பனை நகரம் 16


 

மாகாளி பனைகள் 

போர்த்துக்கீசியர்கள் மும்பை வந்த போது தங்கள் மத நம்பிக்கைகள் பரவுவதை தடுக்கவில்லை. இங்கே பல்வேறு ஆலயங்களை கட்டி எழுப்பினர். அவைகளில் ஒன்று தூய யோவான் ஆலயம், அந்தேரி. பல நாட்களாக இதனை பார்க்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது.

சமீபத்தில் செம்பூர் மார்த்தோமா சபை போதகர் அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்கள் என்னை ஒரு கண்காட்சி அமைக்க அழைத்தார்கள். அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்களை நான் 20 வருடங்களாக அறிவேன். ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற பகுதியில் எனது மூத்த சகோதரர் செல்சன் சாமுவேல் அவர்கள்  பணியாற்றியபோது, நான் அங்கே சென்றிருந்தேன். வேறு சீர்த்திருத்த திருச்சபைகளே இல்லாத இவ்விடத்தில், அண்ணன் பாரம்பரிய மார்த்தோமா திருச்சபைக்கு செல்ல ஆரம்பித்தார். அதற்கு காரணம், ஒன்று திருச்சபை செல்லாமல் இருப்பது எங்களுக்கு இயல்வதல்ல, இரண்டாவதாக போதகர் ஜாண் ஜார்ஜ் அவர்களின் அன்பு தான். அண்ணன் மீது மீகுந்த அன்பும் பிரியமும் கொண்ட போதகர் அவர்களுக்கு என்னையும் பிடித்துப்போனது. நான் அகமதாபாத்தில் பணியாற்றியபோது அவரும் அங்கே பணியாற்றினார். அங்கே ஒரு பனை சார்ந்த ஒரு கண்காட்சியினை நடத்த எனக்கு ஒரு வாய்ப்பளித்தார். அந்த வேளையில் தான் நான் முதன் முறையாக மனித முகங்களை பனை ஓலைகளில் வரைந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். அவரது படத்தினை நான் பனை ஓலையில் செய்தேன், மிகவும் மகிழ்ந்து போனார்.

10929190_868772706515106_3659866482275997553_n

போதகர் ஜாண் ஜார்ஜ் – பனை ஓலையில்

மீண்டும் அவர் மும்பை வந்தபோது என்னை அழைத்தார், அப்போது நான் குமரி மாவட்டத்தில் இருந்ததால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த வருடம் என்னிடம் அவர் அழைத்துக் கேட்டபொழுது, என்னால் மறுக்க இயலவில்லை. ஆனால் ஓலையில் படம் செய்ய என்னிடம் போதுமான நேரம் இல்லை. ஆகவே, நான் அவரிடம் 20 படங்களை மட்டும் கொண்டு வருவதாக கூறினேன். நாட்கள் நெருங்க நெருங்க, என்னால் அத்தனை படங்ளையும் செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. ஆகவே எனது கர்த்தில் இருந்த பழைய படங்களை தேடியெடுத்தேன். 4 படங்கள் கிடைத்தன. போதகரிடம் இரண்டு படங்கள் இருப்பது எனக்குத் தெரியும், நான் 10 படங்களைச் செய்தேன். மொட்தம் 16 படங்கள் வந்தன. எனது சகோதரியிடம் எனது படங்கள் எப்போதும் இருக்கும் ஆனபடியால், அவர்களைத் தேடிச்சென்றேன். அவர்களிடம் 2 படங்கள் இருந்தன. படங்களை வாங்கச் சென்றபோது, அவர்களிடம் தூயா யோவான் ஆலயம் குறித்து கேட்டேன், அதற்கு அவர்கள், அந்த இடம் அந்தேரி கிழக்குப் பகுதியில் இருப்பதாக கூறீனார்கள். அந்தேரி கிழக்குப் பகுதியானது எனது வீட்டிலிருந்து செல்வது தான் எளிது. ஆகவே உடனே அங்கிருந்து புறப்பட்டேன்.

தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், ஏசு சபையினரால் 1579ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆலயத்தை ஒட்டியே ஒரு கல்லறைத்தோட்டமும் அமைக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டு இப்பகுதிகளில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் இங்கிருந்த மக்கள் புகலிடம் நோக்கி தப்பியோடினர். அன்று அருட்தந்தை. ஜோஸ் லோரன்கோ பயஸ் (Fr. José Lourenço Pais) அருகிலிருந்த மரோல் என்ற பகுதிக்கு திருச்சபையை இடம் மாற்றினார். திருச்சபையின் தூண்கள் மற்றும் திருமுழுக்கு தொட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த ஆலயம் அதன் பிற்பாடு கைவிடப்பட்டது. தாவரங்கள் இதன் மீது பற்றிப்பிடித்து ஏறின. ஒரு பேய்தொற்றம் இவ்வாலயத்திற்கு உருவானது. அனேக பேய்க்கதைகள் இதனுடன் இணைத்து கூறப்பட்டன. 2003 ஆம் ஆண்டு இவ்வாலயத்தினை அன்றைய மஹாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் அருட்தந்தை. ரோட்னேய் அவர்களிடம் கையளித்தார். வருடம் தோறும் இவ்விடத்தில் உள்ளூர் பொதுமக்கள் வழிபடும் சடங்கு மட்டும் இன்றுவரை தொடர்கிறது.

SEEPZ_church_4

சிதிலமடைந்த தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், அந்தேரி

வீடு வந்து சேர்ந்தவுடன் எனது திருச்சபை வாலிபர்கள் குழு தலைவர் தம்பி தாமஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அந்தேரி கிழக்கு பகுதியில் ஒரு பழைமையான ஆலயம் இருக்கிறது பார்க்கச் செல்லுவோமா எனக் கேட்டேன். வருகிறேன் என்றார். அவர்களை எனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றியபடி அந்த இடத்திற்குச் சென்றோம். சீப்ஸ் என்ற அந்த இடத்திற்குள் நாங்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த காவலர்கள், வெளியே நின்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றனர். 15 – 20 அடி உயர கோட்டை சுவற்றுக்குள் என்ன இருக்கிறது என எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு வாசலில் 440 வருடங்களுக்கு முந்தய ஆலயம் என்கிற ஒரு அறிவிப்பு தொங்கிக்கொண்டிருந்தது. கதவின் இடுக்கில் சென்று பார்த்தபோது அவ்வாலயம் இடுபாடுகளாக கைவிடப்பட்டு நிற்பதையும் அதன் மேல் மேல் பசுங் கொடிகள் பின்னி செல்லும் காட்சி தெரிந்தது. சூற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றனவா எனப் பார்த்தேன். ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் நான் வானத்தைப் பார்த்தபோது ஒருசில வவ்வால்கள் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன. வவ்வால்கள் பனை மரத்துடன் நெருங்கிய தொடர்புடையவைகள் என்பதால் நான் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வவ்வால்கள் பதனீர் மற்றும் கள் இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுபவை. ஆகவே பனையேறிகளுக்கு வவ்வால் மிகப்பெரிய அளவில் தொந்தரவு கொடுப்பவை தான். எனக்குத் தெரிந்து வவ்வால் பதனீரைக் குடித்து விடாமல் இருப்பதற்கு பனையேறிகள் பல்வேறு வழிகளைக் கையாள்வார்கள். குறிப்பாக ஓலைகளை மடித்து ஒரு புத்தகம் போக மாற்றி அதனை பானையின் வாயில் அழுத்தி வைத்துவிடுவார்கள். அல்லது வலைகளை இட்டு பானையினை மூடி பாதுகாப்பார்கள். வவ்வால் பதனீரை மாத்திரம் அல்ல பனம் பழங்களையும் சாப்பிடும். வவ்வால்கள் குறித்து எவ்வளவு எதிர்மறை கூறுகள் இருந்தாலும், பனையேறிகள் அவைகளை கொல்வது அபூர்வம் தான். அதுவும் ஒரு உயிர்தானே என்கிற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கியிருக்கும்.  ஒரு முறை வவ்வால் ஒன்று கலய கண்ணியில் மாட்டிக்கொண்டபோது அதனைக் காப்பாற்றியதாக கூறிய பனையேரியின் விவரிப்பு நெகிழ்ச்சியானது. மகரந்த சேர்க்கைக்கு வவ்வால்கள் மிக முக்கிய காரணிகள் தாம். இவைகளை நம் பெரிதாக கவனிப்பது இல்லை.

சீப்ஸ் என்ற இந்த இடம் இன்று மக்கள் செறிவுமிக்க ஒரு நகர்பகுதி. ஆனால் ஆரே பால் குடியிருப்பு இதன் பின்னால் தான் இருக்கிறது. இங்கே இத்தனை அவசரமாக ஏன் வந்தேன்? பனை மரங்களைக் காணாதபோது இத்துணை மனசோர்வுக்கு நான் ஏன்  உள்ளாகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. நாங்கள் நிற்கும் பகுதியினை நான் வேறு ஒரு தருணத்தில் கடந்து சென்றிருக்கிறேன். மாகாளி குகை சாலை செல்லும் வழி தான் இது. அப்படியானால் காளி குகை இங்கே இருக்கிறதா? அதை பார்க்கவேண்டுமே என்ற எண்ணம் நிலைபெற்றது.

பனை மரமே காளி தான் என தென் தமிழகத்தில் சொல்லப்படுவதுண்டு. பனையேறுகிறவர்கள் காளியின் பிள்ளைகள். காளி வழிபாடு கிபி 600 ஆம் ஆண்டுகளில் தலை தூக்குகின்றது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படியானால் காளி வழிபாடு அதற்கு முன்பே இருந்து வந்த ஒரு வழிபாட்டு முறைமையாக இருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். பவுத்தம் விரிந்து பரவியபோது காளி வழிபாடுகள் சற்றே பின்னகர்ந்து மீண்டும் மழைக்குப் பின் முளைக்கும் புல் என எங்கும் வியாபித்திருக்கலாம் என கருதுகிறேன்.

மும்பைக்கும் காளிக்கும் உள்ள தொடர்பை எப்படி இணைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே பனை மரங்கள் இருக்கின்றன. எனது தேடுகையில் இன்னும் ஒரு சில இடங்களில் காளி தொடர்பான வேறு தடயங்கள் ஏதும் கிடைக்கலாம். ஆகவே அருகிலிருந்தே தொடங்க இவ்விடம் ஏற்றது என எண்ணி அங்கிருந்து எனது வாகனத்தை திருப்பினேன். நாங்கள் மாகாளி குகை செல்லும் வழியில் ஆங்காங்கே பனை மரங்கள் கண்ணில் பட்டபடியே வந்தன. மாகாளி குகை செல்லும் வழி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில்  7 பனை மரங்கள் ஒருங்கே நின்றன. சுற்றியிருக்கும் அனைத்து இடங்களும் நெருக்கமான நகர்புறப்பகுதி தான்.

நாங்கள் செல்லும் இடத்திற்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன் ஓரிடத்தில் வாகனம் வளைந்து நெளிந்து மேடேறி செல்லுகையில் ஒரு பிரம்மாண்டமான பனை மரத்தைப் பார்த்தேன். நகர் பகுதியானதால் பேருந்டுகளும் பல்வேறு வாகனங்களும் நெருக்கியடித்துச் செல்லும் அந்த சாலையில் எனது கண்களை பனை ஈர்த்துக்கொண்டது அதற்கே உரிய பேரழகால் தான். காய்கள் சிறிதிலிருந்து பெரிதாக பருவம் அடையும் வரைக்கும் அவைகள் ஒவ்வொரு தரத்தில் இருந்தன. காளியே உருவெடுத்து வந்து நின்றதுபோல்  ஓர் அழகும் அம்சமும் அதில் கூடியிருந்தது. இந்த பிரம்மாண்ட அழகு, தன்மை, வடிவங்கள், பேருரு மற்றும் காலம் தாண்டிய காய்ப்பு, போன்றவைகள் ஒரு அமானுஷ்ய தன்மை கொண்டதாக அந்த மரத்தை  வெளிப்படுத்தியது. மிகவும் நெருக்கடியான சாலையில் எனது வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாக செல்லவோ இடமளிக்காத அந்த இடத்தில் எனது கண்கள் சாலையின் அருகிலிருந்த அந்த மரத்தை சில வினாடிகள் கூர்ந்து பார்த்தது எனது வேட்கையினால் மாத்திரம் அல்ல. காளி தன்னை வெளிப்படுத்திய ஒரு ஆக்கிரோஷ தருணம் என்று தான் அதைச் சொல்லுவேன். காய்ந்த ஓலைகள் இரத்த விடாய்கொண்ட நாக்குகள் என அசைந்தபடி நின்றிருந்தன.

அதன் பின்பு பனை மரங்கள் கண்ணுக்கு பட்டபடியே  வந்தன. நாங்கள் மாகாளி குகைகளுக்கு முன்பாக வண்டியை நிறுத்தியபோது தாமஸ் அருகில் சென்று விசாரித்து வந்தான். குகைகளுக்கு உள்ளே செல்ல இனிமேல் வாய்ப்பு இல்லை, ஆனால் மாகாளி கோயில் அருகில் தான் இருக்கிறது என்றான். மாகாளி கோயில் செல்லும் வழியில் இரண்டு பனை மரங்கள் நின்றன. மிக பழைமையான மரங்கள். மாகாளி கோவில் வளாகத்தில் தென்னை மற்றும் பல்வேறு மரங்கள் இருந்தாலும் பனை மரங்களைக் காண முடியவில்லை. அனால் உள்ளே நுழைத்தபோது நான் கண்ட காளி சிலையானது பனைக்கும் காளிக்கும் உள்ளதொடர்பை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.

மாகாளி குகைகளுக்குள் என்னால் நுழைய இயலாவிட்டாலும், வெளியே இருந்து  பார்க்கையில் ஒருசில குகைகளின் தோன்றம் தெரிந்தன. பவுத்த சாயல் வெளிப்படையாக தெரியும் இவ்விடங்களின் அருகில் ஒரு பனை மரம் நிற்பதை பார்த்து குதூகலித்துவிட்டேன். நாங்கள் நிற்கும் பகுதியானது சுற்றிலுமிருக்கும் மற்றெல்லாப் பகுதிகளை விடவும் உயர்ந்த ஒரு நிலப்பகுதி. பார்க்கையில் பவுத்தர்கள் தங்குமிடங்களின் சாயல் வெளிப்பட்டப்படியே இருந்தன. இப்பகுதிகளில் பனை மரங்களைக் காண்பது ஒரு முக்கிய குறியீடாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் பனை மரங்கள் பெருமளவில் பவுத்தர்களின் வாயிலாக பரவப்பட்ட மரம் என்ற கருதுகோள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இதனை அழுத்தி கூறுவார்கள். அதற்கான காரணங்கள் அனேகம் உண்டு.

முக்கிய காரணமாக நான் கருதுவது, பனை ஓலை பயன்பாட்டின் முக்கியத்துவம் தான். உலகமெங்கும் எழுத்து என்பது தோல்களில் எழுதி பாதுகாக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இக்காலங்களில் இந்தியாவில் மட்டும் எழுத்துக்கள் பனை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஏன் என்றால் பவுத்தம் கொல்லாமையை முன்னிறுத்தியது. மாத்திரம் அல்ல அது தன்னை விரிவு படுத்தும் நோக்கோடு இலக்கியங்களை பகிர துவங்கியது. இச்சூழலில் பனை ஓலைகளே பவுத்த புரிதலுக்கு ஏற்ற வகையில் இலக்கியங்களை ஒருங்கிணைக்க உதவின. கொல்லாமையினை வாழ்வியல் நெறியாக கொள்ளும் ஒரு சமயம் பனை மரத்தினை தங்கள் மரமாக ஏற்று அதனை பரவலாக்கியிருக்க வளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

IMG_5909-1024x682

மாகாளி குகை பகுதிகளில் காணப்படும் பனை மரங்கள்.

அங்கிருந்து வெளியே வந்தபோது ஓரிடத்தில் மலை உச்சியிலிருந்து பார்க்கும் தோதான ஒரிடம் கண்ணில் பட்டது, நானும் தாமசுமாக அந்த இடத்தில் வந்து நின்று பார்த்தோம். ஆங்காங்கே பனை மரங்கள் உயர்ந்து எழுந்து நின்றன. பனை சார்ந்த ஒரு சூழியல் அமைப்பு இங்கே இருந்திருக்கின்றன என அவை அறுதியிட்டுக் கூறின. நான் எனக்குள் மென்மையாக புன்னகைத்துக்கொண்டேன். என்னால் சரிவர சொல்ல இயலாத எதோ ஒன்று என்னை இப்பெருநகரத்துடன் பிணைத்திருப்பதை எண்ணிக்கொண்டேன். ஆம் அதைத் தேடுவது தான் எனது வாழ்க்கை என எனக்கே சொல்லிக்கொண்டேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: