பனை சாட்சி
சமீபத்தில் என்னிடம் ஒருவர், சில புகைப்படங்களை அனுப்பி ஆரே பால் குடியிருப்பு 1949ஆம் ஆண்டிற்கு முன்னமே காடாக இருக்கவில்லை, இப்போது என்ன இது காடு என சொல்லப்படுகிறது என்ற வகையில் கேள்வி எழுப்பியிருந்தார். மும்பையில் இவ்வித கேள்விகள் ஆரே பகுதியில் உயர்ந்து நிற்கும் மரங்களை வெட்ட துணியும் மெட்ரோ திட்டத்திற்கு ஆதரவாக கூறப்படுகிறது என்பது எனது தெளிவு.
ஆரே பகுதியில் என்னை பணியமர்த்தியபோது, இங்கு வாழும் வார்லி பழங்குடியினர் குறித்து கூறப்பட்டது எவ்வளவோ அதை விட ஆரே பகுதியில் மெட்ரோ கார் ஷெட் அமைவது குறித்த செய்தி என்னை வந்து அடைந்த வண்ணம் இருந்தது. இந்த திட்டத்திற்காக ஆரே பகுதியில் காணப்படும் மரங்களை வெட்டுவதும், அதனை எதிர்த்து சூழியல் ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்துவதும் வாடிக்கையாக இருந்தது. நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டேன். அரசு தரப்பு ஆரே ஒரு வனப்பகுதியல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறதும், சூழியல் ஆர்வலர்கள், இது வனப்பகுதிதான் என வலியுறுத்துவதும் தொடர் நிகழ்ச்சிகளாக பரஸ்பரம் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இரு புறமும் கடுமையான எதிர்வினைகளை வைத்தபடியே இருப்பதைப் பார்க்கையில் சற்றே விலகி நின்று வேறு ஒரு கோணத்தில் இந்த பிரச்சனையை அணுகுவதே சரி என்று படுகிறது.

ஆரே சீரமைக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பனைமரங்கள், 1952
ஆரே பகுதியின் வரலாறு மிக தொன்மையாக இருந்தாலும், அவைகள் குறித்து நமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆரே நவீன வரலாற்றில் இடம்பெறுவது நமது சுதந்தரத்திற்குப் பின்புதான். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரே பால் குடியிருப்பு 1951 ஆம் ஆண்டு தான் முறைப்படி பண்டித ஜெவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மும்பைக்கு தேவையான பால் உற்பத்தி செய்யவும், தெருவோரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், நவீன ஆய்வுகளை முன்னெடுக்கவும் இந்த முன்னுதாரண முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இன்றும் இந்திய நகரங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையினை கூட்டி கழித்துப் பார்த்தால் மும்பை நகரத்தில் சுற்றியலையும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.அதற்குக் காரணம் மிக தெளிவான திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்ட ஆரே பால் குடியிருப்பு திட்டம் தான்.
ஆரே கோரேகாவுன் அருகில் அருகில் அமைந்திருக்கிறது. நான் மும்பை வந்த நாட்களில் கோரேகாவுன் பகுதியினை நெருங்கும்போதெல்லாம், இரயில்தண்டவாளங்கள் அருகில் காணப்படும் மாட்டு கொட்டகையை பார்த்தபடி செல்லுவேன். காவுன் என்ற சொல், கிராமத்தைக் குறிப்பது, சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நகரம் விரிவடையாதபோது இப்பகுதி கிராமமாக இருந்திருக்கும். ஓடு போட்ட பெரிய மாட்டு கொட்டகை. கரிய நிற எருமை மாடுகள் வரிசையாக மினுங்கியபடி நின்றுகொண்டிருக்கும். பரண் மீது வைக்கோல்கள் கட்டு கட்டாக அடுக்கியிருப்பார்கள். மும்பைக்குள் மாடு வளர்ப்பது எப்படி சாத்தியம் என்றே அப்போது நினைத்திருந்தேன். ஆரே பகுதியிலிருந்து பசுக்களுக்கு தேவையான அளவில் புற்களும் இங்கு கிடைப்பதால், இதனைத் தொடருவார்களாயிருக்கும்.

ஆரே சீரமைப்பு பணிகள் தொடருகையில் காணப்படும் பனைமரங்கள், 1952
எல்லா அரசு முன்னெடுப்புகள் போலவும், ஆரே பால் குடியிருப்பு திட்டம், தயவு தாட்சணியம் இல்லாமல் இந்த நிலப்பகுதியினை உழுது “சீராக்கி” கட்டமைத்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பே இராட்சத எந்திரங்களைக் கொண்டு நிலம் சீரமைக்க பட்ட படங்கள் காணக்கிடைக்கின்றன. ஆகவே, நிலம் இங்கு மாடு வளர்ப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
ஆரே பால் குடியிருப்பு அமைக்கப்பட்டது பெரும் கனவுகளுடனும், பெரும் பொருட்செலவுடனும் தான். அந்த நம்பிக்கையும் கனவுகளும் பெருமளவில் நிறைவேறின. மும்பை பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஆரே பால் மீது தீராத நம்பிக்கை உண்டு. ஆரே பால் தீர்ந்த பின்புதான் மற்ற பால் விற்பனை துவங்கும். ஆகவே தனியார் பால் நிறுவனங்கள் இணைந்து ஆரே பால் மேலெழாதவண்ணம், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் துவங்கினர். இவ்விதம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு தனியார் வசம் பால் சந்தை போய்ச் சேர்ந்து வெகு நாட்களாகிவிட்டது. இன்று ஆரே கையறு நிலையில் காணப்படுகிறது. இதனை மீட்டுருவாக்கும் எண்ணம் எவருக்கும் கிடையாது. அரசு இதனை கைவிடுந்தோறும், இப்பகுதி கட்டுமான நிறுவனங்களுக்கு வாசல்களைத் திறந்து வைத்திருக்கும்.
ஆரே பகுதியில் காணப்படும் பசுமை எவரையும், காடு என்றே எண்ண வைக்கும். பல்வேறு மும்பை பகுதிகளை நான் பார்த்திருப்பதால், இங்கு உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட காடுகள் இருந்திருக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால், மும்பை பகுதிகளில் காணப்படும் மலைகள் யாவும், பெருமளவில் புல் மற்றும் புதர் செறிவுள்ள பகுதிகளே. ஆரே பகுதியில் கூட, வெள்ளையர்கள் விளையாடும் கோல்ஃப் மைதானமே இருந்திருக்கிறது எனக் கூறுவார்கள். ஆகவே, மரங்கள் வெட்டப்பட்டனவா? அல்லது புதர்க்காடுகள் அப்புறப்படுத்தப்பட்டனவா என இப்போது உறுதியாக சொல்ல இயலாது. இது காடுதானா என்கிற கேள்வியினை சற்றே நாம் கண்டிப்பாக பேசிச்செல்லலாம்.

மெட்ரோ கார்ஷெட் அமைக்க வெட்டப்பட்ட மரங்கள் மத்தியில் பனை, 2019
ஆரே இன்று ஒரு தங்கப்புதையலாக கருதப்படுகிறது. மும்பைக்குள் காணப்படும் பசுமை, அமைதி, சுத்தமான காற்று, போன்ற அரியவைகளைக் கொண்டிருப்பதால் இவ்விடத்தினை வளைத்துப்போட இன்று பெருமுதலாளிகளும் அரசியல்வாதிகளும் காத்துக்கிடக்கிறார்கள். இன்று ஆரே பகுதிகளில் காணப்படும் மரங்களில் பெரும்பான்மையானனவைகள் நட்டு வளர்க்கப்பட்ட மரங்களே. அவைகள் எவ்வகையிலும் இப்பகுதியில் தன்னிச்சையாக வளரும் மரங்கள் அல்ல. ஆகவே இதனை காடு என ஒப்புக்கொள்ளாமல் வேறு வகையில் இதனை வகைப்படுத்த முயல்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
ஆரே பகுதியில் இன்று குறைந்தபட்சம் 6 சிறுத்தைகள் சுற்றித்திரிகின்றன என்றும், பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கின்றன என்றும் சூழியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். இவைகள் சார்ந்து பதிலளிக்கும் எதிர் தரப்பு, அருகிலுள்ள சஞ்சை காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவிலிலிருந்து சமீப காலங்களில் உயிரினங்களும் வனவிலங்குகளும் ஆரே பகுதிக்குள் நுழைகின்றன என்று வாதிடுகிறார்கள். அப்படி பார்க்கையில், ஆரே, காட்டிற்கான இலக்கணங்கள் உள்ள ஓரிடம் அல்ல, வெறும் பசுமை சூழல் கொண்ட ஒரு பகுதி என்கின்றனர். இவ்வகையில் இப்பகுதிகளின் முக்கியத்துவத்தை மாற்றி, இதனை திசை திருப்புவதாக நான் எண்ணுகிறேன்.
மும்பையின் மையத்தில் நுரையீரலாக காண்டப்புடும் இந்த பசுங்காடு, குறித்து மிகச்சரியான புரிதல் இன்றி வெளியிடப்பட்ட படங்கள் உண்மையிலேயே என்னை துணுக்குற வைத்தன. முதலில் 1952ஆம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 1949ஆம் ஆண்டு என முன்வைக்கும்போதே இதில் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என நாம் உணருகிறோம்.
ஆரே பகுதி வார்லி பழங்குடியினரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றும் இது வார்லி பழங்குடியினர் வாழும் இடம் தான். பழங்குடியினரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட இடமாகையால் இன்றும் மர்மங்கள் சூழ்ந்த இடமாக இவ்விடங்கள் காணப்படுகின்றன. நாங்கள் வசிக்கும் ராயல் பாம் எஸ்டேட் பகுதியில் கூட 18 மாடி கட்டிடங்கள் இருந்தும் சில கட்டிடங்கள் இன்றும் வெறிச்சோடி கிடப்பதைப் பார்க்கலாம். அதனை எவராலும் விளக்க இயலாது. பேய்களின் நடமாட்டம் இருக்கிறதாக சொல்லுவார்கள். இங்கே பல கொலைகள் நடந்தேறியிருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் ஆவியும் பழங்குடியினரின் ஆவியும் இங்கே வருபவர்களை சற்றேனும் சீண்டிப்பார்ப்பது உறுதி.
ஆரே பகுதியில் எல்லாம் சரியாக இருப்பது போல் தோன்றும் ஆனால் மழை என வந்தால் பேய் மழை தான். சாலைகளை பெயர்த்து எடுத்துச் சென்றுவிடும். நாங்கள் இங்கே வந்த பிற்பாடு 10 முறைக்கும் மேல் சாலையினை செப்பனிட்டிருப்பார்கள். மழை சாலையினை ஓடையென மாற்றி ஜல்லிகளை மணல் என குடியிருப்பின் வாசலில் குவித்துவைக்கும். தண்ணீர் செல்லும் ஓடைகள் சாலையின் மையத்தில் பாளம் பாளமாக வெடித்தபடி இருக்கும். வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்லும். துணிச்சலோடு வருபவர்கள் பள்ளங்களுக்குள் சிக்கிக்கொள்ளுவதும் உண்டு. மழை நேரத்தில் சுவர்கள் விழுவதும், வீடுகள் இடிவதும், மண் சரிவு ஏற்படுவதும் உயிர் பலிகளும் தவிர்க்க இயலாதவை. ஆகவேதான் இப்பகுதிகளில் பனை மரங்களை வார்லி பழங்குடியினர் நட்டு பேணியிருக்கிறார்கள். மழைக்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க ஏற்ற மரம் பனை தான் என்ற தெளிவான புரிதல் பழங்குடியினர் வாழ்வில் இருந்திருக்கிறது. சரிவுகளில் காணப்படும் இந்த மரங்களே இச்சுழியலின் மரம் என தெரிவு செய்யப்பட்டு புரிதலுடன் பேணி வளார்க்கப்பட்டிருக்கின்றன. இப்புரிதல் சற்றும் இல்லாத நவீன மனிதர்கள் ஆரே வந்தபோது பனை தனக்கான இடத்தை இழந்தது. அந்தனைத் தொடர்ந்து இந்த நிலப்பரப்பு பல மாறுதல்களுக்கு உள்ளாக கடந்து செல்லும் நிற்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டது.
குதிக்கும் சிலந்தி என காணப்படும் ஒரு வகை உயிரினம், பர்மாவிலும் காணப்படுகிறதாக சொல்லுகிறார்கள். பனை மரம் செறிந்த பகுதி தானே பர்மா? ஆரே பகுதிகளில், மரநாய் மற்றும் குள்ள நரி போன்றவை இருக்கின்றன. இவைகளும் பனை சார்ந்த விலங்கினங்கள் தாம். இன்று சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இவ்விடத்தில் சற்றே நமக்கு கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. சிறுக்ட்தைப் புலிகள் எப்படி பனங்காட்டிற்குள் வாழும்? எங்கள் திருச்சபையில் புல் வெட்டச் சென்ற பெண்மணிகள் கூறுவார்கள், துவக்கத்க்டில் நாங்கள் புல் வெட்டச் செல்லும்போது இந்த இடத்தில் சிறுத்தைகள் ஏதும் வருவதில்லை. இப்போதுதான் வரத்துவங்கியிருக்கிறது என. அது ஒரு வகையில் உண்மையும் கூட. சுற்றியிருக்கும் சிறுத்தைகளின் வாழ்விடங்கள் நகரமயமாக்கலில் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. அவைகள் வேறு வழியின்றி, தனது உணவு வேட்டையினை ஆரே பகுதியில் வந்து எடுக்கத் துவங்கி விட்டிருக்கின்றன. நான் பார்த்த படங்களின் தொகுப்பு அனைத்தும் ஆரே பகுதிகளில் எப்படி பனை மரம் இருந்திருக்கும் என்ற கேள்வியினை எனக்கு வைத்தபடி இருக்கின்றன.
ஆரே போராட்டத்தில் முக்கியமாக தவற விடப்பட்டவர்கள் வார்லி மக்கள் தான். இப்பகுதிகளில் மட்டும் 27 சிறு ஆதிவாசி குடியிருப்புகள் காணப்படுகின்றன. இங்கு மட்டும் 10000 க்கும் அதிகமான பழங்குடியினர் வாழ்கின்றார்கள். ஆரே, ஆதிவாசிகளின் வாழ்விடம் என்பது எந்த சந்தேகத்திற்கும் அப்பார்பட்டது. இங்கு வாழும் வார்லி பழங்குடியினரை ஒரு நகரம் எவ்வளவு தூரம் நெருக்க இயலுமோ அத்துணை தூரம் நெருக்கிவிட்டு, மீண்டும் மீண்டும் அவர்கள் நிலத்தில் மனசாட்சியின்றி கைவைப்பது சரியானதல்ல. 3162 ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள், நகரமயமாக்கலினாலும் நவீனமாக்கலினாலும் நெருக்கப்பட்டார்கள். 1970களில் மாநில காவல்துறை 100 ஏக்கருக்கு மேல் எடுத்துக்கொண்டது. மற்றொரு பகுதியினை மும்பை கால்நடை மருத்துவக்கல்லூரி எடுத்துக்கொண்டது. மும்பை திரைப்பட நகரம் 300 ஏக்கரை வளைத்துப்போட்டது, கொங்கன் விவசாய கல்லூரிக்காக 145 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு முதல் நிலை காவல் படைக்காக 100 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 40 ஹெக்டேர் நிலப்பகுதி சர்வதேச தரம் வாய்ந்த மிருக காட்சி சாலை அமைக்க பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 82 ஏக்கர் நிலம் இந்த வரிசையில் தான் வந்தமைகின்றது. இந்த வரிசை நீளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் இந்த வரிசையில் பலர் உள்நுழைய காத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
நண்பர் அனுப்பிய பழம் படங்கள் அனைத்தும் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவைகள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அவைகள் 1949ற்கு முந்தையவை அல்ல. மேலும் இப்படங்களைப் பார்த்தால், இந்த படங்கள் கோடை காலத்தில் எடுக்கப்பட்டவைகள் என்பது தெளிவாக புரியும். பசுமை இன்றி பூமி வறண்டிருக்கிறது. பனை மரங்கள் மட்டுமே விண்ணைத்தொட்டபடி உயர்ந்து நிற்கின்றன. எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் நிற்கும் ஒரு நிலப்பரப்பாக இது இருந்திருக்கிறது. ஒருவேளை இங்குள்ள காட்டுமானங்களுக்காக மற்ற மரங்களை இங்கே வெட்டி சாய்த்திருக்க வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறது. அவைகள் ஏன் பேசப்படவில்லை?. பனை மரங்கள் எப்படி தப்பித்து இந்த புகைப்படத்தில் இடம்பெற்றன? அதற்கு காரணம், ஆதிவாசிகள் இந்த மரங்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததால் மட்டும் தான்.
குறிப்பாக கள் ஒரு முக்கிய பானமாக பழங்குடியினர் வாழ்வில் இருந்திருக்கிறது, பனம்கிழங்கு மற்றும் பனம்பழங்களை உண்டு வாழ்ந்திருக்கிறார்கள், பனை ஓலையில் இவர்களின் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதமாகவே இவர்களின் இசைக்கருவியான தார்பா பனையோலையால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர்புகள் மிக உறுதியாக இருந்ததால் ஆதிவாசி மரங்களான பனைமரங்கள் தப்பித்துக்கொண்டன. அவைகள் இன்று நமக்கு சாட்சியம் கூறும்படி புகைப்படத்திலிருந்து எழுந்து வருகின்றன.

வெட்டி வீழ்த்தப்பட்டு கிடக்கும் மரங்களை கண்ணீரோடு அணைக்கும் சூழியல் ஆர்வலர்கள், 2019
ஆரே காடு இல்லை என்று சொல்லுபவர்கள், தமிழகத்தில் பனை மரங்கள் ஒரு சேர நின்றால் அதனை பனந்தோப்பு என சொல்லுவதில்லை பனங்காடு என்றே சொல்லுவார்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுவது நன்று. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்ற பழமொழி, பனை சார்ந்து வாழும் வேட்டையாடும் விலங்காக நரி இங்கு வார்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும். பனை செறிந்திருக்கும் இந்த பகுதியில் வேறு மரங்கள் நின்றிருக்குமா என்றால் கண்டிப்பாக நின்றிருக்கும். ஆரே திருச்சபையினை ஒட்டி நிற்கும் பிற மரங்களில் பூவரசும் ஒன்று. பூவரசு இங்கே நிற்பதற்கான காரணம் அவை கடும் கோடையை எதிர்கொள்ள வல்லவை என்பதோடு, அது இயல்பாகவே கடற்கரையின் மரமும் கூட. நான் மாலத்தீவு சென்றிருந்தபோது பெருமளாவில் பார்த்த மரங்களில் ஒன்று பூவரசு மரம் தான். அங்கே அதிக அளவில் வேறு மரங்கள் வளர்வதில்லை. அது போலவே ஆல மரம் மற்றும் அரச மரங்கள் பனை மரத்தில் தொற்றி வளர்பவை. ஆரே காலனியைப் பொருத்த அளவில் பனை மரங்கள் தான் இங்கே பெருமளவில் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. இன்று அவைகள் இல்லை. பல்வேறு சூழல்களில் அவைகள் அழிந்துபோய்விட்டன. அவைகள் அழிவதற்குண்டான காரணங்களைப் போலவே, அவைகள் மறக்கடிக்கப்பட்ட காரணங்களிலும் நவீன வாழ்விற்கு பெருமளவு பங்கு உண்டு.

மரங்கள் வெட்டியதைத் தொடர்ந்து வெடித்த போராட்டம், அக்டோபர் 2, 2019.
ஆரே ஒரு காடு தான் என்பதற்கு பனை மரமே சாட்சி. இங்கு வாழ்ந்த மக்கள் பழங்குடியினர் என்றால், அவர்களுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பு சரிவர புரிந்துகொள்ளப்பட்டால், பழங்குடியினர் வாழும் பகுதிகள் அனைத்துமே காடுகள் தான் என்பதை நாம் அறியலாம். ஆரேயில் மரங்கள் விழும் சத்தத்தில் இந்த ஆதி வாசிகளின் குரல் ஒடுங்கிப்போய்க் கிடப்பது தான் குலை நடுங்கச் செய்கிறது. எப்படி அமெரிக்காவில் பூர்வகுடியினர் அழித்தொழிக்கப்பட்டார்களோ அதற்கு சற்றும் குறையாத ஒரு நவீன அழித்தொழிப்பு இன்று நமது கண்கள் முன்பாக அரங்கேரிக்கொண்டிருக்கிறது. பனை சார்ந்த முன்னெடுப்புகள் என்பவை நமது வரலாற்றில் எஞ்சியவற்றை நாம் மீட்டெடுக்க நமக்கு உதவியாக இருக்கின்றன என்பது ஆரே சூழலை உற்றுநோக்கும்போது தெரியவருகிறது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஆரே பகுதியில் அரசு தரப்பில் பல மரங்களை வெட்டி வீழ்த்தினர். ஒரு நிமிடத்திற்கு ஒரு மரம் என்ற கணக்கில் அவசரமாக இரவோடிரவாக வெட்டி வேகம், அனைத்து சந்தேகங்களையும் சூழியல் ஆர்வலர்களுக்கு அதிகப்படுத்தியது. இரவோடிரவாக 400 மரங்கள் வெட்டப்படும் இடத்தில் கண்ணீர் உகுத்தபடி கூடி ஒரு உக்கிரமான போராட்டம் நிகழ்ந்தது. 29 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆரே காடழிப்பு குறித்த செய்தி சர்வதேச அளவில் இதன் மூலமாக சென்றடைந்தது. அந்த நேரத்தில் வெளியான ஒரு படத்தில் கூட முறிந்து போன மரங்களுக்கு அப்பால், பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. பனை மரங்களுக்கான குரல் தான் எழவேயில்லை.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
மலர்கொட்சொன்@க்மைல்.cஒம்
9080250653
You must be logged in to post a comment.