பனை மரத் தடியில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது. இந்த கேள்வி முன்னமே எனக்கு இருந்தபடியால் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துப் பார்த்தேன் அது கருநிறம் கொண்டு வேறு வகையில் காணப்பட்டது. பனை மரத்தில் காணப்படும் தும்புகளோ அல்லது சிறா போன்ற ஏதும் அதில் காணப்படவில்லை. ஏமாற்றத்துடன் அதனை வைத்துவிட்டேன். இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பின்பும், பனை மரத்தில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி என்னை விட்டபாடில்லை.
பனை மரத்தில் உலக்கை செய்ய மாட்டார்கள் என ஒரு புறம் எண்ணம் சென்றது. ஏனென்றால், பனை மரத்தில் இருக்கும் சிலாம்புகள் கைகளை குத்திவிட வாய்ப்பு உண்டு. சற்றே பிசிர் அடித்தாலும், பிற்பாடு அது பயனற்றதாக போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு புறம் பனை மரத்தில் உலக்கைகள் இருக்காது என எண்ணி விட்டுவிட்டேன். மறு புறம், பனை சார்ந்த பல்வேறு பொருட்களை நான் காணும்தோறும், பனை மரத்தடியில் கண்டிப்பாக உலக்கை இருந்திருக்கலாமே என்கிற எண்ணம் என்னை வந்து அடைந்தபடியே இருந்தன.
ஒன்று, ஒரு சமூகம் தனது சூழியலை முன்வைத்து ஒரு வாழ்வியலை முன்னெடுக்கும்போது அங்கு பெருவாரியாக கிடைக்கும் பொருட்களிலிருந்தே தமக்கு தேவையானதை எடுத்துக்கொள்வர் என்கிற ஒரு புரிதல் எனக்கு இருந்தது. பனை மரம் பல்வேறு வகைகளில் இங்கு வாழ்ந்த சமூகத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கையில், கண்டிப்பாக, பனை மரத்தில் உலக்கை இருந்திருக்கக்கூடும் என்கிற எனது எண்ணம் வலுப்பெற்றது. சிறு வயதில், அப்பாவுடைய ரூலர் ஒன்று பனை மரத்தடியில் செய்யப்பட்டு அவரது மேஜையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் அழகே மீண்டும் மீண்டும் என்னைப் பார்க்க தூண்டியிருக்கிறது. என்னால் தூக்க இயலாத அளவிற்கு அது வலிமையானது. எனக்கு அதில் கோடு வ்ரைய வராது. உருளையான அந்த கட்டையை வைத்து அப்பா எப்படி கோடு வரைகிறார்கள் என பார்த்துக்கொண்டே இருப்பேன்.
எனது அப்பாவின் தந்தை ஒரு தச்சு தொழிலாளி. எனது பாட்டி வீட்டு ஜன்னல் மிகவும் சிறியது. அவர்களது வீட்டு ஜன்னலில் காணப்படும் கம்பிகள் இரும்பால் செய்யப்பட்டவைகள் அல்ல என்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். எனக்கு அப்போதைய கேள்வியெல்லாம், எப்படி பனை மரத்தினை உள் நுழைத்தார்கள் என்பதே. அனால் பனை மரத்தினைக் கடைந்து இவ்விதம் அவர்கள் செய்திருப்பது அதனை விட மிகவும் ஆச்சரியமான ஒரு உண்மைதான்.

மரத்தடியில் உரல் மற்றும் உலக்கை – ஆப்பிரிக்கா
வெகு காலத்திற்குப் பின்பு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தற்போதைய முதல்வர் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் ஒரு வாய்ப்பு அமைந்தது. வருடம்தோறும் அவர்களது வீட்டிற்கு நாங்கள் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாட செல்லுவது வளக்கம். புதிதாக கட்டப்படிருந்த அவர்கள் வீட்டு கதவு பனை மரத்தடியில் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பனை மரத்தடியினை நேராகவும் சீவி பொருட்களைச் செய்ய இயலும் எனபதை அப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன்.
பின்பு, பெங்களுர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் படிக்கும்போது, பாறச்சாலையை சார்ந்த சந்தோஷ் ஜார்ஜ் என்பவர் எனக்கு இரு வருடம் சீனியராக படித்துக்கொண்டிருந்தார். எனது பனை சார்ந்த விருப்புகளை அறிந்தவர் ஆகையால், அவரது வீட்டிற்கு பனை மரத்தால் தான் மாடிப்படி கடைசல்களைப் போட்டதாகவும், அதனைச் செய்கையில் எத்தனை கடைசல்காரர்களிடம் “பிணக்கம்” ஏற்பட்டதாகவும் கூறினார்கள். எதற்காக பிணக்குகள் ஏற்பட்டன என வினவியபோது, மிகவும் உறுதியான பனை மரங்களில் பணி செய்கையில், உளி உடைந்துபோவதால், பலரும், இதனை விரும்புவதில்லை என்றார். எப்படியிருந்தாலும், கவனிக்க வேண்டியவைகள் என்னவென்றால், பனை மரத்தினைக் கொண்டு அழகாக கடைசல்கள் செய்யலாம் என்பது தான். அதனைத் தொடர்ந்து எனக்கும் வீட்டில் கண்டிப்பாக பனை மர கடைசல் போட்டால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஒரே உரலில் இருவர் இடிக்கும் காட்சி – ஆப்பிரிக்கா
கல்லூரி காலத்திற்குப் பின்பு, நான் குமரி மாவட்டத்திலுள்ள பனைத் தொளிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, நாலுமுக்கு வீடுகள் சிலவற்றை தேடிப்போய் பார்த்தேன். அவைகளில் காணப்படும் அழகுகளுக்காகவும், குமரி மாவட்டத்தில் அவ்விதமான வீடுகள் அனேகம் உள்ளதாலும் இந்த தேடுதல் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பவைகளாக இருந்தன. இவ்வகை வீடுகளில், நாடார்களின் வீடுகள் என்றால், பெரும்பாலும் பனை மரத்தடியில் தான் அதன் கூரைகளைத் தாங்கும் கழிகோல்கள் இருக்கும். நாயர் அல்லது நம்பூதரிகளின் வீடு என்றால் பிலா, அயினி போன்ற மரங்களாக இருக்கும். கூரையின் சரிவு முடியும் இடத்தில் பல்வேறு வளைவுகளை ஒன்றுபோல வளைத்து செய்து முடித்திருப்பார்கள். ஓரு சில இடங்களில் இந்த கழிகோல்கள் முடியும் இடங்களில் ஒரு துவாரம் இடப்பட்டிருக்கும். நீளமான பனை மரத்தடியினை சிறு கோல் என உருட்டி அதனுள் நுழைத்திருப்பார்கள். தச்சு வேலையின் உச்சம் என சொல்லத்தகுதியான ஒரு அமைப்பு இது. சுமார் 20 அடி நீலத்திற்கு எப்படி மரத்தினை உருட்டியிருப்பார்கள்? அதனை 20 கம்புகளுக்குள் நுழைக்கவேண்டுமென்றால் எத்துணை நேர்த்தியாக துளைகள் இடப்பட்டிருக்கவேண்டும்?
இரண்டாண்டுகளுக்கு முன்பு, நான் குமரி மாவட்டத்தை சுற்றிகொன்ண்டிருக்கும்போது அங்கே ஒரு தச்சு தொழிலாளியைப்பார்த்தேன். தனது தச்சுக்கூடத்தில் பனை மரத்தினை மட்டுமே கொண்டு செய்த ஒரு கட்டிலை விற்பனைக்கு வைத்திருந்தார். பல நாட்களாக அது விற்பனை செய்யப்படாமலே இருந்தது. அவர் பனை நார்க் கட்ல்களையும் நான் செய்வேன் எனக் கூறினார். ஒரு முறை அவர் பனை மரத் தடியினை எடுத்து வாச்சி கொண்டு உருட்டுவதைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடாலி தடிமனில், மண்வெட்டியைப்போல அமைக்கப்பட்ட அந்த கருவி மறைந்து வரும் ஒரு அரிய கருவியாகும். கூர்மையான மற்றும் எடைமிக்க ஆயுதங்கலே பனை மரத்தை பாகப்படுத்த பயன்படுத்தும் பாரம்பரிய கருவிகள்.
புத்தளம் திருச்சபையில் பனை மரத்தாலான தூண்கள் இருக்கின்றன என்கிற செய்தி சுமார் 20 வருடங்களுக்கு முன்பே என்னை வந்து எட்டியிருந்தது. பல முறை அந்த பகுதிக்கு நான் சென்றிருந்தாலும் திருச்சபைக்குள் சென்று அதன் தூண்களைப் பார்த்ததில்லை. 2018ஆம் அண்டு தான் நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் இணைந்து சென்றோம். அங்கே நான் பார்த்த தூண்கள் மிக பிரம்மாண்டமானவைகள். சுமார் 20 முதல் 25 அடி உயர பனை மர தூண்கள் 8 எதிரெதிராக நின்றன. அத்தூண்களை தொட்டுப்பார்த்தால் அவைகள் ஏதோ வார்பித்து எடுத்தவைகள் போல காணப்பட்டன. இத்துணை அழகிய ஓர் வடிவம் சாத்தியமா என்கிற கேள்வி அனேகருக்கு எழலாம். ஆனால் அவைகள் சாத்தியமே என்பதனை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் தாண்டி இத்தூண்கள் முறுக்கியபடி நிற்கின்றன.

தமிழ் பெண்கள் உலக்கை பிடிக்கும் காட்சி
2017 – 2019 வரையில் நான் தமிழகத்தில் தங்கியிருந்தபோது நுட்பமான பல பனை பொருட்களை நேரில் கண்டிருக்கிறேன். குறிப்பாக நாகர்கோவிலைச் சார்ந்த பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் தனது வீட்டில் ஒரு அழகிய ஆயுதம் ஒன்றை வைத்திருந்தார்கள். கோடாரி போன்ற வடிவில் காணப்படும் அந்த பழங்கால ஆயுதம் பனை மர கைப்பிடி போடப்பட்டிருந்தது. அவ்விதமாகவே பூக்கடை என்ற பகுதியில் பனை மரங்களை வெட்டி சீர் செய்துகொண்டிருக்கும் தொழிலாளி பயன்படுத்தும் வாச்சி என்ற கருவியின் பிடியும் பனை மரத்தில் இடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இவைகள் எப்படி நுட்பமாக அமைக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை எனினும், அவைகள் மிகுந்த அனுபவத்தின் வாயிலாக பெறப்பட்ட ஒரு அறிவு என்கிற உறுதி எனக்குள் மேலெழுந்து வந்தன.
மார்த்தாண்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகிய ஒரு ஆசாரி உண்டு. அவரிடம் பனை சார்ந்த எனது கேள்விகளை வைக்கும்பொது அவர் கூறியவைகள் சற்றே எனது சித்தனையை தூண்டுவதாக அமைந்தது. பனை மரங்களை சீராக்கும் உளிகளைக் கையாளும் ஆசாரிகள் இல்லை. அப்படியே, பனைக்கென பயன்படுத்தும் உளிகளைச் செய்யும் நுட்பம் அறிந்த கொல்லர்களும் இல்லை என்றார். இல்லை என அவர் சொன்னதன் பொருள் இல்லவே இல்லை என்பதாக அல்ல என்றே நான் புரிந்து கொண்டேன். அவர்கள் அருகிவிட்டார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது ஒருவரின் நேரத்தினைக் கோரும் ஒரு வேலை. மேலும் அவர் கூறுகையில், பனை மரத்தினை முறிக்கையில் மூன்று துண்டுகளாக வெட்டுவார்கள் என்றார். பனை மரங்களை முறிக்கையில் அவர்களோடு நின்று நான் பார்த்த வரையில், மேற்குறிய கூற்று உண்மைதான் என்பது புலனாகியது. இந்த மூன்று தூண்டங்களில் அடிப்பாகமும் மேல் பாகமும் கட்டுமான பணிக்கென எடுப்பது சிறந்த பலனைத் தராது என்பதே புரிதல் என்றார். மேல் பகுதியில் உள்ள தூன்டு சரியான விளைச்சல் இருக்காது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளுவோம். ஆனால் கீழ் பகுதி ஏன் தவிர்க்கப்படுகிறது? அதனை அவர் விளக்கிய விதம் பாரம்பரிய அறிவின் தேவை நமக்கு வேண்டும் என்பதற்கான சான்று.
கருகருவென்று ஆல் நிறைந்து காணப்படும் அடிமரம், முழுவதும் பயன்பாடு அற்று இருக்கும் என்பது அல்ல, அதனை பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஆல் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் வெள்ளை நிறைந்தும் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, இந்த வெள்ளைப் பகுதிகள் உதிர்ந்துபோய் ஆல் மட்டுமேயான ஒரு தொகையாக இது மாறிவிடும். அப்படி அது பலமிழக்கும். ஆகவே இதனை அறிந்தோர் கீழ் பகுதியினை பயன்படுத்த மாட்டார்கள் என்றார். பேராசிரியர் வேத சகாயகுமார் அவர்கள் இதனையே சிறு தும்பு பனை மற்றும் பெருந்தும்பு பனை என விளக்கமளிப்பார்.

பனை மரத்தில் செய்யப்பட்ட சிறிய இடிக்கும் இயந்திரம் – கம்போடியா
உலக்கைகள் வெறுமனே நெல் குத்துவது மற்றும் மாவிடிப்பது போன்ற காரியங்களுக்கு மாத்திரம் பயன்படவில்லை அவைகளை பல்வேறு தன்மைகளில் நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்தனர். குறிப்பாக, கர்பிணி பெண்கள் உலக்கையினைக் கொண்டு மாவிடிப்பது அவர்கள் உடலுக்கு ஏற்ற ஒரு பயிற்சியாக இருந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்த பின்பு தொட்டில் இடுபவர்கள் உலக்கையினை பயன்படுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் ஓணப் பண்டிகையின் போது உலக்கையினை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடுவது பொதுவான வழக்கம். அப்படியே உள்ளங் கால்களில் ஏற்படும் பிறழ்வுக்கு உலக்கையில் நின்று உருட்டினால் அது சரியாகும் என்று நம்பப்படுகிறது. உலக்கை மண்டையை உடைக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெகு சமீபத்தில் ஒரு நண்பர் பண்ணி அடிக்க பனை மர உலக்கையைத்தான் பயன்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். உலக்கை சார்ந்து இன்னும் பல அரிய தகவல்கள் இருக்கலாம். நான் இத்துடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்.
உலகம் முழுவதும் ஒரு காலத்தில் தானியங்களின் தோலை நீக்கவும் அவைகளை மாவாக மாற்றவும் உலக்கை பயன்பட்டிருக்கிறது. உலக்கையின் வடிவம் மட்டுமல்ல உலக்கை தனித்திராது எனும் அளவிற்கு அதனுடன் இனைந்து வருவது உரல் தான். பனை மரத்தின் வெட்டிய அடிபாகம் சிறுக சிறுக இடித்து பள்ளம் ஏற்பட்டிருந்தால் அது கண்டிப்பாக ஒரு உரலுக்கு ஏற்ற வடிவம் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் கம்போடியா சென்றபோது பனை மரத்தில் தான் மசாலா பொருட்களை இடிக்கும், கைகளால் எடுத்துச் செல்லும் உரல் உலக்கை மாதிரியினை பனை மரத்தில் செய்து வைத்திருந்தார்கள்.
இவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், பனை மரத்தில் ஒரு உலக்கை பயன் பாட்டில் இருந்திருக்கலாம் என்ற எனது எண்ணத்தை வலுப்படுத்தின. எனது மனைவியிடம் இது நான் குறித்து பேசியபோது அவர்கள் தனது சிறு வயது ஞாபகத்தில் பனை மர உலக்கையினையே தாம் பயன்படுத்தியதாக கூறினார்கள். இப்படி ஒரு வழியாக எனது தேடுதல் ஒரு முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால் உலக்கை என்பது பனை மரத்தடியில் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை. அதனை தேடி கண்டடையும் வாய்ப்பிற்காகவே இப்போது நான் காத்திருக்கிறேன்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653
மறுமொழியொன்றை இடுங்கள்