பனம்பழ கடைகள் 1000


தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலும் கிடைக்காத ஒரு பழம் உண்டென்று சொன்னால் அது பனம்பழம் தான். பல்வேறு நாடுகளிலிருந்தும், தேசத்தின் மறு கோடியான காஷ்மீரிலிருந்தும் நமது ஊருக்கு பல்வேறு வகையான பழங்கள் அனுதினமும் வந்தவண்ணம் உள்ளன.னாம் கல் விட்டு எறிந்து பொறுக்கி உண்ட நாவல் பழங்களே கிலோ 200 ரூபாய் வரை விற்கிறது. நாம் மரத்திலேறி பறித்த கொய்யா, மா போன்றவைகள் சந்தையில் இன்று  கிலோ 40 ரூபாய்க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. இப்படியிருக்க  நமது மாநில மரமாகிய பனை மரத்தின் பனம்பழங்கள் கடைக்கு வராததற்கு காரணம் என்ன?

Panam pazam juice

பனம்பழ சாறு கலந்த தண்ணீரை மாடு குடிக்கிறது

தமிழகம் மிக மெல்ல தன்னை ஒரு நுகர்வு கலாச்சாரத்திற்குள் நுழைத்துக்கொண்டது. விலைக்கொடுத்து வாங்கி சாப்பிடுவதே “கெத்து” என எண்ணி தனது சேமிப்பை இழந்துகொண்டிருக்கும் காலம் இது. பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் நம்மை விட்டு அகன்று போய்கொண்டிருக்கின்றன. பனம்பழங்கள் அவைகளில் தலையாயது. பனம் பழங்கள் பொதுவாக பசியை ஆற்றும் தன்மை மிக்கது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட பனம்பழங்களை தினசரி உணவாக எடுத்துக்கொண்டிருந்த   ஒரு சமூகத்தின் குழந்தைகளுக்கு இன்று பனம்பழங்களின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் அற்ற நிலையில் உள்ளது. பனை மரம் என்றாலே நுங்கு என்கிற ஒற்றைப்படையான புரிதல் மட்டுமே இருக்கிறது.

நான் ஒருமுறை ஹைதராபாத் சென்றிருந்த போது, அங்கே ஒரு சாலை நெடுக பெண்கள் அமர்ந்து நுங்கினை  விற்றுக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 – 40 பெண்கள் சீரான இடைவெளியில் இருந்தபடி செய்யும் அந்த விற்பனையை நான் ஆச்சரியத்துடன் பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பரிடம் பிற்பாடு அது குறித்து விசாரித்தபோது. நுங்கு என்பது ஏழைகள் உண்ணும் உணவு என்னும் ஒரு பிம்பம் இங்கே இருக்கிறது, ஆகவே வசதியானவர்கள் அதனை வாங்குவதில்லை என்றார். வசதியானவர்கள் என்பதை நாம் நடுத்தரவர்க்கம் என புரிந்துகொள்ளவேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளாவில் நடுத்தர வர்க்கம் தான் பனை நுங்கினை விரும்பி வாங்கும் சனம். அவர்கள் தான் பனம் பழங்கள் மீது ஒரு விலக்கத்தை வெளிப்படையாக காண்பிப்பவர்கள். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் பனம்பழங்களை சாப்பிட்டவர்கள் எவரேனும் உள்ளார்களா என்றால்,  ஆயிரத்தில் ஒருவராகவே அவர் இருக்க முடியும். இவ்விதமாகவே நாம் பனம்பழங்களை இழந்தோம். நூங்கு உண்பதால் அடுத்த தலைமுறை எழும்ப இயலாதபடி கருக்கலைப்பு நடைபெறுகிறது.

DSC03991

மித்திரன் சுட்ட பனம்பழத்தை விரும்பி உண்ணும் காட்சி

பனம்பழங்கள் குறித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவராக பணியாற்றிய Dr. D. நரசிம்மன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் எழுதிய கவிதையினை எனக்கு காண்பித்தார்கள்.

அநாகரீகப் பழம்

“தொப்…”
எழுந்தோடிப் பார்த்தேன்
ஆம்! பனம் பழம் தான்

விழுந்தவுடன் ஒரு வாசம்
விழுந்த மறுநாள் ஒரு வாசம்
சுடுகையில் வெடிக்க வெடிக்க
தெருவையே
சுண்டியிழுக்கும் வாசம்

இழுத்து, மென்று
கடித்து, சப்பி
முறுக்கி, சூப்பி…
வேறெதையும் சுவைக்க முடியாது
இத்தனை வகையாய்
சாப்பிட்டுவிட இயலாது
பேருந்திலோ இரயிலிலோ
போகிற போக்கில்

“பழமா இது”?
முகமெல்லாம் பூசி
கையெல்லாம் பிசுபிசுக்க
பற்களில் சிக்கும் நாரைப்
பிடுங்குவது ரொம்பச் சிரமம்
பார்க்கவே அருவெறுப்பு
கிராமத்து நண்பர் சொல்கையில்
நானும் பாலுவும்
திகைத்துப் பார்த்தோம்

விரலிடுக்கில் தேக்கரண்டியைப் பிடித்து
இலகுவாய் வழித்து
பேசிக்கொண்டே சாப்பிட
முடியாததுதான்

உண்ண
உழைப்புத் தேவை
சிறிதாவது

“நாகரீகச்” சமூகம்
கீழாகவே பார்க்கிறது
எல்லாவித உடலுழைப்பையும்.

எவ்வளவு உண்மை. எத்தனை நாசூக்காக நமது மன விலக்கத்தை கவிதையாக்கியிருக்கிறார். பேராசிரியர் மேலும் கூறுகையில், பனம் பழத்தின் வாசனை கொண்ட மிட்டாய் கூட நமக்கு இன்று கிடையாது என்றார். ஆம், பனிக்கூழ் விற்பனையகங்களில் நாம் அறியாத பழங்களின் சுவையினை கொண்டு நம்மிடம் படைக்கிறார்கள், மிக அதிக விலை கொடுத்து அதனை நாம் வாங்குகிறோம். ஆனால் நம்மூர் பழமான பனம் பழத்தின் சூவை ஏற்றப்பட்ட ஒரு உணவுப்பொருள் கூட தமிழகத்தில் கிடைப்பதில்லை. ஏன், பனம் பழமே சுவைக்கத்தக்கது எனும் எண்ணம் கூட நமக்கு இல்லை.

பனம் பழம் மட்டுமே அவித்தோ வேகவைத்தோ சாப்பிடும் வகையில் காணப்படும் ஒரு பழம். பனம் பழ வாசனை தனித்துவமானது என்றால், அதனை சுடும்போதோ அவிக்கும்போதோ எழும் வாசனை பல மடங்காக பெருகும் தன்மையுடையது. சிறிதும் புளிப்பு சுவை இல்லாத பழம். இலவசமாக கிடைப்பதால் தான் வீணடிக்கிறோமா என்று கூட தோன்றுகின்றது.

 

சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் டாக்காவிலிருந்து எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தான். பனம்பழம் அங்குள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் படம் அது. விலையும் அதிகம். வங்காளிகள் பனம் பழங்களை மிக அதிகமாக சாப்பிடுவார்கள் என பின்னர் அறிந்துகொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றாலம் சென்றிருந்த போது, பனம் பழங்களை வெட்டி விற்பனை செய்யும் ஒரு நபரைப் பார்த்தேன். ஒரு பழம் 20 ரூபாய். அவர் அளவு வழித்து கொடுக்கும் திறன் படைத்தவர்கள் இருக்க இயலாது. நல்ல அரிவாளை கூர் தீட்டி அதற்கென்றே வைத்திருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பனை விதைகளை சேகரிக்கச் செல்லும் சூழலில், குறும்பனை அருகில் ஒரு பாட்டி பனம் பழங்களை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டேன்.  ஆம் குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பனை விதைகளாஇ விற்பனைக்குக் கொண்டுச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்கிவரும் வழக்கம் இருந்திருக்கிறது. மீனுக்கு இணையாக விற்கப்பட்ட ஒரு பழம் இன்று அனாதையாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடப்பது வேதனையளிக்கின்றது.

Juice

மாட்டிற்காக பனம்பழ கரைசல் தயாரிக்கப்படுகிறது

இன்றும் தமிழகத்தில் ஒருசிலர் பனம் பழக் கரைசலை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி வளர்ப்பிலும், கால்னடை வளர்ப்பிலும் பனம்பழச் சாறு முக்கிய இடம் வகிப்பது என்பதை பெரும்பாலும் இன்னும் எவரும் உணர்ந்து கொள்ளவில்லை. பொதுவாக பனம் பழங்களை மாடுகளியும் நாய்களையும் குளிப்பாட்ட பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தெள்ளு மற்றும் உண்ணிகள் தெறித்து ஓடிவிடும் என்பார்கள். உடலும் வாசனையுடன் பளபளப்பாக  இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், வாரத்திற்கு ஒரு முறையாவது பனம்பழத்தை தேடி எடுத்து வந்து தலைக்குப் போடுவேன். அதுவே சிறந்த சோப்பாகவும் எனக்கு பயன் பட்டது. பனம் பளத்திலிருந்து எடுக்கும் அடர் சாற்றை முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் பொறுத்திருந்து எடுத்தால், அது முகத்திற்கு பொலிவு கொடுக்கும் வண்ணமாக செயல்படுகிறது.

பனம் பழக்கூழ் தயாரிக்கும் பால்மா மக்கள் அமைப்பு மிக திறமையாக தங்களை முன்னிறுத்துகிறார்கள். பனம் பழங்களை சேகரித்து அதிலிருந்து பனம்பழச் சாறுகளை எடுத்து பிற்பாடு எஞ்சும் பனை விதைகளை நடுகையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். நாட்பட்ட  பனை விதைகளை கிழங்குக்கென போட்டு விடுகிறார்கள். இந்த புரிதல் இன்று தமிழகத்தில் ஏற்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். பனம்பழத்தின்  பயன்பாட்டு சக்கரம் சீராக சுழன்றால் தான்  ஒரு சமூகமாக செயல்பட்டுவரும் நமக்கு அது பயனளிக்கும்.

ஆகவே தமிழக தழுவிய பனம் பழக் கடைகளை நாம் ஏன் வைக்க கூடாது என்பதுவே எனது கேள்வி. பனம் பழங்களை வீணடித்து பனை விதைகளை நடுபவர்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு எழுவதில்லை. அது ஒரு நாடக அரங்கேற்றம் மட்டுமே. பனை சார்ந்த சூழியல் மற்றும் சமூக பயன்பாட்டு புரிதல்களை குறிப்புணர்த்த நாம் வாங்கும் நுழைவுச்சீட்டு தான் பனை நடுகை. தன்னளவில் அது பெரிய பலன் தருகின்ற ஒரு செயல் அல்ல என்பதுவே எனது புரிதல். பனை விதைகளை சேகரிக்காதவர்கள் பனைக்கும் அவர்களுக்குமான தூரத்தை உணராமலேயே இருப்பார்கள். ஆனால் அவ்விதம் இருக்கும் தொலைவு குறித்த புரிதல் சரிவர இருக்காது.  பனை விதை நடுகை நமது இலக்கு அல்ல. பனை மரங்கள் பயன்பாட்டு மரங்களாக உயர்ந்தெழவேண்டுமென்பதே நமது வேட்கை. விதைகளை நட்டால் போதும் என அந்த சுகத்தில் சொக்கிப்போயிருப்பவர்களுக்கு இப்போது நாம் எது சொன்னாலும் புரியாது.

பழங்காலத்தில், பனை விதைகள் இப்படி விதைத்து பரப்பப்படவில்லை. பனை நடுகை என்பது பனையேறிகளின் வாழ்வின் அங்கமாக இருந்திருக்கின்றன. இன்று அவ்வித சூழல் அழிந்து போய்விட்டது. பனையேறிகள் செய்யும் பொருட்களை வாங்குபவர்கள் இன்று தமிழகத்தில் இல்லை. பனை தொழிலை விட்டு விலகி சென்றுவிட்ட இலட்சக்கணக்கான பனை தொழிலாளர் நலன் குறித்து எந்த சத்தமும் எழவில்லை. பனையேறிகள் எவ்விதம் நமது சமூகத்தையும் சூழியலையும் இணைக்கும் பாலமாக இருந்தார்கள் என்பது நமது நினைவிலேயே இல்லை. ஒரு வரலாறே அழிந்துபோய்விட்டது.

இவ்வாண்டு, பனம்பழங்களை விற்பனை செய்ய புதிய கடைகளை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். ஊருக்கு ஒரு கடை, நெடுஞ்சாலைகளில் ஒரு கடை, சந்தை கூடுமிடங்களில் ஒரு கடை, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும்  என எங்கெல்லாம் கடைகளை வைக்கமுடியுமோ அங்கெல்லாம் பனம் பழங்களை விற்கும் கடைகள் எழும்பவேண்டும். ஒரு பழம் 10 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் நாள் ஒன்றிற்கு  20 பழத்தை விற்கும் ஒரு மூதாட்டிக்கு தினமு 200 ரூபாய் கிடைப்பது நிச்சயம். பனம் பழங்களை வாங்குபவர்கள் பழத்தை தின்றுவிட்டு கொட்டைகளைப் போட்டுவிடலாம். அவைகள் கிழங்காகவோ மரமாகவோ மாறி நமக்கு பலனளிக்கும்.

சில அறிவு ஜீவிகள் பனம் பழங்களைத் தின்றால் பித்தம் என்பார்கள். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் அறிவோமா இல்லையா? பனம் பழங்கள் இன்று சுவைத்துக்கூட பார்க்கப்படாத ஒரு சூழலில் வாழ்கிறோம். நானும் எனது குழந்தைகளும் பனம் பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவோம். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. எனது குழந்தைகள் பெரு விருப்பத்தோடு பனம்பழத்தை உண்பவர்களே.

பனம் பழங்களை நமது குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யலாம். அவைகளை அவித்து வருடத்திற்கு ஒருநாள் உண்ணக்கொடுக்கலாம். பிற்பாடு எஞ்சியிருக்கும் விதைகளை அவர்களைக் கொண்டே நட ஊக்குவிக்கலாம். இதுவே ஒரு சரியான முன்னுதாரணாமாக இருக்கும். பனம் பழத்தின் உறவு இல்லாத ஒரு தலைமுறை விதைக்கும் பனை விதைகள் பயனுள்ள ஒரு முயற்சியென கருத இடமில்லை.

தமிழகத்தில் ஆண்டு தோறும் தோராயமாக 1000 கோடி பனம் பழங்கள் கிடைக்கின்றன. இவைகளின் சந்தை மதிப்பு என்பது பல்வாறாக பிரித்து பார்க்க இயல்வது. குறிப்பாக பனம் பழத்தின் மேல் பகுதியில் இருக்கும் சாறு, ஸ்குவாஷ் மற்றும் ஜாம் செய்யவும், பணாட்டு தயாரிக்கவும்,  சோப்பு ஷாம்பு போன்ற பல்வேறு வாசனை திரவியங்களையும் தயாரிக்கும்  மூலப்பொருளாகவும், துணி துவைக்கும் சோப்பிற்கு மாற்றாகவும்  இருக்கிறது. மேலும் பழக்கூழ் எடுத்தபின் கிடைக்கும் மெல்லிய நார் கொண்டு தரமான தலையணைகளைச் செய்யலாம். பனங்கொட்டைகள் முளைக்கவைக்கப்படுகையில் அவைகளிலிருந்து கிடைக்கும் பனங்கிழங்கு மிகச்சிறத்த உணவுப்பொருளாகும். மலசிக்கல் போன்ற நோய்களுக்கும், சீரண சக்தி மேம்படவும், சர்கரை நோயைத் தடுக்கவும் ஆற்றல் பெற்றது இது. பனங் கொட்டைகளை உடைத்துப் பார்த்தால் அதனுள் இருக்கும் தவண் சுவை மிகுந்த ஒரு உணவுப்பொருளாகும். சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை உண்ணத்தக்க ஒரு சுவையுடன் இது காணப்படுகிறது. மேலும் பனங்கொட்டையிலிருந்து தான் முன்னர் சில கரண்டிகளை தயாரித்திருக்கிறார்கள் அக்கரண்டிகள் பொதுவாக எண்ணை எடுக்கும் செட்டியார்கள் பயன்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனம் பழங்கள் இன்று விதைக்கப்படுவது ஒரு சிறந்த முன்னெடுப்புத்தான். அது சீமான் என்றாலும் எடப்பாடி என்றாலும் ஏன் மோடிஜியே என்றாலும் எனது ஆதரவு அதற்கு உண்டு. பனை சார்ந்து எந்த பணியினை முன்னெடுப்பவர்களும் எனது வணக்கத்திற்குரியவர்களே. ஆனால் விதைப்பவர்கள் தங்கள் கடமை அத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என எண்ணுவார்களேயானால், அதுவே பனைக்கு வைக்கும் ஆக சிறந்த கொள்ளியும் கூட. பனை மரங்கள் மனிதர்களின் கைகளால் தழுவப்பட காத்திருக்கும் மரங்கள். பனை மரத்தினை இன்றளவும் பேணி வருபவர்கள் இயற்கையை காக்கும் ஆர்வலர்கள் அல்ல, அதோடு தினம் தினம் தொடர்பில் இருக்கும் மக்கள் தான் பனை மரக்த்தினை காத்து வந்திருக்கிறார்கள். ஆகவே பனை காக்கும் தொண்டில் ஈடுபடுவது என்பது பனை மரத்தோடு பிணைந்துள்ளவர்களின் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தாம்.

பனம் பழ காலம் துவங்கியிருப்பதனால், காட்சி சார்ந்தோ, திருச்சபை சார்ந்தோ, கோவில் சார்ந்தோ, மசூதி சார்ந்தோ, அறக்கட்டளைகள் சார்ந்தோ, தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோ, ரசிகர் மன்றங்கள் சார்ந்தோ ஒரு மூதாட்டியையோ அல்லது ஒரு முதியவரையோ தெரிவு செய்து பனம் பழங்கள் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பினை எடுத்துக்கூறுங்கள். அவர்கள் ஒரு தொழில் தொடங்க உதவியாக இருங்கள். குறைந்த முதலீட்டில் துவங்கும் இந்த தொழில் மிக பெரிதாக கிளைப்பரப்பும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் பனம் பழங்கள் விற்பனை செய்யும் 1000 நபர்களை உருவாக்கினால் அடுத்த வருடம் முதல், பனம் பழங்கள் அனைத்து பழக்கடைகளிலும் கிடைக்கும் வழி வகை பெருகும். தமிழகத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடி பெறுமானமுள்ள பனம் பழங்கள் உள்ளூர் வணிகத்தை மாற்று திசை நோக்கி கொண்டு செல்லும்.

இவ்விதம் செய்கையில் பனை விதைகளை நாம் பொறுக்கி எடுத்து நட்டுக்கொண்டிருக்க தேவையிருக்காது. அது இயல்பான ஒரு கதியில் நமது மரங்கள் பரவ வழிவகைச் செய்யும். இருக்கும் மரங்கள் பயனறிந்து காப்பாற்றப்படும். எவரும் பனை மரங்களை இத்துணை வேகத்துடன் வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

புகைப்பட உதவி: இளங்கோவன் சின்னசாமி

அருட்பணி காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

மின்னஞ்சல்: malargodson@gmail.com

அலைபேசி: 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: