Archive for நவம்பர், 2019

பனை நகரம் 15

நவம்பர் 21, 2019

 

குன்றின்மீது நிற்கும் பனை

 

மும்பை குறித்து நாம் அறியும் ஒவ்வொரு தகவல்களும் பெருமளவில் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பவைகளாகவே உள்ளன. குறிப்பாக பனை சார்ந்த தகவல்கள் மும்பையில் மிக சரியான அளவில் நவீன சமூகத்தை எட்டவில்லை என்பதும் மும்பையின் தற்போதைய சூழியலாளர்கள் பனை மரம் குறித்து வாய் திறக்காததும் பனை மரங்களுக்கும் மும்பைக்கும் உள்ள தொலைவை எடுத்துக்காட்டுபவை. இவைகள் தற்காலிகமான தொலைவு தான். பனைக்கும் மும்பைக்கும் இடையே உள்ள பிணைப்பு காலங்களைக் கடந்தது. இவை எதையும் அறியாத ஒரு சமூகத்திடம் ஒரு முக்கிய மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு தளத்திலும் நாம் பனை சார்ந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு சூழியல் மையத்திலும் அவைகளை நாம் பார்வைக்குட்படுத்தும்போது பனை சார்ந்த ஒரு முக்கிய திறப்பாக அவை அமையும்.

GH

கில்பர்ட் குன்று – இன்றய நிலை

நான் தற்பொழுது தங்கி இருக்கும் ஆரே பகுதியானது மும்பை மேற்கு இரயில் தடத்திலுள்ள கோராகாவுன் பகுதியில் இருக்கிறது. இங்கிருந்து மூன்றாவது இரயில் நிலையம் தான் அந்தேரி. மும்பையிலுள்ள ஒரு  முக்கியமான இரயில் நிலையங்களில் ஒன்று இது. கோரேகாவுன் முதல் அந்தேரி வரைச் செல்லும் இரயில் வழித்தடம் எங்கும்  பனை மரங்கள் நமது கண்ணிற்கு பட்டபடியே இருக்கும். நான் ஏற்கனவே கூறியது போல அந்தேரிதான், எனது மும்பை பனை வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அந்தேரி பகுதியில் நரி வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர்களின் படங்களே 2016 ஆம் ஆண்டு என்னை பனை சார்ந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள வைத்தது மாத்திரம் அல்ல பனைக்கும் உயிரினங்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆராய பேருதவியாக இருந்தது.

பனங்காட்டிற்கும் நரிக்கும் உள்ள தொடர்பினை நான் தனியாக விரிவாக  எழுதியிருக்கிறேன். பனங்காட்டு நரி சல்லசலப்பிற்கு அஞ்சாது என்கிற பழமொழியே பனையோடு நரிக்குள்ள தொடர்பினை அறிவுறுத்தும். ஆரே பகுதிகளில் நரி இருக்கிறது எனக் கூறுவார்கள். குறைந்த எண்ணிக்கையிலேயே அவைகள் இருக்க வாய்ப்புள்ளது. தேடினால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் சமீபத்தில் நவி மும்பை பகுதிகளில் நாய் எனக் கருதி ஒரு குள்ளநரியினை மீட்டெடுத்தார்கள். இவ்வித உதிரி தகவல்களே பனை இம்மண்ணின் மிக முக்கிய தாவரமாக இருந்ததை வெளிக்காட்டுகிறது. ஆரே பகுதிகளில் காணப்படும் சிறுத்தைப் புலியால், நரிகளின் எண்ணிக்கை கட்டிற்குள்ளேயே இருக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

ஆகவே அந்தேரி பகுதி குறித்து எனது தேடுதலை பல வகைகளில் முன்னெடுத்தேன். அந்தேரி இரயில் நிலையம் முன்புதானே நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் ஒரு பனை மரம் உயர்ந்தெழுந்து நிற்கிறது. இரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பொழுது மேற்கு பகுதியில் சாலையினைத் தாண்டி மற்றொரு பனை மரம் நிற்பதைக் காணலாம். அந்தேரி பகுதிகளில் இன்னும் அனேக இடங்களில் பனை மரங்கள் ஆங்காங்கே எஞ்சி இருப்பதைக் காண இயலும். அவைகள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்ட குழந்தைகள் போல் மும்பையின் தெருவோரங்களில் நிற்கும் அனாதைக் குழந்தைகள் போல் எவராலும் பொருட்படுத்தப்படாதபடி நிற்பதைக் காணலாம்.

Fox Hounds

அந்தேரி இரயில் நிலயம் அருகில் நரி வேட்டையாடும் ஆங்கிலேயர்கள்

ஒரு கால கட்டத்தில் எங்கேனும் 10 பனை மரங்கள் இருக்குமென்றால் அங்கே பனை சார்ந்த ஒரு தொழிலாளி இருந்திருப்பார் என்கிற உண்மையினை நான் உணர்ந்திருந்தேன். இப்போது மும்பையில் அப்படி பனை மரங்களின் தொகைகளை நாம் எளிதில் கண்டுகொள்ள இயலாது. மும்பை ஒரு விரிவடைந்த நகரம். ஒரு சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்தும் பனை சார்ந்த நிலவியல் ஆக்கிரமிப்புள்ளானவைகள். அப்படியிருக்கையில் பனை மரங்கள் இப்பகுதிகளில் கூட்டமாக இருப்பது அபூர்வமானது. ஆகவே ஒற்றையாக காணப்படும் மரங்களே இங்கு நமக்கு ஆதாரமாக இருப்பவை. இவைகளே பனை சார்ந்து பல்வேறு உண்மைகளை எடுத்துச் சொல்ல வல்லவை.

பொதுவாக ஒற்றை பனை மரங்கள் ஆகாது எனக் கூறுவார்கள். அது மகரந்த சேர்க்கை சார்ந்த உண்மையாக இருக்கலாம். இந்த நம்பிக்கையினை பல்வேறு விதங்களில் தமிழக மக்கள் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டார்கள். பேய்களோடு, மூட நம்பிக்கைளோடு, இயற்கை சார்ந்த பிரச்சனைகளோடு, அன்றாட வாழ்வின் சிக்கல்களோடு இணைத்துப் பார்த்ததினாலேயே தனி மரங்களை பெரும்பாலும் மக்கள் ஏற்கவில்லை. இச்சூழலில் மும்பையில் காணப்படும் தனி மரங்கள், இங்கு நடைபெற்ற நகர்மயமாக்கலில் தப்பிப்பிழைத்தவைகள் தான் என்பதற்கான ஆதாரமாக நிற்கின்றன. அதாவது, பனை திரட்சியாக நின்ற இடங்களில், கட்டுமானங்கள் ஏற்பட, எஞ்சியிருந்த பகுதிகளில் தப்பிபிழைத்து நிற்கின்ற மரங்களே இன்று நாம் காணும் ஒற்றை பனை மரங்கள். அப்படியானால், ஒவ்வொரு ஒற்றைபனை மரமும், ஒரு பனங்கூடலின் எஞ்சிய பகுதி என்றே நாம் கொள்ள வேண்டும். கொலைக்களத்தில் எஞ்சிய ஒற்றை வீரன். அல்லது போர்களத்தில் கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் கைதி. எப்போது வேண்டுமானாலும் இந்த நகர், எஞ்சியிருக்கும் ஒற்றை பனை மரங்களையும் வெட்டிவிடலாம் எனும் தருணத்தில் வாழ்பவை.

ஆகவே ஒவ்வொரு ஒற்றை பனை மரமும் என்னுள் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஒற்றை பனை மரத்தினைப் பார்க்கையிலும், அதனுடன் திரட்சியாக நின்ற பனங்காடுகள் என் கண்களுக்குள் வந்து செல்லுவதை தவிர்க்க இயலவில்லை. ஒற்றைப் பனை தன்னுள் தனது கூட்டத்தின் சாயலை உள்வாங்கி வைத்திருக்கிறது. இந்த மண் எங்களுக்கானது என அது தலை உயர்த்தி சொல்லியபடி இருக்கிறது. நவீன வாழ்வில், நான் வந்து சேர்ந்திருக்கிறேன் என தனது ஓலைகளை விசிறியபடி ஹீனமான குரலில் அது நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறது. மும்பையில் காணப்படும் ஒவ்வொரு ஒற்றை பனை மரமும் ஒரு பனங்காட்டிற்கு நிகர் தான். ஒற்றை பனை மரமே அங்கிருந்த பனை வாழ்வியலின் தடயம்.

தற்பொழுது காணப்படும் பெரும்பாலான மும்பையின் பனை மரங்கள் யாவும், 70 ஆண்டுகளுக்கு முந்தையவைகளே. முதுமையினால் பல இறந்திருக்கலாம். நகர் விரிவாக்கத்திலும் சில அடிபட்டிருக்கலாம். எஞ்சி நிற்பவைகளில் பனை ஏறிகள் ஏறி சென்ற தடங்கள் வெட்டு படிகளாக இருப்பதை பல இடங்களில் காணலாம். இவ்வித வெட்டு காயங்களினை மும்பை பகுதிகளில் தான் பார்த்திருக்கிறேன். படி போல ஏறுவதற்கு வசதியாக வெட்டபட்டிருப்பது மும்பைக்கே உரிய ஒரு தனித்தன்மை. மரங்களில் கள் இறக்கவும் நுங்கு எடுக்கவும் கருதி செய்யப்பட்ட ஒரு வசதி. என்றாலும் பனை மரங்களைக் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் ஒரு மரபு நின்று போனதையே இவைகள் நமக்கு தெரிவிக்கின்றன. பல்வேறு கட்டுமான பொருட்கள் கிடைக்கும் இடமாகையால், பனை சார்ந்த பயன்பாடுகள் குறைந்திருக்கும். ஆகவே மரத்திற்கு ஏற்படும் காயங்களை பனையேறிகள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். மாத்திரம் அல்ல, நெஞ்சு அணைத்து  ஏறுவதை விட பற்றிப்பிடித்து கால்களை ஊன்றி ஏறுவது நவீன வாழ்கையில் வசதியாக இருந்திருக்கலாம்.

அந்தேரிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள தொடர்பு, அந்தேரிக்கும் போர்துக்கீசியர்களுக்கும் உள்ள தொடர்பு, என விரிவடைந்துகொண்டிருந்த எனது தேடுதல் ஒரு கட்டத்தில் அந்தேரி பகுதியிலிருக்கும் கில்பர்ட் மலை அடிவாரம் அருகில் வந்து நிற்கும் என்பது நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராதது. கில்பர்ட் குன்று என ஒன்று நகரின் மத்தியில் இருப்பதைக் குறித்து அறிந்ததும் அதனிப் பார்க்க நான் விரைந்தேன். கில்பர்ட் குன்று அந்தேரி இரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும் ஆனால் சாலை வழியாக  சுற்றி செல்லும்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் சுற்றி செல்ல வேண்டியிருக்கும். கில்பர்ட் மலை என்பது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிலவியல் அமைப்பு. உலகிலேயே இது போன்ற ஒரு அமைப்பு இன்னும் இரண்டு இடங்களில் மாத்திரமே காணப்படுகின்றது. இரண்டுமே அமரிக்காவில் மட்டும் காணப்படுகின்றன.

800px-Gilbert_Hill,_Andheri

கில்பர்ட் குன்று – சற்றே தெளிவான கோணம்

கில்பர்ட் குன்று இடையூழிக் ( Mesozoic Era ) காலாத்தில் உருவான ஒரு குன்று என கருதப்படுகிறது. இடையூழிக் காலம் என்பது 230 – 63 மில்லியன் ஆண்டுகளுக்கு idaippatta காலம். இக்கால கட்டம் டிரையாசிக்   (Triassic,) ஜுராசிக்  (  Jurassic, ) மற்றும் கிரிடேஷியஸ் (Cretaceous) என்ற மூன்று முக்கிய காலகட்டங்களை உள்ளடக்கியது.  பறவைகள் மற்றும் பூக்கும் தாவரங்கள் கூட இக்காலகட்டத்தில் உருவாகி பெருமளவில் அழிந்தன.  இக்காலகட்டட்தில் தான், ஒரு மிகப்பெரும் எரிமலைக் குழம்பு இப்பகுதியில் வழிந்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட எரிமலைக் குழம்பு மகராஷ்டிரா மாத்திரம் அல்ல குஜராத் மற்றும் மத்திய பிரதேசங்களில் சுமார் 50,000 கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இதன் எஞ்சிய பகுதியே இன்று அந்தேரி பகுதியில் காணப்படுகின்றது. பெரும்பான்மையான பகுதிகளை வெட்டி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறுவார்கள்.

கில்பர்ட் குன்றினைக்  காண செல்லும் வழி எளிமையானது. அந்தேரி இரயில் நிலயத்திலிருந்து மேற்குபுறமாக வெளியே வந்து சாலையைக் கடந்தவுடன் ரிக்ஷா கிடைக்கும். 10 ரூபாய் கொடுத்தால் போதும் கில்பர்ட் குன்றின் அடிவாரத்தில் இறக்கிவிடுவார்கள். நான் செல்லும் வழியில் இரண்டே நிமிடத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்த்தேன். என்னோடு பயணித்த இரண்டு பயணிகள் இறங்கிய கட்டிடத்தின் பின்புறம் கில்பர்ட் குன்றின் ஒரு பகுதி தெரிந்தது.

கில்பர்ட் குன்று 1952 ஆம் வருடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது, என்றாலும், சரியான பாதுகாப்பு இதற்கு அளிக்கப்படவில்லை. வெகு சமீபத்தில் தான் இந்த குன்றின் மேல் ஒரு ஆலயம் எழும்பியிருக்கிறது. ஆனாலும் அந்த ஆலய பொறுப்பாளர்களே இந்த மலையினைக் காப்பதாக இன்று கூறப்படுகிறது. குன்றின் உச்சியில் தற்போது இருக்கும் ஆலயம் இல்லாது போயிருந்தால் இன்று பல்வேறு கட்டிட நிறுவனங்கள் இதனை கபளீகரம் செய்திருக்கும். நானே சுற்றிப்போய்தான் பார்த்துவிட்டு வந்தேன். கட்டிடங்களின் உள்ளே கில்பர்ட் குன்று புதைந்துபோய் கிடக்கின்றது இன்று.

குன்றின் முன்னால் ஒரு மிகப்பெரிய விளையாட்டுதிடல் அமைத்திருக்கிறார்கள். அதுவே இந்த குன்றினைப் பார்க்க சிறந்த வழி. வேறு பகுதிகள் எல்லாம் கட்டிடங்களாலும் சேரிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. நான் சென்றபொழுது, வேலை நடப்பதால் ஆலயத்திற்குச் செல்ல இயலவில்லை. குன்றின்மீது ஏறியிருந்தால், ஒருவேளை சுற்றி இருக்கும் பகுதிகளில் காணப்படும் பனை மரங்களை பார்த்திருக்க இயல்வதாயிருக்கும்.

திரும்பி வரும் வழியில் மீண்டும் ஒரு மொட்டை பனை மரத்தைப் பார்த்தேன். ஒரு சால் பகுதியில் இருந்தது. உள்நுழைந்தபோது அதை உள்ளடக்கி எவரோ குடிசை அமைத்து தங்கியிருந்தார். கீழே ஆண் பாளைகள் கிடந்தன. சமீபத்தில் தான் இறந்திருக்கும்போல.

இவைகள் யாவும் ஒற்றையாக நிற்கும் பனை மரங்கள் கூட உள்ளுறைந்திருக்கும் பல்வேறு உண்மைகளை நமக்கு எடுத்துக்கூற வல்லவை என எனக்கு உணர்த்தியது. நான் வீடு வந்து சேர்ந்த பின்பு, கில்பர்ட் குன்று குறித்து இணையதளத்தில் தேடினேன். பனை சார்ந்து ஏதும் கிடைத்துவிடாதா என்கிற ஒரு எண்ணத்துடன் தான் நான்  தேடினேன். எனது விருபத்தினை கடவுள் அறிவாரோ என்னவோ, நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு அழகிய கருப்பு வெள்ளைப் புகைப்படம் எனக்கு கிடைத்தது. கில்பர்ட் குன்றின் அடிவாரத்தில் பனை மரங்கள் நிற்கும் அந்த புகைப்படம் காலத்தால் அழியா ஒரு ஆவணம்.

Gilbert Hill

கில்பர்ட் குன்று – பனைமரங்கள் வளர்ந்திருக்கும் பழைய படம்

பனை மரங்கள் ஏனோ பெருமளவில் எவராலும் இன்றுவரை முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. இதன் விரிவு என்பது கடற்கரை மணல் மீது மட்டுமல்ல, எரிமலை குழம்பின் மீதும் ஊன்றும் திறன் வாய்ந்தது எனபதை பதிவு செய்வது அவசியமாகின்றது. எவருக்கு தெரியும் நரி வேட்டையாடிய ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பி வந்த நரிகள் இங்கு வாழ்ந்த பனங்காட்டில் தஞ்சமடைந்திருக்க வாய்ப்புகள் தாராளமாக இருந்திருக்கின்றன.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653


%d bloggers like this: