பனை நகரம் 13 


 –  

பனை மலை

மும்பை என்பது குட்டித் தீவுதொடர்கள் தான். ஆனால் அவைகள் நாளாவட்டத்தில் இணைக்கப்பட்டன. மும்பையின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றாக இணைக்கப்படும் நிகழ்வு ஆங்கிலேயர் காலத்தில் தான் நிகழ்ந்தது. கிரேக்க புவியியலாளர் டாலமி (Ptolemy) இவ்விடத்தினை “ஹெப்டமேசியா” என்றே குறிப்பிடுகிறார். அதற்கு ஏழு தீவுகளின் தொகை என்று பொருள். மும்பை கற்காலம் துவங்கி மனிதர்கள் சுற்றிதிரிந்த இடம் தான். கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல் மும்பையினை ஆட்சிபுரிந்தவர்கள் குறித்த தரவுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் சுதேசி மன்னர்களால் ஆளப்பட்ட இப்பகுதிகள் இஸ்லாமியர் கரத்திலிருந்து போர்த்துக்கீசியர்கள் கரத்திற்கு சென்றது. 1662 ஆம் ஆண்டு போர்துக்கீசிய இளவரசி காத்தரினும், இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் ஆகியோர் திருமணத்தில் இணைந்தனர். இந்த திருமணத்தின் மூலமாக மும்பை தீவுகள் இங்கிலாந்து மன்னருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மும்பை எப்படி இருக்கும் என்றே தெரியாத இரண்டாம் சார்லஸ், அதனை கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார். கம்பெனி மும்பையில் நுழைய 10 பவுண்டுகள் மட்டுமே வருட வாடகை கொடுத்திருக்கிறார்கள். கம்பெனி தீவு கூட்டங்களுக்குள் தகவல் தொடர்புகளுக்காக வேண்டி மலைகளை உடைத்து கடலுக்குள் தள்ளி இந்த நிலப்பரப்புகளை ஒன்றாக்கினார்கள். அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. பரபரப்புகள் செய்வது என்ன என்று இன்று நாம் தெளிவாகவே அறிகிறோம்.

Zion Top city

சயன் மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து

கடற்கரையில் வாழும் மீனவ சமூகமான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே மும்பையின் பூர்வ குடிகள் எனக் கூறப்படுவது உண்டு. இவைகள் ஏற்றுக்கொள்ளகூடிய உண்மைகள் தான். இத்தனை தீவுகளில் மீன் பிடியினை தங்கள் வாழ்வாதரமாக கொண்டிருக்கிற மக்கள் தான் வாழ இயலும். இன்றும் கடற்புறங்களில் மீனவ குடிகளான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் ஓங்கி வளருவதைப் பார்க்கையில், இம்மீனவ சமூகத்திற்கும் பனைக்கும் உள்ள தொன்று தொட்ட உறவினை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படியே பனை மரம் ஏறுகின்ற சமூகமான பண்டாரிகளும் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பு என்னைக் கிளர்ந்தெழச் செய்தது. பனை மரங்கள் எப்படி குமரி மாவட்டத்தில் மீனவர்களுடனும் நாடார்களுடனும் இணைத்திருக்கிறதோ அதுபோலவே என எண்ணிக்கொண்டேன். ஆனால் தீர்க்கமாக ஏதும் அறிந்து கொள்ளவோ, கண்டுபிடிக்கவோ இயலவில்லை என்பது தான் உண்மை. இவர்தம் வாழ்வின் உள்ளடுக்குகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்தால், பனை இவர்கள் வாழ்வில் பெற்றிருந்த உண்மையான இடம் என்ன என்பதனை நாம் அறியலாம். நகர மயமாக்கலில், பெரும்பாலான பனை சார்ந்த நினைவுகள் அற்றுப்போயிருக்கும் சூழலில், இவைகளை மீட்டெடுப்பதோ கண்டுபிடிப்பதோ எளிது அல்ல.

மொத்த மஹாராஷ்டிர பகுதிகளுமே பவுத்தர்களின் காலடி பட்ட இடங்கள் தாம். கி மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி பி 2 ஆம் நூற்றாண்டு வரை பவுத்தர்களின் இயக்கம் இப்பகுதிகளில் தொடர்ச்சியாகவும் சீராகவும் இருந்திருக்கிறது.  சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கெனரி குகைகளே இதற்கு சான்று. போரிவலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் இருப்பதைக் காணலாம். வனவிலங்கு பூங்காவை ஒட்டியிருக்கும் அனைத்து பகுதிகளிலும், ஏன் பூங்காவின் உட்பகுதியிலும் சில பனை மரங்கள் இருப்பதை இன்றும் நாம் கண்டு கொள்ள இயலும்.

Sion Station

சயன் இரயில் நிலையம்

நான் பனை மரச்சாலை பயணம் செல்லுவதற்கு பண உதவி செய்தவர்களுள் எனது திருச்சபை அங்கத்தினரான திரு. ராஜேந்திர ராஜன் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். சயன் என்ற பகுதியில் அவரது அலுவலகம் இருந்தது. நான் அவரை சந்தித்துவிட்டு மீண்டும் வெளியே வருகையில் அங்கே ஒரு பூங்காவைப் பார்த்தேன். ஏதோ ஒரு உந்துதலில் அந்த பூங்காவிற்குள் நுழைந்தேன். பூங்காவிலிருந்து திடீரென படிகள் செங்குத்தாக ஏறின. அனேகர் அந்த படிகளில் ஏறியபடியும் இறங்கியபடியும் இருந்தனர். மீண்டும் என் வாழ்வில் ஒரு இன்ப அதிர்ச்சி. எனது கண்களை ஏறிட்டு பார்த்தபோது அங்கே பனை மரங்கள் நின்றன.  அன்று அந்த கோட்டைக்குள் நான் நுழைந்து பார்த்தபோது சில பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். பெரும்பாலும் காதலர்களும், இளைஞர்களுமே அங்கிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். குழந்தைகள் மும்பையின் நெருக்கடியினை மறந்து தேனிக்களாய் பறந்தோடிக்கொண்டிருந்தனர்.

ஒரு கோட்டையில் பனை மரம் நிற்பது என்பது அந்த கோட்டையின் நிலவியலை இன்றும் நம் கண்முன் கொண்டுவரும் ஒரு சாட்சி தான். குறிப்பாக பனை மரம் குறித்த நினைவுகள் ஏதும் பொதுபுரிதலில் இல்லாத ஒரு நிலப்பரப்பில், பனை மரங்கள் நிற்கின்றன என்பது ஒரு முக்கிய தடயமாகும். எவ்வாறு இவைகள் இங்கே வந்திருக்கும்? கோட்டை காவலை மீறி, பனை மரங்கள் எப்படி ஒரு கோட்டைக்குள் நுழைந்திருக்கும் என்பது முக்கிய கேள்வி தான். இக்கேள்விகளின் பின்னணியில் தான், பனை மரங்கள் இப்பகுதிக்கே உரித்தானவைகள் என்ற புரிதல் மெலெழுந்து வருகின்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வில் இம்மரங்கள் இணைந்தே இருந்திருக்கின்றன.  எவ்வகையில் என நமக்கு இப்போது தெரியாவிடினும், இம்மரம், மும்பையின் அடையாளமாக இன்றும் நின்றுகொண்டிருப்பது சிறப்பு.

Sign Board

சயன் கோட்டையின் நுழைவுப்பகுதியில் உள்ள பூங்கா

சயன் என்கிற பெயர் திருமறையிலிருந்து எழுந்த பெயர். சியோன் மலை என்கிற பெயரையே இங்கு வந்து வாழ்ந்த கிறிஸ்துவ துறவிகள் வைத்திருக்கின்றனர். யூதர்களைப் பொறுத்தவரையில் சீயோன் என்பது மலையின் மேல் இருக்கிற ஒரு பட்டணம். கடவுள் தங்கும் ஒரு மலை எனவும், இஸ்ரவேலர்களின் தலை நகரம் எனவும் அதனை அழைப்பார்கள். ஆகவே கிறிஸ்தவர்களுக்கும் சீயோன் என்ற பெயரின் மீது பெரு விருப்பம் இருந்தது. பரலோகத்தையே புதிய சீயோன் என குறிப்பிடும் போக்கும் உண்டு. போர்த்துக்கீசியர்கள் மும்பையினை கைப்பற்றியபோது பல கிறிஸ்தவ துறவிகள் இங்கிருந்த இடங்களில் தங்கள் வாழ்வை அமைத்து சமய தொண்டினை மேற்கொண்டனர். இன்று காணப்படும் சயன் என்ற இரயில் நிலையத்தின் அருகில் காணப்படும் குன்றில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் இவ்விதம் உருவானது தான்.

இதன் மராட்டிய பெயர் ஷீவ் என்று சொல்லப்படுகிறது. இரயில் பயணத்தில் எல்லாம் மராட்டிய அறிவிப்புகளில் ஷீவ் என்று அறிவிக்கப்படுகையில் இது என்ன என்றே ஆச்சரியமாக பார்ப்பேன். எல்கை என்ற பொருளுடைய இப்பெயர், போர்த்துக்கீசியர் ஆட்சிபுரிந்த சல்செட்டே என்கிற நிலப்பகுதிக்கும் பித்தானியர்கள் ஆட்சிபுரிந்த பரேல் என்ற நிலப்பகுதிக்கும் எல்லையில் எழுந்ததால் இப்பெயர் வந்தது என்பார்கள்.

மும்பையின் மையப்பகுதியாக சயனை இன்று நான் உருவகித்துக்கொள்ளுகிறேன். மும்பையின் கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்கு பகுதி நோக்கி வருவதற்கு சயன் ஒரு முக்கிய சந்திப்பு. நான் 12 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்த போது, பேலாபூர் பகுதியிலிருந்து மலாட் நோக்கி பயணிக்கையில், சயன் தாண்டி தான் பேருந்து செல்லும். ஒரு முறை பேருந்தில் நான் பயணிக்கும்போது, அங்கிருந்த வணிக வளாகத்தின் அருகில் நிற்கும் பனை மரத்தினைப் பார்த்தேன். வேறு மரங்களே இல்லை. ஆனால் அந்த வணிக வளாகத்தின் முன்பு நெடு நெடுவென்று நின்ற அந்த பனைமரம், பல கதைகளை தன்னகத்தே உறையவைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது. மும்பை வந்த புதிதில், தமிழர்களால் தான் பனை மரங்கள் மும்பைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் என நான் எண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம்.

Zion Tops

சயன் கோட்டையின் சிதிலங்களின் ஊடாக பனை

சயன் அருகில் தான் தாராவி என்கிற தமிழர் வாழும் சேரிப் பகுதியும் இருக்கிறது. தாராவியிலும் பனை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதைப் பார்க்கலாம். மும்பை தமிழ் சங்கம் கூட சயனில் தான் அமைந்திருக்கிறது. இங்குள்ள தமிழ் நூலகம் மிக முக்கியமானது. தமிழ் எழுத்தாளாரான திரு. நாஞ்சில் நாடன் இதன் நூலகத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எனது இரயில்  பயணங்களில் சயன் இரயில் நிலையத்தைக் கடந்து செல்லுபோதெல்லாம் அதன் அருகில் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்கும் பனை மரத்தினைப் பார்த்திருக்கிறேன். இதனை நான் ஒருபோதும் சயன் மலையில் நான் பார்த்த மரங்களுடன் ஒப்பிட்டோ இணைத்தோ பார்த்ததில்லை. அவ்வித எண்ணம் எனக்கு அப்போது தோன்றவுமில்லை. மும்பை ஒரு பனை நகரம் என்ற தொடரை எழுத எண்ணியபோது தான் இப்பகுதிக்குச் சென்று பார்த்தால் என்ன எனத் தோன்றியது. ஆகவே மீண்டும் சயன் நோக்கி பயணித்தேன்.

சயன் இரயில் நிலையத்தின் அருகில் வந்து பார்த்தபொழுது அந்த பனை மரம் நெடுந்துயர்ந்து நின்றது. ஒற்றைக்கால் தவம் போல. ஏன் துறவிகள் இப்பகுதியினை 500 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கிறார்கள் என்பதற்கு விடை கிடைத்தது போல உள்ளது. பனை சூழியல் துறவிகளுக்கு மிகப்பெரும் ஆன்மீக அமைதியினையும் ஆற்றலினையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது உண்மையிலேயே ஒரு ஆன்மீக மரம் தான். போர்த்துகீசிய துறவிகளுக்கு பனை இறையம்சம் நிரம்பிய ஒரு மரமாக காணப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

சயன் இரயில் நிலையம் பாறைகளைக் குடைந்து பாதாளத்தில் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு. அந்த பாறையின் உச்சியில் தான் இந்த பனை மரம் நிற்பதைப் பார்த்தேன். சமீபத்தில் எவரும் வந்து நட்டுபோட்டிருக்கும் ஒரு மரம் அல்ல இது. நூறாண்டுகள் கடந்த ஒரு மரம். எப்படி இது இங்கு வந்திருக்கும்? விடை எளிதானது தான். பல பனை மரங்கள் நின்ற பகுதியில் பள்ளம் ஏற்படுத்தியதில் எஞ்சிய பனை மரம் தான் இது. மற்ற பகுதிகள் அனைத்தும் கட்டிடங்களால் நிறைந்துவிட்டன. மே மாதம் நான் ஒரு திருமணத்திற்காக சயன் பகுதி சென்றபோது, அங்கே ஒரு தள்ளுவண்டியில் நுங்கினை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து நடந்தே சயன் கில்லா என்றழைக்கப்படும் கோட்டைக்குச் சென்றேன். செல்லும் வழியில் தான் நல்லாலோசனை மாதா ஆலயம். நடை பாதையில் நடந்து செல்லும்போது மிகப்பெரிய கோட்டை சுவர் இருப்பதால் என்னால் அந்த கோவிலைக் காண இயலவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி அதனைக் கடந்து சென்றேன். ஐந்தே நிமிடத்தில் கோட்டையினை அடைந்துவிட்டேன். ஆம் சில படிகள் ஏறினவுடனேயே பனை மரங்கள் என் கண்களுக்குத் தென்பட்டன. நல்ல வேளை பனை மரங்கள் ஒன்றும் வெட்டப்படவில்லை. அப்படியே நிற்கின்றன, ஆனால் இந்த முறை நான் பனை மரங்களை எண்ணத் துவங்கினேன். முதலில் நான்கைந்து மரங்கள் நிற்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. நாற்பதிற்கும் அதிகமான பனை மரங்கள் அங்கே நிற்பதை கண்டு பிரமித்துப்போனேன். அது உண்மையிலேயே ஒரு நல்ல எண்ணிக்கை தான். இரண்டு பனையேறிகள் தாராளமாக ஒரு பருவத்திற்கு இணைந்து வேலை பார்க்க இயலும். கோட்டையினை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் பதநீரை விற்பனை செய்ய இயலும். தொல்லியல் துறை இந்த முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

1669 முதல் 1677 முடிய கட்டப்பட்ட இந்த சிறிய கோட்டை இன்று சிதிலமடைந்தே இருக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தையும் இதன் உச்சியிலிருந்து பார்க்கலாம். ஆம் அதற்காகவே இந்த கோட்டைக் கட்டப்பட்டது. பிரிட்டிஷார் நிர்வாகித்த பரேல் பகுதிக்கும் போர்த்துக்கீசியர் நிர்வாகித்த சல்சட்டே பகுதிக்கும் உள்ள எல்லையில் இது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அப்போதைய பாம்பே கவர்னரான கீரார்ட் ஆங்கியர் (Gerard Aungier ) இதன் கட்டுமான பணிகளை முன்னெடுத்தார். இதன் உச்சியில் சென்று பார்க்கும்போது நான்குதிசையும் பரவி விரிந்து காட்சியளிப்பது இந்த பகுதியினை காவல் கோட்டையாக பிரிட்டிஷார் அமைத்திருப்பதன் பின்னணியத்தை தெரிவிக்கும்.

Sion Church

நல்லாலோசனை மாதா ஆலயம், சயன்

சயன் கோட்டைக் குறித்து பழைய புகைப்படங்கள் ஏதும் கிடைக்குமா என இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு மிகப்பழைய ஓவியம் கிடைத்தது.  சயன் கோட்டையிலிருந்து வரையப்பட்டது, தூரத்தில் தெரியும் தீவில் பனைமரங்கள் கூட்டமாக காணப்படும் ஒரு காட்சி பதிவாக்கப்பட்டிருந்தது. தொலை தூரத்தில் தெரியும் அந்த காட்சி ஏற்படுத்திய மனக்கிளர்ச்சி விவரிக்க முடியாதது, வரைந்த ஓவியரின் மனம் எத்துணை கூர் கொண்டிருந்தால் அந்த பனை மரங்களை ஓவியத்தில் மென்மையாக தீட்டி எடுத்திருக்கும். பனை மீதான ஈர்ப்பு என்பது மும்பை வந்த வெளிநாட்டவரையும் விட்டுவைக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சென்றிருந்த போது பெரும்பாலும் பனம்பழங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. என் கண்களுக்கு பனம்பழங்கள் தட்டுப்படவில்லை. பொதுவாக இப்பகுதிகளை சுத்தம் செய்கிறோம் என்று எண்ணி, விழுந்த பனம்பழங்களை குப்பைகளுடன் அள்ளி வீசியிருப்பார்கள். பனம் பழங்களை உண்ணும் அறிவு பெற்றோர் யாரும் இங்கு இன்று இருக்கப்போவதில்லை. அல்லது பொறுக்கியுண்ணும் காலம் கடந்துவிட்டதோ என்னவோ. ஒரு பழமாவது கிடைத்திருந்தால் எடுத்து வந்திருக்கலாமே என நினைத்தேன். பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள்.

மீண்டும் திரும்பி வருகையில் நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு செல்லலாம் என நினைத்தேன். அப்போது கதவு திறக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு பிறகு தான் திறக்கும் என்றார்கள். இன்னும் நேரம் இருந்தது, நான் உள்நுழையும் எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால் அங்கு ஒரு வான் நடை பாதை இருந்தது. அதுவழி சென்றால் ஆலயத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அங்கே பனை மரங்கள் ஏதும் இருக்கலாம் என எண்ணியபடி அந்த படிகளில் ஏறினேன். ஆம் நான் நினைத்தது போலவே இரண்டு பனை மரங்கள் அந்த வளாகத்தில் நின்றன.

பொதுவாக பனை மரம் கள் தயாரிக்கும் உள்ளூர் தொழிற்சாலை என்ற புரிதலே நமக்கு பரவலாக இருக்கிறது. அதாவது கள் என்பது ஏற்புடைய ஒரு உணவு பொருள் அல்ல என்ற நோக்கிலேயே அவ்வாறு இருக்கிறது. அப்படி இருந்தாலும், இஸ்லாமியர்களின் ஆட்சியிலும், கிறிஸ்தவர்களின் ஆட்சியிலும் இம்மரங்கள் எந்த சேதமும் அடையவில்லை. பனை சார்ந்து கள் இறக்கும் சமூகங்களும் தளத்து பெருகியபடியே இருந்தார்கள். சமயங்கள் இந்த மரத்தை தீங்கானது என்றோ தீண்டத்தகாதது என்றோ முன்வைக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. அவ்விதமான எண்ணங்கள், ஒருசிலரின் தனிப்பட்ட பார்வையாக வெளிப்பட்டிருக்கலாமே ஒழிய இம்மரங்களை தீயது என எண்ணி அப்புறப்படுத்தும் முயற்சிகளை எவருமே செய்ததில்லை என்பது தான் உண்மை.

நான் கீழிறங்கி மீண்டும் இரயில் நிலையத்திற்கு வந்தபோது மீண்டும் அந்த மரத்தைப் பார்த்தேன். நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு முன்பாக சிலுவை என எழுந்து நிற்பது தென்பட்டது. இரயிலுக்காக வெட்டிய பாறையின் விளிம்பில் அது தனது கடைசி நாட்களை எண்ணியபடி நின்றுகொண்டிருந்தது. சட்டென்று எனக்குத் தோன்றியது இதுதான். நவீன யுகமே பனைகளுக்கு எதிரி. இரயில் அந்த நவீன யுகத்தின் ஒரு அடையாளம். அந்த இரயில் பாதை வெட்டி வீசியெறிந்த பனைகாலங்களின் எச்சமாக இன்று இப்பனை நின்றுகொண்டிருக்கிறது. நவீன யுகத்தில் பனை தப்பிபிழைக்குமா என்பது ஆகப்பெரிய கேள்விதான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: