைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், இவ்வித பரிசுகளை குறைந்த விலைக்கு வாங்கி சமாளிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் புழக்கத்தை எதிர்கொள்ளுவது திருச்சபையின் முக்கிய கடமையாகிறது. சூழியல் பார்வையில், திருச்சபையில் இவ்வித பரிசுகளை நீக்கி, பாரம்பரியமாக இயற்கையிலிருந்து பொருட்களைச் செய்யும் குயவர்களிடமிருந்தோ, மூங்கில் பொருட்களை செய்பவர்களிடமிருந்தோ, பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்களிடமிருந்தோ அல்லது இயற்கை வவசாயிகளிடமிருந்து வாங்கும் பொருட்கள் கூட மிக சிறந்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சிறந்த புத்தகங்களைக் கொடுப்பது கூட மாற்று பரிசாகவே இருக்கும்.
சரி எங்கிருந்து இவ்வித மாற்றங்களைத் துவங்குவது? நாம் தான் எப்போதும் நல்லுதாரணமாக இருக்கவேண்டும். நமது வாழ்வில் நாம் முன்னெடுப்பவைகளை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய மாற்றத்திற்கான விதையாகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், திருச்சபையினை நான் எனது களமாக வைத்திருக்கிறேன். சமூகத்தில் நிகழும் மாற்றங்களை விட, திருச்சபையில் ஏற்படும் சூழியல் புரிதலுடன்கூடிய நல்ல மாற்றங்கள் நம்மை மிக பெரும் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும்.

பனை ஓலை ஈக்காம்பெட்டியினை அம்மா திருமதி. சின்னபொண்ணு அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார்கள்
நான் பணி செய்யும் தூய பவுல், மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, ஆரே பால் குடியிருப்பு, பெண்கள் ஞாயிறு ஆராதனை இன்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே சிறப்பு செய்தியளிக்க அம்மாவை அழைத்திருந்தேன். தனது வாழ்வில் தந்தையினையும், கணவரையும் மகனையும் ஆருட்பொழிவு பெற்றோராக கொண்ட ஓர் அபூர்வ இறைத்தொண்டர். அம்மாவின் பேச்சிலுள்ள நேர்த்தி சொல்ல வரும் கூற்றில் உள்ள தெளிவு, வார்த்தைகளின் கச்சிதம், ஆழ்ந்த திருமறை அறிவு யாவும் அவர்களின் ஊழிய பின்னணியத்தையும் அவர்களின் ஆசிரியப்பணியின் தொடர்ச்சியையும் கூறுவதாக அமையும். மிக அருகிலிருந்து பார்த்ததினால் அவர்களின் வாழ்வே அற்பணிப்பு மிக்க ஒன்று என தைரியமாக சொல்ல முடியும். பகிர்தல் மற்றும் பராமரித்தல் (ஸ்கர் அன்ட் Cஅரெ) என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டார்கள். பெண்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகலையும் ஒருங்கிணைக்கும் ஜாஸ்மின் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள்.
பரிசுகள் குறித்து பேச்சு எழுந்த போது, நாம் ஏன் பனை சார்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்கக்கூடாது என கேட்டேன். திருமண வாழ்வில் 10 வருடங்கள் என்னோடு இருந்து எனது வாழ்வின் நோக்கங்களை ஜாஸ்மின் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கும் இது நல் ஆலோசனையாக தெரிந்தது. ஆனால் என்ன பரிசு வாங்கலாம் என தெரியவில்லை. மும்பையில் கிடைக்காததாக இருக்கவேணும், தனித்தன்மை வாய்த்ததாக இருக்கவேண்டும், பெண்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும், என காரண காரியங்களை பட்டியலிட்டு, வருகின்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு முறம் வாங்கலாம் என முடிவு செய்தோம்.
முறம் உற்பத்தியாளர்களை நான் அறிவேன். நாங்கள் விசாரிக்கையில் அவர்கள் வசம் கையிருப்பு இல்லை. அதே நேரம் மொத்த வியாபாரியிடம் பேசியபோது விலை அதிகமாக இருந்தது. மேலதிகமாக முறத்திற்காக நான் பேசிய இடங்களில் குறித்த நேரத்திற்கு அவைகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆகவே முறம் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.
பல்வேறு யோசனைகளுக்கு இடையில் எனக்கு குமரி மாவட்டதில் கிடைக்கும் ஈக்காம் பெட்டி வாங்கினால் என்ன என தோன்றியது. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் ஈக்காம்பெட்டியினை அரிவட்டி என்றும் சொல்லுவார்கள். ஓலைகளின் ஈர்க்கிலை வகிர்ந்து தனித்துவமான பின்னல்கள் கொண்ட பெட்டிகள் இது. பெரும்பாலும் குமரி – கேரள எல்லைகளில் வசிக்கும் தலித் சமூகத்தினர் பின்னும் ஒரு தொன்மையான படைப்பு இது. சர்வதேச அளவில் பனை ஓலை பொருட்களை விற்கும் மஞ்சள் என்ற செட்டியார் அமைப்பு, இவ்வித பின்னல்களுக்கு இரட்டை மலையாளம் என பெயரிட்டிருக்கிறது. காய்கறிகளைப் போட்டு வைப்பதற்கும், மசாலா பொருட்களைப் போட்டுவைப்பதற்கும் முற்காலங்களில் பயன்பட்ட பெட்டி இது. ஆனால் அரிவட்டி என்ற இதன் பெயர் காரணம், ஊறப்போட்ட அரிசியினை வடித்து உலர்த்தியெடுக்க பயன்பட்டதால் பெற்றது. முறத்தை விட மிகவும் விலை குறைவானது, நாங்கள் வாங்கும் சக்திக்குள் இருப்பது. ஆகவே, அரிவட்டி வாங்கலாம் என்றே முடிவு செய்தோம்.
எப்படி வாங்குவது என்ற கேள்வி எழுந்த போது, எனது நண்பரும் மார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் பால்மா மக்களமைப்பில் உள்ள செயல் இயக்குனர் திரு ஜேக்கப் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஞாயிறுக்கிழமை இரவு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். திங்கள் காலை 9 மணிக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டார்கள். அப்படியே காலை 12 மணிக்குள் எங்களுக்கு அனுப்பியும் விட்டார்கள். புதன் கிழமை மாலை ஆறு மணிக்கு எங்கள் கைகளில் ஓலைப் பெட்டி வந்து கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரோனும் மித்திரனும் இதனை எப்படி அடுக்குவது என்பதைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்தையும் துடைத்து பிசிறுகளை வெட்டி ஒழுங்குபடுத்தி தந்தார்கள்.
இதே வேளையில் எங்கள் திருச்சபையின் இளைஞர்கள் வருகிற 22.09.2019 அன்று வாலிபர் ஞாயிறு ஆராதனையினை அனுசரிக்க இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கும் பரிசுகள் வேண்டியிருந்தது. அவர்களுக்கான பரிசு இன்னும் விலைக்குறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். பனையோலையில் செய்யும் பனையோலை சாவி சங்கிலி கொடுத்தால் என்ன என்று கேட்டேன். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்கள். பனையோலை சாவி சங்கிலியினை தயாரிப்பவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகராஜன். பேசியபோது அவர்களும் அனுப்புகிறேன் என வாக்களித்து திங்கட் கிழமையே அனுப்பிவிட்டார்கள். சனிக்கிழமை மாலை 7 மணிவரை எனது கைக்கு வராத அந்த பரிசுப்பொருளால் நாங்கள் குழம்பிப்போனோம். நாகராஜன் அவர்களைக் கேட்டபோது வந்து சேர்ந்துவிட்டதாக கூறினார்கள். இரவு 8 மணிக்கு நாங்கள் ஆலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் அந்த பொட்டலம் வீட்டிற்கு வந்ததாக அம்மா சொன்னார்கள். நாம் முயன்று ஒரு படி முன்னே செல்லும்போது கடவுளின் துணை அனைத்து படிகளிலும் நமக்கு முன்பே உதவி செய்யும்படி காத்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனோம்.
பெண்கள் சிறப்பு தொழுகையில் கூடி வந்த அனைவருமே மகிழ்வுடன் இந்த பரிசுகளை எடுத்துச் சென்றனர். ஒவ்வொருவரின் முகத்திலும் அத்தனை பிரகாசம். அது எனக்கு மிகப்பெரிய ஆறுதல், ஊக்கம், ஆக்கம் அனைத்துமாகியது. அரிவட்டிகள் வந்த நாள் அன்று ஜாஸ்மினுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரிவட்டிகள் ஒன்றுக்குள் ஒன்றாக 7 பெட்டிகளை வைத்திருப்பார்கள். வெளிப்புறம் இருப்பது பெரிதாகவும், உட்புறமிருப்பது அளவில் சிறிதாக இருப்பதும் இயல்பு. இவ்விதம் செய்தாலே இவைகளை சந்தைக்கு ஒருங்கே எடுத்துச் செல்ல இயலும். ஆகவே ஒருவருக்கு பெரிதும் மற்றொருவருக்கு சிறிதுமா என்ற கேள்வியை அவள் முன்வைத்தாள். நான் கூறினேன், இது பிற பொருட்களைப்போல அல்ல, உயிர் தன்மை கொண்ட பொருட்கள் இவைகள். கைகளால் செய்யப்பட்டதால் தனித்துவம் கூடியவைகள். அந்த தனித்துவமே இவைகளை பெற்றுக்கொள்ளுவோருக்கு மகிழ்வளிப்பதாக அமையும் என்று கூறினேன். அது அவ்விதமாகவே நிகழ்ந்தது.
அனைத்தும் ஒழுங்காக நிறைவுற்றபடியால், இதனை ஏன் நாம் ஒரு முன்னுதாரணமாக முன்வைக்ககூடாது என எண்ணினேன். திருச்சபையின் சூழியல் பங்களிப்புகள் குறித்து பலவற்றை பேசிக்கொண்டிருக்கிறோம், தமிழகத்தில் பனை மரங்களை நடும் முயற்சிகள் திருச்சபைகளிலும் கூட நடைபெற துவங்கிவிட்டன. ஆனால் பனை சார்ந்து வாழும் மக்கள் அனைவரையும் திருச்சபை ஓர் விலக்கத்துடனேயே அணுகுகிறது. இந்த நிலை மாறினால் ஒழிய, திருச்சபை சூழியல் குறித்த முழுமையான பார்வையினை எட்டிவிட இயலாது. இன்றும் தமிழகமெங்கும், பனை சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அனேக கைவினைக் கலைஞர்கள் போதுமான ஊக்குவிப்பின்றி தங்கள் பொருட்களை விற்க இயலாமல் தத்தளித்தபடி இருப்பதைக் காண்கின்றோம். திருச்சபை திட்டமிட்டு, பனையோலைப் பொருட்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டால், பல ஆயிரம் குடும்பங்கள் பசிப்பிணியிலிருந்து வெளியே வரும். நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான கடமை இது. எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் அவர்களிடம் நாம் காட்டும் இவ்வன்பினால் நமது அன்பின் ஆண்டவர் குறித்து மவுன சாட்சிகளாக நாம் உயர்ந்து நிற்போம்.

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச்சங்கிலிகள்
பனை ஓலைகளாலான பரிசுகளை தேர்ந்தெடுப்பதும் வாங்குவதும் எப்படி? நமது தேவைகளுக்கேற்ப அவைகளை நாம் தெரிவு செய்ய இயலும். பனை ஓலையில் செய்யப்படும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் உண்டு, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் உண்டு, திருவிழா காலங்களுக்கான வீட்டு அலங்கார தோரணங்கள் உண்டு, பயன்பாட்டு பொருட்கள் உண்டு, பாரம்பரிய பொருட்கள் உண்டு, சமையலறை பொருட்களும் உண்டு. இவைகளை செய்யும் கலைஞர்கள் குறித்து நாம் உள்ளூரிலேயே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். மேலும் தமிழகமெங்கும் இவ்வித கலைஞர்கள் விரவி பரவியிருக்கிறார்கள். இவர்களைத் தேடி தெரிவு செய்வதும், இவர்களுக்காக பணியாற்றுவதும் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. பல்வேறு விதமான பரிசுகள் தேவை என நாம் அறியும்போது, பல இடங்களில் இருந்து நம்மால் இவைகளை தருவிக்க இயலும். இன்று இக்கலைஞர்களுக்கு இவ்விதமான ஒரு ஊக்குவிப்பு மிக தேவையாக இருக்கிறது. முன்கூட்டியே நேரமெடுத்து சொல்லிச் செய்வது, ஏற்ற நேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும். பெரும்பாலும் பரிசுகளை எடுப்பதற்கு நாம் இறுதி கணத்தை வைத்திருப்பதனால் நம்மால் இயற்கை பொருட்களை குறித்த நேரத்தில் வாங்க இயல்வது இல்லை. அதற்கும் ஒரு யோசனை இருக்கிறது. வருட துவக்கத்தில் நமக்கு தேவைப்படும் பொருட்களின் குத்துமதிப்பான ஒரு எண்ணை நாம் கூறிவிட்டோமென்று சொன்னால், இறுதி நேரத்தில் சிறிது கூடினாலோ குறைந்தாலோ சமாளித்துவிடலாம். என்றாலும் கருத்தில் கொள்க, நாம் எவ்வகையிலும் இவர்களது வாழ்வில் எந்த சுமையினையும் ஏற்றிவிடலாகாது. ஆகவே முதலிலேயே ஒரு முன்பணம் கொடுத்து வைத்துக்கொள்ளுவது சிறப்பு.
பலருக்கும் ஓலைகளில் செய்யப்படும் இவைகள் வேடிக்கையாக இன்று காணப்படலாம். ஓலைகளில் கொடுப்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது எனவும் வினவலாம். ஆனால் காடு மலை ஏறி சென்று பல பணித்தளங்களைப் பார்க்கும் நமக்கு, சூழியல் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மக்களின் விரிவு தெரியும். அவர்களின் பணியின் முக்கியத்துவம் தெரியும், அவர்களை நாம் ஆதரிக்கும் திருமறை சார்ந்த பின்னணியம் புரியும்.
திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் நடபடிகள்) தொற்காள் எனும் பெயருள்ள சீடரைக் குறிப்பிடுகிறது. தொற்காள் என்றால் பெண் மான் என்றே பொருள்படும். அவள் நோய்வாய்பட்டு மரித்துவிடுகிறாள். “நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்” என பார்க்கிறோம். அவரது மரணத்தில் அனேக விதவைகள் பங்குகொண்டனர். பேதுருவினிடம் அவர்கள் தொற்காள் செய்த அங்கிகளையும் அவள் செய்து கொடுத்த ஆடைகளையும் காண்பித்து கண்ணீர் சொரிந்தனர். என்னே ஒரு சிறந்த காட்சி? உன்னதமான சாட்சி அல்லவா இது? இன்று, பனையோலைப் பொருட்களைச் செய்பவர்களுக்காக நாம் கண்ணீர் உகுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, அவர்கள் வாழ்வின் கண்ணீரைத் துடைக்கும்படியாகவாவது நாம் செயல்படவேண்டாமா? (தி. ப 9: 36 – 42) பேதுரு அந்த பெண்ணை உயிரோடு எழுப்புவதாக திருமறைப்பகுதி நமக்கு விளம்புகிறது.
என்னைப்பொறுத்தவரையில், தமிழகத்திலுள்ள திருச்சபைகள் இணைந்து ஒரு வருடம் பனையோலைப் பொருட்களை வாங்கத் துவங்கினால் மறு வருடமே பலநூறு வடிவங்கள் புதிதாக கிளைத்தெழும் வாய்ப்புகள் இருக்கின்றன. அது இன்னும் அனேகருக்கு வேலைவாய்ப்பையும் ஒரு வேளை உணவையும் உறுதிச்செய்யும். திருச்சபை இன்று வாழும் தொற்காள்களுக்காக செய்யும் ஒரு அர்த்தம் பொதிந்த மன்றாட்டு இதுவாகவே இருக்கமுடியும்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)
malargodson@gmail.com
9080250653
You must be logged in to post a comment.